ந்தியச் சமூகம் சாதி என்னும் பெரும் கறையால் சூழப்பட்டிருக்கும் இந்த தருணத்தில், அதற்கு எதிரான அதிகார மட்ட குரல்கள் மிகக்குறைவே. மாறாக அந்த அதிகார மட்டங்கள் எல்லாமே சாதியை தக்கவைக்கும் ஒன்றாகவே இருக்கின்றன. இதற்கு மாறான நிலைபாட்டில், மனோபாவத்தில் அதனை அதிகார மட்ட செயல்திட்டமாக்கியவர் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான பி.எஸ்.கிருஷ்ணன். அவர் இந்திய சாதியமைப்பை தன் அதிகார வரம்பிற்கு உட்பட்டு உடைக்கும் கருவியாக இருந்தார். இந்திய வரலாற்றில் மிகப்பெரும் மைல் கல்லான மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் கிருஷ்ணன். வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய ஆட்சிப்பணிகளில் இடஒதுக்கீட்டிற்காக அந்த மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்த பின்புல ஊக்கியாக இருந்தார்.இந்த வரலாறு பலரும் அறியாதது. மேலும் இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்காக நிறைவேற்றப்பட்டிருக்கும் பெரும்பாலான திட்டங்களுக்கு பின்னணி காரணம் பி.எஸ்.கிருஷ்ணன்தான். சராசரி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சாதிக்காத ஒன்றை தன் பதவிக்காலத்தில் சாதித்தார் பி.எஸ்.கிருஷ்ணன்.

இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக இந்திய வரலாற்றில் முக்கிய சாதனைகளைப் படைத்த பி.எஸ்.கிருஷ்ணன் கேரள மாநிலம், பாலக்காட்டில் 1932 டிசம்பர் 30இல் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார். இளமைக் காலத்திலேயே கிருஷ்ணனுக்கு உலக விவகாரங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. அதுவே பின்னாளில் அவருக்கு இந்திய சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள்சார்ந்த செயல்பாடாக மாறுவதற்கு அடித்தளமாக அமைந்தது. மேலும் அதே காலத்தில் கேரள மண்ணுக்கே இயல்பான வாசிப்பு உணர்வும் கிருஷ்ணனுடன் ஒட்டியிருந்தது. ஒரு நாள் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில பத்திரிகை அம்பேத்காரின் தீண்டத்தகாதோர் குறித்த அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் இந்தியச் சமூகத்தில் ஏழு பேரில் ஒருவர் தீண்டத்தகாதோர் என அம்பேத்கார் குறிப்பிட்டிருந்தார். இதுதான் அவரின் வாழ்வின் சிந்தனை மாற்ற திருப்புமுனை. பின்னர் அது குறித்து தன் தந்தையிடம் விளக்கமாகக் கேட்டறிந்தார் பி.எஸ்.கிருஷ்ணன். தந்தையின் அப்போதைய விளக்கம்தான் கிருஷ்ணனின் எதிர்கால லட்சிய நகர்வுக்கான புள்ளியாக அமைந்தது. அதிலிருந்து ஒடுக்கப்பட்டோர் வாழ்வியல் குறித்த தன் சிந்தனைப் பயணத்தைத் தொடங்கினார்.

கேரளாவில் அன்றைய பிரபல நாளிதழான ‘கேரள கௌமுதி’யை இவர் தொடர்ந்து வாசிப்பவராக இருந்தார். அதில் ஒவ்வொரு நாளும் நாராயண குருவின் பொன்மொழிகள் வெளிவரும். அதில் ‘மனிதனுக்கு ஒரே சாதி, ஒரே மனிதன், ஒரே தெய்வம்’ மற்றும் ‘மதம் எதுவானாலும், மனிதன் நன்றாக இருந்தால் போதும்’ போன்ற வரிகள் அவரை மிகவும் கவர்ந்தன. பின்னர் இது குறித்து தொடர்ச்சியாக தன் தந்தையிடம் விவாதிப்பவராக கிருஷ்ணன் இருந்தார். ஒரு நாள் அம்பேத்காரின் அறிக்கையை வைத்து அம்பேத்கார் யார்? தீண்டதகாதோர் என்ற பிரிவினர் நம் நாட்டில் இருக்கின்றார்களா?அதற்கான காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளை கேட்டார். மேலும் இந்திய சமூகத்தில் நிலவும் தீண்டாமையின் கொடூர வடிவங்களை அவரின் தந்தை விளக்கினார். இது அநியாயம் அல்லவா என்று திருப்பிக் கேட்ட பி.எஸ்.கிருஷ்ணனுக்கு  ‘ஆம்’ என்ற பதில் அவரின் தந்தையிடம் இருந்து கிடைத்தது. அந்த உரையாடல்களும், அதற்குப் பிந்தைய நிலைமைகளும் கிருஷ்ணனைப் பிற்காலத்தில் அந்த மக்களுக்கான நபராக மாற்றி அமைத்தன.மேலும் விவேகானந்தரின் எழுத்துகளும், பேச்சுகளும் இளமைக்கால கிருஷ்ணனை சமூக சீர்திருத்த போராளியாக மாற்ற மிக உதவிகரமாக இருந்தன. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய கொடூர சாதியமைப்பு முறையை கண்டித்துப் பேசிய, எழுதிய விவேகானந்தர் அன்றைய திருவிதாங்கூர் பகுதியில் நிலவிய சாதிய தீண்டாமையையும் எதிர்த்து பேசினார். இதற்காக 1897இல் மதராஸில் ஒரு கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.

