மீபத்தில் சினிமா உதவி இயக்குனர் ஒருவர் அவர் எழுதிவைத்திருக்கும் கதையில் அவருக்கிருக்கும் சில சந்தேகங்களின் நிமித்தம் என்னைச் சந்திக்க வந்திருந்தார். ஒடிசலான தேகம், நெடுநெடுவென உயரம், கசங்கிய சட்டை, ஹவாய் செப்பல், பொறியியல் படிப்பு என உதவி இயக்குனர்களுக்கான அத்தனை இலக்கணங்களும் அவரிடம் இருந்தது. இதுதான் அவருக்கு முதல் படம். தயாரிப்பாளரை அணுகியிருக்கிறார். கதையில் சில மாற்றங்கள் செய்துவிட்டு வர சொல்லியிருக்கிறார். ‘பவுண்டட் ஸ்க்ரிப்ட்’ என சொல்லக்கூடிய தடிமனான புத்தகம் ஒன்று அவர் கையில் இருந்தது.

“சார், நம்ம கதை ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்சனையும் சேர்த்துப் பண்ணியிருக்கேன். அதுல கொஞ்சம் சஜசன் சொன்னீங்கனா நல்லா இருக்கும், ஏன்னா உங்கள மாதிரி ஸ்பெஷலிஸ்ட்கிட்ட கேட்டுக் கத பண்ணா அதுல கொஞ்சம் ரியாலிட்டி இருக்கும் சார்” என்றார். அவர் கண்களில் தனது கதையின்மீதான அத்தனை நம்பிக்கையும் வெளிப்பட்டது.

“சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வித் சயின்ஸ் ஃபிக்சன் காம்பினேஷனே நல்லா இருக்கு. சொல்லுங்க என்ன சந்தேகம்?” என்றேன்.

“மனிதர்களின் மூளையை மாற்றி வைக்கும்போது அவர்களது நினைவும் மாறிவிடும்தானே? உதாரணத்திற்கு எனது மூளையை உங்களுக்கு வைத்தால் எனது நினைவுகள் எல்லாம் உங்களுக்கு வந்துவிடும்தானே?” என்றார்.

எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. அவர் கேட்பது ஒரு சிக்கலான கேள்வி. மூளையின் செயல்களைத் துல்லியமாக கணிக்கக்கூடிய உபகரணங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில்கூட மூளையைப்பற்றி பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே புரிந்துகொண்டிருக்கிறோம் என்கிறார்கள் மூளை நரம்பியல் வல்லுநர்கள். சினிமா என்பதே ஒரு ஃபேண்டசிதானே. அதுவுமில்லாமல் சயின்ஸ் ஃபிக்சன் கதையில் என்ன லாஜிக் இருக்கிறது? அதனால் நானும் அவரிடம் “நீங்கள் கேட்பது ஒரு தத்துவார்த்த கேள்வி. அதற்கு அறிவியலில் எந்தப் பதிலும் கிடையாது. ஆனால் ஒரு படைப்பாளியாக உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. அதனால் இதில் உள்ள தர்க்கத்தை நீங்க ஆழமாக அலசத் தேவையில்லை. இதில் உள்ள லாஜிக் பற்றி மேலும் நீங்கள் குழப்பிக்கொள்ளாமல் உங்களது மற்ற வேலையைத் தொடங்குங்கள்” எனச் சொன்னேன்.

“இல்ல சார், இதற்குப் பதில் சொல்லுங்க, மூளையை அப்படி மாற்ற முடியுமா அல்லது முடியாதா? அப்படி மாற்றிவைத்தால் நினைவுகளும் மாறிவிடும்தானே?”

“இன்றைய மருத்துவ உலகில் இதற்கான சாத்தியங்கள் இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் இதன் சாத்தியங்களை முயன்று பார்க்கலாம். ஆனால் நினைவுகள் என்பது நீங்கள் நினைப்பதுபோல அத்தனை எளிமையானது அல்ல. மூளையில் எங்கோ ஒரு இடத்தில் அதைச் சேகரித்து இன்னொருவருக்குக் கடத்த முடியாது. நினைவுகள் தொடர்பாக உங்களிடம் இருப்பது ஒரு தட்டையான புரிதல். ஆனால் இதையொட்டிதான் உங்கள் கதை இருக்கிறது என்றால் அதன் சுவாரசியத்திற்காக நீங்கள் அப்படி வைத்துக்கொள்ளலாம்” என்றேன்.

