சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை போவதற்காக சென்னையில் பேருந்து ஏறிய அந்த இளைஞன் மதுரை வந்து சேர்ந்த பொழுது பிணமாகி இருந்தான்.

என்னுடைய சக நண்பரின் மகன் அவன். ஆந்திராவில் ஒரு கல்லூரியில் முதுகலை அறிவியல் படிப்பை சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து முடித்து, பின்னர் ஆய்விற்காக ஐ.ஐ.டி.யில் சேர்ந்தவன் அவன். மூன்று ஆண்டுகள் ஆய்வுகள் கழிந்தது. ஒவ்வொருமுறையும் வீட்டிற்கு வரும்போதும் ஒருவித மன அழுத்தத்துடன் இருதிருக்கிறான். அப்போது நண்பருக்குக் காரணம் புரியவில்லை. அவன் இறப்பிற்குப் பின்தான் தெரிந்தது. அவன் மேற்கொண்ட ஆராய்ச்சி ஒவ்வொரு கட்டத்திலும் அவனுடைய வழிகாட்டியால் குறை சொல்லப்பட்டு நிராகரிக்கப்பட்டு வந்ததுதான் அவன் மரணத்தைத் தேடிக் கொண்டதற்கானக் காரணம் என்று சொல்லப்பட்டது.

ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் அளவிற்கு அவன் தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. அதனால் அவன் மரணத்தை தழுவ வேண்டி வந்துள்ளது என்று தங்களைச் சமாதனப்படுத்திக் கொண்டார்கள் அவனுடைய பெற்றோர்.

ஆனால் இன்று, ஃபாத்திமா வரை மட்டுமல்ல, ஃபாத்திமாவிற்குப் பின்னரும் ஐ.ஐ.டி.களில் தற்கொலை தொடர்கிறது. ஃபாத்திமா இறந்த சில நாட்களுக்குள்ளாகவே ஜப்பானிலிருந்து பயிற்சிக்காகப் படித்துவந்த மாணவர் ஒருவர் கௌஹாத்தி ஐ.ஐ.டி.யில் குளியலறை ஜன்னலில் கயிறு மாட்டி தற்கொலை செய்துகொண்டிருகிறார். இந்திய ஐ.ஐ.டி.களில் ஆய்வு மாணவர்கள் தற்கொலைக்கு உந்தித் தள்ளப்படுவதின் காரணம் அவர்களுடைய தகுதியின்மை அல்ல, மாணவர்கள் மீது அக்கறையற்ற ஐ.ஐ.டி. கல்வி அமைப்பின் கொடூரமான தன்மைதான் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

ஐ.ஐ.டிகளில் இதுவரை 53க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடந்துள்ளன. இவற்றைத் தடுக்க ஐ.ஐ.டி. என்ன செய்தது என்ற கேள்வி பலரால் எழுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 23 ஐ.ஐ.டிகளில் இதுவரை 300க்கும் மேற்பட்ட மனநல ஆலோசகர்கள் ஆன்லைன் கவுன்சிலிங் கொடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள். மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்கள் அவர்களிடம் இணையதளம் வழியாக உரையாடித் தங்கள் அழுத்தங்களைப் போக்கிக்கொள்ள இயலும் என்று ஐ.ஐ.டி. நிர்வாகம் கூறுகிறது. மனிதநேயம் கூட இணையத்தின் மூலமே சாத்தியம் என்று ஐ.ஐ.டி. நிர்வாகம் நினைக்கிறதுபோலும்.

ஐ.ஐ.டி.யில் நாடு முழுவதிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதற்குக் காரணம், தேர்வு அழுத்தம் மற்றும் ஆய்வு வழிகாட்டிகள் கொடுக்கும் மன அழுத்தம் ஆகியவை ஆகும். இங்கு கல்விமுறை ஒற்றைப் பரிமாணம் கொண்டதாகவே இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிரம்மாண்டமான ஆராய்ச்சி இயந்திரத்திற்குள் தள்ளப்படும் இளம் மாணவர்கள் அந்தக் கல்வி அமைப்பின் அழுத்தங்களை எதிர்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

ஆனால் இந்த அழுத்தங்களை சமாளித்து வெற்றிபெற்று வெளியேறியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இது எப்படி இவர்களுக்குச் சாத்தியமாகிறது என்பதும் ஆராயப்பட வேண்டிய அம்சமாகும்.

