முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
பித்தி மொஹந்தி – நம் காலத்தின் நாயகன்
ஆர்.அபிலாஷ்
சொலவடைகளும் பழமொழிகளும்
கழனியூரன்
தி கிரேட் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்........!
கிராபியென் ப்ளாக்
‘கனவாரோ மீயோ’ (ஜோர்பா தி க்ரீக்)
சின்னப்பயல்
கவிதை
வீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா!
வித்யாசாகர்
சுயம்பு
ஷம்மி முத்துவேல்
இளங்கோ கவிதைகள்
-
மகா இயக்கத்தின் சிறு நினைவு சிதறல்கள்
வளத்தூர் தி .ராஜேஷ்
சிறுகதை
இடைவெளி
ராம்ப்ர‌சாத்
பொது
தி கிரேட் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்........!
கிராபியென் ப்ளாக்

தமிழ் சினிமாவில் ஒரு படத்தை இயக்கி, வெளிக்கொண்டு வருவதற்கு ஆயிரமாயிரம் தடைகள் உள்ள போதிலும், படம் தியேட்டரில் வெளியாகி அது ஒரு வாரத்தைத் தொடுவதற்குள் இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகரும் படுகிற பாடு இப்போதெல்லாம் பெரும்பாடாய் இருக்கிறது. என்ன குஷ்டமப்பா...ஸாரி எவ்வளவு கஷ்டமப்பா!

படத்தின் திரைக்கதையை எழுதுகிறபோது அந்தக் கதை எந்த முன்னுக்குப் பின் முரண் இல்லாமல்தான் கதையை சொல்ல முயல்கிறார் இயக்குநர். ஆனாலும், கதைக்குள் லென்ஸ் வைத்தோ மைக்ரோஸ்கோப் வைத்தோ சிலர் தவறுகளை கண்டுபிடித்து விடுகிறார்கள். விளைவு, இயக்குநரின் கார் கண்ணாடியை உடைப்பது, தியேட்டருக்கு தீ வைப்பது...நடிகரின் வீட்டுக்குள் கல்லெறிவது... முடிந்தால் தயாரிப்பாளரை நாடு கடத்துவது என ஒரு படத்தின் முக்கிய தூண்களான தயாரிப்பாளர், இயக்குநர், நடிகரை எவ்வளவுக்கு இம்சிக்க முடியுமோ... அவ்வளவு இம்சிப்பது...அல்லது அந்த நடிகரை, இயக்குநரை அடுத்த படத்துக்கு ஒப்பந்தமாகாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது என்று சாதி, மத, இன, மொழி, கலாச்சாரத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொணடு காவலர்களாக திரிபவர்களை நினைத்தால் ரசிகனுக்கு மட்டுமல்ல... மக்களை கர்ணசிரத்தையாக நாளும் கண்விழித்து பாதுகாக்கும் மேலான காவல்துறைக்குமே கண்ணை கட்டுகிறது...

ஒரு படத்தின் தலைப்பு, கதாபாத்திரம், கதை, காட்சிகள், வசனம்...முடிந்தால் சிகை அலங்காரம், அரங்க வடிவமைப்பு, பின்னணி இசை, துணை நடிகர்களின் பெருத்த தொப்பை, மெலிந்த தேகம், உருண்ட விழிகள், மிரண்ட கண்கள், நடனக் கலைஞர்களின் அங்க அசைவுகள் என்று எதை வேண்டுமானாலும் அலசி, ஆராய்ந்து, விவாதித்து படத்துக்கு சில நேரங்களில் கூடுதல் பப்ளிசிட்டியும் கூட்டிவிடுகிறார்கள் கலாசார காவலர்கள்! விளைவு தியேட்டரில் படம் கல்லா கட்டுகிறதோ இல்லையோ...படத்தின் இயக்குநருக்கு நிச்சயம் வயிற்றை கலக்கி விடுகிறது... சரி, இந்த கலாசார காவலர்களிடம் இருந்து தப்பிக்க்க என்ன செய்யலாம் என்று மாத கணக்கில் ரூம் போட்டு யோசிக்கும் இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு சில ஆலோசனைகள்...

