சிவப்புக் குடையும் சில புறாக்களும்…

எப்படிப்பா… எப்படி? பத்து நாளைக்கு முன்னாடி கூட அம்மா உயிருக்குப் போராடினப்பக்கூட ஜி.எச்.சுலதான சேர்த்தோம். இப்ப எப்படி திடீர்னு வீடு வாங்குறளவு பணம்? முகில் நோண்டித் துருவினான்.

“சரி, வாடா வீட்டைப் பார்த்துட்டு வருவோம்”

“அம்மாவையும் கூட்டிட்டுப் போவோம்.”

“மொதல்ல நாம பார்த்துட்டு வருவோம்டா. அம்மா அக்காவ அப்புறம் கூட்டிட்டுப் போவோம்.”

என்னோட வண்டியில் உதைத்துக் கிளப்பும் கம்பி பழுதடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை அது விசையோடு இருந்து உதைபடும்போது திமிறி என் கணுக்காலைப் பதம் பார்த்ததுதான். வண்டியை வழக்கமாகப் பழுது பார்ப்பவனிடம் கொண்டு போக தன்மானம் இடம்தர மறுக்கிறது. “இன்னுமாண்ணா இதை வச்சுகிட்டு மாரடிக்கறீங்க” என்று என்மீதான அக்கறையில் தான் கேட்கிறான் என்றாலும் அந்த வார்த்தையைத் திரும்பத் திரும்ப எதிர்கொள்ள முடியல. ஓடும் வரை ஓடட்டும், பிறகு எங்காவது நிறுத்திவிட்டு வர வேண்டியதுதான். வேறென்ன? எனக்கு நானே சொல்லிக்கொண்டது.

கம்பியைத் தூக்கி நிறுத்தி ஒரே உதையில் இயக்கிவிட்டு தொங்கிய கம்பியை நூலில் கட்டிவிட்டு உக்கார்றா என்று முகிலிடம் சொல்ல, அவன் நம்பிக்கையற்று எந்த ஆர்வமும் இல்லாமல் உட்கார்ந்தான். ஏதோ ஓவியக் கண்காட்சிக்கோ, இலக்கிய கூட்டத்துக்கோ அழைத்துப் போக பொய் சொல்கிறேனென அவன் மனமற்று உட்கார்ந்தான்.வழக்கமாக அது போன்ற பொய்களைச் சொல்லி அவனிடம் நான் விளையாடுவதில்லை.

பிறகேன் என் மீது அவனுக்கு அவநம்பிக்கை? பின்ன இருக்காதா, இவ்வளவு கந்தலான வண்டியை சரிபண்ண வக்கற்றவன் வீடு வாங்கியிருக்கிறேன், அதுவும் கடற்கரையில் என்றால் நம்பற மாதிரியா இருக்கும். வண்டியில் உட்கார்ந்தவனுக்கு என்ன தோன்றியதோ வண்டியிலிருந்து சட்டென இறங்கிவிட்டான். “அப்பா ஒன் ஹவர் வெயிட் பண்றீங்களா? நான் கொஞ்சம் காசு எடுத்துட்டு வர்றேன்… பீச் ரோட்ல ரைடிங் போகப்போறோம். வழியில எதாவது வாங்கி சாப்புட்டுகினு போவலாம். வண்டிக்கு பெட்ரோலும் போடுவேன்” சொல்லிவிட்டு கண்ணடித்தான். ஆமா நல்ல திட்டம்தானே, எங்கிட்ட நூறு ரூபாய்தான் இருக்கு. ஒரு மணி நேரம் தானே போய்ட்டு வரட்டும். சரி போ என்பதுபோல தலையாட்டினேன். நானே இரண்டு முறைதான் அந்த வீட்டைப் பார்த்திருக்கிறேன் என் கைக்கு பத்திரம் வந்த பிறகுதான் எனக்கே நம்பிக்கை வந்தது.இப்படியான வீடு வாய்க்குமென நான் கனவுகூட கண்டதில்லை. அழகான வீடு பின் வாசலில் தொடங்கி சவுக்கு மர வரிசை கடலுக்குப் போகிறது.வாசல் படியில் உட்கார்ந்துபார்த்தால் மணல் மேட்டைத் தாண்டி அலை மோதி தெறித்து சிதறும், சின்ன நண்டுகள் வீட்டு வாசல் வரை வந்து போகின்றன. முதல் நாள் போன போது கடல் நுரை காற்றில் பறந்து வந்து முகத்தில் ஒட்டி காணாமல் போனது. அட, எவ்வளவு அற்புதமான சூழல் அழகான வீடு. முகில் பார்த்தால் என்ன சொல்லுவான். வாசலில் இருந்து கடலைப் பார்க்கலாமென்று சொன்னபோது அவன் முகத்திலிருந்த அவநம்பிக்கையை நான் பார்த்தேன். அப்படி ஒன்றை அவன் விரும்புவான் என்பது எனக்குத் தெரியும்.

