ருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கம், உலக வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கியது என்று கூறலாம். அது, செப்டம்பர் 11, 2001-ஆம் ஆண்டு நிகழ்ந்த பின்னாளில் 9/11 என்று செல்லமாக குறிப்பிடப்பட்ட அமெரிக்க நியூயார்க் இரட்டை கோபுரத் தகர்ப்பு. அல் கொய்தா என்ற ஒரு அமைப்பு, சௌதி அமெரிக்காவை சேர்ந்த, அஃப்கானிஸ்தானிலிருந்து இயங்கிய ஒசாமா பின் லேடன் என்பவரை தலைவராகக் கொண்ட அமைப்பு, சில தீவிரவாதிகளைப் பயிற்றுவித்து அவர்கள் இரண்டு அமெரிக்க விமானங்களைக் கைப்பற்றி, வானோங்கிய அமெரிக்க வர்த்தக மையம் என்ற இரண்டு கட்டடங்களின் மேல் மோதி, அந்தக் கட்டடங்கள் நொறுங்கி விழுந்தன.

இருபதாம் நூற்றாண்டு முடிந்து இருபத்தோராம் நூற்றாண்டு துவங்கியதை ஒரு ஆண்டுக்கணக்காக பார்க்காமல், வரலாற்றின் ஒரு கட்டம் இன்னொரு கட்டத்திற்கு நகர்வதாகப் பொருள் கொண்டால் அமெரிக்க இரட்டை கோபுரத் தகர்ப்பை மேலும் சில தகர்ப்புகளுடன் இணைத்து பரிசீலிக்கலாம். பெரிலின் சுவர் தகர்ப்பு (1989), பாபர் மசூதி தகர்ப்பு (1992), பாமியான் புத்தர் சிலை தகர்ப்பு (மார்ச் 2001), நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு (செப்டம்பர் 2001) ஆகியவை அவை. ஒன்றுக்கொன்று தொடர்பற்றவைகளாகத் தோன்றும் இந்த தகர்ப்புகளை இணைத்துப் பார்ப்பது நமக்கு எத்தகைய வரலாற்றுப் பார்வையைத் தரும் என்பதே கேள்வி. இதன்மூலம் வரலாறு என்பதும் ஒரு கற்பிதம் என்பதையும், அந்தக் கற்பிதத்தின்மூலம் நாம் எத்தகைய பார்வைகளைப் பெறலாம் என்பதையும்கூட பரிசீலிக்கலாம். வரலாறு என்ற கற்பிதத்தின் கிளைகள்தான் புரட்சி என்பதும், எதிர்புரட்சி என்பதும். இவையெல்லாம் சொல்லாடலில் கட்டமைக்கப்படும் சில கருத்தாக்கங்கள். சிந்திக்க உதவக்கூடியவை. இருபதாம் நூற்றாண்டின் முதலிருபது ஆண்டுகளை ஏன், எதிர்புரட்சியின் காலம் என்று அழைக்கத் தோன்றுகிறது என்பதையும் நாம் கண்டறிய முயல்வோம்.

மேலேசொன்ன தகர்ப்புகள் ஒவ்வொன்றும் வரலாற்றின் பெயரால் நிகழ்ந்தவை. வரலாற்றை சரிசெய்ய நிகழ்ந்ததாகக் கூறப்பட்டவை. பெர்லின் சுவர் தகர்ப்பு உலகில் சுதந்திரவாதிகளாலும், கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பினராலும் நேர்மறையான மக்கள் எழுச்சியாக கணிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட பெர்லின் சுவருக்காக வருந்துபவர் யாரும் இல்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பின் பிளவுபட்ட ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட அந்தச் சுவர் எந்தப் புனிதத்தையும், இலட்சியத்தையும் குறிப்பிடவில்லை என்பதே புரிதல். பாபர் மசூதி இடிப்பும், பாமியான் புத்தர் சிலை தகர்ப்பும் சுதந்திரவாதிகளால், இடதுசாரிகளால், பொதுமக்களால் தேசிய அரசுகளால் கண்டிக்கப்பட்டாலும் இந்து, இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொண்டாடப்பட்டன. இரட்டை கோபுரத் தகர்ப்பு அனைவருக்குமே அதிர்ச்சியளித்த உலகின் ஆகப்பெரிய தீவிரவாத தாக்குதல் என்றால் மிகையாகாது. உலகமே இதை வன்மையாகக் கண்டித்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நாச வேலைகளை அறிந்த பலர், இந்த குறியீட்டுரீதியான தாக்குதலில் மகிழவே செய்தார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான எச்சரிக்கை மணி என்று நினைத்தார்கள்.

இப்படிப்பட்ட நிகழ்வுகளை தொடர்புபடுத்தி நாம் என்ன புரிந்துகொள்ளப் போகிறோம்? இப்படி தொடர்புபடுத்தினால் வரலாறுகுறித்த, புரட்சி / எதிர்புரட்சி குறித்த புதிய விளக்கங்கள் கிடைக்குமா? இதற்கெல்லாம் திட்டவட்டமாக பதில் கூறுவது கடினம். விமர்சன சிந்தனையும் கவிதைபோலத்தான். இந்தக் கட்டுரை எங்கே, எப்படி முடியும் என்று தெரியாது என ஆத்மநாமைப் போல கூறிவிட்டு, சிந்தனையை நிகழ்த்திப் பார்க்க வேண்டியதுதான் நமது கடமை. சற்றே ஆழமாக வரலாற்றின் தத்துவத்திற்குள் சென்றால்தான் நம்மால் இவற்றின் ஆழ்ந்த பொருள் என்பதை கற்பித்துப் பார்க்க முடியும். ஆங்கிலத்தில், ஸ்பெகுலேடிவ் ரீசனிங் என்று சொல்வார்கள். தமிழில், கற்பித சிந்தனை என்று கூறலாம் எனத் தோன்றுகிறது.

இலட்சியங்களின் கருவறை

மானுட இலட்சியம் இதுதான் என ஒன்றை பொதுமைப்படுத்த முடியுமா? எல்லா காலத்திற்கும் அது பொருந்தி வர முடியுமா? அப்படி ஒற்றை இலட்சியத்தை உருவகம் செய்வது மிக ஆபத்தானது அல்லவா? அதனால் நாம் இலட்சியத்தை பொதுமைப்படுத்த வேண்டாம். ஆனால் இலட்சியங்களை சூல்கொள்ளும் கருவறையை யோசித்துப் பார்க்கலாம். அதாவது, அந்தக் கருவறை எத்தகைய அக்கறைகளால் கட்டமைக்கப்படுகின்றன என்பதை தொகுத்துக் கொள்ளலாம்.

உயிர்வேதிச் செயல்பாடுகளால் ஆன மானுட உடலியக்கம், அதுசார்ந்த தளைகள், தேவைகள், இச்சைகள், ஆசாபாசங்கள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, கூடியவரை அவற்றிலிருந்து விலகி, மானுட சிந்தனை அல்லது பிரக்ஞை எப்படி தன் சுயேச்சையான இருப்பை கைக்கொள்ள முடியும் என்ற கேள்வியே இந்தக் கருவறையின் கட்டமைப்பில் முக்கியமானது.

கல், மண், உலோகங்கள் போன்றவை வெறும் உயிரற்ற வேதிப்பொருட்களால் ஆனவை. தாவரங்கள், விலங்குகள் போன்றவை உயிர்சக்தி கொண்டிருந்தாலும் அவற்றைப் பிணைத்துள்ள வேதிச் செயல்பாடுகளிலிருந்து வேறுபடுத்திக்கொள்ள முடியாதவை. அழுக்கில் தோன்றும் புழுக்களிலிருந்து, மழைபெய்தால் தோன்றும் விட்டில் பூச்சிகளிலிருந்து யானைகள், குதிரைகள் வரை எந்த உயிரினமும் தங்கள் நினைவுசேகரத்தை குறியீடுகளாக, மொழியாக மாற்றி தங்கள் நினைவுசேகரத்தை பொதுமைப்படுத்தி பிரக்ஞையாக உருவகப்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் மனிதன், சுயம் என்றும் மற்றமை என்றும் பிளவுண்டு தன்னை உணர்வதும், அந்த மற்றமையில் ஒன்றுபட விழைவதும் சாத்தியமாகிறது.

மரணத்தில் உடலின் உயிர்சக்தி இயக்க மற்றுப்போகிறது. உடல் மண்ணில் புதையுண்டோ, சிதைந்தோ, எரிந்தோ பிற வேதிப்பொருட்களுடன் கலந்துவிடுகிறது. ஆனால் பிரக்ஞை எனப்படும் நினைவுசேகரம் என்னவாகிறது? வேறுவார்த்தைகளில் சொன்னால், சுயம் மற்றமையுடன் கலக்கிறதா இல்லையா? அந்த மற்றமைக்கு என்ன பெயர்?

