முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
முகுந்த் நாகராஜனின் K – அலைவரிசை: கைவிரல் எண்ணிக்கையில் மனிதர்களும் காதைக்கிழிக்காத சத்தங்களும்
அ.ராமசாமி
முகவரி மாறும் கல்லறைகள்
அப்துல்காதர் ஷாநவாஸ்
துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா?
ம.ஜோசப்
ஒரு நெகிழ்ச்சியான ஃபாலோ அப்
ஜி. ஆர். சுரேந்தர்நாத்.
நெஞ்சு பொறுக்குதில்லையே
உஷா தீபன்
மனுஷ்ய புத்திரனின் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
/
உயிர்மையின் 12 நூல்கள் வெளியீட்டு விழா
/
ரவிக்குமாரின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா
/
சாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா
.
உயிர்மை வெளியீட்டு அரங்கு: 5
எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல்
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 6
தமிழச்சி தங்கபாண்டியனின் நான்கு நூல்கள்
கவிதை
தினசரி
வேல் கண்ணன்
எலுமிச்சை விளக்கு
தேனம்மைலெக்ஷ்மணன்
பழகுதல்
முத்துசாமி பழனியப்பன்
வெளிச்ச வட்டங்கள்..
இளங்கோ
இயற்கை வாழ்வு
ஜனனிப்ரியா
மீள்வருகைக்கான நேச இணங்கல்..
ஆறுமுகம் முருகேசன்
சிறுகதை
கடவுளும் கந்தசாமியும்.
நிவேதிதா தமிழ்
உபத்திரவம்…
யோகி
ஹைக்கூ வரிசை
அறிவிப்புகள்
இந்தவாரக் கருத்துப்படம்
வீழ்ச்சி
பாபுஜி
மறதி
பாபுஜி
துப்பறியும் நாவல்களின் காலம் முடிந்துவிட்டதா?
ம.ஜோசப்

பொதுவாக துப்பறியும் நாவல்கள், நாவல் வாசகர்கள் மத்தியில் கோலோச்சுகிறது என்றால் மிகையில்லை. இப்போதும், எப்போதும் துப்பறியும் நாவல்களுக்கு வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவற்றின் விற்பனையும் அதிகம். பரபரப்பு, திகில், விறுவிறுப்பு, திடீர் திருப்பங்கள் போன்ற வெகுசன நாவலின் கூறுகள் நிறைந்து காணப்படுபவை துப்பறியும் நாவல்கள். அதனால்தான் பெருவாரியான வாசகர்களால் அவை படிக்கப்படுகின்றன. தர்மத்தின் வாழ்வை சூது கவ்வினாலும், இறுதியில் தர்மம் எப்படியும் ஜெயித்துவிடும், என்பதுதான் இந்நாவல்களின் மையக் கருத்து. திரைப் படங்களிலும் துப்பறியும் கதைகள் வெற்றிகரமாக கையாளப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் நடித்த வெற்றிப் படமான இதயக்கனி மற்றும் நூறாவது நாள் உட்பட பலத் திரைப்படங்கள் இவ்வகையில் எடுக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப கால துப்பறியும் நாவலாசிரியர் ஜே.ஆர். ரங்கராஜுவின் பாத்திரம் துப்பறியும் கோவிந்தன். அவரது இராஜாம்பாள் நாவலைப் படித்துவிட்டுபிரபல நாவலாசிரியர் கல்கிஅப்போது ஒரு தேர்தல் நடந்து, லோகமான்ய திலகருக்கா அல்லது துப்பறியும் கோவிந்தனுக்கா ஒட்டுஎன்றால் துப்பறியும் கோவிந்தனுகே எனது ஓட்டு, எனக் குறிப்பிடுகிறார். அவர் இளவயதில், இந்த நாவலை சிம்னி விளக்கில் இரவு மணி மூன்று வரை படித்ததாக நினைவு கூர்ந்துள்ளார். இக்கட்டுரை தமிழில் துப்பறியும் நாவல்களின் வரலாற்றையும், அவைகளின் சமகால போக்குகள் பற்றியும் ஆராய்கிறது.  

