இந்தியக் குடியரசு தனது எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டு, அதன் 17வது நாடாளுமன்றத்தின் மக்களவைத் தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் சில தீர்மானகரமான முடிவுகளை வழங்கியுள்ளது. குடியாட்சியின் முதல் மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிபெற்ற வெற்றியை ஒத்த வெற்றியை ஒரு இந்துத்துவ பெரும்பான்மைவாத கட்சிக்கு வழங்கியிருக்கிறது. நேரு, இந்திரா ஆகியோர் பெற்ற மாபெரும் வெற்றிகளுக்குப் பின்னர் (1984ஆம் ஆண்டு ராஜிவ் வெற்றியை இந்திரா அம்மையாரது வெற்றியாகவே கொள்கிறேன். அதாவது அவரது துர்மரணம் பெற்றுத் தந்த அனுதாப அலை வெற்றி) அதேரீதியிலான வெற்றியைப் பெற்றிருக்கிறார் நரேந்திர மோடி. இந்தவகையில் கருத வேண்டிய இன்னொரு முக்கியமான விடயம், இந்த வெற்றி இரண்டாவது முறையாக ஆளும்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள தனிப் பெரும்பான்மை வெற்றி. மோடி அவர்களின் இந்தப் பெருவெற்றி காங்கிரஸ் கட்சியின் முதல் மூன்று தேர்தல் (1952, 1957, 1962) வெற்றிகளோடு மட்டுமே ஒப்பிடக்கூடிய ஒன்று. இந்த ஒப்பீடு, காரணம் கருதிதான். காங்கிரஸ் பெற்ற அந்த வெற்றிகள் இந்திய சுதந்திரம் எனும் மக்கள் விடுதலையை பெற்றுத் தந்தவர்கள் என்ற கீர்த்தியால் பெறப்பட்டவை. இந்தமுறை மோடி பெற்றிருக்கும் வெற்றியை என்னவாகப் பார்ப்பது. இப்போது அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் மகோன்னத வெற்றி எந்த அடிப்படையிலானது. சென்ற ஐந்து ஆண்டுகால உன்னதமான ஆட்சிக்கான பரிசாகக் கொள்ள முடியுமா?

இந்த தேர்தல்கால பரப்புரைகளிலேயே, பிரதமர் மோடி தனது சாதனைகளாக எதையாவது பட்டியலிடுவதைக் கண்டோமா, இல்லைதானே. அவராலோ அவரது சகாக்களாலோ பரப்புரைகளில் பணமதிப்பிழப்பால் விளைந்த நன்மை, அழிக்கப்பட்ட கருப்புப்பணம், நாடு தீவிரவாதிகளின் பண இருப்பை ஒழித்து அவர்களை நிர்மூலமாக்கியதுபற்றிப் பேச முடிந்ததா?. இல்லை, சரக்கு மற்றும் சேவைவரி (GST) அமலாக்கத்தால் அரசின் வருவாய் பெருக்கம் குறித்துப் பேச முடிந்ததா? இல்லை இந்த வரிச்சட்டம் (ஒரு நாடு ஒரு வரி) மக்களுக்கு வழங்கிய சலுகைகள், அதாவது விலைக்குறைப்பு சாதனைகளைப் பேச முடிந்ததா? இந்த வரிச்சட்டம் மாநிலங்களுக்கு வழங்கிய அதிகாரங்கள் பற்றிப் பேசக் கண்டோமா? அசாதாரண பொருளாதார நடவடிக்கைகளால் வீழ்ந்த வளர்ச்சி வீதத்தை, புள்ளியியல் தகிடுதத்தங்களால் தூக்கி நிறுத்திய விடயத்தையாவது முழங்கினார்களா? விலைவாசி உயர்வால் மக்கள் பட்ட துயருக்கு வழங்கிய நிவாரணம்பற்றி பேசப்பட்டதா? ஆண்டிற்கு இரண்டுகோடி பேருக்கு வேலைவாய்ப்பு என வாய்கிழித்தது பற்றியாவது பேசப்பட்டதா? சரிந்து வீழ்ந்து வலுவிழந்து போய் நிற்கும் முறைசாரா துறைகளின் புத்துயிர்ப்புபற்றிப் பேசப்பட்டதா? நசிந்து போன விவசாயம், தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவசாயிக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து ஏதாவது சொல்லப்பட்டதா? பசுநேசர்களின் வன்கொலைகள்பற்றி ஏதாவது சமாதானம் சொல்லப்பட்டதா? தொடர்ந்த சிறுபான்மையினருக்கெதிரான வன்முறைகள்பற்றி, தலித்துக்களுக்கெதிரான வன்கொலைகள்பற்றி ஏதாவது பேசப்பட்டதா? உண்மையாகச் சொல்வதானால் மேற்கண்ட எந்தப் பொருள் குறித்தும் பாஜக தரப்பிலிருந்து யாரும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவையெல்லாம் பேசுபொருளாகக்கூட கருதப்படவில்லை.

கடந்த ஐந்து ஆண்டுகால மோடி ஆட்சியின் சாதனைகள்தான் என்ன? எதைக் கொண்டு இந்த பெருவெற்றி வழங்கப்பட்டுள்ளது. மோடி அவர்களின் ஆட்சிக்கால மாபெரும் சாதனைகள், இந்திய ஆட்சிமுறையின் தன்னாட்சி அமைப்புகளை முற்றாக அடிபணிய வைத்தது மட்டுமே. அது என்ன அவ்வளவு எளிதான காரியமா என்ன? அரசியல் சாசனத்தால் தன்னாட்சி உரிமை வழங்கப்பட்ட அமைப்புகளான தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, இந்திய தலைமை கணக்காயம் (சி.ஏ.ஜி.), மத்திய புலனாய்வு ஆணையம் (சி.பி.ஐ.) ஆகியவை முதன்மையானவை. அவை மட்டுமல்ல, அகில இந்திய மருத்துவ கவுன்சில், யு.ஜி. சி., தன்னாட்சி உரிமை பெற்ற கல்வியியல் உயராய்வு நிறுவனங்கள் (ஜே.என்.யு., ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகம் போன்றவை) போன்றவையும் இவற்றில் அடங்கும்.

