முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
மனுஷ்ய புத்திரன் சென்றார் (அப்பாடா!)
இந்திரஜித்
நமது ஜனநாயகம்
வாஸந்தி
கொடுத்ததும் பெற்றதும்
ஷாநவாஸ்
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (18)
ராஜ்சிவா
அற்று வரும் உயிரின் ஒலி
எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா
ஒரு நகரத்தின் கதை
சித்ரா ரமேஷ்
கவிதை
மொழிபெயர்ப்புக் கவிதைகள்: டேன் பாகிஸ்
தமிழில்: ஆர்.அபிலாஷ்
அறைக்கு வெளியே வீசும் புயல் காற்று
இளங்கோ
புத்தகப் புழு
ராஜா
மெலிதாய் வீழும் வெயிலின் பயணச்சிறகு..
தேனு
எங்குமானவைகள்
ராம்ப்ரசாத்
ஒற்றைப் புறந்தள்ளலில் உலகை ஒடித்தல்
ஆறுமுகம் முருகேசன்
என் செல்ல ட்ராகன்
சின்னப்பயல்
காலங் கடந்த பின்பு…
கலையரசி
புன்னகை மறுக்கப்படுமொரு பொழுதில்
ப.பார்த்தசாரதி
சிறுகதை
ஸ்ருதி லயம்
உஷாதீபன்
பொது
கொஞ்சம் டேஸ்டியாய்.........கொஞ்சம் ஹெல்தியாய்.............
கே.பத்மலக்ஷ்மி
ஹைக்கூ
நவீன ஹைக்கூ - ரேச்சல் கிரீன்
தமிழில் ஆர்.அபிலாஷ்
கருத்துப் படங்கள்
வலை
பாபுஜி
விளையாட்டுப் பிள்ளை
பாபுஜி
'2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' (18)
ராஜ்சிவா


"மாயன் இனத்துக்கும், நம் தமிழ் இனத்துக்கும் தொடர்பு இருந்திருக்கலாமா……? அதற்குச் சாத்தியங்கள் உண்டா.........?"  என்ற கேள்வியைக் கடந்த பதிவில் கேட்டு முடித்திருந்தேன். நமது இனம், தமிழ் இனம் என்பதால் தமிழுக்கு மதிப்பையும், மரியாதையையும் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் நமக்கு எப்போதும் இருந்து வருகிறது. இதனால் தமிழின் பெருமைகளைச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொல்லும் தந்திரமாகச் சிலர் இதைப் பார்க்கலாம். ஆனால் தமிழின் பெருமைகளை நாம் அறிந்திருப்பதை விட, வெளிநாட்டவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்தத் தொடரை நான் எழுதுவதற்குப் படித்தவைகளும், காணொளிகளாகப் பார்த்தவைகளும் ஏராளம். பல வரலாற்று அறிஞர்களின், அறிவியலாளர்களின் படைப்புகளையும், மேற்கோள்களையும் படித்திருக்கிறேன். அதில் விசேசம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் மனித வரலாற்றின் புராதன ஆச்சரியங்களைப் பற்றிச் சொல்லும்போது, ஏதாவது ஒரு இடத்தில் இந்து மதத்தைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் குறிப்பிடாமல் இருந்ததில்லை. இந்து மதம், சமஸ்கிருதம் என்று அவர்கள் கூறிவிட்டு, அவர்கள்  மேற்கோள் காட்டுவதில் பெரும்பான்மையானவை தமிழ்நாட்டுப் புராதன அடையாளங்களாகத்தான் இருக்கின்றன.

மாயன் இனம் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சியே, நாம் அவர்கள் பற்றி இன்றும் விரிவாகப் பேசுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. மாயன்களின் சரித்திரத்தில், குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விசயமே, அவர்களின் 'மாயா' என்னும் பெயரைத்தான். 'மாயா' என்னும் இனமாக இருப்பதால், அவர்களை நாம் 'மாயன்கள்' என்று சொல்கிறோம். ஆனால் இதில் நாம் அவதானிக்க வேண்டிய இன்னுமொரு விசயம், உலகில் 'மாயா' என்னும் சொல், மாயா இனத்தவர்கள் தவிர்ந்து, வேறு ஒரே ஒரு பெரு நிலத்தில் மட்டும்தான் பாவனைக்கு இருந்திருக்கிறது. இன்றும் இருக்கிறது. அது எங்கு என்று உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதே இல்லை. இலங்கை, இந்தியா சார்ந்த இடங்களில் மட்டுமே இந்த 'மாயா' என்னும் சொல் பரவலாகப் பாவிக்கப்படுகிறது.

