இந்திய தேசம் கடந்த ஒரு மாதமாக பதட்டத்தின் எல்லையில் இருக்கிறது. இந்தியாவை ஆளும் பா.ஜ.க அரசு, மக்கள்மேல் எந்த நேரம் வேண்டுமானாலும் எதைவேண்டுமானலும் திணிக்கலாம் என்ற அச்சம் பேரிருள்போல பரவலாகப் படர்ந்திருக்கிறது. காஷ்மீரின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு அதன் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு காஷ்மீரை இருகூறுகளாக்கி யூனியன் பிரதேசங்களாக ஆக்கியதோடு மட்டுமல்ல, காஷ்மீர் இப்போது ஒரு போர் கட்டுப்பாட்டு பிரதேசமாக வைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய தலைவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, வெளி யுலகத்திலிருந்து காஷ்மீர் முற்றிலுமாக துண்டிக்கப் பட்டிருக்கிறது. தொலைபேசி இல்லை. இணையம் இல்லை, தொலைக்காட்சிகள் இல்லை. மக்கள் வெளியே நடமாடுவதற்குக் கடுமையான கெடுபிடிகள். வீட்டைவிட்டு வெளியே செல்பவர் ஒருமணி நேரத்திற்குள் வீடு திரும்ப வேண்டும் என்ற கெடுபிடிகள். காஷ்மீருக்கு வெளியே இருப்பவர்கள் தங்கள் உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ என்னவானது என்று தெரிந்துகொள்ளாத நிலை. காஷ்மீர் மக்கள் மருத்துவ உதவிகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் துண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். காஷ்மீரில் எதற்காக இந்த அவசர முற்றுகை? காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இத்தகைய ஒரு முடிவை எடுக்க முடியாது என்றபோதும்கூட பாஜக அரசு  தன் மிருகபலத்தைப் பயன்படுத்தி இந்த முடிவை நிறைவேற்றியிருக்கிறது. ஊடகங்கள் நுழைய முடியாத இருண்ட பிரதேசமாக காஷ்மீர் வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுமதி இல்லை.

இந்தக் கொடூரமான ஜனநாயகப் படுகொலையைப்பற்றிக் கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் தேச விரோதிகள் என பாஜக முத்திரை குத்தி வருகிறது. இந்த அரசின் பயங்கரவாத செயல்களை எதிர்ப்பவர்கள் அனைவருமே தேச விரோத பயங்கரவாதிகளாக அடையாளம் காட்டப்படுகிறார்கள். இந்தியாவில் பல தேசிய, மாநிலக் கட்சிகளுக்குள் இந்த நடவடிக்கையை எப்படி எதிர்கொள்வது என்பதில் குழப்பங்களும் முரண்பாடுகளும் எழுகின்றன. ஆனால், மாநிலக் கட்சிகளில் திமுக மட்டுமே காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மாநில சுயஆட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய ஆபத்து என்பதை உணர்ந்து இந்தக் கரம் இத்தோடு நிற்காது என்பதைத் தெரிந்துகொண்டு கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. காஷ்மீரில் மத்திய அரசின் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து டெல்லியில்  எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் திமுக பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியது. திமுகவின் இந்த எதிர்ப்பு மட்டுமே தேசிய அரசியலில் முதன்மையான எதிர்க்குரலாக ஒலித்தது எனலாம்.

மத்திய அரசு, காஷ்மீர் விவகாரத்தை மேலும் சிக்கலாக்கி எதிர்காலத்தில் சர்வதேச நாடுகளுடைய தலையீட்டிற்கு உள்ளாகும் இடத்தில் தள்ளியிருக்கிறது. ஒருவிதத்தில் உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையிலும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இதன் விளைவுகள் இந்தியாவில் பயங்கரவாத அபாயத்தை எதிர்காலத்தில் வளர்க்கக்கூடுமென அச்சம் ஏற்படுகிறது. ஆனால் அப்படி ஒரு பயங்கரவாதம் இங்கு வளர்ந்தால்தான் ஒரு இந்து பெரும்பான்மைவாதத்தைக் கட்டமைக்க முடியுமென பாஜக கருதுகிறது என்று தோன்றுகிறது. மத அடிப்படையிலான பாகுபாட்டின் அடிப்படையில் ஒரு பெரும்பான்மைவாதத்தை கட்ட பயங்கரவாதத்தின் துணை அவசியம். மேலும் மாநிலங்களின் அந்தஸ்தைக் குறைத்து எதிர்காலத்தில் அவற்றை ஒன்றுமில்லாமல் ஆக்குவதன்மூலமாக ஒரு ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவருவதற்கான பரிசோதனைக் களமாக காஷ்மீர் மாற்றப்பட்டிருக்கிறது.

