கல்வி என்பது மக்களின் பொதுச் சொத்து. அரசு என்பது அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது. ஆனால் அந்தக் கடமை தவறி கல்வி என்ற மாபெரும் பொக்கிஷத்தை தனியார் பள்ளிகளிடம் வியாபாரத்திற்கு ஒப்படைப்பது நாட்டு மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.

*

ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்றார் பேராசிரியர் கோத்தாரி. நாட்டின் அடித்தளங்களில் மிக முக்கியமானது கல்வி ஆகும். இந்தக் கல்வி ஒரு நாட்டிலே எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அரசு திட்டமிடுகிறது. கல்விக் கொள்கை என்பது தொழிலுக்குத் தேவையான திறன்கள் மட்டும் கொடுப்பதல்ல, அதையும் தாண்டி நாட்டின் எம்மாதிரியான அறமதிப்பீடுகளை மக்கள் கொள்ள வேண்டும், எம்மாதிரியான பண்பாட்டுப் புரிதலை அவர்கள் கொள்ளவேண்டும், எம்மாதிரி அரசியல் உணர்வைக் கொள்ளவேண்டும் போன்ற பல நுட்பமான அறிவு கட்டமைப்புகளை உருவாக்குவதே கல்விக் கொள்கையாகும். ஜனநாயகத்தின் மீது அக்கறை கொள்ளாத எதேச்சதிகார அரசு ஆட்சி செய்யுமானால் அதற்கு கல்வி முதன்மை கருத்தியல் கருவியாக மாறும் அபாயம் உள்ளது. பல தலைமுறைகளை ஒரேமாதிரியாக சிந்திக்க வைக்கும் மூளைச் சலவையை செய்யத் திட்டமிடும்.

கல்வி மனிதனை விடுதலை செய்யும், ஞானத்தைப் பெருக்கும் என்றெல்லாம் கூறியதில் எவ்வளவு உண்மையிருக்கக் கூடுமோ அதே அளவு கல்வி மனிதர்களை விமர்சனக் கூறு அற்ற மொன்னையானவர்களாகவும் ஆக்கும் என்பதும் உண்மை. ஒரு வல்லரசுக்கு விமர்சன அறிவு கொண்ட மக்கள் தேவையா இல்லை, எதிர்ப்பு காட்டத்தெரியாத மக்கள் இருப்பது வசதியா? எனவே அரசு மதச்சர்பற்ற ஜனநாயகத் தன்மை கொண்டிராமல் இருந்தால், அது தம் மக்களை ஒரே மாதிரி சிந்தனை செய்வதைத்தான் விரும்பும். மேலும் அதிகாரத்தை மதிக்கும், அதிகாரத்திற்குப் பணியும் குடிமக்களைத்தான் தேசபக்தர்கள் என்று அழைக்கும். அப்படிப்பட்ட ஒற்றைப் பரிமாண மனிதர்களை உருவாக்கவே அது திட்டமிடும். அதற்கு முதல் வழி கல்வித் திட்டத்தை அதற்கேற்ப வடிவமைப்பதுதானாகும். கல்வி என்பது காலம் காலமாகப் பலர் தங்கள் தேடலின் மூலமும், ஒரு சமூகம் தான் எதிர் கொண்ட அனுபவங்கள் மூலமும் மக்களிடம் பகிறும் முறை ஆகும். கல்விக்கு முதலும் கிடையாது, முடிவும் கிடையாது. உலகம் உருவாகிய நாள் முதலே கல்வி தோன்றி விட்டது என்பதே உண்மை. ஆனால் ஒவ்வொரு சமூகத்திலும் வெவ்வேறு கூறுகள் முதன்மைப்படுத்தப்பட்டு, பயிற்றுவித்தல் எனும் பெயரில் மக்கள் அவற்றில் பழக்கப்படுத்தபட்டனர். ஒரு காலத்தில் மக்களைப் பழக்கப்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட வாழ்க்கை முறைக்குப் பணியவைத்தல் என்பதற்காகவே கல்வித் திட்டங்கள் இருந்தன. ஆனால் மனிதர்களின் தேடல், அந்த வரையறைகளை உடைத்து, வாழ்வின், உலகின், பிரபஞ்சத்தின் பல கூறுகளை வெளிப்படுத்தத் தொடங்கியது. நம்பிக்கைகள் மீது கட்டப்பட்ட தொன்மங்கள் உடைக்கப்பட்டு பகுத்தறிவே கல்வியின் அஸ்திவாரமாகத் தொடங்கியது. பகுத்தறிவு, சிலுவையில் அறையப்பட்டிருந்த மானுட ஞானத்தை ரத்தம் கசிந்து, உயிர் பலி கொடுத்து மீட்டெடுத்தது. மானுட நாகரீகத்தை செழுமைப்படுத்தும் ராஜபாட்டையே கல்விதான் என்றும் முழங்கியது. மதங்கள், தங்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் மட்டுமே என்று ஆக்கி வைத்திருந்த கல்வி முறை மானுடம் முழுதும் பயனுறும் முறையாக மாறத்தொடங்கியது. இதுவரை சமயக் கல்வி மட்டுமே கல்வியின் ஆதராமாக இருந்தது மாற்றப்பட்டு அறிவியல், வரலாறு, மொழி, அரசியல் என்று கல்வி ஆயிரம் கிளை பரப்பத் தொடங்கி விண்ணையே ஆட்கொண்டுவிட்டது.

