‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்பது இந்துத்துவர்கள் துவக்கி அதன்மூலம் பிரபலமான விஷயம். அதையே மாற்றி ‘திராவிடத்தால் வாழ்ந்தோம்’ என்று திராவிட இயக்க ஆதரவாளர்கள் பரப்பி வருகிறார்கள். ஆனால் இரண்டு தரப்பினருமே வீழ்ந்தோம் என்றால் என்ன அர்த்தம், வாழ்ந்தோம் என்றால் எந்த விதத்தில் என்று விளக்குவதில்லை. இரண்டு தரப்பு விவாதங்களுமே உணர்வுபூர்வமாகத் துவங்கி உணர்வு பூர்வமாகவே முடிந்து போய் விடுகின்றன.

இந்த இரண்டு வாதங்களையும் நான் ஆராயத்துவங்கினேன். தனியாக தமிழகத்தை மட்டும் எடுத்துப்பார்த்தால் அதில் நமக்கு விடை கிடைக்காது என்று தோன்றியது. இதனை இதர மாநிலங்களுடன் ஒப்பிட்டுத்தான் பார்க்க முடியும் என்று தோன்றியது. எனவே, தமிழகத்தோடு ஒப்பிடுவதற்கு இரண்டு மாநிலங்களை எடுத்துக்கொண்டேன். அவை மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்.

இந்த இரண்டையும் எடுத்துக்கொண்டதற்குக் காரணம், இரண்டுமே பாஜக நீண்ட காலம் ஆண்ட / ஆளும் மாநிலங்கள். குஜராத்தில் பாஜக 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து இடைவெளியின்றி ஆட்சியில் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 17 வருடங்கள் ஆட்சியில் இருந்திருக்கிறது. முதலில் 2 வருடங்கள், பின்னர் சற்றே இடைவெளி விட்டுத் தொடர்ந்து 15 ஆண்டுகள். எனவே, இரண்டையும் ஒப்பிடுவது சரியாக இருக்கும் என்று தோன்றியது.

வளர்ச்சித் தரவுகள்

சில குறிப்பிட்ட வளர்ச்சித் தரவுகளை எடுத்து அதில் மாநிலங்களின் தர வரிசையில் அந்தந்த மாநிலங்களின் இடத்தைக் குறிப்பிட்டுக் கீழே கொடுத்திருக்கிறேன்:

வளர்ச்சிக் குறியீடு                                               தமிழ்நாடு                     குஜராத்           மத்தியப் பிரதேசம்

தனி மனித வருமானம்                                                  10                                           14                           27

மனித வளக்குறியீடுகள்                                                11                                           21                           33

மருத்துவம் மற்றும் உடல் நலம் பேணல்            3                                             4                            17

ஒட்டு மொத்தக் கல்வி வளர்ச்சி                                2                                             6                            14

ஆரம்பக்கல்வியில் இருந்து உயர்நிலைப்

பள்ளியில் சேருவது                                                      98.6                                      97.7                        89.6

படிப்பை நிறுத்திய சிறுவர்களை

அடையாளம் கண்டு மறுசேர்ப்பு செய்வது         94.1                                       79.9                        64.5

இவற்றின் அடிப்படையில் பார்க்கும்பொழுது, தமிழகம் வளர்ச்சிக் குறியீடுகளில் குஜராத்தைவிட முன்னணியில் இருப்பதைக் காணலாம்.

தொடர்தகு வளர்ச்சி

அடுத்ததாக, தேசங்களின் வளர்ச்சியைக் குறிப்பிட ஐநா சபை ‘தொடர்தகு வளர்ச்சி’ என்று சில இலக்குகளை வைத்திருக்கிறது. இதற்கு ஆங்கிலத்தில் Sustainable Development Goals என்று சொல்வார்கள். இந்த இலக்குகளை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டு நிதி ஆயோக்கை முடுக்கி விட்டிருக்கிறார். சமீபத்தில் வெளியாகிய இந்த தொடர்தகு வளர்ச்சி அறிக்கையும் கூட நிதி ஆயோக் மூலமே அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்தக் குறியீடுகளில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசம் இரண்டாம் இடத்தை வகிக்க, தமிழகம், ஆந்திரம், தெலங்கானா மூன்றும் இணைந்து மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கின்றன.(யூனியன் பிரதேசங்களில் முன்னணியில் சண்டிகர் இருக்கிறது.)

