அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் நாளான ஏப்ரல் 18 அன்று நிகழ்ந்த வன்முறையை அடுத்து, அங்கு அசாதாரணச் சூழல் நிலவுகிறது. தாக்கப்பட்ட தலித் குடியிருப்புகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகக் காவல்துறை அணி ஒன்று பிரதான சாலை அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்து பத்து நாட்களுக்குள் அரசுத் தரப்பிலிருந்து பாதிக்கப்பட்ட வீடுகளின் ஓடுகளை மாற்றித் தந்திருக்கிறது. முதல் மூன்று நாட்களுக்கு, குடிநீர்க் குழாய் உடைக்கப்பட்டதாலும், குடியிருப்புக்கு வெளியே செல்ல முடியாததாலும் குடிக்க தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் சிரமப்பட்டிருக்கின்றனர். அதன் பின்னரே வன்முறையின்போது உடைக்கப்பட்ட குடிநீர்க் குழாய் மாற்றப்பட்டிருக்கிறது. உண்மை அறியும் கள ஆய்வுக்குழுவில் ஒருவராக அங்கு நான் சென்றபோது, பிரதான சாலையில் சிசிடிவி கேமிரா பொருத்தும் பணி நடந்துகொண்டிருந்தது.

நாம் செய்திகளிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ட தாக்குதல் காட்சிகளைப் பதிவுசெய்தவர்கள், தாக்குதவதற்காக வந்த வன்முறைக் கும்பலில் இருந்தவர்கள்தான். அதைத் தங்கள் வாட்ஸப் குழுக்களிலும் சாதியச் சொந்தங்களிடமும், இந்துத்துவவாதிகளிடமும் பகிர்ந்து பெருமையைப் பறைசாற்ற எண்ணி எடுத்த காணொளியால் இன்று அவர்களே அவமானப்பட்டு நிற்கிறார்கள். ஆனால் இத்தகைய அவமானம் அவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் இந்து முன்னணியால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்களாக உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகப் பொன்பரப்பி பகுதியில் இந்து முன்னணி தன் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. தலித் பெண்ணான அரியலூர் நந்தினி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜசேகரனை நினைவிருக்கிறதா? மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளூர் காவல் நிலையத்துக்கு அலைபேசியில் அழைத்து விடுவிக்குமாறு கூறிய அதே ராஜசேகரன்தான் இந்தத் தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னணியில் இருப்பவர் எனப் பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏறத்தாழ இருநூறு பேர் கொண்ட கும்பல் தாக்க வந்தததாகத் தலித் மக்கள் கூறுகின்றனர். இதில் ஒரு ஐம்பது பேரை அவர்களுக்கு அடையாளம் தெரிகிறது. அவர்கள் பொன்பரப்பியிலேயே வசிக்கும் பா.ம.க.வையும் இந்து முன்னணியையும் சேர்ந்தவர்கள்தான் என்கின்றனர். மீதமுள்ளவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டவர்களாகத் தெரிகிறது. கைகளில் நீண்ட தடிகள், ரீப்பர் கட்டைகள், டியூப் லைட்டுகள், கருங்கற்கள், செங்கற்கள் போன்றவற்றோடுதான் உள்ளே நுழைந்திருக்கின்றனர். தலித் மக்கள் சில ரீப்பர் கட்டைகளை எடுத்துக்காட்டினார்கள். குவித்து வைக்கப்பட்ட கற்களையும் காண முடிந்தது. அவர்கள் கொண்டு வந்த பல தடிகளின் முனைகளில் ஆணிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் எவர் உடலிலாவது பட்டால், அது சதையைப் பெயர்த்து எடுத்துவிடும் தன்மை கொண்டதாக இருந்ததாகவும் கூறுகின்றனர். பறையர் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள வீடுகளுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டதால் வன்முறையாளர்கள் அம்மக்களின் வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். ஓடுகள், சிமெண்ட் ஷீட்டுகள், பல்புகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. வன்முறையாளர்களின் தடிகளில் மாட்டியிருந்தால் சில உயிர்கள் போயிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. பீதியிலும் அச்சத்திலும் உறைந்துவிட்ட அம்மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர்.