அந்த மனிதர் ஏன் இந்த முடிவை எடுத்தார், வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றால் என்ன? சொந்த மண்ணுக்குத் திரும்பி வரவே மாட்டாரா என்ன?வாடகைக்கு விட்டிருக்கலாம் அல்லது நல்லதொரு தொகைக்கு விற்றிருக்கலாம். ஏதேதோ யோசனைகள் அலைக்கழிக்கின்றன.

முகில் அவனது வளர்ப்பு புறாக்கள் இரண்டைப் பணமக்கி வந்திருந்தான். என் பாக்கெட்டில் ஒரு கரும்பச்சை நோட்டைத் திணித்தான். அவனிடம் காசிருந்தால் செய்கிற முதல் வேலை அது. நான் மகிழ்ச்சியில் வழி நெடுக சாலைகளைப்பற்றி சொல்லிக்கொண்டு போனேன். அவன் திடீரென அப்பா கர்ணப்புறாவென கத்தினான். பட்டினப்பாக்கம் தாண்டும்போது ஓமர்… ஓமர் என்று கத்தினான். “டேய் சும்மா வாடா” என்று நான் எரிச்சலில் கத்தினேன். “ப்பா எங்காவது கரும்பு ஜூஸ் கடையப் பாத்தா நிறுத்துங்க. எனக்குத் தொண்டை காய்ஞ்ச மாதிரி இருக்கு.” அடையாறு எல்பி ரோட்டின் இடதுபுறம் கரும்பு சாறு கடையோரம் நிறுத்தினேன். குளுமையான சாறைக் குடித்து வாயைத் துடைக்கும்போது அவன் இன்னும் இரண்டு கிளாஸ் குடுங்க என்று சொல்ல “போதும்டா…” “அப்பா சாப்புடுப்பா எனக்குத் தெரியாதா உன்னப்பத்தி. இன்னும் நாலு கிளாஸ் கூட குடிப்பதானே” என்பதுபோல பார்த்துக் கண் சிமிட்டினான்.

விலங்கியல் இரண்டாம் ஆண்டு மாணவனான அவன்மீது நேற்று இன்னேரமெல்லாம் கடுமையான கோபத்திலிருந்தேன். கடந்த ஆண்டு இரண்டு பாடங்கள் நிலுவையில் உள்ளது. ஒரு வேளை மூன்றாகக் கூட இருக்கலாம். நான் துருவிக் கேட்கவில்லை.அவன் படிப்பில் அவ்வளவு ஆர்வமற்றவனாக இருக்கிறான். புறா, கோழி வளர்ப்பதில் ஏதோ கெஞ்சம் ஆர்வமுள்ளவனாக இருக்கிறான். நான்காம் வகுப்பு படிக்கும்போது மீன் தொட்டி கேட்டான் என்று மீன் தொட்டி வாங்கித் தந்தேன். அவன் அக்காவுடன் சண்டையிட்டு அதை நொறுக்கி தள்ளிவிட்டான். அன்று நான் வீட்டுக்குள் நுழைந்தபோது தங்க மீன்களும் நீல, கறுப்பு குட்டி மீன்களும் தரையில் துடித்துக் கொண்டிருந்தன. பொறுக்க முடியாமல் மீன் வளர்க்க தடை விதித்திருந்தேன். பிறகு அதைப்பற்றி நானும் மறந்துவிட்டேன். எதையாவது தேட அந்த இடத்தில் இரண்டு புட்டிகளில் சண்டைமீன்கள் துள்ளிக்கொண்டிருக்கும்.

வீட்டின் கைவிடப்பட்ட எல்லா மூலை முடுக்குகளிலும் அவைகளைப் பதுக்கி வளர்த்துக்கொண்டிருந்தான். வீட்டில் எப்போதும் ஏதாவது ஒரு பறவையின் கீச்சொலி கேட்டபடியே இருந்தது. புறா, மைனா, ஒரு சிட்டுக்குருவியின் குரலையாவது கேட்கும்படியிருந்தது. சிலநாட்களுக்கு பிறகு கோழிகளின் குரல்களைக் கேட்கிறேன், இப்போது எல்லாம் பழகிவிட்டது. அண்டாவுக்கு பக்கத்தில் புறா மினுங்கிக்கொண்டிருந்த நாளில் “எதுக்குடா இப்படி இதுங்கள ஒளிச்சி வளக்கற. போ மாடியில இடமிருக்கு, அங்க போய் வளர்த்துக்கோ” என்று சொன்னதோடு சரி. எதிர் வீட்டுப்பையன் சண்டைக் கோழிகளை வளர்ப்பவன். அவனது கோழிகள் வாசலில் திமிறிக்கொண்டு திரியும். இப்போது அவை வீட்டுக்குள்ளேயும் நுழைந்து மணிபிளான்ட் கொடி பாட்டில்களைத் தட்டிவிடுகின்றன, “ஏன்டி அந்தப் பையன்கிட்ட சொல்லு, கோழிங்க பண்ற அட்டகாசத்தைப் பாரு” கத்தினேன். “அந்தப் பையன்கிட்ட எங்க சொல்றது. உம் பையன்கிட்டதான் சொல்லணும்.” அவள் சொன்னதுமே எனக்குப் புரிந்துவிட்டது.

