முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 21
ராஜ்சிவா
நகரத்தின்கதை பாகம் - 30
சித்ரா ரமேஷ்
எண்ணங்கள் - 26
நர்சிம்
அயல்பசி
ஷாநவாஸ்
T20 கிரிக்கெட் – மீசை ஒட்டிய குழந்தைகளும் குழந்தைகளாய் நடிக்கும் பெரியவர்களும்
ஆர்.அபிலாஷ்
கொஞ்சம் டேஸ்டியாய்....கொஞ்சம் ஹெல்தியாய்.....
கே.பத்மலக்ஷ்மி
கவிதை
மிடறு இறங்கும் அர்த்தங்கள்..
இளங்கோ
காதல் ரோஜா
சின்னப்பயல்
தீர்ப்பு
செல்வராஜ் ஜெகதீசன்
ஞாபகார்த்தம்
ஷம்மி முத்துவேல்
கடவுளின் இருண்ட வனமும் நேயாவின் ஒரு வானமும்...
கிரிஷாந்
மன ஒலியின் ஓலம்
வளத்தூர் தி.ராஜேஷ்
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..
வித்யாசாகர்
சிறுகதை
பயணம்
ராமலக்ஷ்மி
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 21
ராஜ்சிவா

இல்லாத ஏலியன்களையும், பறக்கும் தட்டுகளையும் இருப்பது போல, நான் கதை சொல்வதாகப் பலர் நினைக்கலாம். ஹாலிவுட்டில் படமெடுப்பவர்கள் கதையளப்பது போல, நானும் உங்களிடையே கதையளக்கிறேன் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் மீண்டும் மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்திச் சொல்வது இதுதான். நானும் உங்களைப் போல, அறிவியலை முழுமையாக நம்பும் ஒருவன்தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுப்பவனல்ல. ஆனால் இப்போது ஏலியன்கள் இருக்கின்றன என்று நான் எழுதுவது, மூட நம்பிக்கையாக, முரண்பாடாய் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் இன்று அறிவியலில் மிக உச்சத்தில் இருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking) முதல், அனைத்து விஞ்ஞானிகளும் ஏலியன்கள் உண்டு என்று உறுதியாகச் சொல்கிறார்கள். ஏலியன்கள் இருப்பதை எந்த ஒரு விஞ்ஞானியும் மறுக்கவில்லை. ஏலியன்கள் பூமிக்கு வந்தனவா என்பதில்தான் இப்போது பிரச்சினைகள். ஆனால் நான் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும், பூமியில் ஏலியன்கள் வந்ததற்குச் சாட்சிகளாக நடந்தவை. அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சாட்சிகள் என்று நான் சொல்வது தனிமனித சாட்சிகளையல்ல. பலர் சேர்ந்த கூட்டமான சாட்சிகள். அத்துடன் அந்தச் சாட்சிகள், அரசின் மிக முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள். மதிக்கப்படும் பிரஜைகள்.