தொடர்ச்சியாக முன்னேற்றம் கண்டுகொண்டு இருக்கும் மாநிலங்கள் என்ற பெருமையை கேரளம், ஹிமாச்சலம் மற்றும் தமிழகம் பெற்றுள்ளன. தாழ்வு நிலையில் இருக்கும் மாநிலங்கள் பட்டியலில் பீகார், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்றவை தொடர்கின்றன.

தென்னிந்திய மாநிலங்கள் ஐந்துமே சராசரிக்கும் மேலே இருக்கின்றன. வடஇந்தியாவில் சராசரிக்கும் மேலே இருக்கும் ஒரே மாநிலம் ஹிமாச்சலம் மட்டுமே; அது பாஜக, காங்கிரஸ் மாறி மாறி ஆளும் மாநிலம்.

ஆனால் பாஜக பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆண்டு வந்திருக்கிற குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டுக்கும் இந்த அறிக்கையில் முன்னிலையில் இடம் கிடைக்கவில்லை. வளர்ச்சிக் குறியீடுகளில் பல்வேறு இலக்குகளில் ஒன்றில் கூட இவை இதர மாநிலங்களை முறியடிக்க இயலவில்லை என்பது இதில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது. அவ்வளவு ஏன், பல்வேறு வகைகளில் பிரச்சினைகளை சந்தித்து வரும் ஜம்மு-கஷ்மீர் கூட பாலியல் சமத்துவக் குறியீட்டில் முன்னணி பெற்று வருகிறது. சமீபத்தில்தான் உருவான தெலங்கானா கூட முன்னேற்றம் கண்டு பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு மாநிலங்களும் இடம் பெறவில்லை.

காங்கிரசும் காமராஜரும்

இது பற்றிப் பேசும்பொழுது பாஜகவினர் ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள். குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் காங்கிரஸ் ஆட்சியில் பெரும் பின்னடைவை சந்தித்தவை. அவற்றை மறுகட்டமைப்பு செய்ய நேரம் தேவைப்படும். ஆனால் தமிழகமோ காமராஜர், ராஜாஜி ஆட்சிகளில் நல்ல அடித்தளம் போடப்பட்டிருந்தது. அதிலிருந்து தொடர்வது கடினமானதல்ல. சொல்லப்போனால் திராவிட அரசுகள் நல்ல நிலையில் இருந்து அழிவு நிலைக்குக் கொண்டு போய்க்கொண்டுதான் இருக்கின்றன என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம்.

இந்த வாதம் கொஞ்சம் கருத்தில் கொள்ளத்தக்கதாக இருக்கிறது. சரி, இது உண்மை என்றால் தரவுகள் எப்படி இருக்க வேண்டும்?

எழுபதுகள் வரை தமிழகம் அதி உன்னத நிலையில் இருந்திருக்க வேண்டும். பின்னர் முப்பது நாற்பது வருடங்கள் கடந்து அந்த அதிஉன்னத நிலையில் இருந்து கொஞ்சமோ அல்லது அதிகமோ மங்கிப் போயிருக்க வேண்டும்.