அவர்களில் பலரும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள். தேர்தல் நாளன்று அனைவருமே விடுப்பு எடுத்துக்கொண்டு வாக்களிக்கச் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பகுதி என்பதால் பொன்பரப்பி தலித் மக்கள் இம்முறை மிக உற்சாகமாக வாக்களிக்க வந்தனர். எதிர்த்தரப்பில் நிற்பவரும் தலித் என்றாலும் பல தலித்துகள் கட்சிகடந்து திருமாவளவனுக்கு வாக்களித்திருப்பதையும் அதேபோல வன்னியர்கள் தரப்பிலும் திமுகவையும் பிற கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த வன்னியர்களும்கூட திருமாவளவனுக்கு ஆதரவு தந்திருப்பதையும் கள நிலவரங்கள் சொல்கின்றன.

என்னதான் நடந்தது தேர்தல் நாளன்று? தி.மு.க. வில் உள்ள வன்னிய மக்கள் சிலரிடமிருந்து தலித் மக்களுக்குக் காலையிலேயே சென்று வாக்களிக்குமாறு தகவல் வந்திருக்கிறது. மதியத்திற்கு மேல் ஏதேனும் அசம்பாவிதம் நிகழக்கூடும் என எச்சரித்ததன் அடிப்படையில் தலித் மக்கள் காலையிலேயே வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். பதினோரு மணிக்கெல்லாம் 60 சதவிகித வாக்குப்பதிவை எட்டியவுடன், பா.ம.க.வினருக்கு கோபம் மூளவே, அங்கு போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் சின்னமான பானையை சாலையில் போட்டு உடைத்திருக்கின்றனர். உடைக்கப்பட்ட பானைகளின் சில்லுகளுக்கு இடையில்தான் நடந்து சென்று வாக்களித்து வந்ததாகப் பல பெண்கள் கூறுகின்றனர். ஆனால் பா.ம.க. தரப்போ உடைக்கப்பட்டது ஒரேயொரு பானைதான் என்றும் அந்தப் பானையும்கூட திருமாவளவன் தரப்பினர், வாக்குச்சாவடியிலிருந்து நூறு அடிக்குள் வைத்துப் போவோர் வருவோருக்கெல்லாம் நீர்மோர் வழங்கிய பானைதான் என்றும், நூறடிக்குள் கட்சி சின்னங்கள் இருக்கக்கூடாதென்பதால் உடைத்தோம் என்றும் கூறுகிறது. ஆனால் அப்படி நூறடிக்குள் நீர்மோர் வழங்கவே இல்லை என்கின்றனர் தலித் மக்கள். மேலும் பல பானைகள் உடைக்கப்பட்டன என்பதே உண்மை. இதைப் பெரும்பான்மையாக வசிக்கும் கட்சி சாராத வன்னியர்களும் ஒப்புக்கொள்கின்றனர். இப்படி தலித் மக்களைக் கோபப்படுத்த செய்யப்பட்ட அனைத்து வேலைகளும் நடந்த இடம் சேரி அல்ல ஊர் என்பதால், அங்கு ஆதரவு இருக்காது என்பதை உணர்ந்தே தலித் மக்கள் அமைதி காத்து வாக்களித்துத் திரும்பி இருக்கின்றனர்.

ஆகவே காலையிலிருந்தே ஒரு கொதிநிலையில் இருந்தது இப்பகுதி. மதியநேரத்தில் வன்னிய சாதியைச் சேர்ந்த வீரபாண்டியனுக்கும் குணசீலன் என்கிற தலித்துக்கும் தலித் பகுதியில் இருக்கும் ஒரு சாராயக் கடையில் மூண்ட ஒரு சண்டையே வன்முறைக்கு வித்திட்டிருக்கிறது. வீரபாண்டியனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிவிட, பா.ம.க. தரப்பிலிருந்து நான்கைந்து ஆட்கள் தலித் குடியிருப்புக்கு வந்து மிரட்டிச் சென்றுள்ளனர். அதன்பின்னரே இருநூறு பேர் வந்து தாக்கிய சம்பவம் நடந்திருக்கிறது.

