முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
சிங்கள மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெருந்துயரம்
இந்திரஜித்
இந்திய அரசியலின் வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்குத் திமிரைக் கொடுக்கிறதா?
மாயா
விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு
தமிழ்நதி
மரணம் அல்ல; தற்கொலை
அ.ராமசாமி
தமிழ் உயர்பண்புகளும் இந்தியத் தேசியப் பொய்களும்
தமிழவன்
அவசர பூப்பெய்தலும், விவாகரத்தும்: வனத்திலிருந்து நாகரிகம் வரை
ஆர்.அபிலாஷ்
செகந்திராபத் நினைவுகள்
சுப்ரபாரதி மணியன்
பார்சலோனா
நாகரத்தினம் கிருஷ்ணா
தாதா, அமி பாஞ்ச்போ
சி. வி. பாலகிருஷ்ணன்
எமது பரீட்சார்த்தத் திரைப்படங்கள்!!!
சுதேசமித்திரன்
ஆனந்தமும் அமைதியின்மையும்-ஆத்மாநாமின் ‘இன்னும்’
பாவண்ணன்
ராகுல் என்ற உணர்வு மையம்
நிஜந்தன்
கவிதை
வெறுமையின் நிழல்
ஆதவா
முன் செல்லும் காமத்தின் முகம்
நந்தா குமாரன்
விண்ணப்பம்
நரன்
ஈழத்து அகதியாய்...
றஞ்சினி
வெற்றிட நிரப்பி
கெளரிப்ரியா
இரவுகள் இன்னொரு நரகம்-
லதா மகன்
அவரைப் பார்க்க ஆசை
ச.முத்துவேல்
சிறுகதை
தண்டவாளங்களும் சில கூட்ஸ் வண்டிகளும்
ரெஜோ
பொது
ஊரும் பெயரும்
கழனியூரன்
என்றார் முல்லா
தமிழில்: சஃபி
சூஃபி கதைகள்
தமிழில்: சஃபி
இந்த வார கருத்துப் படம்
தீராத நோய்
-
முள் கீரிடம்
-
ஹைக்கூ வரிசை
பொது
சாப்பாட்டுப் புராணம்
-
சிறுகதை
மரபின் மைந்தன் மா.முத்தையா-தீப.ந’வுக்கு எழுதியது.
-
ஹைக்கூ
ஜீவஜோதியின் வெளிச்சம்
-
இந்திய அரசியலின் வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்குத் திமிரைக் கொடுக்கிறதா?
மாயா

"கூட்டணிக் கட்சிகளின் யுகம் தொடங்கிவிட்டது. இனிமேல் கூட்டணிகள் இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது." 1990களில் தீர்க்க தரிசியைப் போல் கூறினார் முன்னாள் பிரதமர் வி.பி.சிங். ராஜீவ் காந்தியின் அகால மரணத்தால் கூட்டணி யுகத்தின் வரவு சில ஆண்டுகள் தள்ளிப் போனாலும் அதன் எழுச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆனால் தேர்தல் 2009 வி.பி.சிங்கின் கூற்று பொய்யாகப் போகிறதா, கூட்டணி ஆட்சி யுகம் தொடங்கிய கால் நூற்றாண்டுக்குள் அதன் ஆயுசும் முடிந்துவிடுமா என்ற கேள்விகளை எழுப்புகிறது. 202 தொகுதிகளில் வென்ற தன்னம்பிக்கையில் அல்லது அகந்தையில் காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சிகளிடம் கறாராகப் பேசுகிறது. அடுத்த முறை இந்தக் கூட்டணிக் கட்சிகளின் தொல்லை இல்லாமல் சொந்தமாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று அவர்கள் திட்டம் போட்டாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால் இந்த முறை வந்திருக்கும் தேர்தல் முடிவு ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்பத்தைக் குறிக்கிறது. அந்த வரலாற்றுத் திருப்பம் காங்கிரசுக்கு சாதகமானதாக இருக்கிறது; பி.ஜே.பிக்கு எதிராக இருக்கிறது.