போலவே குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இரண்டாயிரம் வரை நிலைமை படுமோசமாக இருந்து அதில் இருந்து பாஜக அரசுகள் பொறுப்பேற்றதும் பெரும் முன்னேற்றங்கள் வந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்த இரண்டையும் கைவசம் இருக்கும் புள்ளி விபரங்களை வைத்துப்பார்ப்போம். அதற்கு முன் ஒரு விஷயம்: இந்த இரண்டாம் பாக ஆய்வுக்கும் மத்தியப் பிரதேசத்தையே எடுத்துக்கொண்டு இருக்கிறேன். நியாயமாகப் பார்த்தால் அப்படி செய்திருக்கக் கூடாது. ஏனெனில் அது சமூகப் பொருளாதார ரீதியாக தமிழகத்துக்கு சமநிலையற்ற மாநிலம். ஆயினும் அதனை இங்கே கைக்கொண்டது ஒரு ஒப்பீட்டு அளவுக்கு மட்டுமே. சமூகப் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ள ஒரு மாநிலமும் அப்படி அல்லாத ஒரு மாநிலத்தையும் அருகருகே வைத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு புரிதலுக்குத்தான் செய்திருக்கிறேன்.

கூடவே தமிழகத்தை எடுத்துப் பேசும்பொழுது 70களின் தரவுகளை எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், என்னதான் பாஜகவினர் காமராஜர், ராஜாஜி என்று பேசினாலும் அறுபதுகளில் தமிழகமோ இந்தியாவோ பெரிய அதிரடி முன்னேற்றமெல்லாம் காணவில்லை. அப்போதுதான் பரம ஏழ்மையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருந்தோம் என்பதும் அப்போது நிலவிய இந்திராவின் அதி தீவிர சோஷலிசம் நம்மை ஏழ்மையில் இருந்து உடனடியாக வெளிவர உதவவில்லை என்பதும் காரணங்கள்.

எனவே மத்தியப் பிரதேசத்தை ஒரு புரிதலுக்கும், குஜராத்தை உண்மையான ஒப்பீட்டுக்கும் எடுத்துக் கொள்வோம். குஜராத், பிரதமர் மோடி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆட்சி செய்த மாநிலம். குஜராத் மாடல் என்று பரவி இந்தியாவை மயக்கிய மாநிலம். (அதற்கு மயங்கியவர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.)

பொருளாதார வளர்ச்சி

ரொம்பவும் ஆழமாகப்போகாமல் குஜராத்தின் இரண்டு தரவுகளை எடுத்துக்கொள்வோம். மொத்த ஜிடிபி, தனி நபர் ஜிடிபி என்று இரண்டு அளவீடுகள் பொருளாதார நிலவரத்தைக் குறிக்கப் போதுமானது. (ஜிடிபி என்பது ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியைக் குறிக்கும்.)

கீழே கொடுத்திருப்பது குஜராத்தின் தனி நபர் ஜிடிபி வளர்ச்சி:

ஆண்டுக்காலம்                                       குஜராத் தனி நபர் ஜிடிபி  

எண்பதுகள்                                                                    4.4

தொண்ணூறுகள்                                                       4.8

இரண்டாயிரங்கள்                                                     6.9

கீழே கொடுத்திருப்பது இந்தியாவின் தனி நபர் ஜிடிபி வளர்ச்சி:

ஆண்டுக்காலம்                                       இந்தியா தனி நபர் ஜிடிபி  

எண்பதுகள்                                                                     3.2

தொண்ணூறுகள்                                                         3.7

இரண்டாயிரங்கள்                                                      5.6

இந்திய சராசரிக்கும் குஜராத்துக்கு இருந்த வித்தியாசம்:

ஆண்டுக்காலம்                                       வித்தியாசம்              

எண்பதுகள்                                                              1.2

தொண்ணூறுகள்                                                  1.1

இரண்டாயிரங்கள்                                               1.3

எண்பதுகள் வரை சோஷலிசம் இந்தியாவைப் படுத்தி எடுத்தது. ராஜீவ் காந்தி காலத்தில் சற்றே தாராளமயம் துவங்கி கொஞ்சம் ஆசுவாசம் கிடைத்தது. பின்னர் 1991இல் ராவ்-சிங் முழு தாராளமயம் கொண்டு வந்தவுடன் இந்தியா தாவிக் குதித்து ஓடியது. அதன் பயனாக இதர மாநிலங்களுடன் சேர்ந்து குஜராத்தும் வளர்ச்சி கண்டது. தொண்ணூறுகளில் காங்கிரஸ் ஆட்சிதான் நடந்து வந்தது. அதற்கும், 2000களில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கும் அதிரடியான பொருளாதார வித்தியாசம் தெரியவில்லை என்பதை மேற்கண்ட அட்டவணைகளில் இருந்து காணலாம்.