இந்த தன்னாட்சி அமைப்புகள் உருவாக்கம் குறித்த அரசியல் சாசன அமைப்புக் குழு விவாதங்கள் இவை ஏன் அந்தவகையான அதிகாரங்களோடு உருவாக்கப்படுகின்றன என்பதுபற்றி மிக விரிவான பதிவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக தேர்தல் ஆணைய உருவாக்கம் குறித்த விவாதங்கள் மிக முக்கியமானவை. அந்த விவாதங்கள் இன்றைய அசாதாரண சூழல்களை அப்போதே விவாதித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அரசியல் சாசன அமைப்புக் குழுவிற்குத் தலைமையேற்றிருந்த அம்பேத்கர் அவர்களின் உரைகள் இந்தவகையில் பலநேரங்களில் இன்றைக்கும் வழிகாட்டுபவை. அரசியல் சாசன அமைப்புக் குழு “ஒரு சிறந்த மக்களாட்சி அரசைத் தேர்வு செய்வதற்கான மிக முக்கியமான விடயம் நேர்மையான, இடையீடற்ற தேர்தல்” என்பதை ஏகமனதாகத் தீர்மானித்துக் கொண்டது. ஆனால் அப்போதைய குழுவின் முன் இரண்டுவிதமான முன்மொழிவுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் முதன்மையானது ஒன்றிய அரசின் பாராளுமன்றங்களுக்கான (மேலவை மற்றும் மக்களவை) தேர்தலை நடத்துவதற்கான ஒரு அமைப்பும், பிரதேசங்களின் (provinces) சட்டசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தனித்த அமைப்புகள் தனித்தனியாக என்பதுதான் (1935ஆம் ஆண்டின் பிரிட்டிஷ் இந்தியா சட்டப்பிரிவு எண் 269). அம்பேத்கர் அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரம் ஒன்றிய அரசின் வசம் மட்டுமே இருக்க வேண்டுமென வாதிடுகிறார். நேர்மையான தேர்தலை நடத்துவதற்கான அதிகார மையம் ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும், பிரதேசங்கள் இன்னும் தங்களளவில் ஒருமை பெறவில்லை, எனவே அவற்றின் மொழி, கலாச்சார ரீதியான சிறுபான்மைகள் ஒதுக்கப்பட்டு, அதாவது வாக்குரிமை மறுக்கப்பட்டுவிடும் வாய்ப்புள்ளது என்கிறார். பெரும்பாலும் அம்பேத்கர் அவர்கள் அதிகாரங்களை மையப்படுத்துவதையே பரிந்துரைத்திருக்கிறார். அது அன்றைய நாட்களின் நிலையினை அடிப்படையாகக் கொண்டது என்றே கருத வேண்டியுள்ளது. அவரது வாதம் ஏற்கப்பட்டு பிரதேசங்களுக்கான தனித்த தேர்தல் ஆணையம் என்ற முன்மொழிவு நிராகரிக்கப்படுகிறது. அதாவது இன்றைய தேர்தல் ஆணையம் எனும் தன்னாட்சி அமைப்பு இந்திய மொழி,கலாச்சார சிறுபான்மையினரின் பாதுகாவலனாக இருக்கவேண்டுமென்பதே அரசியல் சாசன அமைப்பை வழங்கிய முன்னோடிகளின் நோக்கம்.

முன்னோடிகளின் நோக்கங்களை முறியடிக்க அவர்கள் வழங்கிய ஒற்றை அதிகாரம் என்ற ஆணைய அமைப்பையே ஆயுதமாக்க முடியுமென நிருபித்திருக்கிரது மோடி அரசு. இந்த தேர்தல் காலத்தில் மோடியும் அவரது கேப்டன் அமித் ஷாவும் நிகழ்த்திய அத்துமீறல்கள் ஏராளம். ஆனால் அவை குறித்த எந்தவிதமான ஆட்சேபங்களையும் ஒருசதவீதம்கூட ஏற்கவில்லை தேர்தல் ஆணையம். இன்னும் சொல்லப் போனால் ஆணையர் ஒருவர் பதிவு செய்த ஆணைய முடிவுகளுக்கெதிரான குறிப்புகள்கூட ஆணையின் பகுதியாகவில்லை. இத்தனைக்கும் ஆணைய விதி, ஆணையர்களது ஏற்கப்படாத ஆட்சேபங்கள், இறுதி ஆணைகளின் பகுதியாக வேண்டுமென்கிறது. இதுமட்டுமா, இந்தத் தேர்தல்காலத்தில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் என்பதன் அடிப்படையில் வரலாறு காணாத அளவிலான வருமானவரித் துறை சோதனைகள், எந்தவித வெட்கமுமின்றி எதிர்க்கட்சிகள் மீது மட்டும் பாய்ந்து பிராண்டியது. இந்த முறை தேர்தல் எதிர்க்கட்சிகளை ஒருவிதமான அச்சுறுத்தலான சூழலில் வைப்பதை மிக கவனமாகச் செய்தது. அந்தவகையில் ‘மிக நேர்மையான’ தேர்தல் ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது மோடி / அமித் ஷா கட்டுப்பாட்டில் இயங்கிய தேர்தல் ஆணையம்.

ஆனால் இந்த முறைகேடுகளின் பங்களிப்பு கணிசமானது எனினும், அதுமட்டுமே இந்தத் தேர்தல் வெற்றியை வழங்கிவிட்டதாகக் கொள்ள முடியுமா? இல்லவே இல்லை. அது தவிர இன்னொரு பெரும் குற்றச்சாட்டு வாக்கு எந்திரங்கள் குறித்தது. வாக்கு எந்திரங்களை வசக்கி வெற்றி கண்டுவிட்டதான வாதத்தை நான் ஒருபோதும் ஏற்பதில்லை. அதேவேளையில் இந்த வாக்கு எந்திர முறை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் என்பதும் சரியே. அவற்றை முறைகேடாக தொழிற்நுட்ப ஏமாற்று மூலம் ஒருதரப்பிற்கு சாதகமாக்க முடியாது என்பதே சரியானாலும், தேர்தல் ஐயப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டுமென்பது கொண்டும், அமெரிக்கா போன்ற தொழிற்நுட்ப வல்லரசுகளே இன்னும் வாக்குச் சீட்டுகளில் வாக்களிக்கும்போது, இந்த தொழிற்நுட்ப சாகசம், சரிபாதி அடிப்படைக் கல்வியே பெறாத நாட்டிற்குத் தேவையே இல்லை என்பதுதான்.

அப்படியானால் எப்படி வென்றார் மோடி, அதிலும் இந்த ஏறத்தாழ மூன்றில் இரண்டுபங்கு உறுப்பினர்கள் கொண்ட முரட்டுப் பெரும்பான்மையை. அதுதான் இந்த தேர்தல் சாகசத்தின் மையக்கரு. அதுவே இந்திய ஒன்றிய மக்களாட்சி வடிவிற்கான சாவுமணியோ என்ற ஐயப்பாட்டிற்கு வழிவகுத்திருக்கும். தேர்தலுக்கு முன்னரான கணிப்புகள் மோடிக்கு முடிவுரை எழுதத்துவங்கின. நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். சார்பாக நடத்தப்பட்ட கணிப்பே பாஜகவிற்கு படுதோல்வியென தெரிவித்தது. அதன் எதிரொலியாக, அவர்களின் தூதுவர் நிதின் கட்கரி வாய்திறந்து விமர்சனங்களை வைக்க ஆரம்பித்தார். உட்கட்சி எதிர்ப்பை உணரத் துவங்கியது மோடி/ ஷா இரட்டையர் அணி. அதுவரை அவர்கள் விசுவாசமாக சேவகம் செய்த குஜராத் பனியா முதலீட்டியம் துணைக்கு வந்தது.

