அண்மையில் எனது பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்குச் சென்றிருந்தேன். பல அடுக்குகளைக் கொண்ட அந்த பிரமாண்ட நூலகத்தில் ஒவ்வொரு தளங்களிலும் வேறு, வேறு வகைமையிலான புத்தகங்கள் இருக்கும். துறை சார்ந்த நூல்கள், கல்வி சார்ந்த நூல்கள், இலக்கிய நூல்கள், பொது அறிவு நூல்கள், போட்டித்தேர்விற்கான நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கிளாசிக் வகை நூல்கள், உலக இலக்கியங்கள் என தளங்கள் பிரிக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட முப்பதாயிரம் மாணவர்களைக் கொண்ட ஒரு தனியார் பல்கலைக்கழகம் எங்களுடையது. வேறு வேறு நாடுகள், மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட மாணவர்களால் நிரம்பியது எங்கள் பல்கலைக்கழகம். அதைக் கருத்தில் கொண்டே, அத்தனை பேருக்கும் ஏற்றவகையில் பிரமாண்ட நூலகம் அங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு விடுமுறை நாளின் மதிய வேலையில், நூலகத்திற்குச் சென்ற எனக்கு அங்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. ஆம், நான் சென்ற நேரத்தில் கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த நூலகத்தின் வேறு, வேறு தளங்களில் இருந்தார்கள். ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில், அதுவும் ஒரு விடுமுறை நாளில், அதுவும் ஒரு மதிய வேலையில் இத்தனை மாணவர்களை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை; காரணம், சமீப காலங்களில் “இளைய தலைமுறையினரிடையே குறிப்பாக மாணவர்களிடையே வாசிப்பு பழக்கங்கள் குறைந்து வருகின்றன. அதுவும் அச்சிடப்பட்ட புத்தகங்கள் அதன் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினரிடையே இழந்து கொண்டிருக்கின்றன” போன்ற கருத்தாக்கங்கள் தொடர்ச்சியாக சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட கருத்தின்மீது ஒரு மிகப்பெரிய சந்தேகம் அப்போது எனக்குள் எழுந்தது. ‘இளைய தலமுறையினரிடையே பெருகி வரும் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு, புத்தகங்களின்மீதான அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை குறைத்து விட்டது’ என்பது பொதுக்கருத்தாக இருக்கும் சூழலில், ‘எப்படி இத்தனை மாணவர்கள் நூலகங்களை நாடி வருகிறார்கள்?’ என்ற கேள்வியும் அப்போது எனக்குள் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக நான் அங்கிருந்த மாணவர்கள் சிலரிடம் உரையாடினேன்.

“நீங்கள் எல்லாம் டிஜிட்டல் தலைமுறை மாணவர்கள். அதுவும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள். உங்கள் கைகளில் இருக்கும் டிஜிட்டல் கருவிகளிலேயே அத்தனை புத்தகங்களையும், அத்தனை தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியுமே? அது மிக எளிமையான ஒன்றானதாகவும் இருக்குமே; அதைத் தவிர்த்து ஏன் ஒரு நூலகத்தை நாடி வருகிறீர்கள்? அதுவும் அச்சிடப்பட்ட புத்தகங்களைப் படிப்பதில் விருப்பம் காட்டுகிறீர்கள்? ஈ புக்ஸ் போன்ற வடிவங்கள் மிக சாதாரணமாக கிடைக்கும்போது அச்சிடப்பட்ட புத்தகங்களின் தேவை இன்னும் இருக்கிறது என நினைக்கிறீர்களா?” என கேட்டேன்.