இதே காலகட்டத்தில் தமிழகம் கண்ட வளர்ச்சியைப் பார்ப்போம்:

ஆண்டுக்காலம்                       தமிழ்நாடு தனி நபர் ஜிடிபி  

எண்பதுகள்                                                     3.9

தொண்ணூறுகள்                                         5.2

இரண்டாயிரங்கள்                                      6.8

இங்கேயும் தமிழகம் மற்றும் குஜராத்துக்கு இடையே பெரிய வித்தியாசம் தெரியவில்லை. இரண்டு மாநிலங்களுமே பொருளாதார தாராளமயத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு முன்னேறிக்கொண்டு இருந்திருக்கின்றன என்பதைத் தவிர, குறிப்பாகச் சொல்ல ஒன்றுமில்லை. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பெருத்த அளவிலான முன்னேற்றங்கள் வந்தன என்று சொல்லுமளவுக்கு வித்தியாசம் தென்படவில்லை என்பதைத் தெளிவாகக் காணலாம்.

ஆனால் இங்கே ஒன்று கவனியுங்கள். குஜராத்தின் பொருளாதாரம் எண்பதுகளிலேயே 4.4 ஸ்கோரில் ஓரளவு முன்னேறிய நிலையில்தான் இருந்தது. தமிழகம் அப்போது 3.9ல் குஜராத்தை விட கொஞ்சம் பின்தங்கித்தான் இருந்தது. தொண்ணூறுகளில் தமிழகம் முந்திக்கொண்டு முன்னேறியது. பின்னர் இரண்டாயிரங்களில் சற்றே ஆசுவாசம் கொண்டு குஜராத்துடன் இணைந்த அளவில் நின்றிருக்கிறது.

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இரண்டு:

  1. குஜராத்துக்கு எண்பதுகளிலேயே அடித்தளம் கிடைத்திருக்கிறது. அதன் மேல் ஏறித்தான் மோடி பயணித்து இருக்கிறார்.
  2. தமிழகத்துக்கு எண்பதுகளில் அடித்தளம் குறைவாக இருந்தது. ஆனால் தொண்ணுறுகளுக்குப் பின் நல்ல பாய்ச்சலில் முன்னேறி, விட்ட இடத்தைப் பிடித்திருக்கிறோம்.

அதாவது, பாஜக அபிமானிகள் என்ன சொன்னார்கள்: குஜராத்தில் காங்கிரஸ் கெடுத்தது, பாஜக முன்னேற்றியது. தமிழகத்தில் காங்கிரஸ் முன்னேற்றியது; திராவிடம் கெடுத்தது.

ஆனால் தரவுகளை வைத்துப் பார்க்கும்பொழுது உண்மை தலைகீழாக இருக்கிறது: குஜராத்தில் காங்கிரஸ் அடித்தளம் கொடுத்திருக்கிறது; அந்த அடித்தளத்தை வைத்து தொடர்ந்து ஏறி இருக்கிறது. தமிழகத்திலோ பெரிய அடித்தளம் இன்றி இருந்த நிலையில் தொண்ணூறுகளிலும் இரண்டாயிரங்களிலும் பெரும் முனைப்பில் குஜராத்துக்கு நிகரான முன்னேற்றத்தைக் காண்பிக்க முடிந்திருக்கிறது.

சரி, எப்படிப் பார்த்தாலும் குஜராத் பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கிறது என்பது உண்மைதானே என்று கேட்கலாம். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் தமிழகம் சீரழிந்தது என்கிற வாதத்தைத்தான் இங்கே முறியடித்து இருக்கிறோம்.

