முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெருந்துயரம்
இந்திரஜித்
இந்திய அரசியலின் வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்குத் திமிரைக் கொடுக்கிறதா?
மாயா
விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு
தமிழ்நதி
மரணம் அல்ல; தற்கொலை
அ.ராமசாமி
தமிழ் உயர்பண்புகளும் இந்தியத் தேசியப் பொய்களும்
தமிழவன்
அவசர பூப்பெய்தலும், விவாகரத்தும்: வனத்திலிருந்து நாகரிகம் வரை
ஆர்.அபிலாஷ்
செகந்திராபத் நினைவுகள்
சுப்ரபாரதி மணியன்
பார்சலோனா
நாகரத்தினம் கிருஷ்ணா
தாதா, அமி பாஞ்ச்போ
சி. வி. பாலகிருஷ்ணன்
எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!
சுதேசமித்திரன்
ஆனந்தமும் அமைதியின்மையும்-ஆத்மாநாமின் ‘இன்னும்’
பாவண்ணன்
ராகுல் என்ற உணர்வு மையம்
நிஜந்தன்
கவிதை
வெறுமையின் நிழல்
ஆதவா
முன் செல்லும் காமத்தின் முகம்
நந்தா குமாரன்
விண்ணப்பம்
நரன்
ஈழத்து அகதியாய்...
றஞ்சினி
வெற்றிட நிரப்பி
கெளரிப்ரியா
இரவுகள் இன்னொரு நரகம்-
லதா மகன்
அவரைப் பார்க்க ஆசை
ச.முத்துவேல்
சிறுகதை
தண்டவாளங்களும் சில கூட்ஸ் வண்டிகளும்
ரெஜோ
பொது
ஊரும் பெயரும்
கழனியூரன்
என்றார் முல்லா
தமிழில்: சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்: சஃபி
இந்த வார கருத்துப் படம்
தீராத நோய்
-
முள் கீரிடம்
-
ஹைக்கூ வரிசை
பொது
சாப்பாட்டுப் புராணம்
-
சிறுகதை
மரபின் மைந்தன் மா.முத்தையா-தீப.ந’வுக்கு எழுதியது.
-
ஹைக்கூ
ஜீவஜோதியின் வெளிச்சம்
-
செகந்திராபத் நினைவுகள்
சுப்ரபாரதி மணியன்

செகந்திராபத் நினைவுகள்

கிளாக்டவர் பார்க்கிற்குப் போகிறபோதெல்லாம் வேமண்ணா இன்ஸ்டிட்யூட் பக்கம் போய்விட்டுச் செல்வது என்பது என் பழக்கமாக இருந்தது. வெள்ளைக் கட்டிடம். ஒரு மரம். மரத்தடியில் நிர்வாணமாய் சம்மணமிட்டபடி ஒரு சாமியார் உட்கார்ந்திருக்கிற உருவம் வெளிச்சுவரில் பதிக்கப்பட்டிருக்கும். உள்ளே வண்ண ஓவியமாய் வேமண்ணா பெரிய சட்டமிடப்பட்ட படத்தில் உட்கார்ந்திருப்பார். தெலுங்கு வாசகங்கள் இன்னும் சில சட்டமிடப்பட்ட படங்களில் இருக்கும். உள்ளே தென்படும் பிற விபரங்களும் படங்களும் அரசுத் துறை சார்ந்தவர்களின் படங்களும் அந்நியமாகவே தோன்றும். அதிகம் உள்ளே சென்றதில்லை. கடந்து போகிறபோது ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போகிறதோடு சரி.

அங்கு வேலை செய்து கொண்டிருந்தவரை அடிக்கடி செகந்திராபாத் வீதிகளில் சந்தித்திருக்கிறேன். பெர்முடாஸ் போன்ற அரை பேண்ட், வர்ண காலர் ஷர்ட்டுகள் உடன் புத்தகக் கண்காட்சிகளின் போது பார்த்திருக்கிறேன். புத்தகங்கள் வாங்குவாரா என்பது சரியாக ஞாபகமில்லை. ஆனால் தமிழ்ப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருப்பார். தமிழ் தெரியாதவராகத்தான் இருக்க வேண்டும் என்பது தெரிந்தது. அவர் வேமண்ணா இன்ஸ்டிட்யூட்டில் பணிபுரிகிறவர் என்பது மட்டும் தெரிந்தது. அவர் நீண்ட தலைமுடி வைத்திருப்பார். ஒழுங்காகக் கத்தரிக்கப்பட்டிருக்கும். வெள்ளையும் கறுப்புமாய் மயிர் கலந்திருக்கும். ஒல்லியான தோற்றத்தில் வெகு விரைசலான நடையுடன் எப்போதும் தென்படுவார்.

