சுதந்திரமென்பது

புணர்தலல்ல;

புணர மறுத்தல்.

‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத்தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்’ என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள்தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: ‘குலத்து மாதர்க்குக் கற்பு இயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்’. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட பார்வையில் பார்க்க வேண்டும் என்றும் சொல்வதாகக் கொள்ளலாம்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என்கிற இரண்டு அருமையான சொந்தக் கதைகளுக்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் ஒரு மறுஆக்கப்படம் இது.

Courtroom Drama எனப்படும் நீதிமன்ற உணர்ச்சிகரம் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல.  கலைஞரின் எழுத்திலான ‘பராசக்தி’யில் தொடங்குகிறது அது. அதன் நாயகன் சிவாஜி அதன் பிறகு அப்படியான நிறைய படங்களில் நடித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகரனும் இத்திசையிலான பல‌ படங்களை இயக்கி இருக்கிறார். 1980களில் கலைஞர் மீண்டும் ‘பாசப் பறவைகள்’ எழுதினார். சமீபத்தில் வந்த ‘மனிதன்’ வரை பல உதாரணங்கள் சொல்லலாம். ‘நேர்கொண்ட பார்வை’யும் நெடிய பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்கிறது. இதன் இரண்டாம் பகுதி முழுக்கவே நீதிமன்றக் காட்சிகள்தாம்.

‘நேர்கொண்ட பார்வை’ பேசும் விஷயம் முக்கியமானதும், அவசியமானதும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அதைத் தெளிவாகச் சொல்லவில்லை என்றே கருதுகிறேன். subtle-ஆகச் சொல்கிறேன் பேர்வழி என்று குழப்பி வைத்திருப்பது ஒரு பக்கம். இன்னொருபுறம் திரைக்கதையின் தேவையற்ற சிடுக்குகள் வழியாகப் பல பக்கவிளைவுக் கருத்துக்களையும் திணித்து விடுகிறது. அதனால்தான் வலியுறுத்த வந்த கருத்துக்கு நியாயம் செய்யவியலாமல் தடுமாறுகிறது. அந்தப் போதாமைகள் இப்படத்தை ஓர் ஆரம்ப முயற்சி என்ற அளவில் மட்டும் வரவேற்க வைக்கின்றன.

ஒரு பெண் கலவி வேண்டாம் என்று சொன்னால் மீறி அவளைத் தொடக்கூடாது என்பதுதான் படம் சொல்லும் ஒற்றை வரி (No Means ‘NO’). அது சினேகிதி, காதலி, மனைவி, பாலியல் தொழிலாளி என யாராக இருந்தாலும் சரி. அதேபோல், ஒரு பெண்ணின் பூர்வீகம், ஆடை, ஒப்பனை, வேலைக்குப் போவது, வேலையின் இயல்பு, தனியே அறையெடுத்துத் தங்கியிருப்பது, பணத்தேவை இருப்பது, குடிப்பது, இரவில் ஊர் சுற்றுவது, பொதுவிடங்களில் நடனமாடுவது, ஆண் நண்பர்களுடன் பழகுவது, அவர்களுடன் சிரித்தும் தொட்டும் பேசுவது, பாலியல் நகைச்சுவைகள் பகிர்வது, ஒருவருடன் (அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டோருடன்) உடலுறவில் இருப்பது என எந்த விஷயமும் அந்தப் பெண்ணைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆண்களும், அப்பெண் பாலியல் ஒழுக்கமற்றவள் என சமூகமும் நினைத்துக் கொள்ள‌ப் போதுமான சான்றுகள் அல்ல‌ என்று சொல்கிறது. அந்த‌ப் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகளை “அப்படியான பெண்களுக்கு இப்படித்தான் நடக்கும்” என்று கடக்கக்கூடாது, அவர்களும் இங்கே பாதுகாப்புடன் வாழச் செய்வதே ஒரு முன்னேறிய, நாகரிக‌ சமூகத்துக்கு அடையாளம் என்பதையும் வலியுறுத்துகிறது.