அது ஒருபுறம் இருக்க, சம அளவில் முன்னேறினாலும் ஒரு விஷயத்தில் தமிழகம் மற்றும் கேரளாவுடன் இருந்து குஜராத் வேறுபடுகிறது. அதுதான் மானுட வளக்குறியீடு. பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டாலும் கல்வி, மருத்துவம், பெண் முன்னேற்றம், சமூக நீதி இவற்றிலும் முன்னேற்றம் காண்பதுதான் முக்கியம். இதற்கு மனிதவளம் (Human Development) என்று பெயர்.

மனித வளக்குறியீடுகள் என்பவை ஐநா சபையினால் முன்னெடுக்கப்பட்ட வளர்ச்சிக் குறியீடுகள். Human Development Index அல்லது சுருக்கமாக HDI என்று அழைக்கிறார்கள். வெறும் பொருளாதார முன்னேற்றம் மட்டும் ஒரு தேசத்தின் வளர்ச்சியைக் குறிக்காது என்று கருதிய ஐநா இதனை முன்னெடுத்தது. இந்த பிஞிமி மூன்று விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது:

உடல், மன நலம் – சராசரி ஆயுள் மற்றும் மருத்துவ வசதிகள்

கல்வி – சராசரி கல்வி மற்றும் பள்ளியில் இருந்து சிறார்கள் நிற்காமல் தொடர்ந்து படிப்பது

பொருளாதாரம் – சராசரி தனி மனித வருமானம்.

இந்த ஒவ்வொரு அளவீட்டுக்கும் பல்வேறு உப அளவீடுகள் வைத்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் சேர்த்துக் கடைசியாக ஒரு ஸ்கோர் எடுத்து, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தேசத்தின் வளர்ச்சியை அளவிடுகிறார்கள். பரீட்சையில் மொத்த மார்க் 100 என்பது போல இங்கே முழு வளர்ச்சி அடைந்ததைக் குறிக்க அதிகபட்சம் 1 என்று எடுத்துக்கொள்கிறார்கள் . தசம எண்ணிக்கையில் அளவீடு துவங்கி ஒன்றுக்கு நெருக்கமாக வர வர வளர்ச்சி அதிகரிக்கிறது என்று அர்த்தம். உதாரணத்தைப் பார்க்கலாம்:

நாடு    அளவீடு          உலக தரவரிசை    

நார்வே             0.889                     முதலிடம்

இந்தியா          0.647                      129ம் இடம்

பாகிஸ்தான் 0.560                      152ம் இடம்

ஐநா, தேசங்களுக்கான தரவரிசை எண்ணிக்கை தருவது தவிர, தேசங்களுக்கு உள்ளே பிராந்தியங்களையும் தனித்தனியாக அளவிடுகிறது. இந்தியாவைப்போன்ற பரந்த தேசத்தில் மாநிலத்துக்கு மாநிலம் வளர்ச்சி வேறுபடும் என்பதால் மாநிலவாரியாகவும் ஆய்வறிக்கை பதிப்பிக்கப்படுகிறது. இதற்கு ஷிuதீ-ஸீணீtவீஷீஸீணீறீ பிஞிமி என்று பெயர்.

மனித வளக்குறியீடுகள் கணக்கெடுப்பை ஐநா வளர்ச்சி நிறுவனம் (UNDP) 1990இல் இருந்து பதிப்பித்து வருகிறது. அந்த அளவீட்டை அப்போதில் இருந்து 2017 வரை அலசிக் கீழே கொடுத்திருக்கிறேன்.

