முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
‘போர் முடிந்தது, போர் வாழ்க!'
இந்திரா பார்த்தசாரதி
காந்தியும் பிரபாகரனும்
இந்திரஜித்
கனிமொழியின் பின்னடைவுகள் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றி சொல்வது என்ன?
மாயா
கருணாநிதி என்னும் பிதாமகர்
வாஸந்தி
அழகிரி என்னும் அதிகார மையம்.
அ. ராமசாமி
வாழ்க்கையும் வன்முறையும்-மனுஷ்யபுத்திரனின் ‘நீரடியில் கொலைவாள்’
பாவண்ணன்
சொல்லுங்க சிவகாமி எப்படி இருக்கீங்க?
தமிழ்மகன்
ஆங்கிலம் வழி தமிழுக்கு ஆபத்து
தமிழவன்
வாசிப்பின் வழியே பதிவாகிடும் வாழ்க்கை
ந.முருகேச பாண்டியன்
கம்யூனிஸ்டுகளின் தேவை
செல்லமுத்து குப்புசாமி
சமூகத்தை சினிமா சீர்குலைக்கிறதா?
சுதேசமித்திரன்
தூங்கும் தந்தையும் துப்பாக்கி நீட்டும் மகனும்
சி.வி. பாலகிருஷ்ணன்
இது யார் பொருளாதாரம்?
நிஜந்தன்
பார்சலோனா - மோன் ஜுயிக்
நாகரத்தினம் கிருஷ்ணா
ஓ.... செகந்திராபாத் - 10
சுப்ரபாரதிமணியன்
அதிகாரம், அரசியல் மற்றும் கலாசாரம்- எட்வர்ட் செய்த் அறிவுலகில் ஒரு நெடும் பயணம்
எச்.பீர்முஹம்மது
கவிதை
நிசிவெளி
எம்.ரிஷான் ஷெரீப்
திருவினை
யாத்ரா
விருப்பம்
நளன்
கரையில் கிடந்தவை..
கார்த்தி. என்
களவாடிப் போன பொழுதை.....
எம். ஸ்டாலின் பெலிக்ஸ்
ஏதிலி
முஹமது ஹரீஸ்
வைகுண்டம்
என்.விநாயக முருகன்
பிரேம் சலூன்
த.செல்வசங்கரன்
சிறுகதை
மூர்த்தி எங்கே?
தி.சு.பா
பொது
என்றார் முல்லா
தமிழில் : சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்: முகமது சஃபி
இந்த வார கருத்துப் படம்
இனவெறியின் இன்னொரு முகம்
-
வாழ்க ஈழத் தமிழர் நலன்
-
ஹைக்கூ வரிசை
-
தமிழில் ஆர்.அபிலாஷ்
பொது
அம்மாவின் கைபேசி
-
ஹைக்கூ
இனிது இனிது
-
கனிமொழியின் பின்னடைவுகள் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பற்றி சொல்வது என்ன?
மாயா

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பல்வேறு அரசியல் கணக்குகளை முற்றாக மாற்றி எழுதிவிட்டது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் கட்சிகளின் சமநிலை மட்டுமல்ல, சில தனிப்பபட்ட மனிதர்களின் அரசியல் பாதைகளும் குழப்பமடைந்துவிட்டன. இப்போது தமிழகத்தில் அரசியல் பேசும் எல்லோர் மனதிலும் ஓடுவது இந்தக் கேள்விதான்: கனிமொழியின் அரசியல் எதிர்காலம் என்ன?

தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் மகன் அழகிரியை மந்திரியாக்கி மத்தியில் தி.மு.க அனுபவித்து வரும் அதிகாரத்தை பாகப் பிரிவினை செய்து கொடுத்தாகிவிட்டது. துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பது மூலம் மாநிலத்தில் தி.மு.க ஆட்சியின் கட்டுப்பாட்டை இன்னொரு மகன் ஸ்டாலினுக்குக் கொடுத்தாகிவிட்டது. ஆனால் கனிமொழி வெறும் எம்.பியாக மட்டுமே எஞ்சியுள்ளார். அவரின் அரசியல் எதிர்காலம் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறதா? ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பதில் நெருடல்கள் அதிகம் இல்லைதான். தி.மு.க தலைவரின் மகன் எந்தத் தகுதியை சரியாகப் பயன்படுத்தி, தனது கடின உழைப்பு மூலம் அந்தப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகத் தன்னை அவர் உருவாக்கிக்கொண்டுள்ளார். ஆனால் சமீபத்தில் அரசியலுக்கு வந்த அழகிரிக்கும் தயாநிதிக்கும் முக்கியமான பதவி கொடுத்துவிட்டு அதே போல சமீபத்தில் அரசியலுக்கு வந்த கனிமொழிக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாதது, இதிலுள்ள அரசியல்-குடும்பக் கணக்குகள், பெண்கள் குறித்த சமூகப் பார்வை ஆகியவற்றின் மீது கவனத்தைத் திருப்புகிறது. ஒரே குடும்பத்திலிருந்து மூன்று பேருக்கு கேபினட் பொறுப்பு அல்லது மந்திரிப் பொறுப்பு தர முடியாது என்று வந்த போது அழகிரியும் தயாநிதியும் இயல்பாகவே உள்ளே செல்கிறார்கள், கனிமொழி இயல்பாகவே வெளியேற நேர்கிறது. இதற்கு அவர் ஒரு பெண் என்பதும் காரணமா? ஒரு பெண்ணுக்கு அரசியல் செய்வதில் உள்ள சிக்கல்கள் காரணமா? அல்லது கனிமொழி தனிப்பட்ட முறையில் செய்த தவறான அரசியல் காய் நகர்த்தல்கள் காரணமா? கருணாநிதியின் குடும்பங்களின் இடையிலான மோதலில் அவர் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டாரா? இந்தியா போன்ற ஆணாதிக்க தேசத்தில் பெண்கள் சாதாரணமாக மேலே வர முடிவதில்லை. அதையும் தாண்டி ஒரு சில பெண்கள் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது இந்தக் கேள்விகளுக்கான பதிலை அல்லது இந்தக் கேள்விகள் எழுவதற்கான ஆதாரமான உணர்வுக்கான வேர்களைக் கண்டறிய உதவும்.

பாலினத் தடைகளை, பாகுபாடுகளைத் தாண்டி அரசியலில் பெண்கள் முன்னுக்கு வர வேண்டுமென்றால் அவர்கள், "ஒரு பெண்ணைப் போல தோற்றமளிக்க வேண்டும். ஒரு ஆணைப் போல நடந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார் ஸ்டிவர்ஸ் (Stivers) என்ற ஆய்வாளர். மாயாவதி, ஜெயலலிதா, இந்திரா காந்தி போன்ற பலரிடம் இத்தகைய அம்சத்தைக் காண முடியும். பாகிஸ்தானில் பேனசீர் பூட்டோ, பங்களாதேசத்தில் காலிதா ஜியா போல, அரசியலில் திடீர் ஏற்றத்தைக் கொடுக்கும் பெரிய அரசியல் தலைவரான நெருக்கமான உறவினரின் திடீர் மரணம் அல்லது படுகொலை போன்ற வாய்ப்புகள் கிடைக்காத பெண்களுக்குத் தேவை, அவர்களை வளர்த்து விடுவதற்கான குருக்கள் (mentor). கான்ஷிராம் இல்லாவிட்டால் மாயாவதி இல்லை, எம்.ஜி.ஆர் இல்லாவிட்டால் ஜெயலலிதா இல்லை. வாரிசு அரசியலுக்கு அடுத்து இந்தியாவில் பெண்களை வளர்த்துவிட, அதிகாரத்தின் அருகாமையில் அழைத்துச் செல்ல அதிகம் உதவியிருப்பது இப்படிப்பட்ட குருக்கள்தான். பெண்கள் அரசியலுக்கு வர இன்னொரு வழியும் உண்டு: கணவர்களின், நெருங்கிய உறவுகளின் பினாமியாக இருப்பது. கணவரின் பினாமியாக பிஹாரை ஆட்சி செய்த ராப்ரி தேவி மற்றும் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அடுத்து கணவர்களின் பினாமியாக ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள் பலருக்கும் இது பொருந்தும். தமிழகத்தின் மாநில, மத்திய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்றுமில்லாத அளவுக்கு குறைந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் வாரிசு அரசியல் கனிமொழிக்கு உதவவில்லையா அல்லது பயன்படுத்திக்கொள்ளவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு பெரிய அரசியல் தலைவரின் மகளாகப் பிறந்து, அவரின் செல்லப் பிள்ளை என்று பெயரெடுத்து, ஒரு கவிஞராக மரியாதை பெற்று, ஊடகங்களின் பெரும் கவனத்தைப் பெற்று, அரசியலுக்குள் நுழைந்த குறுகிய காலத்தில் எம்.பியான பிறகும் கனிமொழியின் அரசியல் எதிர்காலம் இன்று முட்டுச் சந்தில் நிற்கிறது. பொய்யைக்கூட ஆணித்தரமாகப் பேசுவது, எதிரியை எதிர்த்துக்கொண்டே நண்பனாக்கிக்கொள்வது, நண்பனை நட்பாக்கிக்கொண்டே எதிர்ப்பது, தனக்காகப் பரிந்து பேசக்கூடிய சக்திமிக்கவர்களை உருவாக்கிக்கொள்வது போன்ற அரசியலுக்குத் தேவையான அடிப்படை அம்சங்கள் அவரிடம் இல்லை என்று கூறுகிறார்கள். அது உண்மையா என்று தெரியவில்லை. எனினும் பல்வேறு வாரிசுகளுக்கு இடையிலான போட்டியில் கனிமொழி பின்னுக்குத் தள்ளப்படுகிறார் என்றே தோன்றுகிறது.