“சார், எனது கதையே அதையொட்டிதான் இருக்கிறது. ஒருவரின் நினைவுகளை மாற்றி அவர்களிடம் குழப்பத்தை உண்டாக்கி அதன்மூலம் அவர்களை சைக்கோவாக மாற்றுகிறான் வில்லன். அவனை நாயகன் தேடிக் கண்டுபிடிக்கிறான் என்பதுதான் இந்தக் கதையின் மையம். அதனால் இதன் சாத்தியங்களை இன்னும் தெளிவுபடுத்துங்கள்” என்று அமைதியாக என்னைப் பார்த்தார் அவர். நான் சொன்னதில் அவருக்கு எந்தத் திருப்தியும் ஏற்படவில்லை என்பது புரிந்தது. அந்த இளைஞரின் கனவும், நம்பிக்கையும் எனக்குப் புரிகிறது ஆனால் ஒரு துறையைச் சார்ந்து அவர்கள் சினிமா எடுக்கும்போது அதன் நிமித்தம் இருக்கும் பொறுப்புகளை அவர்கள் உணர வேண்டும். சமூகத்தின்மீதான இந்தப் பொறுப்புணர்வு இளைய இயக்குனர்களுக்கு அவசியம். இந்த விஷயத்தில் அவர்கள் தங்களது முன்னோடிகளை, ஆதர்சன இயக்குனர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ என்பது தமிழ் சினிமாவின் ஹிட் ஃபார்முலா என நினைக்கிறேன். பெரும்பாலான உதவி இயக்குனர்களிடம் இந்த வகைமையில் குறைந்தபட்சம் ஒரு கதையாவது இருக்கும். ஆனால் இது தொடர்பாக அவர்களிடம் என்ன புரிதல் இருக்கிறது? மேலே சொன்ன கதையில் மூளையை மாற்றாமல் ஒரு சாமியாரையோ அல்லது மந்திரவாதியையோ வைத்து ஒருவரின் நினைவுகளை மாற்றினால் அது மந்திர, மாயாஜாலக் கதை. அதையே கொஞ்சம் டெக்னிக்கலாக சில அறிவியல் பெயர்களையும், சொற்களையும் சேர்த்தால் சயின்ஸ் ஃபிக்சனாகிவிடும் என்ற வகையில்தான் அவர்களின் புரிதல் இருக்கிறது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் உளவியலை மையப்படுத்தும் சினிமாக்கள் இங்கு விரவிக்கிடக்கின்றன. அத்தனை சினிமாவிலும் ஏதாவது ஒரு உளவியல் நோய் கையாளப்படுகிறது. ஆனால் இயக்குனர்கள் அந்த உளவியல் தொடர்பாக குறைந்த பட்சமாகவாவது ஏதாவது தெரிந்துகொண்டு படம் எடுப்பதுதான் நேர்மையானதாக இருக்க முடியும். ஏனென்றால் ஒரு நோயை மையப்படுத்தி எடுக்கும்போது அந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையைக் கருத்தில் கொள்ளவேண்டும். அந்த நோயினைப்பற்றி கதையின் சுவாரசியத்திற்காகப் பல தவறான தகவல்களைச் சொல்லும்போது அது நோய் தொடர்பான ஒரு கண்ணோட்டத்தை மக்களுக்கு ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட கண்ணோட்டத்தில் பொது சமூகம் அந்த நோயுற்றவரை அணுகும்போது அது அவர்களின் மனநிலையையும், வாழ்வியலையும் மிக மோசமாக பாதித்துவிடும். அந்த நோயைக் கையாளும் இயக்குனர் இதை உணர்ந்தே அது சார்ந்த கதைகளையும், காட்சிகளையும் அமைக்க வேண்டும். அந்தப் பொறுப்புணர்வு இயக்குனருக்கு நிச்சயமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இயக்குனர்கள் இந்தப் பொறுப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறார்கள். இளம் இயக்குனர்கள் மட்டுமல்ல, மூத்த இயக்குனர்களே, அதுவும் சினிமாவை நன்கு அறிந்த, நல்ல சினிமா என்று சொல்லக்கூடிய சினிமாக்களை எடுக்கும் இயக்குனர்களே கூட உளவியல் கதைகளைக் கையாளும்போது எந்தப் பொறுப்புணர்வுமற்று இருப்பது தமிழ் சினிமாவில் துரதிஷ்டவசமானது. தமிழ் சினிமாவில் இப்படிப் பொறுப்புணர்வு அற்று உளவியலையும், மன நோய்களையும் கையாண்ட ஏராளமான படங்களைச் சொல்லலாம் அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பது சமீபத்தில் வந்திருக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’.