துப்பறியும் நாவல்களின் வரலாற்று சுருக்கம்

ஆங்கிலத்தில் crime fiction என்பதை  துப்பறியும்  நாவல் என நாம் வழங்கி வருகிறோம். இதனை குற்ற புதினம் அல்லது குற்ற நாவல் அல்லது  குற்றப்  பின்ணணி நாவல் அல்லது குற்றப்  புனைவு என மொழிபெயர்க்கலாமா? எனத் தெரியவில்லை. இக்கட்டுரையில் துப்பறியும் நாவல் என்பது  crime fiction என்பதைக் குறிக்கிறது.

பத்தொன்பதாம்  நூற்றாண்டின் பிற்பகுதியில் வேத நாயகம் பிள்ளை, பி.ஆர்.ராஜம் அய்யர், .மாதவய்யா ஆகியோர் தமிழில் தொடக்க கால நாவல்கள் எழுதினர். அநேகமாக, தமிழில் எழுதப்பட்ட முதல் துப்பறியும் நாவல், பண்டித ச.. நடேச சாஸ்திரியின் அற்புத குற்றங்கள் எனலாம்.  இதில் போலீஸ் நிபுணன் தானவன் துப்பறிவான். 1894-ல் வெளி வந்த இந்த நாவல் வாசகர்களிடையே பெரிய வரவேற்பு பெறவில்லை. அதை யாரும் வாங்கவும் இல்லை. 

 தமிழ் துப்பறியும் நாவலின் வரலாற்றின் ஆரம்ப கால  கட்டம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும் (1920-1930). இக்கால கட்டத்தில்தான் தமிழில் நாவல்கள் தமிழ் சமூகத்தில் நிலை பெற்றன. சத்தமாய் வாசித்தல் என்ற வாசிப்பு முறையிலிருந்து (முச்சந்தி இலக்கியம்), நடுத்தர வர்க்கத்தினரால் மௌன வாசிப்பு என்ற வாசிப்பு முறை உருவாகியது. இதனை நாவல் வரலாற்றில் இருண்ட காலம்  என்கின்றனர். இக்கால கட்டத்தில் ஜே.ஆர். ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், டி,டி, சாமி முதலியோர் துப்பறியும் நாவல்கள் எழுதினர். இவை பெரும்பாலும் மேலை நாட்டு நாவல்களின் தழுவல்களாக இருந்தன. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் புகழ் பெற்ற துப்பறியும் பாத்திரம் கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார். ஜே.ஆர். ரங்கராஜுவின் பாத்திரம் துப்பறியும் கோவிந்தன். இக்கால கட்டத்தை ஒரு வசதிக்காக துப்பறியும் நாவல் வரலாற்றில், வடுவூர் ஐயங்கார் கால கட்டம் எனலாம். வஸந்த கோகிலம், சௌந்தர கோகிலம், மதன கல்யாணி, மேனகா, பன்னியூர் படாடோப சர்மா அல்லது மயனுலக மத மயக்கம், இராஜாம்பாள், திவான் லொடபடசிங் பகதூர், மாயா வினோதப் பரதேசி போன்றவை இக்காலத்தில் வெளி வந்த சில துப்பறியும் நாவல்களின் பெயர்களாகும். 

தமிழ் வாணன்மேதாவி, சிரஞ்சீவி  ஆகியோர் அதற்குப்பின் துப்பறியும் நாவல்கள் எழுதிப் புகழ் பெற்றனர். தமிழ்வாணன் கல்கண்டு இதழில் துப்பறியும் நாவல்கள் தொடராக எழுதிப் புகழ் பெற்றார். அவர் உருவாக்கிய துப்பறியும் பாத்திரம் சங்கர்லால் என்பதாகும். இவரது கதைகள், தென்னகத்தின் ஜேம்ஸ் பாண்ட் என அழைக்கப்படும் ஜெய் சங்கர் துப்பறியும் சாகசப் படங்களின் கதைகளை ஒத்தது எனலாம். அவரைத் தொடர்ந்து அவரது புதல்வர் லேனா தமிழ் வாணனும் துப்பறியும் நாவல்கள் எழுதியுள்ளார். அவரும் சங்கர்லால் பாத்திரத்தை பயன்படுத்தியுள்ளார். கமல்ஹாசன் சங்கர்லால் என்ற படத்திலும் நடித்துள்ளார். இக்கால கட்டத்தில் துப்பறியும் சாம்பு என்ற பாத்திரம் பங்குபெறும் நாவல்களும் வெளி வந்தன. இக்கால கட்டத்தை தமிழ் வாணன் கால கட்டம் எனலாம். இக்கால கட்டத்தில் மாய ஜால கதைகள் அல்லது பேய் கதைகளும் பிரபலமாக இருந்தன. இதில் பேய்க்கதை மன்னன் பி.டி.சாமி மிகவும் புகழ் பெற்றவராவார்.