'2012ம் ஆண்டு உலகம் அழியும்' என்று மாயன்களின் நாட்காட்டியில் சொல்லப்பட்டிருக்கிறது என்று அறியப்பட்டது முதல், மாயன் பற்றிப் பேசாதவர்கள் உலகத்திலேயே இல்லை என்றே சொல்லலாம். இதனால் ஆராய்ச்சியாளர்கள் கூட்டம் மத்திய அமெரிக்காவில் உள்ள மாயன் நிலங்களை நோக்கிப் படையெடுத்தபடியே இருக்கிறது. ஆனால் இதை இன்று வரை யார் கவனித்திருக்க வேண்டுமோ, அவர்கள் அதாவது இந்தியா மற்றும் இலங்கையில் வாழும் யாரும் கவனத்தில் எடுக்கவில்லை. இந்த மன நிலை ஏன் நமக்கு இருக்கிறது என்று கேட்டால், வேதனைக்குரிய பதிலே நமக்குக் கிடைக்கும். அதனால் அதை அப்படியே விட்டு விடலாம். ஆனால் நாம் இதைக் கவனிக்கத் தவறினாலும், மேற்கத்தைய ஆராய்ச்சியாளர்கள் இதைக் கவனித்து, இது பற்றி விரிவாகவே ஆராய்ந்திருக்கிறார்கள். அதில் குறிப்பாக உங்களுக்கு நான் சுட்டிக் காட்ட விரும்புபவது, அமெரிக்காவில் பிறந்த எழுத்தாளரும், சரித்திர ஆய்வாளருமான 'மாட்லாக்' (Gene D.Matlock) என்பவரைத்தான். மாட்லாக் என்பவர் தமிழனுக்கும், இந்துக்களுக்கும், மாயன்களுக்கும் சம்பந்தம் உண்டு என்று உறுதியாகச் சொன்னார். இவர் இது பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதி வெளியிட்டும் இருக்கிறார். இனி நான் எழுதப் போகும் பல விடயங்கள் அவர் சொன்னதை முன்வைத்துச் சொல்வதாகவே இருக்கும். இந்தக் கருத்துகளில் முரண்பாடு இருப்பவர்கள் முதலில் மாட்லாக்கைத்தான் குற்றம் சாட்ட வேண்டும்.

மாயா என்ற சொல் நம்மிடையே எங்கெல்லாம் பயன்பட்டிருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்……..!
'மாயா' என்னும் தெய்வம் நம்மிடையே உண்டு. 'மாயா' என்பது ஒரு தத்துவமாகவும் நம்மிடம் உண்டு. 'மாயா' பற்றிப் பகவத் கீதையில் நிறையவே சொல்லப் பட்டிருக்கின்றது. 'மாயாலோகம்' என்று ஒரு உலகம் உண்டு என்ற நம்பிக்கையும் நம்மிடையே உண்டு. 'மாயா தேவி' என்பவர் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, கௌதம புத்தரின் தாயாராக இருந்திருக்கிறார். அத்தோடு, 'மாயை' என்னும் சொல், பெயர்ச் சொல்லாகவும், வினைச் சொல்லாகவும் நம் மொழியில் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதிகம் ஏன், இலங்காபுரியை அழகுற அமைத்தனர் 'மயன்' என்று சொல்லப்படுபவர்  பற்றி  நமது புராணங்களிலேயே இருக்கிறது. கட்டடக் கலையில் வல்லவர் மயனா? மாயனா? நீங்களே சிந்தியுங்கள்.

"இங்கு 'நமக்கு' என்று நான் சொல்வது யாரை?" என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழலாம் அல்லவா? இந்தியா, புத்தர், இந்துமதம், தமிழர் என்று கலந்து கட்டிச் சொல்லியிருக்கிறேன். இதில் எப்படி மாயன்களையும், தமிழர்களையும் மட்டும் தொடர்புபடுத்திக் குறிப்பிட்டு நான் சொல்ல முடியும்?

சொல்கிறேன்......!
உண்மையில் 'மாயை' என்னும் சொல் பழந்தமிழிலிருந்தே இந்திய அனைத்து மொழிகளுக்குள்ளும் நுழைந்திருக்க வேண்டும். 'மயக்கம்' என்னும் சொல்லின் அடியாகப் பிறந்ததே இந்த 'மாயை' என்னும் சொல். இதுவே பிற்காலத்தில் வேறு மொழிகளுள் புகுந்திருக்கிறது. இதற்கு ஆதாரமாகத் தமிழனின் ஆதிகாலச் சிறு தெய்வங்களில் ஒன்று, 'மாயாண்டி' என்று அழைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், தமிழர்கள் பலர் தங்களுக்கு மாயாண்டி எனப் பெயர்களை இப்போதும் கொண்டிருக்கின்றனர். தமிழர்களின் பழம் பெரும் நூல்கள் அனைத்திலும் மாயை என்னும் சொல் இருக்கிறது. தமிழர்களின் மதமான, சைவசமயத்தின் சைவசிந்தாந்தத்தில் குறிப்பிடப்படும் மும்மலங்களில், ஆணவம், கன்மத்துடன் மாயையும் ஒரு மலமாக வருகிறது. அத்தோடு திருமந்திரம், திருவருட்பயன் என்னும் நூல்களில் மாயை என்னும் சொல் பயன்பாட்டில் இருக்கிறது. உண்மையில் மாயை என்பது தமிழர்கள் பாவித்த ஒரு சொல்லாகவே பார்க்கின்றனர் மேற்குலக ஆராய்ச்சியாளர்கள். அப்படி இல்லாமல் போனாலும் பரவாயில்லை.
 