சைக்கோ படத்தின்மீது ஒரு மனநல மருத்துவராய் எனக்கு இரண்டு முக்கியமான விமர்சனங்கள் இருக்கின்றன. ஒன்று, அதன் பெயர் ‘சைக்கோ.’ மற்றொன்று, மனிதாபிமானமோ, மனிதர்களின்மீதான கரிசனமோ எதுவுமற்ற ஒரு தொடர் கொலைகாரனின் கொலைகளுக்கு இயக்குனர் தனது சொந்தப் புரிதல் வழியாக நியாயத்தைக் கற்பிக்கும் முயற்சி.

முதலில் ‘சைக்கோ’ என்ற பெயர். உலகம் முழுக்க மனநோயைக் குறிக்கும் வார்த்தைகளை பொது சமூகத்தின் உரையாடலில் இருந்து தவிர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு ‘இடியட்’, ‘லுனாட்டிக்’, ‘சைக்கோ’ போன்ற வார்த்தைகளை எல்லாம் பொதுத்தளங்களில் உபயோகப்படுத்தக்கூடாது என்ற நெறிமுறைகளை அவை வகுத்துள்ளன. அதற்குக் காரணம் இருக்கிறது. பொதுவாக இந்த சொற்களை எல்லாம் நாம் பழி சொற்களாக, மற்றவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் பயன்படுத்தி வருகிறோம். இந்த சொற்கள் எல்லாம் ஏதாவது ஒரு மனநோயைக் குறிப்பன. சில காலம் முன்புவரைக்கும் மாற்றுத்திறனாளியைக் குறிக்கும் சொற்களை இதேபோன்று தமிழ் சினிமா அதிகமாக உபயோகப்படுத்தி வந்தது. இப்போது மனநோயைக் குறிக்கும் சொற்கள். நோயைக் குறிக்கும் ஒரு சொல்லை இவ்வளவு பொதுவெளியில் நாம் மோசமாக சித்தரிக்கும்போது அந்த நோயைத் தாங்கியவருக்கு நாம் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறோம் என்ற குறைந்தபட்ச புரிதல் நமக்கு வேண்டும். மனநோயை நாம் அவமானமாக நினைக்கக்கூடாது. அதை ஒரு நோய் என்ற அளவில் அணுகும்போதுதான் அது தொடர்பாக பொது சமுகத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை எண்ணங்கள் மாறத்தொடங்கும். அப்படி மாறும்போதுதான் மனநோயாளிகள் கண்ணியமாக நடத்தப்படுவார்கள். அப்படி கண்ணியமாக நடத்தப்படும்போதுதான் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் அதற்கான சிகிச்சையை நாடி வருவார். சிகிச்சையை நாடி வரும்போதுதான் நாம் மனநோய்களை முற்றிலுமாக இந்தச் சமூகத்தில் இருந்து ஒழிக்க முடியும். ஆனால் ஒரு வெகுசன சினிமா ‘சைக்கோ’ என தலைப்பிட்டு ஒரு தொடர் கொலைகாரனின் கதையைச் சொல்கிறது என்றால் இந்த சொல்லின்மீதும், மனநோயின்மீதும் இந்த சினிமா பொது சமூகத்தில் என்னவிதமான பிம்பத்தை, கண்ணோட்டத்தை ஏற்படுத்தும்? ஏற்கனவே மனநோய்க்கு எதிராக ஏராளமான எதிர்மறை கருத்துக்கள் நிரம்பியிருக்கும் ஒரு சமூகத்தில் நிச்சயம் இது மனநோய்கள் தொடர்பாக மோசமான பார்வைகளைத்தான் ஏற்படுத்தும். ‘சைக்கோ கொலைகாரர்கள்’ என்பது தமிழ் ஊடகங்களில் மிக சாதாரணமாகப் புழங்கப்படும் சொல்லாகிவிட்டது. அதற்கு இதுபோன்ற சினிமாக்கள் முக்கியமான காரணம்.