ஃபாத்திமாவிற்கு முன் தங்கள் உயிரை நீத்த பல ஐ.ஐ.டி. மாணவர்கள் இறுதித் தருணத்தில் வெவ்வேறு குறிப்புகளை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

ஐ.ஐ.டி.யின் இந்தத் தொடர் தற்கொலைகள் பற்றிய விவரங்களுடன் ஒரு இணையதளத்தையே அதனுடைய முன்னாள் மாணவர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடங்கி மனநல ஆலோசனைகளையும் அதில் வழங்கி வருகிறார்.

ஐ.ஐ.டி. தற்கொலை பற்றிய விவரக் குறிப்புகள் அடங்கிய தனி இணையதளமே இருக்கிறது என்பது ஒருபுறம்; இந்தியாவின் உயர்நிலை ஆய்வு கல்விக்கூடம் என்று போற்றப்படும் நிறுவனம், எப்படிப்பட்ட கொலைக் கூடமாகவும் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

வராமா? சாபமா?

ஐ.ஐ.டி.க்கு வரும் மாணவர்கள் பெரும்பாலும் சாமிக்கு நேர்ந்துவிடும் விலங்கினம்போல பிறந்தவுடனேயே பெற்றோர்களால் நேர்ந்து விடப்படுகிறார்கள். ஐ.ஐ.டி. பயிற்சிகளில் குழந்தைகளைச் சேர்த்து அவர்களைத் தொடர்ந்து ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்குத் தயாராக நிர்ப்பந்திக்கிறார்கள்.

ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் பல குழந்தைகள் முதல் கட்டமாகத் தங்கள் குழந்தைமையை அடகுவைக்க வேண்டியுள்ளது. அந்தப் பருவத்திற்கான அவர்களுடைய சின்னச் சின்ன ஆசைகள் தூக்கி எறியப்படுகின்றன. அவர்களின் ஒரே நோக்கம் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் எப்படி வெற்றிபெறுவது என்பதுதான். பல குடும்பங்களில் ஐ.ஐ.டி. மூலம் வெற்றி பெற்றால் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடனை வாங்கி, கடுமையாகப் படித்து ஐ.ஐ.டியில் சேர்ந்த மாணவர்கள் சிலர் பிற்காலத்தில் சில லட்சங்கள் மட்டுமே சம்பாதிக்க முடிந்ததால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் குறித்த பதிவுகள் இணையதளங்களில் காணப்படுகின்றன. ஒருவிதத்தில் சொல்லப்போனால் இளமையின் முக்கியக் கட்டங்களை மொத்தமாக அடகுவைத்து, தவம் செய்து வரத்தைப் பெற நினைக்கிறார்கள். ஆனால் பலருக்கு வரம் சாபமாகத்தன் கிடைக்கின்றது.

17 வயதே நிரம்பிய திரிபாதி என்னும் மாணவர் ஐ.ஐ.டி.க்கான தயாரிப்பிலேயே பயிற்சி நிறுவனங்கள் அளித்த நெருக்கடியால் நொந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் தன் தற்கொலைக் குறிப்பில் இவ்வாறு எழுதுகிறார்:

“மனிதவள மேம்பாட்டுத் துறை ஏதாவது செய்தாக வேண்டும்! ஐ.ஐ.டி.க்காக பயிற்சியளிக்கும் பல நிறுவனங்கள் எங்களைப் போன்ற இளம் தலைமுறையினரின் உயிர்ப்பை உறிஞ்சி எடுத்துவிடுகின்றன. அதேபோலத்தான் ஐ.ஐ.டி.யும். உடனடியாக இந்த தனியார் பயிற்சி நிலையங்களை மூடுங்கள். ஏதாவது செய்யுங்கள்.”

இம்மாதிரி பல மாணவர்கள் தங்கள் வலியைப் பதிவுசெய்வதைக் கண்டு வருத்தமுற்ற, சில முன்னாள் ஐ.ஐ.டி. மாணவர்கள் தங்கள் இணையதளங்களின் மூலமாக தற்போது உள்ள மாணவர்கள் எப்படித் தடைகளைக் கடந்து வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும் என்பது குறித்த பல அறிவுரைகளையும், பல ஆறுதல் கதைகளையும் பதிவிட்டு வருகிறார்கள். தோல்வியை எப்படி வெற்றி ஆக்குவது என்பது பற்றி விளக்கக்கூடிய இணையதளங்கள் அவர்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

இது எல்லாவற்றுக்கும் மேலாக ஃபாத்திமா மரணத்திற்குப்பின் ஐ.ஐ.டி. இனி தங்கள் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளமுடியாத அளவிற்கு ஒரு அபாரமான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டது. பெரும்பாலும் இதற்கு நோபல் பரிசுகூட வழங்கப்படும் சாத்தியம் உள்ளது.