இந்த வகையில் பறக்கும் தட்டு விவகாரத்தில் உலகையே அதிர வைத்த சம்பவம்தான் ரோஸ்வெல் (Roswell) பறக்கும் தட்டு மர்மம். ஐநூறுக்கும் அதிகமான, ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாதவர்களைச் சாட்சிகளாகக் கொண்ட சம்பவம் அது. ஒருவர் பொய் சொல்லலாம், இருவர், மூவராவது ஒன்று சேர்ந்து பொய் சொல்லலாம். ஐநூறு பேர் பொய் சொல்வார்களா? அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் இன்று வரை தெளிவில்லாமல், ஒரு முடிவுக்கு வரமுடியாமல் மர்மத்திலும், குழப்பத்திலும் வைத்திருக்கும் ரோஸ்வெல்லைப் பற்றி நம்மவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதுதான் மிகுந்த வேதனையானது. இது பற்றி ஆயிரக் கணக்கான புத்தகங்களும், பல திரைப்படங்களும் கூட வந்துவிட்டன. ரோஸ்வெல் பறக்கும் தட்டுச் சம்பவம் பற்றிய டாக்குமெண்டரி வராத அமெரிக்க, ஐரோப்பியத் தொலைக்காட்சி நிறுவனங்களே இல்லை என்று சொல்லலாம். உலகப் பிரசித்திபெற்ற 'டைம்' (Time) இதழ் போன்ற பிரபலமான அனைத்து இதழ்களிலும், பத்திரிகைகளிலும் ரோஸ்வெல் பற்றித் தெளிவான கட்டுரைகள் வந்திருக்கின்றன. அதிகம் ஏன், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'லாரி கிங்' (Larry King) டாக் ஷோவில் கூட இது பற்றிப் பேசிச் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள். ஹாலிவுட்டில் சார்ளி ஷீனின் (Charly Sheen) அப்பாவான மார்ட்டின் ஷீன் (Martin Sheen) நடித்து வெளியான 'Roswell, the UFO Cover-up' என்னும் படம் அதில் பிரபலமானது. அதுமட்டுமல்ல, 'Roswell' என்ற பெயரில் 1999ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை, தொலைக் காட்சித் தொடர் ஒன்று வெளியாகிச் சக்கை போடு போட்டது என்றால் பாருங்கள். இவை இப்படியிருக்க, நமது நாட்டில் இந்தத் தகவல்கள் எதுவும் பெரும்பான்மையானவர்களுக்குத் தெரிந்திருக்கவேயில்லை. இப்போது அது பற்றி நான் சொல்லும்போது, புதிதாகக் கதை விடுவது போல நினைக்கிறார்கள். இன்னுமொன்றையும் நான் சொல்லிவிட வேண்டும். இதுவரை நான் விட்ட கதையாவது பரவாயில்லை. இனிமேல் நான் விடப் போகும் கதைதான் மிகப் பயங்கரமானது. அதற்கு உங்களைத் தயார் படுத்துவதற்காகவே இவ்வளவு எழுத வேண்டியிருக்கிறது. இனி நாம் ரோஸ்வெல்லுக்குச் செல்லலாம்.

கடந்த வாரம் ரோஸ்வெல்லில் நடந்ததாகச் சொல்லிய 'சம்பவம் 1' இல், பிரிகேடியர் ஜெனரலான ரோஜர் ரமி (Birg.Gen.Roger Ramey), விழுந்து வெடித்தது பறக்கும் தட்டு அல்ல, வானிலை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தும் பலூன்தான் என்று சொன்னாரல்லவா? அப்படிச் சொல்வதற்குச் சற்று முன்னர் அமெரிக்க அரசினால் அரங்கேற்றப்பட்ட நாடகத்தைப் பார்ப்போமா....?

வானிலை ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட பலூன், ரோஸ்வெல்லில் வெடித்துச் சிதறியது என்ற கதை பிரிகேடியர் ஜெனரல் ரோஜர் ரமியால்  வெளியிடப்பட்டது. ஆனால் இந்தக் கதையை யாருமே நம்பவில்லை. இரண்டாம் உலக யுத்தங்கள் நடந்து ஓய்திருந்த வேளையென்பதால், மக்கள் இதைத் தட்டிக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல, அமெரிக்காவில் நிலைமைகள் சீரடைந்து கொண்டு வந்த நேரங்களில் ரோஸ்வெல் பற்றிய உண்மையை வெளியிட வெண்டும் என மக்கள் கேட்கத் தொடங்கினர். வெள்ளை மாளிகைக்கு முன்னால், ஆர்ப்பாட்ட முறையில் மக்கள் போராட்டங்களும் நடத்தப்பட்டன. ஊடகங்களும் தொடர்ச்சியாக இது பற்றிப் பேச ஆரம்பித்தன. இதனால், 47 வருடங்களுக்குப் பின்னர், 1994ம் ஆண்டு ரோஸ்வெல் சம்பவத்துக்குப் புதிதாகக் கதையொன்று தயார்படுத்தப்பட்டது. சாதாரண வானிலை பலூன் என்பது எடுபடவில்லையென்பதால், சோவியத் ரஷ்யாவின் அணுகுண்டு ஆராய்ச்சிகளை உளவு பார்ப்பதற்கென மிகவும் விசேசமாக வடிவமைக்கப்பட்ட பலூன், 1947ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், ராடார் சாதனங்களில் அகப்பட முடியாதபடி அது இருந்தது என்றும் சொன்னார்கள். அப்படி ரஷ்யாவை பலூன் மூலம் உளவு பார்ப்பதை 'ஆபரேசன் மொகுல்' (Operation Mogul) என்ற பெயரில் அழைத்ததாகவும் அந்தப் புதுக்கதையில் சொன்னார்கள். அப்படிப்பட்ட பலூனைப் பறக்கவிட்டுப் பரீட்சிக்கும் போதுதான் அது சாதனங்களுடன் வெடித்துச் சிதறியது என்றார்கள். 