படத்தின் தலைப்பை தமிழிலோ, ஆங்கிலத்தில் வைத்தால்தானே பிரச்சனை....மாற்றாக ஆப்பிரிக்க, ஐரோப்பிய, லத்தின் மொழியில் வைத்துவிட்டு தப்பிவிடலாம்... அல்லது சங்க இலக்கியம், புறநானூறு, அகநானூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் என்று இலக்கியவாதிகள் கூட எட்டிப் பார்க்க பயப்படுகிற இலக்கியங்களில் உள்ளேயிருந்து தலைப்பை தேடிப்பிடித்து வைத்துக்கொள்ளலாம் (டிக்னஷரியில் விளக்கம் தேடி கலாச்சார காவலர்கள் கையில் கம்பையோ... கல்லையோ எடுப்பதற்குள் படத்தின் படப்பிடிப்பை முடித்து விடலாம்... மொவனே... சாவுடா!)

அப்படியும் தமிழில் தலைப்பு வைத்தால்தான் வரி விலக்கு என்ற பெவிகால் கணக்கா தயாரிப்பாளர் நின்றால் இருக்கவே இருக்கு தமிழில் 247. அதாம்பா உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18, ஆய்த எழுத்து ஒன்று, உயிர்,மெய் எழுத்து 216. படத்துக்கு ஒற்றை எழுத்தில் தலைப்பு வைத்து தப்பித்துக் கொள்ளலாம் (இதில் ஒரு எழுத்துக்கே அர்த்தம் பொதிந்து வருவனற்றை கவனமாக இயக்குநர் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)

படத்தின் கதைக்கு சிலர் சொந்தம் கொண்டாடி கோர்ட் வாசல் ஏறுகிறார்களா... அவர்களை சமாளிக்க.. படத்துவக்க விழாவிலே கண்ணை மூடிக்கொண்டு... அல்லது இந்த கோடம்பாக்கத்து ரசிகனுக்கும், தனக்கும் சம்பந்தமே இல்லையென்பது போல... உண்மையில் எந்தெந்தப் படங்களில் இருந்து காட்சிகள் சுடப்பட்டதோ... அதை அப்படியே பிரதியெடுத்து... வருகிற பத்திரிகையாளர்களிடம் கொடுத்துவிட்டால் பிரச்சினை க்ளோஸ் (எப்படியும் படம் வெளியானால் தெரியத்தான் போகிறது..முன்கூட்டியே முடிவெடுத்தால்... என்ன பாஸ்.. குடியா மூழ்கப் போவது)

அப்படியும் விடாமல் வம்படி பண்ணுகிறார்களா... படத்தின் திரைக்கதை பிரதியை வார, மாத, தினசரி நாளிதழில் ஒரே நாளில் வெளியிட்டு... இதே கதையை யாரேனும் வைத்திருந்தால் உடனே தீயிட்டு கொளுத்தவும்... அல்லது அப்படியே தலைக்கு வைத்து படுத்துக்கொள்ளவும் என்று அறிவிப்பு வெளியிட்டால் கோர்ட் படியேற நினைக்கிறவர் தலைத்தெறித்து ஓடிவிடுவார் (தியேட்டருக்கு சொத்தை விற்று படம் பார்க்க வருகிற ரசிகனும் இதை படிக்க நேரிடும் என்பதால்...திரைக்கதை முடிவில் யார் கண்ணுக்கும் தெரியாதவாறு பொடிசு பொடிசாக விதிகளுக்கு உட்பட்டது என்று எழுதிவிட்டு அது என்ன விதி என்பதை மட்டும் ஸ்கேனிங் மிஷினே கூட படிக்க முடியாத அளவுக்கு விதிகளை பிரிண்டிங் செய்துகொள்ளலாம்)

திரைக்கதை தெளிவாக இருந்துவிட்டால் தியேட்டருக்கு வரும் ரசிகனும் எந்த கேள்வியும் இன்றி படத்தை ரசித்து பார்ப்பார்..பெரும்பாலான படங்களின் முடிவில் எழுத்தில் கதையை சொல்கிற தொழில்நுட்பத்தையும் இதன்மூலம் தவிர்த்து விடலாம். மேலும்... குழப்பமில்லாமல் படத்தை பார்த்த திருப்தி எல்லோருக்கும் கிடைக்கும்!