அரிய கண்டுபிடிப்பு

பெரும்பாலும் தூக்கில் தொங்குபவர்கள் அறையில் உள்ள காற்றாடியின் கம்பிகளில் கயிற்றை மாற்றித்தான் தொங்குகிறார்கள் என்பதைக் கண்டுபிடித்த அறிவார்ந்த ஐ.ஐ.டி. குழு அந்த காற்றாடிக் கம்பியை ஸ்பிரிங்கைக் கொண்டு அமைப்பது என்று முடிவு செய்துவிட்டது. அதில் கயிற்றை மாட்டி 25 கிலோ எடை கொண்டவர் தொங்கினால் அந்த ஸ்பிரிங் கம்பி சரேல் என்று கீழே வந்துவிடும். தூக்குப் போட்டுக்கொள்ள முடியாது. ஆனால் அந்தக் கம்பியை ஏற்கனவே மும்பை அறிவியல் வியாபாரி ஆஷானி என்பவர்தான் கண்டுபிடித்து ஐ.ஐ.டி.யிடம் தெரிவித்தாக உரிமை கோருகிறார். இந்த ஸ்பிரிங் கம்பியின் விலை வெறும் ரூபாய் 350 தானாம். இதற்குப் பெயர் “தற்கொலை எதிர்ப்பு காற்றாடி கம்பி” என்று பெயர். ஐ.ஐ.டியின் எல்லா விடுதி அறைகளிலும் விரைவில் இந்தக் கம்பிகள் பொருத்தப்படவுள்ளன.

அப்பாடா! பிரச்சினை தீர்ந்தது இனி என்று அவரவர்கள் வேலையை அவர்கள் பார்க்கலாம். இதிலிருந்து ஐ.ஐ.டி.யின் சமூக அறிவியல் ஞானம் எத்தகையது என்பது நமக்குப் புரிகிறதல்லவா?

மனநல பாதிப்புகளின் பின்னணி

எம்மாதிரியான மன அழுத்தங்களுக்கு ஐ.ஐ.டி. மாணவர்கள் உள்ளாக நேரிடுகிறது என்று அலசிப் பார்த்தால் பெரும்பாலும் அவர்கள் படிப்புகுறித்த விஷயமாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் பாதிக்கப்படுவது ஏன் என்ற கேள்விதான் நம்மை மேலும் நுணுக்கமாக இப்பிரச்சனையைக் காண வைக்கிறது.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றி பெற்று ஐ.ஐ.டி.யில் நுழைய வந்தவுடன், அவர்கள் வளமான குடும்பத்தின் பின்னணியில் வந்த இதர மாணவர்களுடன் போட்டியிட வேண்டியதாயிருக்கிறது. இந்தப் போட்டி கல்வி சம்பந்தப்பட்ட போட்டி மட்டுமல்ல, பண்பாட்டுரீதியான தளத்திலும், புலத்திலும் அவர்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர் தடுமாறும்போது, அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று கரையேற்றவேண்டிய கல்விமுறை அங்கு முற்றிலுமாக இல்லை என்பதுதான் பிரச்சனை. ஒவ்வொரு மாணவனும் தன்னுடைய வெற்றியை நோக்கி ஓடுகின்ற வேளையிலே மற்றவரை நோக்கி எந்த அக்கறையும் கொள்ளக்கூடாது என்பது எழுதப்படாத விதியாக அங்கு ஆகிவிட்டது. இந்த ஓட்டத்தில் ஓடக்கூடிய சக்தி வெறும் படிப்பினால் மட்டும் வருவதல்ல, அது உயர்வு மனப்பான்மை என்ற மனநிலையினாலும் ஏற்படக்கூடியது. நான் ஆங்கிலம் மட்டுமே அதிகமாகப் பேசக்கூடிய ஒரு கல்லூரியில், தமிழ் மாணவனாக நுழைந்தபோது, சக மாணவர்களுடன் பேசுவதற்குத் தயங்கி, ஒதுங்கி பின்னர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசப் பழகத் தொடங்கியபோது என் படிப்பு முடிந்து போயிருந்தது. அந்தக் காலகட்டத்தில் நான் ஒருவித தாழ்வு மனநிலையில் துன்பப்பட்டது எனக்கு நினைவிற்கு வருகிறது. இதைவிடப் பலமடங்கு மனப்பிரச்சினை ஐ.ஐ.டி.யில் சேரும் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இருக்கும். இந்நிலையில் அங்குள்ள பேராசிரியப் பெருமக்கள் தங்களை எப்பொழுதுமே பெரிய அறிவுஜீவி என்று நம்புவதால், தங்களுக்கு எவர் சிறந்த மாணவர் என்று தோன்றுகிறதோ அவர்களுக்கு மட்டுமே மதிப்புடன்கூடிய வழிகாட்டுதல் வழங்கக்கூடிய மனோபாவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தங்கள் எதிர்பார்ப்புகள் அளவுக்கு இல்லாத மாணவர்களை உதாசீனப்படுத்தும் போக்கும் உள்ளது. அம்மாதிரி ஒதுக்கப்படும் மாணவர்கள் ஒருவிதமான மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்று தெரிகிறது.

