முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெருந்துயரம்
இந்திரஜித்
இந்திய அரசியலின் வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்குத் திமிரைக் கொடுக்கிறதா?
மாயா
விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு
தமிழ்நதி
மரணம் அல்ல; தற்கொலை
அ.ராமசாமி
தமிழ் உயர்பண்புகளும் இந்தியத் தேசியப் பொய்களும்
தமிழவன்
அவசர பூப்பெய்தலும், விவாகரத்தும்: வனத்திலிருந்து நாகரிகம் வரை
ஆர்.அபிலாஷ்
செகந்திராபத் நினைவுகள்
சுப்ரபாரதி மணியன்
பார்சலோனா
நாகரத்தினம் கிருஷ்ணா
தாதா, அமி பாஞ்ச்போ
சி. வி. பாலகிருஷ்ணன்
எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!
சுதேசமித்திரன்
ஆனந்தமும் அமைதியின்மையும்-ஆத்மாநாமின் ‘இன்னும்’
பாவண்ணன்
ராகுல் என்ற உணர்வு மையம்
நிஜந்தன்
கவிதை
வெறுமையின் நிழல்
ஆதவா
முன் செல்லும் காமத்தின் முகம்
நந்தா குமாரன்
விண்ணப்பம்
நரன்
ஈழத்து அகதியாய்...
றஞ்சினி
வெற்றிட நிரப்பி
கெளரிப்ரியா
இரவுகள் இன்னொரு நரகம்-
லதா மகன்
அவரைப் பார்க்க ஆசை
ச.முத்துவேல்
சிறுகதை
தண்டவாளங்களும் சில கூட்ஸ் வண்டிகளும்
ரெஜோ
பொது
ஊரும் பெயரும்
கழனியூரன்
என்றார் முல்லா
தமிழில்: சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்: சஃபி
இந்த வார கருத்துப் படம்
தீராத நோய்
-
முள் கீரிடம்
-
ஹைக்கூ வரிசை
பொது
சாப்பாட்டுப் புராணம்
-
சிறுகதை
மரபின் மைந்தன் மா.முத்தையா-தீப.ந’வுக்கு எழுதியது.
-
ஹைக்கூ
ஜீவஜோதியின் வெளிச்சம்
-
ஆனந்தமும் அமைதியின்மையும்-ஆத்மாநாமின் ‘இன்னும்’
பாவண்ணன்