இதற்குபின்  வரும் காலத்தை சுஜாதா கால  கட்டம் எனக் குறிப்பிடலாம். துப்பறியும் நாவல்களால் தமிழ் வாசகர் சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர் எனலாம். இவரது துப்பறியும் பாத்திரங்கள் லாயர் கணேஷ் மற்றும் வசந்த். இவரது துப்பறியும் நாவல்கள் குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், கல்கி போன்ற பிரபல தமிழ் இதழ்களில் தொடராக வந்தன. ஒரு முறை (1988) இவரது தொடருக்கு சினிமா கதாநாயகர்களுக்கு போஸ்டர் ஒட்டுவது போல், கோவையில் விளம்பரப்படுத்தியிருந்தனர். எனது கல்லூரி பருவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த எனது நண்பன், ராஜ சேகர் ரெட்டி, அந்தப் போஸ்டரைப் பார்த்து, அந்தப் படம் எங்கு ஓடுகிறது? என்று கேட்டான். அந்த அளவிற்கு அவருக்கு வரவேற்பு இருந்தது. பிரியா, கொலையுதிர் காலம், கரையெல்லாம் செண்பகப் பூ, வஸந்த், வஸந்த், ரத்தம் ஒரே நிறம், இப்படி பல நாவல்களை உதாரணமாக கூறலாம். இவரது பல துப்பறியும் நாவல்கள் திரைப்படங்களாக வந்துள்ளன. காயத்திரி, பிரியா, ஆனந்த தாண்டவம் போன்றவை ஒரு சில உதாரணங்கள். மேலும் பல நாவல்கள் தொலைக் காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. 

இக்கால  கட்டத்தில், ராஜேஷ் குமார், ராஜேஞ்திர குமார், புஷ்பா தங்க துரை, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோரும் துப்பறியும் நாவல்கள் எழுதினர். இவர்களில் மிக அதிக அளவில் துப்பறியும் நாவல்கள் எழுதியவர் ராஜேஷ் குமார் ஆவார். இவரது துப்பறியும் பாத்திரம் இன்ஸ்பெக்டர் விவேக். இவரது பல துப்பறியும் நாவல்கள் திரைப்படங்களாகவும், தொலைக் காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. இவரது நாவலைக் கொண்டு தற்போது எடுக்கப்பட்டுள்ள படம் அகராதி; தொலக்காட்சித் தொடர் உயிரின் நிறம் ஊதா. இவர்களில்லாமல், இக்கால கட்டத்தில் துப்பறியும் நாவல் எழுதியவர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடியவர்கள் சுபா, தேவிபாலா, சாருப்ரபா சுந்தர், கலாதர் ஆவர். இதில் சுபா என்பவர்கள் இரட்டையர்களாவர். மேற்குத் தொடர்ச்சி கொலைகள், லேகா என் லேகா, நில், கவனி, கொல், வஸந்த கால குற்றங்கள், நில்லுங்கள் ராஜாவே, ஜே.கே போன்றவை இக்காலத்தில் வெளி வந்த சில துப்பறியும் நாவல்களின் பெயர்களாகும்.

இக்கால  கட்டத்தில் பாக்கெட் நாவல்  கலாச்சாரம் தோன்றி, வளர்ந்து, உச்ச நிலையை அடைந்து, மறைந்தும் போனது.  ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோர் மாதாமாதம் துப்பறியும் நாவல் எழுத ஜி,அசோகன் என்பவர் இதழ்கள் (பாக்கெட் நாவல், நாவல் டைம், கிரைம் நாவல்) தொடங்கினார்.  80கள் மற்றும் 90கள் முற்பகுதி வரை இவர்களின் பொற்காலம் எனலாம்.  