எதிர்ப்புக் குரல்

ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி. பேராசிரியர்களில் பெரும்பாலானோர் பார்ப்பனீய மனோபாவத்துடன், சாதிய மனநிலையுடன் மேலாதிக்கம் செய்வதாக கூறுகிறது. மேலும் ஆசிரியர்கள் ஒருதலைப்பட்ச மாக மாணவர்களுடன் நடந்துகொள்வதாக குறிப்பிடுகிறார்கள் நிர்வாகமயமான சாதிப் பாகுபாடு இங்கு நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள். அப்படியாயின் உடனடியாக கவனிக்கப்பட்டு சரி செய்யவேண்டிய பிரச்சினையாகும் இது.

மார்ச் 2011இல் ஐ.ஐ.டி. சென்னையின் மாணவர்கள் அமைப்பான ஐந்தாம் எஸ்டேட் மாணவர்கள் எம்மாதிரியான அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது குறித்த ஒரு ஆன்லைன் சர்வே நிகழ்த்தியது. அதன்படி 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதாக கூறியிருக்கிறார்கள். 67 மாணவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கள் தற்கொலையை நோக்கிச் செல்லக்கூடிய மன அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த மாணவர் அமைப்பு உடனடியாக கல்வியின் அழுத்தத்தை வளாகத்திலேயே குறைக்கவேண்டும் என்றும், பேராசிரியர்கள் மாணவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதற்காக பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்கள். மன அழுத்தத்தில் உள்ள மாணவர்களுக்கும், சோம்பேறியாக இருக்கும் மாணவர்களுக்கும் வித்தியாசம் தெரியாத பேராசிரியர்கள் மன அழுத்தம் உள்ளவர்களை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடிய சொல்லாடல்களையும் செயல்களையும் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள். அதேபோன்று மாணவர்கள் மனநலம் காப்பாற்றத் தொடர்ந்து அவர்கள் மன ஆரோக்கியம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

கடுமையான போட்டி சூழல் இருப்பதே மாணவர்களுடைய மனநலப் பிரச்சனைகளுக்கு காரணம் என்பதால் மாணவர்கள் எந்த அளவிற்கு அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்ற மனோதத்துவ உளவியல் தேர்வுகளை அவ்வப்போது நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஐ.ஐ.டி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இந்தக் கோரிக்கைகளை ஒட்டுமொத்தமாகத் தூக்கி எறிந்துவிட்டது.

கள்ள மௌனம் ஏன்?

இதுவரை நடைபெற்றுவரும் இந்த நிர்வாகப் படுகொலைகளைப் பார்க்கும் பொழுது ஒன்று தெளிவாகத் தெரிகிறது. ஐ.ஐ.டி. மாணவர்கள் உயிரிழப்பு சம்பந்தமாகப் பெரிய அளவிலே நிர்வாகம் எந்த அக்கறையும் கொள்ளவில்லை என்பதே அது.

கோரக்பூர் ஐ.ஐ.டி.யில்தான் தற்கொலை எண்ணிக்கை அதிகம். தன்னுடைய முகநூல் பதிவிலேயே ஒரு மாணவர் “உபா, லுபா, டப், டப்” என்ற ரிக்கி- மார்ட்டின் கார்ட்டூன் பட வசனத்தை எழுதி இருக்கிறார். என்னவென்று பார்த்தால் “நான் மிகுந்த வலியில் இருக்கிறேன்! என்னைக் காப்பாற்றுங்கள்!” என்று அர்த்தமாம். 2016இல் ஒரே நாளிலேயே இரண்டு பெண்கள் தற்கொலை செய்துகொண்ட வரலாறும் சென்னை ஐ.ஐ.டிக்கு உண்டு. இங்கு 2008 முதல் 2011 வரை 17 தற்கொலைகள் நடந்துள்ளன எனத் தெரிகிறது. ஆனாலும் இதைப்பற்றியெல்லாம் வெளிப்படையான தகவல்கள் வெளிவருவதில்லை. ஒன்று உறுதியாகிறது. இதுகுறித்தெல்லாம் எந்த அக்கறையும் கொள்வதில்லை என்ற மன உறுதியுடன் ஐ.ஐ.டி. நிர்வாகம் இயங்கி வருகிறது.