“பரண்ல போய் பாருங்க, ஆறு முட்டைய கோழி அடைகாக்குது. எழுதுறன், படிக்கறன்னு இருந்தா வூட்ல நடக்குறது எங்க தெரியப்போவுது ‘எதிர்வூட்டு’ பையன்கிட்ட சொல்லவாம்.” அவள் புலம்ப ஒரு வாய்ப்பைத் தந்துவிட்டேன். நினைவுகளோடு கரும்புச்சாறு உள்ளே இறங்கத் திணறியது. நான் போய் பெட்ரோல் போட்டு வர்றேன் என சாலைக்கு எதிரே இருந்த பங்குக்கு வண்டியை எடுத்துப் போனான். கறும்புச்சாறு இனித்தது. சரி அவன் புத்திக்குட்பட்டதை செய்றான். விலங்கியல் மாணவன்தானே என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். திருவான்மியூர் டெப்போ கடந்து திரும்பும்போது “இந்த வண்டிக்கு எவ்ளோ ரூபா செலவுபண்ணா சரிபண்ணலாம்.” “இதை சரிபண்றதுக்குப் புதுசா ஒன்னு வாங்கலாம் கொஞ்சம் பொறு.” நம்பிக்கையற்று உச்சுக் கொட்டியவன், “நாலஞ்சு வருஷமாவே இதானப்பா சொல்றீங்க.”

என்னிடம் பதிலில்லை.

“ஐந்தாயிரம் செலவு பண்ணா சரி பண்ணிடலாமாப்பா.”

“ம்… பண்ணலாம்…” சரி ஏதோ அறிவுபூர்வமாய் சிந்திக்கிறான் போல என்று நினைத்தேன்.

“இதை இரும்புக் கடையில போட்டா எவ்ளப்பா தருவான்.” அட, என் அறிவு தாகமுள்ள மவனே, ஒரு நிமிஷத்துல காய்லாங்கடய யோசிச்சிட்டியடா.

“டேய்…” எரிச்சலில் கத்தினேன். “சும்மா வாடா… இருக்கிறது. இது ஒன்னுதான்… அதையும் இரும்பு கடையில போட்ரு.” “ப்பா சும்மா விளையாட்டுக்கு உங்கள டெர்ரர் பண்ணிப் பாத்தேன் இதுக்கெல்லாம் டென்ஷனாவ கூடாது.” சொல்லிக் கொண்டே கட்டியணைத்தான். “வீடு வாங்கிருக்கிறேன்னு வந்து பாருன்னு ஏமாத்தி இலக்கிய கூட்டத்துக்கு கூட்டிக்குனு போறீங்கள்ல, நான் டென்ஷன் ஆகுறனா?” என்று முதுகில் செல்லமாகக் குத்தினான்.
அடப்பாவி, இவ்வளவு காலம் நான் அவநம்பிக்கையைதான் உண்டாக்கியிருக்கிறேனா? ம்… பெருமூச்சைத் தவிர வேறுஆறுதலில்லை. என் மீதே பரிதாபம் உண்டாக சிரிப்பு வருகிறது. அவனது அணைப்பு ஆறுதல்தான் பனையூரை தாண்டும். “அப்பா டீ சாப்புடறீங்ங்களா” “வரும் போது சாப்புடலான்டா.” “ஆமா கூட்டத்துல டீ வடை தருவாங்கல்ல..” அவன் இலக்கிய கூட்டம்னே முடிவு பண்ணிட்டான் போல. எனக்கு மீண்டும் நெஞ்சு புகையுது, நான் திரும்ப வேண்டிய இடம் வர இடதுபக்கம் திரும்பினேன். கடல் அருகாமையில் இருப்பதற்கான அறிகுறிகளை உணர்ந்து அமைதியாகிவிட்டான்.
கடலின் வாடை வீசியது. ஆச்சரியப்படப்போறான் என்று மனதிற்குள் எனக்கு உற்சாகம் பொங்கியது. “அப்பா கடல்” என்று கத்தினான். நான் வலதுபுற சந்துக்குள் திரும்பி வண்டியை நிறுத்தினேன். வீதி ஆளற்று அமைதியாகக் கிடந்தது. அங்கு ஆட்கள் யாரும் இல்லாததே அவனுக்குள் சந்தேகம். ஒரு வேளை அப்பா உண்மைய தான் சொல்றாரோன்னு என்னைத் தீவிரமாக உற்றுப் பார்த்தான். தயக்கத்துடன் “இந்த வீடாப்பா…” “ஆமாம்” என்பதுபோல தலையாட்டிக் கொண்டே பாக்கெட்டிலிருந்த சாவியை எடுத்தேன்.” “உண்மையாதான் சொல்றயா.” வயிற்றில் இடித்தான். கடலை நோக்கிப் போகும் சாலையில் நான்கு பனை மரம் சலசலப்புடன் கடல் காற்று அவனை என்னமோ செய்திருக்க… “செம எடம்பா” சொல்லிக்கொண்டே மாடியின் விளிம்பில் மூன்று பச்சைக்கிளிகள் உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டான் “அப்பா கிளி.” கத்தினான். சாவியை அவனிடம் தந்து “போய் திறடா” திறந்தான்.

