முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெருந்துயரம்
இந்திரஜித்
இந்திய அரசியலின் வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்குத் திமிரைக் கொடுக்கிறதா?
மாயா
விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு
தமிழ்நதி
மரணம் அல்ல; தற்கொலை
அ.ராமசாமி
தமிழ் உயர்பண்புகளும் இந்தியத் தேசியப் பொய்களும்
தமிழவன்
அவசர பூப்பெய்தலும், விவாகரத்தும்: வனத்திலிருந்து நாகரிகம் வரை
ஆர்.அபிலாஷ்
செகந்திராபத் நினைவுகள்
சுப்ரபாரதி மணியன்
பார்சலோனா
நாகரத்தினம் கிருஷ்ணா
தாதா, அமி பாஞ்ச்போ
சி. வி. பாலகிருஷ்ணன்
எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!
சுதேசமித்திரன்
ஆனந்தமும் அமைதியின்மையும்-ஆத்மாநாமின் ‘இன்னும்’
பாவண்ணன்
ராகுல் என்ற உணர்வு மையம்
நிஜந்தன்
கவிதை
வெறுமையின் நிழல்
ஆதவா
முன் செல்லும் காமத்தின் முகம்
நந்தா குமாரன்
விண்ணப்பம்
நரன்
ஈழத்து அகதியாய்...
றஞ்சினி
வெற்றிட நிரப்பி
கெளரிப்ரியா
இரவுகள் இன்னொரு நரகம்-
லதா மகன்
அவரைப் பார்க்க ஆசை
ச.முத்துவேல்
சிறுகதை
தண்டவாளங்களும் சில கூட்ஸ் வண்டிகளும்
ரெஜோ
பொது
ஊரும் பெயரும்
கழனியூரன்
என்றார் முல்லா
தமிழில்: சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்: சஃபி
இந்த வார கருத்துப் படம்
தீராத நோய்
-
முள் கீரிடம்
-
ஹைக்கூ வரிசை
பொது
சாப்பாட்டுப் புராணம்
-
சிறுகதை
மரபின் மைந்தன் மா.முத்தையா-தீப.ந’வுக்கு எழுதியது.
-
ஹைக்கூ
ஜீவஜோதியின் வெளிச்சம்
-
விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு
தமிழ்நதி

நம்பிக்கை, பற்றுக்கோடு, வாழ்வின் மீதான பிடிப்பு எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு நிர்க்கதியாகத் தெருவில் விரட்டப்பட்ட அவமானத்தோடும் கோபத்தோடும், விம்மிப் பொருமும் மனதை அடக்கிக்கொண்டு இதனை எழுதுகிறேன். இது அழுது தீரும் துயரமல்ல. எதிர்ப்படும் பொருட்களை, எதிரியை அடித்து நொருக்கும் கோபம். இந்தக் கோபத்தை நான் எழுதியாக வேண்டும். இல்லையெனில் மனநோயாளியாக இறந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன். எழுத்து ஒன்றே எனது வடிகால். அதன் வழியாக எனது துயரத்தைக் கடத்திவிட்டு, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிவிடும் சுயநலம் இதன் பின்னணியில் நிச்சயமாக இல்லை. இந்த உணர்ச்சிக் கடலுக்குள் மூழ்கிவிட்டேனென்றால், நாளை எனது சமூகத்திற்கென்று ஒரு துரும்பையும் கிள்ளிப்போட முடியாது போய்விடும் என்ற சின்ன அறிவினால் செலுத்தப்பட்டு கணினியின் முன்னமர்ந்திருக்கிறேன்.

19.05.09 என்ற கொடிய நாளைப் பதிந்துவிட்டுத் தொடர்கிறேன். சிங்கள அரசின் இறுமாப்புடன் கூடிய அறிவிப்பு 18ஆம் திகதியிலிருந்தே வர ஆரம்பித்திருந்தது. நாங்கள் மறுத்தோம். இல்லைஎங்கள் தலைவரை யாராலும் தோற்கடிக்க முடியாதுஎன்றோம். அதிமானுடர்களுக்கு மரணமில்லைஎன்று மறுபடியும் மறுபடியும் தளர்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தோம். 19ஆம் திகதி மதியம் ஒன்றரை மணியளவில் கவிஞர் இளம்பிறையிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் அழுத அழுகையில் முதலில் அவர் என்ன சொல்கிறார் என்பதே எனக்குத் தெளிவாகவில்லை. "தொலைக்காட்சியைப் பாருங்கள் தமிழ்நதிநம் தலைவரின் உடலைக் காட்டுகிறார்கள்"என்றார். எல்லாம் இருண்டது போலிருந்தது. கைகள் நடுங்கின. அந்தக் கணம் ஒரு கனவென முடிந்துவிடும் ; நான் விழித்து எழுந்துவிடுவேன் என்று நினைத்தேன்.  "நம் குலதெய்வத்தைக் கொன்றுவிட்டார்கள்"என்று அவர் தொடர்ந்து அழுதுகொண்டேயிருந்தார். "ஐயோஐயோ…!"என்று அரற்றினார். தொலைக்காட்சியில் நெஞ்சத்தைப் பதறவைக்கும் அந்தக் காட்சியைப் பார்த்தேன். தலைவரின் முகந்தான். சந்தேகமேயில்லை!