‘முகம்மதியர்கள் இந்தியாவை வெற்றிகொண்டார்கள் என்பது அடித்தட்டு மக்களுக்கும் ஏழை பாழைகளுக்கும் எப்படி இருந்தது? அவர்களை காப்பாற்ற வந்த இரட்சகராகவே அது அமைந்தது. அதனால்தான் நமது மக்களில் ஐந்தில் ஒருவர் முகம்மதியராக மாறினார்கள். இந்த மாற்றத்தை போர்வாள்கள் செய்யவில்லை. வாள்முனைகளும், தீச்சுவாலைகளுமே இந்த மாற்றத்தை ஏற்படுத்தின என சிந்திப்பது அறிவின்மையின் உச்சம். நீங்கள் மக்களின்மீது அக்கறை செலுத்தவில்லை என்றால் உங்கள் மதராஸ் மக்களில் ஐந்தில் ஒருவர் மொத்தத்தில் பாதி கிறிஸ்துவர்களாக மாறுவார்கள். நான் மலபார் நாட்டில் கண்ட காட்சிகளைவிட உலகத்தில் வேறு கேடுகெட்ட செயல் இருக்கமுடியாது. உயர் சாதியினர் பயன்படுத்துகின்ற வீதிகளில் ஏழ்மையான பறையர்கள் கடந்துசெல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. அதே நபர், தன் பெயரை வாயில் நுழையாத ஆங்கிலப் பெயராக மாற்றிக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் அல்லது இஸ்லாமியப் பெயராக மாற்றிக்கொண்டால் பிரச்சினை இல்லை. அவரை அனுமதிப்பார்கள். இந்த மலபாரிகள் அனைவரும் பைத்தியக்காரர்கள். அவர்களின் வீடுகள் பைத்தியக்காரர்களின் புகலிடம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்? அவர்கள் தங்களின் தவறான பழக்கங்களை கைவிட்டு சரியானவர்களாக மாறும் வரை இந்தியாவின் அனைத்து இனத்தவரும் அவர்களை ஏளனமாக நடத்த வேண்டும். பறையர்கள்மீது இத்தகைய கொடூரமான பழக்கங்களை அனுமதிப்பது பெருத்த அவமானம். அவர்களின் குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கிறார்கள். ஆனால் அவர்கள் வேறு மதத்திற்கு மாறினால் வசதியுள்ளவர்களாக மாறி விடுகிறார்கள். இனிமேலும் சாதிகளுக்கிடையில் வேற்றுமைகளும், சச்சரவுகளும் இருக்கக்கூடாது. (விவேகானந்தர் -1897 இந்தியாவின் எதிர்காலம், விவேகானந்தரின் எழுத்துகள், பேச்சுகள், தொகுதி 3)

விவேகானந்தரின் மேற்கண்ட பேச்சு, அன்றைய இந்திய சமூகத்தின் குறிப்பாக இன்றைய கேரளப் பகுதியின் சமூக எதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.

