
அரிசிக்கடை செட்டியார் வந்துவிட்டுப் போன மாலை நேரம்
எங்கள் அத்திலிச்சி பூனை பழுப்பு நிறத்தில் ஒன்று, வெளிர் மஞ்சள்
நிறத்தில் இரண்டு, கறுப்பு நிறத்தில் ஒன்று என நான்கு குட்டிகள்
ஈன்றது வெளிர் மஞ்சள் குட்டிகளை அப்பா எப்போதும்
செம்பட்டயன் என்றே அழைப்பார்
பூனை ஐந்து குட்டிகள் போட்டது என்றும் ஒன்றை அதுவே தின்று
விட்டதாகவும் அண்ணன் சொன்னான். ஈஸ்வரன் கோவில் சந்தில்
குடி இருக்கும் போது அம்மா சமைத்த நண்டு தொண்டையில் சிக்கி ஒரு
பூனைக்குட்டி இறந்து போனதாக அப்பா எப்போதும் அம்மாவைத் திட்டுவார்.
அம்மா அமைதியே உருவானவள் அப்படியெல்லாம்
செய்யமாட்டாள் என்பது என் திண்ணம் .
அடுத்த நாள் லட்டு வாங்கித் திரும்புகையில் இறந்த பூனைக்கு
படையல் இட்டு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற என்னிடம்,
அதற்கான தொகையாய் என் பங்கு லட்டையும்
பெற்றுக்கொண்டான் அண்ணன்.
பின்பு வந்த பிறந்தநாள் கொண்டாத்தில் மறந்தே போனோம்
செம்பட்டயன் இறுதிச்சடங்கை, யாருக்கும் நினைவிருக்காது
அது இறந்தது மங்கம்மா பாட்டி இறந்த அதே நாள் , அன்று நல்ல மழை