மேஜர்.ஜெஸி மார்செல் (Jesse Marcel) வெடித்துச் சிதறியிருந்த துண்டுகளில் தன்னால் எடுக்கக் கூடியவற்றை எடுத்துக் கொண்டு இராணுவத் தளத்துக்குச் சென்றார். போகும் வழியில் தனது மனைவிக்கும், மகனுக்கும் (ஜூனியர் ஜெஸி மார்செல்) அவற்றைக் காட்டிவிட்டுச் சென்றார். பின்னர் அவற்றை முறைப்படியாக இராணுவத் தளத்தில் ஒப்படைத்தார். அதன் பின்னர்தான் வில்லியம் பிளாஞ்சார்ட் (William Blanchard) என்னும் இராணுவத் தள அதிகாரி பத்திரிகைகளுக்குப் பறக்கும் தட்டுப் பற்றிப் பேட்டி கொடுத்தார். இந்தப் பேட்டியினால் அமெரிக்க அரசு அதிர்ந்து போனது. உடனடியாக, பெரும்படை மிலிட்டரிப் போலீஸ் ரோஸ்வெல்லுக்கு அனுப்பப்பட்டது. பிளாஞ்சார்ட்டால் கொடுக்கப்பட்ட பேட்டியை எப்படி மறுக்கலாம் எனத் திட்டங்கள் தீட்டப்பட்டன. முதலில், சம்பவ இடத்தில் வெடித்துச் சிதறிய துண்டுகள் அனைத்தும் இராணுவப் போலீஸாரினால் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் அகற்றப்பட்டன. அதற்கு மட்டும் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டனர். யாரும் எதையும் எடுத்துப் பாக்கெட்டில் வைக்க முடியாதவாறு அவர்களும் கண்காணிக்கப்பட்டனர். 

பிரிகேடியர் ஜெனரல் ரோஜர் ரமியால், ஜெஸி மார்செல் உடனடியாக ராணுவத் தளத்துக்கு அழைக்கப்பட்டார். அவர் சேகரித்த துண்டுகளை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டி, இராணுவத் தளத்தில் முதல் நாள்தான் ஒப்படைத்திருந்தார். அந்தப் பெட்டியை அவரையே திறக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டார். பெட்டியைத் திறந்த ஜெஸி அதிர்ந்தேவிட்டார். அந்தப் பெட்டிக்குள் இருந்தவை எதுவுமே அவர் முதல் நாள் கொடுத்தவை அல்ல. உண்மையான ஒரு வானிலை ஆராய்ச்சி பலூனின் துண்டுகள் அங்கே காணப்பட்டன. அவரது முகம் மாறுவதை அவதானித்த உயரதிகாரி, 'இவைதான் அவர் கண்டெடுத்த பொருட்கள் எனவும். அதையே அவர் இனிச் சொல்ல வேண்டும்' எனவும் ஜெஸிக்குக் கட்டளையிட்டார். இவையெல்லாம் இனி அமெரிக்க அரசின் இராணுவ இரகசியமான 'டாப் சீக்ரெட்' வகையில் அடங்கும் எனவும் இது பற்றி அவர் இனி வாயே திறக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டார். கட்டளைகளின் கடுமை அதிக தாக்கங்களைக் கொடுக்கக் கூடிய நேரம் அது. தான் ஏதோ ஒரு பெரிய சதி வலைக்குள் அகப்படுகிறோம் என்று ஜெஸிக்குத் தெரிந்தது. ஆனாலும் எதுவும் செய்ய முடியாத மௌன சாட்சியாக அடங்கிப் போனார். 