இதுவரை இல்லாதபடி சாதிய- இந்துத்துவ கூட்டு ஒன்று உருவாகியுள்ளது என்பதைத்தான் நாம் மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது. முன்பொரு காலத்தில் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் என எல்லாவற்றிலும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வகுப்பெடுக்கிறோம் என்று பீற்றிக்கொண்ட பா.ம.க. இந்துத்துவத்தின் கூடாரமாக மாறிவருவதையே இச்சம்பவம் காட்டுகிறது. பா.ம.க.வில் இருக்கும் நிர்வாகச் சீர்கேடுகளும் இளைஞர்கள் இந்து முன்னணியின் பக்கம் போகக் காரணம் எனப் பொன்பரப்பி வன்னிய மக்களே சொல்கின்றனர். ஒரு கட்சியில் ஒரு நபரே பதவி வகித்து வந்தால் நாமெல்லாம் எப்படிப் பதவிக்கு வருவது என்கிற கேள்வியாலேயே பலர் இந்து முன்னணிக்குச் சென்று கிளைச் செயலாளராக ஆகின்றனர்.
ஒரு காலத்தில் தமிழரசன் போன்றோர் கோலோச்சிய பகுதி அரியலூர். அவரது மறைவுக்குப் பின்னரான தேக்க நிலையை அடைந்த மார்க்சிய லெனினிய இயக்கங்களுக்குப் பின்னான காலத்தில் சாதியச் சேற்றுக்குள் சிக்கிக்கொண்டு இன்றைக்கு வெளியே வரமுடியாமல் சின்னாபின்னமாகின்றனர்.

சாதிவெறியும் இந்துத்துவமும் ஒரு தாயின் இரட்டைக்குழந்தைகள். இயல்பான கூட்டாளிகள். சாதி முறையைத் தூக்கிப்பிடிப்பது இந்து மதம்தான். மநு தர்மத்தின் நால்வர்ணக் கோட்பாடுக்குள் அடங்காத தலித் மக்களை ஒடுக்குவது என்பது சாதியப் படிநிலையில் உள்ள சாதிகளுக்கு ஏதோ பிறப்புரிமை போல் ஆகிவிட்ட நிலையில், இந்து மதக் கோட்பாட்டிற்குள் வராத, ஆனால் இந்துக் கடவுள்களையே வழிபடும் தலித் மக்களின் இடம் இந்து மதத்தில் என்ன என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஒரு கிறிஸ்தவர் ஒர் இந்துக்கடவுளை விரும்பி வழிபட்டாலும் அவர் இந்து ஆகமாட்டார். ஆனால் ஒரு தலித் இந்துக் கடவுளையே வழிபட்டாலும், சான்றிதழில் இந்து என்று இருந்தாலும் அவரை இந்துவாக ஏற்றுக்கொள்வதில்லை பிற சாதிகள். ஆதிக்க சாதிகளைப் பொறுத்தவரை தலித்துகளைப் பார்க்கும் பார்வையும், கிறிஸ்தவத்துக்குள் இருக்கும் தன் சாதியைச் சேர்ந்தவர்களைப் பார்க்கும் பார்வையும் வெவ்வேறானவை. வேற்று மதத்தில் இருந்தாலும் தன் சாதியாய் இருந்தால், அவர்களை ஒப்புக்கொள்ளும் மனம் தன் மதத்துக்குள்ளேயே இருப்பதாய் சொல்லப்படும் தலித்துகளை ஒடுக்கத் துணிகிறது. சாதிவெறியும் இந்துத்துவாவும் மிகத் துல்லியமாகச் சில இடங்களில் ஒன்றுபட முடியும். அப்படியானதோர் இடம்தான் பொன்பரப்பி. அடிப்படைவாதம் என்பதே இரண்டிலும் பொதுவானது. விளிம்புநிலை மக்களை, சிறுபான்மையினரை ஒடுக்குவது என்பது இரண்டிலும் உண்டு.