தொலைகாட்சியின்  வரவு மற்றும் பொழுது போக்கு துறையில் ஏற்பட்ட தொழில் நுட்ப வளர்ச்சியால் இக்காலத்தில் வாசிப்போர் பரப்புக் குறைந்தது  எனலாம். துப்பறியும் நாவல் வாசகர்கள் தொலைகாட்சியின் ரசிகர்களாயினர். சுஜாதாவும் இக்கால கட்டத்தில் துப்பறியும் நாவல்கள் எழுதுவதைக் குறைத்துக் கொண்டார். அவரது ஆர்வம் சங்க இலக்கியம், அறிவியல் என வேறு தளங்களுக்குத் தாவியது. தற்போதும் துப்பறியும் நாவல்கள் ராஜேஷ் குமார் எழுதிக் கொண்டிருகிறார்.  

துப்பறியும் நாவல்களும், இலக்கிய  உலகமும்

தமிழ் இலக்கிய உலகம் துப்பறியும் நாவல்களை, மணிக்கொடி காலந் தொட்டே அங்கீகரிப்பதில்லை. மாதவய்யா இவ்வகை நாவல்களை களையெடுக்கப்பட வேண்டும் என்கிறார். புற்றீசல் போன்று கிளம்பிய துப்பறியும் நாவல்கள் குறித்து, புதுமைபித்தன் தனது கதைகள் நாசகார கும்பல், பூசணிக்காய் அம்பி மற்றும் திருக்குறள் செய்த திருக்கூத்து போன்ற கதைகளில் கேலி செய்கிறார். கு..ரா, தாகூரின் குமுதினியின் மொழிபெயர்ப்பிற்கு எழுதிய மதிப்புரையில், துப்பறியும் நாவல்கள் மண்டியிருக்கும் தமிழ் நாட்டில், இந்நாவலால் ரசனை மாற்றம் ஏற்படும்எனக் குறிப்பிடுகிறார். காலம் (1936).

விதி  விலக்காக எழுத்தாளர் ஜெயமோகன் நாலாவது கொலை என ஒரு துப்பறியும் நாவல் எழுதியுள்ளார். இது திண்ணை இணைய இதழில் (www.thinnai.com) தொடராக வெளிவந்தது. கவிஞர் மனுஷ்ய புத்திரனால் நடத்தப்படும் உயிர்மைப் பதிப்பகம் சுஜாதாவின் துப்பறியும் நாவல்களை, அழகிய புத்தகங்களாக வெளியிட்டு வருகிறது, என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 90களின் பிற்பகுதியில் ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சியில் இலக்கிய விமர்சகர் கோவை. ஞானியும் (பரிமாணம், நிகழ், தமிழ் தேயம் ஆகிய இதழ்களின் ஆசிரியர்) நாவலாசிரியர் ராஜேஷ் குமாரும் சந்தித்து உரையாடினார்கள். 

ஒரு துப்பறியும் நாவலுக்கு, எழுத்தாளர்கள் எம்,ஜி,சுரேஷ் மற்றும் அ.மார்க்ஸும் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். அது உலக அளவில் மிகப்பெரும் சர்ச்சையை உண்டு பண்ணிய, டான் பிரௌனின் நாவலான, டாவின்ஸி கோட் ( Davinci Code ) ஆகும். ஜூலை 2006 தீராநதி இதழிலும் (எம்,ஜி,சுரேஷ்), நவம்பர் 2006 புதிய பார்வை இதழிலும் (.மார்க்ஸ்) அக்கட்டுரைகள் வெளி வந்தன. இந்த நாவல் படமாக வெளிவந்தபோது, அதனை தமிழக அரசு தடை செய்தது. அதற்காகவே இக்கட்டுரைகள் எழுதப்பட்டன. விவிலிய வரலாற்றை மையமாக வைத்து, ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை, இந்நாவல் விமர்சித்தது. ஹார்வர்ட் பல்கலை கழக சிம்பலாஜி (Symbology - சின்னங்கள் பற்றியது; உதாரணம் சோழருக்கு புலி, சேரருக்கு வில், பாண்டியருக்கு மீன்), பேராசிரியர் ராபர்ட் லாங்டன் என்ற பாத்திரம் இதில் துப்பறியும் பாத்திரமாகும்.  