இராணுவத்தில் இருக்கும் வரை ஜெஸி மார்செல்லால் எதுவும் சொல்ல முடியவில்லை. அமெரிக்க அரசின் கட்டுக் கதைகளைப் பல காரணங்களினால் (அவை என்ன காரணங்கள் என்பது சம்பவம் 2, 3 ஆகியவற்றில் தெரிய வரும்) மக்கள் யாருமே நம்பத் தயாராக இருக்கவில்லை. இவையெல்லாவற்றுக்கும் முற்றுப் புள்ளியாகத் தன் வாயைத் திறந்தார் ஜெஸி மார்செல். அவர் வாயைத் திறந்தது 32 வருடங்களுக்குப் பின்னர் 1979ம் ஆண்டு. அதாவது அவர் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர். தொலைக் காட்சிக்கும் பத்திரிகைகளுக்கும் நடந்த உண்மையை அப்படியே வெளியிட்டார் அவர். நடந்த உண்மைகளை ஜெஸி மாத்திரம் சொல்லவில்லை. ரோஸ்வெல் சம்பவத்தை முதன் முதலாகப் பார்த்த மாக் பிரேட்ஷெலும் (Mac Brazel) பத்திரிகைகளுக்குப் பேட்டிகளைக் கொடுத்தார். ரோஸ்வெல்லில் இந்தப் பரபரப்புகள் நடந்து கொண்டிருந்த போது, ரோஸ்வெல்லுக்கு அருகே, நியூ மெக்ஸிகோ மாநிலத்தின் சான் அகஸ்டின் (San Agustin) என்னுமிடத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது.

சம்பவம் 2:

பார்னி பார்னெட் (Barney Barnett) என்னும் பொறியியலாளர் ஒருவர் தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, தூரத்தே ஒரு வித்தியாசமான ஒரு பொருளைக் கண்டார். அந்தப் பொருளின் வடிவம் அவருக்கு ஒரு ஈர்ப்பைக் கொடுக்க, வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்தப் பொருளை நோக்கி நடக்கத் தொடங்கினார். கிட்ட நெருங்கிய போதுதான் அந்தப் பொருளின் பிரமாண்டம் அவருக்குத் தெரிந்தது. அவர் கண் முன்னே, மிகப்பெரிய பறக்கும் தட்டு ஒன்று நிலத்தில் விழுந்து மோதியது போலக் கிடந்தது. வட்ட வடிவமாக்க் காணப்பட்ட அந்தப் பறக்கும் தட்டு அவருக்குள் பதட்டத்தைத் தோற்றுவித்தது. பார்வையை சற்று நகர்த்திப் பார்த்த போது, நிலத்தில் விழுந்து கிடந்த உருவம் பயத்தின் உச்சிக்கே அவரைக் கொண்டு சென்றது. பெரிய தலை, அது போலவே நீண்ட பெரிய கண்கள், சிறிய மெல்லிய உடல், நீண்ட கைகளில் நான்கே நான்கு விரல்கள். ஒட்டு மொத்தத்தில் மனிதனைப் போன்ற உருவமாக இருந்தாலும், நாம் ஏலியன் என்று தற்போது கற்பனை செய்யும் வடிவத்தில் காணப்பட்டது அந்த உருவம். ஆனால் உயிரற்ற நிலையில் காணப்பட்டது. மொத்தமாக நான்கு ஏலியன்கள் அங்கு காணப்பட்டன. பயத்தால் என்ன செய்வதென்றே தெரியாமல் திரும்ப நினைக்கும் போது, அந்த வழியில் இளைஞர்கள் சிலர் நடந்து வந்தது அவருக்கு ஆறுதலளித்தது. அவர்களும் இந்தக் காட்சியைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் அருகே வந்தனர். விசாரித்ததில், அவர்கள் தொல்லியல் ஆராய்ச்சி மாணவர்கள் என்று தெரிய வந்தது. அனைவரும் பறக்கும் தட்டையும், ஏலியன்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு இராணுவ வாகனங்களில் இராணுவப் போலீஸார் வந்து இறங்கினர். பார்னி உட்பட அனைவரும் குற்றவாளிகள் போல அவர்களால் சுற்றி வளைக்கப்பட்டனர். அனைவரும் கமாண்டரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். கமாண்டர் அவர்களிடம், "நீங்கள் இப்போது எதையும் காணவில்லை. நீங்கள் கண்டதாக எந்தச் சம்பவமும் இங்கு நடைபெறவில்லை. இது அமெரிக்க அரசாங்கத்தினால் இடப்படும் கட்டளை. இதை மீறுவது அரச குற்றம் புரிந்தவர்களாவார்கள்" என்று மிகக் கடுமையான, மிரட்டும் குரலில் சொன்னார். மிரட்டப்பட்ட விதம், மிரட்டப்பட்ட தொனி ஆகியவை அவர்கள் அனைவருக்கும் உயிர்பயத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஏலியன்களைக் கண்ட மிரட்சி அவர்களிடமிருந்து விடைபெறு முன்னர் வந்த அடுத்த பயமுறுத்தல் அவர்களை அப்படியே ஒடுங்கப்பண்ணியது. யாரும், எதையும் அதற்கு அப்புறம் வெளியே சொல்லவில்லை. பார்னி மட்டும் தனது நெருங்கிய நண்பனிடம் இரகசியமாக இது பற்றிச் சொல்லி வைத்தார்.

