முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 21
ராஜ்சிவா
நகரத்தின்கதை பாகம் - 30
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் - 26
நர்சிம்
அயல்பசி
ஷாநவாஸ்
T20 கிரிக்கெட் – மீசை ஒட்டிய குழந்தைகளும் குழந்தைகளாய் நடிக்கும் பெரியவர்களும்
ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்....கொஞ்சம் ஹெல்தியாய்.....
கே.பத்மலக்ஷ்மி
கவிதை
மிடறு இறங்கும் அர்த்தங்கள்..
இளங்கோ
காதல் ரோஜா
சின்னப்பயல்
தீர்ப்பு
செல்வராஜ் ஜெகதீசன்
ஞாபகார்த்தம்
ஷம்மி முத்துவேல்
கடவுளின் இருண்ட வனமும் நேயாவின் ஒரு வானமும்...
கிரிஷாந்
மன ஒலியின் ஓலம்
வளத்தூர் தி.ராஜேஷ்
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..
வித்யாசாகர்
சிறுகதை
பயணம்
ராமலக்ஷ்மி
எண்ணங்கள் - 26
நர்சிம்

நெல்லை பிரபாகர்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் கலக்கிக்கொண்டிருக்கும் கெளதமை வாழ்த்த அரங்கிற்கு வந்திருந்தார் நெல்லை பிரபாகர். அங்கு நின்றிருந்தவரைப் பார்த்ததும் மனம் தானாய்த் துள்ளியது. ஆனால், நடுவர்கள் யாரும் அவரைக் குறித்துதெரிந்து வைத்திருந்ததாய்த் தெரியவில்லை. ஒரு நொடியில் அவரைக் கடக்கச்செய்து விட்டார்கள். பெருத்த ஏமாற்றம். அவர் அமைதியாய்த் தன் ட்ரேட் மார்க் பார்வையைப் பார்த்து நின்றிருக்க, அவரைப் பார்க்கப் பார்க்க ஏதேதோ நினைவுகள்.

80களின் இறுதிகளிலும் 90களிலும் நெல்லை பிரபாகர் பாடுகிறார் என்றால் பதினெட்டுப் பட்டி என்பார்களே, அப்படியான அக்கம்பக்க ஊர்களில் இருந்து வந்துவிடுவார்கள். திருப்பரங்குன்ற சன்னதி தெருவில் விமரிசையாக நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் நெல்லை பிரபாகரின் பாட்டுக்கச்சேரி இடம்பெற்றிருக்கும்.

நெல்லையும் வெள்ளையும் இணைந்து வழங்கும்’.. என்ற வாசகங்கள் தாங்கிய சுவரொட்டிகளைக் கண்டுவிட்டால் காதுகள் குளிரத் துவங்கிவிடும். வெள்ளைரோஜா என்ற இசைக்குழுவும் அங்கிங்கு(திண்டுக்கல்) என்ற இசைக்குழுவும் மதுரை சுத்துப்பட்டில் அவ்வளவு பிரசித்தம். அதில் நெல்லை பிரபாகரின் பாடல்கள் பிரதானம்.

ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, அவர் எந்தப் புதுப்பாடல்களைப் பாடுவார்,யாருடைய குரலை அப்படியே அச்சாகப் பாடுவதில் வல்லவர் என எங்களுக்குள்விவாதம் ஆரம்பித்திருக்கும். விழாக்கமிட்டியாளர்களுக்கிடையே கடும் போட்டுநிலவும், நெல்லையை யார் முதலில் அந்த ஏரியாவில் பாடவைப்பது என்பதில்.

ஏதோ காரணத்திற்காக எனக்கும் ஒரு நண்பனுக்கும் (ரமேசிற்கும்) பேச்சுவார்த்தை நின்றிருந்த நேரம். பேசுவது இல்லை என்றாலும் கூட்டமாய் நிற்கும்பொழுது டீக்கிளாஸை வாங்கி பக்கத்தில் இருப்பவனிடம் கொடுத்துஅவனுக்குக் கொடு’ என்பது மாதிரியான காரியங்கள் நடந்து கொண்டிருக்கும்.