ஃபாத்திமாவின் மரணக் குறிப்பிலேயே தெளிவாக 3 பேராசிரியர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஃபாத்திமா தனக்கு தர்க்கவியல் பாடத்தில் உள்மதீப்பீடு தேர்வில் பேரா.சுதர்சன் குறைவாக மதிப்பெண் வழங்கியிருந்தார் என்றும், பின்னர் அவருடன் பேசி சரியான மதிப்பெண்களைப் பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய உள்மதிப்பீட்டில் குறைந்த மதிப்பெண்னையும் கேட்டுப் பெற்றபின், அவர் அதற்காக ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்பது பதில் காணவேண்டிய கேள்வி. அவர் எம்மாதிரியான மன துன்புறுதலுக்கு ஆளாக்கப்பட்டார் என்பது அறியப்பட்டு வெளி உலகிற்குக் கண்டிப்பாகத் தெரிவிக்கப்படவேண்டும். தங்கள் வகுப்பறையில் விவாதங்கள் பெரும்பாலும் மதச்சார்புடன் மேற்கொள்ளப்படுவதாக மற்றொரு முன்னாள் மாணவி தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். ஃபாத்திமாவின் தாய் அவள் முஸ்லிம் என்பதால் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார். மேலும் ஃபாத்திமாவின் வகுப்பு மாணவர்கள் யாரும் எந்தக் கருத்தையும் சொல்லவிடாமல் யார் தடுத்துள்ளனர் என்பதும் கண்டறியப்படவேண்டிய ஒன்று.

சுதர்சன் பத்மனாபன், மிலிந்த் பிரமே, ஹேமச்சந்திரன் காரா ஆகிய மூன்று ஆசிரியர்களும், இன்றுவரை எந்தவித அறிக்கையும், விளக்கமும் கொடுக்காமல் இருப்பது என்பது உச்சகட்ட ஆணவம் என்று கருதினாலும்கூட, அவர்கள் சொல்வதற்கு எதுவுமில்லை என்பதாலும், மாட்டிக்கொண்டு விட்டோம் என்ற அச்சத்தினாலும் அவர்கள் அப்படி இருப்பதாகக் கொள்ளலாம். இவர்கள் பொதுவெளிகளில் பேசியவர்கள், செயல்பட்டவர்கள்தான். சுதர்சன் “எங்கள் வாக்குகள் விற்பனைக்கல்ல” என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பரப்புரை செய்தவர். தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றவர். அதே போன்று மிலிந்தும் பெரியார்,- அம்பேத்கர் சிந்தனைகளைப் பரப்ப பணி செய்தவர். இவர்கள் ஏன் வாய்மூடி இருக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இவர்களின் மௌனம் இவர்கள் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்யக்கூடும். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒரு பெண் தன் பேராசிரியருக்கு எதிராகப் புகார் கொடுத்தால், அந்தப் பேராசிரியரைத் தற்காலிக பணிநீக்கம் செய்து விசாரிப்பது வழக்கம். ஆனால் அப்படி எதுவும் இங்கு நடக்கவில்லை.

ஆனால் சமூக இணையதளங்களில் பொதுவெளிகளில் ஃபாத்திமாவின் மரணத்திற்கு பதில் கேட்டு சூடான பதிவுகளை அக்கறையாளர்கள் போட்ட போடினால், ஐ.ஐ.டி. இயக்குனர், “அப்படியெல்லாம் எங்களைக் கேவலப்படுத்தாதீர்கள்! இந்தியாவின் மிக உயர்ந்த ஆய்வு நிறுவனம் ஐ.ஐ.டி., தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டுள்ளாரே தவிர, ஃபாத்திமாவின் மரணம் பற்றி அதிகம் அறுதியிடவில்லை.

இதுவரை ஐ.ஐ.டி. குறித்து வெளியிலிருந்து இவ்வளவு எதிர்ப்புகள் வந்ததில்லை என்பது உண்மை. ஐ.ஐ.டி. பேராசிரியர்களோ, நிர்வாகமோ, பொதுஜனங்களுக்கும், பெற்றோர்களுக்கும் பொறுப்பான பதிலைக் கொடுக்கவேண்டிய நெருக்கடியில் இதுவரை இருந்ததில்லை. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லா ஊடகங்களும் இது குறித்துப் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கின்றன. சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் ஐ.ஐ.டி. நிர்வாகத்தின்மீது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

1956இல் ஐ.ஐ.டி.யின் முதல் பட்டமளிப்பு விழா கோரக்பூரில் நடைபெற்றது. அதில் பேசிய நேரு இந்தியாவின் மிக அற்புதமான ஒரு நிறுவனம் இது. ஐ.ஐ.டி. இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். இந்தியாவிற்கான மாற்றத்தினை உருவாக்கக்கூடிய மாபெரும் விஞ்ஞானிகளை உருவாக்கவல்ல இடம் ஐ.ஐ.டி. என்று முழங்கினார்.