துப்பறியும் நாவல்களும், தழுவல்களும்

பெரும்பாலும்  துப்பறியும் நாவல்கள் தழுவல்கள்  மற்றும் பிரதிகளாகவே (copy) உள்ளன. ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி வடுவூர் துரை சாமி ஐயங்கார் எழுதினார், என இலக்கிய விமர்சகர் கா.நா.சு குறிப்பிடுகின்றார். வடுவூர் துரை சாமி ஐயங்கார், விக்டர் ஹ்யூகோவின் நாவலை தழுவி கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும் என்ற நாவலும், கிரேக்க புராணக் கதையைத் தழுவி வஸந்த கோகிலம் என்கிற நாவலை எழுதியதாக க.நா.சு மேலும் குறிப்பிடுகிறார். ஜே.ஆர். ரங்கராஜுவின் வரதராஜன் என்ற நாவலின் பல பகுதிகள் திருட்டு என வழக்குப் போடப்பட்டு, ஆறு மாதம் சிறை வாசமும், 1000 அபராதமும் விதிக்கப்பட்டது. 

உலக அளவில் புகழ் பெற்ற துப்பறியும் பாத்திரங்கள் ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் அவரது உதவியாளர் டாக்டர்.வாட்சன். ஷெர்லாக் ஹோம்ஸ் ஒரு வேதியியல் நிபுணர். வாட்சன் மருத்துவர். இப்பாத்திரங்களை உருவாக்கி தனது நாவல்களில் உலவ விட்டவர் சர் ஆர்தர் கேனன் டோயல் (1859-1930). அவரது புகழ் பெற்ற குறு நாவல்     The Hound of Baskervilles. இந்தக் கதையின் மையக்கருதான் சுஜாதாவின் கொலையுதிர் காலம் என்ற புகழ் பெற்ற நாவல். ஷெர்லாக் ஹோம்ஸ் அவரது உதவியாளர் டாக்டர்.வாட்சன் ஆகியோரின் பாதிப்பால் இவரது துப்பறியும் பாத்திரங்கள் லாயர் கணேஷ் மற்றும் வசந்த், உருவாயிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. இருப்பினும், இவர் தனித்துவம் மிக்க துப்பறியும் நாவல் எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக இவரது தனித்துவமான மொழி நடையும், கூறப்படும் விஷயங்களின் பரப்பும், ஆழமும், இத்துறையில் இவரளவுக்கு யாருமில்லை, எனக் கூற வாய்ப்பளிக்கும்.  

ராஜேஷ்  குமார், ராஜேஞ்திர குமார், புஷ்பா தங்க துரை, பட்டுக்கோட்டை  பிரபாகர், சுபா, தேவிபாலா, சாருப்ரபா சுந்தர், கலாதர் ஆகியோரின் எழுத்துகளில் சுஜாதா அவர்களின் பாதிப்பு இருந்ததாகக் கூறலாம். ஒரு வகையில் சுஜாதா இவர்களுக்கு முன்னோடி.  

துப்பறியும் நாவல்களின் தாக்கம்

துப்பறியும் நாவல்களின் தாக்கம் வாசகர்களிடையே பெரிதும் உள்ளது. ஒரு சிலவற்றை இங்கு பதிவு செய்கிறோம். ஒரு வாசகர் சுஜாதாவிடம் வந்து, அவரது காணமல் போன பெண்ணைக் கண்டுபிடித்து தருமாறு வேண்டியதாக, கணையாழியின் கடைசிப் பக்கங்களில், குறிப்பிடுகிறார். அப்பிரச்சினையை ஒரு துப்பறியும் நாவலில் எழுதுவதற்கும், அப்பெண்ணை உண்மையில் கண்டுபிடிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன, என அவர் அதில் குறிப்பிடுகிறார்.

ஒரு சில குற்றவாளிகள் சினிமாவில் அல்லது நாவலில் வருவதுபோல் குற்றங்கள் புரிந்ததை, செய்தித்தாள்களில்  நாம் அவ்வப்போது காண்கிறோம். எனது உறவினர் ஒருவரின் பதின் பருவ மகன், நூற்றுக்கணக்கான துப்பறியும் நாவல்களை படித்துள்ளான். அவன் அறையெங்கும் துப்பறியும் நாவல்கள்தான். அவனை வேறெந்த செயலிலும், படிப்பிலும் ஈடுபடுத்த முடியவில்லை. அவன் ஏறக்குறைய ஒரு மன நோய்க்குள்ளானவன் போலாகிவிட்டான்.

