முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (20)
ராஜ்சிவா
எழுத்தாளன் டி.வி.யில் தோன்றலாமா?
ஆர்.அபிலாஷ்
எண்ணங்கள் 25
நர்சிம்
நகரத்தின் கதை-பாகம் 31
சித்ரா ரமேஷ்
நான்கு நண்பர்களும் சசிகுமாரும்
சின்னப்பயல்
கவிதை
வேட்டை நாயும் காவல் நாயும்
ஆர்.அபிலாஷ்
சினேகிதனொருவன்
இஸுரு சாமர சோமவீர,
கனவுகள் விற்பனைக்கு அல்ல
ஷம்மி முத்துவேல்
இளங்கோ கவிதைகள்
-
கொத்தித்துளைக்கத் தொடங்கும் நட்சத்திர வானம்
செ.சுஜாதா
சின்னப்பயல் கவிதைகள்
-
ஒரு யுவதியை...
செல்வராஜ் ஜெகதீசன்
சிறுகதை
“பொங்கிவரும் பெரு நிலவு”
உஷாதீபன்
பொது
இந்த வார கருத்துப்படங்கள்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (20)
ராஜ்சிவா

'பறக்கும் தட்டுகள் பூமிக்கு வந்தனவா என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?' என்று ஆராயப் புறப்பட்டாலே, அனைவரும் ஒட்டு மொத்தமாகச் சுட்டிக்காட்டும் சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நடந்தது. நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல், இது பற்றி ஆராய்பவர்கள் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி, ஒரு முடிவுக்கு வராமல் செய்தது அந்தச் சம்பவம். அந்தச் சம்பவம், என்ன சம்பவம் என்பதைச் சொல்வதற்கு முன்னர், கடந்த பதிவுகள் சம்பந்தமாகச் சில சந்தேகங்களைக் கேட்டு அனுப்பியுள்ள வாசகர்கள் மணி தனுஷ்கோடிக்கும், துபாயில் வசிக்கும் ஆனந்துக்கும் சிறிய விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. பல கேள்விகளை ஆனந்த் கேட்டிருந்தாலும், முக்கியமான சில கேள்விகளுக்கு மட்டும் பதிலைக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

1.             நீங்கள் குறிப்பிட்ட நீர்க்கரடியின் அரிய தன்மையை பூமியில் வாழும் உயிரினத்தின் மேல் செலுத்தி ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா? அவ்வாறு செய்திருப்பின் அதில் எந்தளவு மனிதன் வெற்றி பெற்று இருக்கிறான். 

 

 

2.             மேற்சொன்ன ஆராய்ச்சி வெற்றியடைந்தால் மனிதன் இந்த அண்டசராசரத்தில் இன்னும் என்னென்ன விந்தைகள் செய்வானோ?

 

 

3.             வேற்றுக் கிரகவாசிகளுடன் மனிதன் திரும்பவும் தொடர்பு கொள்ளவில்லையா? இல்லை அதுவும் மறைக்கப்பட்டுவிட்டனவா?

 

 

4.             நாம் அனுப்பிய தகவல்கள் வேற்றுக் கிரகம் சென்றடைந்த கால அளவை விட அவர்கள் தொடர்பு கொண்ட கால அளவு மிகக்குறைவு என்ற போது, (அது எப்படி என்று தங்கள் விளக்கங்களைத் தாண்டி) ஏன் மனிதன் அதே முறையில் தொடர்பு கொண்டு இன்னும் பல தகவல்கள் பெற முனையவில்லை? இதற்குப் பின்னால் ஏதோ பெரிதாகப் புதைந்துள்ளதாக எனக்குப் படுகிறது. தங்களுக்குத் தெரிந்ததைப் பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 

 