ஆனால் இன்றைய நிலை தலைகீழாக உள்ளது.

நாட்டில் ஒருபுறம் லஞ்சம், ஊழலுக்கு ஆட்பட்டு கல்வியகங்கள் தங்கள் தரத்தை இழந்து கல்வியை வணிக மயமாக்கும் அவலம் நிகழ்கிறது. மறுபுறம் ஐ.ஐ.டி.யின் அவலத்தன்மை வேறுவகையானது. இப்பொழுதுதான் சமூக ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கவனம் ஐ.ஐ.டி.யின்மீது திரும்பியிருக்கிறது. உச்சநீதிமன்றம்போல, ஐ.ஐ.டி. ஒரு மகத்தான நிறுவனம் என்று கருதி, அதன்மீதான எந்தக் கடுமையான விமர்சனமும் சிவில் சமூகத்தால் வைக்கப்படாமல் இருந்தது.

மாற்றத்திற்கான விமர்சனங்கள் தேவை

எப்படி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளும் பொதுவெளியில் விமர்சனத்திற்கு உள்ளாகின்றனவோ, அதேபோன்று ஐ.ஐ.டி.யின் கல்விமுறைகளும், அங்கு நடைபெறும் நிறுவன ஏற்றத்தாழ்வுகளும் விமர்சனம் செய்யவேண்டிய காலம் இது. ஐ.ஐ.டி. ஒரு அக்ரஹாரமாக இருந்து வருகிறது என்ற குற்றச்சாட்டிற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயம் ஐ.ஐ.டி.க்கும் அரசுக்கும் உண்டு. சமூகநீதிக்காக உயிரிழப்புப் போராட்டங்கள் பல நிகழ்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில், சமூகநீதியை மறுத்துவிட்டு, அமைப்புரீதியாக நிலப்பிரபுத்துவ சிந்தனையோடும், வர்ணாசிரம நெறிகளோடும் இன்றும் செயல்படத் துணியும் ஐ.ஐ.டி., அங்கு நிலவும் ஆசிரியர்–மாணவர் உறவு முறைகளைப்பற்றியும், ஏற்றத்தழ்வுகள் பற்றியும் சுயவிமர்சனம் செய்துகொண்டு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது.

மாணவர்களின் கற்றல் என்பது சுதந்திரமான சூழலில் அமைய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது. ஆசிரியர்களை, மாணவர் நலன் குறித்த அக்கறை கொள்ள அவர்களுடன் இணைந்து பயணிக்க பயிற்சி தரவேண்டிய கட்டாயத்தில் ஐ.ஐ.டி. இருக்கின்றது. அதுமட்டுமல்ல, சமூக நீதியைக் காப்பாற்ற ஐ.ஐ.டி.யின் பணியிடங்கள் ஆசிரியர் பணியிடங்கள் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றி நடத்தப்படவேண்டும் என்பதே சமூகநீதி காக்கும் செயலாக இருக்கும். எத்தனையோ சாதனைகளை தொழில்நுட்ப விந்தைகளை ஐ.ஐ.டி. மாணவர்கள் படைத்திருக்கக்கூடும். ஆனால் தொழில்நுட்பம் என்பதைவிட, நீதி என்பது பிரதானமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய கூகுளின் தலைவர் இந்தியர் என்று பெருமைப்பட நமக்கு எதுவும் இல்லை. ஏனென்றால் கூகுள் உலக கார்ப்பரேட்டுகளின் பெரும் தலைவனாக உலகத்தையே ஆட்சி செய்து வருகிறது. அங்கு செல்வது ஐ.ஐ.டி. மாணவர்களுக்குப் பெருமையாக இருக்கலாம். ஆனால் நாட்டிற்கு என்ன பயன் என்பதையும் அவர்கள் உணரவேண்டும். இந்திய மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும், இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் கல்வித் திட்டங்களில்தான் இனி ஐ.ஐ.டி. அதிக அக்கறை காட்டவேண்டும்.