மேற்குலக நாடுகளில் எந்தவித நோக்கமுமின்றி ஏதோ ஒரு உளக்கிளர்ச்சியின் நிமித்தம் தொடர் கொலைகளில் ஈடுபடுபவர்களை ‘சீரியல் கில்லர்கள்’ என்றுதான் அழைக்கிறார்களே தவிர ‘சைக்கோ கில்லர்’ என்று சொல்வதில்லை. ஆனால் இங்கு சைக்கோ என்பது மிக சகஜமாகப் புழங்கும் சொல்லாக இருக்கிறது. அதுவும் தனிநபர் உரையாடல்களைத் தாண்டி வெகுஜன ஊடகங்கள்கூட எந்த ஒரு நெருடலும் இல்லாமல் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது வியப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் வேதனையாகவும் இருக்கிறது. முதலில் இப்படித் தொடர் கொலைகளில் ஈடுபடுபவர்கள் மனநோயாளிகள் என்பதை எப்படி முடிவு செய்து கொள்கிறீர்கள் அல்லது எத்தனை மனநோயாளிகள் இதுபோன்ற தொடர் கொலைகளில் ஈடுபட்டதாய் இங்கு ஆதாரம் இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் மனநல மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் மனநோயாளிகள் வன்முறையில் ஈடுபடுவதைவிட மனநோயாளிகளின்மீது தொடுக்கப்படும் வன்முறைகள்தான் அதிகமாக இருக்கின்றன என்று சொல்கின்றன. இந்த நகரத்தின் மத்தியில் இருக்கும் மனநல காப்பகத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் நோயாளிகள் இருக்கிறார்கள். அதன் உள்ளே எந்த வன்முறை சம்பவங்களும் நடைபெறுவதில்லை அல்லது அதன் நீண்ட மதில்களுக்கு வெளியே நகரத்தில் எப்போதும் வன்முறைகளும், துரோகங்களும், சூழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மனநோயாளிகள் வன்முறையாளர்களோ அல்லது கொலைகாரர்களோ கிடையாது. அவர்கள் நோயின் நிமித்தம் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள். அப்படி நியாயமற்ற வகையில் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படும்போதுகூட அவர்களுக்கு இந்த சமூகம்மீது கோபம் எதுவும் வருவதில்லை என்பதுதான் உண்மை.

ஒரு குற்றச்சம்பவம் நடக்கும்போது நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவரிடம் இருக்கும் இரண்டு அம்சங்களைக் கொண்டே அவர்களுக்குத் தண்டனை வழங்குகிறது. ஒன்று, ஆக்டஸ் ரியா. அதாவது குற்றச்செயல் ஒன்று நடந்திருக்க வேண்டும். அதை இவர்தான் செய்திருக்கிறார் என்று நிறுவ வேண்டும். இரண்டாவது அம்சம்தான் முக்கியமானது ‘மென்ஸ் ரியா’ அந்தக் குற்றச்செயல் தொடர்பான குற்றவுணர்வு (நிuவீறீt) இருக்கிறது என நிறுவ வேண்டும். அதை எப்படி நிறுவுவது? செய்த குற்றச்செயலை மறைக்க நினைத்தாலோ அல்லது தடயங்களை அகற்ற முற்பட்டாலோ அல்லது அது நிமித்தம் தெளிவாக முன்பே திட்டமிருந்தாலோ இந்தக் குற்றவுணர்வை நிறுவ முடியும். மனநோயாளிகளைப் பொறுத்தவரை மனநோயின் விளைவாக அவர்கள் ஏதாவது குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் இந்த ‘மென்ஸ் ரியா’வை நிறுவ முடியாது. அவர்கள் செய்த குற்றத்தை மறைக்கவோ அல்லது தடயங்களை அழிக்கவோ முற்பட்டிருக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்குத் தண்டனை வழங்க முடியாது. ஆனால் தொடர்ச்சியாக இளம் பெண்களைக் குறிவைத்து, தெளிவாகத் திட்டமிட்டு, கொலை செய்து, அவர்களின் தலைகளைக் கொய்யும் ஒருவனை மனநோயாளி என்று சொல்வது உண்மையில் மனநோயாளிகளின்மீது சேற்றை வாரியிறைப்பதற்குச் சமம். அவன் ஒரு குற்றவாளி. குற்றவாளிகளில் சிலர் மனநோயாளிகளாக இருக்கலாம். ஆனால் எல்லா குற்றவாளிகளும் மனநோயாளிகள் அல்ல.