நான் வேறொரு ஆளாக சமையலறைக்குள் நடந்துபோவதை நான் பார்த்தேன். அச்சம் கட்டுப்படுத்தவியலாத கிருமியைப் போல பெருகவாரம்பித்தது. ஒரு துணியை எடுத்து எல்லாவற்றையும் துடைக்க ஆரம்பித்தேன். அரிசிக்கு அளவாகத் தண்ணியைக் கலந்து வைத்தேன். நான் என்னைப் பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் துணியை எடுத்து ஏற்கெனவே சுத்தமாக இருந்த இடத்தைத் துடைக்கவாரம்பித்தேன். மூளைக்குள் எதுவோ வெடிப்பது போலிருந்தது. நான் எங்கே நின்றுகொண்டிருக்கிறேன் என்பது நினைவிலிருந்து ஒருகணம் மறைந்தது. தெளிவிற்கும் பைத்தியத்திற்குமிடையிலான விளிம்பில் அந்நேரம் நின்றுகொண்டிருந்ததை இப்போது பயத்தோடு நினைவுகூர்கிறேன். வேம்பில் அப்போதும் குயில் பாடிக்கொண்டிருந்தது. தொலைவில் சினிமாப் பாட்டுக் கேட்டது. தெருவில் பழைய பேப்பர்க்காரன் கூவிக்கொண்டு போகிறான். நான் சிறுகச் சிறுக சிதைந்துகொண்டிருந்தேன். கைகளை இறுக்கிப்பிடித்து கதவில் ஓங்கியறைந்தேன். சமையலறையிலிருந்து படுக்கையறை அன்றைக்கு வெகு தூரத்திலிருந்தது.

"நாங்கள் அநாதைகளாகிவிட்டோம்"

"நாங்கள் கைவிடப்பட்டுவிட்டோம்"

"எங்களை வஞ்சகத்தினால் ஏமாற்றிவிட்டார்கள்"

"எங்கள் கடவுளைக் கொன்றுவிட்டார்கள்"

"நாங்கள் இனி அடிமை நாய்கள்"

நான் பெருங்குரலெடுத்து அழுதேன். எதிர்ப்பட்ட பொருட்களையெல்லாம் கைகளால் குத்திக் குத்தி அழுதேன். எனக்கு என் மனிதர்களைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. அவர்களின் பக்கத்தில் போய்விட மிகவிரும்பினேன். உலகெங்கிலும் இருந்து அழுதுகொண்டிருக்கும் என் உறவுகளை நினைக்குந்தோறும் கண்ணீர் கடலாய் பெருகிக்கொண்டேயிருந்தது. ஒட்டுமொத்த சனங்களையும் கட்டிக்கொண்டு கத்தியழவேண்டும் போலிருந்தது. கோபம் பெருந்தீயாய் சுழன்று மூசியது. இடைவிடாமல் தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. குறுஞ்செய்திகள் நிறைந்துகொண்டிருந்தன. எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கள் கடவுளை அவர்கள் கொன்றுவிட்டார்கள்என்பதைத் தவிர என்னால் வேறெதுவும் சொல்லமுடியவில்லை. ஆற்ற மாட்டாமல் பூங்குழலி நெடுமாறனைத் தொலைபேசியில் அழைத்து அழுதேன்.தைரியமாயிருங்கள். அப்படி எதுவும் நடந்திராதுஎன்றார் அவர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறதுபித்துப் பிடித்தாற்போல ஒரே வார்த்தைகளைத்தான் நான் அவரிடம் பேசியிருக்கிறேன்.. "எனக்குப் பயமாயிருக்கிறதுஎனக்குப் பயமாயிருக்கிறது"