ஐ.ஐ.டி.யில் நடத்தப்பட்டு வரும் மானுடவியல் மற்றும் வளர்ச்சி குறித்த முதுகலைக் கல்வி என்பது கடந்த 10 ஆண்டுகளாகத்தான் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொருளாதாரம், அரசியல், தத்துவம் போன்ற பல கலை படிப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில்தான் ஃபாத்திமா லத்தீப் சேர்ந்திருந்தார். இப்படிப்புகளில் ஈடுபடும் மாணவர்கள் பெரும்பாலும் இந்தியச் சூழலுக்கான தீர்வுகளைக் கொடுப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. மேலும் இலட்சக்கணக்கான ரூபாய் ஊதியமாகக் கிடைக்க அவர்களுக்குச் சாத்தியங்கள் மிகவும் குறைவு. ஆனால் தொழில்நுட்ப பிரிவு படிக்கும் மாணவர்கள் கொஞ்சம் பேரை தவிர நிறைய பேர் எப்படியாவது அமெரிக்காவுக்குப் போய் ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனியில் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொள்கிறார்கள். அவர்களின் பொருளாதார சூழ்நிலை அவர்களை அப்படி நிர்ப்பந்திக்கின்றது என்றாலும்கூட மற்றுமொரு முக்கியமான காரணத்தை நாம் அவதானிக்க வேண்டியிருக்கிறது. மானுடவியல் கல்வி அமெரிக்காவிற்கு, மேலைநாடுகளுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. அது மக்களுக்கான கல்வி. மக்களின் முன்னேற்றத்துக்கான கல்வி. எனவே அதுகுறித்து மக்களும் அரசாங்கமும்தான் கவலைப்பட வேண்டும். ஆனால் தொழில்நுட்பக் கல்வி பெரும் முதலாளிகளுக்குத் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் பெரும் பன்னாட்டு மூலதனங்கள் கொண்ட நிறுவனங்களுக்குத் திறனாளிகளை உற்பத்தி செய்து அனுப்புகின்ற கல்வி முறையைத்தான் ஐ.ஐ.டி. வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட பாடத்திட்டங்களை உருவாக்க பல பன்னாட்டு கம்பெனிகள் ஐ.ஐ.டிக்குள் தொடர்பு வைத்துள்ளன.

அதனால்தான் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தபோதும் அது கையைப் பிசைந்து கொண்டு நின்றது. ஐ.ஐ.டி., இனி மக்களுக்கான அறிவியல், மக்களுக்கான மானுட இயல், மானுடம் காப்பதற்கான அறிவு போன்றவற்றை முன்னெடுக்க வேண்டிய தார்மீகக் கடமையில் இருக்கிறது. காரணம், அதை உருவாக்கிய நேருவும் அப்படித்தான் கனவு கண்டார் என்பது மட்டுமல்ல, மக்களின் வரிப்பணத்தில்தான் இங்கு பெருவாரியான திட்டங்கள் நிறைவேறுகின்றன என்பதே ஆகும். ஆராய்ச்சிக்கு வேண்டுமானால் பன்னாட்டு முதலாளிகள் சுயநலத்திற்காக நிதி உதவி அளிக்கக்கூடும். ஆனாலும் இந்திய மக்களின் மேம்பாடுதான் இங்கு பிரதானப்படுத்தப்பட வேண்டும்.

சர் அர்டிஷிர் என்பவர் முன்னாள் வைசிராய். பின்னர் டாடா நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். இவர்தான் ஐ.ஐ.டி. தொடங்குவதற்கான விதையைப் போட்டவர். பின்னர் படிப்படியாகப் பலர் இணைந்து 1950இல் கோரக்பூரில் நேருவினால் ஐ.ஐ.டி.தொடங்கப்பட்டது.

பின்னர் பல மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் மையங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று எதிர்ப்புத் தெரிவித்ததால் முதலில் மும்பையில் ரஷ்யாவின் ஆதரவோடு ஐ.ஐ.டி. தொடங்கப்பட்டது. பின்னர் ஜெர்மானியர்களின் துணையோடு சென்னை மற்றும் பெங்களூருவில் ஐ.ஐ.டி. தொடங்கப்பட்டது.

சி.சுப்பிரமணியம் கல்வி அமைச்சராக இருந்த பொழுது தமிழகத்தில் ஜெர்மன் குழுவினரை அழைத்துச் சென்று கவர்னர் மாளிகையைக் காட்டியபோது அவர்கள் அங்கேயே ஐ.ஐ.டி.யை அமைப்பது சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை வழங்கினார்கள் அதனால்தான் இன்று சென்னை ஐ.ஐ.டி. கவர்னர் மாளிகை ஒட்டி அமைந்திருக்கிறது. இதேபோன்று மத்தியப் பிரதேசம், அசாம், ரூர்கி போன்ற இடங்களிலும் பின்னர் ஐ.ஐ.டி. அமைக்கப்பட்டு இன்று நாடெங்கிலும் மொத்தம் 23 ஐ.ஐ.டி.கள் இயங்கி வருகின்றன.