விவேகானந்தரைத் தொடர்ந்து, இருபதாம் நூற்றாண்டு கேரளாவின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியான நாராயணகுருவின் தாக்கம் கிருஷ்ணனிடம் அதிகம் இருந்தது. அவரின் சாதிய எதிர்ப்புச் சிந்தனைகள் மற்றும் பேச்சுகள் கிருஷ்ணனை அதிகம் பாதித்தன. மேலும் அக்காலத்தில் கேரளாவின் தலித் போராளியான அய்யங்காளியின் செறிவுமிக்க, ஆக்கபூர்வமான போராட்டம் திருவிதாங்கூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி கிடைக்க வழிசெய்தது. இதனால் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளும் கல்வி கற்பதற்காக பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தனர். இதன்மூலம் அந்த மக்களின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டு முறைகளை கிருஷ்ணன் உள்வாங்கிக் கொண்டார்.மேலும் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்தான் கேரளாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கோவில் நுழையும் உரிமை கிடைத்தது. வைக்கம் போராட்டமும் அதற்குப் பிந்தைய அரசர்களின் நடவடிக்கைகளும் கோவிலில் நுழையும் உரிமையை அளித்தன. மேலும் வேறுவகையில் அதன் பின்னணி என்பது மக்களின் மதமாற்ற முடிவை சார்ந்து இருந்தது. 1933இல் கே.சுகுமாறன் தலைமையில் கேரளாவில் ஈழவ சமுதாய மாநாடு நடைபெற்றது. அதன் தலைப்பே “இந்த மதம் நம் சுயகவுரவத்திற்கு அவமானம். ஆகவே எந்த மதத்திற்கு மாறுவது?” மாநாட்டின் விவாதப் பொருளும் இதுதான். மாநாட்டில் பொங்கி எழுந்த கோப உணர்வுகள் அரசனை அதிரவைத்தன. அதன் எதிரொலி தான் ‘ஆலய நுழைவு பிரகடனம்’. அரசனின் உத்தரவிற்கு இணங்க திருவிதாங்கூர் பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலில் நுழைவதற்கான தடை நீங்கியது. திருவிதாங்கூர் மன்னரின் இந்த நடவடிக்கை காந்தியாலும், அம்பேத்காராலும் பாராட்டப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த இந்நிகழ்வுகள் கிருஷ்ணனின் உளவியலில் பெருந்தாக்கத்தைச் செலுத்தின. இது சமூக நிகழ்வுகள்குறித்து மேலும் வாசிக்கவும், உள்வாங்கவும் அவரைத் தூண்டியது. இதன் தொடர்ச்சியில் கிருஷ்ணன் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்களுடன் நெருங்கி பழகலானார். அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பாடு கொடுக்க தொடங்கினார். மேலும் உளவியல்ரீதியாகவே சாதியை கடக்கத் தொடங்கினார். அதுவே பின்னாளில் அவரை சாதி மறுப்பு போராளியாக மாற்றியது.

தீண்டாமை மற்றும் சாதி எதிர்ப்பிற்கான மற்றொரு சலனம் கிருஷ்ணனுக்கு, தன் சொந்த அனுபவத்தின்மூலம் கிடைத்தது. இவர், தன் நண்பர்களுடன் ஒரு நாள் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்குச் சென்றபோது அங்கு கண்ட காட்சி இவரின் மனதை துயரப்படுத்தியது. அதாவது அந்த கோவிலில் எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்த கோவில் அர்ச்சகர் இவரின் ஒரு நண்பருக்கு மட்டும் கொடுக்கவில்லை. மாறாகத் தரையில் எறிந்துவிட்டு அவற்றை பொறுக்கச் செய்தார். அவன் பூணூல் போடாததே அதற்கு காரணம். இந்த நிகழ்வினை தொடர்ந்து கிருஷ்ணன் கோவில் பக்கம் போவதையே நிறுத்தி விட்டார். மேலும் நாராயண குருவின் ‘சாதியை சொல்லாதே, சாதியை கேட்காதே, சாதியை சிந்திக்காதே’ போன்ற வாக்கியங்கள் அவரை அதிகம் கவர்ந்தன.