அண்டாகாகசம்

அபூக்காகுகும்

திறந்திடு சீசே…

குரல் எனக்கு மட்டும் கேட்டது. அவனுக்கு இது உண்மையாகவே நம்ப வீடா இருந்திடக் கூடாதா என்கிற ஆசையும் அவநம்பிக்கையுமாக என்னைப்பார்த்தான்.
“அப்பா இது யார் வீடுப்பா…” “நம்மவீடு தான்டா” அவனுக்கு அநியாயத்துக்கு வியர்த்துவிட்டது. வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய பெரிய கதவைத் திறந்து உள்ளே நுழைந்தோம்.நான் சுவிட்ச் போட்டேன். அப்பா வியப்பில் கத்தினான். கூடத்தில் இரண்டு சர விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன, முரட்டுக் கறுப்பு தோலால் ஆன சோபா கண்ணாடியாலான தேனீர் மேசை பக்கவாட்டில் இரண்டு அறைகள்.

முதலறையை முகில் திறந்து பார்த்தான் கறுப்பு நிற பெரிய இரும்புக் கட்டில் சன்னல் திரையை விளக்கினான், பனைமரங்கள் தெரிகிறது. குளிரூட்டியை இயக்கினான், “ரிப்பேர் போலருக்குதுப்பா.” ஏமாற்றத்துடன் குரல் வந்த்து. “டேய் சுவிட்ச் போட்டு ரெண்டு மூணு நிமிசமாவும்டா.” “ஆமா வேலை செய்யுதுப்பா.” கத்திக்கொண்டே படுக்கைக்குத் தாவினான். “இன்னாப்பா இவ்ளோப் பெரிய வீடு..” அவன் இன்னும் கூட நம்பிக்கையற்று இருப்பதால் அந்த உண்மையைச் சொல்லிவிட மனம் துடித்தது.

சரி, அவனுக்கு வீடு பிடித்திருந்தால் மகிழ்ச்சிதானே. நாங்க நாலு பேரும் ஒரே அறையிலதான் தூங்குறோம். நான்கு அறைகள் கொண்ட ஓரளவு சுமாரான வீடு தானென்றாலும் சன்னல்கள் அற்ற அடைப்பான வீடு என்பதால் பத்துக்கு பதிமூணு அளவுள்ள வெளி அறையிலேயே நால்வரும் தூங்க வேண்டியுள்ளது. முகில் ஆறடி மூன்றங்குலத்தை தாண்டி வளர்ந்துகொண்டிருக்கிறான். தூக்கத்துல அவன்கிட்ட அடிபடறது நான்தான். நண்பர்களோடு விளையாடுவதுபோல கனவு காண்பானோ என்னவோ ஒரு நாளிரவு ஓங்கி வாயிலயே ஒரு குத்து விட்டான். இது மாதிரி பல குத்துகளை வாங்கியிருக்கிறேன். குறைந்தளவு அதுலருந்து தப்பிக்கலாம் என்பது மட்டுமே என் நிம்மதி, கிழக்குப்புறமிருந்த இன்னொரு கதவைத் திறந்தான் மூன்று பக்கமும் மரத்தாலான அழகிய அலமாரிகள் ஒரு பக்கம், சமையலறை பெரிய சாப்பாட்டு மேசை, மூன்று எக்ஸ் ஒரு குறுக்குக் கட்டை மீது உறுதியாக்கப்பட்ட கண்ணாடி பரப்பு மையத்தில் பெரிய காலியான வெள்ளை பீங்கான் பாத்திரம் இருந்த்து.பக்கத்தில் ஒரு தேனீர் கோப்பை ஏதோ அழகுக்காக வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். சாப்பாட்டு மேசையின் மீது அழகான விளக்கு தொங்கிக்கொண்டிருந்தது. எல்லா சாமான்களும் எடுத்துப்போயிருப்பார்கள் போல. அறை காலியாக இருந்தது. சாப்பாட்டு மேசைக்கு எதிரே அலுமினிய நிறத்தில் பிரிஜ் மட்டும் இருந்தது.முகில் அதை இயக்கிப் பார்த்தவன் பிரிஜ்ஜை திறந்தான்.