வெளிநாட்டுக்கு அழைத்த தொலைபேசி அழைப்புகளெல்லாம் வியர்த்தமாயின. கனடாவில் சாமம். ஐரோப்பாவில் இன்னமும் எழுந்திருக்கவில்லை. அக்காவின், அண்ணாவின் பிள்ளைகள் கண்கள் எங்கோ வெறித்திருக்க செய்வதறியாமல் அமர்ந்திருந்தார்கள். குற்றவுணர்வில் ஒருவன் நாற்காலிக்குள் தன்னைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தான். உணவு என்பது மறந்துபோயிருந்தது. ஆங்கிலத் தொலைக்காட்சியொன்று சந்தடிசாக்கில் விடுதலைப் புலிகளை உலகிலேயே கொடூரமான பயங்கரவாதிகளெனச் சித்தரிக்க முயன்றுகொண்டிருந்தது. அந்த வர்ணனையாளியின் குரலிலிருந்த வன்மம் வெறியேற்றியது. அவள் நஞ்சை இடைவிடாமல் உமிழ்ந்துகொண்டிருந்தாள். நான் அவள் குரலை வெறுத்தேன். உனக்கு எங்கள் தலைவரைப் பற்றி என்ன தெரியுமென்று ஆலாபனை பண்ணுகிறாய்?’ என்று அவளிடம் கத்தவேண்டும் போலிருந்தது. அவள் இலங்கை மற்றும் இந்திய அதிகாரங்களின் குரலில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஒரு தேசியத் தலைவனைத் தன்னால் முடிந்தவரை கேவலப்படுத்தினாள். வரலாறு வியந்து பார்த்திருந்த விடுதலைப் போராட்டத்தை சிறு குழுவொன்றின் சண்டையெனச் சித்தரித்தாள்.

நான்கு மணியளவில் டென்மார்க்கிலிருந்து என் கணவருடைய தம்பியின் மனைவி பேசினாள். விடுதலைப் போராட்டத்தில் தீராத காதலுடைய அற்புதமான பெண் அவள்.

"அக்கா! கூர்ந்து கவனியுங்கள். அது பிளாஸ்டிக் சேர்ஜரி முகம் போல உங்களுக்குத் தோன்றவில்லையா..? இறந்துபோனவர்களின் கழுத்தை அப்படிச் சுலபமாகத் திருப்ப முடியுமென்றா நினைக்கிறீர்கள்?"

என் கண்களை நம்பி நான் ஏமாந்து போனேனா?

"அவரைப் போலவே இருக்கிறதே…"

"இப்போது அவ்வளவு இளமையாகவா இருக்கிறார் நம் தலைவர்?"

உண்மை. மனதின் இருள் எல்லாம் வடிந்துபோய் வெளிச்சம் பரவத் தொடங்கியது. இதுவரை துயரத்தில் பித்தேறிப் பிதற்றிய மனம் இப்போது மறுவளமாகப் பேசத் தொடங்கியது.

"அவர் கொல்லப்படக் கூடியவரல்லவேதனது உடலைக் கூட எதிரிகள் கைப்பற்றக் கூடாது என்று, இந்திய இராணுவ காலத்தில் தனக்குப் பக்கத்தில் எப்போதும் பெற்றோல் கலன்களுடன் போராளிகளை வைத்திருந்தவரல்லவா அவர்…?"

"அவரை யாராலும் வெல்லவோ கொல்லவோ முடியாது. அவர் அதிமானுடர்!"

மகிழ்ச்சியில் கண்ணீர் கொட்டவாரம்பித்தது. உறைந்திருந்த வீடு மறுபடி இயங்கத் தொடங்கியது.

பிறகு தொடர்ந்த நாட்களில் குழப்பகரமான செய்திகள் வரத் தொடங்கின. தலைவர் உயிருடன் இருக்கிறார் என்றும் இல்லை என்றும் ஊடகங்கள் போட்டிபோட்டுக்கொண்டு செய்திகளை வெளியிட்டன. இசட் தமிழ்தொலைக்காட்சியில் தலைவரின் நேர்காணல் இடம்பெறவிருப்பதாக ஒரு குறுஞ்செய்தி பரபரப்பாக அலைந்தது. பிறகு அதை மறுத்து குறுஞ்செய்தியொன்று அன்று மாலையே வந்துசேர்ந்தது.

தலைவர் வீரமரணம்என்றொரு மின்னஞ்சலை எனது நம்பிக்கைக்குரிய தோழன் ஒருவன் அனுப்பியிருந்தான்.