'நீர்க்கரடி' (Tardigrade) பற்றிய முதல் இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். நவீனமான இந்த உலகில் அனைத்துமே வியாபாரமாக ஆகிவிட்டன. எந்தத் துறையிலும் எப்படிப் பணம் பண்னலாம் என்னும் ஒரு நோக்கம் மறைமுகமாக வந்துவிடுகிறது. இதில் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் கூட, விதிவிலக்கில்லை என்று காட்டிக் கொண்டு வருகின்றனர். முன்னர் எல்லாம் ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்ததும் மக்களின் பாவனைக்காகவும், பயன்பாட்டுக்காகவும் கண்டுபிடிப்பாளர் அதை வெளிவிடுவது சகஜமானதாக இருந்தது. மக்கள் அதனால் மிகுந்த பயனையும் அடைந்தனர். ஆனால் இப்போதுள்ள வியாபார உலகில், ஒருவர் ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுடித்தாலோ அல்லது அந்தக் கண்டுபிடிப்பைப் பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்தாலோ, முதலில் செய்வது அதன் காப்புரிமையைப் (Patant) பெற்றுக் கொள்வதுதான். இது ஒரு விதத்தில் தேவையானதும் கூட என்பதையும் இங்கு ஒத்துக் கொள்ள வேண்டும். உலகிலேயே அதிகப் பணம் புரளும் இடங்கள் எதுவென்று பார்த்தால், அது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மையங்கள்தான். அங்கு அரசுகளும், தனியார் நிறுவனங்களும் கோடிக்கணக்கான டாலர்களைக் கொட்டி ஆராய்ச்சிகளை வழிநடத்துகின்றன. கிருமியிலிருந்து, ராக்கெட் வரை செய்யப்படும் அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் பணம் கொட்டிக் கொட்டிச் செலவழிக்கப்படுகிறது. அதனால் செய்யப்படும் அல்லது ஆரம்பிக்கப்படும் ஆராய்ச்சிகளை அவர்கள் காப்புரிமை செய்து விடுவதால், அந்த ஆராய்ச்சி முழுமையடையும் வரை, அவை பற்றிய முக்கிய செய்திகள் எவையும் வெளியே வந்துவிடாது. அனைத்தும் இரகசியமாகக் காக்கப்படும். ஆராய்ச்சி வெற்றியடையும் பட்சத்தில் அது வெற்றியடைந்ததாகச் சொல்லப்படும். தோல்வியடைந்தால் தொடர்ச்சியான ஆராய்ச்சிகளுக்கு அவை அமுக்கப்பட்டுவிடும். இந்த நடைமுறை நீர்க்கரடியின் ஆராய்ச்சிக்கும் சாத்தியமாகலாம். அவை பற்றிய ஆராய்ச்சிகள் ஏதோ ஒரு இடத்தில் நடந்துகொண்டே இருக்கும். ஆனால் உண்மையான நிலவரம் வெற்றியின் பின்னரே வெளியிடப்படும். அதற்கு அப்புறம்தான் மனிதன் செய்யப் போகும் விந்தைகளை நாம் அறிய முடியும். ஆனந்தின் மூன்றாவது, நான்காவது கேள்விகளுக்கான பதில்களை இந்தத் தொடரின் இறுதிப் பகுதிகளில் தெளிவாகச் சொல்ல இருக்கிறேன். சொல்லப் போனால் இந்தத் தொடரின் நோக்கமே அவை பற்றிய விளக்கத்தை அளிப்பதுதான்.

 

 

அடுத்து மணி தனுஷ்கோடியின் சந்தேகம் இது. அவர் 'டிஎன்ஏ' (DNA) பரிசோதனை பற்றிய ஒரு எளிமையான கேள்வியைக் கேட்டிருந்தார். "டிஎன்ஏ டெஸ்ட்டுகளில் 100 சதவீத ஒற்றுமை கிடைக்க வாய்ப்பில்லையா?" என்பதுதான் அவர் கேள்வி. கேள்வி மிகச் சாதாரணமாக இருந்தாலும், மிகவும் அர்த்தமுள்ளது. அதனால், அதற்குரிய விளக்கமான பதிலை நான் இங்கு கொடுக்க வேண்டும். 

 

 