பி.எஸ். கிருஷ்ணனின் இந்திய ஆட்சிப் பணி காலம் என்பது ஐம்பதுகளில் தொடங்குகிறது எனலாம். அந்தக் காலகட்டத்தில் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்ற பி.எஸ்.கிருஷ்ணன் முதன்முதலாக ஆந்திராவில் பணியாற்றினார்.அங்கு மாவட்ட ஆட்சித்தலைவராக, திட்ட அதிகாரியாக, மாநில அரசு செயலாளராக திறம்படப் பணியாற்றினார். அப்போது ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் வேகம் காட்டினார். இதில் அவர் பல சவால்களை சந்திக்கவேண்டியதிருந்தது. இந்திய சமூகம், சாதியச் சமூகமாக மாறியிருப்பதன் எதிரொலி இது. அது அதிகாரமட்டத்திலும் நிலவுவதால் கிருஷ்ணன் சில தருணங்களில் பலிகடா ஆக்கப்பட்டார். பின்னர் மத்தியப் பணிக்கு மாறினார். இந்திராகாந்தி, மொராஜிதேசாய், ராஜீவ்காந்தி மற்றும் வி.பி.சிங் ஆகியோரிடம் பணியாற்றி தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உதவினார். மேலும் இந்திராகாந்தி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும், பின்னாளில் குடியரசு தலைவராகவும் மாறிய ஜெயில் சிங், இவரின் தலித் மக்கள்மீதான ஆர்வத்தை கண்டு இவரை தலித் என அடையாளப்படுத்தினார். அப்போது உள்துறை இணைச்செயலாளராக இருந்த பி.எஸ். கிருஷ்ணன் அதனை மறுத்து நான் சாதியற்றவன். மேலும் சாதிய மறுப்பாளன். இந்த மறுப்பு ஒட்டுமொத்த இந்திய சாதியத்திற்கானது என்றார் ஜெயில்சிங்கிடம். அதன் பின் ஜெயில் சிங் இவரைப் பாராட்டி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு கூறினார். மேலும் பல்கலைக்கழக மானியக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை கண்டிப்பாக அமல்படுத்துமாறு கூறினார். அதிகாரிகள் அதனை அமல்படுத்த தவறும்பட்சத்தில் சம்பளம் உள்ளிட்ட மானிய சலுகைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்றார்.மேலும் பி.எஸ்.கிருஷ்ணன் சக அதிகாரிகளைப் போல் அல்லாமல் கிராமங்களுக்கு நேரடியாக சென்று அந்த மக்களிடம் கலந்து பேசி அவர்கள் பற்றிய உண்மைகளை அறிந்தார்.இது கோப்புகளின் உள்ளிருக்கும் காகிதங்கள் பேசாத விஷயங்களை பேசின. எதார்த்த கள நிலவரத்தை உணர்த்தியது. கிருஷ்ணனின் இம்மாதிரியான தொடர்ச்சியான பயணங்கள் அவருக்கு விளிம்புநிலை மக்கள் குறித்த படிப்பினையை அளித்தது.அது ஒரு விரிவான, ஆழமான அனுபவத்தை அளித்தது. இதன் காரணமாக, மற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் இருந்து வித்தியாசப்பட்டார் பி.எஸ்.கிருஷ்ணன், பி.எஸ்.கிருஷ்ணனின் பதவிக்காலத்தின் முக்கிய மைல்கல் என்பது வி.பி.சிங் அமல்படுத்திய மண்டல் கமிஷன் அடிப்படையிலான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு. இதற்கு மிக முக்கியக் காரணமே பி.எஸ்.கிருஷ்ணன்.ராஜீவ்காந்தி காலத்திலேயே மத்திய அரசின் செயலாளராக இருந்த கிருஷ்ணன் மண்டல் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தினார். ஆனால் அது வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில்தான் சாத்தியமானது. அவ்வகையில் கிருஷ்ணன் என்றுமே போற்றுதலுக்குரியவர். மேலும் தலித் மற்றும் பழங்குடி விவசாய மக்களுக்கான நிலப் பங்கீட்டிலும் இவரின் பணி முக்கியமானது.

காந்தி, அம்பேத்கார், புத்தர் மற்றும் மார்க்ஸ் ஆகியோரின் தத்துவங்கள்மீது ஆழ்ந்த அறிவும், ஆர்வமும்கொண்ட பி.எஸ்.கிருஷ்ணன் 90களில் ஓய்வு பெற்றார். மேற்கண்டவர்களின் கருத்துகளின் ஒருங்கிணைப்பே என் தத்துவம் என்றார் கிருஷ்ணன். ஓய்விற்குப் பிறகு பல்வேறு அரசுசார்ந்த குழுக்களில் பொறுப்பாளராக இருந்தார் பி.எஸ்.கிருஷ்ணன். இந்நிலையில் இவருடனான முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியின் உரையாடல்கள் சிறந்த ஆவணமாகும். இதனை ‘சமூகநீதிக்கான அறப்போர்’ என்ற தலைப்பில் புத்தகமாக சவுத் விஷன் புக்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இது ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கிறது. தன் காலத்தில் பல்வேறு நூல்களை எழுதிய சமூகப் போராளியான பி.எஸ்.கிருஷ்ணன், கடந்த நவம்பர் 9ஆம்தேதி மரணமடைந்தார்.இந்திய வரலாற்றில் சிறந்த ஆட்சிப்பணியாளராக, சிறந்த அறம்சார் சமூகப்போராளியாக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பி.எஸ்.கிருஷ்ணன் வரலாற்றில் என்றும் வாழ்வார்.