நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த நாட்டை ஆளுவதற்காக இரண்டாம் முறையும் மோடிக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்திய அரசியலில் நிகழ்ந்திருக்கும் பெரும் மாற்றங்களின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. 350 இடங்களைப் பெற்று மிருகபலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எவரும் கற்பனைகூட செய்யவில்லை. ஆனால், அது நிகழ்ந்துவிட்டது. இந்தியாவில் பாஜகவை எந்தவிதத்திலும் அனுமதிக்காத இரண்டே மாநிலங்களாக தமிழகமும் கேரளாவும் மட்டுமே இருக்கிறது. இந்தியா முழுக்க மோடி அலை வீசியதென்றால் தமிழகத்தில் ஸ்டாலின் அலை வீசியது எனலாம். திமுக வரலாற்று சிறப்புமிக்க பெரும் வெற்றியைப் பெற்றது. தேர்தல் ஆணையத்தின் பாரபட்சங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறைகேடுகள், ஆளுங்கட்சியின் பெரும் அளவிலான பண விநியோகம் என அனைத்தையும் தாண்டி திமுக இந்த வெற்றியைச் சாதித்தது. தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் 52.64 சதவீதம். ஆனால் அதிமுக கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் 30.28 மட்டுமே. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 44.93 சதவீதம் பெற்ற அதிமுக இந்தமுறை 18.48 சதவீத வாக்குகளுக்கு சரிந்துவிட்டது. இத்தனைக்கும் அது ஒரு மெகா கூட்டணியை அமைத்தது. 2014இல் 23.91 சதவீதமாக இருந்த திமுக வாக்கு வங்கி இந்தத் தேர்தலில் பத்து சதவீதம் அதிகரித்து, 32.76 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஒருவேளை திமுக தனித்துப் போட்டியிட்டிருந்தால் திமுகவின் வாக்கு சதவீதம் 45ஐத் தாண்டியிருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதசார்பற்ற ஒரு முற்போக்கு கூட்டணியை வலிமையுடன் அமைக்க எண்ணினார். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றார். தமிழகத்திலும் புதுவையிலும் 39 தொகுதிகளுக்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளைக் கைபற்றியது. இது 1971இல் திமுக தலைவராக கலைஞர் பொறுப்பேற்று எதிர்கொண்ட முதல் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்குச் சமமானது.

திமுக தலைவரால் ராகுல் காந்தியை முன்னிறுத்தி தேசிய அளவில் கட்டப்பட்ட இந்தக் கூட்டணி, நாடுமுழுக்க இதே உணர்வுடன் பிற மாநிலக் கட்சிகளால் அமைக்கப்பட்டிருந்தால் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள இந்தப் பெரும் தோல்வியை எதிர்க்கட்சிகள் சந்திக்க நேர்ந்திருக்காது. பல பிராந்தியக் கட்சிகளின் சுயநலம் மோடி மீண்டும் அதிகாரத்திற்கு வர பாதை அமைத்துக் கொடுத்தது. குறிப்பாக மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் போன்றவற்றில் எதிர்க்கட்சிகள் எடுத்த முடிவுகள் இந்தப் பெரும் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் தமிழகத்தில் திமுக தலைவர் காட்டிய வழியை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். ஒருவிதத்தில் வடமாநில பாஜக அல்லாத கட்சிகள் பாஜக முன்னெடுத்த வகுப்புவாத அரசியலின் பரிணாமத்தை புரிந்துகொள்ளத் தவறினார்கள் என்றே சொல்ல வேண்டும். வேலை இழப்பு, பொருளாதாரப் பிரச்சினைகள், பண மதிப்பு நீக்கம் போன்றவை மட்டுமே மோடியை அகற்றப் போதுமானவை என்று அவர்கள் நம்பிவிட்டார்கள். ஒரு மிகப்பெரிய மோடி எதிர்ப்பு அலை வீசப்போகிறது, அதில் நாம் அனைவருமே சுலபமாகக் கரை சேர்ந்து அதிகாரப் பங்கீட்டைச் செய்துகொள்ளலாம் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கனவாக இருந்தது. ஆனால் மோடியின்மீதான இந்த வெறுப்பை எதிர்கொள்ளும் வேறொரு அரசியல் தளத்தில் பாஜக வட மாநிலம் முழுக்க வெகு நேர்த்தியாகத் தயாரித்துவைத்ததை அவர்கள் கவனிக்கத் தவறினார்கள். இந்துக்கள், இந்து அல்லாதவர்கள் என்ற மாபெரும் பிரிவினைவாதம்தான் அந்த ஆயுதம். அந்த ஆயுதம் வட இந்தியா முழுக்க மக்களின் இதயங்களில் கூர்தீட்டப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு பாஜக பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் பற்றிய தொகுப்பாய்வுகள் இந்த அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளிப்படுத்துகின்றன. ஆம், இந்தியா இந்துக்கள், இந்துக்கள் அல்லாதோர் என உணர்வுப்பூர்வமாக, வெளிப்படையாகத் துண்டாடப்பட்டுவிட்டதையே இந்தப் புள்ளிவிவரங்கள் நமக்குக் காட்டுகின்றன. இந்துக்களின் ஓட்டுகள் பெருமளவு பாஜகாவால் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தேர்தலில் பாஜக மொத்தமாகப் பெற்ற 37.4 சதவீத வாக்குகளில் பெரும்பகுதி இந்துக்களிடமிருந்தே வந்திருக்கிறது. மிகச் சிறிய அளவே அவர்கள் மத சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். 2014இல் அவர்கள் பெற்ற இந்துக்களின் வாக்குகள் 36 சதவீதம் என்றால் இந்தத் தேர்தலில் அது 44 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 51 சதவீத இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்திருக்கிறது. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதுதான் நம்முன் நிற்கும் கேள்வி. மதரீதியாக மட்டுமல்லாமல் சாதிரீதியாகவும் எல்லா சாதிகளிலும் பாஜகவின் வாக்குகள் அதிகரித்துள்ளன. சென்ற தேர்தலில்  47 சதவீதமாக இருந்த உயர்சாதி இந்துக்களின் வாக்குகள் இந்தத் தேர்தலில் 52 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்து பிற்படுத்தப்பட்டோர், இந்து தலித்துகள், இந்து ஆதிவாசிகள் ஆகியோரின் பாஜக ஆதரவு வாக்குகள்கூட அதிகரித்திருக்கின்றன.