ஒரு 'டிஎன்ஏ' பரிசோதனை என்பதைப் பரிசோதனை என்று சொல்வதை விட, ஒப்பிடுதல் என்றே சொல்ல வேண்டும். ஒரு குற்றம் நடந்தபோது, அந்த இடத்தில் இருக்கும் கைரேகைகளை எடுத்து, கணினியில் பதிந்து வைத்திருக்கும் அனைத்துக் குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்களல்லவா? அது போன்ற ஒரு முறைதான் இதுவும். அதனாலேயே இந்த DNA ஒப்பீட்டுப் பரிசோதனையையும் 'DNA fingerprint Analysis' என்பார்கள். ஆதிகால மனிதன் என்று நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனின் சுவடுகளில் உள்ள பரம்பரை அலகுகள் முதல், சிம்பன்ஸி, கொரில்லா போன்ற உலகின் அனைத்து உயிரினங்களினதும் பரம்பரை அலகுகள், தகவல் நிரல்களாகக் கணினியில் சேர்த்து வைக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக புராதன எலும்புக் கூடொன்று நமக்குக் கிடைத்தால் அது மனிதனுடையதா, குரங்கினுடையதா, ஹோமோ சாபியனுடையதா, ஹோமோ எரக்டஸினுடையதா என்று வித்தியாசப்படுத்திப் பார்க்க அந்தத் தகவல் நிரலின் ஒப்பீடு நமக்கு உதவும். இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக, மில்லியன் கணக்கான செய்திகளைக் கொண்ட டேட்டாபேஸை கணினி மூலம் அமைத்திருக்கிறார்கள். அதை இயக்க 'Blast' போன்ற மென்பொருட்களும் உண்டு. ஒரு கற்கால எலும்புக் கூட்டின் தடயம் நமக்குக் கிடைக்கும் போது, அதன் பரம்பரை அலகை எடுத்து, கணினியில் உள்ள அனைத்து தகவல்களுடன் ஒப்பிடும் போது, அந்த எலும்புக் கூடு, யாருடையதுடன் அதிகம் ஒத்துவருகின்றது என்ற முடிவுக்கு நாம் வரலாம். இந்த முடிவுகளில் எப்போதும் நூறு வீதமான ஒற்றுமை இருக்க சாத்தியங்கள் இல்லவே இல்லை. ஒரேயொரு சமயத்தில் மட்டுமே இந்த டிஎன்ஏ பரிசோதனை முடிவு நூறுவீதம் ஒத்துப் போகும். 

 

 

 

தற்கால மனிதர்களின் செல்லில் மரபணுப பரிசோதனைகளைச் செய்யும்போது, ஆயிரக் கணக்காகப் பதியப்பட்டிருக்கும் அந்தச் செய்திகளில், 90 வீதமானவை தேவையற்ற தகவல்களாகவே இருக்கின்றன.10 வீதமான தகவல்கள் மட்டும் தேவையானவையாகக் காணப்படுகின்றன. ஒரு மனிதனின் DNA வில், அந்த மனிதன் உருவான பரிணாம வளர்ச்சியின் கிளையில் உள்ள விலங்குகள் அனைத்தின் மரபு அடையாளங்களும் செய்திகளாகப் பதிந்திருக்கும். இவற்றில் நூறு வீத தகவல்கள் ஒத்துப் போவது எப்போது என்றால், ஒரு மனிதன் விபத்தினாலேயோ, கொலையுண்டோ இறந்துவிட்டால், அந்த மனிதனின் முகம் சிதைந்து போய், அவன் யாரென்று கண்டுபிடிக்க முடியாத ஒரு நிலையில், முன்னர் எடுத்த அந்த மனிதனின் டிஎன்ஏ பதிவுகள் கிடைத்தால் மட்டும், இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நூறு வீதம் சமமாக இருக்கும். தாயின் கருவில் ஒரே முட்டையில் உருவான இரட்டையர்களுக்கும் இந்த டிஎன்ஏ, 90 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பொருந்தி வரச் சாத்தியங்கள் உண்டு. பிள்ளைகள, பெற்றோர்கள், சகோதரர்கள் போன்ற உறவுகளில் ஒற்றுமை குறைந்த வீதத்தில், அடுத்த வரிசையில் வரும். கீழே இருக்கும் படத்தில் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது மகளையும் (D2), கடைசிப் பையனையும் (S2) யாரென்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். 

 

 

 

இனி மீண்டும் நாம் பறக்கும் தட்டு சம்பவத்துக்கு வரலாம். அமெரிக்காவின் 'நியூ மெக்ஸிகோ' (New Mexico) மாநிலத்தில் ரோஸ்வெல் (Roswell) என்னும் கிராமத்தில் 2ம் தேதி ஜூலை மாதம் 1947ம் ஆண்டு நடந்த சம்பவத்தைத்தான் பறக்கும் தட்டு வரலாற்றிலேயே யாருமே நம்ப முடியாத சம்பவமாகக் கருதுகிறார்கள். ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மத்தை மூன்று சம்பவங்களாகப் பிரித்துப் பார்க்கும் வகையில், அங்கு சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அந்த மூன்று சம்பவங்களையும் உங்கள் வாசிப்புக்காகத் நான் இங்கு தருகிறேன். படித்ததும் நம்பமுடியாத அவற்றை நீங்கள் நடந்ததாக ஏற்றுக் கொள்ளவே போவதில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அனைத்தையும் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாகப் படியுங்கள். அந்தச் சம்பவங்கள் நடந்தவை என்ற முடிவுக்குத்தான் அங்கு வெளியான அனைத்துச் செய்திகளும் நம்மை இட்டுச் செல்கின்றன. சம்பவங்கள் மூன்றாக இருந்தாலும், அவை ஒன்றுடன் ஒன்று இணைந்த, ஒரே சம்பவமாகத்தான் கருதுகிறார்கள். இனி அவை பற்றிய  முடிவுகளை எடுக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிட்டு சம்பவங்களுக்குச் செல்கிறேன்.