இந்த நவீனக் கல்வி முறையைப் பலப்படுத்தியே உலகில் அரசுகள் கல்விக் கொள்ககளை வடிவமைக்கத் தொடங்கின. வளர்ந்த நாடுகள் தங்கள் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகளில் கல்விக்கு கணிசமான பங்கை ஒதுக்கின. ராணுவத்திற்கு இணையான ஒதுக்கீடு கல்விக்கும் வழங்கின என்பதே உண்மை. கல்வித் திட்டங்களில் இருந்து சமயக் கல்வியையும், சமய நிறுவனங்களையும் ஒதுக்கின. அதே வேளையில் நவீனமயப்படுத்தப்பட்ட கல்விமுறை வியாபார முதலீடுகளின் வளச்சிக்கு இன்றியமையாததாக அறிந்தனர். எனவே சமயத்தின் வேராக இருந்த கல்வி வணிக அறிவிற்கான அடிப்படையாக மாறத் தொடங்கியது. சமயம் என்றால் பிடித்து வைத்த பிள்ளையார்த்தனம்தான். வணிகம் என்றால் அது ராக்கெட் வேகம். கல்வியும் தாவி குதித்து ஓடத்தொடங்கியது. ஆய்வுகள் எல்லா துறைகளிலும் மேம்பட்டன என்றாலும் வணிகத்திற்கான கண்டுபிடிப்புகள் மட்டுமே முதன்மை பெறத் தொடங்கின. வணிகத்திற்கான கல்வி என்பது உருமாறி கல்வியே வணிகம் என்றாகத் தொடங்கியதுதான் கல்விக்கு நேர்ந்த கொடுமை. ஆனால் கல்வி என்பது மக்களின் பொதுச் சொத்து. உலகில் பலருடைய பங்களிப்பினால் செழுமை அடைந்து வரும் முடிவில்லாத ஞானம் அது. அரசு என்பது அதைப் பாதுகாக்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது. ஆனால் அந்தக் கடமை தவறி கல்வி என்ற மாபெரும் பொக்கிஷத்தை தனியாரிடம் வியாபாரத்திற்கு ஒப்படைப்பது நாட்டு மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும். இந்தப் புள்ளியிலிருந்துதான் இந்தியக் தேசிய கல்விக் கொள்கையை ஆராய வேண்டும் என நான் கருதுகிறேன்.

எல்லோருக்குமான தரமான கல்வி

உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற முழக்கம் பல ஆண்டுகளாக அரசாலும், கல்வியாளர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதைவிட முக்கியமாக எழுப்பப்பட வேண்டிய முழக்கம் ‘அனைவருக்குமான தரமான கல்வி’ என்பதே ஆகும். ஆனால் தேசிய கல்விக் கொள்கை 2019 இதற்கு எதிராகத்தான் உள்ளது. கல்வி என்பது ஒரு அடிப்படை மனித உரிமை என்ற தளத்திலிருந்து இந்தக் கொள்கையை வரையறுக்காமல் கல்வி என்பது வசதி உள்ளவர்கள் மட்டுமே பெறவேண்டிய ஒன்று என்ற நிலைப்பாட்டிலிருந்து தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இனி கல்வி என்ற பெயரில் உள்ள அனைத்தும் விற்பனைக்கே என்பதே இதன் மறைக்கப் பட்ட நோக்காமாக தெரிகிறது.

கல்வியை மறுசீரமைப்புச் செய்யப்போவதாக கூறும் தேசிய கல்விக் கொள்கை 2019முன் பிற்கு சமீபத்திய பட்ஜெட்டில் பெரிய அளவிலே குறிப்பிட்டு நிதி ஒதுக்கீடு ஏதும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. தேசிய கல்வி கொள்கை முன்வரைவிலேயே கல்விக்கான நிதி என்பது பெரும்பாலும் தனியாரால்தான் வழங்கப்பட வேண்டியிருக்கும் என்பதை பல இடங்களில் குறிப்பால் உணர்த்தி உள்ளது.

1986 புதிய கல்விக் கொள்கை திட்டம் செயல்படுத்தப்பட்டது. உயர் கல்வி தனியார்மயம் ஆனது. அது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிக அளவில் சுயநிதிக் கல்லூரிகள் நாடெங்கிலும் தோன்றுகின்றன என்பதின் பொருள் என்னவென்றால், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளின் உயர்கல்வி பெறும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன என்பதே ஆகும். படிப்படியாக அரசு நிதி உதவியை உயர்கல்வியில் மட்டுப்படுத்தி உள்ளது என்பதே உண்மை. இதன் விளைவு தனியார் மூலதனம் கல்வித்துறையில் அதிகரித்துள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படவில்லை என்பதே உன்மை. ஆசிரியர்கள் பணி அமர்த்தலும் குறைவாகவே உள்ளன.