1990களில் கூட்டணிக் கட்சி யுகத்தில், மாநிலக் கட்சிகளின் எழுச்சியுடன் வளர்ந்த பி.ஜே.பி 1991இல் தான் இருந்த நிலைக்கு 2009 இல் திரும்பியிருக்கிறது. 180 சீட்களில் கடைசியாக வென்ற அந்தக் கட்சியின் எம்.பிக்கள் எண்ணிக்கை 160 ஆகக் குறைந்திருக்கிறது. சீஸாவின் இன்னொரு பக்கத்தில் இருக்கும் காங்கிரஸ் கிட்டத்தட்ட 1991இல் இருந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. ராஜீவ் காந்தி அனுதாப அலையால்தான் 1991இல் 232 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. அதோடு ஒப்பிட்டால் எந்த அலையும் இல்லாமல் இந்த முறை 202இல் வெல்ல முடிந்திருப்பது சாதனைதான். ஆனால் இதை வைத்து மாநிலக் கட்சிகளின், கூட்டணி ஆட்சியின் யுகம் முடியப் போகிறது என்று நம்புகிறவர்கள் கொஞ்சம் அவசரப்படுகிறார்கள்.

காங்கிரசுக்கு இந்த வெற்றியை அதன் தேசியசாதனைகளும்தேசியதலைவர்களும்ராகுல் காந்தியும் பெற்றுத் தந்தார்கள் என்றால் இப்போதிருக்கும் வெற்றி அடுத்த முறை நிச்சயம் அதிகமாகும் என்று கூறலாம். ஆனால் தேர்தலில் களமிறங்காத பிரதமரைக் கொண்டிருந்த இந்தத் தேர்தலில் தேசியப் பிரச்சினைகளைவிட மாநிலப் பிரச்சினைகளே ஆக்கிரமித்திருந்தன. மிக அதிகமான மாநிலங்கள் காங்கிரசுக்கு சாதகமாக இருந்ததால் மட்டுமே இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றிருக்கிறது. அடுத்த முறை மிக அதிகமான மாநிலங்கள் வேறு கட்சிக்கு சாதகமாகத் திரும்பினால் காங்கிரசின் எண்ணிக்கை சரியும். உத்தரப் பிரதேசத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்தின் வெற்றியிலும் ராகுல் காந்தியின் தாக்கத்தைப் பார்க்க முடியவில்லை என்பது இது மாநிலங்களின் தீர்ப்பு என்பதற்கு சாட்சி. இந்தத் தேர்தல் வெற்றியில் காங்கிரசின் எந்தப் பெரிய தேசியத் தலைவருக்கும்கூட பங்கு இருப்பதாகவே தெரியவில்லை. மாறாக காங்கிரசின் மாநிலத் தலைவர்களும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் பல மாநிலங்களில் பா..கவின் மீதிருந்த அதிருப்தியும் சேர்ந்துதான் காங்கிரசுக்கு இந்த வெற்றியைத் தந்திருக்கிறது.