"ஆகாயப் பறவைகள் விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை" என்றொரு வாசகத்தை உணவுமேசைக்கு அருகே எழுதிவைத்திருந்தார் நண்பர். உள்ளே நுழைந்ததுமே அது என் பார்வையில் பட்டுவிட்டது. உரையாடிக்கொண்டிருக்கும்போது என்னையறியாமல் என் பார்வை அதன்மீது பட்டுப்பட்டுத் திரும்பியது. ஏதோ ஒரு கணத்தில் உரையாடலும் அந்தத் திசையில் திரும்பிவிட்டது. "பறவைகளின் மகிழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா?" என்று கேட்டார் நண்பர். "ஏன் நாம் மகிழ்ச்சியாக இல்லையா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டேன் நான். "இன்றைய தேதியில் மகிழ்ச்சிக்கு வாழ்வில் எங்கே இடமிருக்கிறது, சொல்லுங்கள்? ஏதோ ஒன்று எப்போதும் தேவைப்பட்டபடி இருக்கிறது. அந்தத் தேவையை நிறைவேற்ற ஓடுகிறது. தேவைப்பட்டது கிடைக்கும்போது தேவையின் அளவும் பெருகிவிடுகிறது. கிடைக்காதபோதோ, அது ஒரு பெரிய மனபாரமாக மாறிவிடுகிறது" என்று சொல்லி பெருமூச்சு வாங்கினார். "அப்படியென்றால் நாம் பறவையாகவே முடியாதா?" என்று மறுபடியும் கேட்டேன். "பறவையாக மாறுவதில் எந்தத் தடையும் இருக்காது, ஆனால் எழுந்திருக்க இயலாத அளவுக்கு கால்களோடு பாரங்கள் கட்டப்பட்ட பறவையாக இருப்போம்" என்று கசப்பு கலந்த குரலில் பதில் சொல்லிவிட்டுக் குனிந்தார் நண்பர். அவரை உடனே ஆறுதல்படுத்தவேண்டியது என் கடமையாக இருந்தது. "ஏதோ ஒரு காலத்தில் சொல்லப்பட்ட வாசகம் இன்றைய வாழ்வுக்கும் பொருத்தமாக இருக்கவேண்டும் என்று ஏன் ஆசைப்படுகிறீர்கள்? பத்திரங்கள் காலாவதியாவதுபோல வாசகங்கள் காலாவதியாகக்கூடாதா என்ன?" என்று கேட்டேன். அவர் முகத்தில் கசப்பு மறைந்து சிறிதுவெளிச்சம் தென்பட்டது. "இங்கே பாருங்கள், மனிதர்கள் நாடோடியாக இருந்த காலத்தில் விதைப்பதற்கான அவசியமும் இருந்திருக்காது, அறுப்பதற்கான அவசியமும் இருந்திருக்காது. காட்டு வழியில் அல்லது மலைப்பாதையில் கிடைக்கும் கனி, கிழங்கு, காய்களையே உணவாக உண்டு பசியாறியிருப்பார்கள். அது ஒரு கட்டம். அவ்வளவுதான். ஓரிடத்தில் நிலைத்து நின்று வாழ்கிற அடுத்த கட்டத்தைநோக்கி நகர்ந்த பிறகு விதைக்கவும் வேண்டியிருக்கிறது. அறுக்கவும் வேண்டியிருக்கிறது. தமக்காகமட்டுமல்ல, தம்முடைய குடும்ப உறுப்பினர்களுக்காக அதைச் செய்யவேண்டியிருக்கிறது. குடும்பத்தை ஏற்றுக்கொண்டபின் குடும்ப வாழ்வின் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது" என்று முடித்த தருணத்தில் அவர் ஆறுதலாக ஏறிட்டுப் பார்த்தார். "பிரச்சினை இதில்கூட இல்லை நண்பரே, ஒருவர் தன் அறுவடையை இன்னொருவரின் அறுவடையோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளும்பொழுதுதான் பிரச்சினை தொடங்குகிறது. ஒப்பிடுகிற ஒவ்வொரு கணத்திலும் வாழ்க்கையில் பிரச்சினைகள் பெருகியபடி செல்கின்றன. இருப்பதை ஏற்றுக்கொண்டால் போதும், பறவையைப்போல. அல்லது இருப்பதைநோக்கிச் செல்லலாம் அதே பறவையைப்போல. ஒப்பிட்டால் பிரச்சினை முளைக்கத் தொடங்கிவிடும். ஒருவேளை இந்த வாசகம் சுட்டவருவது இதுவாக இருக்கக்கூடும்" என்றேன். அவர் முகம் மலர்ந்துவிட்டது. எழுந்துவந்து தோளை அழுத்தினார். "புரியவைத்துவிட்டீர்கள்" என்று சொல்லிச் சிரித்தார். நிம்மதியாக மற்ற விஷயங்களைநோக்கி உரையாடல் விரிவுபெற்றது. ஆனால் எனக்குள் ஒரு முள் நெருடியபடியே இருந்தது. நான் சரியாக அதை விளக்கவில்லை என்கிற குறை உறுத்தியது. மேலோட்டமாக பேசிக்கொண்டே இருந்தாலும் ஆழ்மனத்தில் இன்னொரு உரையாடலை எனக்குள்ளேயே நிகழ்த்தியபடியே இருந்தேன்.

விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். அவரும் என்னோடு பேருந்து நிலையத்துக்கு வந்தார். சட்டென, என் மனம் சரியான விடையைக் கண்டடைந்தது. "விதைப்பது, அறுப்பது என்று பார்த்ததுமே மனப்பழக்கத்தின் காரணமாக உணவு, தொடர்பாகவே யோசித்துவிட்டோம் நண்பரே. அந்த வாசகம் குறிப்பிடும் விதைக்கிற செயல் உணவுப்பொருளுக்கான விதையல்ல, நல்வினை, தீவினை என்னும் விதை. வினை விதைத்தவன் வினை அறுப்பவன், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது நம் பழமொழி அல்லவா? வினையை விதைக்கவே இல்லையென்றால் அறுவடைக்கும் இடமே இல்லை. பறவைகள் அப்படித்தான் வாழ்கின்றன. மனிதர்களும் வினைகளை விதைக்காமல் வாழ முயற்சி செய்யலாம். அப்போது மனிதர்களும் பறவைகள்போல வாழலாம். அதுதான் வாசகம் சுட்டும் பொருளாக இருக்கலாம்" நாங்கள் இரண்டுபேருமே புதிய பொருளைக் கண்டடைந்த நிறைவில் பூரித்தோம். மகிழ்ச்சியோடு என்னை வண்டியேற்றி அனுப்பினார் நண்பர்.

ஆத்மாநாமின் இன்னும் கவிதையைப் படிக்கும்போது இதே உண்மை இன்னும் கூடுதலான சுடரோடு ஒளிர்வதுபோல இருக்கிறது. புறா, காக்கை, குருவி, கொக்கு எனப் பலவகைப்பட்ட பறவைகளும் அணில்போன்ற சிறுவிலங்கும் முதல் பகுதியில் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும் அதனதன் போக்கில் இயல்பாகவும் ஆனந்தமாகவும் உள்ளன. கவிதையின் பிற்பகுதியில் ஆண்கள், பெண்கள், சிறுவன் இடம்பெறுகிறார்கள். எல்லாருக்குமே ஏதோ ஒருவகையில் கசப்பு இருக்கிறது. சிவன் கோயில் பூசாரி தன்னையே நொந்துகொள்கிறார். பெண்கள் அடுத்தவர்களின் கதைகளைப் பேசிப் பொருமுகிறார்கள். பகலெல்லாம் மாடு மேய்த்துவிட்டுத் திரும்புகிற சிறுவன் வாழ்விலும் சலிப்பிருக்கிறது. பறவைகள் எதார்த்தமான இயல்பை ஏற்றுக்கொள்கின்றன. அவற்றின் வாழ்வில் மகிழ்ச்சிக்குக் குறைவே இல்லை. மனிதர்களுக்கு இருப்பதை ஏற்றுக்கொள்ளும் மனமில்லை. அவர்கள் மனம் சதாகாலமும் தன்னுடையதையும் மற்றவர்களுடையதையும் ஒப்பிட்டு உயர்வு தாழ்வு கணக்குப் பார்க்கிறது. ஒப்பீடு அமைதியின்மையை விளைவிக்கிறது. தடுமாறவைக்கிறது. மகிழ்ச்சியாக இருப்பதற்கான எல்லாக் காரணங்களும் இருந்தும்கூட துன்பமாக இருப்பதற்கான காரணத்தை அதுவே உருவாக்கிக்கொள்கிறது. அலைபாயும் குரங்குமனம் அமைதியின்றித் தவிக்கத் தொடங்குகிறது.