போட்டித் தேர்வுகள்: -செருப்புக் காலா?

ஏன் கோச்சிங் அல்லது பயிற்சி நிறுவனங்கள் தேவைப்படுகின்றன என்று கவனித்தால், கல்வி நிலையங்களில் போதிக்கும் கல்வித் திட்டங்கள் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியை அளிக்க இயலாதவை. போட்டித்தேர்வுகள் என்பன பெரும்பாலும் சிதைவுற்ற வடிவ அல்லது துண்டு துண்டான கல்விப் பகுதிகள் குறித்தவையாக உள்ளன. போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் என்பன ஒருங்கிணைந்த அறிவை சோதிப்பதற்கானவையாக இல்லை. ஒரு இயல்பான புத்திஜீவி அல்லது ஆர்கானிக் இன்டலக்சுவல் அதில் வெற்றி பெற இயலாது. கல்விக் கூடங்களில் இம்மாதிரி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களோ, தேர்வு அமைப்புகளோ கிடையாது. அதற்காகவும் அவை உருவாக்கப்படவில்லை. அவை வழங்கும் கல்வித் திட்டம் பயிற்சி முறைக்கு நேரெதிரானது போட்டித் தேர்வு முறை. அதனால்தான் நீட் தேர்வில் நமது அரசு பள்ளி மாணவர்கள் அதில் தேறமுடிவதில்லை. நீட் தேர்வு ஒருவேளை தங்கிவிடுமானால் நாம் இன்னும் நிறைய இழக்க வேண்டியிருக்கும். அப்படி ஒருவேளை நிகழுமானால், நீட் தேர்வின் வடிவத்தை மாற்றக் குரல் எழுப்புவது அவசியம். ‘காலுக்கு செருப்பா அல்லது செருப்புக்குக் காலா’ என்பது போன்ற பிரச்சினை இது. ஆனால் பல கல்வி நிலையங்கள் தங்கள் வளாகங்களுக்குள் பயிற்சி மையங்களை அமைத்துப் பணம் சம்பாதிக்க தொடங்கி விட்டன.

தேர்வு பயம் என்பது மாணவர்களைப் பிடித்து ஆட்டும் பிசாசு. இங்கு தேர்வுகள் ஏற்கனவே தொடர்ச்சியாக மாணவர்கள் மீது அளவிற்கு அதிகமாக சுமத்தப்படுகின்றன. ஆனால் அதையும் தாண்டி கொடுமை செய்ய வழி மொழிகிறது தே.க.கொ. இனி கல்வி நிலையங்கள் பாடங்களுக்கான அறிவை சோதிக்கும் இயல்பான தேர்வுகளை ஒதுக்கிவிட்டு, சில வளர்ந்த நாடுகளைப் போல போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்யும் வேலைகளில் இறங்கும். மாணவர்களுக்கான படிநிலை தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகள் என்பது சமூக நீதி மறுப்பு என்பதே உண்மை: அது மட்டுமின்றி அதற்காக செலவினங்கள் ஏராளம் ஆகும் என்பதால் அந்த செலவினங்களும் பயிலும் மாணவர்கள் தலை மீது சுமத்தப்படும் என்பதே உண்மை. ஏற்கனவே தேர்வுக் கட்டண தொகை வசூலித்து அதன் மூலம் லாபம் பார்க்க நினைக்கும் முதலைகளுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும்.

நிதி ஆயோக் காட்டிய வழி

2016 நிதி ஆயோக் வெளியிட்ட மூன்றாண்டிற்கான திட்டங்களில், அரசு கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கும் நிதியின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. கல்வித் துறையில் செய்யப்படும் முதலீடு ஈட்டும் லாபம் உறுதி செய்யப்பட்டதாக இல்லை. அதனால் என்ன பயன் என்று அளவிட முடியாத நிலையில் அரசு நிதியை மேலும் மேலும் கல்விக்காக அதிகரிப்பது என்பது வீண் விரயம் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளது.