 

 

 

சம்பவம் 1: 

 

 

மாக் பார்ஸெல் (Mac Barzel) என்னும் 'கௌபாய்' (Cowboy) சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரோஸ்வெல் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இரவு உணவு உண்டு கொண்டிருந்தபோது, இடி போன்ற பேரிரைச்சல் ஒன்றையும் பெரிய வெளிச்சத்தையும் அவதானித்தார். மழை பெய்வதற்காக இடியுடன் மின்னலடிக்கிறது என்ற நினைப்புடன் அவர் இருந்துவிட்டார். ஆனால் அடுத்த நாள் ஏதோ ஒரு விபரீதத்தைத் தான் காணப்போகிறோம் என்று அந்தச் சமயத்தில் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அடுத்த நாள் அவர் குதிரையில் ஆளரவமற்ற பரந்திருந்த வெளியினூடாகச் சென்றபோது, அந்த இடமெங்கும் சூரிய ஒளியில் மின்னியபடி, சிறு சிறு துண்டுகளாகச் சிதறிய நிலையில் பல உலோகத் தகடுகளும், உலோகத் துண்டுகளும் கிடப்பதை அவதானித்தார். 400 அடி அகலத்துக்கும், ¾ மைல் நீளத்துக்கும் இடைப்பட்ட சமவெளியெங்கும், மிக மிக மெல்லிய பாலித்தீன் போன்ற வடிவில், வெள்ளி நிறத்தில் அந்தத் தகடுகள் காணப்பட்டன. அவை ஆயிரக் கணக்கில் எங்கும் சிதறிக் கிடந்தன. தகடுகளுடன், என்னவென்று சொல்ல முடியாத உலோகத் துண்டுகளும் சிதறிக் கிடந்தன. குதிரையில் இருந்து இறங்கிய மாக், அந்த உலோகத் துண்டுகளையும், பாலித்தீன் போன்ற உலோகத் தகடுகளையும் எடுத்துப் பார்த்தார். சுற்றிவர எங்கும் நிலத்துடன் எதுவும் மோதியது போல அடையாளம் இருக்கவில்லை. ஆனால் ஏதோ வெடித்துச் சிதறியிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. பாலித்தீன் போன்ற அந்த பொருளைக் கையில் எடுத்துப் பார்த்தார். அப்படி ஒரு மென்மையான பாரமற்ற, இலகுவான ஒன்றை அவர் தன் வாழ்நாளில் அதுவரை கண்டதே இல்லை. எடுத்ததைக் கைகளுக்குள் வைத்துக் கசக்கிப் பார்த்த போது, ஒரு அதிசயம் அவரின் கண் முன்னே நடந்தது. அந்தப் பொருள் கசங்கிய பின்னர் தானாகவே மீண்டும் நேராகி பழைய நிலைக்கு வந்தது. கிட்டத்தட்ட ஒரு மெட்டல் தகடு போன்று காணப்பட்ட அந்த பாலித்தீன் பொருள், மிகவும் கடினமான ஒன்றாகக் காணப்பட்டது. அதை அவரால் கிழிக்கவோ, வளைக்கவோ, அதிகம் ஏன் எரிக்கவோ கூட இயலாமல் போயிற்று. அப்போதுதான் அவருக்கு மனதில் அந்த விபரீதப் பயம் தோன்றியது. இது நிச்சயம் பூமிக்குச் சொந்தமான பொருளல்ல என்னும் பயம் அவரைத் தொற்றிக் கொண்டது. பார் பிரேட்ஸெல் உடனடியாக அந்தத் துண்டுகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு, அந்த நகரத்து செரீஃபின் உதவியுடன் ரோஸ்வெல் நகரத்து இராணுவத்தின் விமானத் தளத்துக்கு (Roswell Army Airbase) தகவலை அறிவித்தார். 