நான்கு அரசியல் போக்குகள் இந்தத் தேர்தலில் தெரிகின்றன: அடையாள அரசியலின் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கிறது, மக்கள் நலத் திட்டங்கள்-இலவசங்கள்-ஓட்டுக்குப் பணம் தவிர்க்க முடியாததாகியிருக்கிறது, அடிமட்ட மக்களுக்கு பலன்கள் சென்று சேரும் வகையில் சாலைகள், சட்டம் ஒழுங்கு, வேலைவாய்ப்பு போன்றவை மேம்படுத்தப்பட்டால் அதற்கு வாக்காளர்கள் தலை வணங்குவார்கள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது, மொழி-பிரதேசம்-சமூகம் முதலிய வேறுபாடுகளைத் தாண்டி மக்களை ஈர்க்கும் தேசியத் தலைவர்கள் உருவாவது கடினம் என்பதால் தீர்மானிக்கும் சக்தியாக உருவாகியிருக்கும் மாநிலத் தலைவர்களைக் கொண்டிருப்பது ஒவ்வொரு கட்சிக்கும் அவசியம் என உணர்த்தப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுக்கவே மதம், மொழி, ஜாதி, இனம், சினிமா முதலிய அடையாளங்களைப் பயன்படுத்த முயன்ற ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அரசியல் தலைவருக்கும் அடி கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்து ஜெயிக்கப் பார்த்தார் ஜெயலலிதா. பிகாரில் யாதவர்கள்+தலித்துகள் ஓட்டுகளைக் கூட்டினால் வெற்றி நிச்சயம் என்ற லாலு-பாஸ்வான் மனக் கணக்குப் போட்டார்கள். சினிமா புகழ்+நம் ஜாதி ஓட்டு கிடைத்தால் இன்னொரு என்.டி.ஆர் ஆகலாம் என்று நினைத்தார் சிரஞ்சீவி. தீவிர இந்துத்துவாவை இந்தியா முழுக்க பரப்பினால் இந்துக்களின் ஓட்டுகளை அள்ளிவிடலாம், அடுத்த பிரதமர் வேட்பாளராகலாம் என நினைத்தார் மோடி. ஆனால் இவர்கள் ஒரு கணக்குப் போட மக்கள் வேறு கணக்குப் போட்டார்கள். பிகாரில் தங்கள் ஜாதிக்கு ஓட்டுப் போடுவதைவிட அங்கு சட்டம் ஒழுங்கை சரி செய்த, சாலை முதலிய வசதிகளை மேம்படுத்திய, வளர்ச்சியை வேகப்படுத்திய தற்போதைய முதல்வர் நிதீஷ் குமாரின் கட்சிக்கு ஓட்டுப் போடுவதே சிறந்தது என மக்கள் முடிவெடுத்தார்கள். மோடி இந்தியா முழுக்க இந்துத்துவாவை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்த பிறகு இதுவரை பா..கவுக்கு ஓட்டுப் போட்டு வந்த நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள்கூட பா..கவைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.

ஆந்திராவிலும் தமிழகத்திலும் ரத்தம் (ஜாதி), உணர்ச்சி (இலங்கைத் தமிழர் பிரச்சினை) ஆகியவற்றுக்கு பதில் இலவசங்கள், மக்கள் நலத் திட்டங்களை வைத்தே பெருவாரியான வாக்காளர்கள் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். இந்தியாவை ஆளும் அரசைத் தீர்மானிப்பதற்கான தேர்தலை அந்தந்த மாநிலங்களின் பிரச்சினைகள் அல்லது சாதனைகள் தீர்மானித்திருப்பது வாக்காளர்கள் மாநிலத்தையே தங்களின் தேசமாகக் கருதுவதை உணர்த்துகிறது. இந்திரா காந்தியைப் போன்ற அல்லது குறைந்தது வாஜ்பாயி போன்ற அனைத்து பிரதேசங்களையும் கவரக்கூடிய தேசியத் தலைவர்கள் வரும் வரை எம்.பி தேர்தலும் எம்.எல். தேர்தலைப் போலவே வாக்காளர்களால் கவனிக்கப்படும். ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி நில பேர ஊழலில் திளைத்தாலும் மக்கள் தங்களுக்கு என்ன கிடைத்தது என்பதைப் பார்த்தே ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு பாணியில் மகளிர் சுய உதவிக் கடன், மருத்துவக் காப்பீடு போன்ற அடி மட்ட மக்கள் பலன் பெறும் திட்டங்களை நிறைவேற்றுவதால் அவரை மக்கள் தங்கள் நலனை விரும்பும் தலைவராகக் கருதுகிறார்கள். அதனால் அவர் சார்ந்த காங்கிரசின் எம்.பிக்களை ஜெயிக்க வைத்து அனுப்பியிருக்கிறார்கள்; தமிழகத்தில் தி.மு. தலைவர் சாதித்திருப்பதைப் போலவே.