அந்த மாணவர்களின் குழுவில் இருந்து, ஒரு மாணவி முந்திக்கொண்டு வந்து அதற்குப் பதில் சொன்னாள். ஆங்கிலத்தில் மிக சரளமாகப் பேசிய அந்த மாணவி ஒரு வடகிழக்கு மாநிலத்தவரின் முகஜாடையில் இருந்தார் “சார், டிஜிட்டல் கருவிகள் என்பதை நாங்கள் இப்போதும் ஒரு கேளிக்கைக்கான பொருளாகவேதான் பார்க்கிறோம். அறிவை விரிவடையச் செய்யும் ஆற்றல் அந்த சாதனங்களுக்கு இருக்கிறதாகக் கருதும் மனநிலை இன்னும் எங்களுக்கு வரவில்லை; அதற்காக அந்தத் தன்மை டிஜிட்டல் சாதனங்களுக்கு இல்லை எனச் சொல்லவரவில்லை அப்படிப் பார்க்கும் கண்ணோட்டம் எங்களுக்கு வரவில்லை என்றே சொல்கிறோம். அது எங்களது போதாமையாகக் கூட இருக்கலாம் அல்லது முன்முடிவாகக் கூட இருக்கலாம் ஆனால் டிஜிட்டல் கருவிகளை எங்களால் அப்படிப் பார்க்க முடியவில்லை.”

“அச்சிடப்பட்ட புத்தகங்கள் மின்வடிவத்திலும் அதாவது ஈபுக்ஸாகவும் கிடைக்கிறது, நீங்கள் நூலகத்திற்கு வந்து படிக்கும் ஒரு அச்சிடப்பட்ட புத்தகத்தை மிக சுலபமாக உங்கள் டிஜிட்டல் சாதனங்களிலேயே மின்வடிவத்திலேயே படிக்கலாமே? இரண்டுமே ஒரே புத்தகம்தானே? வடிவங்கள்தானே வேறாக இருக்கிறது?”

“உண்மைதான். ஆனால் ஒரு புத்தகத்துடன் உள்ளார்ந்த இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் அதனுடன் ஒரு கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஒரு புத்தகத்திற்கும் அதை வாசிப்பவனுக்குமான உறவை  அச்சிடப்பட்ட புத்தகங்களின் வழியாகவே பெற முடியும் என்பது என் கருத்து. ஒரு தேர்ந்த வாசிப்பனுபவம் பெற்றவன் அந்த வாசிப்பனுபவத்தை அச்சிடப்பட்ட புத்தகங்களிலேயே பெறுவான். மின்புத்தகங்களின் வழியாக அப்படிப்பட்ட அனுபவங்களை அவன் பெற முடியாது என நினைக்கிறேன்” என்றான் ஒரு மாணவன்.

“வாசிப்பை புனிதப்படுத்தும் ஒரு தோரணை உங்களிடம் தெரிகிறது. அறிவை விரிவடையச் செய்வதில் ஆர்வமிருக்கும் ஒருவர் அறிவியலின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தங்களது விருப்பங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டுமில்லையா? நாம் தேர்வு செய்த ஒன்றிற்கு உணர்வு பூர்வமாக ஒரு புனித பிம்பத்தைத் தருவதை விட்டு விட்டு மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு நமது தேர்வுகளையும் மாற்றிக்கொள்ள வேண்டியதுதானே அறிவுப்பூர்வமான செயல்? பழைமைகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு புதிய வளர்ச்சிகளைப் புறக்கணிப்பது அறிவியல் பூர்வமான செயல் இல்லையே?” என்றேன். நான் டிஜிட்டல் சாதனங்களின் முகவர் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும்!