பார்னி 1969ம் ஆண்டு இறந்தார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்னர், தான் பார்த்ததை அப்படியே பத்திரிகைகளுக்குப் பேட்டியாகக் கொடுத்தார். 'சம்பவம் 1' ஐ நம்பும் பலர், பார்னி கண்டதாகச் சொல்வதை ஒருபோதும் நம்பத் தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால் அந்தச் சந்தேகத்தை 'சம்பவம் 3' முறியடித்தது. 'சம்பவம் 3' பற்றிச் சொல்வதற்கு முன்னர், நான் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். 1, 2, 3 சம்பவங்களில் வரும் நபர்கள் எவரும், ஒருவருடன் ஒருவர் சம்பந்தப்பட்டவர்கள் கிடையாது. அதற்குப் பின்னரும் சம்பந்தப்படவில்லை. ஆனால் ரோஸ்வெல்லைச் சுற்றி அதே தினங்களில் நடந்த சம்பவங்கள் இவை. 'சம்பவம்1', 'சம்பவம் 2' ஆகியவற்றை நீங்கள் சரியாகப் பார்த்தீர்களானால், பூமியில் விழுந்த பறக்கும் தட்டு, ஒன்று அல்ல இரண்டு என்பது தெரிய வரும். ஒரு பறக்கும் தட்டு முழுமையாகச் சுக்கு நூறாக ரோஸ்வெல்லில் வெடித்துச் சிதற, மற்றது சான் அகஸ்டினில் முழுமையாகக் கிடைத்ததாகவும் தெரிய வருகிறது. இனி நாம் 'சம்பவம் 3 ' க்குப் போகலாம்.  

 