பொன்பரப்பியைப் பொறுத்தவரை அது மார்க்சிய லெனினிய தமிழ்த்தேசிய அம்பேத்கரிய அரசியல் தழைத்து வளர்ந்த பகுதி என்பதை நாம் மறக்கலாகாது. இதே போலவே தர்மபுரியும் சிவந்த பூமிதான். 2012இல் தர்மபுரியில் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் ஆகிய மூன்று தலித் கிராமங்களை எரித்தது பா.ம.க. அதற்கு முன் அங்கும் வன்னியர்களும் பறையர்களும் ஓரளவுக்குப் பகையின்றி வாழ்ந்து வந்திருக்கின்றனர். அங்குள்ள தலித்துகள் பெங்களூர் போன்ற நகரங்களுக்குச் சென்று பொருளீட்டுபவர்கள். வன்னியர்களைப் போலவே அவர்களும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டவர்கள். இருவருக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. இந்த வேறுபாடற்ற தன்மையும் நக்சல் அமைப்புகள் அங்கு இல்லாமல் போனதும் பா.ம.க.வின் சாதிவெறி வளர ஒரு காரணமாக அமைந்தது. தலித்துகள் இனியும் இடைச்சாதிகளை நம்பி இல்லை, விவசாய நிலங்களில் கூலிகளாக இல்லை, அவர்கள் நகரங்களை நோக்கிச் செல்கிறார்கள். பொருளீட்டுகிறார்கள் எனும்போது இயல்பாகவே அந்த நகர்வு இடைநிலைச் சாதிகளுக்குத் தங்கள் பிடிதளர்ந்து போவதான உணர்வை ஊட்டுகிறது.

இங்கு பொன்பரப்பியில் உள்ள தலித் மக்களும் இடைநிலைச் சாதிகளை நம்பி வாழவில்லை. பெரும்பாலானவர்கள் சென்னை போன்ற நகரங்களில் பணியாற்றுகிறார்கள். பெண்கள் மட்டுமே நூறு நாள் வேலைத்திட்டம் போன்றவற்றிலோ, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழோ பணியாற்றுகிறார்கள். அப்படிப் பணியாற்றுகையில் வன்னியர்களும், தலித்துகளும் ஒன்றாகவே வேலை செய்யும் வாய்ப்பு இருக்கிறது. மொத்தத்தில் இடைநிலைச் சாதியான வன்னியர்களுக்கும், தலித் மக்களுக்கும் வாழ்க்கைத் தரத்தில் பெரிய வேறுபாடு இல்லை. தலித் மக்கள் வன்னியர்களை நம்பியும் இங்கு இல்லை. பா.ம.க. தன் வன்முறையை அரங்கேற்றத் தேர்ந்தெடுக்கும் இடங்களுக்குள் உள்ள இந்த ஒற்றுமை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.
தர்மபுரிக்கும் பொன்பரப்பிக்குமான முக்கியமான வேறுபாடு, பொன்பரப்பி வன்முறையில் பங்கேற்ற இந்து முன்னணிதான். இதற்கு முன்பாக இங்கு இல்லாத வகையில் இங்கு சாதிய வன்முறை உருவாக இந்து அடிப்படைவாதிகள் ஆதரவு தருகிறார்கள். அவர்களே முன்னின்று வன்முறைகளை நிகழ்த்துகிறார்கள். பா.ம.க.வில் அல்லாத பொதுவான வன்னிய மக்கள் இந்த வன்முறை நம் பகுதியில் நிகழ்ந்திருக்கக் கூடாது என்கிற ஆதங்கத்தையே வெளிப்படுத்துகிறார்கள். என்றாலும் அவர்களுடைய அமைதி விரும்பும் தன்மைக்கும், சாதிய மனநிலைக்கும் இடையேயான ஓர் ஊசலாட்டத்தைக் காண முடிகிறது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத நிலையில் அவர்களில் பலர் இருப்பதைக் காண முடிந்தது.