கதை என்பதைவிட தொடர்நிகழ்வுகளின் தொகுப்பு என்றுதான் இப்படத்தைக் காண முடிகிறது. ஒன்றாக அறையெடுத்துத் தங்கியிருக்கும் மூன்று பெண்கள் ஓர் இரவில் புதிதாய் அறிமுகமான ஆண்களுடன் ஒரு ரெஸார்ட்டில் உணவு கொள்ளவும், மது அருந்தவும் என நட்பு பாராட்டும் சூழலில், திடீரென எதிர்பாராத விதமாக‌ அந்த ஆண்களால் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்தப்படும்போது அவர்களைத் தாக்கிவிட்டு அந்த மூன்று பெண்களும் தப்பித்து வருவதிலிருந்து படம் தொடங்குகிறது.

படத்தில் சிலபல‌ நெருடல்கள் இருக்கின்றன. படத்தில் மிகக் கருப்பு வெள்ளையாகக் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார்கள். உதாரணமாக இதில் வரும் ஆண்கள் அரசியல் செல்வாக்கு கொண்ட, பணக்கார இளைஞர்கள். செய்த தவறை மறைக்க சம்பந்தப்பட்ட‌ பெண்ணைக் காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் (Molestation) செய்யும் வில்லன்கள் இவர்கள். அவர்களின் வழக்குரைஞர் அப்பெண்களை நீதிமன்றத்திலேயே ஆபாசமாக இழித்துப் பேசுபவர். போலீஸ்காரர்களோ (அதுவும் பெண் காவலர்கள்) கண்மூடித்தனமாய் அவர்களுக்கு ஆதரவாய் நடக்கிறார்கள். ரெஸார்ட்காரர்களுக்கும் வேறு வழியில்லை. இவையெல்லாம் மசாலா சினிமாத்தனமாக இருக்கிறது. அந்தப் பெண்களின்மீது நம் இரக்கத்தைச் சுரண்ட இச்சூழல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

என் தரப்பு இந்த மாதிரி மிகைகள் இல்லாமலே பார்வையாளன் அப்பெண்கள் மீது ஆதரவு கொள்ளும்படி படத்தை எடுப்பதே சரியானதும் தெளிவானதும். தற்போதைய வடிவில் பார்வையாளர்கள் பெண்களுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுப்பது பாலியல் மறுப்பு என்ற விஷயத்துக்காகவா அல்லது மேற்சொன்ன வில்லத்தனங்களுக்காகவா எனக் குழப்பம் வருகிறது. அந்தக் குற்றம் இழைத்த பையன்கள் பின்புலங்களற்று இருந்தாலும், அதன் பிற்பாடு பழிவாங்கல் / மிரட்டல் என வேறெந்தக் குற்றத்தில் ஈடுபடாமல் இருந்தாலும் கூட அவர்கள் அந்த இரவில் கட்டாயப்படுத்தியது என்ற குற்றத்திற்காகவே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று வைத்திருந்தால் புரிதல் தெள்ளியதாய் இருந்திருக்கும். ஆனால் படம் பல விஷயங்களைக் கோர்த்துக் கொள்கிறது. குற்றத்தை அதிகப்படுத்தினால் மட்டுமே அதைக் குற்றமென நம்ப வைக்க முடியும் என்கிற அமெச்சூர் எத்தனம். அது படத்தின் குரலைப் பலவீனப்படுத்துகிறது. அதுபோக, கலையான‌ புரிதல்களையே மக்களிடம் ஏற்படுத்துகிறது.

அடுத்தது அஜீத் அவ்வப்போது பெண்களுக்கான விதிகள் என்ற பெயரில் இன்றைய இந்திய வெகுமக்கள் மனநிலை / பொதுப்புத்தி பற்றிப் பகடியாகச் சொல்லும்போது அது பார்வையாளர்களால் நகைச்சுவையாகவே உள்வாங்கப்படுகிறதா அல்லது உண்மை என்றே கொள்ளப்படுகிறதா எனப் புரியவில்லை. எனக்கே ஆங்காங்கே குழப்பம் வந்தது என்பதே நிஜம். வசனங்களின் குறைபாடு என்பது தாண்டி அஜீத்தின் உடற்மொழி அல்லது வசன உச்சரிப்புப் போதாமை என்றும் இதைப் பார்க்கலாம்.