முதலீட்டிய பலத்திற்குத் தேவையாக இருந்தது இரண்டுவிதமான எதிரிகள். முதலாவது எதிரி உலகறிந்த பாகிஸ்தான். இந்தியா எனும் நாட்டை இறுகப் பிணைத்து ‘ஒற்றையாக்கும்’ அராஜகத்திற்கு எந்நாளும் துணை நிற்கும் எதிரி. ஒரு அசாதாரணமான நிகழ்வாக இந்தியாவும் பாகிஸ்தானும் அசைக்க முடியாத சமாதானமடைந்து விட்டால், இருநாடுகளிலும் ஒரு இருப்புநிலை நெருக்கடி (ணிஙீமிஷிஜிணிழிஜிமிகிலி சிஸிமிஷிமிஷி) ஏற்படும் என்பது விபரீதமான உண்மை. இது அரசியல்களச் செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமில்லை, தேசபக்தி கொண்ட குடிநபருக்கும்தான் (ஜீணீtக்ஷீவீஷீtவீநீ நீவீtவீக்ஷ்மீஸீ). இந்திய குடிநபர் கட்டமைவு அதன் மூலத்திலேயே இரண்டு எதிர்வுகள் வழியாகவே நிகழ்ந்தது. அவை பாகிஸ்தான், சீனா என்ற எதிர்வுகள் அல்லது மற்றமைகள். ஆம், ஒரு நபர் இந்தியா எனும் நாட்டுப் பற்றாளனாக இருக்க இஸ்லாமிய பாகிஸ்தான் என்ற எதிரி கட்டாயம் தேவை. அதனால்தான் இந்த நாட்டின் இஸ்லாமியர் ஒவ்வொருவரும் தினசரியாக தங்களது இந்தியா மீதான தங்களது தீராத காதலை மறு உறுதி செய்யும்படிக்கு வலியுறுத்தப்படுகிறார்கள். அவரது இஸ்லாமியர் என்ற அடையாளம் இந்தியர் எனும் அடையாளத்திற்கு அடிப்படைகளில் மாறானதாக இருக்கிறது. அதாவது இந்து இந்தியா எனும் உடலில் செயற்கையாகப் பொருத்தப்பட்ட ‘அந்நிய இதயம்’ அவர். எனவே அவர் இடைவிடாத கண்காணிப்பில் இருத்தப்பட வேண்டியவர். எனவே பாகிஸ்தானும், அதன் நீட்டிப்பான இஸ்லாமும், இந்தியத்திற்கான இரு நிரந்தர எதிரிகள். பிரதமர் ஆனவுடன் நவாஸ் ஷெரிப் பிறந்தநாள் விருந்திற்கு, திடீரென சென்று ‘பிறந்தநாள் டிப்ளமஸி’ செய்தவர், இப்போது முழுசுற்று வந்திருந்தார். கறுப்புப்பணத்தை முற்றாக ‘ஒழித்த பின்னும்’ அழியாத தீவிரவாதம் காஷ்மீரில்  ‘புல்வாமா’ தாக்குதலை நடத்தி மோடிக்கான அபூர்வ வாய்ப்பை வழங்கியது. சினிமா க்ளைமாக்ஸ் ஆரம்பமானது, நாடு முழுதும் எங்கு பார்த்தாலும் போர் முழக்கம்.

ஏற்கனவே 24 மணிநேர இலவச விளம்பர சேவை செய்த கார்ப்பரேட் ஊடகங்கள் வரிந்துகட்டி களமிறங்கின. செய்தி ஊடக பிரஸ் ரூம்கள் ‘ராணுவக் கட்டுப்பாட்டு அறைகளாக மாறி’ போருக்கான கவுண்ட் டவுன்’ துவங்கின. இந்திய வரலாற்றில் அதற்குப் பின் நடந்த அயோக்கிய நாடகங்கள், நாம் அச்சமுறுவது போல் இந்தியா ஒரு இந்துத்துவ நாடு எனப் பிரகடனப்படுத்துவதுவரை சென்றுவிட்டால், கறுப்புப் பக்கங்களால் நிரப்பப்படும். அந்த நாட்களில் வீழாத அமைப்புகளே இல்லை. ஆம், இந்திய ராணுவம் உட்பட. ஒரு தேர்தல் நேர அரசியல் கட்சியின் சிக்கலைத் தீர்க்க இந்திய ராணுவமும் உடன்பட்டது இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டுமென விரும்ப நூறு காரணங்கள் உண்டு. இந்திய மக்களாட்சியும், ராணுவ அமைப்பும் தனித்த கட்டுப்பாடுகளின்கீழ் இயங்கும் வரைதான் மக்களாட்சி என்பதே, அது எவ்வளவு பலவீனமானதாக இருந்தபோதும், தொடர்வது சாத்தியம் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. ஆம், தரைப்படை ஆயத்தநிலையில் நிற்க, விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட் என்ற இடத்திலிருந்ததாகச் சொல்லப்பட்ட லஸ்கர் இ தொய்பா பயிற்சி மையத்தை ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ என்ற தாக்குதலை நிகழ்த்தியது. அந்தத் தாக்குதல் இந்திய வரலாற்றில் ஒரு விபரீதமான ராணுவ நடவடிக்கையாகவே எந்நாளும் தொடரும். ஆனால் அமெரிக்க எப் 16 விமானத்தை வீழ்த்தியது, அபிநந்தன் சாகசம் என மோடி எனும் மேடை நடிகருக்கான வசனங்களை அள்ளி வழங்கியது. மேடைதோறும் அந்த நடிகர் பலவிதமான பாவங்களில் தனது சாகசங்களை விவரித்தபடி இருந்தார். அதில் மேகமூட்டமான இரவில் பாகிஸ்தானிய ராடார்களை கண்ணைக்கட்டி தாக்குதல் நடத்தலாமென தான் ஆலோசனை வழங்கியது வரை அது விரிந்தது. ராணுவத்தையும், ஒரு பிரதமரையும் கேலிக்குள்ளாக்கக்கூடியதான இந்தப் பேச்சுக்கூட அவரது,  ‘இந்தியா எனது கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறது’ என்ற கோஷத்திற்கு அருமையாகத் துணைபோனது என்பதே விபரீதம். இந்தப் பேச்சு, அதாவது இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது என்ற வாதம் அனைத்துவகையிலும் பாதுகாப்பாக இருப்பதான பொருள்படும் நீட்சியையும் வழங்கியது. அதாவது வீழ்ந்த இந்தியப் பொருளாதாரம், காணாமல்போன வேலைகள், முடங்கிய தொழில்கள், நசுக்கப்பட்ட உயிர்கள் என எல்லாம் அவரது கைகளில் பாதுகாப்பாக இருந்தது. ஒருவழியாக அதுவே அந்தப் பாதுகாப்பான கரத்துக்கு ஆட்சிப் பொறுப்பை கூடுதலான பெரும்பானமையோடு வழங்குவதானது. ஆம், இந்திய ‘பிரஜையின்’ இருப்பின் உயிர் மையமான ‘தேசத்தை’ ஒரே தாக்குதல் வழியாக எதிராளியிடமிருந்து மீட்டு காத்தார் மோடி.