இயற்கையான ஒன்றை ஏற்க மறுப்பதுதான் மனிதர்களின் அமைதியின்மைக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள இயலாது. தனக்குரிய ஒன்றைத் தேடி அடைகிற முயற்சியும் ஆற்றலும் உடையவன் மனிதன். ஊழையும் உப்பக்கம் காணமுடியும் என்று நம்புகிறவன். தெய்வத்தான் ஆகாததெனினும் முயற்சிகள் பயனளிக்கும் என்று நம்புகிறவன் அவன். அப்படியென்றால் அமைதியின்மை எப்படி நேர்கிறது? தனக்குக் கிடைத்த பலனையும் அடுத்தவர்களுக்குக் கிட்டிய பலனையும் ஒப்பிட்டுப் பார்க்கும் கணத்தில்தான் அமைதியின்மை உருவாகிறது. ஒப்பீடு என்பது எரிச்சல், கோபம், பொறாமை, வெறுப்பு, சீற்றம், வெறி, சலிப்பு என எல்லாவற்றுக்கும் ஆரம்பப்புள்ளி. ஒப்பிடத் தொடங்கினாலும் கூண்டுகளிலிருந்து வெளியேறிய விலங்குகள்போல இந்தக் குணங்கள் வெளிப்படத் தொடங்குகின்றன. அப்புறம் நிம்மதிக்கு எங்கே இடம்? இந்த உண்மை தெரியாதவர்கள் அல்லர் மனிதர்கள். தெரிந்தும் தன் மனக்கூண்டுகளின் கதவுகளைத் திறந்து அவற்றை வெளியே நடமாட அனுமதிக்கிறார்கள். தன் அமைதியை மீண்டும்மீண்டும் குலைத்துக்கொண்டு நொந்துகொள்கிறார்கள். கவிதையின் தலைப்பில் இருக்கும் இன்னும் என்ற சொல்லில் உள்ள அழுத்தம் கவனிக்கத்தக்கது. இந்த அழுத்தம் சுட்டும் பொருள் இதுதான். வினைவிதைத்தவன் வினை அறுப்பான் என்னும் உண்மையைத் தெரிந்தவன்தான் மனிதன். தெரிந்திருந்தும் இன்னும் அதே செயலில் அவன் ஈடுபட்டு நிம்மதியைப் பறிகொடுக்கிறான். ஒரு திசையில் நிம்மதியைப் பறிகொடுத்துவிட்டு இன்னொரு திசையில் அதைத் தேடுவதுதான் மனித இயல்புபோலும்.

*

இன்னும்

ஆத்மாநாம்

புறாக்கள் பறந்து செல்லும்
கழுத்திலே வைரத்தோடு
கிளிகள் விரட்டிச் செல்லும்
காதலின் மோகத்தோடு

காக்கைகள் கரைந்து செல்லும்
தானியம் தேடிக்கொண்டு
குருவிகள் கிளுகிளுப்பூட்டும்
கிளைகளில் தவழ்ந்துகொண்டு

பாசிக்கரை படர்ந்த
தாமரைக் குளத்து நீரில்
நீளக்கால் மெல்ல அளையும்
கரைநிழல் கீழமர்ந்து

பறவைகள் கடித்துத் தின்ற
அணில்களும் அவ்வப்போது
கேள்விகளைக் கேட்டாற்போலத்
தலைகளைத் தூக்கிக் காட்டும்

சிவனருள் பூசாரி
குடத்தில் நீரெடுப்பார்
மந்திரம் சொல்லும் வாயால்
தம்மையே நொந்துகொண்டு

கற்புடைப் பெண்டிர் கூட்டம்
அக்கரை கற்கள் மீது
ஊர்க்கதை பேசிக்கொண்டு
துணிகளைத் துவைத்துச் செல்லும்

வயல்களுக்கப்பால் இருந்த
சூரியன் மேலே சென்றான்
எருமைகள் ஓட்டிச் சென்ற
சிறுவனின் தலையில் வீழ்ந்தான்

 

*

எழுபதுகளில் தெரியவந்த முக்கியமான கவிஞர்களில் ஒருவர் ஆத்மாநாம். எளிய சொற்கள். எளிய காட்சிகள் வழியாக வாழ்வின் நுட்பத்தை உணர்த்தும் சக்தியை கவிதைக்கு வழங்கியவர். ‘ என்னும் கவிதைச்சிற்றிதழை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். தன் முழுத்திறமையையும் கவிதைத் துறையில் வெளிப்படுத்திய இவர் இளம்வயதிலேயே மறைந்துவிட்டார். அனைத்துக்கவிதைகளும் அடங்கிய இவருடைய தொகுதி முதலில் மீட்சி வெளியீடாகவும் பிறகு காலச்சுவடு வெளியீடாகவும் வெளிவந்துள்ளது.

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com