“இது புனிதப்படுத்தும் வேலையல்ல. டிஜிட்டல் வாசிப்பு என்பது பெருகிவருகிறது என்பது உண்மைதான். ஆனால் அதன் சிக்கல்களையும் நாம் அதனோடு சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அச்சிடப்பட்ட புத்தகத்தைப் படிக்கும்போது அந்தப் புத்தகம், நான், அதன் தகவல்கள், அதன் சூழல் மட்டுமே இருக்கிறது. அதனால் எனது கவனத்தை முழுமையாக அந்தப் புத்தகத்தின்மீது குவிக்க முடிகிறது. ஆனால் டிஜிட்டல் வாசிப்பு அப்படி அல்ல. அது பல கவனச் சிதறல்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. டிஜிட்டல் சாதனங்களின் வழியாக நான் ஒன்றை வாசிக்கும்போது, அதில் மட்டுமே எனது கவனம் இருப்பதில்லை. இணையம் பல்வேறு கதவுகளை அதன் வழியாகத் திறக்கிறது, பல்வேறு தூண்டுதல்கள், எனது கவனத்தைக் கவரக்கூடிய சுட்டிகள் என ஒன்றில் இருந்து மற்றொன்றிற்குத் தாவிக்கொண்டிருக்கும் மனநிலையில்தான் நான் அதை வாசிக்க முடிகிறது; அது அந்தப் புத்தகத்திற்கும் எனக்குமான ஆழ்ந்த பிணைப்பை நிச்சயம் பாதிக்கிறது. முகநூலில் ஒரு சிறிய நிலைப்பதிவை வாசிக்கும் போதே அதன் கீழே ஏராளமான விளம்பரங்கள், சொடுக்குகள் என்னை உள்ளிழுத்துக் கொள்ளக் காத்திருக்கின்றன. ஒரு நிலைப்பதிவைப் பார்ப்பதற்குள்ளாகவே இத்தனை கவனச் சிதறல்கள் வருமாயின் ஒரு முழுப் புத்தகத்தை எப்படி நான் முழுக் கவனத்துடன் படிக்க முடியும்? அதனால் டிஜிட்டல் வாசிப்பில் ஒரு மேம்போக்கான, மேலோட்டமான வாசிப்பையே என்னால் செய்ய முடியும். ஒரு ஆழ்ந்த வாசிப்பை நிச்சயம் டிஜிட்டல் கருவிகள் அனுமதிக்காது. அப்படித்தான் அந்தக் கருவிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.”

மின் புத்தகங்களை பற்றியான இந்த மாணவனின் புரிதல் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது என நினைக்கிறேன். சென்ற ஆண்டு ‘வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ என்று சொல்லக்கூடிய அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகை நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டு அச்சிடப்பட்ட புத்தகங்களின் விற்பனை அதற்கு முந்தைய ஆண்டை விட ஐந்து சதவீதம் கூடியிருப்பதாகச் சொல்கிறது அதே நேரத்தில் மின் புத்தகங்களின் விற்பனை பத்து சதவீதம் குறைந்திருப்பதாகவும் சொல்கிறது. அதே போல சமீப காலங்களில் உலகம் முழுக்க கார்டியன், நார்வேஜியன் பல்கலைக்கழகம் என பிரபலமான நிறுவனங்களால் டிஜிட்டல் வாசிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், அச்சிடப்பட்ட புத்தகங்களின் வழியாகப் படிப்பவர்களுக்கு அதை உள்வாங்கிக் கொள்வதும், அதைப் பற்றிய புரிதலும் மின்புத்தகங்களில் அதைப் படித்தவர்களை விட அதிகமாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் சில மாணவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். டிஜிட்டல் வாசிப்பிற்கும், அச்சிடப்பட்ட புத்தகங்களை வாசிப்பதற்குமான வேறுபாட்டை மிகத் தெளிவாகவே அவர்கள் உணர்ந்திருந்தார்கள். இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது என்பது நிச்சயம் தவறானது. முன்னெப்போதும் விட அவர்கள் இந்தக் காலங்களில் நிச்சயம் நிறைய வாசிகிறார்கள். டிஜிட்டல் சாதனங்கள்தான் இந்த வாசிப்பைப் பரவலாக்கியிருக்கிறது. ஏதேனும் தகவல்கள், ஏதேனும் செய்திகள், ஏதேனும் கருத்துக்கள் அவர்களைத் தொடர்ச்சியாக வந்தடைந்து கொண்டேயிருக்கின்றன. அன்றைய நாளில் முக்கியத்துவம் பெறும் ஒரு செய்தியின் நிமித்தம் அது சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தும் பரபரப்பின் நிமித்தம் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு நிர்ப்பந்தத்தை இணையம் அவர்களுக்குக் கொடுக்கிறது. இணைய உலகில் தங்களின் இருப்பை நிரூபித்துக் கொள்ள அதைத் தெரிந்து கொள்ளக்கூடிய கட்டாயம் என்பது அவர்களுக்கு அதன் வழியே வருகிறது. அதன் விளைவாக வாசிப்பு நிகழ்கிறது. அந்த வாசிப்பு என்பது எப்படி இருக்கிறது? எவ்வளவு ஆழமாக இருக்கிறது, எவ்வளவு அறிவுப்பூர்வமாக இருக்கிறது, எவ்வளவு முழுமையாக இருக்கிறது என்பதுதான் இன்றைய சூழலில் முக்கியமானது. உணர்வுகள் மேலிட, அப்போதைய பரபரப்பிற்காக ஒரு விஷயத்தை மேம்போக்காகப் படித்து, அதை அடிப்படையாக வைத்து உரையாடும் போக்கு இங்கு அதிகமாக இருக்கிறது.  அப்படிப்பட்ட வாசிப்புகளைத்தான் டிஜிட்டல் வாசிப்பு உருவாக்குகிறது.

அறிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் செய்யக்கூடிய வாசிப்புகள் அப்படி மேம்போக்கானதல்ல. அது அன்றைய பரபரப்புகளைச் சார்ந்து நிகழ்வதில்லை, புறவுலகின் கவனத்தை திருப்புவதற்காக வாசிப்பதல்ல. அது ஒரு முழுமையான அறிவுத் தேடல். அறிவுத் தேடல் என்பது ஒரு இயக்கம் (Process). ஒரே நேரத்திலே அது நடந்து முடிவதில்லை. ஒரு விஷயத்தைப் பற்றி அடிப்படையைத் தெரிந்து கொள்வது, அதன்மீதான நமது கருத்துகளை விமர்சனம் செய்து கொள்வது, அதன் தர்க்கத்தை முழு பரிமாணங்களிலும் தெரிந்து கொள்வது, அதன்மீதான கோட்பாடுகளை, வரலாறுகளை ஆய்வு செய்வது, இறுதியாக ஒரு நிலைபாட்டை அதன்மீது உருவாக்கிக்கொள்வது, அப்படி ஏற்படுத்திக்கொண்ட நிலைப்பாடும் இறுதியானது அல்ல என்பதை உணர்வது. எந்த ஒரு கருத்தும் மாறக்கூடியது, மாறக்கூடிய வல்லமை இருக்கிறது என்பதை  உணர்வதும் அப்படி மாறும்போது அந்த மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்வதும்தான் ஒரு ஆரோக்கியமான அறிவுத் தேடலின் இறுதிப் புள்ளி. தான் கொண்ட ஒரு நிலைபாட்டை உறுதி செய்வதற்காக, அதற்கு சாதகமான கருத்துகளைத் தேடித்தேடிப் படிப்பதும் அதைப் பொது வெளியில் பகிர்வதும், அதற்கு எதிரான கருத்துகளை நிராகரிப்பதும் உண்மையான வாசிப்பு அல்ல. அது அன்றாடப் பரபரப்பிற்காக, இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சமூகவலைத்தளங்களில் நடைபெறும் விவாதங்களைப் போன்றது. அப்போதைய வெற்று உணர்வெழுச்சியைத் தாண்டி அதனால் எந்தப் பயனும் இல்லை.

மாணவர்கள் இதைத் தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள். கேரளாவைச் சேர்ந்த ஒரு மாணவி இப்படிச் சொன்னாள்: “சார், டிஜிட்டல் ஏற்படுத்தியிருப்பது ஒரு மேம்போக்கான வாசிப்பு என்றாலும் கூட, அது வாசிப்பைத் திறந்து விட்டிருக்கிறது. அந்த வாசிப்பு திறந்து விட்ட கதவுகளின் வழியாக வாசிப்புலகத்திற்கு வரும் மாணவர்களில் சில பேராவது அந்த வாசிப்பின் சுவையை உணர்ந்து உள்ளார்ந்த வாசிப்பைத் தேடி வருவார்கள்தானே? அப்படி வரும் வாசகர்கள் அச்சிடப்பட்ட புத்தகங்களை நிச்சயம் தேடிவருவார்கள். ஏனென்றால் அதுவே வாசிப்பின் இன்பத்தைக் கொடுக்கும்” என்றாள். அவள் பேச்சில் அத்தனை பரவசம் இருந்தது.