கதபாத்திரம் ஏதேனும் ஒரு சந்து, தெரு, சாலை, நெடுஞ்சாலை, கிராமம், நகரம், நாடு, தேசத்தைச் சேர்ந்த பொறுக்கி, ரவுடி, முள்ளமாறி, முடிச்சவிக்கையையோ வைத்துதான் கதையை உருவாக்குவேன் என்று இயக்குநர்கள் உறுதியாக இருந்தால்... முதலில் அந்த முல்லைமாறியை ஜேம்ஸ்பாண்ட் 0000007னிடம் சொல்லி, கண்டுபிடித்து முடிச்சவிக்கையிடம் ஒரு ஒப்புதல் கடிதம் பெற்று படத்தை இயக்கலாம்.. படத்தின் துவக்கத்தில் தணிக்கை சான்றிதழ் முன்னதாகவோ, பின்னதாகவோ திரையில் ஒப்பதல் கடிதத்தை காட்டினால் மேலான பொருக்கியின் அடிப்பொடிகள் தியேட்டர் சீலையை கிழிப்பதற்குப் பதிலாக டிக்கெட்டை கிழித்து படத்தை வரவேற்பார்கள்!

ஒரு படத்தின் திரைக்கதையில் சாதி, இனம், மொழி, மதம் சார்ந்த காட்சிகளை வைத்து... (இயக்குநர் திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டுகிறாராம்...) அதைப் பார்க்கும் சம்பந்தப்பட்டவர்களை தியேட்டரில் கதற, கதற கண்ணீர்விடவிட்டு...சாதுவையும் கூட ஏ.கே. 47 அல்லது 48, 49, 50, 51.... ரக துப்பாக்கிகளை தூக்க வைக்கும் அளவுக்கு காட்சிகள் அமைப்பதை தவிர்த்து....கதையில் வரும் பாத்திரங்கள் யாவரும் செவ்வாய் கிரகத்திலோ...புதன், வியாழன், வெள்ளி, சனியிலோ காதல் கொண்டு, சண்டையிட்டு, செத்துப்போகிறார்கள் என்று காட்டலாம் (இதைப்படித்தவுடன் உடனே ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படங்கள் ஞாபகத்துக்கு வந்தால்... நீங்க தேறிட்டீங்க பாஸ்)

சாதி, இன, மொழி, மதம் ஊறிப்போன ஒரு நாட்டில் இப்படியெல்லாம் இருக்கா என்ன... என்று அமெரிக்க ரிட்டர்ன் மாப்பிளை போல முகத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் தொலைக்காட்சிகளில் விழிபிதுங்குவதில் இருந்து தப்பிக்க முடியும்!

படத்தில் ஓப்பனிங் ஸாங் இருக்கா... ஒன்னுக்கு மூணு ஹீரோயின் உண்டா (காதலிக்க ஒண்ணு...தொப்புள்..இன்ன பிற இத்யாதியைக் காட்டி குத்துப்பாட்டு ஆட ஒண்ணு.. ஒருதலையாக காதலித்து ஏமாற ஒண்ணு) ஒரே குத்துக்கு எதிரிகள் 200 பேர் எலும்பு முறிந்து, உறுதியான இரும்பு ஷட்டர், மின் கம்பம் முறிந்து சிதறுகிற அதிரடி ஆக்ஷன் சேர்க்கப்பட்டதா... நாடு விட்டு நாடு போய் தெருவில் அந்த ஊர் மக்கள் என்னாச்சு இவங்களுக்கு........?’’ என்று வேடிக்கைப் பார்க்க... ஆட... பாரின் ஸாங் இருக்கா...இப்படி ஏகப்பட்ட இருக்கா-? எல்லாம் இருந்தாலும் இந்தப் படத்தின் மூலம் முதல்வர் நாற்காலிக்கு மூன்று அடி நகர வாய்ப்புள்ள காட்சியிருக்கா.. பெட்டி நிறைய பணம் இருக்கா என்றும் கேட்டு தயாரிப்பாளர், இயக்குநரின் டவுசரை கழட்டும் ஹீரோக்கள் கொஞ்சம் நேரம் இயக்குநர் அலுவலகத்தில் உட்கார்ந்து காட்சிகள் யார் மனதையாவது புண்படுத்துகிறதா என்று ஆலோசித்தால்... ஊர் அறிய இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... சாமி... நாம் ஒரு ஒன்னும் தெரியாத பயபுள்ள...’’ என்று ஓவராக பீலிங் காட்டி மீடியாவுக்கு பேட்டி கொடுப்பதிலிருந்தும் ஒரேயடியாக தப்பிக்கலாம்!

எல்லாம் சரி...கோடி.. கோடியாய் கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர் எப்படி தப்பிக்கலாம் என்றால் இயக்குநரின் கதையை (முழுவதுமாக 3 மணி நேரம்) காது கொடுத்து கேட்டாலே தி கிரேட் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்.........! 

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com