இதற்கான விடையாக உருவானதே கடவுள் தத்துவம். பிறவிப் பெருங்கடலை நீந்திக்  ‘கடப்பதற்கு’ இறைவனடி சேர்வது அவசியம் என்று கூறப்பட்டது அல்லது இறைவனுடன் கலப்பதே இலட்சியமென கூறப்பட்டது. மரணத்திற்கு பின்னாலான மறுமைக்கு கடவுள் அவசியம் என்றால் இம்மையான வாழ்வில் கூட்டு வாழ்க்கையை மேம்படச்செய்ய பொது ஒழுங்கு, தர்மம், அறம் அவசியம். எனவே, கடவுளின் பெயரால் அன்பு, அறம் ஆகியவை போதிக்கப்பட்டன. சமூக கூட்டியக்கத்தை பொதுமேம்பாட்டை நோக்கி ஒழுங்குபடுத்தி நடத்த இறைவன் பெயரால் ஆட்சிசெய்யும் ஒரு அரசன் தேவைப்பட்டான். ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என பிரித்துக்கொண்டு வாழ்வை மேம்படுத்தும் பணி நிகழ்ந்தது. இந்த மேம்பாட்டின் சாராம்சம் சகவாழ்வு; அத்தியாவசிய தேவைகளுக்காக வன்முறையில் ஈடுபடாமல், கூட்டாக உழைத்து வாழ்வாதாரங்களைப் பெருக்குவது. அமைதியான கூட்டு வாழ்வில் மனவளத்தைப் பெருக்குவது.

சுருங்கச்சொன்னால், இம்மையிலும் உடல் இயக்கம்சார்ந்த தேவைகள் எளிதில் தீர்க்கப்பட்டு வாழ்வு வேறு பொது இலட்சியங்களை கைக்கொள்ள வேண்டும் என்பதே இலட்சியங்களின் கருவறை. எழுபதுகளில் வெளியான, ரிச்சர்ட் பாக் என்பவரின் ‘ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல்’ என்ற நூலில் ஒரு சீகல் பறவை எப்படி உணவுக்காக பறக்காமல், பறத்தலையே வாழ்வின் இலட்சியமாக மாற்றுகிறது என்று வர்ணிக்கப்பட்டிருக்கும். என்னைப் போன்ற ஏராளமான இளைஞர்களைக் கவர்ந்த கல்ட் ஃபிக்ஷன் அது. மாநிலம் பயனுற வாழ்வதற்கான வல்லமையைப் பெறுவதே உயர் இலட்சியமென பாரதியின் வரிகளும் கூறின. பொதுவாக உயரம், மேலே செல்லுதல் என்பதுபோன்ற உருவகங்கள் உடலியக்கம் சார்ந்த வாழ்விலிருந்து விடுபட்டு வேறு இலட்சியங்களை கைக்கொள்ளுதல் என்ற பொருளை வழங்குபவை. பிளேட்டோ குகையினுள் தளைகள் பிணிக்கப்பட்டு முன்னால் சுவரில் நகரும் நிழல்களை பார்ப்பவர்கள், குகைக்கு வெளியே சூரியனை காண முனைவதை இலட்சிய உருவகமாக்கினார். வேறு வார்த்தைகளில் சொன்னால், புலன் அனுபவ உலகின் பின்னால் உள்ள தர்க்கத்தை உய்த்து உணர்வதே மெய்யறிவு.

இப்படி, இறைவனை மறுமையில் அடையும், முக்தியடையும் மறுமை இலட்சியங்கள், பொதுவாழ்வு மேம்பாடு மற்றும் உடலியக்கத் தளைகள் கடந்த சுய மேம்பாட்டு, பொது மேம்பாட்டு இம்மை இலட்சியங்கள் என ஆன்மீக நோக்கு இம்மையும், மறுமையும் இணைந்த அழகியல், அறவியல், அரசியல் இலட்சியங்கள் பல தோன்றின. உடல் மண்ணுக்கு என்பதில் மாற்றமில்லை. உயிர் எதற்கு என்பதில்தான் தேர்வுகள். இப்படியான இலட்சியங்களின் சாத்தியங்களில் முக்கியமானதும், அருவமானதுமான ஒன்றுதான் விடுதலை அல்லது சுதந்திரம். இந்த இலட்சியம் ஆன்மீகம், அரசியல் இரண்டையும் இணைப்பது. அரசியலின் ஆன்மீக வடிவம் என்றும் கூறலாம். தளைகளிலிருந்து இம்மையிலும் விடுபட்டு மனித உயிரி தன்னிச்சையாக இயங்குவதே அதற்கான பெருமை.

விடுதலை அல்லது சுதந்திரம் என்றால் என்ன?

சுதந்திரம் என்ற சமஸ்கிருத மூலம்கொண்ட சொல், சுயமாகச் செயல்படும்தன்மையை குறிக்கிறது. யார் சொல்லுக்கும் கட்டுப்பட்டு செயல்படாமல் தன் மனோதர்மப்படி செயல்படும் தன்மையைக் குறிப்பது. விடுதலை என்ற தமிழ் வார்த்தை மேலும் அழகானது. அது விடுதல் என்ற செயலைக் குறிக்கிறது. ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் சிட்டுக்குருவியைப் போலே’ என்ற பாரதியின் வரியில் ஆன்மீகமும், அரசியலும் இணைகிறது. ஒவ்வொரு மனித உயிரியும் தன்னிச்சைப்படி மகிழ்வுடன் வாழ்வதற்கான சாத்தியங்களை சமூக இயக்கம் உறுதி செய்வதே உயரிய இலட்சியம் எனலாம்.

இன்னம் விரிவாகச் சொன்னால், சமூகம் ஒரு கட்டடம்போல செயல்பட வேண்டும். வெளியே மழை பெய்தாலோ, புயல் அடித்தாலோ, வெயில் சுட்டெரித்தாலோ ஒரு கட்டடம் பாதுகாப்பளித்து நம்மைக் காக்கிறது. நாம் அந்தக் கட்டடத்தை நம் செயல்பாட்டைக் குறுக்குவதாகக் கூறமாட்டோம். அது நம்மை எதிர்மறை சூழலிருந்து பாதுகாத்து நம் விருப்பப்படி செயல்பட அனுமதிக்கிறது. கொட்டும் மழையில், புயலில் பயணம் செய்யாமல் இந்த கட்டடம் என்னை சிறைப்படுத்துகிறதே என்று யாரும் சொல்லமாட்டார்கள்.

அதுபோல, சமூகம் என்ற கூட்டியக்கம், நம்மை பல்வேறு எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாத்து அந்த சமூகத்தின் எல்லைகளுக்குள் நம் சுதந்திர இயக்கத்தை உறுதி செய்கிறது. குழந்தையாக இருந்து வளரும்போது நமக்குத் தேவையான உணவை, உறைவிடத்தை, கல்வியை, திறன்களைப் பெறுவதை சாத்தியமாக்குகிறது. வாலிபப் பருவத்தில் இணையைப் பெறுவதை ஒழுங்குபடுத்தி இயல்பாக்கம் செய்கிறது. குடும்ப வாழ்வை, உணர்ச்சி பாதுகாப்பை சாத்தியமாக்குகிறது. பிறருடன் திறன்களை, உழைப்பைப் பகிர்ந்து தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள உதவுகிறது. இதற்கெல்லாம் அப்பால் ஒருவரது சுய மேம்பாட்டை, ஆன்மீகத் தேடலை சாத்தியமாக்குகிறது. இப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால் நாம் பொதுவிதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

சமூகத்தின் பொதுவிதிகளை நாம், நம் சுதந்திரத்திற்கு, விடுதலைக்கு எதிரானதாக பார்க்கக்கூடாது. அவற்றிற்கு நாம் கட்டுப்பட்டால்தான் சமூகம் தரும் பாதுகாப்பில் நாம் முற்றிலுமான நிச்சயமின்மையில் இருந்து தப்பித்து சுதந்திரமாக வாழ முடியும். புதுவெள்ளம் வரும் ஆற்றில் கரையோரத்தில்தான் குளிக்கவேண்டும் என்பது கட்டுப்பாடுதான். ஆனால் ஆற்றின்நடுவே சுழலில் மாட்டிக்கொண்டால் ஆபத்துதான். எனவே சமூகக் கட்டுப்பாடுகள் சுதந்திரத்திற்கு, விடுதலைக்கு எதிரானவை அல்ல. அவையே பாதுகாப்பான வெளியை நம் சுதந்திரச் செயல்பாட்டிற்கு உருவாக்கித் தருகின்றன.