நாம் பேசிக் கொண்டு வரும் மாயன் சரித்திரங்கள் எல்லாமே, இன்றிலிருந்து ஆயிரம் வருடங்களிலிருந்து பத்தாயிரம் வருடங்கள் வரைக்கும் முற்பட்ட காலத்திற்கு உரியவை. இந்தக் கால இடைவெளிகளில், உலகில் பல நாகரீகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனால் மிக மிக ஆரம்ப கால நாகரீகங்கள் எனப் பார்க்கும் போது, அதில் சிந்து வெளி நாகரீகமும் ஒன்றாக அடங்குகிறது. இது 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நாகரீகம். சிந்து வெளி நாகரீகம் தமிழர்களின் நாகரீகமாகும். 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியத் தேசத்தில் உயிர்ப்புடன் இருந்த ஒரே மொழி தமிழ் மொழி மட்டும்தான். மாயன் இனத்தின் பெயருக்கும் நம்மிடையே வழங்கி வந்த இந்த மாயா என்னும் பெயருக்கும் உள்ள தொடர்பு தற்செயலானதாக இருக்கலாம் எனத் தோன்றவில்லை. உலகில் வேறு எங்குமே இல்லாத மாயா எப்படி நம்மிடத்தில் மட்டும் வந்தது? அதுவும் இவ்வளவு பரவலாக.....!
 
"அட! இது ஒன்றை வைத்து எப்படி இவ்வளவு சாதாரணமாக, அந்த மாயனும், இந்த மாயனும் ஒன்று என்று இவர் சொல்லலாம்" என்று நீங்கள் யோசிப்பதற்குப் பதில் வேறு வடிவில் இருக்கிறது. மாயன் இனத்துக்கும், நமக்கும் இந்தப் பெயர் ஒற்றுமை என்பதில் மட்டும்தான் தொடர்பா என்று பார்த்தால்………! ஆச்சரியமான வேறு சில தொடர்புகளும் தெரிகிறது. அவை என்ன தெரியுமா? நீங்களே பாருங்கள்………..!
 
தமிழர்கள் முற்காலத்தில், கப்பலில் மேற்கு நோக்கிக் கடற் பயணத்தில் ஈடுபட்டதற்கான சான்றுகள் நிறையக் கிடைத்திருக்கின்றன. அப்படி அவர்கள் பயணம் செய்தபோது பாவித்த வரைபடங்களாகக் கீழே கொடுக்கப்பட்ட இவை இரண்டும் எமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த இரண்டு வரைபடங்ககளையும்  சரியாகக் கவனியுங்கள். ஆங்கிலத்தில் குறிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் எமது விளக்கத்திற்காகக் கொடுத்திருக்கின்றனர்.  

முதலாவதாக இருக்கும் வரைபடத்தின்படி, Kethumal (Chethumal) என்னும் மாயன் இடம் வரை மேற்கே தமிழர்கள் சென்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கீழே உள்ள தற்கால வரைபடத்தின் மூலம் அந்த Chethumal எங்கிருக்கிறது என்பதை நீங்கள் சரி பார்த்து அறிந்து கொள்ளலாம். அத்துடன் தமிழர்கள் பிரயாணம் செய்த கப்பல், படத்தில் இருப்பதாகவும் இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.


இது பற்றி மாட்லாக் என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள். அவரது மொழியிலேயே அதை நேரடியாக உங்களுக்குத் தருகிறேன்......!

THE MAYANS WERE TAMILS.
I am now ready to return to the hypothetical voyage of Tamils to America. They probably used two types of maps. The map below-left shows Mt. Meru with petals pointing in four directions. The left petal points toward a distant land called Ketumal or Chetumal. In order to reach that land, they had to go eastward in order to avoid sailing around the tip of Africa. They knew where they were going, for they had been there before! The map below-right was their own map of the world.
 