எப்போதுமே ஒரு முதலீடு அது தரும் பலன்களைக் கொண்டுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறும் நிதி ஆயோக் அறிக்கை நாட்டில் கல்விக்கான முதலீடு போதுமான பயன்களை ஈட்டித் தர இயலவில்லை என்பதால் அதற்கான முதலீட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது. இப்படி பலனளிக்காத பள்ளிக் கல்வித் திட்டங்களை சீர் செய்வது அவசியம். எனவே குறைந்த மாணவர் சேர்க்கை உள்ள பள்ளிகளை மூடுவது, அவற்றை வேறு பள்ளியுடன் இணைப்பது அல்லது தனியார் முதலீட்டைக் கோருவது போன்ற ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. உயர் கல்வியைப் பொறுத்தமட்டில் எல்லா உயர் கல்வி நிறுவனங்களையும் படிப்படியாக தன்னாட்சி நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது. தன்னாட்சி நிறுவனங்களாக மாறுவது என்றால், நிதி குறித்த அனைத்தையும் அந்தந்த நிறுவனங்களே தீர்மானித்து வசூலிக்கலாம். அதேபோல ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்திலும் வெவ்வேறு வகைகள், அளவுகள், ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் என்கிறது இந்த நிதி ஆயோக். இனிவரும் காலங்களில் ஆசிரியர்களின் ஊதியம் என்பது கூட அவர்கள் பணிபுரியும் கல்வி நிறுவனங்கள் உருவாக்கும் நிதி வரவைப் பொறுத்து அமைக்க வேண்டும் என்கிறது நிதி அயோக். அதாவது ஆசிரியர்கள் கல்வி வணிகத்தைத் தீவிரப்படுத்தும் முகவர்களாக இனி செயல்பட வேண்டும் என்பதே அதன் பொருள்.

பொது நிதி விதிகள் 2017 (General Financial Rules 2017)படி, மத்திய பல்கலைக்கழகங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வலியுறுத்தப்பட்டன. அதன்படி மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்து அதன் மூலம் அந்தந்த நிறுவனங்களின் நிதி வரவை அதிகரிக்க வேண்டும் அதற்காக வணிகரீதியான பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன், கல்விக் கட்டணங்களையும் உயர்த்த வேண்டும் என்று அது வலியுறுத்தியது. எனவே வணிகத்திற்கு உதவாத அடிப்படை அறிவைக் கொடுக்கக் கூடிய கல்விமுறை ஒதுக்கப்பட்டு பணம் ஈட்டும் கல்வி முறை மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இதன் பிரதான நோக்கமாகும். இந்த நிதி ஆயோக்கின் பரிந்துரைகளை அப்படியே தன் முன்வரைவில் பொதித்துள்ளது தேசியக் கல்விக்கொள்கை 2019.
இந்த நிலையில் அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஆயிரக்கணக்கில் அதிகரிக்க வேண்டும், அதுவும் பலவகை கலை அறிவியல் படிப்புகளுக்கான பாட திட்டங்களை அறிமுகப்படுத்தவேண்டும் என்கிறது கல்விக் கொள்கை முன்வரைவு. இதற்குத் தேவையான நிதி வசதிகள் கண்டிப்பாக அரசால் செய்து தர இயலாது. ஆகையால் தனியார் முதலீடுகளை நிறுவனங்கள் பெறவேண்டும் என்று கூறுகிறது.

தேசிய கல்விக் கொள்கை 2019 கடந்த ஆண்டுகளில் கல்வி உரிமை சட்டத்தின் மூலமும், தேசிய பாடத்திட்ட வரைவு (NCF) மூலமும் எந்த வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்து எவ்வகை மதிப்பீட்டையும் வைக்கவில்லை. அனைவருக்குமான தரமான கல்வி என்பதின் இன்றைய நிலை என்ன என்பது பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வை தேசிய கல்விக்கொள்கை வரைவு முன்வைக்கவே இல்லை. ஏன் தான் முன்வைக்கும் ஒரு திட்டம் ஏற்கனவே செயல்படுத்தபட முடியவில்லை என்பதை ஆராயாமலே, மறுபடியும் அதே திட்டத்தை முன்வைக்கிறது. இம்முறை அது வெளிப்படையாகத் தனியார் முதலீட்டின் மூலம் அதை செயல்படுத்தலாம் என்கிறது.

ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனத்திலும் நிர்வாக வாரியம் (Board of Governors) என்று ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் நிர்வகிக்கப்படும் என்று கூறுகிறது இந்த முன்வரைவு. இந்த வாரியத்தில் ஆசிரியர், மாணவர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் யாரும் இடம்பெற மாட்டார்கள். ஆசிரியர்களும் இந்த வாரியத்தில் பங்கேற்கவே முடியாது. இதுதான் கட்டணங்களைத் தீர்மானிக்கும். இம்மாதிரி அமைப்பு கல்வி நிறுவனங்களின் மூலம் கல்வியை வளர்ப்பதற்கு பதில், வணிகத்தைப் பெருக்கி, அடிமைகளை உருவாக்கும்.