"இல்லை. நான் நம்பமாட்டேன். அவர் எங்களை அப்படி நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போகமாட்டார்"என்று நான் அடித்துக் கூறினேன். எனது குரல் தளுதளுத்தது. எனது வார்த்தைகளை நானே நம்பவில்லையா?

"இதற்குள் ஏதோ இருக்கிறது…"என்று மனம் உறுத்திக்கொண்டேயிருந்தது.

தலைவர் இல்லை என்று அறிக்கப்போகிறார்கள்என்ற குறுஞ்செய்தி வந்த அன்றேதலைவர் இருக்கிறார்என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நம்பிக்கையோடு நிமிர்ந்தபோது தலைவர் இல்லைஎன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

என்னதான் நடக்கிறது?

உளவியல் போரில், எஞ்சியிருப்பவர்களையும் கொன்றுவிடத் தீர்மானித்துவிட்டார்களா?

19ஆம் திகதியன்று ஏறக்குறைய நாங்கள் செத்துப்போய்விட்டோம். செத்துக்கொண்டிருக்கிறவர்களை குத்திக் குத்தி இன்னமும் உயிர் இருக்கிறதா என்று சித்திரவதை செய்கிறார்களா?

எங்களைப் போன்றவர்களின் வீடுகளில் பிரபாகரன்என்ற சொல் ஒலித்து நாங்கள் கேட்டதில்லை. எங்களால் தலைவர்என்றே அவர் விளிக்கப்பட்டார். கடவுளர் படங்களுக்குப் பக்கத்தில் வைத்து வணங்கத்தக்கவரே அவர். ஆனாலும் இறந்தவர்களின் படங்களை மட்டுமே கடவுளுக்குப் பக்கத்தில் வைப்பார்கள் என்ற ஐதீகத்தினால் அதை நாங்கள் செய்ததில்லை. அவரது பெயர் எங்கு உச்சரிக்கப்பட்டாலும் தொண்டை அடைத்துக்கொண்டு கண்ணீர் பெருகி வழியுமளவுக்கு பெரும்பாலான தமிழ்மக்கள் அவரை நேசித்தார்கள். ஆராதித்தார்கள். மதித்தார்கள். நெஞ்சுருகினார்கள். பல்லாயிரம் போராளிகளும் மக்களும் அவரது ஒரு சொல்லுக்காகக் காத்துக்கிடந்தார்கள். அந்தப் பெயர்தான் எங்களையெல்லாம் உருக்கும் மந்திரம். மாயச் சொல்! தீராத வசீகரம்! உயிர்நிலை! பூமியைச் சுழல வைக்கும் மைய அச்சு!

உலகெங்கிலும் வாழும் அன்னையரின் மூத்த பிள்ளை அவர். அவரவர் வயது நிலைக்கேற்ப அண்ணனாக, தம்பியாக, பிள்ளையாக பெரும்பாலான குடும்பங்களில் வாழ்ந்தவர் அவர். (நான் ஏன் இறந்தகாலத்தில் இதை எழுதுகிறேன்?) இளம்பிறையின் வார்த்தைகளில் சொல்வதானால் எங்கள் குலதெய்வம்அவர்தான். எங்களைப் போன்றவர்களின் வாழ்வில் பெருங்கனவாக ஒன்று இருக்குமென்றால், அது எங்கள் தலைவரைப் பார்ப்பது மட்டுமே. போர் ஓய்ந்திருந்த காலகட்டத்தில் (2002 பெப்ரவரியின் பிறகான சில ஆண்டுகள்) புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் ஊருக்குப் போய் வந்தார்கள். திரும்பி வந்தவர்களிடம் கேட்பதற்கு எங்களிடம் ஒரேயொரு கேள்விதான் இருந்தது; "தலைவரைப் பார்த்தீர்களா?"  நான் வேலை செய்த பத்திரிகை அலுவலகத்திலிருந்து பலரும் போய் திரும்பி வந்து கண்கள் மினுக்கிட கதைகதையாகச் சொன்னார்கள். ஏக்கம் வழியும் விழிகளோடு நாங்கள் அதைக் கேட்டிருந்தோம். ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தினையடுத்து (சதி) சுதுமலைக் கூட்டத்தில் தலைவர் பேசியபோது ஒரேயொரு தடவை அவரைக் கண்ணால் காணும் பேறுபெற்றேன்.