நெல்லை பிரபாகரின் கச்சேரியென்றால் அவனுக்கும் உயிர். அன்று மற்ற நண்பர்கள் எல்லோரும் போய்விட்டதனால், ஒரு சைக்கிளில் நானும் அவனும் ஆறு கிலோமீட்டர் போக வேண்டிய சூழல். கேரியரில் அமர்ந்துகொண்டு ஒருவார்த்தைக்கூட பேசாமல் ஆனாலும் உடல்மொழியால் அவ்வளவு நெருக்கமாய்போய்க்கொண்டிருந்தோம், நெல்லைபிரபாகருக்காக.

ஆடை கட்டி வந்த நிலவோ என ஆரம்பித்தார் என்றால் எழும் கைதட்டல் அடங்க வெகுநேரம் பிடிக்கும். சந்தைக்கு வந்த கிளி என்ற பாடலில் குத்தாலத்து மானே என்ற வரிகளின் பொழுது கால்களால் படபடவென அடித்துக்கொண்டே கொத்துப்பூவாடிடும் தேனே என்பார். அள்ளும். ஆடலரசன் என்றும் அழைப்பார்கள். ஆயர்பாடி மாளிகையில் பாடினார் என்றால் கூட்டம் வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்கும், பாடல் முடிந்த பிறகும்.

எங்கெங்கோ பட்டிதொட்டிகளில் இருந்து நெல்லை பிரபாகரின் குரலைக் கேட்க சுவரொட்டிகளை மோப்பம் பிடித்துப் போகும் ஆட்களைப் பார்த்திருக்கிறேன். இன்று உலகமே பார்த்துக்கொண்டிருக்கும் பாட்டு மேடையில் ஒரு வரிகூட பாடவைக்காமல்,  ‘ஸ்ருதி போய்டுத்து, பேஷா பாட்னே குழெந்தே’ என்று பிரித்து மேய்பவர்கள் அவர் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவரை அங்கிருந்து நகர வைத்தது மனதை என்னவோ செய்தது. பாஸ்கர் சக்தி எழுதியஅரசனின் மரணம்’ சிறுகதையில் வரும் ரங்கசாமி தாத்தாவாக என்னைச் சில நொடிகள் நினைத்துக்கொண்டேன்.

**

இந்தியா-பாகிஸ்தான்

இதுவும் மேற்சொன்ன நிகழ்வுபோல் ஆகிக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தேதிட்டமிடுதல் துவங்கிவிடும். யார்யாரெல்லாம், யார் வீட்டில் அமர்ந்து பார்ப்பது,எப்படி லீவு எடுப்பது, கரெண்ட் இருக்க வேண்டுமே, அங்கே மழை பெய்துவிடக்கூடாதே என அத்தனைக் கவலைகளையும் தாங்கி மேட்ச் நடக்கும் நாளை எதிர்கொள்வோம்.  "அய்யய்ய, அவனுக வேணும்னே எறிஞ்சு ஸ்ரீகா கைய ஒடச்சுட்டானுகப்பா, டேஞ்சரஸ் ஃபெலோஸ்" எனத் தெருமுக்கில் நின்று ராகவன் மாமா பேச ஆரம்பித்தார் என்றால் அடுத்த மேட்ச் வரும்வரை பொளந்துகட்டுவார்.

எப்படி வால்ஸ்,ஆம்ப்ரோஸ் தங்களோடு வெஸ்ட் இண்டிஸின் வேகத்தையும் எடுத்துச் சென்று விட்டார்களோ அதுபோலத்தான் வாசிக் அக்ரமும் வக்கார்யூனுசும் தங்களோடு தத ஆக்ரோஷம் கலந்த சுவாரஸ்யங்களையும் எடுத்துச்சென்றுவிட்டார்கள். பழம்பெருமை பேசக்கூடாதுதான் எனறாலும் தற்போதைய சுவாரஸ்யமின்மைக்குக் காரணம் பாகிஸ்தானின் மித வேகங்களே. அக்தரின் எக்ஸ்பிரஸ் வேகமும் டெண்டுல்கர்-சேவாக்கின் பதிலடிகளும் சொற்ப காலத்தில் கடந்துவிட்டன.