இந்த உச்சக்கட்டத்தை நோக்கிய நகர்வில் இன்னும் சில அதியற்புதமான நகர்வுகளையும் சாதித்தது சங்பரிவார் ஆலோசகர் கூட்டம். இட ஒதுக்கீடு எனும் / கொள்கையை இந்திய அரசியல் சாசனத்தின் பகுதியாக்க நடந்த போராட்டங்கள் எத்தனையோ இந்திய வரலாற்றில். அதில் ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான 27% ஒதுக்கீடு பெற வி.பி.சிங் அவர்கள் அரசையே இழக்க நேர்ந்தது. அதுவும் குடியரசு ஏற்பட்டு நாற்பது ஆண்டுகள் கழிந்து, இருபதாண்டு கால இழுபறிக்குப் பிறகு மண்டல் அறிக்கை ஏற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடுபற்றி எரிந்தது. அந்தத் தீயில் உயிர் பிடித்ததுதான் பாரதீய ஜனதா கட்சி. ஆனால் மோடி அரசின் மாபெரும் அசலான சாதனை முற்படுத்தப்பட்டோரில் வறியவர்க்கான (ஆண்டிற்கு எட்டு லட்சம் ரூபாய் வருவாய் பெறுபவர்வரையான வறியவர்) 10% ஒதுக்கீடு. ஒரு சட்ட முன்வரைவு பாராளுமன்ற மக்களவையில் முதல்நாள் அறிமுகப்படுத்தப்பட்டு, மறுநாள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதற்கு அடுத்தநாள் மேலவையிலும் அங்கீகரிக்கப்பட்டு, ஐந்தாவது நாளில் ஜனாபதியால் ஏற்கப்பட்ட சட்டம் அதுவே. இனி ஒருபோதும் நடக்கவே முடியாத இந்த அதிசயத்தின் பின் ஒளிந்திருக்கிறது இந்துத்துவ இந்தியா என்பதுதான் கவனத்திற்குரியது. சமூகநீதிக் கொள்கையை இந்திய தேசியத்தில் ‘நம்பிக்கை’ கொண்ட கட்சிகள், அது காங்கிரஸ் ஆனாலும், பொதுவுடைமைக் கட்சிகளானாலும், தலித் கட்சிகள் ஆனாலும் அதுதான் விதி. இது ஏன் என்ற கேள்விக்கான விடைதான், இந்தியா இந்துத்துவ நாடாகிவிடுமென்ற ஐயப்பாட்டிற்கு அடிப்படை. சாதி உருவாக்கம், சாதியப் படிநிலையாக்கம், தீண்டாமைக் கொடுமை போன்றவற்றின் அடிப்படைகளை எளிதாகத் தகர்த்து விடக்கூடியது ‘இந்து’ என்ற ‘நம்பிக்கைவாதம்’. இந்து எனும் நம்பிக்கை இயங்கும் அதே தளத்தில்தான் சாதியப் படிநிலையும் இயங்குகிறது. ஆம், தீட்டு, புனிதம், பாவம், புண்ணியம், மோட்சம், நரகம், பகுத்தறிவுவாதக் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது நம்பிக்கை என நீளும் எதிர்வுச் சட்டகங்கள். அந்தச் சட்ட வடிவை இந்தியாவிலேயே எதிர்த்த ஒரே அரசியல் இயக்கம் திராவிட அரசியல் கட்சிதான் என்பதும் கவனத்திற்குரியது. இந்த ஒதுக்கீடு அதன் அடிப்படையிலேயே, சமூகநீதி கொள்கைக்கு எதிரானது என்பதுதான் திராவிடம் எதிர்த்ததற்கான காரணம். சமூகநீதி கொள்கை சமூகரீதியாகவும், கல்வித்தளத்திலும் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்பினை வழங்குவதற்கான திட்டம். மநுநீதி சட்டத்தால் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான மீட்சி நடவடிக்கை. சமூக கீழாக்க நடவடிக்கையால் (Social Discrimination) வீழ்த்தப்பட்டவர்களுக்கான சமூக சீரமைப்பு (Reverse Discrimination) நடவடிக்கை. சமூகநீதிக் கொள்கை இந்துத்துவ சாதிய படிநிலையின் விளைவுகளை நேர் செய்ய முனைந்த செயல். அது வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான கொள்கை இல்லை. அதைவிட அதன் மிக முக்கியமான நோக்கம், சாதியப் படிநிலையின் விளைவான கல்விமறுப்பால் அரசு வேலைவாய்ப்பில் மிக மிக குறைவான வாய்ப்புகளைப் பெற்றிருந்தோருக்கான நேர்மறை நடவடிக்கை (Pro-active action). இவ்வளவு கருத்தியல் நிலைப்பாடுகள் சார்ந்து பூலே, அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் ஒரு நூற்றாண்டு போராட்டத்தின் வழியாக உருவான சமூகநீதியை வீழ்த்தியதுதான் சென்ற பாராளுமன்றத்தின் இறுதி நடவடிக்கை. சமூகநீதி வீழ்த்தப்படுவதை இந்திய அரசியல் கட்சிகளில் திராவிடக்கட்சி தவிர்த்த ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் விவாதிக்கக்கூட இல்லை என்பதில் மறைந்திருக்கிறது இந்து இந்தியா எனும் கருத்துருவம், இந்துத்துவ இந்தியா எனும் அடிப்படை மாற்றத்தை அவ்வளவு எளிதாக நடத்தியது. சாதிய படிநிலையாக்கத்தின் விளைவால் இந்திய அதிகாரநிலைகளையும், உச்சநீதிமன்றம் போன்ற மிக உயர்ந்த இறையாண்மையைக் காக்கும் நிலைகளையும் நீதித்தளங்களையும் நிறைத்திருந்த இந்து மேலாதிக்க சாதியினரின் பிடியில் இந்திய பாராளுமன்றமும் சிக்கியிருந்தது அம்பலமானது. இந்து, இந்துத்துவம் எனும் இணைகள் இந்திய தேசியத்தின் பகுதியாகும்போது இணைந்துவிடும் அபூர்வம் நிகழ்ந்து விடுகிறது. இதை சாதிக்கவே  ‘இந்து ஒற்றை அடையாளத்திற்குள்’ இங்குள்ள பல்வேறு நம்பிக்கைகளைத் திணித்து அவற்றின் ஆதாரங்களை அழிக்கும் செயல் வெகுகாலமாய் நடந்தேறுகிறது. சென்ற நூற்றாண்டின் விடுதலைப் போராட்ட நகர்வுகளுக்கு வெளியே இயங்கிய இந்து மஹா சபா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின்    ‘இந்து’ என்ற பொது அடையாள உருவாக்கம் அநேகமாக முழுமை பெற்றுவிட்டது. அந்த முழுமை வழியான இந்து தேசம் என்ற கற்பிதத்தின் பயனாளிகளே சங்பரிவாரும், அவர்களைத் தாங்கி நிற்கும் இந்துத்துவ முதலீட்டியமும். இனியான ஐந்து ஆண்டுகளில் இந்துத்துவ இந்தியாவை நோக்கிய நகர்வு துரிதமாகும் என்பதில் ஐயமில்லை. வாரணாசி தேர்தல் களத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கிய இந்தியப் பிரதமர் மோடி அதற்கான சாட்சி.