அதேசமயம் பாஜக கூட்டணிக்கு ஆதரவாகச் சென்ற தேர்தலைப்போலவே இந்தத் தேர்தலிலும் 8 சதவீத முஸ்லிம்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர், கிறித்துவர்கள் 11 சதவீதமும் சீக்கியர்கள் 11 சதவீதமும் வாக்களித்திருக்கிறார்கள். இது மிகத் தெளிவாக இந்துக்களின் கட்சியாக பாஜகவை இந்தியாவில் கட்டமைத்திருக்கும் விதமாகும். அசாம், பீகார், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, ஒடிசா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, ஜார்க்கண்ட், தெலுங்கானா என எல்லா மாநிலங்களிலும் பாஜகவிற்கான வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவின் கூட்டணி காரணமாக பாஜகவின் இந்து வாக்குவங்கி 19 சதவீதத்திலிருந்து 29 சதவீதமாக உயர்ந்துள்ளது எனப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அப்படியென்றால் இந்தியாவின் பெரும்பகுதியில் வீசியது மோடி ஆதரவு அலையல்ல; இந்துத்துவ அலை, காவி அலை என்பது நிரூபணமாகிறது.

இந்த இந்துத்துவ அலையையே நாடு முழுக்க அவர்கள் எப்படி உருவாக்கினார்கள் என்பதுதான் இந்த நாட்டு மக்களும் எதிர்க்கட்சிகளும் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. இந்தியா இதற்குமுன் ஒருபோதும் மதரீதியாக வாக்களித்ததில்லை. மொழி உணர்வு, பிராந்திய உணர்வுகளும் மாநில உணர்வுகளும் ஏன் குறிப்பிட்ட அளவில் சாதிய அம்சங்கள் கூட தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்திருக்கின்றன. ஆனால் இந்தத் தேசம் பெரும்பான்மை மதம் மற்றும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் அரசியல் அதிகாரத்தை வழங்கியிருக்கும் காட்சி அச்சமூட்டுவதாக இருக்கிறது. காந்தியும் நேருவும் உருவாக்கிய மதசார்பற்ற பன்முகத் தன்மைகொண்ட இந்தியா கண்முன்னால் பேரழிவைச் சந்திக்கிறதா? நாடுமுழுக்க பிற சமூகங்களின்மீதான வெறுப்பின் அடிப்படையில் அமைந்த இந்துத்துவக் கொள்கை மக்களின் இதயங்களில் ஆழமாக இறங்கிவிட்டதா?