"நீங்கள் தலைவரைப் போய்ச் சந்திக்கவில்லையா?" கேட்டவர்களுக்கெல்லாம் என்னிடம் ஒரேயொரு பதில்தான் இருந்தது "சாதனையாளர்களைச் சந்திக்கும்போது, அதில் நூற்றில் ஒரு பகுதியாவது நாமும் சாதித்திருக்க வேண்டும்இல்லையெனில் அவர்களைச் சந்திக்கும் அருகதையற்றவர்கள் நாங்கள். அவர்களைச் சந்திக்கும் உரிமை எங்களுக்கு இல்லை"

ஊடகங்கள் நிறைய சொல்லிவிட்டன. என்றாலும் வரலாறு காணாத அந்த வீரனைப் பற்றி எழுதி மாளாது. எந்தத் தமிழுக்காக அவர் போராடினாரோ அந்தத் தமிழே தோற்று நிற்குமிடம் ஒன்று உண்டென்றால், அது பிரபாகரன் என்ற அதிமானுடனைக் குறித்துப் பேச முனையுமிடந்தான்.

இன்று, (24.05.09) ‘ஒப்பற்ற எங்கள் தலைவர் களத்தில் வீரமரணமடைந்துவிட்டார்என்று செல்வராஜா பத்மநாதன் அறிவித்திருக்கிறார்.

எதை அஞ்சினோமோ அது உண்மையில் நடந்துவிட்டதா? எது நடக்கக்கூடாதென்று நாங்கள் பிரார்த்தித்தோமோ அந்தப் பிரார்த்தனைகளை மேலான சக்திகள் மண்ணில் தூக்கி எறிந்துவிட்டனவா?

கடைசியில், ‘மொக்குச் சிங்களவங்கள்என்று எங்களால் நகையாடப்பட்டவர்கள், ராஜதந்திரப் போரிலும் எங்களை வீழ்த்திவிட்டார்களா

உண்மையல்லாத ஒன்றை உண்மைபோலக் காட்டி, எங்களைக் குழப்பியதன் வழியாக, எங்கள் பெருந்தலைவனுக்கு நாங்கள் இறுதியாகச் செலுத்தியிருக்க வேண்டிய மரியாதையை செலுத்தவிடாமல் அடித்துவிட்டார்களா? உண்மையை உண்மைபோலச் சொன்னால், வெளிப்படுத்தினால் உலகம் கொதிக்கும் ஒரு கோபப்பந்தாகிவிடும், அந்த எழுச்சி விபரீத விளைவுகளை உண்டாக்கிவிடும் என்பதற்காக எங்களைத் திசைதிருப்பிவிட்டார்களா? எங்கள் தலைவனை அறியாதவர்களும் அவரது மரணத்தின் பின்னான எழுச்சியின்போது அவரை அறிந்துவிடுவார்களே என அஞ்சி நாடகமாடினார்களா? சீறி வெடித்திருக்க வேண்டிய ஒரு வெடிகுண்டைத் தண்ணீருக்குள் அமிழ்த்தி செயலிழக்கச் செய்துவிட்டார்களா?

அன்பானவர்களே! உங்கள் செய்திகளையே சோறும் தண்ணீரும் சுவாசமுமாக எண்ணிக் காத்துக்கொண்டிருக்கும் எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு இரகசியமாக ஒரு பொய்யையேனும் சொல்லுங்கள்.

"தலைவர் உயிருடன் இருக்கிறார்"

இந்த வார்த்தைகளின் வழி அணையாதிருக்கட்டும் எங்கள் மனங்களில் மூண்டெரியும் நெருப்பு. இளைய தலைமுறையிடம் தலைவர் கைமாற்றிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிற கடமைகளை அவர்கள் செய்துமுடிப்பார்கள். (இங்கு சுயநலம் மறுபடி பேசுகிறது. இன்னொருவரின் தோளில் அதை மாற்றத் தந்திரம் செய்கிறது.) இல்லை நாங்கள் செய்துமுடிப்போம். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக எங்களை வழிநடத்திய தனிப்பெருந்தலைவன் எங்களுக்காக இனி ஒன்றும் செய்யவேண்டியதில்லை. காலமெல்லாம் போருக்குள் வாழ்ந்தவன் எங்கோ வெகுதொலைவில், தன்னை யாரென அடையாளப்படுத்திக்கொள்ளாமலே எங்கள் உயிர்நிலையாக இருந்துகொண்டிருக்கிறான் என்ற அற்ப நிம்மதியில், நிறைவில் மிகுதி நாட்களை நாங்கள் வாழ்ந்துவிட்டுப் போகிறோம்.

தயவுசெய்து சொல்லுங்கள்.

"தலைவர் உயிருடன் இருக்கிறார்"என்று.

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com