மாநிலம்                                         1990                       2001                       2017      

மத்தியப் பிரதேசம்                       0.403                       0.461                       0.599

குஜராத்                                              0.466                        0.530                       0.665

தமிழ்நாடு                                         0.467                        0.546                       0.699

இங்கே பார்த்தால் 1990இல் மத்தியப் பிரதேசம் மிகவும் பின்தங்கி இருந்திருக்கிறது. அதனால் அதனை விட்டு விடுவோம். ஆனால் தமிழ்நாட்டுக்கும் குஜராத்துக்கும் 0.001தான் வித்தியாசம் இருந்திருக்கிறது. 2001இல் குஜராத் கொஞ்சம் முன்னேறி இருக்கிறது. ஆனால் வித்தியாசம் 0.016தான் இருந்திருக்கிறது. ஆனால் 2017இல் வித்தியாசம் 0.034 அளவு அதிகரித்து விட்டது. அதாவது ஒப்பீட்டளவில் மோடி ஆண்ட காலத்தில் தமிழகம் குஜராத்தைப் பெருமளவு அடித்துக்கொண்டு முன்னேறி விட்டிருக்கிறது.

இதில் இருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் என்று நான் கருதுவதைக் கீழே கொடுத்துள்ளேன்:

  1. 1990இல் தமிழ்நாடு இதர மாநிலங்களின் நிலையிலேயே இருந்திருக்கிறது. தொண்ணூறுகளில் வேகம் கொண்ட வளர்ச்சி 2000களில் அதிவேகம் கொண்டிருக்கிறது. எனவே காமராஜர் செய்தார், ராஜராஜ சோழன் செய்தார் போன்ற ஜல்லியடிகள் இங்கே உடைபடுகின்றன.
  2. 1990இல் குஜராத், தமிழ்நாடு இரண்டும் ஒரே அளவில் இருந்திருக்கின்றன. ஆனால் தமிழகம் 2000களில் பெரு வளர்ச்சி கண்டு குஜராத்தை விட முன்னேறி விட்டிருக்கிறது. மனித வளக்குறியீட்டில் ‘குஜராத் மாடல்’ என்று புகழ்பெற்ற மோடியால் திராவிட மாடலை நெருங்கக்கூட முடியவில்லை.

இப்போது கேரளாவை எடுத்துக்கொள்வோம்:

மாநிலம்         1990       2001       2017

கேரளா             0.54        0.606     0.77

இங்கே கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் 1990லேயே கேரளா முன்னணியில் இருந்திருக்கிறது. ஒப்பீட்டளவில் பார்த்தால் 2017இல் மத்தியப் பிரதேசம் அடைந்த வளர்ச்சியை கேரளா 1990லேயே சற்றேறக்குறைய கொண்டிருந்தது. ஆனால் குஜராத்தும் கேரளாவும் ஏறக்குறைய சம விகிதத்தில் தொண்ணூறுகளில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன. அந்தப் பத்தாண்டுகளில் இரண்டு மாநிலங்களுக்கும் வளர்ச்சி விகிதம் 0.002தான் இருந்திருக்கிறது. ஆனால் 2000களில் கதை மாறியது. நாற்பது ஓவர்களுக்கு மேல் வெறி கொண்ட பேட்ஸ்மேன் மாதிரி கேரளா 0.029 வித்தியாசத்தில் சும்மா அடித்து விளையாடி இருக்கிறது. 2000கள் மோடி குஜராத்தை ஆண்ட காலகட்டம் என்பதைத் திரும்பவும் குறிப்பிடுகிறேன்.

ஐநா இந்த ஆய்வு துவக்கிய காலத்தில் இருந்து ஒவ்வொரு மாநிலமும் சிறிய பெரிய முன்னேற்றங்கள் கண்டிருந்தாலும் அதிரடியான வளர்ச்சி என்றால் கேரளாவை மட்டுமே சொல்லலாம். தமிழகத்தை ஓரளவு சொல்லலாம்.

தொண்ணூறுகளில் இந்தியா சோஷலிச தூக்கத்தில் இருந்து எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டு இருந்திருக்கிறது. அப்போது மாநிலங்கள் வளர்ச்சி கண்டாலும் அவை குறிப்பிடத்தகுந்த அளவில் இருக்கவில்லை அப்போது நிறைய மாநில அரசுகளுக்கும் ஐநா ஆய்வுகள், மானுட வளம் போன்றவை பற்றிய பெரிய விழிப்புணர்வு இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.