ஒருநாள் வேமண்ணா இன்ஸ்டிட்டிற்குள் நுழைந்து விட்டிருந்தேன். அங்கிருந்த தெலுங்கு வாசகங்களையும், படங்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த இளைஞர் வந்தார். என்ன என்பது போல பார்த்தார். புன்னகைத்தேன். என் தயக்கத்தைப் பார்த்தவர் தெலுங்கில் பேச ஆரம்பித்தார். வேமண்ணா இன்ஸ்டிட்யூட்டின் செயல்பாடுகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாமே என்றேன். அவர் அங்கு நடக்கும் இலவச யோகா வகுப்புகள் பற்றி சொன்னார். அடுத்த வகுப்பு எப்போது என்பது பற்றி கேட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தேன். கிளாக் டவர் பூங்காவில் சென்று அமர்ந்து கொண்டேன்.

கனவு இலக்கிய வட்டம் ஆரம்ப நாட்களில் கலந்துரையாடல் நிகழ்ச்சியை அங்குதான் நடத்திக்கொண்டிருந்தோம். பத்துப் பேர் உட்கார வசதியாக உள்ள காலி இடமாகத் தேர்வு செய்து கூட்டம் நடக்கும். ஞாயிறில் முன்னதாகவே செல்ல வேண்டியிருந்தது. தனிஆளாகச் சென்று உட்காருவது சிரமமாக இருந்தது. பேருந்து, புகைவண்டியில் இடம் போடுவது மாதிரி துண்டை விரிக்க முடியாது. கொண்டு போகும் புத்தகங்களை கொஞ்சம் இடைவெளிவிட்டு வைத்து யாரோ புத்தகங்களை வைத்துவிட்டுப் போயிருப்பது போல பாவனை செய்து இடம் பிடிப்பேன். யாராவது வந்து சேருகிற போது ஒவ்வொரு புத்தகமும் என் கைக்கு வந்துவிடும். அங்கிருக்கிற ஒரு சிலை பாட்டாளிகள் கைகளை உயர்த்திக் கொண்டிருப்பதைப் போன்ற பாவனையுடன் இருப்பது எனக்குப் பிடித்த சிலைகளில் ஒன்றாகும். அந்த சிலையின் பீடத்தில் ஒரு நாளாவது கூட்டம் போட வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. ஆனால் சிலையும் அதன் தொனியும் எங்களை கட்சி நபர்களாககாட்டிவிடும் என்ற பரபரப்பு இருந்தது. வாய்ப்பாக அந்த இடம் காலியாக எப்போதும் தென்படவில்லை.

கிளாக் டவர் பார்க்கில் உட்கார்ந்தும், தூங்கியும் பொழுதைப் போக்குபவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்களாக இருக்கக்கூடும் என்று நண்பர்கள் சொல்வார்கள். பீடிப்புகையின் கமறலும் அசுத்தத்தின் வீச்சம் எப்போதும் தென்பட்டுக் கொண்டே இருக்கும். நான்கு புறங்களிலும் ஓடுகிற வாகனங்களின் மத்தியில் அதிகபட்சம் பத்துப் பேர் உட்கார்ந்து இலக்கியம் பேசிக் கொண்டிருப்பது பலருக்கு வினோதமாகத் தோன்றும். தொடர்ந்த வாகனங்களின் இரைச்சல். வேமண்ணா இன்ஸ்டிட்யூட் பணியாளரை அப்பூங்காவில் பார்த்திருக்கிறேன்.

கிளாக் டவர் பார்க்கின் அசௌகரியங்கள் காரணமாய் பின்னர் செகந்திராபாத் கண்டோன்மெண்ட் பார்க்கிற்குக் கூட்டத்தை நடத்தும் இடமாக்கினோம். பேரேட் கிரௌண்ட்டை ஒட்டி இருக்கும். அமைதியும் விசாலமும் கொண்டது. நீளமான மேசை ஒன்றும் அதனோடு இணைக்கப்பட்ட மர, கல் நாற்காலிகளும் அங்கு இருந்தது சௌகரியமாக இருந்தது. மேசையைச் சுற்றி உட்கார்ந்துகொள்வது சௌகரியமானது என்றாலும் வட்டம் அடுத்த நபர் வரும்போது விரிவடைய வேண்டிய கட்டாயத்தால் பூங்காவின் ஏதாவது பகுதியில் உட்கார்ந்து கொள்வோம். நல்ல படைப்புகளுக்கு நூல்கள் பரிசு தரப்படும். கனவு இதழுக்கு வரும் புத்தகங்கள் பரிசளிக்கப்படும். மல்காஜ்கிரி மகாதேவன், செகண்ட் பஜார் முத்துசாமி, சீதாபல் மணி ராமநாதன், பாரெக்ஸ்பாளைமாணிக்கம் போன்றோர் திரும்பத் திரும்ப புத்தகங்களைப் பரிசாகப் பெறுவர். வேமண்ணா இன்ஸ்டிட்யூட் பணியாளர் கண்டோன்மெண்ட் பூங்காவில் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பேசியதில்லை. தமிழ் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தேன்.

அவர் யோக வகுப்புகள் பற்றிச் சொன்னபிறகு அதில் கலந்து கொள்வது பற்றி திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருந்தேன்.