என் வரையில் முதல் முறை நிகழும் குற்றத்தை விட இரண்டாம் முறை காரில் மீரா கிருஷ்ணனை (ஷ்ரத்தா) கடத்திச் செய்வதே வன்முறை மற்றும் பாதிப்பின் அடிப்படையில் பெருங்குற்றம். ஆனால் படம் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. நீதிமன்ற விவாதத்தில் ஒற்றை வசனத்தில் கடக்கிறது. முந்தைய குற்றத்தைத்தான் பிரதானப்படுத்திப் பேசுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணும் அதையேதான் பேசுகிறார். பார்வையாளனுக்கு அது ஒரு மாதிரி துருத்திக் கொண்டு விடுபடலாக எஞ்சுகிறது.

இதில் கோடிட்டு காட்டப்பட்டிருக்கும் இன்னொரு விஷயம் – ஆண்கள் தம் வீட்டுப் பெண்கள் அவர்கள் ஒழுக்கமின்மை எனக் கருதும் எதையும் (உதா:குடி) செய்ய மாட்டார்கள் என்று அப்பாவித்தனமாக நம்புவதும், அப்படி இல்லை எனத் தெரிய வரும்போது அதை வெளியே வரவிடாமல் தடுக்க முனைவதும். தமது வீட்டுப் பெண்களுக்கும், மற்ற பெண்களுக்கும் வெவ்வேறு அளவுகோல் வைத்திருக்கிறார்கள். தாம் மற்ற பெண்களுக்கு நிகழ்த்தும் ஒரு குற்றம் அதே சூழலில் வாழும் தம் வீட்டுப் பெண்களுக்கு வர அதிகம் நேரமாகாது என்ற அடிப்படை தர்க்கம் கூட அவர்களுக்கு உறைப்பதில்லை அல்லது வராது என முரட்டுத்தனமாய் நம்பி வாழ்கிறார்கள்.

எனக்குப் படத்தில் பிடித்த ஒரு விஷயம். பாதிக்கப்பட்ட‌ மீரா கிருஷ்ணன், வர்ஜினா என்றும் எப்போது தன் கன்னித்தன்மையை இழந்தாள் என்றும், எத்தனை பேருடன் அவருக்கு உறவு இருந்தது என்றும் வக்கீலான அஜீத் கோர்ட்டில் கேட்குமிடம்தான். அதில் அவர் தெளிவாக ஒன்றை உணர்த்தி விடுகிறார்: ஒரு பெண் அதற்கு முன் பலருடன் உறவு கொண்டிருந்தாலும் அதையே காரணம் காட்டி ஓர் ஆண் அவளை உறவுக்கு அழைக்கவியலாது. அவ்வளவு ஏன், அதே ஆணே முன்பு அவளுடன் உறவு கொண்டிருந்தாலும் இப்போது அவள் முடியாது என்று சொன்னால் முடியாதுதான். பழையதைச் சுட்டிக்காட்டி வா என அதட்ட முடியாது. திருமண உறவில் கணவன் மனைவிக்குள் கூட இதையே பொருத்துகிறது படம். இன்று ஒரு சராசரி இந்திய மனைவிக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறதா என்ன? புணர விரும்பும் கணவனைத் தடுத்தாட்கொள்ளும் உரிமை அவளுக்கு இருக்கிறதா? என் வரையில் நேர்கொண்ட பார்வை பார்வையாளருக்குத் தரும் முக்கியச் செய்தியும் சிந்தனையும் இதுதான்.

படம் பார்த்த சிலர் (அதில் பெண்களும் அடக்கம்) அதிக அறிமுகமற்ற‌ ஆண்களுடன் இரவில் வெளியே செல்வதும், சேர்ந்து குடிப்பதும், அப்போது அரைகுறை ஆடைகள் அணிந்திருப்பதும், ஆபாச நகைச்சுவைகள் கதைத்துச் சிரிப்பதும் நடந்த பிறகு ஆண் கையைப் பிடித்துத்தான் இழுப்பான் என்பதுகூடத் தெரியாத அளவு குழந்தைகளா? எனக் கேட்கிறார்கள். அப்படி மட்டையடியாய்ச் சொல்லிவிட‌ முடியாது. இதில் சில நுட்பமான விஷயங்கள் இருக்கின்றன.

1) மேற்சொன்ன நான்குமே நட்பின்பாற்பட்ட, நம்பிக்கையின்பாற்பட்ட விஷயங்களாக இருக்க வாய்ப்புண்டு. அதனாலேயே அந்தப் பெண்கள் கலவிக்கு அழைத்தால் இசைந்துவிடுவார்கள் எனறு ஒருவர் தீர்மானிக்க முடியாது, கூடாது.