அந்த மாணவி சொன்னது உண்மைதான். பத்து வருடங்களுக்கு முன்பு பெரும்பாலானவர்களுக்கு வாசிப்பு என்பதே பாடப்புத்தகங்கள் மட்டுமே என்ற நிலைமைதான் இருந்தது. தினசரி நாளிதழ்களையோ, வெகுசனப் புத்தகங்களையோ படிப்பவர்கள் கூட சொற்பமானவர்களாகத்தான் இருந்தார்கள். இலக்கிய வாசிப்பு என்பது இன்னும் சொற்பம். பாடப்புத்தகங்களைப் படிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கல்வி முறையும், பெற்றோர்களும் தொடர்ச்சியாகக் கொடுத்ததின் விளைவாக வாசிப்பின்மீது ஒரு எதிர்மறையான மனநிலையிலேயே அப்போது அவர்கள் இருந்தார்கள். ஆனால் டிஜிட்டல் வாசிப்பு அந்த எதிர்மறையான மனநிலையை இப்போது மாற்றியிருக்கிறது எனச் சொல்லலாம். தேடிப்போய் வாசிப்பதையும், தன்னிச்சையான வாசிப்பையும் அது கொண்டு வந்திருக்கிறது. வாசிப்பு இப்படிப் பரவலாக்கப்பட்டதன் விளைவாக வாசிப்பின் சுவையறியாதவர்கள் அதன் சுவையை முதன் முறையாக உணரும்போது அது அவர்களுக்கு ஒரு அனுபவத்தை ஏற்படுத்தலாம்; அந்த அனுபவம் அவர்களை ஒரு தீவிர வாசிப்பை நோக்கிச் செலுத்தலாம். அப்படித் தீவிர வாசிப்பை நோக்கி வருபவர்களை டிஜிட்டல் வாசிப்பால் திருப்திபடுத்த முடியாது என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அந்த மாணவன் சொல்வது போல டிஜிட்டல் வாசிப்பு கவனச் சிதறல்களையும் உள்ளடக்கியது ஒரு காரணம். மேலும், அச்சிடப்பட்ட புத்தகங்கள் கொடுக்கக்கூடிய பிணைப்பு, அதன் தெளிவான வடிவம், அது ஏற்படுத்தும் அகவுணர்வுகள், அதன் புறச் சூழல்கள், காகிதத்தின் தன்மை, அதன் தொடுதல், அதில் இருந்து வெளிப்படும் மணம், எழுத்துருக்கள், அதன்மீது நமக்கிருக்கும் தார்மீக உரிமை (ஒரு அச்சிடப்பட்ட புத்தகத்தை எனக்கே எனக்கானதாகக் கொள்ள முடியும். ஆனால் மின் புத்தகங்களை அப்படி நினைக்க முடியாது. மின்புத்தகங்களைக் கொண்டிருக்கும் டிஜிட்டல் சாதனங்கள்மீது வேண்டுமானால் அந்தத் தார்மீக உரிமை வரலாம்) என வேறு வேறு காரணங்களின் விளைவாக ஒரு ஆழ்ந்த வாசிப்புக்கான வடிவமாக அச்சிடப்பட்ட புத்தகங்களைச் சொல்லலாம். ஆனால் இப்படிச் சொல்வதிலும் ஒரு உளவியல் பிரச்சினை இருக்கிறது என நினைக்கிறேன். ஒருவேளை அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கும், டிஜிட்டல் புத்தகங்களுக்குமிடையேயான ஒரு தலைமுறையில் நாம் இருப்பதால் கூட இந்த வித கோட்பாடுகளை நாம் கொண்டிருக்கலாம். இந்த டிரான்ஸிசனை உள்வாங்கச் சிரமப்படுவது கூட நமது இந்தக் கோட்பாடுகளுக்குக் காரணமாக இருக்கலாம். ஒருவேளை டிஜிட்டல் புத்தகங்கள் மட்டுமே இருக்கும் ஒரு தலைமுறை பின்னாளில் வரும்போது அவர்கள் இந்த டிஜிட்டல் வாசிப்போடு ஒன்றிணைந்து போகலாம். ஆனால் அதை இப்போது நம்மால் கணிக்க முடியாது.