ஆராய்ச்சியிலும் இனி அரசியல்

ஆராய்ச்சிக்கான நிதி உதவி என்பது கூட மத்திய அரசால் தீர்மானிக்கப்படும். ஆராய்ச்சி தலைப்புகளைக் கூட அவர்களே இறுதி செய்யும் உத்தரவுகள் ஏற்கனவே வந்துவிட்டன. இது ஜனநாயகத்திற்கான சவால். இதை ஆராய வேண்டும், எதை ஆராயக் கூடாது என்று அரசே தீர்மானிக்கும். ஆனால் இம்மாதிரியான ஆய்வுக்குப் பேராசிரியர்கள் முன்வருவார்கள். ஏற்கனவே முன்பு குஜராத்தில் பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி தலைப்புகளை அரசு வழங்கியுள்ளது. உத்தரப் பிரதேச பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டுச் சட்டம் மாற்றப்பட்டு, அரசின் கையில் கல்வி அதிகாரம் எனும் நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. தேச விரோத செயல்பாடுகள் மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கான அதிகாரத்தையும் அரசு உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் உலகத்தரம் வாய்ந்த கல்வியை எங்கனம் வழங்குவது?

கிராமப்புற பள்ளிகள் மூடல்

மாவட்ட அளவிலான பள்ளிக் கல்விக்கான தகவல் ஆணையம் நாட்டில் 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட முதல் நிலைப்பள்ளிகளில் 30க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் மாணவர்கள் பயில்கிறார்கள் என்கிறது. அவற்றில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்த செயலாக்கமே ஜனநாயக நாட்டின் குறிக்கோளாக இருக்க இயலும். அதைவிடுத்து அவற்றையெல்லாம் எப்படி இழுத்து மூடுவது என்று யோசிப்பது என்பதன் பெயர்தான் பாசிசம்.

இந்தியாவின் கிராமங்களில் 70 சதவிகிதம் கிராமங்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் என்கிறது 2011 மக்கள் கணக்கெடுப்பு. 500 பேர் மட்டுமே வசிக்கும் குக்கிராமங்கள் எண்ணிக்கையும் கணிசமானதாகும் அங்குள்ள பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருப்பது இயற்கைதானே. ஏனெனில், மூன்று வயது முதல் பத்து வயதான சிறுவர்களின் எண்ணிக்கை இக்கிராமங்களில் 10 முதல் 13 சதவிகிதம். அதாவது 100 முதல் 150 பேர்தான் இருப்பார்கள். ஆகக் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளை மூடுவது என்பது கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களின் கல்வி உரிமையை முழுவதாக மறுப்பதாகும்.
பல கிராமங்களில் இன்னமும் ஓராசிரியர் பள்ளிகள் இருப்பதை கணக்கில் கொண்டு அதை மாற்றி குறைந்தபட்சம் ஆறு ஆசிரியர்களை பணியமர்த்துவது பற்றியும், பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றியும் தேசிய கல்விக் கொள்கை பேசவே இல்லை.

பண்பாட்டு மாற்றம் உருவாக்கும் கல்வி தேவை

தொழில்நுட்ப மாற்றம் கொண்ட சமூகத்தை உருவாக்குவதைவிட பண்பாடு மற்றும் பொருளாதார மாற்றங்களை உருவாக்குவதே இன்று நாட்டின் தேவையாக உள்ளது. நாட்டின் முக்கியமான பிரச்சினைகளான வேலையில்லாத் திண்டாட்டம், சாதிப்பாகுபாட்டின் கொடுமைகள், அவற்றை எப்படித் தீர்ப்பது என்பவை பற்றி எந்தக் கவலையும் இந்த முன்வரைவு தெரிவிக்கவில்லை. கல்வியின் விலை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எல்லோராலும் வாங்க இயலாத அவல நிலை. அது மட்டுமின்றி குழந்தைகளின் நலத்திட்டங்கள் மதிய உணவு திட்டம் போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது, வசதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பை மேற்கொள்ள இயலும் என்ற நிலை உருவாக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை மாநிலங்கள்தோறும் அரசு மருத்துவக்கல்லூரிகள் எத்தனை அதிகரிக்கப்படும் அல்லது உருவாக்கப்படவேண்டும் என்பது குறித்த கவலை ஏதும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கையும் வியாபாரமும் அதிகரித்துள்ளது. இப்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தான் அரசுக் கல்லூரிகளை விட அதிகம் உள்ளன. இப்போது அந்தப் பக்கம் ஏழைகளால் போக முடியவில்லை இதில், கல்விக் கட்டணங்களை நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி, மனசாட்சிப்படி நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று முன்மொழிகிறது இந்த முன்வரைவு.