இந்திய அரசியல் சாசனம் மதசார்பற்ற குடியரசு என தெளிவாக வகுத்திருக்கும் ஒரு அடிப்படையை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியுமா என்ற கேள்வி எழாமல் போகாது. நிச்சயமாக அப்படியொரு தீர்மானத்தை இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றுமென நானும் கருதவில்லை. ஆனால் அதற்கான குறுக்குவழிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு வகுக்கப்பட்டுவிட்டன. அதற்கான பரீட்சார்த்தம் சமூகநீதிக் கொள்கையை சாய்த்ததன் வழியாக நிகழ்ந்துவிட்டது. அந்தச் சட்டமொன்றும் சமூகநீதி ஒதுக்கீட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிடவில்லை. மாறாக அதன் வேரில் வெந்நீர் ஊற்றியாகி விட்டது. இனி அது கருகி போவதற்கான காலத்தை அதுவே தீர்மானித்துக் கொள்ளும். ஆம், சமூகநீதி ஏற்பாடு பொதுத் தொகுதியாக விட்டு வைத்ததை மெல்ல கரைத்து இல்லாமலாக்கி விட்டால் சமூகநீதியே அந்த சமூகங்களுக்கான சாவுநீதியாக அல்லது சமூக அநீதியாக மாறிவிடும் என்பதுதான் உண்மை. இந்த சதியை தமிழகத்திலேயே எம்ஜிஆர் எனும் பார்ப்பன தாசன் அவர்களின் ஆலோசனையில், ஒரு ஆணையில் பொதுத் தொகுதி (Open Competition) என்பதை இடஒதுக்கீடற்றோரென (Other Communities) என மாற்றிட முனைந்த விபரீதம் நடக்கத்தானே செய்தது. பெரும் சட்டப்போராட்டமும், ஒரு தேர்தல் படுதோல்வியும் அதனை நேர் செய்தது என்பதுதான் வரலாறு. இதோ இந்த முறை பாராளுமன்ற உறுப்பினர்களில் 232 பேர் உயர்சாதியினர், 172 பேர்மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர். இந்தமுறை 306 உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவிற்கு அரசியல் சாசன சட்டத்திருத்தம் செய்யத் தேவையான இரண்டின்கீழ் மூன்று பெரும்பான்மை மிக எளிதாக சாத்தியமாகக் கூடிய ஒன்று. இந்த 17ஆவது நாடாளுமன்றம் பல அரசியல் சாசன அடிப்படை திருத்தங்களை நடத்தப் போவது உறுதி. அதில் மிகக் குறிப்பாக இஸ்லாமியரை, சிறுபான்மையினரைக் குறிவைக்கும் சாசனத் திருத்தம் சாத்தியமே. அவற்றில் சில உறுதியாக இஸ்லாமியருக்குப் பாதுகாப்பு வழங்கும் தனிச்சட்டங்களாக இருப்பது உறுதி. ஏனெனில் அவை இந்துத்துவவாதிகளின் அடிப்படைவாதக் கொள்கை. இந்தவகையில் முதலில் முயலப்படுவது இந்தியர் அனைவருக்குமான பொதுச் சட்டம் (UNIFORM CIVIL CODE) மீதான தாக்குதலாகவே இருக்கும். அது போக ஏற்கனவே பாதிவழியில் கைவிடப்பட்ட ‘முத்தலாக்’ சட்டம் போன்றவை இருக்கும். அதாவது சிறுபான்மையினரின் கலாச்சாரவெளி மீதான நேரடியான சட்டத் திருத்தத் தாக்குதல் நடைபெறும். ஏற்கனவே இந்த முயற்சிகளை தடுத்துக் கொண்டிருந்த ஒரே அமைப்பு நாடாளுமன்ற மேலவையும், மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மை வேண்டுமென்ற நெருக்கடியுமே. இனியான காலங்களில் அந்தத் தடையும் இயல்பாக விலகிவிடும். மாநில அரசுகள் நீக்கத்தை சென்றமுறையைவிட எளிதாகக் கையாள முடியும். ஆட்சிகளைக் கலைத்துவிட்டுப் பாராளுமன்ற அங்கீகாரம் பெறுவது வெகு எளிது. பட்டியல்களை நீட்டித்து உத்தரவாதமான ஒரு இந்துத்துவ பாசிச ஆட்சிக்கான தீர்க்கதரிசனப் பார்வையை முன்வைப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமில்லை. இனிவரும் ஐந்து ஆண்டுகளில் இந்திய மக்களாட்சி கடுமையான சவால்களை எதிர்கொள்ளலாமென எச்சரிக்கை செய்வதே நோக்கம்.

இனிவரும் ஐந்து ஆண்டுகள் மக்களாட்சிக்கான மாபெரும் சவாலாக இருக்குமென்ற எச்சரிக்கையால் என்ன பயன். தேர்தல் முடிவுகள் தீர்மானமானவை. அவற்றை மாற்றுவதற்கில்லை. அப்படியானால் இந்த விளக்கம் எதற்காக? மக்களாட்சி ஒருவழிப்பாதையல்ல. உலகின் மிக மோசமான சர்வாதிகாரிகளே பத்தாண்டுகள் சொச்சமே நீடிக்க முடிந்தது சரித்திரம் கூறும் பாடம். இந்த இந்துத்துவ அரசை எதிர்கொள்ள ஒருவழியும் இல்லையென்பது அவநம்பிக்கைவாதம். மக்களாட்சியின் முடிவுரைகளை அவ்வளவு எளிதாக எழுதிவிட முடியாது. அதிகப்பட்சமாக பத்துசதவீத வாக்குகளே கூடுதலாகப் பெற்றது இந்த அரசு. அதன் எதிர்தரப்புகள் சிதைந்து கிடந்ததால் பெற்றது இந்த மாபெரும் வெற்றி. ஏன் எதிர்தரப்புகள்,/எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது கூடாமல் போனது. அதற்கும் காரணம் மோடியின் ஐந்து ஆண்டுகால அலங்கோல ஆட்சி எனச் சொன்னால் வேடிக்கையாகவே இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. மோடி அரசின் படுதோல்வியை இந்திய அரசியல்கட்சிகள் மெய்யாகவே எதிர்பார்த்தன. அதற்கு சாட்சியம் சில மாதங்களுக்கு முன்னர்வரை இன்று அவர்களோடு கூட்டணி போட்டு களம்கண்ட கட்சிகள் மோடியையும் அவரது அரசையும் கடுமையாக விமர்சித்தன என்பதே நிரூபணம். அமித் ஷா எனும் சூத்திரதாரி எதிர்ப்பவர்களை சரிக்கட்டிய வழிகள் பலப் பல. தமிழ்நாட்டில் அதை ஆளும்கட்சிமீதான ஊழல் குற்றச்சாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆளும்கட்சியின் உட்கட்சி முரண்களை சாதகமாக்கி என்றால், மஹாராஷ்ட்ராவில் சிவசேனா ‘கௌரவமான வழியில்’ சமாதானம் செய்யப்பட்டது. அசாம் மற்றும் வடகிழக்கின் ‘டிப்ளமஸிகள்’ பற்றி இங்கு விவாதிக்க இயலாது. அது அண்டைநாடுகளோடு செய்து கொண்டது போன்ற ஒப்பந்தங்கள். அதுதவிர பிற மாநிலங்களில் பிகார், பஞ்சாப் மட்டுமே இயல்பாக தொடர்ந்த கூட்டணிக் கட்சிகள். பாஜக கூட்டணி இல்லாத மாநிலங்களில் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா ஆகியவை ஒருவகை. இந்தி பேசும் மாநிலங்கள் மற்றும் குஜராத் கதை தனி. இவையெல்லாம் கடந்து கவனிக்க வேண்டிய தரப்புகளில் அதாவது எதிர்க்கட்சிகளில், நான்கு, ஐந்து தரப்புகளின் நிலைப்பாடுகள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். அவை 1) காங்கிரஸ் 2) பொதுவுடைமைக் கட்சிகள் 3) அரை இந்தியக் கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 4) முன்னாள் காங்கிரசான மம்தாவின் திரிணாமுல் 5) தெற்கே தெலுங்கானா சந்திரசேகரராவின் கட்சி ஆகியவை. இவற்றில் காங்கிரஸ் தவிர்த்த தரப்புகளை இணைத்த ஒரு கூறு தங்களுக்கு எதிர்தரப்பு பாஜகவும்,காங்கிரசும் என்பதே.