ஆனால் 2000களில் அது எல்லாம் மாறியது. அமர்த்தியா சென் போன்ற பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து HDI பற்றிப் பேசியும், எழுதியும் தரவுகளைப் பதிப்பித்துக்கொண்டும் இருந்தார்கள். மாநிலங்களிடையே ஜிடிபி, பிஞிமி போன்றவற்றுக்குப் போட்டி எல்லாம் வந்தது. ஆகவே ஆட்சிக்கு வந்தவுடனே தெரியவில்லை என்றாலும் பின்னர் மோடிக்கு கண்டிப்பாக இது பற்றிப் தெரிந்திருக்கிறது. 2004இல் குஜராத் அரசு மனிதவள முன்னேற்றம் பற்றிய ஒரு கொள்கை அறிக்கை வேறு பதிப்பித்து இருந்தது. இது பற்றி அவர்களுக்கு தெரிந்திருந்தது என்பதையே இது காட்டுகிறது. அப்படியும் மனிதவள வளர்ச்சி ஆச்சரியகரமாக இல்லை.

இறுதியாக, சமூகம், கல்வி, பெண் முன்னேற்றம், மருத்துவம், கட்டமைப்புகள் என்று பல்வேறு குறியீடுகளுடன் கூடவே பொருளாதாரத்திலும் தமிழகம் தொண்ணூறுகளில் துவங்கி பெருத்த முன்னேற்றத்தைக் காட்டி இருக்கிறது. குஜராத் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தாலும் மருத்துவம், கல்வி, சமூக நீதி போன்ற இதர குறியீடுகளில் பின்தங்கி இருந்திருக்கிறது. அதுவுமின்றி எண்பதுகளில் இருந்தே குஜராத் நல்ல பொருளாதார வளர்ச்சியைக் கண்டே இருந்திருக்கிறது. தமிழகத்தின் பொருளாதார, மானுட வள முன்னேற்றங்களோ தொண்ணூறுகளில் துவங்கிதான் பீடு நடை போட்டு இன்று இருக்கும் நிலைக்கு வந்து காட்டி இருக்கிறது.

முடிவுரை

எனவே, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதற்கு சாட்சியாக மனிதவளக் குறியீடுகள் மற்றும் தொடர்தகு வளர்ச்சி அறிக்கைகள் நம் முன் நிற்கின்றன. பாஜக நீண்ட காலம் தொடர்ந்து எந்த இடைவெளியுமின்றி 18-20 ஆண்டுகள் ஆட்சி செய்தும்கூட குறிப்பிடத்தகுந்த எந்தப் பெரிய மாற்றத்தையும் உருவாக்க முடியவில்லை என்பதுதான் இந்தப் புள்ளி விபரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. இதையெல்லாம் தாண்டி கூடுதல் போனஸாக, திராவிட மாடலில் மதக் கலவரங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் சேர்த்துக்கொள்ளலாம். குஜராத் மாடலில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் நடுத்தெருவில் கொலையுண்டு இறந்து போயினர்.

அந்த மாடலை நம்பி, அதனிடம் தேசத்தை ஒப்படைத்த நாம் அது படுத்தும் பாட்டை தேச அளவிலும் இப்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.

References:

Did Gujarat really accelerate under Modi, Economic and Political Weekly: Link: shorturl.at/dOPR0

Economic Growth Story of Gujarat, India Today, Link: shorturl.at/uCP47

Who really developed Gujarat adn ow much?, Counter View – Link: shorturl.at/aikCF

Subnational Human Development Index Worldwide since 1990 – Link: shorturl.at/iHVZ7

What is Human Development Index? – Link: shorturl.at/kox59

Narendra Modi’s track record in Gujarat – Link: shorturl.at/bhKU2

3-Decade Trend in Human Development Index in India and Major States – Link: shorturl.at/cjptT

NITI Aayog Education Index – Link: shorturl.at/rvGMY

NIIT Aayog Health Index – Link: shorturl.at/uBHMY

MOSPI Gross State Domestic Product Ministry of Statistics and Programme Implementation – Link: http://mospi.nic.in/data