அரசியல் பின்புலமே இல்லாத பெண்கள்கூட கடினமான பாதையில் நடந்து மிக அரிதாகவேனும் அரசியலில் உயர்கிறார்கள். அப்படியிருக்க இவ்வளவு பின்புலம் உள்ள இவர் எங்கோ சென்றிருக்க வேண்டுமே? கலைஞரின் மகள் என்பது அவரின் பலம் மட்டுமல்ல, பலவீனமும்கூட என்பதுதான் பிரச்சினை. . அவரின் அரசியல் எதிர்காலம் முழுமையாக அவரின் கையில் இல்லை: அவரது அண்ணன்கள் மற்றும் கலைஞரின் பிற குடும்ப உறவுகளுடன் என்ன உறவு இவருக்கு இருக்கிறது என்பதே இவரின் அரசியல் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. மாறன் சகோதரர்களுக்கும் அழகிரிக்கும் நடந்த மோதலில் கனிமொழி அரசியல் முன்னிலை பெறுவதற்கு அழகிரி ஆதரவளித்தார். இப்போது அழகிரி நேரடியாக டெல்லி அரசியலில் முக்கிய இடம்பெற்றிருக்கும் சூழலில், அவருடன் இணக்கமாகிவிட்ட தயாநிதிமாறனும் தனது பழைய இடத்தைப் பெற்றுவிட்ட ஒரு காலகட்டத்தில் கனிமொழி தனது அரசியல் ஸ்தானத்தை உறுதிப்படுத்திக் கொள்ளச் செய்யக் கூடியது என்ன என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது.

தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் வாரிசு அரசியல் புதிது அல்ல. அதை மக்களே ஏற்கிறார்கள் என்று திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது. வாரிசு அரசியல் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் கலைஞர்கூட ஷேக் அப்துல்லா, பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா என வழிவழியாக அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் காஷ்மீரின் முதல் குடும்பத்தைப் பற்றிச் சொல்லாமல் இருப்பதில்லை. அதே காஷ்மீரில் முப்தி முகமது சயீத், கர்நாடகாவில் தேவே கவுடா, ஹரியானாவில் பஜன்லால்-பன்சிலால் என வாரிசு அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் ஜனநாயகம் மூலம் மக்கள் அங்கீகாரம் தந்த ஏராளமான உதாரணங்கள் உண்டு. கட்சிக்கு அல்லாமல் நபர்களுக்கு ஓட்டுப் போடும் பழக்கத்தைக் கொண்டிருக்கும் நம் வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடித்துப் போன விஷயம் என்று தோன்றுகிறது. ஆனால் கருணாநிதி, கவுடா, பால் தாக்கரே போன்ற சிலரின் பிரச்சினை சற்று வித்தியாசமானது. இங்கு வாரிசு என்பவர் ஒற்றை நபர் அல்ல. போட்டிக்கு அண்ணன்கள், தம்பிகள், தங்கைகள், அக்காக்கள், பேரன்கள், பேத்திகள், மறுமகன்கள், மறுமகள்கள் என நிறைய பேர் இருக்கிறார்கள். அதனால் கட்சிக்குள் அதிருப்தி வராமலிருக்க, இது மன்னராட்சி போன்ற கட்சி கிடையாது என்று காட்டிக்கொள்ள தன் வாரிசுகளில் யாராவது ஒருவருக்கு அதிகாரத்தை மறுக்க வேண்டியிருக்கிறது அல்லது ஒத்திப் போட வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்யும் போது ஒரு பெண்னை இயல்பாகவே சமாதானப்படுத்தி சமரசம் செய்ய முடியும். அதுவும் சரியான அரசியல் காய் நகர்த்தல்களைச் செய்யாத, அரசியல் தந்திரங்கள் வாய்க்கப் பெறாத பெண்ணை (அது ஒரு வேளை உண்மையாக இருந்தால்) எளிதாக தவிர்க்கவும் முடியும். கல்வி, வேலை, திருமணம் எதுவென்றாலும் விட்டுக் கொடுக்க வேண்டியிருப்பது பெண்கள்தானே.