மருத்துவக் கல்வியைப் பொறுத்தவரை எவ்வகையான மருத்துவர்களை உற்பத்தி செய்கிறோம் அல்லது தயார் செய்யப் போகிறோம் என்பது குறித்து மூச்சுவிடவில்லை. லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி மருத்துவம் படிக்கும் மருத்துவ மாணவர்கள் முழு நேர மருத்துவர் ஆனபின் நாட்டிற்கான சேவை என்று யோசிப்பதற்கு அவசியமே கிடையாது. தான் ஒரு தொழில் செய்ய வந்திருப்பதாக மட்டுமே உணர்ந்து, பணத்தை நோயாளிகளிடம் கறக்கும் வணிக மனோபாவத்தை தான் இந்த சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் அவர்களுக்கு கொடுத்து இருக்கும். நாட்டு மக்களின்மீதும் சமூகத்தின்மீதும் அவர்கள் கனிவைக் கொண்டிருக்க வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? கல்வியை விற்பதை நிறுத்த வேண்டும். இளையராஜா தன் பாடல்களுக்கு ராயல்டி கேட்டது போல, இவர்களிடம் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கும், கருத்துகளுக்கும் ராயல்டி கேட்க கல்வியாளர் யாரும் வரப்போவது இல்லை. அவர்கள் உருவாக்கிய அறிவுப் பெட்டகங்களை திருடி பாடத்திட்டம் என்ற பெயரில் நல்ல விலைக்கு விற்கும் நிலை இன்று. அது குறித்து தேசிய கல்விக் கொள்கை ஏதும் பேசவில்லை.

முன் மழலைக் கல்வி எனும் கொட்டடி

முன் மழலைக் கல்வி வழங்கும் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களும் கல்வித்திட்டங்களும் இன்றுவரை சரியான முறையில் அறியப்படவில்லை. இந்நிலையில் சிறு குழந்தைகளை, பள்ளி என்ற பெயரில் உள்ள இடத்தில் விடுவது என்பது மிகவும் ஆபத்தானது.ஏற்கனவே அங்கன்வாடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. அதேபோல முறையாகப் பயிற்சி பெற்ற யாரும் அங்கு பணி புரிவதும் இல்லை.இப்படிப்பட்ட ஒரு அவசர அமைப்பை உருவாக்கி அங்கே ஏழைக் குழந்தைகளை மூன்று வயதிலேயே அடைத்துவிட்டுப் பெற்றோர்கள் வேலைக்குப் போகவிருக்கும் ஒரு நிலையைத் தான் இந்த முன்வரைவு, முன் மழலைக்கல்வி என்று கூறுகிறது. இம்மாதிரி கொட்டடிகளில் அடைக்கப்படும் குழந்தைகளை கையாளுகின்ற ஆயாக்களும் அல்லது ஆசிரியர்களும் எம்மாதிரியான பயிற்சி பெற்று இருப்பார்கள் என்பதை நாம் யூகிக்க முடிகிறது. அவர்கள் நல்ல மேய்ப்பர்களாகக்கூட இருக்க வாய்ப்பில்லை.

ஆயிரம் அழிந்து இனி அராப்தான்

இனி எண்கள் பற்றி சொல்லும் பொழுது நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்ற சொற்கள் தவிர்க்கப்பட்டு நீல், கராப், அராப், பத்மம், ஷங்க், மகா ஷங்க் போன்ற சொற்கள் இனி பயன்படுத்தப்படும் என்று வரைவு முரசு கொட்டுகிறது. இதைக் கேட்டு நகைப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
சுத்தமாக சாதாரண மக்கள் வாழ்நிலை பற்றி எந்த எதார்த்தப் புரிதலும் இல்லாதவர்கள்தான் இப்படிப்பட்ட ஒரு வரைவைத் தயாரிக்க இயலும். ஒரு மாநிலத்தின் மொழியாக மட்டும் இல்லாதவற்றை, மத்திய அரசு பராமரிக்கும். இந்தி சமஸ்கிருதம் இதில் அடங்கும். இந்த வரிசையில் உருதுமொழி விடுபட்டிருப்பது அரசியலாகும்.

கஸ்தூரிரங்கன் குழு அமைப்பின் அரசியல் என்ன?

24-.6.-2017அமைக்கப்பட்டது கஸ்தூரிரங்கன் குழு. ஆனால் 10.8.2016 பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட டி.எஸ்ஆர். சுப்பிரமணியன் குழுவின் தேசிய கல்விக்கொள்கை 2016 வரைவு பற்றி எதையும் கஸ்தூரிரங்கன் குழுவின் முன்வரைவு பேசவில்லை.