பாஜகவும் அதன் துணை அமைப்புகளும் இந்த ஐந்தாண்டுகள் முழுக்க இந்துத்துவ பெரும்பான்மைவாத நஞ்சை அடிஆழம்வரை கொண்டுசெல்ல எண்ணற்ற வேலைகளைச் செய்தார்கள். கிராமங்கள், நகரங்கள், வெவ்வேறு மாநிலங்கள் என மாறுபட்ட உத்திகளை வெவ்வேறு அமைப்புகளின் வழியாகச் செய்தார்கள். மோடி கார்ப்பரேட்டுகளை வலிமைப்படுத்தி அதன்வழியே தன்னை நிலைநிறுத்திக் கொண்டபோது காவி பரிவாரங்கள், பசு மாமிசம் பற்றி நாடுமுழுக்க விவாதங்களை உருவாக்கினார்கள். ராமர் கோவிலைப் பற்றிப் பேசினார்கள், சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலையை அமைத்து ஒரு இந்துத்துவ ஐக்கானை உருவாக்கினார்கள், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய வேண்டுமென்றார்கள். முத்தலாக் தடைச் சட்டத்தின்மூலம் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிளவுகளை உண்டாக்கினார்கள். படிப்பறிவற்ற எளிய கிராம மக்களிடம் மட்டுமல்ல, படித்த மத்தியதர வர்க்கத்தினரிடமும் போலி மாயைகளை உருவாக்கினார்கள். விவசாயிகள் பிரச்சினை, தொழில்கள் வீழ்ச்சியடைந்தது என எத்தனையோ நெருக்கடிகள் நாட்டை ஆட்டிப்படைத்தபோதும் இந்துத்துவ பெருமிதம் அதையெல்லாம் தாண்டி பாஜகவிற்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. அவர்கள் இந்தப் பெரும்பான்மைவாத வெறுப்பு அரசியலின் தளத்தை இன்னும் விரிவுபடுத்தவே விரும்புவார்கள். பிரிவினைமூலமும், பிரிவினைவாதத்தின்மூலமும் இந்த நாட்டின் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அவர்கள் இந்தத் தேர்தல் மூலம் புரிந்துகொண்டுள்ளார்கள். இந்து மகா சபை தலைவர், காந்தியின் உருவ பொம்மையை சுட்டது என்பது ஒரு அடையாளபூர்வமான பிரகடனம். இந்த நாட்டின் தேசியத் தந்தையாக கோட்சே ஒரு நாள் அறிவிக்கப்பட்டுவிடலாம். புல்வாமா தாக்குதல், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், தாக்கி அழிக்கும் ஏவுகணை பலம் என மோடி தேர்தல் பிரச்சாரத்தின் கடைசித் தினங்களில் ஆடிய நாடகங்கள் எல்லாம் இந்துத்துவ பெரும்பான்மைவாதம் என்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸால் உருவாக்கப்பட்ட கேக்கின்மீது வைக்கப்பட்ட செர்ரிப் பழங்கள் மட்டுமே. நாம் எல்லோரும் செர்ரிப் பழங்களைப் பார்த்தோம். ஆனால் அந்த கேக்கை கவனிக்கவில்லை. சமூக வலைதளங்களில் மோடிக்கு எதிராக நடந்த கடும் பிரச்சாரங்களைத் தன்னம்பிக்கையுடன் உற்றுநோக்கிக் கொண்டிருந்த ஜனநாயக சக்திகள் இந்தியாவின் மதசார்பின்மை என்கிற ஆன்மாவின் வேரை அறுத்துக்கொண்டிருந்ததைக் கவனிக்கத் தவறினார்கள். இந்திய ஜனநாயக சக்திகளுக்கு தமிழகமும் கேரளமும் தவிர வேறெந்த மாநிலமும் குரல்கொடுக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. இந்துத்துவ பார்த்தீனியம் தமிழகத்தையும் கேரளத்தையும்கூட அரித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு இந்தத் தேர்தல் வெற்றி மட்டும் போதாது, நாடுமுழுக்க மக்களின் இதயங்களில் வேலைசெய்ய வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்த நாடு காந்தியின் நாடு என்ற உணர்வை மீண்டும் தட்டியெழுப்புவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

இருண்ட காலத்தில் மேலும் இருள் சேர்ந்திருக்கிறது. நம்முடைய இந்த ஜனநாயக சக்தியின் போராட்டம் ஒரு நீண்ட பயணத்தை எதிர்நோக்கியிருக்கிறது. வரப்போகிற நாட்கள் மிகக் கடினமானவை. மாற்று சக்திகளும் ஜனநாயக சக்திகளும் கடுமையாக வேட்டையாடப்படுவார்கள். ஊடகங்களில் பெரும் சுத்திகரிப்பு நடக்கும். முழுமுற்றான தனியார் மையமாக்கலை நோக்கி இந்தியப் பொருளாதாரம் கொண்டு செல்லப்படும். ஆனால் ஒரு சர்வாதிகாரம் அதிகப்படியான அழுத்தங்களை மக்கள்மேல் உருவாக்க உருவாக்க அந்த அழுத்தத்திலிருந்து மக்களின் கிளர்ச்சி வெடிக்கும் என்பதே கடந்த கால வரலாறாக இருந்திருக்கிறது.