அடுத்து ஒரு முக்கியமான கேள்வியை அந்த மாணவர்களிடம் கேட்டேன்: “வாசிப்பின் மீதான பொறுமை இந்தத் தலைமுறையினருக்கு இல்லை என்று விமர்சனம் இருக்கிறதே, அதாவது நூறு அல்லது நூற்றம்பைது வார்த்தைகளுக்கு மேல் செல்லும் எதையும் படிப்பதில் இந்தத் தலைமுறையைச் சார்ந்த இளைஞர்களுக்கு பொறுமை இல்லை என சொல்லப்படுகிறதே, அது உண்மையா?” எனக் கேட்டேன்

“அது உண்மைதான். அதுவுமே கூட டிஜிட்டல் உலகத்தின் தாக்கம்தான். நமக்கு வேண்டியது, வேண்டாதது, தேவையானது, தேவையில்லாதது என்பதைத் தாண்டி ஏராளமான தகவல்கள் நம்மை நோக்கி குவிகின்றன. உண்மையில் இந்தத் தலைமுறை தகவல்களால் நிரப்பப்படுகிறார்கள். நமக்கு அவசியமான ஒரு விஷயம் என்பதைத் தாண்டி, ஏகப்பட்ட கூச்சல்கள் உங்களைச் சுற்றி இடும்போது நீங்கள் அதைக் கடந்து போவீர்கள்? அத்தனையும் தெரிந்து கொள்ள வேண்டும், அத்தனையிலும் நான் அபிப்ராயம் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருக்கும்போது என்னைச் சுற்றி நிரப்பப்படும் அத்தனையையும் நான் எடுத்து எனக்குள் நிரப்பப் பார்க்கிறேன். அப்படி ஒரு மனவழுத்தம் எனக்கு ஏற்படும்போது நான் ஒவ்வொன்றிலும் இருந்தும் மிகக்குறைவான தகவல்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறேன். அந்தத் தகவல்கள் எனக்குத் தேவையானது என்பதை மீறி மற்றவர்களிடம் என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு மீடியமாகவே அதனைப் பார்க்கிறேன். அதனால் தான் இப்போது இந்த வாசிப்பின்மீதான பொறுமை குறைந்து கொண்டிருக்கிறது. அதாவது சாவகாசமான வாசிப்பு என்பது போய் வாசிப்பு என்பது ஒரு கட்டாயமாகிவிட்டது. இந்தக் கட்டாயத்தை வேறு யாரும் எனக்குக் கொடுக்கவில்லை. நானே அந்த கட்டாயத்தை ஏற்படுத்திக் கொண்டேன் என்பதுதான் அதில் முரண்.” அத்தனை தெளிவாகச் சொன்னான் ஒரு தமிழ்நாட்டு மாணவன்.

மாணவர்களிடம் உரையாடலை முடித்துக் கொண்டு, நூலக அதிகாரியைப் பார்க்கச் சென்றேன். நுலகத்தின் தரைதளத்தில் இருந்த அவரது குறுகலான அறை முழுவதும் ஏராளமான புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. புத்தகத்தின் வாசனை அந்த அறை முழுவதும் பரவியிருந்தது.