ஐ.ஐ.டி. தொடங்கும்போது கல்வி செயல்பாடுகளில், அதுவும் உயர்நிலை ஆய்வுக் கல்வி செயல்பாடுகளில் அரசியல் சக்திகளும் அல்லது வேறு சக்திகளும் தலையீடு செய்யக்கூடாது என்பதற்காக ஐ.ஐ.டி.கள் முழு சுதந்திரம் பெற்ற தன்னாட்சி பெற்ற கல்விக் கூடங்களாக அமைக்கப்பட்டன 1961இல் கொண்டுவரப்பட்ட ஐ.ஐ.டி. சட்டம் என்பது இதற்கான உரிமையை ஐ.ஐ.டிக்கு வழங்கியிருக்கிறது. அப்போது நல்ல எண்ணத்துடன் கொடுக்கப்பட்ட அந்த சுதந்திரமானது இன்றுவரை ஐ.ஐ.டி.களுக்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அவற்றின்மீது இருந்த ஒரு மரியாதையால் யாரும் எதிர்க்குரல் எழுப்பாமல் இருந்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று இந்தியாவின் ஒவ்வொரு அரசு நிறுவனத்தையும் காவிமயமாக்கத் துடிக்கும் பாஜக அரசு ஐ.ஐ.டி.யில் தன் பணியை எப்பொழுதோ செய்யத் தொடங்கிவிட்டது. ஐ.ஐ.டி. மட்டுமல்ல, பல்வேறு உயர்நிலை ஆராய்ச்சி மையங்களில் தங்கள் கருத்தியல்களைப் பரப்பக்கூடிய கல்வியாளர்களை ஏற்கனவே நுழைத்துவிட்டது. ஐ.ஐ.டி. என்பது பெரும்பாலும் ஆசிரியர்களை நிரந்தரப் பணியாக வைப்பதில்லை. ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் அங்கே பணியமர்த்தப்படுகிறார்கள். ஒப்பந்தப் பணி அமைப்பினால் இவர்கள் இட ஒதுக்கீடு குறித்துக் கவலைப்படுவதில்லை.

ஃபாத்திமாவின் மரணம் மாணவர் களைத் திரளச் செய்தது என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் உண்மை அதுவல்ல என்பதை ஐ.ஐ.டி. வாசலில் உண்ணாவிரதம் மேற்கொண்ட இரண்டு அல்லது மூன்று மாணவர்களைப் பார்த்தால் புரிந்திருக்கும். சிந்தாபார் என்ற மாணவர் அமைப்பு தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக ஐ.ஐ.டி. நுழைவுவாயிலில் அமர்ந்தது. காலவரையற்ற உண்ணாவிரதத்தை சில மாணவர்கள் மேற்கொண்டனர். ஆனால், அவர்கள்கூட ஐ.ஐ.டி.யின் நிர்வாக இயக்குனர், ஃபாத்திமா இறப்பு குறித்து விசாரிக்கப்படும் என்றும், இனிவரும் காலங்களில் மாணவர்கள் நலன் பேணப்படும் என்றும் எழுதிக் கொடுத்த வாக்குறுதியினால் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டார்கள். ஆனால் அரசியல் கட்சிகள் சார்ந்த மாணவர் அமைப்புகள் மட்டும் தொடர்ந்து எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்து வருகிறார்கள் என்றாலும்கூட, அவை பெருமளவில் இந்த அரசின் முன் எடுபடவில்லை. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடரப்பட்ட வழக்கும் கூட இது அரசியல்ரீதியாக இருக்கிறது என்ற காரணத்தினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சமூகமும் வழக்கம்போல எதுவுமே நடக்காததுபோல அமைதியாகக் கண்மூடி கடந்து சென்று கொண்டிருக்கிறது.

ஐ.ஐ.டி. தங்களுக்கு வழங்கப்பட்ட தன்னாட்சியைப் பயன்படுத்திதான் கல்வியின் தரத்தை உயர்த்துவதாகவும், பாதுகாப்பதாகவும் கூறிக்கொண்டு அதிக அளவில் உயர் சாதியினரை அங்கு பணியில் வைத்திருக்கிறது. இதுகுறித்துப் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பதும் நமக்குப் புரிகிறது. காலம் அதை இப்போது கேள்விக்குள்ளாக்கிவிட்டது. தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் ஐ.ஐ.டி. இனி பொதுவெளிகளில் அவமானப்பட்டு, அசிங்கப்பட்டு பிறகு மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்படும் என்று நம்புகிறேன்