சுஜாதாவின்  நாவலான ஜே.கே. யில் ஜே,கே என்ற ஒரு பாத்திரம் உள்ளது. அது முன்னேற வேண்டும்; பணம் சம்பாரிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். எந்தவித தார்மீக நெறிகளும் அவனுக்கு முக்கியமில்லை. ஏமாற்றுவது, பொய் சொல்வது, ஏன் கொலை செயவ்து கூட ஒரு பொருட்டல்ல, பணம் வரும் பட்சத்தில். எனது கல்லூரி கால நண்பன் (பொறியியல் மாணவர் ) அந்த நாவலைப் படித்து விட்டு, அந்த பாத்திரமாக உருமாறிப் போனான். தினமும், வேதம் வாசிப்பது போல் காலையிலும், மாலையிலும் அந்த நாவலை வாசித்து தன்னை அன்றைய தின நடவடிக்கைகளுக்குத் தயார் செய்து கொள்வான். இந்த நாவலின் இப்படியான தாக்கத்தை சுஜாதா கற்பனை கூட செய்திருக்க மாட்டார். 

துப்பறியும் நாவல்களும், சம கால போக்குகளும்

துப்பறியும் நாவல்கள் சமூத்தின் பல அவலங்களைக் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். உண்மையில் துப்பறியும் நாவல்களில் வரும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், யதார்த்த வாழ்வில் சாதரணமாக நடந்தேறிக் கொண்டிருப்பவையே. உண்மையில் ஒரு வகையில் அவை யதார்த்த நாவல்களே. துப்பறியும் நாவல்கள் சமூக ஏற்றத் தாழ்வை பிரதிபலிப்பதாக உள்ளன எனஅயன் ரான்கின் கூறுகிறார்.  

யுனைடெட்  கிங்கிடத்தில் மிகவும்  புகழ் பெற்ற துப்பறியும் நாவல் ஆசிரியர் அயன் ரான்கின் ( Ian Rankin ). அவர் எடின்பரோவில் உள்ள ஸ்காட்டிஷ் எழுத்தாளர். இன்ஸ்பெக்டர் ரூபஸ் துப்பறியும், இவரது 17 நாவல்கள் உலக அளவில் மிகவும் வரவேற்பு பெற்றவை. உலகின் 22 மொழிகளில் இவை மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. எடின்பரோ நகரின் இருண்ட பக்கங்களை இவர் நாவல்கள் பேசுகின்றன. 

இவர் 28.1.2010 அன்று தி ஹிண்டுவில், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயளாலர் பிரகாஷ் காரத்துடனுனான உரையாடலில் (இருவரும் எடின்பரோ பல்கலைக் கழக மாணவர்கள்) துப்பறியும் நாவல் என்பது சமூக ஏற்றத் தாழ்வு பற்றியது, எனக் குறிப்பிடுகிறார். முதாலாளித்துவத்தின் விளைவைப் போன்றதுதான் துப்பறியும் நாவல்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஏன் மனிதன் தன் சக மனிதனுக்கு தீய செயல்களைச் செய்கிறான்? பெரும்பாலும், பொருளாதார ஏற்றத் தாழ்வே அதற்கு காரணம், என்கிறார். நமது தமிழகச் சூழலுக்கு ஏற்றத் தாழ்வுகள் பொருளாதாரத்தினால் மட்டுமல்ல, சாதி, மதம் போன்றவைகளாலும்தான், எனலாம். அவ்வுரையாடலின் முக்கிய விபரங்கள் கீழேத் தரப்படுகின்றன. 