The Mayans said that the land of their forefathers lay 150 days westward.
 When the Tamils arrived in North America, they crossed over to what is now the Caribbean Sea, through the Isthmus of Panama (The Great Crossing). After coming out the other side, they docked in the safe harbor of Chetumal. It still bears the same name. Chetumal harbor is in Belize. Belize derives from Belisha (God Shiva).

'இந்த ஆதாரங்கள் மட்டும் போதாது' என்று நீங்கள் நினைத்தால். தமிழரசனான, பல்லவ அரசனின் மாமல்லபுரக் கட்டடங்களையும், மாயனது கட்டடங்களையும் சற்றே ஒப்பிட்டுப் பாருங்கள்.

இவை மாமல்லபுரக் கட்டடங்கள்...........!

இவை மாயன் கட்டடங்கள்...........!

குறிப்பாக மாயனின் முக்கிய கட்டடம் ஒன்றும், மாமல்லபுரக் கட்டடம்  ஒன்றும் அச்சு அசலாக ஒன்று போலக் காணப்படுகிறது.  இது தற்செயலாக இருக்க முடியுமா என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இந்த ஆதாரமும் போதாது என்று நீங்கள் அடம் பிடித்தால், ஆதிகாலத்தில் நமது மூதாதையர்கள் விளையாடிய விளையாட்டான 'சொக்கட்டான்' அல்லது 'தாயம்' என்று அழைக்கப்படும் விளையாட்டு ஓலைச் சுவடியில் வரையப்பட்டிருப்பதைப் பாருங்கள். அதே விளையாட்டு, மாயன்களும் அதே வரைபடம் கொண்டு வரைந்து விளையாடியிருக்கிறார்கள் என்றால் என்ன சொல்வீர்கள்? இதுவும் தற்செயலா.....?

சரி, இவையெல்லாவற்றையும் விட்டுவிடலாம்………..! மாயன்களுக்கும், நமக்கும் உள்ள சில பெயர்களின் ஒற்றுமைகளை இப்போது பார்க்கலாமா? இலங்கை என்னும் பெயர் நீங்கள் அறிந்ததே! தமிழில் இலங்கம், இலங்கா என்பது மருவி இலங்கை என்றாகியது. ஆனால் மாயனின் பல இடங்களின் பெயர்கள் 'லங்கா' என்பதில் முடிகிறது. குறிப்பாகச் 'சிலங்கா' என்ற ஓசையுடன் உள்ள Xilanca என்னும் மாயன் இடமும், 'இக்ஸ்பலங்கா' என ஓசை வரும் Xbalanca என்பதும், 'பலங்க' என்று ஓசை வரும் Palenque என்னும் இடமும் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அத்துடன் சேரன் (Ceran) என்னும் மாயனின் அரசன் பெயரும் வியப்பளிக்கிறது.


"முடியாது! முடியவே முடியாது! இதை எல்லாம் ஒத்துக்கவே முடியாது" என்று நீங்கள் இன்னும் நம்ப மறுத்துப் பிடிவாதம் பிடித்தால், அடுத்து நான் சொல்லப் போவதை அவதானமாக கவனியுங்கள். உலகமே மாயன்களையும், எகிப்தியரையும் அவர்களின் கட்டடக் கலைக்காக மிகவும் வியக்கிறது. அதிலும் குறிப்பாக அவர்கள் கட்டிய பிரமிட்டை வியப்புடன் பார்க்கிறது. 'பிரமிட்' என்றால் எகிப்தியரைப் பொறுத்தவரை இறந்தவர்களை அடக்கம் செய்த இடமாகிறது. ஆனால் மாயனைப் பொறுத்தவரை அவர்களின் பிரமிட்டுகள் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோவில்கள். புனிதமான இடங்கள். ஆனால் இங்கு நாம் கவனிக்கத் தவறிய மிகப் பெரிய விசயம் ஒன்று உண்டு. பிரமிட் என்றால் அதன் வடிவம் என்ன? நான்கு பக்கங்களும்  தட்டையான தளங்களையுடைய, கூம்பு போன்ற ஒரு அமைப்புத்தானே! அப்படிப் பார்த்தால், நமது கோவில்களின் கோபுரங்கள் அனைத்துமே பிரமிட் வடிவங்களில்தானே கட்டப்பட்டிருக்கின்றன. இதை நாம் எப்படிக் கவனிக்காமல் விட்டோம்? நமது கட்டட வடிவத்தை அவர்கள் கவர்ந்து கொண்டார்களா? இல்லை, அவர்களது கட்டட வடிவத்தை நாம் பெற்றுக் கொண்டோமா..? இதற்குப் பதில் மாயன்களின் சரித்தி ரலேயே உண்டு. 'மாயன்களுக்குக் கிழக்கிலிருந்து வந்தவர்கள்தான் சகல அறிவையும் கற்றுத் தந்தார்கள்' என்று இருக்கிறது. அப்படிக் கிழக்கில் இருந்து வந்தவர்கள் ஒன்று சுமேரியராக இருந்திருக்க வேண்டும் இல்லை தமிழர்களாக இருந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால், சுமேரியர்கள் கூடத் தமிழர்களின் தொடர்புள்ளவர்களாக இருக்கச் சாத்தியம் உண்டு. இவையெல்லாவற்றுக்கும் சாட்சியங்களும் உண்டு. இப்போது மாயன்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதற்கு சாத்தியங்கள் உண்டு என்பதை நீங்களே பார்த்தீர்கள். அத்துடன் இன்னுமொரு முக்கியமான இந்தக் கோவில்களின் அமைப்பையும் பாருங்கள். ஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள். உதாரணத்திற்கு மாயனின் கோவில் ஒன்றையும், அதாவது பிரமிட் ஒன்றையும், நமது கோவில் கோபுரம் ஒன்றையும் படமாகத் தருகிறேன் பாருங்கள்.