இப்போது நாம் சுதந்திரம்குறித்த சிக்கலான ஒரு பகுதிக்கு வந்துவிட்டோம். இந்த சமூகக் கட்டடம் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்கலாம். ஆனால் அனைவருக்கும் தங்கள் சுதந்திரத்தை உணரும் வாய்ப்பை அளிக்கிறதா என்பது கேள்வி. துவக்கநிலை சமூக உருவாக்கங்கள் பலவும், சமூகக் கட்டடத்தை உருவாக்க பலரின் உழைப்பையும், அதன் பலனை அனுபவிக்க ஒரு சிறிய குழுவினரையும் தேர்ந்தெடுப்பதாக இருந்தது. ரோம சாம்ராஜ்யத்தில் ப்ளீப்ஸ் என்றும், பாட்ரீஷியன் என்றும் உருவான பிரிவினை இப்படிப்பட்டது. சாதாரண உழைக்கும் மக்கள் ப்ளீப்ஸ். செல்வந்தர்களான உயர்குடிப் பிறப்பாளர்கள் பாட்ரீஷியன் எனப்பட்டார்கள். ப்ளீப்ஸிற்கும் கீழே எந்த உரிமைகளும் இல்லாத அடிமைகள் இருந்தார்கள். அரசுருவாக்கம் நிகழ்ந்த எல்லா விவசாய உற்பத்தியை ஆதாரமாகக் கொண்ட சமூகங்களிலும் இதுபோன்ற மூன்று அல்லது நான்கு பிரிவினைகள் உண்டாயின. அடிமைகளும், உழைப்பாளர்களும் அவ்வப்போது கிளர்ந்து எழுந்தாலும், ஒருசில இடைக்கால மாறுதல்களுக்கு பிறகு மீண்டும் சமூக அடுக்குகள் நிலைபெற்றன. வடஇந்திய ஆரிய சமூகத்தில் இது வர்ணாஸ்ரம தர்மம் என்ற பெயரில் நால்வர்ண கோட்பாடாக உருவாகி தற்கால இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது. பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற படிநிலையும், சூத்திரர்களுக்கும் கீழே, அவர்ணர்கள் அல்லது பஞ்சமர்கள் என்ற கிட்டத்தட்ட அடிமைகள் போன்ற தீண்டத்தகாத மக்களும் உருவானார்கள்.

இவ்வாறான படிநிலையாக்கங்கள் சமூக உருப்பினர்களின் சுதந்திர இயக்கத்தை தொடர்ந்து கட்டுப்படுத்தும்போது, அவற்றிற்கு எதிராக கிளர்ச்சி இயக்கங்கள் உருவாகும். அவை ஒரு புதிய மானுடக் குழுமமாக வடிவம் கொள்ளும். இந்தப் படிநிலை சமூகம், கிளர்ந்தெழும் குழுமம் இரண்டையும் இணைத்து மானுடவியலாளர் விக்டர் டர்னர் ஒரு சுழற்சிக் கோட்பாட்டை உருவாக்கினார். படிநிலையாக்கம் நிலைபெற்ற சமூகத்தை சொஸைட்டாஸ் என்றும், அதை எதிர்த்துக் கிளர்ந்த இயக்கத்தை கம்யூனிட்டாஸ் என்றும் பெயரிட்டார். எந்தவொரு கம்யூனிட்டாஸும் மீண்டும் ஒரு சொசைட்டாஸை உருவாக்கும் என்றும் கோட்பாட்டாக்கம் செய்தார். அதாவது, சமூகக் கட்டமைப்பு இறுக்கமடையும்போது, சுதந்திரக் காற்று வேண்டி ஒரு உடைப்பு, தோன்றுகிறது. அந்த உடைப்பு ஒரு திரவமான சூழ்நிலையை தோற்றுவிக்கும்போது பல சமூக மாறுதல்கள் நிகழலாம். மீண்டும் அந்த திரவநிலை திடப்பட்டு சமூக அமைப்பு உறுதிபெறும்.

நமக்கு அருகாமையில் ஒரு சிறந்த உதாரணம் கூறவேண்டுமென்றால், பசவர் அல்லது பசவண்ணா என்ற அருளாளரால் கர்நாடகாவில் தோற்றுவிக்கப்பட்ட வீரசைவ இயக்கம், ஜாதி மறுப்பு இயக்கமாக உருவானது. அக்கம்மாதேவி என்ற பெண்பாற் புலவரை உருவாக்கியது. பல சமத்துவ சிந்தனைகளைப் பேசியது. அதுவே பின்னாளில் லிங்காயத்து மடங்களாக நிறுவன வடிவம்கொண்டு, ஒரு நிலஉடமை ஜாதியாகி பிறரை ஒடுக்கும் பிற்போக்கு சக்தியானது. தற்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, லிங்காயத்துகளின் ஆதரவை பெற்ற தலைவராக இருக்கிறார். பார்ப்பனீய இந்துத்துவ அரசியலுக்கு துணை நிற்கிறார்.

அடிப்படையில் சமூகம், ஆங்கிலத்தில் சொஸைட்டி என்பது, பல்வேறு குழுக்களும் இணைந்து வாழ்வது. குழுமம், கம்யூனிட்டி என்பது மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட அடிப்படையில் ஒன்றுபட்டு இயங்குவது. சமூகத்தில் பல உறுப்புகளும், முரண்களும், படிநிலையும் இருக்கும். குழுமத்தில் சமநிலையும், ஒற்றைத்தன்மையும் இருக்கும். படிநிலை சமூகத்தில் ஒரு வெடிப்பு தோன்றி பலரும் இணைந்து குழுமமாக மாறிச் செயல்பட்டு மீண்டும் சமூகத்தில் ஒரு படிநிலையாக இணைவார்கள் எனலாம். சிலசமயங்களில் நீண்ட காலம் சமூக அமைப்புக்கு வெளியே இனக்குழுக்குள் நாடோடிகளாகத் திரிவதும் நிகழலாம்.

இவ்வாறான சமூக வடிவமைப்புகளை கட்டி நிறுத்துவது அரசு. அரசர்கள், ஆலோசகர்கள், மத குருமார்கள், போர்ப்படை தளபதிகள் என ஒரு அரண்மனை கட்டமைப்பு சமூகத்தின் ஒழுங்கைப் பராமரிக்கிறது. சமூகம்தரும் பாதுகாப்பான வெளியின் அரணாக அரசு அமைகிறது. மனித சமூகங்கள் அவை வாழும் பிரதேசம் சார்ந்து அரசுகளை உருவாக்கிக் கொண்டன. இதில் பெரிய பிரச்சினை என்னவென்றால் இனக்குழுக்கள் காலம் முதலே ஒரு அரசன் அல்லது அரசு, இன்னொரு அரசன் அல்லது அரசின்மீது போர் தொடுத்து வெல்ல முயல்வதுதான். மனித சுதந்திரத்திற்கு இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஒரு இனக்குழுவையோ, சமூகத்தையோ இன்னொரு இனக்குழு அல்லது சமூகம் போரில் வென்றால், வென்றவர்கள் தோற்றவர்களை அடிமைப்படுத்துவார்கள். இவ்வாறு பல குழுக்களை, சமூகங்களை அடிமைப்படுத்தும்போது உபரி உற்பத்தி அதிகமாகி, வெல்லுகின்ற அரசனின்கீழுள்ள உயர்குடிச் சமூகம் அதிக சுதந்திரத்தை சுவாசிக்கும். அவர்கள் மகிழ்ச்சியாக கல்வி, கேள்விகளில், கலைகளில் ஈடுபடுவார்கள். ஒருசிலரின் விடுதலை வேட்கை வளம்பெற பலருடைய அடிமைநிலை உறுதி செய்யப்படவேண்டும் என்பதே சமூக இயற்கையாக விளங்கியது எனலாம். ஆனால் ஜாதி அமைப்பு போன்ற கலாசார ஏற்பாடுகளில் அடிமையாக இருப்பதும் ஒரு நன்னெறி என்று கூறப்பட்டு, அடிமை அறம் ஒன்றும் உருவாகி பலரும் கீழ்படிந்து நடக்க உளப்பூர்வமாகவே சம்மதிக்கும் நிலையும் சாத்தியப்படுத்தப்பட்டது. சிற்றரசர்கள், பேரரசர்கள் என்பது போன்ற படிநிலைகளும் சாத்தியமாகிப் பேரரசுகள் பெரிய ஆலயங்களையும் மாளிகைகளையும் உருவாக்கின.