முதலில் காங்கிரஸ். இந்திய தேசியக் காங்கிரஸ் கதை மிக வித்தியாசமானது. ஆறுமாதத்திற்கு முன்னரான இந்தி மாநிலங்களின் (ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஷ்கர்) வெற்றி அவர்களைக் குழப்பி விட்டிருந்தது. அந்த வெற்றி அவர்களுக்கு நம்பிக்கையையும், பாஜக அல்லாத கட்சிகளுக்கு அவநம்பிக்கையையும் கொடுத்தது. மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவற்றில் காங்கிரஸ் ஓரளவில் ஆட்சியாளர்கள்மீதான அதிருப்தியை அறுவடை செய்வதில் வெற்றி பெற்றது. ஆனால் வாக்கு சதவீதம்பற்றிய அக்கறையற்று வெற்றியில் திளைத்துவிட்டது. மத்தியப் பிரதேசத்தில் ஒரு சதவீத வாக்குக் கூடுதலாகப் பெற்ற ஷிவ்ராஜ் சௌஹான் தரப்பு தோற்றது என்பதைக் கருதவில்லை அவர்களது தொடர் நடவடிக்கைகள். போதாக்குறைக்கு ராஜஸ்தானில் அரும்பாடுபட்டு காங்கிரஸ் வெற்றிக்கு வழிவகுத்த இளைஞர் சச்சின் பைலட் ஓரங்கட்டப்பட்டு, எதுவும் செய்யாமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த கிழவர் அசோக் கேலாட், சாதிபலத்தைக் காட்டி அரியணை ஏறினார். அதுவே மத்தியப் பிரதேசத்திலும் ஜோதிராவ் சிந்தியாவை விலக்கி கமல்நாத்திற்கு அடிபணிய வேண்டியதானது. ஆம், காங்கிரஸின் மிகப் பெரிய பலவீனம் அதன் கிழத் தலைவர்கள். அவர்கள் அதிகாரத்தை மூத்த தலைவர்கள் என்ற ஹோதாவிலும், தங்களது சாதிய பலம் கொண்டும் கைப்பற்றினர். ஆனால் விபரீதம் அவர்களது மூப்பும், அனுபவமும் தேர்தல் களத்தில் எந்தவகையிலும் உதவாமல் போனது.

இரண்டாவதாக உத்தரப்பிரதேச மாயவதி / அகிலேஷ் மகா கூட்டணி. இவர்களில் மாயாவதி தன்னை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத் தேர்தல்களில் ஓரங்கட்டிய காங்கிரசைப் பழிவாங்குவதில் மிகத் தீவிரமாக இருந்தார். அதைவிட அவரது பிரதமர் கனவு பெரிதாக அவரை ஆட்கொண்டது. நிச்சயமான மோடி வீழ்ச்சியை தவற விட்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். பலமற்ற காங்கிரசுக்கு இரண்டு இடங்களைத் தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்தது மகா கூட்டணி. அகிலேஷின் முயற்சிகள் தோற்றன. பிரியங்காவைக் களமிறக்கிய காங்கிரஸ் நடவடிக்கை ஊடக கவனம் பெற்ற அளவு மக்கள் செல்வாக்கைப் பெறத்தவறியது. ஆகக்கூடி மோடியின் அபார வெற்றிக்கு வழிவகுத்தார்கள் உத்தரப்பிரதேசத்தின் எதிர்க்கட்சிகள்.

மூன்றாவதாக மமதா பானர்ஜி. மோடியோடும், அமித் ஷாவோடும் சரிமல்லுக்கு நின்றவர் அவர் மட்டுமே. அவரைப் பலவகைகளில் நெருக்கடிக்கு ஆளாக்கினர் இரட்டையர்கள். சவாலை சரியாகவே எதிர்கொண்டார். ஆனால் அவரும் காங்கிரசை உடன் இணைத்துக் கொள்ள ஒருபோதும் விரும்பவில்லை. இத்தனைக்கும் அவர் பலமுறை காங்கிரசோடு தேசிய விவகாரங்களில் இணைந்து நடந்தவர், வங்காளத்தில் அவர்களை எதிரிகளாகவே பார்த்தார்.

நான்காவதாக, பொதுவுடமைக் கட்சிகள். இவர்களின் பலமும் பலவீனமும் மிக வித்தியாசமானது. அவர்களது தேர்தல் கள நடவடிக்கைகள் பல நிலைப்பாடுகள் கொண்டது. அவற்றில் பல விளக்க முடிந்த கொள்கைகள் சார்ந்தவை, சில விளவியலாத புதிர்கள். ஒரு உதாரணம், தமிழ்நாட்டில் ஜெயலலிதாவோடு கூட்டணியில் இருக்க முடியும். ஆனால், பிகாரில் லாலுவை ஏற்க முடியாது. அதே சிக்கல்தான் காங்கிரசோடும். காங்கிரஸ் உறவை அவர்கள் மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவை மையமிட்டே தீர்மானிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் பிறமாநிலங்களில் கூட்டணிகளைப் பல்வேறு வகையான தீர்மானங்களால் முடிவு செய்து அவர்களது இருப்பையே வங்காளம், கேரளா, திரிபுரா எனச் சுருக்கிக் கொண்டனர். திரிபுராவில் அவர்களை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து விட்ட பாஜகவோடு அவர்கள் வங்காளத்தில் ரகசிய உடன்பாடு கொண்டனர் என்ற செய்தியை இதுவரை யாரும் மறுத்ததாகத் தெரியவில்லை. 25 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி வெறும் 6% வாக்குகளைப் பெற்றதை என்னவாக விளங்கிக் கொள்வது என்பது தெரியவில்லை. ஆப்த நம்பிக்கைக்குரிய நட்பு சக்திகளான அவர்களைக் கடுமையான விமர்சனங்களால் எதிர்கொள்ள விருப்பமில்லை. அவர்களே பலமுறை, காலங்கடந்தேனும், சுயபரிசீலனை செய்பவர்கள் என்ற வகையில் அந்தப் பொறுப்பை அவர்களிடமே விடலாம். ஆனால், மமதாவின் அராஜகமாக அவர்கள் கருதுவதைக் கொண்டு இந்துத்துவ சக்திகளோடு இணைவது என்ற விடயம் நம்ப முடியாதது. இப்படியொன்று சாத்தியமென்பதே அயர்ச்சி அளிப்பது. இப்போதைக்கு அவர்களுக்கு ஆலோசனையாக சொல்லக்கூடியது மாநிலக் குழுக்களுக்கு, சில வரையறைக்குட்பட்டு தனித்துவமான நிலைப்பாடுகளை எடுக்கும் வாய்ப்புகளை வழங்குங்கள் என்பதே. அது ஒன்றே உங்களைப் பொருட்படுத்தத் தக்கவர்களாக இருக்கும் வாய்ப்பை வழங்கலாம்.