அதுவரை செத்தவன் கையில் வெத்தலை போட்டுக்கொண்டிருந்த வெங்கடேஷ் பிரசாத், அமீர் சோகைப்லின் வம்புக்கு பதிலடி கொடுத்த மாத்திரத்தில் சிங்கமாகி, அதை வைத்தே பல வருடங்கள் ஓட்டினார். இப்படி ஆட்டத்தையும் தாண்டிய களநிகழ்வுகள் நிறைய நடக்கும், குதிக்கும் (மியாண்டட்) காட்சிகளுக்காகவே இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்கள் தனித்தன்மை பெற்றிருந்தன. 

இந்தியாவிற்கு எதிராக ஆடிக்கொண்டிருந்தாலும், ப்ரைன் லாரா, மார்க் வாஹ், மகனாமா, ஜெயசூர்யா, (இவரிடம் முதலில் சிக்கியது நம் பிரபாகர்.) கிறிஸ்கெய்ல் போன்றோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தால் ஏமாற்றமாய் இருக்கும். அந்த வரிசையில் பூம் பூம் அஃப்ரிடியும் ஒருவர். களத்தில் நிற்கும் ஒவ்வொருகணமும் ஆர்டிஎக்ஸாகத் தான் தெரிகிறார். பாஸ்தானின் மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச ட்ரேட்மார்க் ஆக்ரோஷ சுவாரஸ்யர்களில் இவரும் ஒருவர். 

நேற்றைய ஆட்டத்தின் முதல் 9 பந்துகளில் இருந்த அனல் அதன் பிறகுபொசுக்கென்று அணைந்துவிட்டது. குறிப்பாய் அஃப்ரிடி ஆட்டம் இழந்தவுடன், அடடா கொஞ்சமாவது ரன்கள் எடுத்தால்தானே நம்முடைய பேட்டிங்கைப் பார்க்கசுவாரஸ்யமாய் இருக்கும் என்று யோசிக்க வைத்துவிட்டது. 

அடுத்த டெண்டுல்கர், அடுத்த டெண்டுல்கரா? போன்ற விவாதங்களுக்குள் விழுந்திருப்பவர் விராட் கோஹ்லி. தன்னுடைய மட்டையால் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறார். கொண்டேயில் இருக்கும் ஏவிகுதி இங்கே முக்கியம்,கன்சிஸ்டன்சி. குறிப்பாய், தேவை ஏற்படும்பொழுதெல்லாம் ஆடிக்காட்டுகிறார். இதுவும் முக்கியம்.

மற்றபடி நேற்றைய இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம், மற்றுமொரு கிரிக்கெட் ஆட்டமாக நடந்து முடிந்தது அல்லது எனக்கு வயதாகிவிட்டது.

**

அடுத்தவாரம், நம் அண்டை நாடான பெங்களூருவுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் இன்னும் விசா கிடைத்தபாடில்லை.

**

தகையணங்குறுத்தல்பொழுதுபோகாத பொழுதெல்லாம் திருக்குறளைப் புரட்டுவது வழக்கம். இப்பொழுதெல்லாம் நிறைய புரட்டுகிறேன். ஒவ்வொரு முறையும் தோன்றுவது, இன்னும் விஸ்தாரமாய் பேசப்படவேண்டியவை திருக்குறள்கள் என்பதே.

நிறைய உரைகள் வந்துவிட்டாலும் ஆதார உணர்வையும் தாண்டி வேறு கோணங்களில் இவற்றை அணுகி இருக்கிறார்களா என்றால் இல்லை அல்லது குறைவு என்றே தோன்றுகிறது.

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்

இந்தக் குறளுக்கு "பெண்ணின் சாயாத முலைமேல் ஆடும் ஆடை, மதம் கொண்ட யானையின் மத்தக படாம் போல் இருந்தது" என்பதாகவே எல்லோருடைய உரையும் இருக்கிறது, கலைஞர் உட்பட. பரிமேழலகர் உரை சுழற்றியடிக்கிறது.

முலை ஏன் சாயாமல் இருக்க வேண்டும்? ஏன் மதங்கொண்ட யானையோடு ஒப்பிட வேண்டும் என நிறைய கேள்விகள். ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. பெண்களுக்கான காஸ்மடிக் விற்பனையாளர்கள் திருக்குறளைக் கரைத்துக் குடித்திருப்பார்கள் போல. சாயாத முலை, வளைந்த புருவம் என பெண்களுக்கான அழகியல் குறிப்புகளை அங்கிருந்தே எடுத்தாண்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.

**

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com