போரும் அமைதியும்

அரசமைப்பின் பிரச்சினை இரண்டுவிதமான தாகியது. ஒன்று, உள்முகமாக சமூக ஒழுங்கமைப்பின் பிரச்சினைகளால் ஏற்படக்கூடிய வெடிப்புகள், உடைப்புகள், கலகங்கள். ஆனால் அதைவிட தீவிரமான பிரச்சினை வெளிமுகமானது; பிற அரசர்கள், பேரரசர்களின் படையெடுப்பு. போர் என்பதும், போர்த் தொழில் என்பதும் தவிர்க்கமுடியாத வாழ்வியல் அம்சமாக விளங்கியன. அரசர்கள் பொதுவாக நிலையான ராணுவத்தை பேணாததால், குடிமக்கள் குறிப்பாக விவசாயிகள், படைதிரட்டப்படும்போது போருக்குச் சென்றார்கள். போர் என்பது வீரம், தியாகம் என சில இலட்சியங்களை உருவாக்கினாலும், அது உடல் பலம், வன்முறை சார்ந்தே இருந்ததால் அது விடுதலையாகவோ, சுதந்திரமாகவோ சிறப்பிக்கப்படுவது கடினமாகத்தான் இருந்தது. ஒரு துறவியின் விடுதலை நாட்டம் போர்வீரனின் விடுதலை நாட்டத்தைவிட சிறந்ததாகவே இருந்தது. போரில் உயிரை பணயம்வைக்கும் வீரர்கள், அதற்குப் பதிலீடாக பாலியல் துய்ப்பையும், உணவு, மது முதலிய துய்ப்புகளையும் நாடுபவர்களாகவும் இருந்ததால் போர்த் தொழில் இலட்சியபூர்வமானது என்பது கேள்விக்குரியதுதான். ஆயின் புறநானூறு போன்ற இலக்கியப் பிரதிகளில் ஒருவனது சமூகத்தை, அரசைக் காக்க, மாற்றாரிடம் அடிமைப்படாமல் இருக்க போருக்குச் செல்வது உயர் ஒழுக்கமாக, இலட்சியமாக கூறப்பட்டுள்ளதும் உண்மைதான்.

மானுட இலட்சியங்கள் துலக்கம்பெற உடல்சார்ந்த தேவைகள் எளிதில் நிறைவடைந்து, பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு அமைதியான வாழ்வியல் சூழலே உகந்தது என்பதால் போரும், சமூக சீர்குலைவுகளும் எதிர்மறையானதாகவே பார்க்கப்பட்டன. வரலாற்று நோக்கு என்பது உருவானபோது ஒரு பேரரசு இருநூறு ஆண்டுகாலம் நிலைத்து, உள்நாட்டு சமூகம் அமைதியான, நிலையான வாழ்வினை அனுபவிப்பதே பொற்காலமாக கருதப்பட்டது. அத்தகைய காலங்களில் அறிவுச் செயல்பாடுகளும், கலைச்செயல்பாடுகளும் செழித்தோங்கின. உற்பத்தியும், வளமும் பெருகின. வாழ்க்கை மேம்பட்டது. உழைப்பாளர்களும், அடிமைகளும்கூட நிம்மதியான வாழ்வினை அனுபவித்தார்கள். வாழ்வியல் தேவைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நிச்சயமற்று, நிம்மதியற்று அலைய நேர்வது மானுட மாண்பிற்கு எதிரானதாகவும், அமைதியும், ஒழுங்கும் பேணப்படும் சமூகம் சிறப்பானதாகவும் அறியப்பட்டது. இதில் பெரிய முரண் அல்லது சிக்கல் என்னவென்றால் அமைதி தவழும் சமூகம் ஏதோ சில அடக்குமுறைகளாலேயே கட்டமைக்கப்படக் கூடியதாக இருந்தது. அதனால் போரும், அமைதியும் வாழ்வின் இருபக்கங்களாகவே இருந்தன.

இந்தப் பேரரசு விளையாட்டில் உற்பத்தி, உபரிகள் பரிமாற்றம் அதாவது வர்த்தகம், மத நம்பிக்கைகள், மத நிறுவனங்கள், அரசவை, அதுசார்ந்த அறிவாளிகள், போர் இயந்திரங்கள் ஆகிய பல அம்சங்கள் கலந்து முயங்கின. மனிதர்களின் கூட்டியக்கத்தை சாத்தியப்படுத்துவதில் மதம் முக்கியப் பங்கினை வகித்தது. எனவே, அரசும் மத நிறுவனங்களும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தன. சமூக ஒழுங்கை நிலைபெறச் செய்வதும், அதன் மூலம் மானுட வாழ்வை மேம்படச் செய்வதுமான இலட்சியத்தை நோக்கியே வர்த்தகம், மதம், அரசு, போர் இயந்திரங்கள் எல்லாம் இயங்குவதாகக் கருதப்பட்டது. ஆனால் இவை எல்லாவற்றிலுமே மனித பலவீனங்கள், சுயத்தின் பதற்றம், பொறாமை, ஆதிக்க வெறி ஆகியவை புகுந்து சீர்குலைவை உருவாக்கி வந்தன. அதனால் போர்களும் அதிகாரப் போட்டிகளும் கலவரங்களும் அமைதியான வாழ்வை நிலைபெறச் செய்யாமல் இருந்து வந்தன.

பேரரசர்கள் எல்லோருமே, தங்கள் அரசை கூடியவரை விரிவாக்கம் செய்து, மிகப்பெரிய நிலப்பகுதியை, மக்கள் தொகையை தங்கள் ஆட்சியின்கீழ் கொண்டுவருவதன் மூலம் நிலைத்த ஆட்சியை, சமூக ஒழுங்கை உருவாக்கலாம் என நினைத்தனர். கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர் மிகப்பெரிய படையுடன் பாரசீகம் வந்து வெற்றிபெற்று இந்தியா வரை வந்துவிட்டான். கிரேக்க சாம்ராஜ்யம் பெரும் விரிவுகண்டது. ரோம சாராஜ்யம் ஐரோப்பாவின் பல பகுதிகளையும், எகிப்தையும் கைப்பற்றியது. ரோம சாம்ராஜ்ய விரிவாக்கத்தில் அடங்கிய ஜெருசலத்தில் ஏசு பிறந்தார். சோழ சாம்ராஜ்யம் பன்னிரண்டாம் நுற்றாண்டில் பெரும் விரிவுகண்டு மலேசியா, கம்போடியா என்று கிழக்கில் தன் ஆதிக்கத்தைச் செலுத்தியது. இவையெல்லாம் நிலைத்த சமூக அமைப்புகளை உருவாக்க முடியவில்லை என்பதுடன், பெரிய போர் இயந்திரங்களைச் சார்ந்தே இயங்க வேண்டியிருந்தது.

மறுமலர்ச்சி காலமும், மானுடவாதமும்

இதுவரை நான் எழுதியதுபோல, உலக வரலாற்றை எழுதிப் பார்ப்பதே மானுடவாத நோக்குதான். இது என்னவென்றால், எந்த ஒரு மனிதரும் அவர் அறிந்த மொழியில் தகவல்களைச் சேகரித்துக்கொண்டு சிந்தித்தாலும் அந்தச் சிந்தனைக்கு மானுட சமூகம் என்ற அளவில் பொதுத்தன்மை உண்டு என்ற நோக்கு. மனித இனம், பல்வேறு மொழி பேசுபவர்களாகவும், பல்வேறு பிரதேசங்களில் வசிப்பவர்களாகவும், பல மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு இனங்களாக அறியப்பட்டாலும் அவர்கள் இலட்சியங்களுக்கு பொதுத்தன்மை உண்டு என்ற சிந்தனை. இது மனிதநேயமாக முன்வைக்கப்பட்டாலும், இதிலிருந்தே மானுடவாதமும் துவங்குகிறது. மனிதன் விசேஷ ஆற்றல்கள் உள்ள உயிரி. அவனை கடவுளோ, இயற்கையோ உருவாக்கியிருந்தாலும் தன்னிச்சையாக செயல்படும் பிரக்ஞை உடையவன். அதுவே, அவன் வாழ்வின் அடிப்படை என்பன போன்ற எண்ணங்கள் வலுப்பெற்றதைத்தான் மறுமலர்ச்சி என்றும், மானுடவாதம் என்றும் அழைக்கிறோம். மனிதனின் செயல்படும் சுதந்திரம் எல்லையற்றது என்றும், அவன் எவற்றினாலும் கட்டுப்படுத்த முடியாதவன் என்றும் எண்ணங்கள் பெருகின.