முன்னதாக டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளிலும், 6000 நகர்ப்புற அமைப்புகளிலும், 676 மாவட்டங்களிலும், 2015 இல் கருத்து கேட்பு என்ற மாதிரி ஒன்றை நடத்தி தேசிய கல்விக்கொள்கை முன் வரைவைத் தயாரித்ததாக கூறியது. தவிர இணையதளம் மூலம் 35,000 கருத்துக்கள் பெறப்பட்டது. இப்படி பல பேரிடம் கருத்து கேட்டு, ஸ்மிருதி இராணி மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்ட சுப்பிரமணியன் குழுவின் முன்வரைவு ஒரேடியாக தூக்கி எறியப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கங்கள் தரப்படவில்லை. டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் குழுவிற்காகப் பல கோடி ரூபாய் செலவாகிப் போனது. என்ன காரணங்களுக்காக அது நிராகரிக்கப்பட்டது என்று அணுகிப் பார்த்தால் ஒருபுறம் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருந்து கிளம்பிய எதிர்ப்பு என்பதும் அதையும் தாண்டி ஆர்.எஸ்.எஸ்அமைப்பினர் தங்களுடைய திட்ட வரைவுகள் இதில் சரியான முறையில் அமைக்கப்படவில்லை என்று கோபப்படும் காரணங்களுக்காகவும் என்று தெரிகின்றது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், வித்யாபாரதி பாரதிய சிக்ஷான் மண்டல், சிக்ஷா பச்சாவோ அந்தோலன், சமஸ்கிருத பாரதி போன்ற பதினோரு அமைப்புக்கள் ஆர்.எஸ்.எஸ்.சின் கல்விக் கொள்கையை செயல்படுத்தும் அமைப்புகளாக உள்ளன. இந்த அமைப்புகள் இந்தியா முழுவதிலும் பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன இவ்வமைப்புகள் தனியாகவே பள்ளிக்கூடங்கள் நடத்துகின்றன. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இவர்கள் வழிகாட்டுதல்களில் பயின்று வருவது உண்மை. தமிழகத்திலும் சுமார் 300 பள்ளிகள் இவர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகிறதாகத் தெரிகிறது. இந்த அமைப்புகளுக்கு, டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் குழுவின் அறிக்கை உகந்ததாக இல்லை என்பதால், ஸ்மிரிதி இராணி அதை வெளியிடத் தயங்கினார். ஆனால் அதை வெளியிட வேண்டும் என்று சுப்பிரமணியன் அமைச்சரை வலியுறுத்தி வந்தார். கடைசியில் அந்த 230 பக்க அறிக்கை அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை மூலம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் கூட தாய்மொழி வழிக்கல்விக்கு உயர்கல்வி வரை முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. மும்மொழியை முன்மொழிந்தாலும், இந்தி திணிப்பு தவிர்க்கப்பட்டது என்பது முக்கிய தகவல் ஆகும்.

நமது கல்விக் கூடங்கள் உலக அரங்கில் உயர்வாகப் பேசப்படும் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு இணையாகப் பேச வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் தேவைகள் வேறு அவர்களின் நிலை வேறு. நாட்டின் ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் ஆர்வமும், சமத்துவ கோட்பாட்டில் உணர்வுபூர்வமான அக்கறையும், சாதி சமய பேதமற்று, மனித உறவுகளைப் பேணும் அன்பும் அடித்தளமாகக் கொண்ட அறிவு ஜீவிகளின் உற்பத்தி தான் தேவை. ஏற்கனவே உள்ள கல்வித் திட்டங்கள் செயல்பாடுகள் இப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்கத் தவறியதால்தான் இந்த படித்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மட்டும் தேடிக் கொண்டும் பாதுகாத்துக்கொண்டும் சுயநலமிகளாக நெளிந்து கொண்டும் இருப்பதைக் காண்கிறோம்.

இங்கு கல்வித் திட்ட செயல்பாடுகளின் குறைகளைச் சுட்டும்போது அவை ஏன் தோற்றுவிட்டன என்பது பற்றிய புரிதல் அவசியம். வெறும் பொருளாதாரக் காரணிகளால் தோற்பதற்கு சாத்தியமில்லை. மிகக் குறைந்த அளவு நிதியே கல்விக்காக ஒதுக்கப்பட்டாலும், அதுவும் பல நூறு கோடிகள் ஆகும். அப்படிப்பட்ட முதலீடு ஏன் வெற்றி பெறவில்லை என்பது பற்றிய புரிதல் மிகவும் அவசியம். அரசியல் கட்சிகளுக்கு இது பற்றி பெரிய அளவில் ஈடுபாடும், அக்கறையும், தேவையான அளவு இருப்பதில்லை. கட்சிகளையும் தட்டி எழுப்பும் வேலையைப் புது புத்தி ஜீவிகள்தான் செய்ய வேண்டியுள்ளது. பல நூறு கோடிகள் முதலீடு செய்யப்பட்ட நாட்டின் கல்வி மெதுவாக ஊர்ந்தாலும், ஒரு கட்டம் வரை வளர்ந்துதான் வந்தது. பின்னர் அதன் நோக்கம் முழுக்க முழுக்க வணிகமயமானபோதுதான் அது போட்டிக்களமாக மாற்றப்பட்டு, பெரிய முதலீடுகளுக்கான, அதற்குரிய திறன்களைக் கொண்ட பணியாளர்களை உற்பத்தி செய்வதற்கான திசைக்கு திரும்பியது. இந்தத் திசையில் மொத்த கல்வித்திட்டங்களும் இன்று திருப்பப்படும் வேலையைத்தான் தேசிய வரைவுக் கொள்கை செய்கிறது. இனி சுயநலம் மட்டுமே ஜீவனாகக் கொண்டு, அவ்வப்போது சமூகத் தளங்களில் மட்டும் சமூக அநீதிகளுக்கு அக்கிரமங்களுக்காக கண்ணீர் சிந்தும் பெரும் கூட்டத்தை உருவாக்கப் போகிறது இந்தக் கல்விக் கொள்கை. இந்தக் கல்வித் திட்டத்தில் உள்ளே சென்று பயிலப்போகும் பெரும்பாலான இளைஞர்கள் அரசியல் அற்றவர்களாக ஆக்கப்படுவார்கள். சமூக பண்பாட்டு அரசியல் பற்றி எல்லாம் புரிந்து கொள்ளும் அக்கறை காட்டும் மனோநிலை அழிக்கப்படும். நேரம் கருதா கடின உழைப்பு, பின் களைப்பு தீர களிப்பு என வாழ்க்கை அமைக்கப்பட்டு, அவரவர் பந்தயத்தில் அவரவர் ஓடுவதே வாழ்க்கையாகிப் போய்விடும். இன்றே அந்த நிலை உருவாகி விட்டது. இனி வரலாறு, மானுடவியல், உளவியல், சமூகவியல் மற்றும் தத்துவவியல் போன்ற படிப்புகளுக்குப் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் விடை கொடுக்கப்படும். நடுநிலையாக பிரச்சினைகளை உண்மையாக ஆராய்வது என்பது ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட் மூலம் நிதி உதவி பெறும் உள்நோக்கம் கொண்ட சமூக ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்படும். எந்த திசையில் இனி சமூக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் அரசு தீர்மானிக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே ஆட்சி செய்யும் உரிமையைப் பெற்றுள்ள பா.ஜ.க அரசு, 30 ஆண்டுகளுக்கு நாட்டையே திசைதிருப்பி இட்டுச்செல்லும் கல்வித் திட்டத்தை வகுப்பது செயல்படுத்துவது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும் என்ற கேள்விக்கான பதில் எனக்குத் தெரியவில்லை.
பொது அறிவு ஜீவிகளுக்கான காலம்