கும்பகோணம் அருகே ஒரு பா.ம.க. நிர்வாகி தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சம்பவம் நினைவில் இருக்கிறதா? ஒருவாறாகக் கலவரங்களை உருவாக்கி அதில் குளிர்காய நினைத்த இந்துத்துவவாதிகளின் சதி அது என்பதை பல சிந்தனையாளர்களும் அறிவுஜீவிகளும் அப்போது சுட்டிக்காட்டினர். இந்துத்துவம் மிக எளிதாக பா.ம.க. என்கிற அமைப்புக்குள் ஊடுருவிவிடுவதையே இச்சம்பவங்கள் காட்டுகின்றன. இது அத்தனை எளிதில் விட்டுவிடக்கூடிய விஷயமல்ல. வட தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஒரு சமூகத்தின் இளைஞர்கள் ஏற்கனவே அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸாலும் அவரது மகன் அன்புமணியாலும், மறைந்த காடுவெட்டி குருவாலும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஏற்கனவே விஷமேறிய இடத்தில் மேலும் விஷமேற்றுவது என்பது மிக எளிது. அந்த மூளை ஆக்கப்பூர்வமாகச் சிந்திப்பதை நிறுத்தி இருக்கும். அப்படியொரு மூளைதான் இந்துத்துவத்தின் தேவை. அப்படிப்பட்ட மூளையே கரசேவைக்கு ஆள் சேர்க்கும். குஜரத்தில் வன்முறை செய்யும். பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவை எடுத்துக் கொன்றுபோடும்.

தமிழ்நாடு இன்னொரு குஜராத் ஆகவேண்டுமா? இதைத் தடுக்கவேண்டியது முற்போக்காளர்களின் கடமை அல்லவா?

தோழர். தொல்.திருமாவளவன் சில நாட்களுக்கு முன்னர் அளித்த பத்திரிகைப் பேட்டியில் தெரிவித்ததைப் போல, பா.ம.க.வால் மூளை மழுங்கடிக்கப்பட்டு விஷமேற்றப்பட்ட வன்னிய இளைஞர்களையும் குழந்தைகளையும் மீட்டெடுக்கவேண்டிய பொறுப்பு அவர் உட்பட இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இல்லையெனில் இந்துத்துவம் எனும் மலைப்பாம்பு அவர்களை விழுங்கி ஏப்பம் விடும் நாள் ஒன்று வந்துவிடும். அப்போது தமிழ்நாடு இதைவிட அதிக வன்முறைகளைச் சந்திக்கக்கூடும். இந்த விபரீதங்கள் நிகழாமல் தடுக்க பண்பாட்டுரீதியில் ஒவ்வொருவரும் பணியாற்றவேண்டி இருக்கிறது. வெறுமனே எதிர்வினை செய்பவர்களாக நாம் நின்றுவிட, அவர்களோ தீவிரமாக வினைபுரிந்துகொண்டிருக்கிறார்கள். மக்களின் வாழ்க்கைக்குள் புகுந்து அவர்களின் அன்றாடங்களுக்குள் நுழைந்து அவர்களை மாற்றும் இந்துத்துவத்தின் வேலைத்திட்டத்தை முற்போக்காளர்கள் கையிலெடுக்கவேண்டியது காலத்தின் கட்டளை. அதைச் செய்துமுடிக்கும் வரை, தலித் பகுதியின் முகப்பில் பொருத்தப்படும் சிசிடிவி கேமிராக்கள் சாதிய வன்கொடுமைகளுக்கு சாட்சியாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர, அவற்றால் எதையும் தடுத்து நிறுத்த முடியாது.