ஒரு மனநோயாளிக்கு இங்கிருக்கும் சூழல் அத்தனை சாதகமானதாக இல்லை. நெருக்கடிகளும், இன்னல்களும், பரிகாசங்களும், உரிமை மீறல்களும் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் சூழலைத்தான் நமது சமூக அமைப்பு அவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. இந்த ஆரோக்கியமற்ற சூழலில்தான் அவர்கள் தங்களது நோயுடன் போராட வேண்டியுள்ளது. இந்த சூழலில்தான் அவர்கள் குறைந்தபட்ச அன்பையும், புரிதலையும் வேண்டி நிற்கிறார்கள். இந்த சூழலுக்கு நாம் எல்லாரும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருக்கிறோம். இந்த சூழலை நீக்கி அவர்களுக்கு ஒரு ஆரோக்கியமான, பாகுபாடற்ற, கண்ணியமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும் பொறுப்பு நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதை செய்ய முடியவிட்டால்கூட குறைந்தபட்சம் அவர்களைக் குறிக்கும் சொற்களை இப்படி மோசமாக சித்தரித்து இருக்கும் சூழலை மேலும் கெடுக்காமல் இருப்பது அவசியம். அதை இன்றைய சினிமாத்துறையினர் உணர வேண்டும்.

‘சைக்கோ’ படம் தொடர்பான எனது இரண்டாவது விமர்சனம் மிக முக்கியமானது. சக மனிதர்களின்மீதான எந்த ஒரு மனிதாபிமானமும் அற்று, அவர்களைக் கொடூரமாகக் கொல்லும் ஒரு தொடர் கொலைகாரனின் இந்தக் கொடூரக் கொலைகளுக்கு நியாயத்தைக் கற்பிக்க முயலும் இயக்குனரின் பார்வை ஆபத்தான ஒன்று. இதற்கு முன்பும்கூட இதே வகைமையில் தொடர் கொலைகளைச் சித்தரித்து எடுக்கப்பட்ட திரைப்படங்களில்கூட இதே பார்வைதான் வெளிப்பட்டிருந்தது. அதாவது ‘இளம் பிராயத்தில் மிக மோசமான சூழலில் வளரும் ஒருவன், அதீத உளவியல் நெருக்கடிக்கு (றிsஹ்நீலீஷீறீஷீரீவீநீணீறீ tக்ஷீணீuனீணீ) உள்ளாகும் ஒருவன் பின்னாளில் தொடர் கொலைகாரனாகிறான். சீரியல் கில்லரைப் பற்றி எடுக்கும் எந்த ஒரு திரைப்படமும் இதே பார்வையுடன்தான் இருக்கின்றன. அதற்காக வலிந்து, நாடகத்தனமான ஃப்ளாஷ்பேக் காட்சிகள் திணிக்கப்படுகின்றன. ஆனால் இது ஒரு மேலோட்டமான பார்வையே. தொடர் கொலையில் ஈடுபடும் ஒருவனின் மனநிலையை நாம் புரிந்துகொள்ளச் செய்யும் ஒரு முயற்சிதான் இது போன்ற பார்வை. “எப்படி ஒருவனால் இத்தனை கொடூரமான கொலைகளைச் செய்ய முடிகிறது? அவனும் நம்மைபோல ஒரு மனிதன்தானே அல்லது நானும் அவனைப் போன்ற மனிதன்தானே, ஒருவேளை இந்த மனநிலை எனக்குள்ளும் இருக்குமோ?” என்ற கேள்வி நமக்கு ஒரு அச்சத்தை நம்மீது கொடுக்கிறது. அதனால் நம்மில் இருந்து அந்தக் கொலைகாரர்களை வேறுபடுத்திப் பார்க்க நினைக்கிறோம். அதற்கு இருக்கவே இருக்கிறது ‘மனநோய்’ என்னும் முத்திரை. மனநோயின் விளைவாகவே அவனுக்கு அந்தக் கொடூர மனநிலை வந்திருக்கிறது என முடிவு செய்து கொள்ளும்போது நமக்கு அது கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. மனநோய் ஏன் வருகிறது என்ற கேள்விக்கு நமக்குத் தெரிந்த பதில், சிறு வயதில் அவனுக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு மோசமான அனுபவத்தின் விளைவாக மனநோய் வருகிறது என்பதே. எனவே நமக்குத் தெரிந்ததை, நமது புரிதலைக் கொண்டுக் கதையை கையாளுகிறோம். அதில் உள்ள உண்மைத்தன்மை பற்றி நமக்கு என்ன கவலை?