தொடர்ந்த சளி தும்மலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். அவ்வப்போது மூட்டு வீங்கிக் கொள்ளும். இந்த உபாதைகளிலிருந்து மீள்வதற்கு யோகா உதவும் என்று யோசிக்க ஆரம்பித்தேன். இலவசக்கல்வி. காலை 6 மணி முதல் 8 மணி வரை என்ற நேரம்தான் தாமதப்படுத்திக்கொண்டே இருந்தது. ஷிப்ட் வேலைகளில் மாறி மாறிச் சென்று கொண்டிருந்தேன். இரவுப் பணி என்றால் காலை ஆறு மணிக்கு வந்து சேர்ந்துவிட முடியாது. மத்தியானப் பணி மற்றும் பொது வேலை நேரம் மட்டும் தான் உகந்தது. ஒரு மாதத்திற்கு அவ்வாறு பணியை மாற்றிக் கொள்வதென்றும் அதன் மூலம் யோகாவிற்குச் செல்ல நேரத்தை ஒதுக்குவது என்றும் முடிவெடுத்தேன்.

இன்ஸ்டிட்யூட்டின் மாடியில் திறந்த வெளியில் யோகா வகுப்புகள் நடக்கும். எனக்கு அறிமுகமானவர்தான் யோகா வகுப்பை நடத்துகிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியான விசயமாக இருந்தது. ஆனால் அவர் சரளமான தெலுங்கில்தான் பேசினார். தமிழில் பேசுவார் என்பதற்காகக் காத்திருந்தேன். ஆனால் பேசவில்லை.

அம்முறை யோகா வகுப்பிற்கு வந்து சேர்ந்தவர் தர்மலிங்கம். பெயர் தமிழர் என்ற தொனியைத் தந்தது. ஆனால் தெலுங்கராக இருந்தார். என்பது ஆச்சரியம் தந்தது. ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும். "இந்த வயதில் எதற்கு யோகா பயிற்சி" பிள்ளைகள் திருமணம் செய்துகொண்டு தனித்தனியே போய்விட்டார்கள். மனைவி இறந்துவிட்டாள். பிள்ளைகள் யாருடனும் நான் இருக்க இயலவில்லை. அவ்வப்போது சீர் கெடும் என் உடம்பு. நோயாளியாக என்னை வைத்துப் பார்ப்பதற்கு எந்த மருமகளுக்கும் இஷ்டம் இல்லை. நோயின் தன்மை குறையுமா என்று பரிசீலிப்பதற்காய் இந்தப் பயிற்சியில் சேர்ந்திருக்கிறேன் என்றார்.

தர்மலிங்கமும் நானும் அந்த ஐம்பது பேர் வகுப்பில் தனித்துவிடப்பட்டோம். மூட்டு வீக்கம் அடிக்கடி வருகின்ற காரணத்தால் என்னால் ஆசனங்களுக்கு கால்களை மடக்குவது சுலபமானதாக இல்லை. தர்மலிங்கமும் இவ்வாறே வகுப்பில் கால்களை மடக்குவதற்கு சிரமப்பட்டார். எங்கள் இருவரையும் வகுப்பின் ஓரத்தில் இருத்தி ஆசனங்களை செய்யச் சொல்லியிருந்தார். கால்களின் பொறுக்க முடியாத வலியை சகித்துக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

ஆசனங்களில் ஈடுபடும்போது அதைச் சரி செய்யும் நோக்கில் கையில் உள்ள குச்சியால் தட்டுவது, பயிற்சியாளர் அவரது காலால் எனது கால்களை தட்டி முறைப்படுத்துவது மிகுந்த வருத்தத்தைத் தந்தது. கண்ணீர் விடாத குறையாக அவரிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும் போலிருந்தது. தர்மலிங்கத்திற்கும் அதே ட்ரீட்மெண்ட்தான். அவரும் வருத்தத்துடன் இருப்பதாய்த் தெரிந்தது. பயிற்சி முடிகிறவரை இந்த வகை ட்ரீட்மெண்ட் மாறவில்லை.

சுமாராக மூச்சுப்பயிற்சியும் சில ஆசணங்களும் செய்யக் கற்றுக் கொண்டிருந்தேன். தர்மலிங்கம் ஒரு மாதப் பயிற்சியில் முறையாகக் கற்றுக் கொள்ளவில்லை என்பதால் அடுத்த பயிற்சி வகுப்பின் போதும் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தார். "எப்படியோ என்னோட உடம்பை சரி பண்ணணும். நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல" என்றார்.

வெவ்வேறு ஷிப்ட் வேலை காரணமாய் பயிற்சிகளை நான் தொடர முடியவில்லை. மூட்டு வீக்கமும், சளித் தொல்லையும் தொடர்ந்து கொண்டிருந்தது.

அதன்பின் பலமுறை அந்தப் பயிற்சியாளரை செகந்திராபாத்தின் வீதிகளில் பார்த்திருக்கிறேன். தர்மலிங்கத்தையும் பற்றி கேட்க ஆசை கொண்டிருந்தேன். கேட்டதில்லை. அவர் எப்பவாவது தமிழில் என்னுடன் இயல்பாய்ப் பேசுவார் என்பது என் கனவாக இருந்தது.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com