 

 

தகவல் அறிவிக்கப்பட்டதும், விமானங்கள் பற்றிய நுண்ணிய அறிவுடைய மேஜர் ஜெஸ்ஸி மார்செல் (Major Jesse Marcel) என்னும் இளைஞர் தனது லெப்டின்ட்டுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். ஜெஸ்ஸி விமானங்களின் விபத்துகள் பற்றிச் சிறப்புப் பயிற்சி பெற்றிருந்தார். சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த ஜெஸ்ஸி அங்கிருந்த உலோகத் துண்டுகளைப் பார்த்து அதிர்ந்துவிட்டார். பல விமானங்களைப் பார்த்த அவருக்கு, அந்தத் துண்டுகள் எந்த விமானத்தின் துண்டுகளோ, அல்லது பூமியில் இருக்கும் வேறு எதனுடையதோ இல்லையென்று உடனே புரிந்து போனது. அவர் உடனடியாக ஒன்றைச் செய்து பார்த்தார். மிக மெல்லியதாக இருந்த அந்தத் தகடுகளில் ஒன்றை எடுத்து, ஒரு சுத்தியலால் அடித்துப் பார்த்தார். அந்தத் தகடு அசைந்துகூடக் கொடுக்கவில்லை. அதில் ஒரு சிறிய கீறல் கூட ஏற்படவில்லை. இத்தனைக்கும் அவர் பாவித்த சுத்தியல் 16 இறாத்தல் எடையுள்ளது. இப்படி ஒரு அதிசயத்தை அவர் கண்டதே இல்லை. இந்தச் சம்பவத்துக்கு மாக்கும், அவருடன் கூட வந்த லெப்டின்டும் சாட்சிகளாக இருந்தார்கள். அங்கிருந்து எடுத்த உலோகத் துண்டுகளில், தகடுகள் மட்டுமல்லாமல், உலோகத் தண்டுகளும் பல காணப்பட்டன. அவற்றில் தன்னால் எடுக்கக் கூடியவற்றை எடுத்துக் கொண்டு இராணுவத் தளத்துக்குச் சென்றார். ஆனால் அவர் செல்லும் வழியில் தனது வீட்டிற்குச் சென்று அந்தப் பொருட்களை தனது மனைவிக்கும், மகனுக்கும் காட்டிவிட்டுச் சென்றார். ஜெஸ்ஸி தன்னுடய மகனிடமும், மனைவியிடமும், "உலகத்தில் இல்லாத ஒரு பொருளை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள். மீண்டும் இதைப் பார்க்கப் போவதில்லை" என்று சொல்லியுமிருக்கிறார். அப்போதுதான் அவரது மகன் அந்த உலோகத் தண்டுகளில் இருந்த விசித்திர எழுத்துகளை ஜெஸ்ஸிக்குக் காட்டியிருக்கிறார். அந்த உலோகத் தண்டுகளில், புள்ளிகள் கோடுகளாலான சித்திர எழுத்துகள் போன்றவை காணப்பட்டன. இது அவரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

 

மறுநாள் ஜெஸ்ஸி கொடுத்த ஆதாரங்கள், தகவல்கள் அடிப்படையில் இராணுவத் தளத்தின் தளபதியான வில்லியம் பிராண்டி (William Brandy) பத்திரிக்கைகளுக்கு பறக்கும் தட்டு ஒன்று ரோஸ்வெல்லில் வீழ்ந்து வெடித்துச் சிதறியிருப்பதாகப் பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டி அமெரிக்காவையே அதிரவைத்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள்தான் அமெரிக்க அரசின் மூடி மறைக்கும் தந்திரத்துக்கு ஒரு உதாரணமாக அமைந்தது. இன்றுவரை நாஸாவை உலகமே நம்பாமல் இருப்பதற்குக் காரணமாகவும் அது அமைந்தது. இந்தத் தொடரின் "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?" என்னும் தலைப்புக் கூட இதிலிருந்துதான் புறப்பட்டது என்று கூடச் சொல்லலாம். 