‘தி கார்டியன்’ பத்திரிகை 2018இல் பீட்டர் ரான்ஸ்கி என்ற வரலாற்று ஆய்வாளர், பத்திரிகையாளரை ஒரு நேர்காணல் செய்தது. இந்த பீட்டர் ரான்ஸ்கி என்பவர் சீரியல் கில்லர்கள் என்று சொல்லக்கூடிய தொடர்கொலைகாரர்களை பற்றிப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கவனித்தும் எழுதியும் ஆய்வு செய்து வருபவர். அவர் சமீபத்தில் ‘Sons of Cain: A History of serial killers from stone ace to the present’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். உலகத்தின் மிக மோசமான சீரியல் கில்லர்களின் உளவியலை வெவ்வேறு குற்றச்செயல்களின் வழியாக அணுகும் புத்தகமான இந்தப் புத்தகம் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது, “மோசமான இளம் பிராயத்து அனுபவங்கள்தான் ஒருவரைத் தொடர் கொலைகாரர்களாக மாற்றுகிறது என்பது இங்கு தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறதே இது உண்மையா?”

அவர் அதற்கு இப்படிச் சொல்கிறார்: “பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற கொலைகாரர்களின் இளம் பிராயத்து அனுபவங்கள் அவர்களால் சொல்லப்பட்டதே. தொடர்ச்சியாகக் கொலைகளைச் செய்யும் ஒருவர் தனது இளம் பிராயம் பற்றிச் சொல்வதை நம்மால் எப்படி முழுமையாக நம்ப முடியும்? அது ஜோடிக்கப்பட்ட ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது? இந்த சமூகத்தின் கூட்டு மனசாட்சியிடமிருந்து ஒரு பரிதாபத்தைப் பெற்றுவிடவேண்டும் என்பதற்காகக்கூட அவர்கள் இப்படிச் சொல்லலாம்தானே? அப்படி சொல்லிவிட்டு அவர்கள் தங்களுக்குள் நம்மைப் பார்த்து அலட்சியமாக சிரித்துக்கொள்வார்கள் என நினைக்கிறேன்” என்கிறார்.