எனக்கு என்ன கிடைக்கும் அல்லது கிடைக்கிறது என்ற அடிப்படையில்தான் இந்திய மக்கள் இந்த முறை ஓட்டுப் போட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அதைத் திட்டுவது மேல் தட்டுப் பார்வையையே காட்டுகிறது. சுதந்திரமடைந்த பிறகு இந்த 60 ஆண்டுகளில் தொடர்ந்து வந்த மத்திய அரசுகள் தம்பட்டம் அடித்துக்கொண்ட ஐந்தாண்டுத் திட்டங்களின் தொலைநோக்குப் பார்வை தங்களுக்குப் பெரிதாக எதையும் செய்யவில்லை என்றும் இனி மேலும் ஏதாவது செய்யும் நம்பிக்கை இல்லை என்றும் அடிமட்டத்து மக்கள் நினைக்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளில் பெரிதாகப் பேசப்பட்ட பல விஷயங்கள் வெறும் வாய் ஜாலமாகவே எஞ்சிவிட்டது. அதனால் தொலைநோக்குத் திட்டங்களுக்கு பதில் உடனடியாக தங்களுக்குக் கிடைக்கும் பலன்களை வைத்தே தங்கள் தேர்வை மேற்கொள்கிறார்கள்; அதையே நம்புகிறார்கள். அதனால் விவசாயக் கடன் தள்ளுபடி, கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், மலிவு விலை அரிசி போன்றவையே தேர்தல் வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இதை மேல் தட்டு வர்க்கம் கிண்டல் செய்வதிலும் அர்த்தமில்லை. ஏனென்றால் நாமும் நமக்கு என்ன கிடைக்கிறது என்ற அடிப்படையில்தான் பெருவாரியாக ஓட்டுப் போடுகிறோம்.

இந்தியாவில் ஊழல், வாரிசு அரசியல், அதிகார துஷ்பிரயோகம் எதுவும் தேர்தல் பிரச்சினை அல்ல. அம்பானி முதல் தள்ளு வண்டி வியாபாரி வரை தனது தனிப்பட்ட பாதிப்பை வைத்தே தங்கள் அரசியல் தேர்வைத் தீர்மானிக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியக் குழு பரிந்துரைகளின் பலன் கிடைக்கவில்லை. அதனால் இந்த முறை அரசு ஊழியர்களின் ஓட்டு வழக்கம் போல தி.மு.கவுக்குச் செல்லாது என்று என் நண்பர் ஒருவர் கூறினார். அது நடந்ததா என்று தெரியவில்லை. எனினும் தங்கள் சலுகைகளைப் பறித்ததால்தான் அவர்கள் ஜெயலலிதா அரசுக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பது உண்மை. அதன்படி பார்த்தால், இலவசங்களை, மலிவு விலை அரிசியை, ஓட்டுப் போடப் பணத்தை எதிர்பார்க்கும் ஒரு சாமானிய வாக்காளருக்கும் தனது சம்பளத்தை, சலுகைகளை முக்கிய அரசியல் பிரச்சனையாக வைக்கும் படித்த வாக்காளருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? மதிப்புக் கூட்டு வரியை (வாட்) வர்த்தகர்கள் அரசியல் பிரச்சனையாக்கினார்கள், தங்கள் வருவாயை பாதுகாக்க. தனியார் மயமாக்கலுக்கு உதவும் கட்சிகளுக்கு அதிக நிதியுதவி செய்வது மூலம் தங்கள் நலன்களை பெரிய பிசினஸ் நிறுவனங்களை அரசியலாக்குகின்றன.