இவ்வாறான மானுடப் பொதுமை நோக்கில் மனிதனுக்கு என்று தனித்த சாராம்சம் ஏற்படுகிறது. அது வேறு எந்த அடையாளத்திலும் அடங்காத மானுடப் பொதுமை கொண்டதாக மாறுகிறது. நாங்கள் கும்பிடும் தெய்வத்தைக் கும்பிடாதவர்கள் காட்டுமிராண்டிகள், நரகத்திற்கு போவார்கள் என்பது போன்ற எண்ணங்கள் பக்குவமற்றவை, சிறுபிள்ளைத்தனமானவை என்ற எண்ணம் உருவாகிறது. அனுமனை வழிபடுவதை, குரங்கை வழிபடுவதாக ஹெகல், மார்க்ஸ் ஆகியோர் கருதியதெல்லாம் தவறென்று காலப்போக்கில் உணரப்படுகிறது. யார் எந்த தெய்வத்தை வழிபட்டாலும், படாவிட்டாலும் அதெல்லாம் மானுட இலட்சிய உருவாக்கத்திற்கு தடையல்ல என்பதும், அவரவர்க்கு அவரவர் பாதை என்ற பரந்துபட்ட நோக்கமே முதிர்ச்சி என்பதும் பெறப்பட்டது. மானுடவாதம் இறைமை குறித்த பிரச்சினையை மானுடப் பொதுமையின் இலட்சிய நோக்குகளுக்கு தடையல்ல என்று சுலபமாக கடந்தது. கடவுள், மத நம்பிக்கையெல்லாம் தனிப்பட்டவரின் அக வாழ்க்கை பிரச்சினை என்றும் சுதந்திரவாத மனிதனின் பொதுவாழ்க்கை இலட்சியங்களுக்கு அது பொருட்டல்ல என்று எண்ண முடிந்தது. ஆனால் இறைமையை சமாளித்தபடி சுலபமாக இறையாண்மையைச் சமாளிக்க முடியவில்லை.

என்ன செய்வது இந்த இறையாண்மையை?

நாம் மேலே அரசமைப்பு குறித்து விவாதித்தபோது கவனம் கொண்டது இருவகையான தேவைகள்: உள்முகத் தேவையான ஒழுங்கைப் பராமரிப்பது, நிர்வாகம், வெளிமுகத் தேவையாக பிறர் ஆக்கிரமிப்பிலிருந்து இந்தச் சமூக ஒழுங்கைப் பாதுகாப்பது. இதனால் இறையாண்மை இரண்டு முகங்களைக் கொண்டதாக இருக்கிறது. ஒன்று சமூக கட்டமைப்பினை நிர்வகிக்கும் சுயாட்சி முகம். மற்றொன்று அந்நிய சக்திகளுடன் பொருதும் போர் இயந்திர முகம். சுயாட்சியை நாம் இறையாண்மையின் உள்ளடக்கத்தின் வடிவம் எனலாம். போர் இயந்திர முகம் வெளிப்பாட்டு வடிவம்.

மானுடப் பொதுமை, அதன் சாராம்சம், இலட்சிய உருவாக்கத்தின் பொதுமை ஆகியவை மேலோங்கிய நவீன காலத்தில், போர் இயந்திர இறையாண்மை தேவையற்ற பரிமாணம் என்பதாகவே தோன்றியது. பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உலகக் குடிமகன் என்ற கருத்தாக்கம் தோன்றியது. உலகின் பண்பாடுகள், கலாசாரங்கள் எல்லாம் மானுட மேன்மையை உறுதி செய்பவை என்பதால் உலகளாவிய சமாதான சகவாழ்வே பொருத்தம் என்ற எண்ணம் உருவாகத் துவங்கியது.

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்தே தனிப்பட்ட மனிதர்களின் செல்வம் என்பது வங்கிகள்மூலம் தொகுக்கப்பட்டு பொது முதலீடாக மாறும் நடைமுறை வலுப்பெறத் துவங்கியது. முதலீட்டிய சக்திகள் அரசுகளுக்குப் பெரும் ஆதரவாக மாறின. முதலீட்டின் நோக்கம் தன்னைத்தானே பெருக்கிக் கொள்வது என்பதால் கப்பல் பயணங்கள், வர்த்தகம், பொருள் உற்பத்தி, போர்கள் என எல்லாவற்றிற்கும் முதலீடு பயன்படத் துவங்கியது. தனிப்பட்ட செல்வந்தர்கள், அவர்கள் அடையும் இலாபம் போன்றவை தொடர்ந்தாலும், பொது முதலீடு அதன் பெருக்கம் என்பது முக்கியத்துவம் அடையத் துவங்கியது. இது இறையாண்மையின் பரிமாணத்தை பொருளியல் நிர்வாகம் சார்ந்ததாக மாற்றியது. முக்கியமாக, நாணயங்கள் அச்சடிப்பது என்பது வர்த்தகத்திற்கு உதவுவதாக இருந்த நிலையிலிருந்து பொருளாதார நிர்வாகமாக மாறத் துவங்கியது. நாணயங்களின் குறியீட்டுத்தன்மை அதிகரித்தது.

முதலீட்டியத்தின் துணையுடன் தொழிற்புரட்சி உருவானதும் மானுட வாழ்க்கை துரிதமாக புதிய பரிமாணங்களை அடையத் துவங்கியது. இயந்திரங்கள் உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்தன. கச்சாப் பொருள் தேவையும், உற்பத்தியான பொருள்களை விற்க சந்தைகளும் தேவைப்பட்டபோது இந்தியா போன்ற ஐரோப்பிய நாடுகளின் காலனிகள் கைகொடுத்தன. ஐரோப்பா, தொழில்வளம் பெருகி உலகின் உற்பத்திக் கேந்திரமாக வடிவம் கொண்டது.

இந்த புதிய வாழ்வியல் பரிமாணத்தில், தனிநபர்களே சுதந்திரத்திற்கு அருகதையானவர்கள் என்ற எண்ணம் வலுப்பட்டு, தனிநபர்களின் பிரதிநிதிகளே அரசாள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுவே மக்களாட்சி என்ற வடிவம் கொண்டது. அமெரிக்க, ஃபிரெஞ்சு புரட்சிகள், இங்கிலாந்தில் வலுப்பெற்ற பாராளுமன்றத்தின் மக்களவை ஆகியவை புதிய தேசிய அரசுகளை உருவாக்கின. இந்த தேசிய அரசுகள் முதலீட்டிய நடைமுறைகளுடன் வலுவாக தங்களை பிணைத்துக் கொண்டன.

முதலீட்டிய நடவடிக்கைகளில் ஏற்பட்ட போட்டிகள் தேசிய அரசுகளிடையே முரண்களைத் தோற்றுவித்தன. முன்னம் அரசர்களுக்கிடையே போர்கள் நிகழ்ந்ததைப் போல தேசிய அரசுகளிடையேயும் போர்கள் நிகழத் துவங்கின. புதிய தொழில்நுட்பங்கள் புதிய ஆயுதங்களையும் உருவாக்கின. இஞ்சின் என்ற விசை உருவாக்கும் தொழில்நுட்பத்தால் ரயில், கார் போன்ற தானியங்கி வாகனங்கள் தோன்றின. கப்பல்கள் நீராவி விசையால் ஓடத் துவங்கியது எல்லாம் புதிய பரிமாணங்களைத் தோற்றுவித்தன.

இந்த வரலாற்றுப்போக்கின் முக்கிய முரண் இரண்டு சாத்தியங்களுக்கு இடையிலானது. மானுடப் பொதுமையை இலட்சியமாகக்கொண்ட நிர்வாக இறையாண்மைகளின் கூட்டமைப்பான உலகு. மற்றொன்று, போர் இயந்திர இறையாண்மைகளான தேசிய அரசுகளுக்கு இடையிலான ஆதிக்கப் போட்டி.

இந்த முரண் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான, திடப்பட்ட அரசியல் சித்தாந்தங்களுக்கு இடையிலும் ஊடுருவியது. ஒன்று, தனி உடமையை அடிப்படையாகக் கொண்ட சுதந்திரவாத சித்தாந்தம். இதில் உரிமையுள்ள தனி நபர் உலகின் பல நாடுகளிலும் தொழில்புரியும் உரிமைகொண்ட, வர்த்தகம் செய்யும் உரிமைகொண்ட, உலகளாவிய சிவில் சமூக உருவாக்கத்தை ஆதரிக்கும்போக்கும், அதற்குமாறாக ஒரு தேசத்தின் எல்லைகளுக்குள் உற்பத்தியையும், நுகர்வையும் ஒழுங்குபடுத்தும்போக்கும் உருவாகின.