இதற்கு மேலும் நான் ஆதாரங்களைத் தேடித் தர வேண்டியது இல்லை என்றே நம்புகிறேன். ஆனாலும், கோவில்களின் கோபுரங்களுடன் நமது அடுத்த ஒரு பிரமிக்கத் தக்க ஆய்வொன்றைச் செய்து விட்டு மேலே செல்லலாம். நீங்கள் இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயங்களை நிச்சயம் மறந்திருக்க மாட்டீர்கள். அதில் நான் மாயன்களுக்கும், ஏலியன்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனப் பல சாட்சியங்களைத் தந்திருந்தேன். மாயன்களுக்கு இவ்வளவு பிரமிக்கத்தக்க அறிவை யாரோ கொடுத்திருக்க வேண்டும். அவர்கள் ஏலியன்களாகவும் இருக்கச் சாத்தியம் உண்டு எனப் பல அத்தியாயங்களில் சொல்லியிருக்கிறேன். ஒருவேளை அப்படி இருந்திருந்தால், அந்த ஏலியன்கள், பறக்கும் விமானத்தின் மூலமாகத்தான் மாயன்களை வந்தடைந்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி என்றால் விமானம் என்பதும் இங்கு முக்கியமாகின்றது அல்லவா?

இப்போது  மிகவும் ஆச்சரியப்படக் கூடிய ஒரு செய்தியைக் கவனியுங்கள். நாங்கள், நமது கோவில்களின் கோபுரங்களை எப்படி அழைப்போம் தெரியுமா? 'விமானம்' என்றுதான் அழைக்கிறோம். அதேநேரம், எமது பண்டைய காவியங்களில் பறந்து வரும் ஒவ்வொரு உபகரணமும் விமானம் என்றுதான் அழைக்கப்பட்டிருக்கிறது. இது உங்களை ஆச்சரியப் படுத்தவில்லையா? கட்டடமும், பறக்கும் சாதனமும் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை உலகில் வேறு எந்த மொழிகளிலுமோ, இனங்களிலுமோ கிடையாது. இது எப்படிச் சாத்தியமாயிற்று.

சிவபுராணத்தில் வரும் மிக முக்கியமான ஒரு கதையையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். 'தாரகாசுரன்' என்னும் அசுரன், முருகனால் அழிக்கப்பட, அவனது மூன்று மகன்களான  வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகியோர் கடுந்தவம் செய்து, சிவனிடமிருந்து மூன்று பறக்கும் கோட்டைகளைத் தவமாகப் பெறுகின்றனர். பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று உலோகங்களாலானவை அந்தக் கோட்டைகள். அந்தக் கோட்டைகளின் மீதேறிப் பறந்தபடி தேவர்களை அவர்கள் மூவரும் துன்புறுத்தினார்கள் என்பது புராணம். இப்போது நமது கேள்வி என்னவென்றால், கோட்டைகள் பறக்குமாயின், கோவில் கோபுரங்களும் அதை அடையாளப்படுத்தும் ஒரு கட்டட வடிவமா?  அதனால்தான் அவற்றிற்கு விமானம் என்று பெயர் வந்திருக்கலாமா?  அதாவது எம்மூதாதையரிடமிருந்த கோபுரங்கள் எல்லாம் பறக்கும்  தன்மை உள்ளவையாக இருந்திருக்கலாமா? இதில் மிகப்பெரிய இன்னுமொரு ஆச்சரியம் என்ன தெரியுமா? மேற்சொன்ன மூன்று பறக்கும் கோட்டைகளையும் வடிவமைத்துக் கட்டியவர் வேறு யாருமல்ல. சாட்சாத் 'மயன்' (மாயன்) என்பவர்தான். என்ன பெயர்ப் பொருத்தம் பிரமிப்பாக இல்லையா? நம்மிடம் இன்னுமொரு கதையும் உண்டு. இராவணனின் மனைவி மண்டோதரியின் தகப்பனான மயன், 'மாயா இராட்சியம்' அதாவது 'மாயா ராஷ்ட்ரா' என்னும் இராச்சியத்தைக் கட்டினான். அதுதான் 'மகாராஷ்ட்ரா'வா தெரியவில்லை. எங்கும் மாயா, எதிலும் மாயா என்று பார்க்கும் போது ஆச்சரியமாக இல்லையா? 