மேலும் அவர் அந்த நேர்காணலில் இன்னும் சில முக்கியமான விஷயங்களைச் சொல்கிறார்: “ஒவ்வொரு மனிதனும் இங்கு பிறக்கும்போது விலங்காகவே பிறக்கிறான். ஒரு வன விலங்குக்கு இருக்கக்கூடிய அடிப்படை உள்ளுணர்ச்சிகளான (ஙிணீsவீநீ வீஸீstவீஸீநீt) வேட்டையாடும் உணர்வு மற்றும் பாலுணர்வு மட்டுமே அப்போது அவனுக்கு இருக்கின்றன. இந்த சமூகத்துடன் அவன் உரையாடத் தொடங்கும்போதே அதாவது சமூகப்படுதல் தொடங்கிய பிறகே அவனது இந்த அடிப்படை உள்ளுணர்ச்சிகள் மறையத்தொடங்குகின்றன. அவனது மூளையை இந்த சமூகப்படுதலின் வழியாகப் பெறப்பட்ட அறிவு சுற்றி அணைத்துக்கொள்கிறது. அதன்பிறகு அவன் தனது விருப்பு, வெறுப்புகளைவிட இந்த சமூகத்தின் நலனைப் பிரதானமாகக் கொண்டே இந்த சமூகத்துடன் தன்னை ஒரு அலகாக இணைத்துக்கொள்கிறான். தனது சுய தேவை மற்றும் சமூகத்தின் தேவை என்ற இரண்டிற்கும் இடையேயான சமநிலை என்பது மனிதர்களுக்கிடையே வேறுபடுகிறது. மனிதர்களுக்கிடையேயான உறவுகள் இவை இரண்டிற்கும் இடையேயான முரண்களின் வழியாகவே நிறுவப்படுகிறது. ஆனால் தொடர் கொலைகாரர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு சமூகப்படுதல் என்பது தொடங்கவேபடாமல் இருக்கிறது. அதனால் அவர்கள் விலங்குகளுக்கே உரிய அடிப்படை உள்ளுணர்ச்சிகளை மட்டுமே கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுக்குரிய எந்த ஒரு சமூகப்படுதலும் அவர்களின் மூளையில் நிகழ்வதேயில்லை. பிரதானமான வன்முறை, வேட்டையாடுதல், கட்டுப்பாடற்ற பாலுணர்வு என்பதை மட்டுமே கொண்டு அவர்கள் இந்த சமூகத்தில் உலாவும்போது இந்த சமூகத்தை அவர்கள் தங்களது வேட்டையாடும் நிலமாகப் பாவித்துக்கொள்கிறார்கள். அதன் விளைவே இதுபோன்ற கொலைகள். கொலைகள் மட்டுமே அவர்கள் செய்து கொண்டிருப்பதில்லை. பலவகைகளில் இந்த சமூகத்தின்மீது வேட்டையாடிக்கொண்டே இருப்பார்கள். அதில் கொலைகள் என்பது ஒரு உச்சநிலை தருணம். அதன்வழியாக அவர்கள் ஒரு கிளர்ச்சியைப் பெறுகிறார்கள். உண்மையில் அந்தக் கிளர்ச்சியை அவர்களுக்கு வேறு எதுவும் தருவதில்லை. இதில் ஆபத்து என்னவென்றால் அந்தக் கிளர்ச்சி அவர்களுக்கு நிறைய நேரம் நீடிப்பதில்லை” என்கிறார் பீட்டர் ரான்ஸ்கி.

அதனால் மோசமான வளர்ப்போ அல்லது இளம் வயதில் நிகழ்ந்த துயர்படிந்த அனுபவங்களோ ஒருவரைத் தொடர்கொலைகாரர்களாக மாற்றுவதில்லை. மாறாக, மனிதனுக்கேயுரிய சமூகப்படுதல் நிகழாமல் வளரும் ஒருவன் சிறு வயதில் இருந்தே அவன் வளரும் சூழலோடு முரண்பட்டே நிற்கிறான். மனித உறவுகளின்மீது இயல்பாக வரக்கூடிய எந்த ஒரு அன்போ, கரிசனமோ இல்லாது வளரும் ஒருவன் அவனைச் சுற்றியுள்ள மனிதர்களோடு நிச்சயம் பல வகைகளில் பிணக்குகளை உருவாக்கிக்கொள்வான். அவனின் இந்த அணுகுமுறையே அவன்மீதான இளம் பிராயத்து வன்முறைகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாமே தவிர இளம் பிராயத்து வன்முறைகள் இப்படிப்பட்ட ஆளுமைகளை உருவாக்குவதில்லை. அப்படி உருவாக்கினால் இந்தியாவில்தான் உலகிலேயே பல சீரியல் கொலைகாரர்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளின்மீது நடக்கும் வன்முறைகள் உலக அளவில் இந்தியாவில்தான் அதிகம். அதேபோல அனாதை இல்லங்களிலோ அல்லது சீர்திருத்தப்பள்ளிகளிலோ வளரும் குழந்தைகளில் பலர் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடங்களை அடைந்திருக்கிறார்கள். அந்த சூழலையும் நெருக்கடிகளையும் தாண்டி மிக உயரிய பண்புகளோடு அங்கிருந்து வந்தவர்களை எனக்குத் தெரியும். அதனால் அங்கு வளரும் குழந்தைகள் எல்லாம் மனப்பிறழ்வு கொண்டவர்களாக மாறுவார்கள் போன்ற பொதுபுத்தியில் இருந்தெல்லாம் நாம் வெளியே வரவேண்டும்.