இந்தத் தேர்தல் எதிர்க்கட்சிகளின் அரசியலில் பாரிய வேறுபாடுகளைக் கொணர்ந்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது மிக மோசமான தொடர் தோல்வி அதனை நிலைகுலையச் செய்து விட்டிருக்கிறது. காங்கிரஸின் மிகப் பெரிய குற்றமே அதன் மாநிலத் தலைமைகளை வலுவற்றதாக்கி அதிகாரத்தை தலைமையிடம் குவித்துக் கொண்ட நடவடிக்கை என்பது ஊரறிந்த செய்தி. இன்றைய மாநிலக் கட்சிகளில் பெரும்பான்மை அவர்களது உருவாக்கம். சரத் பவார், மமதா, சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி என நீளும் அந்தப் பட்டியல். இந்தப் பட்டியல் வடகிழக்கு மாநிலங்களுக்கும் நீளும். பலமான மையம் என்பதே அதனைப் பலவீனமாக்கியது. எஞ்சிய தலைமைகளில் பஞ்சாபின் அம்ரீந்தர் சிங் தவிர்த்தவர்கள் சோடைகள். இப்போது மூத்தவர்கள் என்ற போர்வையில் காங்கிரசில் இருப்பவர்கள் தேர்தல்கள சாகசங்களை நிகழ்த்த முடியாதவர்களான அசோக் கெலாட், கமல்நாத், சிதம்பரம், திக்விஜய் சிங், குலாம் நபி ஆஸாத் போன்றவர்களே. ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலக முன்வருவது பொருளற்றது. ஆனால் அவரது வாதமான, “என்னிடம் வழங்கப்பட்டுள்ள அமைப்புமுறை (System) என்னால் கையாளக்கூடியதாக இல்லை” என்பது சரிதான். ஆனால் அரசியல் வாரிசான அவர் பலவேளைகளில் அந்த முக்கியமான விடயத்தை மறந்து விடுகிறார். தலைமை கையகப்பட்ட வழியையும் கவனத்தில் கொள்வது அவசியம். அப்படியானால், அவர் கையில் வந்து சேர்ந்திருக்கும் கட்சி சர்வ வல்லமை பொருந்திய காங்கிரஸ் இல்லை. இந்திய அளவில் சில ஆதரவுப்பகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டுள்ள கட்சி என்பதை உணர வேண்டும். தலைவராக அவரது முதிர்ச்சி தெரியவே செய்கிறது, ஆனாலும் ஓட்டரசில் கட்சியின், அதிலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை, ஆகக் கடுமையான சவாலானது. முந்தைய நாட்களின், அதாவது நேரு, இந்திரா, ராஜிவ் காலத்து இலக்கு இனி ஒருபோதும் வாய்க்காது. அந்நியராக கருதப்பட்ட அவரது தாயார் சோனியா அம்மையாரிடம் கட்சி வந்தடைந்தபோது அது இதைப் போலவேதான் பலவீனமாக இருந்தது. அவரும் தொன்னூறுகளின் இறுதியில் பலதவறுகள் வழியாகவே ஆளுமை பெற்றார். ஆனால் இரண்டாயிரங்களின் அரசியல் களத்தில் அவர் கட்சியின் பலவீனத்தை உணர்ந்து கூட்டணி ஆட்சிமட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்து கொண்டார். விளைவு மிக அபூர்வமாக பத்தாண்டு கால தொடர் ஆட்சி சாத்தியமானது. ஆனால் ஒருவகையில் பலமாகவும், மறுமுனையில் பலவீனமாகவும் ஆனார் மன்மோகன் சிங். சோனியா அம்மையாரைப் பதவியேற்க விடாமல் செய்ததே இந்துத்துவவாதிகளின் பெருவெற்றி. அரசியல் தலைமையின்றி, அதிகாரத்துவ அரசாக நடந்த மன்மோகன் சிங் ஆட்சிக்காலம் காங்கிரஸ் எனும் கட்சி அமைப்பை பலமான வீழ்ச்சிக்கும், தீராத அவதூறுகளுக்கும் ஆளாக்கியது. ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டை மோடி தலைமையிலான அரசியல் தலைமை கையாண்ட முறைக்கும், 2ஜி ஊழல் பொய்யை மன்மோகன் சிங் அரசு கையாண்ட முறைக்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்வதே அரசியலின் நுட்பம். அரசியலாளரின் சாகசம் குற்றங்களைத் தடயமின்றி செய்வது மட்டுமின்றி, எழும் குற்றச்சாட்டுகளைத் தயக்கமின்றி எதிர்கொள்வதும், இரக்கமின்றி எதிர்ப்புகளைத் தாக்குவதுமே. அரசியல் களம் உலகெங்கும் இயங்கும் தளம் இதுவே. இந்தப் புள்ளியிலிருந்து, அதாவது பலவீனமான காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பு, மதவாத சக்திகளுக்கெதிரான சக்தியாக எல்லா வகையிலும் தன்னை ஒருங்கிணைத்து கொள்வதும், இந்தியக் கூட்டாட்சி குடியரசு எனும் சாத்தியத்தை முன்வைத்து நகர்வதுமே.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இருண்ட பகுதியில் மறைந்து கிடக்கிறது கூட்டாட்சிக் குடியரசு எனும் பிரகடனம். இன்னும் சரியாகச் சொல்வதானால் அரசமைப்புச் சட்டம் இறுதி செய்யப்பட்டபோது இந்தக் கூட்டாட்சி (Federal) என்ற கருத்தமைவு அநேகமாக கைவிடப்பட்டு விட்டது என்பதே உண்மை. பிரிட்டிஷ் இந்தியாவை காலாதீதமான இந்தியாவாக்கும் இந்துத்துவ கனவை பெரும்பான்மை அரசியல் தலைமைகள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். அதைக் காலத்தின் கட்டாயமென அவர்கள் கருதத் தலைப்பட்டனர். அது கருதியே 1940 துவங்கி 1946க்குள் பாகிஸ்தான் என்ற கற்பனை தோன்றி நிறைவு பெறுவதுமானது. அந்த விபத்தின் ஒருபகுதிதான் பம்பாய்வாழ் இந்தியரான முகமது அலி ஜின்னா, அவருக்கு அந்நியமான நிலப்பகுதியின் தந்தை ஆனார். ஆசிய ஜோதியாக கனவு கண்ட நேரு, அவரது மதசார்பின்மையைக் கடந்தும் இந்து இந்தியாவின் தலைமை ஏற்பவரானார். அனைத்தும் பல்வேறு இயக்கங்களின் குறுக்கு நெடுக்கான ஊடாட்டத்தின் தீர்மானமற்ற தீர்மானங்களின் விளைவு. ஆனால் அதன் பயனாளிகள் இந்திய விடுதலை என்பது குறித்த எந்த நகர்வையும் செய்யாத இந்துத்துவர்கள் என்பதுதான் நகைமுரண்.