தேச பக்தி, தேச ஒற்றுமை ஆகிய முகமூடிகளை அணிந்துகொண்டு பாஜக இந்த அதிகாரத்தின் இரும்புப் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டிருக்கும்போது நாட்டின் பொருளாதார அடித்தளங்கள் தகர்ந்து விழுந்துகொண்டிருக்கின்றன. இந்தியா இதுவரை கண்டிராத பெரும் பொருளாதார மந்தநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதைப்பற்றி ஏராளமாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. எளிமையாகப் பார்த்தால் மக்களுடைய வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்திருக்கிறது. மத்தியதர வர்க்கத்தினர், விவசாயிகள், தொழிலாளிகள் என எல்லாப் பிரிவினரும் கடும் வருமான இழப்பைச் சந்தித்திருக்கின்றனர். கார்ப்பரேட்டுகளின் பல்லாயிரக்கணக்கான கோடி கடன்களைத் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, விவசாயத்தையோ, சிறுதொழில்களையோ பாதுகாக்க ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. இந்தியாவின் 80% வேலைவாய்ப்புகளை அமைப்புசாரா தொழில்களான விவசாயமும் சிறுதொழிலும் குறுவணிகமுமே அளித்து வந்திருக்கின்றன. ஏற்கனவே நசிவில் இருந்த இந்தத் துறைகளைப் பணமதிப்பிழக்க நடவடிக்கையும் ஜி.எஸ்.டியும் முற்றாக அழித்துவிட்டது. இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு இப்படித்தான் நொறுக்கப்பட்டது. விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குகிறோம், கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோம் என்றெல்லாம் அடித்த சவடால்கள் பச்சைப் பொய்கள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. விவசாயமும் சிறுதொழில்களும் குறுவணிகமும் அழிந்து கோடிக்கணக்கானோர் வேலையிழந்தது கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் அவலம். அது பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தபோதுகூட பலரும் அதன் விளைவுகளை உணரவில்லை. பெரும்பாலான மக்கள் வருமான இழப்பையும் வேலையின்மையும் கொண்டிருந்தால் என்ன நடக்கும்? முதலில் விவசாயம் மற்றும் சிறுகுறு தொழில்கள் அழியும். பிறகு நுகர்வுச் சந்தை சுருங்கி பெரிய நிறுவனங்கள் அழிய ஆரம்பிக்கும். மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏற்பட்டிருக்கக்கூடிய பெரும் சரிவு சமீபத்தில் பெரும் அபாய மணியாக ஒலித்தது. விவசாயம் அழிந்தால் யார் டிராக்டர் வாங்குவார்கள்? தவணை கட்டமுடியாமல் இருந்தால் யார் இரு சக்கர வாகனங்கள் வாங்குவார்கள்? எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை இருந்தால் யார் கார் வாங்குவார்கள்?

காபி டே நிறுவன அதிபர் சித்தார்த் தற்கொலை செய்துகொண்டது இந்தப் பொருளாதார பயங்கரத்தின் கோர முகத்தைக் காட்டுகிறது. மத்திய அரசின்  வரிவிதிப்பு பயங்கரவாதம் எல்லாத் தரப்பினரையும் பேரழிவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது. மோட்டார் வாகன நிறுவனங்கள் அனைத்தும் வேலை நாட்களைக் குறைத்துக்கொள்ளும் சூழலில் பார்லே, பிரிட்டானியா போன்ற பிஸ்கட் நிறுவனங்களின் வீழ்ச்சிக் கதைகளும் வெளிவந்திருக்கின்றன. கடும் ஆட்குறைப்பு நடந்துகொண்டிருக்கிறது. உள்ளாடைகள் விற்பனைகூட கணிசமாக சரிந்திருக்கிறது என்ற புள்ளிவிவரத்தைக்கூட ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ரியல் எஸ்டேட் வர்த்தகம் ஏற்கனவே கடும் அழிவில் இருக்கிறது. கட்டிமுடித்த வீடுகளை வாங்க ஆளில்லை. உணவு, உடை, இருப்பிடம் என அனைத்துத் தேவைகள் சார்ந்தும் இவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகையில் மக்களுடைய வாழ்க்கைத்தரம் எவ்வளவு அதலபாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