ரோஸ்வெல்லில் இறந்தவர்களின் அடக்கத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யும் இல்லமான Ballard இல் பணிபுரிந்த க்ளென் டெனிஸ் (Glenn Dennis) என்பவருக்கு, அவரசரமாக ரோஸ்வெல் இராணுவ வைத்தியசாலைக்கு வருமாறு அழைப்பு வருகிறது. அழைப்பை ஏற்று, உடனே அங்கு செல்கிறார். அங்கு சென்றபோது வைத்தியசாலைக்கு முன்னால் நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்த பொருட்கள் ஒருவித நெருடலை அவருக்கு ஏற்படுத்தின. தற்செயலாக அதைப் பார்த்த போது, மிக மிக வித்தியாசமான உடலமைப்புடன், ஒரு இறந்து போன உருவத்தை என்றுமே பார்த்திராத வெள்ளி நிறத் துணியினால் சுற்றி வைத்திருந்தது தெரிந்தது. எல்லாம் சில செக்கன்ட்களுக்குள் நடந்தது. அவர் அழைக்கப்பட்டதோ வேறு ஒருவரால் வேறு ஒரு காரியத்துக்காக. ஆனால் அவர் அங்கு சென்ற போது, வைத்தியசாலை எங்கும் இராணுவப்' போலீஸார் குவித்து வைக்கப்பட்டிருந்தனர். அந்த வைத்தியசாலைக்குப் பலமுறை அவர் வந்திருந்தபடியால், நேராக உள்ளே சென்றார். ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றதும் அவரை இராணுவப் போலீஸார் வழிமறித்தனர். இங்கு எதற்காக வந்தார்' என்று விசாரித்தனர். அதற்கு அவர், தான் வந்த காரணத்தைச் சொன்ன போது, 'இப்போது அவற்றுக்கு அவசியமில்லை. உடனே இங்கிருந்து சென்றுவிடவும்' என்று அவருக்குக் கட்டளையிட்டனர். வெளியே இறந்த ஒரு உடலைக் கண்டதால், ஏதோ ஒரு ஆர்வத்தில், "வெளியே இருக்கும் இறந்த உடல் சம்மந்தமாக ஏதாவது உதவி தேவைப்பட்டால் நான் உதவத் தயாராக இருக்கின்றேன்" என்று அவர்களிடம் கூறினார். மிகவும் கோபம் கொண்ட அவர்கள், 'அவரது உதவி எதுவும் தேவையில்லையெனச் சொல்லி, அவரை வெளியே தள்ளிக் கொண்டு வந்தனர். அப்போது அங்கு வந்த இராணுவ உயரதிகாரி, மீண்டும் அவரை அழைத்துவரும்படி கூறினார். க்ளென் டெனிஸ் வந்ததும், "இங்கு நீ எதையும் பார்க்கவில்லை. அப்படிப் பார்த்ததாக வெளியே சொல்லக் கூடாது. இது அரச கட்டளை" என்று கடுமையான குரலில் சொன்னார். அதற்கு க்ளென் டெனிஸ், "நான் ஒரு அமெரிக்கப் பிரஜை. என்னை நீங்கள் இப்படிப் பயமுறுத்த முடியாது" என்றார். உயரதிகாரி மிகவும் மூர்க்கமாக, அவரை தாக்குவது போலச் சென்று, "உயிருடன் இருக்க விருப்பமிருந்தால் வாயை மூடிக்கொண்டு நீ இருக்க வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு" என்று கடும் குரலில் எச்சரித்தார். அவரை வெளியே தள்ளி விடும்படி உத்தரவும் கொடுக்கப்பட்டது. அதன்படி வெளியே கொண்டுவந்து விடப்பட்டார் டெனிஸ். இதையெல்லாம் சில நர்ஸ்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு நர்ஸ் அவரின் அருகே வந்து, " இங்கே நீங்கள் நிற்க வேண்டாம். இங்கு நிற்பது உங்கள் உயிருக்கே ஆபத்தானது. முடிந்தால் நாளை மாலை ரெஸ்ட்டாரெண்டில் என்னைச் சந்தியுங்கள்" என்று குறிப்பிட்ட ரெஸ்டாரெண்டின் பெயரையும் சொன்னாள்.  

குறிப்பிட்ட ரெஸ்டாரெண்டில் அந்த நர்ஸை டெனிஸ் சந்தித்தார். அவள் மிகவும் பதட்டத்துடனும், பயத்துடனும் காணப்பட்டாள். அவள் அந்த இராணுவ ஹாஸ்பிடலில் நர்ஸாக இருப்பதாகவும், தன்னுடன் மேலும் ஐந்து நர்ஸுகள் பணிபுரிவதாகவும் கூறினாள். ஏனோ டெனிஸைக் கண்டதும் பேசவேண்டும் போல இருந்ததாகவும் சொன்னாள். அவள் பேச விரும்பியதுதான் பயங்கரமான விசயமாக இருந்தது. இராணுவ வைத்தியசாலைக்குத் திடீரென இராணுவப் போலீஸார் வந்ததாகவும், அவர்கள் விசித்திரமான உடலமைப்புடைய நான்கு உடல்களைக் கொண்டு வந்ததாகவும், அதில் மூன்று பேர் இறந்துவிட்டதாகவும், ஒருவருக்கு உயிர் இருக்கலாம் என்றும் சொன்னாள். அத்துடன் அந்த மூன்று இறந்த உடல்களையும், பிரேதங்களை வெட்டிப் பரிசோதனை செய்வது போலப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், தானும் சில நிமிடங்கள் அங்கே நின்றதாகவும் சொன்னாள். அந்தக் காட்சியே மிகவும் அருவெறுப்பாகவும், பயங்கரமாகவும் இருந்ததாகச் சொன்னாள். அத்துடன் அங்கிருந்த காகிதம் ஒன்றை எடுத்து, அந்த உருவங்கள் எப்படி இருந்தன என்று வரைந்தும் காட்டினாள். 'சம்பவம் 2' இல் பார்னி கூறியது போன்ற வடிவிலேயே அந்த உருவங்களும் காணப்பட்டன. அத்துடன் நான்கு விரல்கள் இருந்ததாகவும் வரைந்த காகிதத்தில் காணப்பட்டது. காகிதத்தை டெனிஸிடம் கொடுத்துவிட்டு, மிகவும் பயத்துடன் விடைபெற்றாள் அந்த நர்ஸ். 