அவரிடம் எனது உரையாடலைத் தொடங்கினேன்: “சார், டிஜிட்டல் சாதனங்கள் அதிகமாகிக்கொண்டே வரும் இன்றைய காலகட்டத்தில், அதன் தாக்கங்கள் வாசிப்பு பழக்கங்களையும் மாற்றி வரும் இந்த சூழலில் வெறும் அச்சிடப்பட்ட புத்தகங்களை மட்டும் கொண்ட ஒரு நூலகம் தாக்குப்பிடிக்க முடியுமா? இந்த டிஜிட்டல் வளர்ச்சியை நூலகங்கள் எப்படி உள்வாங்கிக்கொள்ளப் போகின்றன?” என்றேன்

“வெளிப்புறமாகப் பார்க்கும்போது மின்புத்தகங்களின் வழியான டிஜிட்டல் வாசிப்பே மாணவர்களிடம் செல்வாக்காக இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கும். ஆனால் அதில் அத்தனை உண்மை இல்லை. ஒரு வாசிப்பிற்காக மட்டும் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் மாணவர்கள் மிக சொற்பமானவர்கள்தான். ஆனால் ஒரு ஆழ்ந்த வாசிப்பு என்னும் தேவை வரும்போது, அது துறை சார்ந்த தேவையோ அல்லது படிப்பு நிமித்தம் எழும் தேவையோ அல்லது வாசிப்பின் நிமித்தம் எழும் தேவையோ அந்த நேரங்களில் மாணவர்கள் அச்சிடப்பட்ட புத்தகங்களையே தேடி வருகிறார்கள். அதனால் வாசிப்பை டிஜிட்டல் உலகம் இன்னும் கைப்பற்றிவிடவில்லை. குறைந்தபட்சம் இப்போது வரைக்கும் அச்சிடப்பட்ட புத்தகங்கள் அதன் மதிப்பை வாசிப்பு உலகத்தில் இழக்கவில்லை. ஆனால் டிஜிட்டல் வளர்ச்சியை அறிவுசார் உலகம் நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளும். அதுவும் நூலகம் என்பது ஒரு அறிவுசார் நிறுவனம். அது டிஜிட்டல் வளர்ச்சியை நிராகரித்து விடக்கூடாது. இணையம் வளர்ச்சியடைந்த பிறகு பல்வேறு நாடுகளுக்கு இடையேயான, பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையேயான, பண்பாட்டுக்கு இடையேயான இடைவெளி குறைந்திருக்கிறது. தகவல்களைத் திரட்டுவதை இந்த டிஜிட்டல் மிக எளிமையானதாக மாற்றியிருக்கிறது. இந்தத் தகவல்கள் அனைத்தும் உலகம் முழுக்க ஒருங்கிணைக்கப்பட வேண்டும். உலகத்தில் உள்ள அத்தனை நூலகங்களையும் நாம் டிஜிட்டல் கம்பிகளின் வழி இணைக்க வேண்டும். அதன் வழியாக எந்த நாட்டில் இருந்தும் எந்த நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வரலாற்றையும், மொழியையும், ஆய்வுகளையும் பெறும் அளவிற்கு நூலகங்களை மேம்படுத்த வேண்டும். அப்படி மேம்படுத்துவதின் வழியாக டிஜிட்டல் வளர்ச்சியை நூலகங்கள் உள்வாங்கிக்கொள்ள முடியும்” என்றார்.

இறுதியாக அவரிடமும் அந்தக் கேள்வியை கேட்டேன். “வாசிப்பைப் பொறுத்தவரை, உங்களைப் பொறுத்த வரையில் எது சிறந்தது என சொல்வீர்கள்? அச்சிடப்பட்ட புத்தகங்களை வாசிப்பதையா அல்லது மின்புத்தகங்களை வாசிப்பதையா?”

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், “ஒன்றுக்காக இன்னொன்றை நிராகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அது வாசிப்பவரின் தேவையைப் பொறுத்தது. எதற்காக வாசிக்கிறார் என்பதையும் பொறுத்தது” என்றார். மாணவர்களை விட அவர் நிதானமாகப் பதில் சொன்னதாய் எனக்குப் பட்டது.

