அடுத்த வைரஸ் கிருமி எப்படி தாக்கப் போகிறது, அதை எப்படி தடுக்கப் போகிறோம் என இப்போதே நாம் யோசிக்கத் துவங்குவோம். இப்போது என்ன அவசரம் என நீங்கள் நினைப்பது தவறு. கொரோனா பாதிப்பு இன்னும் தீவிரமடையப் போகிறது என்றாலும் இதுதான் சரியான அணுகுமுறை என நினைக்கிறோம். 2004ன் சார்ஸ் தாக்குதலின் போது அடுத்த வைரஸ் பற்றி இந்த உலகம் முன்னெச்சரிக்கை கொள்ளத் தவறியதன் விலைதான் கொரோனா.

கெரோனா, சார்ஸ் மட்டுமல்ல, எய்ட்ஸ், இபோலா உள்ளிட்ட புதிதாக, பெரிதாகத் தாக்கும் நோய்கள் அனைத்துமே திடீரென முளைக்கவில்லை. மாறாக, அவை அனைத்தும் விலங்கிலிருந்து நமக்கு வந்தவை. விலங்குகளில் உயிர் வாழ்ந்து, மனிதர்களுக்குத் தொற்றியவை அவை. குறிப்பாக, நமது நெருங்கிய உறவுகளான பாலூட்டி விலங்குகளிலிருந்து நமக்குத் தொற்றியவை அவை. அதற்கான காரணம் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியது: ஒரு கிருமி ஒரு உடலை தனது வீடாக்ககிக் கொள்கிறது. பிறகு, அந்த உயிரின் வேதியியல் தன்மையை ஒத்த எளிதாகத் தொற்றக்கூடிய வேறு உயிரினத்திற்குத் தாவுகிறது. மனிதர்களும் பாலூட்டிகள் என்ற வகையில் பாலூட்டி விலங்குகளின் கிருமிகள் எளிதாக நமக்குத் தொற்றுகின்றன.

மனிதனுக்குத் தொற்றிய சார்ஸ் சீனாவின் காட்டு விலங்கு சந்தையிலிருந்து பரவியது. சீனா முழுவதும் அத்தகைய சந்தைகள் உள்ளன (காட்டு விலங்குகளைப் பிடித்து, உயிருடன் வைத்திருந்து அப்படியே சாப்பிடுவது சீனாவில் உள்ள உணவு வழக்கம்). அந்த சந்தைகளில் வன விலங்குகள் உயிருடனோ கொல்லப்பட்டோ விற்கப்படும். அதை உணவு உள்ளிட்ட தேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். வவ்வால்களிலிருந்து புனுகு (civet) என்ற வகை காட்டு விலங்கிற்குத் தொற்றிய சார்ஸ் மனிதனை எட்டியது.

சீனாவுக்கு வெளியேயும் வன விலங்கு சந்தைகள் உள்ளன. ஆனால் சீனாவின் ஜனத்தொகை மிகப் பெரிது என்பதால் அங்கு எளிதாக நோய்த் தொற்று ஏற்படுகிறது. கார்கள், விமானங்கள், அதிவேக ரயில்களின் இணைப்பும் இருப்பதால் சீனாவில் நோய் பரவல் எளிதாகிறது. விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு நோய்கள் வருவது சமீப காலமாகவே மருத்துவர்களுக்கு கவலை தரும் விஷயம். 2004ல் சார்ஸ் பரவிய பிறகு சீனாவின் வன விலங்கு சந்தை நிரந்தரமாக மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

2019 டிசம்பரில் கொரோனா வைரஸ் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்டபோதே அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் வன விலங்கு சந்தையின் மீதுதான் சந்தேகப்பட்டார்கள். இதுவரை அது தெளிவாக நிரூபிக்கப்படவிலலை. ஆனால் எல்லா சாட்சியங்களும் அதை நோக்கியே சுட்டிக் காட்டுகின்றன. முதலில் போக்கு காட்டிய சீனா ஒரு வழியாக வன விலங்கு சந்தைகள் உணவுக்காக இயக்கப்படுவதை ஒரே அடியாக தடை செய்திருக்கிறது. ஆனால் இது பிரச்சனையின் முடிவு அல்ல.

இது ஒரு நல்ல செய்தி என்றாலும் ஒரு கெட்ட செய்தியும் உள்ளது. சீன பாரம்பரிய மருத்துவத்திற்காக வன உயிர்கள் பயன்படுத்துவதை சீன அரசு இதுவரை தடுக்கவில்லை. இந்த பாரம்பரிய மருத்துவ முறைக்கு பெருவாரியான ஆதரவு உள்ளது.

நாட்டையே முடக்கிப் போடும் சர்வாதிகார சீன அரசால் ஏன் வன விலங்கு சந்தைகளை ஒட்டுமொத்தமாக முடக்கிப் போட முடியவில்லை என உலகின் பிற பகுதியினர் குழம்புகிறார்கள். ஆனால் வன விலங்குகள் சீனர்களுக்கு உணவு அல்ல. அவர்களின் பண்பாட்டு வழக்கங்களில் வன விலங்குகளின் உயிர் பலி நீக்க முடியாத இடம் பெற்றுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் உலகளாவிய அச்சுறுத்தல் மிகப் பெரிது. அதனால் சீன அரசும் பிற நாடுகளின் அரசும் வன விலங்கு சந்தைகளை கடுமையாக ஒடுக்க வேண்டும்.

அது நடக்காவிட்டால் கொரோனாவுடன் இத்தகைய கொடிய நோய்த் தொற்றுகள் நிற்காது. சார்ஸ் விஷயத்தில் உலகம் எளிதாகத் தப்பிவிட்டது. அதிகபட்சம் 1,000 பேர் அதில் இறந்திருக்கலாம். ஆனால் கொரோனா இதுவரை மட்டுமே 5,000 பேரைவிட அதிகமாக பலிவாங்கியிருக்கிறது. இறுதியில் எவ்வளவு பேர் உயிரிழக்க வேண்டியிருக்கும் என்பதை மீறி பல கோடி பேரின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் மனமும் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருக்கும்.

அடுத்த கொரோனா வைரஸ் இதைவிட பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடலாம். உலக ஜனத்தொகையின் இணைப்புகளும் அதிகமாகி வருகின்றன. அடுத்து வரும் கொடிய தொற்று நோய்கள் இந்த பூவுலகையே மிக மோசமான பொருளாதார அழுத்தத்தில் அழுத்திவிடாது என்பதற்கு உத்தரவாதமில்லை.

(ஜேரன் டைமண்ட் “Guns, Germs, and Steel” உள்ளிட்ட நூல்களை எழுதியவர். நேதன் வூல்ஃப் ஒரு கிருமியியல் வல்லுனர், கொடிய தொற்று நோய் தரவுகள் சார்ந்த அனலடிக்ஸ் நிறுவனமான மெடாபயோடாவின் நிறுவனர்)

தமிழில் : எஸ்.செந்தில் குமார்

நன்றி:

https://www.washingtonpost.com/opinions/2020/03/16/how-we-can-stop-next-new-virus/