நம்மிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. எந்த ஒரு  அமானுஷ்ய சக்திக்கும் உடனடியாக, ஒரு தெய்வீகத் தன்மையைக் கொடுத்து விடுகிறோம். சாதாரண வாழ்க்கையில் இருப்பதை விட, அசாதாரணமாக எது இருந்தாலும், அதைக் கடவுள் தன்மையுடன் இணைத்து விடுகிறோம். இது சரியா? தப்பா? என்ற விவாதத்திற்கு நாம் இப்போது போகத் தேவையில்லை. ஆனால், இப்படி எல்லாவற்றுக்கும் தெய்வீகத் தன்மை கொடுத்து விடுவதால், அவை பற்றி ஆராய எம்மால் முடியாமல் போகிறது. மிகப்பெரிய தடங்கலாக நாம் கொடுக்கும் அந்தத் தெய்வீகத் தன்மை அமைந்து விடுகிறது. நம்பிக்கைக்குரிய விசயங்களை ஆராய்வது மிகப்பெரிய தவறாக ஆகிவிடுகிறது. ஆனால், மேலை நாடுகளில் இவற்றையெல்லாம் ஆராய்ச்சிக்குரிய, ஆச்சரியங்களாகவே பார்க்கின்றனர். அதனால் அவை பற்றிய ஒரு சரியான, விழிப்புணர்வான முடிவுக்கு அவர்களால் வரமுடிகிறது.
 
மாயா, எகிப்து போன்ற இடங்களில் இருப்பதை விட விண்வெளி சம்பந்தமான ஆச்சரியங்கள் இந்துக்களிடத்தில்தான் மிக அதிகமாகக் காணப்படுகிறது. மாயாக்களும், எகிப்தியரும் தங்கள் மர்மங்களை ஆராய்ச்சி மூலமாக வெளிக்கொண்டு வர முயற்சி செய்யும் நேரத்தில், இந்துக்கள் தங்கள் ஆச்சரியங்களை கடவுளர்க்குள் திணித்துவிட்டு ஆராயப் பயப்படுகிறார்கள். இராவணன், சீதையைக் கவர்வதற்குப் 'புஷ்பக விமானம்' பயன்படுத்தியது. இந்திரன் வானுலகத்தில் இருந்து தனது பறக்கும் தேரில் பூமிக்கு வந்தது. மணிமேகலை 'மயில் பொறி' என்னும் இயந்திரத்தின் மூலமாக, இலங்கைக்குப் பறந்து சென்றது. கருடன், மயில், அன்னம் போன்ற பறவைகளை வாகனமாக்கி, வானில் கடவுள்கள் பறந்தது. இப்படிப்பட்ட பலவித இந்து மதக் கதைகளை நாம் நிறையவே படித்திருக்கிறோம். இவற்றை ஒரேயடியாகப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஒன்று என்று அப்படியே ஒதுக்கித் தள்ள முடியாது. இவற்றிற்கு கடவுள் தன்மை கொடுக்கப்பட்டதால் மூடநம்பிக்கை என்னும் ஒரு நோக்கால், பகுத்தறிவுவாதிகளால் இது எதிர்க்கப்படுகிறது. ஆனால் இவற்றை விண்வெளி சார்ந்த 'மிஸ்டரி' வகை மர்மங்களாகப் பார்த்தால், ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்திப் பார்த்தால் எமக்குக் கிடைக்கும் உண்மைகள் வேறாக இருக்கும்.

உதாரணமாக, மேலே இருக்கும் இரண்டு படங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதில் மேலே இருப்பது ஒரு நவீன விண்வெளிப் பயணி. கீழே இருப்பது விநாயகர். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பாருங்கள். "இப்படியும் இருக்கலாமோ?" என்று எம்மை யோசிக்க வைக்கிறது அல்லவா? இங்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்குப் புரியலாம். மேற்கிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் பகுத்தறிவு என்னும் பெயரால், யானைத் தலையுடன் எப்படிக் கடவுள் இருக்க முடியும் எனக் கேலி செய்யாமல், அதை ஆராய்ச்சி மனப்பான்மையுடன் பார்த்ததால் அவர்களுக்கு இப்படி ஒரு பார்வை தோன்றியுள்ளது. அதாவது, விநாயகர் என்னும் கடவுள் விண்வெளியில் இருந்து வந்து இறங்கிய ஒருவராக இருக்கலாமோ என்று யோசிக்கின்றனர். ஆனால் இதை இங்கு நமது நாட்டில் ஆராய்ந்தால், எவ்வளவு எதிர்ப்புகள் எந்த எந்தப் பக்கத்தில் இருந்து கிளம்பும் என்று சிந்தித்துப் பாருங்கள். 