நீல உறையிட்ட இரண்டு பெரிய சாக்லேட்டை எடுத்து எனக்கு ஒன்றைத் தந்தான். அவன் முகத்திலிருந்த மகிழ்ச்சியை என்னால் உணர முடியுமளவு அவன் முகம் பளீரென மினுமினுத்தது. இப்போதுதான் முளைக்கத் தொடங்கியிருந்த அவனது மென்தாடியை நான் முதல் முறையாக உற்றுப்பார்த்தேன். அவன் புன்னகைத்தபடி என் வயிற்றில் கை விரல்களை மடக்கி இடித்தான், கிழக்குப் புறமிருந்த மூன்றாவது கதவையும் திறந்தவன் அப்பாவென கத்தினான். வண்ண பீங்கான் சில்லுகளால் ஆன அழகியதரை. சாம்பலும் வெளிர் நீல நிறத்தாலான ஓவியம் கடலைகளின் நடுவே ஆறு டால்பீன்கள் துள்ளி நீந்திக்கொண்டிருந்தன,

“எத்தனை டால்பீன்கள்பா?”

“ஆறு.”

“இல்ல பன்னெண்டு.”

நான் மீண்டும் எண்ணினேன். ஆமாம், குட்டியும் குலுவானுமாக பதிமூணு இருக்க “பதிமூனுப்பா… அது டால்பீன் இல்ல அலை.” ஆமா, அது அலை துணுக்குதான். எவ்வளவு நேர்த்தியான சித்தரிப்பு. கடல் புறமாக இரண்டுபெரிய சாளரங்கள் திறந்துவிட்டான். காற்று பாய்ந்து வந்தது. சவுக்கு மரங்கள் மறைத்திருந்ததால் மணற்பரப்பும் கடலும் தெளிவாகத் தெரியவில்லை. கதவைத் திறந்தான் பதினைந்து அடி தூரத்தில் வேலிக்கதவு தாண்டி கடல் அலை தெறிப்பு நீலக்கடல் தெரிகிறது. முகில் எனக்கு முன்பாக நின்று கத்திக்கொண்டிருந்தான். வேலி எல்லைக்கு முன்பாக இடதும், வலதுமாக புறாக்கூண்டுகள், வடக்கு எல்லையில் புறாவுக்கான தட்டி, கொடி மரம். முகில் கடல் பிரமிப்பிலிருந்து மீண்டு புறா கூண்டுகளை ஆராய்ந்தான். “புறா வளத்துருக்கிறாங்கப்பா” என்று மெதுவாக முணுமுணுத்தவன் கடலை நோக்கி ஓடினான். அவன் வருவதற்குள் எனக்கு சிகரெட் பிடிக்க ஆசையாக இருந்தது. வாசலில் உட்கார்ந்து புகைக்க வானம் சட்டென இருளத் தொடங்கியது.
வண்ணமயமான கடற்பரப்பு வானம் எல்லாமே கறுப்பு வெள்ளைக்கு மாறத் தொடங்கியது. இரண்டாவது சிகரட்டை முடித்து கடைசித் துண்டை எரியும்போது அலைகளில் கால் நனைத்து வந்துகொண்டிருந்தான். வந்தவன் காற்றின் வாடையில் புகையிலை நெடியை உணர்ந்து அதுக்குள்ள சிகரெட் பிடிச்சுட்டிங்களா என்பது போல என்னைப் பார்த்துவிட்டு “எப்படிப்பா இவ்ளோபெரிய வீடும்” “உனக்குப் பிடிச்சிருக்கா” “பிடிச்சிருக்காவா!” நான் இப்படி ஒரு வீட்ட கற்பனகூட பண்ணதில்ல. அம்மா பாத்தாங்க மயக்கம் போட்டு விழுந்திடுவாங்க..” என்றவன், “எப்பப்பா இங்கவருவோம்.” “நாளைக்கே வந்திடலாம்… “இன்னாப்பா சொல்ற” “நாளைக்கேவா?” “நம்ப வீடுடா எப்பவேண்ணா வரலாம்…” “காலைல தூங்கியழுந்து வாசல்ல நின்னுப் பார்த்தா கடல்தெரியும்” சத்தமாக சொன்னவன், “எப்படிப்பா? இந்தமாதிரி வீடு” என்று சந்தேகத்தை எழுப்பி அதைப் பாதியிலேயே மறந்தவன்போல “அப்பா மாடிக்குப் போய் பாக்கலாம் வாங்க.” அவன் படியேறி ஓடினான். மேகம் அநியாயத்துக்கு கறுத்துவிட்டது. அவன் மாடிக்குப் போய் நின்ற நொடியில் கத்தினான். “அப்பா வாங்க… வாங்க” நானும் என்ன அதிசயத்தைப் பாத்தானோ, மாடிக்கு ஓடினேன். “சீக்கிரம் வாப்பா” அவசரமாக கத்தினான். மரியாதை இல்லாமல் கூப்பிட்டறளவு என்னத்தப் பாத்துட்டான். “ம்… ஆமாம்” அவன் கத்தியது சரிதான், பெரிய நீலநிற பீப்பாய்களில் ஆறு பப்பாளி மரம் செழிப்பாக பழுத்த கனிகளுடன் நிற்கிறது. தரையில் இரண்டு கனிகள் விழுந்து நசுங்கிய வாடை… கைப்பிடி சுவர் ஓரமாய் மூன்றடுக்கு தொட்டிகள். நடுவில் தடித்த மரத்தாலான வெள்ளையடித்த ஊஞ்சல் காற்றில் லேசாக ஆடிக்கொண்டிருந்தது.