மற்றொரு முக்கியமான சித்தாந்தம் பொது உடமை. இந்தச் சித்தாந்தம், மானுட பொதுமையை உழைப்பு என்ற செயல்பாட்டின் கீழ் பொதுமைப்படுத்தியது. உழைப்பும், உற்பத்தியும், நுகர்வும் என்றுமே கூட்டியக்கமாக இருந்து வந்ததால் தனிநபர் முதலாளிகள், வங்கிகள், வணிக் குழுமங்கள் ஆகியவை முதலீட்டை கட்டுப்படுத்தி பெருக்குவதும், தொழிலாளர்களைச் சுரண்டுவதுமான நிலையை மாற்றி தொழிலாளர்களே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால், உபரி உற்பத்தியை மீண்டும், மீண்டும் மூலதனமாக, முதலீடாக மாற்றாமல் மனிதர்களின் உழைப்பாற்றலுக்கும், தேவைகளுக்கும் சரியான சமன்பாட்டை நிறுவி உழைப்புச் சுரண்டல், உபரி உற்பத்தி, வர்த்தகப் போட்டி ஆகியவற்றை தவிர்த்து சமூக இயக்கத்தினை உழைப்பு, உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றினுள் இழுப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தின் தேவையே குறைத்துவிடலாம் என்றெல்லாம் எண்ணியது. அடிப்படையிலேயே இது சர்வதேச மானுட இலட்சியமாகவே உருவகம் கொண்டது என்பதால் ‘உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!’ என்ற அறைகூவலுடன் கம்யூனிஸ்டு மானிஃபெஸ்டோ நிறைவு பெற்றது.

இங்கே நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியது, தனி உடமை சார்ந்த சுதந்திரவாதமும் சரி, பொது உடமை சார்ந்த புரட்சிவாதமும் சரி, உலகளாவிய மானுட பொதுமையை சிந்திக்கவே செய்தன என்பதுதான். நடைமுறையில் நிலவிய கலாசார வேறுபாடுகள், மொழி, மதம் ஆகியவற்றின் மாறுபாடுகள், வாழ்க்கை முறைகளில் முற்றிலும் மாறுபட்ட (அதாவது ‘பின் தங்கிய’ என்று கருதப்பட்ட) ஆதிவாசிக் குழுக்கள் எனப் பல இடர்பாடுகள் மானுடப் பொதுமையின்முன் தோன்றினாலும், அனைத்திற்கும் ஊடாக அந்தப் பொதுமையை கண்டறிந்து உலக சமுதாயம் அமைக்க முடியும் என்ற அவா உருவானது.

இருபதாம் நூற்றாண்டின் கதை

மானுடப் பொதுமை குறித்த அவாவிற்கும், தேசிய அரசுகளின் ஆதிக்கப் போட்டிக்குமான முரண், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மிகப் பெரியதாக வெடித்தது. மனிதர்களின் நீண்ட நாள் கனவுகளான வானத்தில் பறந்து பயணம்செய்வது, அசைவுகளைப் பதிவு செய்து மீண்டும் பிம்பங்களின் அசைவாகப் பார்த்து மகிழ்வது போன்ற மிகப்பெரிய சாதனைகள் நிகழும் அற்புதத் தருணமாகத்தான் இருபதாம் நூற்றாண்டு துவங்கியது. சுதந்திரவாதிகளும் சரி, பொதுவுடமைவாதிகளும் சரி, காலனிய பகுதிகளின் விடுதலை நாடும் சிந்தனையாளர்களும் சரி, புதிய நூற்றாண்டை மிகுந்த நம்பிக்கைகளுடனேயே எதிர்கொண்டார்கள்.

ஆனால் பெரிய பின்னடைவாக 1914ஆம் ஆண்டு உலகப்போர் துவங்கியது. ஐரோப்பிய தேசிய அரசுகள் இரு அணிகளாகப் பிரிந்து, ஆசிய அரசுகளையும், காலனிய ஆட்சி நிலவிய பகுதிகளையும் இணைத்துக்கொண்டு உலகளாவிய போர் நிகழ்ந்தது. நவீன ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும், துவக்ககால விமானங்களையும் பயன்படுத்தி ஐந்தாண்டுகள் நிகழ்ந்த இந்தப் போர் ஏராளமான உயிர்களைக் குடித்தது. ஐரோப்பிய நாடுகள் பல பெரும் சேதத்தை சந்தித்தன.

மிகப்பெரிய பொருளாதார வல்லரசாக உருவாகிவந்த அமெரிக்கா, இந்தப் போரில் முதலில் நேரடியாக பங்கு கொள்ளவில்லை. அமெரிக்கர்கள் உலகின் சச்சரவுகளிலிருந்து தனித்து விலகி ஒரு சுதந்திர குடியரசை உருவாக்குவதே இலட்சியமென நம்பினார்கள். ஆனால் பெரும்பாலானோர் தங்கள் பூர்வீக நாடான இங்கிலாந்தை போரில் ஆதரிக்க விரும்பினார்கள். இறுதியில் அமெரிக்காவும் போரில் நுழைந்தது. ஆனால் இனி, போர்களே இல்லாத உலகை உருவாக்குவதே இலட்சியம் என்றும் கூறியது. அதேபோல, போர் முடிந்ததும் லீக் ஆஃப் நேஷன்ஸ் என்ற உலக நாடுகளின் பொதுமன்றத்தை தோற்றுவித்தது.

இந்தப் போரின் இறுதியில் ரஷ்யாவில் போல்ஷ்விக் புரட்சி நடந்து, கம்யூனிஸ அரசு அமைந்தது. உலகம் முழுவதும் இந்தப் புரட்சி புதிய கனவுகளை உருவாக்கியது. அரசர்கள் அற்ற, பிரபுக்களும், மதகுருமார்களும் பங்கு பெறாத தொழிலாளர் அமைப்புகளே அதிகாரம் செலுத்தும் சோவியத் ஆட்சி முறை மிகப்பெரிய சாத்தியத்தை மானுடத்தின் முன்னே திறந்துவைத்தது.

ஆனால் போரில் தோற்று கடும் அபராதங்கள் விதிக்கப்பட்ட ஜெர்மனியில் நாஸி கட்சி உருவாகி, பத்தாண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் தலைவரானார். இத்தாலியில் பாசிசம் ஆட்சியைப் பிடித்து முசோலினி அதன் அதிபரானார். முதல் உலகப்போர் முடிந்து இருபதாண்டுகள் இடைவெளியில் மீண்டும் உலகளாவிய போர் இரு அணிகளாகத் திரண்ட நாடுகளுக்கு இடையே மூண்டது. போர் விமானங்களின் பயன்பாடு முன்னைவிட அதிகமாக இருந்தது.

துவக்கத்தில் ஹிட்லருடன் ஸ்டாலின் உடன்படிக்கை செய்துகொண்டு ரஷ்யாவை பாதுகாக்க முனைந்தார். ஆனாலும் இந்த முயற்சி தோல்வியடைந்து ஹிட்லர் ரஷ்யாவின்மீது போர் தொடுத்தார். நாஸிசம், பாசிசம் ஆகிய இரு சித்தாந்தங்களுமே தீவிரமான தேசிய, இன அடையாளங்களை நம்பியதால், தொழிலாளர் வர்க்க உலகப் பொதுமையை முன்மொழிந்த கம்யூனிஸ தத்துவத்தை அறவே வெறுத்தன. தனி உடமை, சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய உலகப் பொதுமையை நாடிய சுதந்திரவாத அமெரிக்காவும், பொது உடமை, தொழிலாளர் வர்க்க ஆட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய உலகப் பொதுமையை நாடிய ரஷ்யாவும் போரின் நிர்பந்தத்தால் இணைந்து இறுதியில் முசோலினியையும், ஹிட்லரையும் தோற்கடித்தனர். முசோலினி, வீதியில் கிளர்ச்சிக்காரர்களால் தூக்கிலிடப்பட்டார். ஹிட்லர், பாதாள அறையில் தற்கொலை செய்துகொண்டார். அவர்களுடன் அணியில் இருந்த மூன்றாவது நாடான ஜப்பானை பணியவைக்க அமெரிக்கா முதன்முதலில் அணுகுண்டுகளை பயன்படுத்தியது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின்மேல் வீசப்பட்ட அணுகுண்டு விளைவித்த பயங்கர சேதம் உலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஹிட்லர், கேஸ் சேம்பர்களை உருவாக்கி யூதர்களைக் கொன்று குவித்ததும், அமெரிக்க அணுகுண்டுகள் ஏற்படுத்திய பேரழிவும் உலகப் பொதுமை குறித்த முற்போக்கு கனவுகளை பெரிதும் வர்ணமிழக்கச் செய்தன. ஆனால் உலகெங்கும் பரவிய புதிய தகவல் ஊடக வலைப்பின்னல், காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு உருவாகிய இந்தியா போன்ற புதிய தேசங்கள், சீனப் புரட்சி, அனைத்து நாடுகளும் பங்கேற்கும் புதிய ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை புதிய நம்பிக்கைகளை உருவாக்கின. உலகம் முழுவதும் தேசிய குடியரசுகளாக பிரிக்கப்பட்டு அவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலில் இணைந்து பணியாற்றும் என்ற புதிய ஏற்பாடு தோன்றியது.