இப்படியான மதக் கதைகள் பகுத்தறிவுக்கு ஒத்துவராமல் இருந்தாலும், இக்கதைகள் ஏன் உருவாக வேண்டும் என யோசிக்க வேண்டி இருப்பது என்னவோ உண்மைதான். கடவுள் என்னும் ஒரு கருத்துக்குள் இதை அடக்கி விடாமல் அறிவியலாக நோக்கினால், ஆதிகாலத்து பாரத மக்கள் எதையாவது கண்டு இருக்கலாமோ என்றே எண்ண வைக்கிறது. அப்படித்தான் மேலைத்தேச ஆராய்ச்சியாளர்கள் சிந்திக்கிறார்கள். இங்கு மூன்று முக்கிய கேள்விகள் எழுகின்றன. 1. கடவுள் என்பவர் பூமிக்கு வெளியே, வானத்தில் இருந்து வந்தவர் என்ற கருத்து ஏன் வந்தது? 2. கடவுள்கள் தலைகளில் கிரீடம் போன்ற ஒன்றை அணிந்தபடியே ஏன் காட்சியளிக்க வேண்டும். 3. கடவுள்கள் விமானங்கள், பறக்கும் தேர்கள் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றைப் பாவித்து ஏன் பறக்க வேண்டும்? இந்த மூன்று விசயங்களையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்........!
 
இவை ஏன் இப்படியும் இருந்திருக்க முடியாது. மாயன் இனத்தவர்கள் கண்டார்கள் எனச் சொல்லப்படுவது போல, நமது முன்னோர்களும் தலையில் கவசம் அணிந்து, விண்வெளியில் இருந்து பறக்கும் ஒரு சாதனத்துடன் வந்த எவரையாவது கண்டிருக்கலாமல்லவா....? இவ்வளவு ஆழமாக இதை ஏன் சொல்ல வேண்டி உள்ளது என்று நான் உங்களுக்கு விளக்க வேண்டும். இந்து மதக் கதைகள் பற்றி நான் சொல்லும்போது, "இது எல்லாம் எங்களுக்குத் தெரிந்தவைதானே" என்று உங்களுக்கு ஆர்வம் குறைவாகவே இருக்கும். ஆனால் உங்களுக்குத் தெரியாத பல விசயங்களும் நம்மிடையே உண்டு என்பதுதான் யதார்த்தம். இப்போது நான் சொல்லப் போவதும் அப்படிப்பட்ட ஒன்றைப் பற்றித்தான். அதுவும் ஆச்சரியத்தின் உச்சத்துக்கே உங்களைக் கூட்டிச் செல்லும்.
 
நமது வேதங்களிலும் புராணங்களிலும், பழைய நூல்களிலும் உள்ள குறிப்புகளை வைத்து, பரத்வாஜ முனிவரால் எழுதப்பட்டது என்று கருதப்படும் நூல் ஒன்று, 'சுப்பராயா சாஸ்திரி' (Subbaraya Sastry) என்பவரால் தொகுக்கப்பட்டது. அந்த நூலின் பெயர் 'வைமானிக சாஸ்திரம்' (Vymaanika Shaastra - விமான சாத்திரம்). சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அந்த நூல், 1918 ம் ஆண்டளவில் தொகுக்கப்பட்டது. பின்னர் அதை ஆங்கிலத்தில் ஜோஸ்யர் (Josyer) என்பவர் மொழிபெயர்த்தார்.

பண்டைய காலங்களிலேயே இந்துக்கள் விமானங்களைப் பற்றியும், அவற்றைச் செய்யும் முறைகளைப் பற்றியும் கூறியது, அதில் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. மொத்தமாக நான்கு வகை விமானங்களை இந்துக்கள் பாவித்தார்கள் என்றும் அதில் சொல்லப் பட்டிருக்கின்றது. 1.சகுன விமானம் (Shakuna Vimana), 2. சுந்தர விமானம் (Sundara Vimana), 3. ருக்ம விமானம் (Rukma Vimana), 4. திரிபுரா விமானம் (Tripura Vimana) என்னும் நான்கு வகை விமானங்கள்தான் அவை. அவற்றைப் பற்றி நான் சொற்களால் புரியவைப்பதை விடப் படங்களைப் பார்க்கும்போது நீங்கள் அதிகம் புரிந்து கொள்வீர்கள். அவற்றையும் அவை சம்பந்தப்பட்ட படங்களையும் இப்பொழுது தருகிறேன் பாருங்கள்.
 