ஊஞ்சலுக்குப் பின்னால் நான்கு புறாக்கள் தீனி பொறுக்கிக்கொண்டிருந்தன. கடலின் நீலம் மறைந்து கறுப்பாக, பிரமாண்டமாக முகில் மகிழ்ச்சி பீறிட்டெழ குதித்தான். என் கையைப் பிடித்து இழுத்துப்போய் ஊஞ்சலில் உட்காரவைத்து தள்ளிவிட்டான். கடலும், வானமும் ஒன்றாகிச் சுழன்றது. அவன் ஆர்வத்தில் வேகமாக தள்ள… போதும் நிறுத்துடா நான் கத்தினேன். “எப்படிப்பா இந்தமாதிரி வீடு!” சந்தேகத்தோடு கேட்டான். அதற்கு எப்படிப் பதில் சொல்வது? ஆனால் சொல்லித்தானே ஆகணும். ஆனால் இப்போது வேண்டாமென தவிர்த்தேன். எல்லாம் இருபதாண்டு உழைப்புதானென பொதுவாகச் சொல்லிவைத்தேன். “சூப்பர்ப்பா… நான் இங்கயே இருந்துட்டா.” “அம்மா அக்காவ கூட்டிட்டு வந்து காட்டணும் அந்த வீட்டுலர்ந்து பொருள்கள கொண்டு வரணுமில்ல… பொறுப்பில்லாம இங்க இருந்துட்டான்ற” “எப்பா… நா இங்கயே இருக்கிறம்பா… நாளைக்கு அவங்கள கூட்டிட்டு வாங்க” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வானம் தூற ஆரம்பித்தது. முகில் வேகமாக கீழிறங்கி ஓடினான். நான் மாடியில் நின்று கடலையும், வானத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் புறா கூண்டுகளைத் திறந்து வைத்துக்கொண்டிருந்தான். ஒன்று, இரண்டு புறாக்களாவது திரும்பிவரும் என்பது அவன் நம்பிக்கை. மழை தீவிரமாக கீழே இறங்கி வர அவன் வாசலுக்குள் நின்று மழையுடன் சேர்த்து கடலை வேடிக்கைப் பார்க்க மழை தீவிரமடைந்தது. அந்த நேரம் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு திரும்ப வாசலில் சிவப்பு குடையுடன், நடுத்தரமான வயதுடையவள் நிற்பது தெரிகிறது. நான் கதவைத் திறந்தேன் “யாரைப் பார்க்கணும்?” “வணக்கம் சார், உங்களத்தான் பார்க்க வந்தேன். உங்களோட எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறேன். உங்கள் ஒன்னாவது தெரு நாவலை நேத்துதான் படிச்சி முடிச்சேன்.”

அந்தப் பெண் பதட்டமாகவும் மூச்சிரைத்தபடி பேசினாள். அவளிடமிருந்து குடையை வாங்கி மடக்கி ஓரமாக வைத்தேன். அவள் கொண்டுவந்த சின்ன நெகிழி கூடையில் பிளாஸ்க்குடன் சின்ன பொட்டலம் இருந்தது. மேற்கின் கதிரொளி மழைமேகக் கசிவின் ஒளியில் பார்க்க மிக அழகாகத் தெரிந்தாள்.