கனிமொழியின் பிரச்சினை அவர் பிறப்பதற்கு முன்பே உருவாகிவிட்டது. சட்டமன்றத்தில் தமிழகத்தின் 234 எம்.எல்.ஏக்கள் முன்னிலையில் உலகிற்கு அறிவிக்கப்பட்டது அவரின் இருப்பு. "என் மகள் கனிமொழியின் தாய்" என்று சாதுர்யமாக தனது திருமணத்தை சட்டசபையில் கலைஞர் அறிவிக்க வேண்டியிருந்தது. அந்த மர்மம் அன்று உடைக்கப்பட்டாலும் தி.மு.கவின் கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்திலும் கலைஞரின் குடும்பத்திலும் கனிமொழியின் இடம் எது என்பது தெளிவாக்கப்படாத மர்மமாகவே இருந்து வந்தது. அவரின் அரசியல் பிரவேசத்தையொட்டி முதல் முறையாக தனது அண்ணன்கள் ஸ்டாலின், அழகிரியோடு கனிமொழி சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகத் தொடங்கிய சமயத்தில் அந்த மர்மம் விலகியது போல் தெரிந்தது. இப்போது மீண்டும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.

ஒரு பெண், ஆண்கள் அளவுக்கு ஊழல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட மாட்டார், நேர்மையாக இருப்பார், சிறப்பான நிர்வாகியாக இருப்பார் என்று பொதுவாக மக்கள் நம்புகிறார்கள்; அது பல சமயங்களில் உண்மையாக இல்லாவிட்டாலும்கூட. அதனால் ஒரு பெரிய அரசியல் தலைவரின் ஆண் வாரிசைவிட பெண் வாரிசுக்கு அரசியலில் எடுபடக்கூடிய வசீகரம் இயல்பாகக் கிடைக்கிறது. ஆனால் குடும்பத்தின் ஆண் வாரிசுகள் அனுமதிக்கும் போது மட்டுமே இது சாத்தியம். இயல்பாகவே ஆண்கள் அதை அனுமதிப்பதில்லை. பெரும்பாலும் ஆண் வாரிசுகள் இல்லாத அரசியல் குடும்பங்களிலிருந்துதான் பெண்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறார்கள். ஒரு வேளை நேருவுக்கு ஆண் குழந்தை இருந்திருந்தால் இந்திரா வந்திருக்க மாட்டார். ராகுல் காந்தி இருக்கும் வரை பிரியங்கா அரசியலுக்கு வர மாட்டார். காஷ்மீரின் முப்தி முகமது சயீத்திற்கு ஆண் பிள்ளைகள் கிடையாது என்பதால்தான் அவரின் மகள் அரசியலில் இருக்கிறார் என்றே நினைக்கிறேன். பாகிஸ்தானின் சுல்பிகர் அலி பூட்டோவுக்கு ஆண் பிள்ளைகள் இருந்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால் பேனசீர் பூட்டோவின் மரணத்திற்குப் பிறகு அவரின் கணவரையும் மகனையும்தான் வாரிசாக முன்னிறுத்துகிறார்கள், பேனசீரின் பெண் உறவினர்களை அல்ல. அதாவது, நவீன ஜனநாயக மன்னராட்சியிலும் ஜான்சி ராணியைப் போல ஆண் வாரிசு இல்லாத போதுதான் பெண்கள் அரசியலுக்கே வர முடியும்.

ஒரு அரசியல் கட்சியின் வாரிசு சண்டையில் ஒரு பெண்ணுக்குப் பங்கு கொடுக்காதது பற்றிய விவகாரத்தைப் பற்றி ஏன் இப்படி வரிந்து கட்டிக் கொண்டு எழுத வேண்டும்? எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஏதோ ஒரு பெண் அந்த இடத்திற்கு வரட்டுமே? விஷயம் கனிமொழி அல்ல. ஒட்டுமொத்த பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம். சாப்பாட்டில் கறிவேப்பிலை போடுவது போல சொற்பமான பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதைத் தாண்டி பெண்களுக்கு அரசியலில் என்ன பிரதிநிதித்துவம் இருக்கிறது? இப்படி அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்திலிருந்தே பெண்கள் அரசியலுக்கு வர முடியாவிட்டால் எந்தப் பின்புலமும் இல்லாத பெண்கள் எவ்வாறு ஆண்கள் ஏற்படுத்தும் அத்தனை தடைகளையும் தாண்டி அரசியலில் முன்னுக்கு வர முடியும்? நாட்டின் பாதி ஜனத்தொகையை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டு என்ன மாதிரியான வளர்ச்சியை நாம் எட்டப் போகிறோம்? ஆண் தன்மையை சுவீகரித்துக்கொள்ளாத பெண்களின் அரசியல் தலைமையில் இந்த உலகம் இன்றிருப்பதைவிட அமைதியானதாக, சுபிட்சமானதாக, மகிழ்ச்சிகரமானதாகவே இருக்கும்.

maya.flowerpower@gmail.com

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com