2) ஆனால், அதே சமயம் கலவியில் ஆர்வங்கொண்ட பெண்களும், பணத்திற்காகப் பழகும் பெண்களும் இதே முறைகளில்தான் தம் விருப்பத்தைத் தெரிவிப்பார்கள். அவர்களை ஓர் ஆண் அணுகுவதில் எந்தத் தவறும் இல்லை. முதல் வகைக்கும், இரண்டாம் வகைக்கும் வித்தியாசம் தெரியாதுதான் என்றாலும் தன் விருப்பத்தை ஆண் வெளிப்படுத்துவதே குற்றம் என்றாகிவிடாது. (சமீப ஆண்டுகளில் இப்படியான சில விருப்ப வெளிப்பாடுகளை மீடூ குற்றங்களாகச் சித்தரித்தார்கள்.)

3) ஆனால், அப்படி அணுகும்போது பெண் மறுத்தால் விட்டுவிட வேண்டும். அவளுக்கு அதைத் தன்னுடன் கொள்வதில் விருப்பமில்லை என்று புரிந்துகொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அவனிடம் போனாயே, இரவில் அரைகுறையாய் அலைகிறாயே, நான் வாங்கிக் கொடுத்ததைக் குடித்தாயே, இளித்திளித்துப் பேசினாயே என்றெல்லாம் கேட்டு வற்புறுத்தக்கூடாது. அது ஆபாசம். வல்லுறவின் முதற்படி. கட்டிப்பிடித்தால், கண்ட இடத்தைப் பிசைந்தால், உதட்டில் முத்தமிட்டால் எப்பேர்பட்ட பெண்ணும் ஒப்புக்கொள்வாள் என்பதெல்லாம் ஆதிகால மூட நம்பிக்கை.

4) ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை ஆண்களுக்கு இது புரியாத அளவில்தான் மனப்பான்மை இருக்கிறது. அதனால் பொதுவாகப் பெண்கள் ஜாக்கிரதையாக இருப்பதில் தவறில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. நான் வீட்டைத் திறந்து போட்டுப் போனாலும் எவனும் திருடக்கூடாது என்று சொல்வது நியாயமே என்றாலும் நடைமுறையில் திருடர்கள் நிறைந்த ஊரில் வீட்டைப் பூட்டிச் செல்வதே தர்க்கப்படி அறிவார்ந்த செயல்.

அஜீத் போதுமான அளவு நடித்திருக்கிறார். ஷ்ரத்தாவும், அபிராமியும் சிறப்பு. இதில் நீதிபதியாக நடித்தவர் நடிப்பும் முக்கியமானது (டி.ராமச்சந்திரன் என்றறிகிறேன்). ஜெயப்ரகாஷ் வழமைபோல். ரங்கராஜ் பாண்டே தடுமாற்றமாகத்தான் தெரிகிறார்.

இந்திப் பதிப்பான ‘றிவீஸீளீ’ பார்த்தவர்கள் எல்லோரும் இப்படத்தை ஒருபடி குறைத்தே பேசுகிறார்கள். இப்படத்தில் அஜீத் மனநல பிரச்சனைக்குச் சிகிச்சை எடுப்பவராகக் காட்டப்படுவதும், பூங்கா சண்டைக் காட்சியும், முன்கதையாகக் காட்டப்படும் வித்யா பாலனும் அவசியமே இல்லை. கதையை அது எந்த வகையிலும் ஓர் அங்குலம் கூட நகர்த்துவதில்லை. ஆனாலும் ரசிகர்களின் நாயக வழிபாட்டுக்குத் தீனி போடும் வகையில் அவற்றைச் சேர்த்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சமகாலப் பெண்களின் பிரச்சனையைப் பேசி இருக்கும், தனக்கு வாய்ப்பு குறைவான ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நிச்சயம் அஜீத் ந‌ம் மரியாதைக்குரியவர்.

கலை மற்றும் தர்க்க இடைவெளிகள் தாண்டி தன் பேசுபொருளுக்காக, அதைக் கோடிக்கணக்கான இளைஞர்களால் பின்பற்றப்படும் முன்னணி நடிகர் ஒருவரை வைத்துச் சொல்லி இருப்பதற்காக முக்கியமான படைப்பாகிறது. வாழ்த்துக்கள்!