நாகரீக உலகம் (Civilized World) என்பது ஒரு நுண்ணிய மாயத்திரை என, துப்பறியும் நாவல்கள் குறிப்பிடுகின்றன. நம்மை சமூகமாக பிணைத்திருக்கும் கூறுகள் எந்த வினாடியும் கிழித்தெறியப்பட முடியும். குடும்ப பயங்கரவாதம், சர்வதேச பயங்கரவாதம், கிளர்ச்சிகள், பேரழிவுகள் போன்றவற்றால் சமூக பிணைப்புகள் கிழித்தெறியப்பட முடியும். ஹைட்டியில் (Haiti) மனிதனால் உருவாக்கப்பட்ட பூமியதிர்ச்சியின் போது சில நாள்களில், அத்திரை அங்கு கிழிக்கப்பட்டது. அப்போது மனிதர்களிடையே உணவுக்கு சண்டையும், கொள்ளையிடுதலும் நடந்தது.  

நாம்  நன்மை செய்யும் தன்மையுடையவர்களாயிருக்கும் அதே சமயத்தில் தீயவற்றை செய்யவும் சக்தி வாய்ந்தவர்களாயிருக்கிறோம். மனிதனின் அடிப்படைக் கூறான இதையே எனது புத்தகங்கள் மீண்டும் தொழில்படுத்துகின்றன (அயன் ரான்கின்).

துப்பறியும் நாவல்கள் இப்போது கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. இது ஒரு வகை இலக்கிய வகைமையாக ஏற்கப்பட்டு, நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன. ஸ்வீடனின் ஹென்னிங் மேன்க்கெல், யு.எஸ். ஸின் மைக்கேல் கன்னல்லி, ஸ்காட்டிஷ் எழுத்தாளர் அயன் ரான்கின் ஆகியோர் முக்கியமான எழுத்தாளர்களாவர். யு.கே வில் நிலைமை முன்பைப் போலவே உள்ளது. அங்கு இலக்கிய தீண்டாமை (literary snobbery) உள்ளது. பெருவாரிய மக்கள் இன்னமும் துப்பறியும் நாவல்களை கொடிய விஷத்தால் கொல்லப்படும் கார்டினல், மிஸ். மார்ப்பிள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவை அதிலிருந்து நீண்ட தூரம் வந்து விட்டன. தற்போதுள்ள ஸ்வீடனைப் பற்றித் தெரிந்துகொள்ள ஹென்னிங் மேன்க்கெல்லையும், யு.எஸ். ஸைப் பற்றித் தெரிந்து கொள்ள மைக்கேல் கன்னல்லியையும் தான் படிப்பேன். இலக்கிய படைப்புக்களை அல்ல (அயன் ரான்கின்).  

துப்பறியும் நாவல் எழுத்தாளர்கள் முக்கியமான மற்றும் அறம் சாரந்த முக்கிய கேள்விகளை எழுப்பும் பிரச்சினைகளை, தற்போது, மிகவும் சிறப்பான முறையில் எழுதுகின்றனர். படைப்பின்  தரம் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. சிறப்பான எழுத்தாளர்களும் துப்பறியும் நாவல்கள் எழுதுகின்றனர். துப்பறியும் நாவல்கள் மிகவும் கவனம் பெற ஆரம்பித்துள்ளன. 

ஸ்காட்லாண்டில்  உயர் நிலைப் பள்ளிகளில் அயன் ரான்கினின் நாவல்களை பாடமாக படிக்க முடியும். பல்கலைக் கழகங்களில் துப்பறியும் நாவல்களை பாடமாக படிக்க முடியும். செயிண்ட். ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழக ஆங்கிலப் பேராசிரியர் அயன் ரான்கினின் நாவல்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதுயுள்ளார். துப்பறியும் நாவல்கள் பற்றி பொதுவாக உள்ள எண்ணங்கள் மாற வாய்ப்புள்ளது. இனி வரும் காலங்களில் புக்கர் மற்றும் புலிட்சர் பரிசுகள் துப்பறியும் நாவல்களுக்கும் கிடைக்க வாய்ப்பு உருவாகலாம் (அயன் ரான்கின்). 