அம்பானிகள் தங்கள் பிசினஸ் நலனுக்காக இந்திய அரசியலை எப்படியெல்லாம் ஆட்டிப் படைத்திருக்கிறார்கள் என்பதற்கான சமீபத்திய உதாரணம் இது. கடந்த ஆட்சியில் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் வாங்கியதால் ஆட்சியை தக்க வைப்பதற்காக சமாஜ்வாதி கட்சியின் ஆதரவைப் பெற முயன்றது காங்கிரஸ். அம்பானி குடும்பத்தில் அப்போதுதான் பெரும் புயல் வீசி அனில் அம்பானி, முகேஷ் அம்பானி பாகப் பிரிவினை நடந்திருந்தது. அனில் அம்பானி அமர் சிங்கிற்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் நெருக்கமானவர். மொத்த சொத்தில் தனக்கு ஒரு சிறு பகுதி மட்டுமே வந்ததில் அவர் பொருமிக்கொண்டிருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவை நம்பியிருக்க வேண்டும் என்ற நிலையில், அதைப் பயன்படுத்தி தனக்கு அனில் அம்பானி நெருக்கடி கொடுப்பார் என்று முகேஷ் அம்பானி கருதியதாக தகவல்கள் வெளியாகின. ஆதரவு கொடுப்பதற்கான நிபந்தனையிலேயே இந்த விஷயம் இடம் பெற்றதாக புரளிகள் கிளம்பின. இதையடுத்து காங்கிரஸை நம்பிக்கைத் தீர்மானத்தில் தோற்கடிக்க முகேஷ் அம்பானி தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான கோடிகள் களமிறக்கப்பட்டன. பதறிப் போன காங்கிரஸ் முகேஷுடன் தங்களுக்கிருந்த பழைய நண்பர்களைப் பயன்படுத்தி, அவரின் பிசினஸ் நலன்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இருக்காது என்று வாக்களித்த பிறகுதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடிந்தது.

அம்பானிகள் தங்கள் சுய நலனுக்காக ஆட்சியையே மாற்றத் துணிகிறார்கள். ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் வர்த்தகர்களும் தங்கள் நலன்களையே தேர்தல் பிரச்சனையாக முன்வைக்கிறார்கள். ஆனால் ஏழைகள் மட்டும் தங்கள் வயிற்றுப் பாட்டை, ஏழ்மையை தேர்தல் பிரச்சினையாக வைக்கக்கூடாதா? ஒரு கனவு உலகம் அமையாது என்று தெரிந்த பிறகு யதார்த்த உலகிற்குப் பழகிக்கொள்வதைப் போல, தங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் இப்போதைக்கு வரப் போவதில்லை என்பதை உணர்ந்திருக்கும் அடித்தட்டு மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கான உடனடித் தீர்வுகள், தற்காலிகத் தீர்வுகளின் அடிப்படையில் வாக்களிப்பதில் ஆச்சரியமில்லை. வறுமையை ஒழிப்போம் என்று சொன்ன இந்திரா காந்தி செத்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டது; வறுமை ஒழியவில்லை. ஆனால் ஒரு ரூபாய் அரிசி, மருத்துவக் காப்பீடு, சுய உதவிக் குழு கடன், ஓட்டுக்குப் பணம் போன்றவை வாக்காளர்களுக்கு பெரிய கனவுகள் எதையும் முன்வைக்கவில்லை, இந்த வாக்குறுதிகள் விஷயத்தில் அவர்கள் ஏமாற்றப்படுவதும் இல்லை. அரசியல்வாதிகளை எவ்வாறு வேலை வாங்குவது, வானளாவிய வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு அவர்கள் ஏமாற்றிவிடாமல் தடுப்பது எப்படி என்ற சூட்சுமத்தை அறிந்துகொள்ளும் வரை, அரசியல்வாதியை accountable ஆக்குவதற்கான நடைமுறைகளை உருவாக்கும் வரை இது போன்ற உடனடி உதவிகளைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை.