ஆனால் நிலைமையின் பயங்கரத்தைப்பற்றி பாஜக அரசு அலட்டிக்கொள்ளவே இல்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போகாத ஊருக்கு வழி சொல்லிக்கொண்டிருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் ரிசர்வ் வங்கியின் கையிருப்புத் தொகையிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் ஒப்படைக்க இப்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகந்ததாஸ் ஒப்புதல் அளித்துள்ளார். இது பொருளாதார நிபுணர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் பணம் என்பது அவசர கால தேவைக்காக வங்கித்துறையைக் காப்பாற்றும் நோக்கில் வைக்கப்பட்டிருக்கும் பணம். இதற்கு முன்பு அதிகபட்சமாக 50000 கோடி வரைக்கும்தான் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றிருக்கிறது. கடைசியாக மன்மோகன் சிங் அரசு 20000 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது.  ஆனால் இப்போது மத்திய அரசு 1.76 லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிடமிருந்து பிடுங்குவது வங்கித்துறையைப் பேரழிவிற்கு கொண்டுசெல்லக் கூடியது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய அரசின் இந்த நிர்பந்தத்தை ஏற்க மறுத்ததால்தான் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. அதேபோல மற்றொரு ரிசர்வ் வங்கி கவர்னரான உர்ஜித்சிங் பட்டேலும் அதே காரணத்திற்காகத்தான் ராஜினாமா செய்தார். “மத்திய வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டை அரசு மதிக்க வேண்டும். மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும் பெருமுதலாளிகளுக்கும் அரசின் பயணற்ற திட்டங்களுக்கும் வங்கிகள் துணைபோக முடியாது. அப்படிப்போனால் அர்ஜெண்டினா சந்தித்த அதே நெருக்கடியை நாமும் சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்த ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரல் ஆச்சாரியாரும் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. என்ன செய்தேனும் தன் நோக்கங்களை சாதித்துக்கொள்ளும் மத்திய அரசு ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகந்ததாஸைக் கொண்டுவந்தது. சக்திகந்ததாஸுமேகூட இந்த முடிவுக்குத் தயங்கியபோது அவரை நிர்பந்திக்கக்கூடிய நியமன ஆலோசகர்களை உள்ளே கொண்டுவந்து தனது நோக்கத்தை மத்திய அரசு சாதித்துக்கொண்டது. ரிசர்வ் வங்கி போன்ற ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனத்தை மத்திய அரசு தன்னுடைய நிதி அமைச்சகத்தின் கிளைபோல மாற்றுவது ஒட்டுமொத்தமாக இந்தியப் பொருளாதாரத்தைப் பேரழிவிற்குக் கொண்டுசெல்லக்கூடியது. இங்கு அடிப்படையாக இன்னொரு கேள்வியும் எழுகிறது. இவ்வளவு பணத்தை மத்திய அரசு எதற்காகத் திரட்டுகிறது என்பதுதான் அந்தக் கேள்வி. இது பல்வேறு அச்சங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் பாஜகவிற்கு எதிரான அரசியல் சக்திகள் பெருமளவிற்கு பலவீனமடைந்ததையே காட்டுகிறது. முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றுபட்டு பாஜகவை எதிர்க்கும் மனநிலை பெரும்பாலான கட்சிகளுக்கு இல்லை. ஒவ்வொரு கட்சிகளிலும் தங்களுக்கு ஆதரவான மனநிலைகொண்ட ஒரு தரப்பை பாஜக உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், அரசுக்கு சாதகமாக எடுத்த நிலைப்பாடுகள் இந்திய அரசியலில் நிலவும் பெரும் குழப்பத்தைக் காட்டுகிறது. வழக்குகளின் காரணமாகவும் விலைபேசப்படுவதின் காரணமாகவும் எதிர்க்கட்சிகளுக்குள் பாஜகவின் நிழல் ஆழமாக விழுந்துகொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் ஒற்றை எதேச்சதிகார பெரும்பான்மைவாத ஆட்சியை நோக்கி இந்தியா நகர்ந்துகொண்டிருப்பதைக் காண முடிகிறது. இந்த தேசம் அரசியல் சாசனத்திற்குப் பதில் ராணுவ பலத்தால் ஆளப்படும் நிலை வெகு தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது. இந்த ஜனநாயகத்திற்கான குரலை அடியோடு அழித்தொழிக்கவேண்டும் என்று பாஜக மூர்க்கமாகச் செயல்பட்டு வருகிறது. ஊடகங்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் ஆங்கில ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிடவும் எமர்ஜென்சி காலத்தில் இருந்ததைவிடவும் எதிர்கொள்ள வேண்டிய மோசமான சூழல் இன்று நிலவுகிறது.

வரப்போகிற நாட்கள் எல்லாவிதத்திலும் மிகக் கடுமையானவை, மிக ஆபத்தானவை. ஒரு அரசு பாசிசத்தைக் கொண்டுவருவதில் ஆச்சரியமில்லை. ஆனால்,  அதற்கு இந்த நாட்டினுடைய மக்களை உடந்தையாகவும் பங்காளிகளாகவும் சேர்த்துக்கொள்வதுதான் அபாயகரமானது.  இப்போது இந்தியாவில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. மதவாதமும் தேசிய வெறியும் ஒன்றுசேர்வது மிகமிக அபாயகரமான ஒரு கலவை. ஜெர்மனியில் இனவாதமும் தேசிய வெறியும் ஒன்று சேர்ந்ததுபோன்ற கலவை அது.