 

 

 

வில்லியம் பிராண்டியின் பத்திரிகைப் பேட்டிக்கு அடுத்த தினமான 8ம் தேதி யூலை மாதம் 1947ம் ஆண்டு, ரோஸ்வெல் நகரமே அமெரிக்க இராணுவத்தால் முற்றுகையிட்டது போலச் சூழப்பட்டது. எங்கும் மிலிட்டரி போலீஸ் என்று சொல்லப்படும் இராணுவத்துக்கே காவலதிகாரிகளாக கடமையாற்றும் இராணுவக் காவல் படையால் சூழப்பட்டது. அதிரடியாக பிரிகேடியர் ஜெனரலான ரோஜர் ரமி (Brig. Gen. Roger Ramey) பத்திரிகைகளை அழைத்து, அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கையில், "ரோஸ்வெல் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வானிலையை அறிய ஏவவிடப்பட்ட பலூன் (Weather Baloon) ஒன்று வெடித்துச் சிதறியது. அதைத் தவறுதலாகப் பறக்கும் தட்டு என்று அவசரப்பட்டு அறிவித்து விட்டோம். தவறுக்கு மன்னிக்கவும். அது பறக்கும் தட்டே இல்லை. சாதாரண பலூன்தான்" என்றிருந்தது. சில மணி நேரங்களிலேயே அனைத்தும் மாறின. எல்லாமே வேறு தடத்துக்குத் திரும்பின.

 

 

இங்கு முக்கியமாகச் சொல்ல வேண்டிய விசயம் ஒன்று உண்டு. மேலே கூறிய ரோஸ்வெல் பறக்கும் தட்டு மர்மத்தில் சம்மந்தப்பட்ட அனைவரும் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள். வாழ்க்கையிலும், பதவியிலும் நல்லதொரு இடத்தில் இருந்தவர்கள். பறக்கும் தட்டு சம்பந்தமாக அவர்களில் ஒருவர் பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் ஒருவரோடு ஒருவர் சம்பந்தமே இல்லாத பல நபர்கள் கூட்டுச் சேர்ந்து அப்படி ஒரு கதையைச் சொல்லியிருக்க முடியுமா? கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. காற்று நிறைந்த பையை ஒரு பக்கம் அழுத்தும்போது, அது மறு பக்கத்தில் பீறிட்டு வெளியே வரத் துடிக்குமே அது போல, ரோஸ்வெல் சம்பவம் வேறு ஒரு வடிவத்தை எடுத்தது. அந்த வடிவம் இன்னும் மோசமான வடிவமாக இருந்தது. இதுவரை நாம் அறிந்ததே மலைப்பாக இருக்க, இது அதைவிடப் பெரிய மலைப்பைத் தந்தது. ரோஸ்வெல் பறக்கும் தட்டின் இரண்டாவது சம்பவம் அது. 

 

 

 

மாக் பார்ஸெல் வெடித்துச் சிதறிய துண்டுகளைக் கண்ட அதே தினங்களில், பார்னி பார்னெட் (Barney Barnett) என்னும் எஞ்சினியர், நியூ மெக்ஸிகோவின் இன்னுமொரு இடத்தில் கீழே விழுந்த ஒரு ஒரு மிகப்பெரிய பொருளைக் கண்டார். அவர் கண்டது என்ன தெரியுமா? பறக்கும் தட்டேதான். முழுமையான பறக்கும் தட்டு ஒன்று பூமியில் விழுந்து கிடந்ததை பார்னி கண்டார். அது மட்டுமில்லை அந்தப் பறக்கும் தட்டுக்கு அருகே, கீழே இறந்து விழுந்த நிலையில் அவர் எதைக் கண்டார் தெரியுமா? 'ஏலியன்' என்று சொல்லப்படும் வேற்றுக் கிரக மனிதனின் முழு உடலை. "பூவைத்தான் காதில் வைப்பார்கள். நான் பூச்சாடியையே உங்கள் காதில் வைக்கப் பார்க்கிறேன்" என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? ஆனால் இவையெல்லாமே உண்மையென்றுதான் சம்பவங்கள் அனைத்தும் சொல்கின்றன. 

இரண்டாவது சம்பவத்தில் கண்ட ஏலியனுக்கும், முதல் சம்பவத்துக்கும் சம்பந்தம் உண்டா? முதல் சம்பவத்தில் அதன் பின்னர் என்ன நடந்தது? உண்மையில் இரண்டாவது சம்பவத்தில் ஏலியனை பார்னி கண்டாரா? அந்த ஏலியனுக்கு அப்புறம் என்ன நடந்தது? அந்த மூன்றாவது சம்பவம் என்ன? என்னும் கேள்விகளுக்கான பதிலுடன் அடுத்த வாரம் சந்திப்போம். 

 

 

 

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com