இரண்டாம் உலகப் போருக்கு தனிப்பெரும் காரணமாக அமைந்த ஹிட்லரின் ஜெர்மனியின் ஒருபகுதியை ரஷ்யாவும், இன்னொரு பகுதியை அமெரிக்காவும் கைப்பற்றின. அந்த இரு பகுதிகளையும் தனி நாடுகளாக தங்கள் தங்கள் மேற்பார்வையில் உருவாக்க முடிவு செய்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையே பெர்லின் நகரத்தில் கட்டப்பட்டதுதான் பெர்லின் சுவர். அது இரண்டு நாடுகளின் எல்லையாக 140 கிலோ மீட்டர் தூரம் நீண்டது. கிழக்கு ஜெர்மனி ரஷ்ய பொதுவுடமைக் கொள்கையைப் பின்பற்றியது. மேற்கு ஜெர்மனி அமெரிக்க தனியுடமைக் கொள்கையை பின்பற்றியது. எனவே, இந்த இரண்டு தத்துவங்களைப் பிரிக்கும் சுவராகவும் அது குறியீட்டு அர்த்தம் கொண்டது.

இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது அணுகுண்டுகள் பல்வேறு நாடுகளும் தயாரிக்கக் கூடியதாக இருந்தால், மீண்டும் போர் நிகழ்ந்தால் உலகமே அழிந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே, அறிவியக்கம் என்பது மானுடப் பொதுமையை முன்னெடுப்பதும், உலக நாடுகள் அனைத்தும் போரின்றி சமாதானமாக வாழ்வதும் அவசியம் என்ற எண்ணம் பெருகியது. ஆனால் தனி உடமை சுதந்திரவாதத்திற்கும், பொது உடமை புரட்சிவாதத்திற்குமான உலகளாவிய போட்டி பனிப்போர் என்ற மறைமுக யுத்தத்தையும், ஆயுதப் போட்டியையும் துவங்கிவைத்தது. வியட்நாம் யுத்தம் அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டு, பெரும் சிக்கலுக்கு உள்ளான உலக நிகழ்வாக மாறியது பனிப்போர் காலத்தின் முக்கிய நிகழ்வு. சிறிதும், பெரிதுமான போர்கள் அண்டை நாடுகளுக்கு இடையே நிகழ்ந்தாலும் அவை உலகளாவிய போர்களாக மாறவில்லை எனலாம்.

புரட்சியும், எதிர்புரட்சியும்

ரஷ்யாவும், சீனாவும் கம்யூனிஸ நாடுகளாக இருந்தாலும் அவை உபரி உற்பத்தியை முதலீடாக பயன்படுத்தியதால் அரசு முதலீட்டிய நாடுகளாகவே விளங்கின. அரசாங்கம் நல்ல முதலாளியாக இருந்ததுடன், நாட்டின் வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடையும்படி நிர்வகித்தன. ஆனாலும் அதிகாரம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் நிலைபெறத்தான் செய்தன. இதன் விளைவாக, மெள்ள, மெள்ள முதலீட்டிய நடைமுறைகள் அங்கும் வலுப்பெற்றன.

புரட்சி என்பதன் உண்மையான பொருளில் இறையாண்மை என்பது சுயநிர்வாக அலகாக மாறவேண்டும். அப்படி நிகழும்போது போர் என்பது தேவையற்றுப்போய், அனைத்து நாடுகளும் மெள்ள மெள்ள தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு கூட்டுறவுடன் வாழவேண்டும். இரண்டு உலகப் போர்களை உருவாக்கிய ஐரோப்பா, ஐரோப்பிய ஒன்றியம் என்ற புதிய அடையாளத்தை உருவாக்கியது. யூரோ என்ற பொது நாணயத்தை உருவாக்கியது. அது தேசிய அரசுகள் என்பதைக் கடந்த புதிய கூட்டுறவின் சாத்தியத்தை உணர்த்துவதாக இருந்தது.

எல்லா நாடுகளுமே அடையாளவாத நாடுகளாக இல்லாமல், எந்த ஒரு அடையாளம் கொண்டவர்களும் குடிமக்களாக இருக்கக்கூடிய நிலைதான் முதிர்ச்சியடைந்த அரசியல் ஏற்பாடு. இதனால் உலகின் பல நாடுகளிலும், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் குடியேற்றங்கள் பரவலாக நிகழ்ந்தன. குறிப்பாக, அமெரிக்கா என்றுமே குடியேறிகளால் உருவான நாடுதான். ஆங்கிலம் பேசுபவர்கள் பெரும்பாலோர் என்றாலும், பிற ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்தவர்கள் பலர் வந்துள்ளார்கள். லத்தினோ எனப்படும் தென்னமெரிக்க ஸ்பானிய மொழியினர் கணிசமாக உள்ளார்கள். ஆசியர்களும் கணிசமான அளவில் வாழ்கிறார்கள். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்கிறார்கள். அடையாளம் கடந்த தேசம் என்பதற்கு யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா என்பது நல்ல முன்மாதிரியாக விளங்கியது.

இன, மொழி, மத வேறுபாடுகள் கடந்து குடிமக்களாக ஒவ்வொரு தேசத்தினுள்ளும் மக்கள் ஒன்றுபடுவதும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் குறைவதும், அந்த தேசிய அரசுகள் போர் இயந்திர இறையாண்மைகளாக இல்லாமல், சுய நிர்வாக இறையாண்மைகளாக மாறுவதும், அந்த சுயநிர்வாக இறையாண்மைகள் நிர்வாகத்தை பொதுமைப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம்போல ஒன்றியங்கள் பெருகுவதும் போன்ற செயல்பாடுகள் முற்போக்கு எனவும், புரட்சிகரமானவை என்றும் கூறப்படலாம். ஏனெனில், மானுட சிந்தனையும், தர்க்கமும் பொதுநன்மை கருதி ஒன்றுபடுவதுதானே முற்போக்கு? ‘கீலீமீக்ஷீமீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ லீணீs ஸீஷீt தீமீமீஸீ தீக்ஷீஷீளீமீஸீ uஜீ வீஸீtஷீ யீக்ஷீணீரீனீமீஸீts தீஹ் ஸீணீக்ஷீக்ஷீஷீஷ் பீஷீனீமீstவீநீ ஷ்ணீறீறீs’ என்று ரவீந்திரநாத் தாகூர் சுதந்திரத்தின் சுவர்க்க பூமியை யாசித்தார். ‘மினீணீரீவீஸீமீ ணீறீறீ tலீமீ ஜீமீஷீஜீறீமீ, sலீணீக்ஷீவீஸீரீ ணீறீறீ tலீமீ ஷ்ஷீக்ஷீறீபீ’ என்று, தன் கனவை பகிர்ந்துகொள்ள அனைவரையும் அழைத்தார் ஜான் லென்னன். இவற்றை மனதில்கொண்டு நாம் கட்டுரையின் துவக்கத்தில் கண்ட நான்கு இடிப்புகள், தகர்ப்புகளுக்குச் செல்வோம்.

இருபத்தோராம் நூற்றாண்டின் உலகம்

கிழக்கு ஜெர்மனியின் அதிகார இயந்திரத்தால் கட்டிவைக்கப்படிருந்த மக்கள் கிளர்ந்து பெர்லின் சுவரை இடித்து புரட்சிகர நிகழ்வாக இருந்தாலும், அது ஜெர்மானிய தேசத்தின் புனர் நிர்மாணத்திற்கே இட்டுச் சென்றது. அதைத் தொடர்ந்து, சோவியத் ரஷ்யாவும் உடைந்து பல நாடுகள் ரஷ்யாவிலிருந்து பிரிந்தன. ரஷ்யா கம்யூனிஸத்தை கைவிட்டு முதலீட்டியத்தை கைக்கொண்டது. சீனா, கம்யூனிஸத்தை கைவிடவில்லை என்று கூறிக்கொண்டாலும், அமெரிக்க முதலீட்டியத்துடன் இறுக்கமாகப் பிணைந்து அரசு முதலீட்டிய நாடாக விளங்குகிறது.

தேர்தல் சார்ந்த மக்களாட்சியை நடைமுறைப்படுத்திய இந்தியா, உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு, தனி உடமை, அரசுடமை இரண்டும் கலந்த பொருளாதாரத்தை உருவாக்கிய மதச்சார்பற்ற சோஷலிஸ நாடு, அந்நிய முதலீட்டை வரவேற்றதுடன், இந்து மத அடையாள அரசியலுக்கும் இடம் கொடுக்கத் துவங்கியது. நானூறு ஆண்டுகளுக்குமேல் பழமையான பாபர் மசூதியை, அது ராமர் பிறந்த இடத்தில் இருந்த ராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டது என்ற பொய்யான வரலாற்றைப் புனைந்து இடித்து தள்ளியது, இந்து வெறியர்கள் கூட்டம். இதைத் தொடர்ந்து நாடெங்கும் இஸ்லாமியர்கள் மீது வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது.