“நீங்க வீட்டுக்கு வரும்போதே நான் பார்த்துட்டு சின்னவருக்குப் போன் பண்ணிட்டு இருந்தப்ப மழை ஆரம்பிச்சுடுச்சி. உங்களுக்கு காபி, பலகாரம் கொடுக்கச் சொன்னார்… நான் இந்தத் தெரு கடைசியில தான் இருக்கிறேன்.” “அப்படியா வாங்க, உக்காருங்க. கனடாவுல இருக்கிறவர் எனக்கு காபி தரச் சொல்றார்… பாருங்க உலகம் ரொம்ப சின்னதாயிடுச்சிம்” “சின்னவர் நிறைய படிப்பார் அவர்ட்ட உங்க நாவல்கள பத்தி பேசிக்கிட்டிருந்தப்ப நீங்கதான் இந்த வீட்ட வாங்கப் போறதா சொன்னார். இந்த வீட்ட வாங்க நிறையப் போட்டி. நீங்க வாங்கினதுல எனக்கு ரொம்ப சந்தோஷம், வாழ்த்துகள். இந்த ஏரியாவே சின்னவரோட குடும்பத்துக்கு சொந்தமானதுதான். பாவம், மிஞ்சி நின்னது இந்த ஒரு கிரவுண்ட் நிலம் மட்டும்தான்.அவங்கப்பா இந்த வீட்ட ரொம்ப ஆசையா கட்டினாரு பாவம் சின்னவரு… அவங்கம்மா முகத்தையே பார்த்தது இல்ல சின்னவரோட அண்ணன் எங்க போனாருன்னே தெரியல. சின்னவருக்கு உலகமே அவுங்க அப்பாதான். அவரோட வாழ்க்கைய அந்தப் புத்தகத்துல ரொம்ப அழகா எழுதியிருந்தீங்க, அதையும் படிச்சுட்டேன். அதை ஆங்கிலத்துல மொழிபெயர்க்கப் போறதா சின்னவர் சொல்லிட்டிருந்தார்.ஒரு நாள் அந்தப் புக்க கையில வச்சுகிட்டு கதறியழுதுகிட்டிருந்தார். இந்த புக்குதான் அப்பா, அப்பாதான் இந்த புக்குன்னு, திரும்பத் திரும்ப சொல்லிகிட்டிருந்தார் சார்… பாருங்க பேச்சில மறந்துட்டன்” என்றவள் இரண்டு குவளைகளில் காபி ஊற்றி மேசையில் வைத்து பிஸ்கட் பொட்டலத்தைப் பிரித்து வைத்தவள், “இவர் உங்க மகனா?” பதிலுக்கு “ஆம்…” என்று தலையாட்டிவிட்டு சாப்பாட்டு மேசையில் ஒற்றையாக இருந்த தேனீர் கோப்பை நினைவுக்கு வர ஓடிப் போய் அதை கழுவிக் கொண்டு வந்தேன், பிளாஸ்க்கில் இன்னமும் மிச்சமிருந்த காபியை அதில் ஊற்றி வந்த விருந்தாளிக்குத் தர அந்தப் பெண் கூச்சத்துடன் புன்னகைத்தாள். “சின்னவருக்கு புறான்னா ரொம்ப பிரியம். நூற்றி இருபது புறா. எல்லாமே விலைமிக்க புறாக்கள். விற்றிருந்தா இரண்டு லட்சத்துக்கு மேல போயிருக்குமாம் தென்காசில இருக்கிற அவரோட நண்பருக்கு குடுத்துட்டார். நேத்துதான் வந்து பிடிச்சிட்டுப்போனாங்க” “அவ்ளோப்புறாவா!” முகில் ஏமாற்றமாக உச்சுக்கொட்டினான். “எப்ப வீடு வர்றீங்க.” “நாளைக்கே வரலாம்ன்னு இருக்கோம்.” “நாளைக்கேவா…” “ம்…” “நாளைக்கு செவ்வாய்க்கிழமையாச்சே” “அட..அதுக்கென்ன, அதுவும் கிழமைதானே… நமக்கு எல்லா நாளும் நல்ல நாள்தான்” “அது சரி” அவள் உதட்டைப் பிதுக்கினாள். அதை ஏற்றுக்கொள்பவள் போல புன்னகைத்தாள். “அப்ப பால் காய்ச்ச மாட்டீங்க ஸ்ட்ரெய்ட்டா சமையல்தான்” “அதான் நீங்க காபி, பலகாரம் தந்துட்டிங்களே… அவ்ளோதான்” அவள் சிரித்தாள். அவளது நட்பும், சிரிப்பும் மகிழ்ச்சியாக இருந்தது. “சரி, நான் கிளம்பறன், ஒரு நாள் நீங்க எங்க வீட்டுக்கு வரணும் சார்” என்றபடி எழுந்தவள், பலகாரம் எடுத்து வந்த பையிலிருந்து ஒரு வெள்ளை உறையை எடுத்து நீட்டினாள். “சின்னவர் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னார்.” என்ன என்பதுபோல் நான் ஆச்சரிய எதிர்பார்ப்புடன் அவளைப் பார்க்க, எனக்குத் தெரியாது என்பதுபோல தோள்களை குலுக்க, நான் குடையை விரித்து தந்தேன்.வெளியே மழை கொட்டுகிறது. உள்ளத்திலோ மின்னல், புன்னகையுடன் விடைபெற்றாள். என் பார்வை எல்லையிலிருந்து அவள் நகர்ந்த நொடியில் கவரைத் திறக்க புத்தம் புதிய இளஞ்சிவப்பு நோட்டுகள்.
அந்த நேரம் முகில் மொபைலில் பேசிக்கொண்டு கிழக்குவாசலைப் பார்த்தபடி நின்றிருந்தான். நான் நோட்டை எண்ணினேன். நூறு நோட்டுகள் எனக்கு வானத்தில் பறப்பது போலிருந்தது. முகில் பின் வாசல் வழியே கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான். “சரிடா… வா கிளம்பலாம்.” “அப்பா நீங்க போய்… அம்மா அக்காவ கூட்டிட்டு வாங்க… நான் இங்கயே இருக்கிறேன்.” “டேய்… முட்டாள். தனியா எப்பிட்றா இருப்ப” நான் பல்லைக் கடித்தேன். “வா நாளைக்கு எல்லாரும் சேர்ந்து வரலாம்.” “அப்பா என்னோட கிளாஸ்மேட் பக்கத்துல தானிருக்கிறான், என்னப் பாக்க வந்திட்டிருக்கிறான்பா நான் இங்கருக்கிறன்ப்பா.” கெஞ்சுவதுபோலக் கேட்டான். “ம்…” இருக்கட்டுமே, வயசுப் பையன் பக்கத்துல ப்ரண்டு வீடு “சரி, பாத்து பத்திரம்” அவன் என் பாக்கட்டில் திணித்திருந்த கரும்பச்சை நோட்டை நான், அவன் பாக்கட்டில் திணித்துவிட்டுக் கிளம்பினேன். வண்டியை உதைத்து இயக்கி கம்பியை நூலில் கட்டினான். “இந்த வண்டிய முதல்ல மாத்தணும்” “நாளைக்கு புது வண்டி எடுத்துடலாம்டா.” “இன்னாப்பா சொல்றீங்க” நான் சொல்வதை முதல் முறையாக நம்புவதுபோல நெற்றியை சுருக்கிக்கொண்டு அப்பாவென்று ஆச்சரியமாக கத்தினான். நான் கண்ணடித்தேன். அதன் பின்னே ஈரம் சுரந்துகொண்டிருந்தது. அது துளியாக மாறும் முன்னே நான் கிளம்பிவிட்டேன். ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது.