இந்த உரையாடல்களின் வழியாக நான் சில கருத்துகளை உருவாக்கிக்கொண்டேன். வாசிப்பு என்பது ஒற்றைத் தன்மை கொண்டது அல்ல. அது பல அடுக்குகளைக் கொண்டது. வெளிப்புற அடுக்கு என்பது ஒரு நிர்ப்பந்தம் காரணமாக வாசிப்பை நோக்கி நம்மைச் செலுத்துவது. அதில் மேலோட்டமான வாசிப்பு மட்டுமே நிகழும்; அது எந்தவித கருத்துப் பரிமாற்றத்தையும், கருத்துருவாக்கத்தையும் நமக்குள் ஏற்படுத்தாது. டிஜிட்டல் வாசிப்பு இது போன்ற புற வாசிப்பைத்தான் பரவலாக்கியிருக்கின்றன.

அதற்கு அடுத்த அடுக்கு என்பது ஒரு ஆழ்ந்த வாசிப்பு. வாசிப்பின்மீதான ஈர்ப்பும் அது தரும் பரவசத்தின்மீதான தேடலும் இங்கு முக்கியம், வாசிப்பனுபவம் தரக்கூடிய உணர்வுப்பூர்வமான கிளர்ச்சியையும் அதன் வழியாகப் பெறக்கூடிய அறிவும் இணைந்தே இதன் வழியாகக் கிடைக்கிறது. இதில் நிகழும் வாசிப்பு என்பது முழுமையானது. அதில் கிடைக்கும் அறிவின் வழியாக நாம் நமது கருத்தாக்கங்களை, அது சார்ந்த உரையாடலை, தெளிவைப் பெற முடியும். அச்சிடப்பட்ட புத்தகங்கள் வழியாகவே இந்த வாசிப்பை பெரும்பாலும் அடைய முடியும்.

அதற்கு அடுத்த நிலையில் இருப்பது முழுக்க முழுக்க ஒரு அறிவுத் தேடல். எந்த உணர்வெழுச்சிகளோ அல்லது வாசிப்பு சார்ந்த பரவசங்களோ இங்கு முக்கியமல்ல. தகவல்கள் மட்டுமே முக்கியம். அதன் வழியாக அறிவை செம்மைப்படுத்துவது மட்டுமே இலக்கு. மேலதிகத் தகவல்கள், அதற்கான தரவுகள், ஆராய்ச்சிகள் எனப் பரந்துபட்ட அறிவை விசாலப்படுத்துவதை மட்டுமே முதன்மையாகக் கொண்ட இந்த வாசிப்பை அந்த நூலகர் சொன்னது போல டிஜிட்டல் வளர்ச்சியை உள்வாங்கிய அறிவுத்தளங்களின் வழியே பெற முடியும். உலகம் முழுக்க இந்தத் தகவல்களை ஒருங்கிணைக்கக்கூடிய சாத்தியம் இணையத்திற்கு மட்டுமே உண்டு. அதனால் டிஜிட்டல் வாசிப்பு என்பது இங்கு முக்கியமானது.

அந்த நூலகர் சொன்னது போல அச்சிடப்பட்ட புத்தகங்களோ அல்லது டிஜிட்டல் புத்தகங்களோ ஒன்றிற்காக இன்னொன்றை நிச்சயமாக நிராகரிக்க முடியாது. ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு தேவை இருக்கிறது, முக்கியத்துவம் இருக்கிறது. இரண்டு வடிவங்களும் அதனதன் தளத்தில் இருந்து அதற்கான வேலையைச் செய்யும். வாசிப்பதை, அதன் தேவையை, அதன் நோக்கத்தை முழுமையாக உணர்ந்த ஒரு தேர்ந்த வாசகனுக்கு இரண்டு வடிவங்களும் வேறு வேறல்ல. இரண்டிற்குமான வித்தியாசங்களை அவன் நுட்பமாக உணர்ந்து வைத்திருப்பான். தனது தேவையைப் பொறுத்து அவன் வடிவத்தை மாற்றிக்கொள்வான். அந்தப் பக்குவத்தை அவனது வாசிப்பு அவனுக்குள் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். வாசிப்பதின் இலக்கும் அதுதானே!