தொடர்கொலைகாரர்களின் செயலுக்கு வலிந்து நாடகத்தனமான ஃபிளாஷ்பேக் உருவாக்கும் இயக்குனர்கள் வரலாற்றில் சீரியல் கில்லர்களுடன் எடுக்கப்பட்ட நேர்காணல்களை எல்லாம் ஒருமுறையாவது பார்த்துவிடுவது நலம். யூடியூபில் அது போன்று ஏராளமான நேர்காணல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு இரண்டே இரண்டு மட்டும் இங்கே தருகிறேன்.

டேவிச் பெர்க்கோவிட் 17 கொலைகளுக்கு மேல் செய்த சீரியல் கில்லர். அவனிடம் “ஏன் இத்தனை கொலைகளைச் செய்தாய்? உனக்கு அதை நினைத்து வருத்தமாக இல்லையா?” என்று கேட்கப்பட்டது.,

அவன் சொன்ன பதில்: “ஒவ்வொரு கொலைகள் செய்வதற்கு முன்னரும் மனஅழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் அதிகமாகும். நீண்ட நாள் மதுவருந்தாமல் திடீரென ஒரு மதுபானக் கடையைப் பார்க்கும்போது எப்படி இருக்கும்? அதேபோன்ற மனநிலை. அந்த மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி ஒருகட்டத்தில் எனக்குள் வெடித்துவிடுமோ என்ற அளவிற்குப் பெருகிவிடும். ஒரு கட்டத்தில் எனது துப்பாக்கியின் விசையை அந்த இளம்பெண்ணின் நெற்றியில் வைத்து இழுத்து விடும்போது எனக்குள் இருந்த அத்தனை அழுத்தமும், வெறுப்பும், கோபமும் ஒரே கணத்தில் முற்றிலுமாகக் குறைந்துவிடும். அந்தப் பெண்ணை ரத்தக் கோலத்தில் பார்க்கும்போது எனது மனம் அத்தனை லேசானதாக மாறிவிடும். அதன்பிறகு நான் எனக்குப் பிடித்த பாடலைப் பாடிக்கொண்டே விசிலடித்தபடி என வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிவிடுவேன்.”

சோடியாக் கில்லர் வரலாற்றில் இறுதிவரை பிடிக்கவே முடியாமல் போன சீரியல் கில்லர். அவன் இப்படிச் சொல்கிறான்: “மனிதர்களைக் கொலை செய்வது எனக்கு ஒரு வேடிக்கையான விளையாட்டு. இதைவிட ஒரு வேடிக்கையான விளையாட்டை எங்கும் பார்க்க முடியாது. காட்டில் ஒரு மிருகம் மற்றொரு மிருகத்தைப் பசிக்காகக் கொல்வதைவிட இது வேடிக்கையானதாக இருக்கிறது. உண்மையில் மனிதன்தானே மற்ற மிருகங்களை எல்லாம்விட ஆபத்தானவன். அப்படித்தான் நான் இருக்கிறேன்.”

நான் சொன்னது இரண்டு உதாரணங்கள். இன்னும் பல நேர்காணல்கள் இருக்கின்றன. யாரிடமும் சிறு குற்றவுணர்ச்சியையோ, பரிதாபத்தையோ, மெல்லுணர்வுகளையோ நாம் பார்க்க முடியாது. ஒரு சிறுவன் தனது விளையாட்டை விவரிக்கும் தோரணையில் தான் அவர்கள் தங்களது கொலைகளை விவரிக்கிறார்கள். அவர்களிடம்தான் நமது இயக்குனர்கள் மெல்லுணர்வுகளையும், பரிதவிக்கும் அன்பையும், தேங்கி நிற்கும் மனிதர்களின் ப்ரியத்தையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை யாரேனும் ஒரு சீரியல் கொலைகாரர் நமது திரைப்படங்களை அதுவும் குறிப்பாக அவர்களின் ஃபிளாஷ்பேக் காட்சிகளைப் பார்க்க நேர்ந்தால் நமது இயக்குனர்களின்மீது அவர்களுக்கு நிச்சயம் ஒரு பரிதாபவுணர்ச்சி தோன்றும் என நினைக்கிறேன். அவர்களின் வாழ்க்கையில் அவர்களுக்கு அதுவரைத் தோன்றாத ஒரு மெல்லுணர்வாக அது அப்போது இருக்கும்.