மடை திறந்து தாவும் நதியலை பாடலை முணுமுணுத்தபடி இன்பத்தில் கண்ணீர் துளியை மழைத்துளி கழுவுகிறது. மன நிறைவோடு பெட்ரோல் டாங்க்கில் தாளம் போட்டபடி பறக்கிறேன்.பாக்கட்டைத் தொட்டுப் பார்த்தபடியே வீடு வந்து சேர்ந்தபோது வழக்கம்போல அவள் ஏதோ சத்தம் போட்டுக்கொண்டிருந்தாள்.

“புள்ளைய தனியா விட்டு வந்துட்டாராம்… புது வீட்டுல வயசுப்புள்ளைய யாராவது விட்டு வருவாங்களா?” மழை சோவெனப் பெய்துகொண்டிருந்தது. எனக்கும் கலக்கமாகத்தானிருந்தது. சரி, பக்கத்துல ப்ரண்டு இருக்கிறான்னு சொன்னானேன்னு சமாதானப்படுத்திக்கொண்டேன். பணத்தை அவளிடம் கொடுக்க ஆசையாக கவரை எடுக்க முயன்று வேணா, நாளைக்கு அந்த வீட்டுல வச்சு தரலாம் என்ற திட்டம் தோன்றியது. வடசென்னை நெருக்கடியில் சன்னலற்ற வீட்டில் இன்னைக்குப் பார்த்து இதமா குளிருது. போர்த்திக்கொண்டு கண்ணை மூட, “அஞ்சு மணிக்கு அலாரம் வைடி.” “ஏன்? என்னை கூட்டிக்கினு போய் காட்டியிருக்கலாம்ல்ல. புள்ளையதான் முதல்ல கூட்டிக்கினு போய் காட்டணுமா?” “ஏய்… தூங்குடி அதான் காலையில கூட்டிக்குனு போறம்ல. அப்பப்பாரு இப்பதூங்கு.” அவளும் மகளும் புலம்பிக்கொண்டிருந்தார்கள். உறக்கத்தில் சரிகிறேன், உறக்கத்திலும் பணம் இருக்கும் பாக்கெட்டை கை தடவியபடியே இருக்கிறது.உறக்கத்திலும் கடலையுடன் சிவப்புக்குடை காற்றில் படபடத்தபடியேயிருக்கிறது. யாரோ உலுக்குகிறார்கள். “எப்பா எழுந்திரு. மணி எட்டாவுது. இன்னும் தூங்கறீங்க” முகில் தண்ணீரும், டீயும் கொண்டுவந்து வைக்கிறான். “இன்னாடா இங்கிருக்கற” என்னைக் குழப்பத்துடன் உற்றுப் பார்த்தவன் “இங்ருக்கிறனா” என்று சிரித்துக்கொண்டே “வாய கழுவிட்டு டீய குடிப்பா.” தண்ணி சொம்பையும், டீயையும் பக்கத்தில் வைத்துவிட்டு நான் எழ கை நீட்டுகிறான். காட்சிகளிலிருந்து விடுபடாத கை காலியான பாக்கெட்டைத் துழாவுகிறது. வெளியே மழை, இடி, மின்னல்.

ஓவியங்கள்: சக்தி குருநாதன்