சோவியத் ரஷ்யாவின் பிடியிலிருந்து ஆஃகானிஸ்தானை விடுவிக்க மதவாத குறுங்குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி தூண்டியது அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ. சோவியத் ஆதரவு அரசு வீழ்ந்தது. ஆனால் நாடு தனிநபர் இராணுவங்களிடமும், மதவாத குழுக்களிடமும் சிக்கியது. தாலிபான் என்ற அடிப்படைவாத அமைப்பு ஆட்சியைப் பிடித்தபோது அங்கு பாமியான் மலைத்தொடர்களில் செதுக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளை இஸ்லாமிய மதத்திற்கு எதிரான உருவ வழிபாடு என்றுகூறி வெடி வைத்து தகர்த்தது.

அமெரிக்க முதலீட்டிய கலாசாரத்தால் தங்கள் பண்பாடு சீரழிவதாகக் கருதிய அல் கொய்தா, அமெரிக்க இரட்டைக் கோபுரத்தை தகர்த்தது. இரண்டு உலகப் போர்களிலும் வடஅமெரிக்க நிலப்பகுதி தாக்கப்பட்டதில்லை. இரண்டாம் உலகப்போரில் பசிபிக் கடலில் இருந்த ஹவாய் தீவின் பேர்ல் ஹார்பரைத்தான் தாக்கியது ஜப்பான். வரலாற்றில் முதல்முறையாக வடஅமெரிக்க நிலப்பகுதியில் நிகழ்ந்த தாக்குதல் இரட்டைக் கோபுர தகர்ப்புதான்.

அமெரிக்கா இரண்டு நூற்றாண்டுகளாக பேசிவந்த புத்துலகக் கொள்கையெல்லாம் காற்றில் பறந்தது. வெள்ளை இனவெறியும், இஸ்லாமிய வெறுப்பும், வந்தேறிகள் மீதான வெறுப்பும் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. முற்போக்கு சக்திகள் என்னதான் முயன்றாலும் முதலில் ஆஃப்கானிஸ்தான்மீதும், தொடர்ந்து இராக்கின் மீதும் படையெடுத்தது அமெரிக்கா. போரில் நிகழ்ந்த அளப்பரிய அழிவுகளுக்கு முத்தாய்ப்பாக அபு காரிப் என்ற இராணுவச் சிறை முகாமில் அமெரிக்கப் போர் வீரர்கள் கைதிகளை சித்திரவதை செய்து விளையாடி மகிழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கின.

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஒற்றைத் துருவ உலகம் உருவானபோது, நெக்ரி, ஹார்ட் ஆகிய இடதுசாரி கோட்பாட்டாளர்கள் தேசிய அரசுகளின் காலம் முடிந்து உலக முதலீட்டியம் அமெரிக்க அரசை உலகப் பேரரசாக மாற்றி வருகின்றது எனவும், இனியான போராட்டம் சர்வதேச மக்கள் திரளுக்கும், உலகப் பேரரசுக்கும் இடையிலானது என்று ஒரு சித்திரத்தை முன்மொழிந்தனர். இதுவும் கூட மானுடப் பொதுமையினை அனுசரித்த கோட்பாடுதான். அமெரிக்க அரசு கருத்தியல் ஆதிக்கத்தை உலகின்மீது செலுத்தத் துவங்கியிருந்தது உண்மைதான்.

இதனால் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் தோன்றிய வெள்ளை தேசிய அடையாள வெறி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகெங்கும் அடையாளவாத தேசியங்கள் வலுப்பெற்றன. கறுப்பின மனிதரான பாரக் ஓபாமா அமெரிக்க அதிபர் ஆனாலும், அவரால் அமெரிக்க தேசிய மனப்போக்கை மாற்றி அமைக்க முடியவில்லை. அவருக்குப்பின், புலம்பெயர்வோர்மீது கடும் வெறுப்பினைக் கக்கும், மூர்க்கமான வலதுசாரி தேசியரான டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என இங்கிலாந்து மக்கள் வாக்களித்தனர். பிரிட்டன், எக்ஸிட் என்ற வார்த்தைகளை இணைத்து பிரெக்ஸிட் என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது. இதன் முக்கியக் காரணமும் குடியேற்றம் குறித்த அச்சம்தான். இங்கிலாந்திலும் அடையாளவாத பிற்போக்கு தேசியமே மேலோங்கி நிற்கிறது.

பாலஸ்தீனியர்களை நசுக்கும், ஒடுக்கும் போக்கை இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குர்து இன மக்களைத் தாக்கி அழிக்க நினைக்கும் சர்வாதிகாரி எர்டோகன் துருக்கியில் ஆண்டு வருகிறார். பர்மா ரொஹிங்க்யா முஸ்லிம்கள்மீது கடும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. சூடானில் பழைய இனக்குழு விரோதங்கள் முதலீட்டிய வளர்ச்சிப் பகிர்வில் தீவிரமடைந்து நெஞ்சம் நடுங்கும் படுகொலைகள் அரங்கேறின. உலகளாவிய மானுடப் பொதுமை என்பதற்கு நேரெதிராக அடையாளவாத தேசியங்களும், உள்நாட்டு யுத்தங்களுமே எங்கும் வலுப்பெறுகின்றன.

கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலுமே பெருமுதலீட்டிற்கு அனுசரணையான போக்கும், தொழிலாளர் விரோதப் போக்கும் அதிகரித்து வருகின்றன. கல்வியாளரும், பண்பாளருமான ஃபிரான்சின் அதிபர் மாக்ரோன் கூட, தொழிலாளர் விரோதப் போக்கையே கடைப்பிடிப்பதால் அங்கு போராட்டங்கள் வெடித்து வருகின்றன. முதலீடு ஒருசில நபர்களின் கையில் குவிந்துவருவதாக பிக்கெட்டி என்ற ஆய்வாளர் விரிவான தரவுகள் அடிப்படையில் எழுதியுள்ளார். முதலீடு ஒரு சிலரிடம் குவிகிறது என்றால் அதிகாரமும் ஒரு சில புள்ளிகளில்தான் குவியும் என்பது வெளிப்படையானது. இந்திய பொருளாதாரம் கடுமையான தேக்கத்தை சந்திக்கும் சூழலில் கடந்த ஆண்டு முகேஷ் அம்பானி 18 பில்லியன் டாலர் ஈட்டியுள்ளார் என்பதை புரிந்துகொள்ள வேண்டியநிலையில் இருக்கிறோம். இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் வலுப்பெறும்நிலையில் ஆதிக்கப் போட்டிகளும், போரும் தவிர்க்கமுடியாதவை.

உலகளாவிய பிற்போக்குவாத எதிர்புரட்சி அரசியல் சூழலில், சுற்றுச்சூழல் கடுமையாக சீர்குலைந்து வருவதைக் குறித்து கவலைப்பட யாரும் தயாரில்லை. ஒவ்வொரு ஆண்டும் புவி வெப்பமடைதலும், வாழ்வாதாரங்கள் சுருங்குவதும் தொடர்ந்து அதிகரிக்கின்றன. கிரேட்டா தன்பர்க் என்ற சிறுமியின் உணர்ச்சிகரமான உரைகள் உலகின் கவனத்தை ஈர்த்தாலும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் அந்தச் சிறுமியை எள்ளி நகையாட முடிகிறது. அவர்மீது சுற்றுச்சூழல் குறித்த குரலுக்கு செவிசாய்க்கும்படி செய்யவல்ல எந்த அழுத்தமும் இல்லை. அதேதான் எல்லா தேசிய அரசுகளின் நிலையும். பொருளாதார வளர்ச்சியே அவர்கள் அக்கறை. இயற்கைச் சூழல் நாசமாய்ப்போனால் கவலையில்லை.

வரலாற்று ஆசிரியர் ஹாப்ஸ்பாம், ஐரோப்பிய வரலாற்றில் 1789-1848 காலகட்டத்தை புரட்சியின் காலம் என அழைத்தார். அடுத்து 1848- 1875 காலகட்டத்தை முதலீட்டின் காலம் என்று பெயரிட்டார். தொடர்ந்து 1875-1914 காலகட்டத்தை பேரரசின் காலம் என்றார். அதன்பின் 1914-1991 என்ற இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதியை தீவிர முரண்களின் காலம் என்றார். அவர் மறைந்துவிட்டார். ஒருவேளை அவரைப் போன்ற ஒருவர் அந்த வரிசையைத் தொடர்ந்தால் 1991ஆம் ஆண்டு துவங்கிய காலத்தை எதிர்புரட்சியின் காலம் என்று அழைப்பார் என்றுதான் நினைக்கிறேன். இது எந்த ஆண்டில் முடியுமென்றுதான் தெரியவில்லை.