பொது அறிவு ஜீவிகளுக்கான காலம் இது. எந்த நிறுவனங்களின் சார்பும் இல்லாமல் உண்மையான பொது நலன்கள் குறித்து சிந்திக்கக்கூடிய ஆராயக்கூடிய, வெகுண்டு எழக் கூடிய அறிவுஜீவிகள் மட்டுமே இனி அரசியலுக்கும் வழிகாட்ட இயலும். அரசியல் கட்சிகள் தங்களுக்காக சிந்திப்பதற்காக, செயல்படுவதற்காக பல நிறுவனங்களைக் கூலிக்கு அமர்த்தி உள்ளார்கள். பல நிறுவனங்களிடம் அவர்கள் ஆலோசனைகள் பெற்று வருகிறார்கள். கட்சிக்குத் தேவை ஆட்சி அதிகாரம்.

அவ்வளவுதான். இந்த தேசிய கல்வி கொள்கை வரைவு 2019 கூட தனிப்பட்ட வேறு சில நிறுவனங்களின் உதவியுடன் தான் தயாரிக்கப்பட்டு அவை தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் அரசின் திட்டங்களை எல்லாம் உடனுக்குடன் புரிந்து கொண்டு எதிர்வினையாற்றுவது என்பதும் மிகவும் கடினமான காரியமாகும். இங்குதான் நாட்டின் பொது புத்தி ஜீவிகள் பணியாற்ற இயலும். அறிவார்ந்த ஆய்வுகள் அரசியல் கட்சிகளும், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எட்டவேண்டும். பொதுவாக மக்களின் எழுச்சி மட்டுமே இம்மாதிரியான விஷயங்களை அவர்களுக்குப் புரிய வைக்கின்றது. எனவே அறிவுடன், மக்களின் எழுச்சி என்பது இணையும்பொழுது, இந்த அறிவை அரசியல்வாதிகளிடம் கொண்டு செல்வது எளிதாகிறது. மக்கள் எழுச்சி என்பதும்கூட இலகுவாக நடப்பதில்லை. அரசு நடக்கவும் விடுவதில்லை. அதற்காக அவர்களுக்குரிய புரிதலை உண்டாக்கும் தகவல்கள் எளிய மொழியில் அவர்களுடனே வாழ்ந்து, அவர்களுக்குப் பகிரப்படும்போதுதான், பாதிப்பை உணர்ந்து அவர்கள் எழுச்சி அடைவது சாத்தியமாகின்றது.

இனி வரும் காலங்களில் அறிவு சார்ந்த களத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் நுணுக்கமாக அரசின் போக்கை அவதானித்து ஆராய்ந்து மக்களுக்கும், பிற கட்சி அறிவு ஜீவிகளுக்கும் தெரிவிப்பது என்பது தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும். அந்த வகையில் தேசிய கல்விக் கொள்கை என்பதின் ஆபத்துகள் ஆங்கங்கே விவாதிக்கப்பட்டாலும், அதை செயலில் காட்ட வேண்டியது ஜனநாயகக் கடமையாகும்.