இந்த முரண் இன்று உச்சமடைந்திருக்கிறது, அதற்கு உற்றதுணையாகி நிற்கிறது முதலீட்டியம். இந்த பனியா முதலீட்டியம் உலகளாவிய இருப்பைக் கொண்டது. எனவே அதன் நலன்கள் உறுதியாக ஒரு இந்து அடிப்படைவாதத்தை உருவாக்க முனையாது. ஆனாலும் அதன் முதலீட்டிய நலன்களைப் பேணும் ஆட்சியாளர்களின் அபிலாசைகளையும் அது நிறைவு செய்தாக வேண்டும். இன்றைய ஆட்சியாளர்களான மோடியும், அமித் ஷாவுமே கார்ப்பரேட் முதலீட்டியத்தின் பங்குதாரர்களே. அவர்களது கார்ப்பரேட் ஊழல்கள் ‘கறைபடியாத கரத்திற்கு’ சொந்தக்காரர்கள் என்ற பெயரையும் எளியவர்கள் மத்தியில் சாத்தியமாக்குகிறது. அதேவேளையில் அவர்களை ஆதரிக்கும் உயர்சாதி இந்துக்களுக்கு, அவர்களது சமூக மேலாண்மை தொடர்வதற்கான உத்தரவாதம் வேண்டும். இங்கேதான் இந்துத்துவம் என்ற நுட்பம் களம் காண்கிறது. அது உறுதியாக, ‘ஜெய் ஸ்ரீராம்’ எனும் கோஷத்தில் நிறைவடையாது. இந்துத்துவம் அவர்கள் அளவில் பெருவாரி சமுகத்தை ஒரு போலியான அடையாளத்தில் சிக்குறச் செய்து, அவர்கள் அந்த அடையாளம் சார்ந்து தங்களது சமுக, பொருளாதார நலன்களையும் அந்த ‘அடையாளத்திற்கு’ (இங்கு இந்து) இரண்டாம்பட்சமாக்கும் வகையில் தங்களை ஒப்புக் கொடுக்கச் செய்வதே. இந்தப் பெரும்பான்மை சமூகங்கள் ஆசுவாசமடைய அல்லது திருப்தி கொள்ள அந்த அடையாளம் சார்ந்த அதிகாரமொன்று தேவை. சமூகப் பொருளாதார நலன்களை பலிகொடுக்கும் கூட்டத்திற்கு ஆறுதல் அவர்களுக்கு எதிரிகளாக ஒரு தொகுதியை கட்டமைத்து அவர்களது உரிமையைப் பறிப்பதன் வழியாக, இந்தத் தொகுப்பை மேலாண்மை பெற்றவர்களாக (பாவனையாக) ஆக்குவதே. அதாவது இந்து தேசியத்தின் எதிரிகளாக / மற்றமைகளாக சிறுபான்மையினரை கட்டமைப்பதும், அவர்களது மொழி மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு முன்னுரிமை மறுப்பதன் வழி இரண்டாம் தர குடிநபர்கள் ஆக்குவதே. இந்தப் புள்ளியில் நிகழும் முரண்களின் பயன் விளைவென்னவோ அசலாக ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் காப்பாளர்களான முதலீட்டியவாதிகளுக்குமே.

இந்த முதலீட்டிய இந்துத்துவத்தை முறியடிக்கும் மார்க்கம் ஒன்றுதான். அது இந்திய கூட்டாட்சிக் குடியரசு எனும் கைவிடப்பட்ட அரசியல் தத்துவம்தான். அதற்கான காலத்தை இந்தத் தேர்தல் களம் கனியச் செய்திருக்கிறது. மோடியின் வீழ்ச்சியில் பிரதமர் வேட்பாளர்களாகத் தங்களை கற்பனை செய்து கொண்டவர்களை அதிரச் செய்து, அவர்களது அசலான பலத்தைக் காண்பித்திருக்கிறது. இங்கு அவர்களது தான் எனும் அகங்கார கற்பிதம் மோசமாக அடிவாங்கியுள்ளது. வாய்ப்பாக அனைத்து இடங்களிலும் அவர்களை வீழ்த்தியது மதவாத பாஜகவாக இருக்கிறது. இனி அவர்கள் காங்கிரசை பலமான எதிரியாகக் கொள்ள தேவையற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாயாவதி, மமதா, சந்திரசேகரராவ் என அனைவரது முதுகிற்குப் பின் அச்சுறுத்தலாக நிற்பது சங்பரிவார் பாஜகதான். எனவே இனி இவர்களுக்கான ஒரே நல்வாய்ப்பு மாநில உரிமைகளை முன்வைத்த அரசியலே. தேசியம் இனி இரண்டாமிடத்திற்கு நகர்த்தப்படுவதே முறை. தங்களது மாநில உரிமைகளை வென்றெடுக்கும் வழியாக கூட்டாட்சி வடிவைத் தேர்வு செய்வதே ஒரே வழி. தேசியம் இனி கூட்டாட்சி எனும் சமநீதி தளத்தில் மட்டுமே அனைத்துக் குடிநபர்களுக்குமானதாக மாற இயலும்.

‘மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி’ என்ற தளத்தில் இந்தியாவுக்கு வழிகாட்ட தமிழ்நாடு அரசியல் தத்துவங்களையும், வெற்றிகரமான கூட்டணி மாதிரிகளையும் வைத்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில சுயாட்சி சிந்தனைகள் வளமானவை. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சமூகநீதியும், சமநீதியும் வழங்க வல்லவை. இதுவரையான இந்திய வெற்றிகரமான கூட்டணி மாதிரிகளில் (ஜெயப்பிரகாஷ் நாராயண் உருவாக்கிய ஜனதா தவிர்த்து. அந்த ஜனதாக் கூட்டணிதான் ஜனசங்கம் என்ற நச்சுப் பாம்பிற்கு பொதுவெளி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது என்பது கவனத்திற்குரியது) கலைஞரின் பங்களிப்பு பிரதானமானது என்பது வரலாறு. இதோ இன்று ஊரையெல்லாம் சூறையாடிவிட்ட இந்துத்துவ மதவாத கொள்ளை நோயைத் தமிழ்நாட்டின் எல்லைக்கு வெளியே நிறுத்திச் சாதித்திருக்கிறார் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். இந்தக் கூட்டணி மாதிரியில் காங்கிரஸ் ஒரு அகில இந்திய தொடர்புறுத்தும் கருவிப் பாத்திரத்தை மட்டுமே ஏற்கும். மற்றபடி மாநில நலன்களை, உரிமைகளை முன் வைத்த இந்திய தேசியம் எனும் பரந்துபட்ட எல்லை நோக்கிய நகர்வே லட்சியமாகும். இந்த தமிழ்நாடு மாதிரி இந்திய மக்களாட்சியின் மாண்பைக் காக்கும் வடிவம். இந்துத்துவ மதவாத ‘ஒற்றை இந்தியா’ எனும் அழிவிலிருந்து இந்திய இன, மொழி, கலாச்சாரப் பன்மைத்துவத்துவத்தைக் காக்கும் பகுத்தறிவாளர்களின் முற்போக்கு அரசியல்.