அந்த நர்ஸை அதற்குப் பின்னர் டெனிஸ் காணவே இல்லை. விசாரித்ததில் மிகுதி ஐந்து நர்ஸ்கள் மட்டுமே இருந்தார்கள். ஆறாவதாக இருந்த அந்த நர்ஸ் காணாமல் போய்விட்டார். அவருக்கு என்ன நடந்தது? உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? எந்தச் செய்தியும் தெரியவில்லை. நிலைமையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக டெனிசுக்குப் புரியத் தொடங்கியது. பயத்தினால் 1989ம் ஆண்டுவரை வாயே திறக்காத டெனிஸ் அதன் பின்னர் நடந்தவற்றை வெளியே சொல்லத் தொடங்கினார். அவர் குறிப்பிட்ட இராணுவ அதிகாரி முதல் நர்ஸுகள் வரை அங்கு இருந்ததைப் பின்னர் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றே உறுதி செய்தது. டெனிஸ் சொன்ன சம்பவம் உண்மைதான் என அதுவே நம்ப வைத்தது.  

இவ்வளவு விசயங்களும் ரோஸ்வெல்லில் நடந்தபோது, யார்தான் பறக்கும் தட்டுகள் இருக்கிறது என்று நம்ப மறுப்பார்கள்? ஆனாலும் இவையெல்லாவற்றுக்கும் அரசாங்கம் மறுப்பாக பதில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அந்த அறிக்கையில், முதல் சம்பவத்தில் வெடித்துச் சிதறியது பலூன் எனவும், இரண்டாவது சம்பவத்தில் பார்னி பார்த்தது, இராணுவத்தளத்தில் விபத்துக்களின் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தும் டம்மி பொம்மைகள் என்றும், மூன்றாவது சம்பவத்தில், இராணுவ அதிகாரி வேறொரு விமான விபத்தில் சிக்கிய இராணுவத்தினரைக் கொண்டு வந்ததாகவும், அந்தச் சம்பவ நேரத்தில்தான் டெனிஸ் அங்கு வந்ததாகவும் சொல்லியிருந்தது. மொத்தத்தில் மூன்று சம்பவங்களையும் இல்லை என்று அமெரிக்க அரசு மறுக்கவில்லை. அவற்றுக்கு எப்படிச் சரியான பதில் சொல்லலாம் என்று அறிக்கையை மட்டும் சமர்ப்பித்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமெரிக்க அரசைப் பெரும்பான்மையாக மக்கள் நம்பவில்லை.

மேலே சொல்லப்பட்ட சம்பவங்களெல்லாம், விக்கிரமாதித்தன் கதைகளில் வருபவை போலவே உங்களுக்குத் தோன்றும். எந்த வகையிலும் நம்ப முடியாத வகையில் அவை அமைந்திருப்பது இன்னும் சந்தேகச் சூழலிலேயே உங்களை வைத்திருக்கும். ஆனால் இத்துடன் சம்பவங்கள் முடிந்து விடவில்லை. இதைத் தொடர்ந்து நடந்த நான்காவதும், ஐந்தாவதும் சம்பவங்கள் இன்னும் ஆச்சரியமானவை. அவை நிச்சயம் உங்களை நம்பிக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும். அந்த சம்பவம் ஒன்றில் சம்பந்தப்பட்டவர் வேறு யாருமல்ல, அமெரிக்க ஜனாதிபதியே சம்பந்தப்பட்டிருக்கிறார்.  

அவை என்ன சம்பவங்கள் என்றுதானே கேட்கிறீர்கள்? அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள். 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com