இதுதான் சகுன விமானம்


 
இதுதான் சுந்தர விமானம்

இதுதான் ருக்ம விமானம்

இதுதான் திரிபுரா விமானம்

என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா...? நம்மிடம் இப்படி ஒரு அறிவியல் இருந்திருக்கிறதா என்ற வியப்பு வருகிறது அல்லவா? அந்தக் காலத்தில் இது எப்படிச் சாத்தியம்? இப்போது எங்கள் கடவுளர்கள் உலாவரும் தேரின் வடிவத்தையும் மனதில் எடுத்துப் பாருங்கள். மேலே கொடுக்கப்பட்டிருக்கும்  விமானங்களில் சில, தேர்களின் வடிவில் இருக்கிறது எம்மை ஆச்சரியப்படுத்துகிறது. தேர்களும், கோவில் கோபுரங்களும் உண்மையில் விமானங்களாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதாகத் தெரிகிறது அல்லவா? இவற்றை ஒட்டித்தான் நாம் அதை ஒரு வழிபாட்டு முறையாக மாற்றிவிட்டோமா?
மேலே சொன்னவையெல்லாம் வைமானிக சாஸ்திரம் என்பதில் சொல்லப்பட்டு, அதன்பின் 1918 இல் சுப்பராயா சாஸ்திரிகளின் நூலின்படி வடிவம் கொடுக்கப்பட்ட விமான வரைவுகள். இது மட்டுமல்ல, இந்த விமானங்களை எப்படி எப்படி இயக்க வேண்டும், இயக்குபவர்கள் எப்படி உடை அணிய வேண்டும், எத்தனை பேர் அமர்ந்து இந்த விமானங்களில் செல்ல வெண்டும் என்பது எல்லாமே அட்சர சுத்தமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில வகை விமானங்கள் போருக்கும் பயன்படுத்தப்படுமாம். அத்துடன் இந்த விமானங்களைப் பாதரசத்தைத் திரவ நிலைக்கு உள்ளாக்கி, அதனை அதி வேகமாகச் சுற்ற வைப்பதனால் பெறப்படும் ஒருவித சக்தியினால் இயக்கலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. நமக்குத்தான் இவை பற்றிக் கவலை இல்லையே! அதிகபட்சமாக இவற்றைத் தெரிந்து கொண்டால், கடவுளைப் போற்றிவிட்டு நமது வேலையைப் பார்க்கச் சென்று விடுவோம். ஆனால் மேலைத் தேச அறிஞர்கள் இந்த வைமானிக சாஸ்திரத்தைப் புகழோ புகழென்று புகழ்கின்றனர். புராதன அறிவியல் பற்றிப் பேசும் ஒவ்வொரு இடங்களிலும் இதை முன்வைத்து சிலாகிக்கின்றனர். எமக்குத் தெரியாதது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதில் ஒருபடி மேலே போய், இரண்டாம் உலகப் போரின் சமயங்களில், ஹிட்லரின் விஞ்ஞானிகள் மேற்படி வைமானிக சாஸ்திரத்தை மையமாக வைத்து பறக்கும் தட்டு ஒன்றைத் தயாரித்துப் பறக்கவிட்ட செய்தியும் உண்டு. பறக்கும் தட்டை ஜெர்மன் தயாரித்தது வதந்தி அல்ல. மிக நிச்சயமான உண்மை.

இவ்வளவு ஆச்சரியங்களுக்குக் காரணமான மாயன்களுக்கும், மாயன்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படும் நமது முன்னோர்களுக்கும் இடையே இருப்பவை எம்மைத் தலை சுற்ற வைப்பவை. அதைவிட ஆச்சரியம், நாம் தற்சமயம் உலகெங்கும் விளையாடும் கால்பந்தாட்டத்துக்கும், 'சிபால்பா' என்னும் அழிக்கும் கடவுள் இருக்கும் இடத்துக்கும், 2012 இல் உலகம் அழிவதற்கும் உள்ள  சம்பந்தம். நமது அழிக்கும் கடவுளின் பெயர் 'சிவா' என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

"என்ன? மாயன்கள் கால்பந்து விளையாடினார்களா? கால்பந்துக்கும் உலக அழிவுக்கும் சம்பந்தமா?" என்றுதானே கேட்கிறீர்கள்? அது இன்னுமொரு அசத்தலான மாயனின் ஆச்சரியம். அது என்ன ஆச்சரியம் என்பதை அடுத்த தொடரில் விளக்குகிறேன்.   
rajsivalingam@googlemail.com

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com