உணர்ச்சிகரமான இலங்கைத் தமிழர் பிரச்சினையைக்கூட தமிழக வாக்காளர்கள் புறக்கணித்துவிட்டதில் எனக்கு வருத்தமுண்டு. இன்னொரு பக்கம் இந்தியா மீதான மதவாதிகளின் பிடி தளர்ந்து வருவதைப் பார்க்கும் போது உணர்வுரீதியான பிரச்சினையை வைத்து அரசியல் செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு என்று புரிகிறது. கடந்த 20 ஆண்டுகளில் தான் பெற்றதை எல்லாம் இந்தத் தேர்தலில் பி.ஜே.பி இழந்து நிற்கிறது. வாஜ்பாயி என்ற முகமூடியைப் பயன்படுத்தி நடுத்தர வர்க்கத்தையும் இளைஞர்களையும் கவர்ந்தது மூலம் நகரங்களில் பெரு வளர்ச்சி கண்ட அந்தக் கட்சி இப்போது தில்லியிலேயே வாஷ் அவுட் ஆகியிருப்பது அதன் வீழ்ச்சியைக் காட்டுகிறது. பி.ஜே.பியை வளர்க்க சாத்வீகமான முகமூடி தேவை என்பதை உணராமல் மோடியும் வருண் காந்தியும் சேர்ந்து அதற்குக் கல்லறை எழுப்பியிருக்கிறார்கள். மோடி பொறுப்பாளராக்கப்பட்ட மகாராஷ்டிராவிலும் கோவாவிலும் பா.. கேவலமாகத் தோற்றிருக்கிறது. மகாராஷ்டிராவில் மைக்கைப் பிடித்து முழங்கிய மோடியின் பேச்சுகள் ‘‘வெறும் அனல் காற்று" என்று வர்ணித்தார் பா.. தலைவர் கோபிநாத் முண்டே. தனது தொகுதியில் மோடியை அவர் பிரச்சாரம் செய்ய விடவில்லை; அங்கு 1.4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். மோடி காலடி பதிக்காத பீகாரில் நிதீஷ் குமாரின் தாக்கத்தில் பி.ஜே.பி கூட்டணி பெரு வெற்றி பெற்றது. மத்திய பிரதேசத்தில் அதன் பா.. முதல்வர் ஷிவ்ராஜ் சிங் செளகான் மோடியிடமிருந்து விலகியிருந்தார். குஜராத்திலேயே சர்வாதிகார மனோபாவம் கொண்டவர் என்று மோடியைக் குற்றம்சாட்டும் கட்சிப் பிரமுகர்கள் அவருக்கு எதிரான கலகத்திற்குத் தயாராக இருக்கிறார்கள்.

விமானத்தில் 300 மணி நேரம் பறந்து இந்தியாவெங்கும் 325 பேரணிகளில் பிரச்சாரம் செய்தார் மோடி. அந்த வகையில் இந்தத் தேர்தலில் பி.ஜே.பியின் தோல்வி அதன் பிரதம வேட்பாளர் அத்வானியின் தோல்வி மட்டுமல்ல, மோடியின் தோல்வியும்கூட. ஆனால் அத்வானிக்குப் பிறகு மோடியை முன்னிறுத்தி ரத யாத்திரை காலத்தில் செய்தது போன்ற தீவிர இந்துத்துவாவை முன்னிறுத்தி பி.ஜே.பிக்குப் புத்துயிர் கொடுக்கப் போகிறார்கள் என்ற பேச்சுகள் அடிபடுகிறது. அப்படிச் செய்தால் இதைவிட மோசமான தோல்வியை பி.ஜே.பி சந்திக்கும். பி.ஜே.பியின் ஒரே ஒரு தொகுதி வேட்பாளராக வருண் காந்தி செய்த காரியங்கள் சிறுபான்மையினரை பி.ஜே.பியைத் தோற்கடிக்கும் வகையில் காங்கிரசுக்கு வாக்களிக்கவைத்தது என்றால், மோடியே களமிறங்கினால் இன்னும் சரிவுதான். காங்கிரசுக்கு மாற்றாக பா..கவை நம்பி வந்த நடுத்தர வர்க்கத்தையும் இளைஞர்களையும் மீண்டும் காங்கிரஸை நோக்கி விரட்டுவது இது போன்ற இந்துத்துவாவின் பேயாட்டம்தான். சிறுபான்மையினர் ரத்தத்தைக் குடித்து அரசியல் செய்யும் அகோரி இந்துத்துவாவின் காலம் முடிந்துவிட்டது என்பதை இவர்கள் உணர மறுப்பதுதான் பிரச்சினை.