இப்புதிய  போக்குகள் பற்றி நமது துப்பறியும் எழுத்தாளர்கள் அறிவார்களா? எனத் தெரியவில்லை. டாவின்ஸி கோட் போல, நம் துப்பறியும் எழுத்தாளர்கள், ஒரு நாவல் எழுத முடியுமா? இக்கேள்விக்கு குமுதம் வார இதழில் பதிலளித்த சுஜாதா, தமிழ் சூழலில் அது சாத்தியமில்லை என்றார். அவர் குறிப்பிடுவது சாதி, மத விமர்சனங்களை சகித்துக் கொள்ளக் கூடிய ஒரு சூழல் இங்கு இல்லை எனபதே. அது போன்ற ஒரு நாவலை எழுத, விவிலிய வரலாறு (Biblical History), கத்தோலிக்க திருச்சபை வரலாறு ( History of Roman Catholic Church ) மற்றும், கணினி அறிவியலில் Cryptology எனும் பிரிவு ஆகியவற்றில், ஆழ்ந்த புலமை கட்டாயம். இருக்க வேண்டும். இதே போல், டான் பிரௌனின் இன்னொரு நாவலான ஏஞ்சல்ஸ் அண்டு டிமன்ஸ் (Angels and Demons) ஐம் கூறலாம்.  
 
முடிவாக சில,
 

சுஜாதா, உலகில், இத்துறையில் சமகாலப் போக்குகள் அறிந்தவராக இருந்ததால், அவரது துப்பறியும் நாவல்கள் தரத்துடனிருந்தன. அவது எளிய மொழிநடை இத்துறைக்கு ஒரு பங்களிப்பு எனலாம். மேலும், அவர் பலதுறைகளிலும் ஈடுபாடு கொண்டு, அவற்றைப் பற்றி மிகுந்த விபரம் அறிந்தவராகவும் இருந்தார். அதுவும் அவரால் சிறப்பான நாவல்களை எழுதக் காரணமாகும்.  

தற்போது சிறுகதை எழுதுபவர்களும், வாசிப்பவர்களும் குறைந்து விட்டனர். வெகுசன இதழ்களில் வரும் சிறுகதைகளும் குறைந்து விட்டன. ஒரு பக்க கதைகள் இப்போது மைக்ரோ கதைகளாகிவிட்டன. நாவல்களும், தொடர்களும் கூட குறைந்து கொண்டே வருகின்றன. வாசிப்போர் பரப்புக் குறைந்த இக்காலத்திலும் துப்பறியும் நாவல்களுக்கு வாசகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அவர்கள் புதிய தலைமுறையைச் சார்ந்தவர்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் புதியனவாக உள்ளன. ஆனால், துப்பறியும் நாவல் எழுத்தாளர்கள் பழைய தலைமுறையச் சார்ந்தவர்களாயிருக்கின்றனர். இந்த இடைவெளியை நிரப்ப சுஜாதா போன்றவர்களால் மட்டுமே முடியும். இப்போதைக்கு அவரது இடம் பெரிய வெற்றிடமாகத்தான் உள்ளது. அதை யார் இட்டு நிரப்புவார்களோ? தெரியாது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.  

இக்கட்டுரை  முடிவாக எதையும் கூற விரும்பவில்லை. அதே சமயத்தில் உலகிலும், தமிழகத்திலும் உள்ள துப்பறியும் நாவல்கள் பற்றிய சில தகவல்களையும், போக்குகளையும் வாசகர்கள், ஆர்வலர்களின் பார்வைக்கு இக்கட்டுரை கொண்டுவருகிறது, என்பதே, இதன் முக்கிய பங்களிப்பு எனலாம்.  

சான்று  பட்டியல்

1. .இரா. வேங்கடாசலபதி, நாவலும், வாசிப்பும், காலச்சுவடு பதிப்பகம், 2002.

2. சோம. இளவரசு, இலக்கிய வரலாற், மணிவாசகர் பதிப்பகம், 1998.

3. Sir Arthur Canon Doyle, The Complete long stories of Sherlock Holmes, Jaico Books, 2006.

4. Dan Brown, Da Vinci Code, Doubleday, 2003.

5. Dan Brown, Angels and Demons, Pocket books, 2000.

6. A few Crime Fictions in Tamil by Sujatha, Rajesh Kumar, Ranjedra Kumar, Pushapa Thanga Durarai, Pattukkottai Prabakar by Leading Publishers in Tamil.

7. Puthiya Paravai, November 2006.

8. Theeranathi, July 2006.

9. www.thehindu.com (Crime Fiction is about social inequality, Conversation between Ian Rankin and Prakash Karat (28.01.10).

10. www.thinnai.com 

 

 

 

 

 

 

 

 

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com