1990களில் மிருகத்திற்கு இணையான காரியங்களை அரசியலில் செய்ய முடியும் என்று காட்டிய இந்துத்துவா இரண்டு காரணங்களால் வெற்றி பெற்றது. ஒன்று, இந்துக்கள் மத்தியில் சிறுபான்மையினர் பற்றி பரவலான புரிதலின்மையும் அதிருப்தியும் இருந்தது. அதோடு இந்துத்துவா என்றால் என்ன, அதில் என்னவெல்லாம் செய்வார்கள் என்று இந்துக்களுக்கு அப்போது தெரியாது. அதனால் புதிதாகத் தெரிந்த இந்துத்துவா அவர்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரிந்தது. இரண்டாவதாக, வாஜ்பாயி என்ற தலைவரைக் கொண்டிருந்தது பா..கவுக்கு உதவியது. மக்களின் கவனம் வாஜ்பாயியிடம் குவிந்திருந்த சமயத்தில், சிரமமின்றி பெருவாரியான மக்களுக்கு ஏற்புடையதாக இல்லாத காரியங்களை அத்வானி போன்ற தலைவரை வைத்துச் செய்ய முடிந்தது. இந்த இரண்டும் இன்று பா..கவிடம் இல்லை. 90களில் செய்த காரியங்கள் மூலம் இந்துத்துவா குறித்த மாயை தகர்ந்திருக்கிறது. அது ஒரு அழிவுச் சிந்தனை என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் பா.. தீவிர இந்துத்துவாவை முன்வைக்கும் போதெல்லாம் மக்களுக்கு பழைய கோர நினைவுகள் வராமலில்லை. தங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கே வாக்காளர்கள் அதிக முக்கியத்துவம் தரும் காலக் கட்டத்தில் சிறுபான்மையினரை ஒழிப்பேன் அல்லது அடக்குவேன் என்று கூறினால், அதில் எனக்கு என்ன பயன் என்று வாக்காளர்கள் யோசிக்கிறார்கள். முஸ்லிம்களை சாகடித்துவிட்டால் இரண்டு வேளை சாப்பிடுபவர்களுக்கு மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்குமா? பா..கவின் இந்துத்துவ வெறியாட்டம் அந்தக் கட்சிக்கே எதிராகத் திரும்பும் என்பதற்கு ஒரிசா சமீபத்திய உதாரணம்.

1990களின் இறுதியில் ஜனதா தளத்தின் ஓட்டுகளைத் தன் பக்கம் ஈர்த்து ஒரிசாவில் பா.. வளர்ந்தது. 1996இல் அங்கு 14 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதனால் பிஜு ஜனதா தள் தலைவர் நவீன் பட்நாயக் வேறு வழியின்றி பா..கவுடன் கூட்டணி வைக்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். அதன் பிறகு சமீபத்திய கலவரங்களில் கிறிஸ்தவர்களுக்கு மரணத்தையும் மரணத்தைவிட மோசமான பலாத்காரத்தையும் பா.. வாரி வழங்கியது. அவர்கள் செய்த காரியங்கள் தனது வாக்காளர்களுக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்துவதை உணர்ந்த நவீன் பட்நாயக் பி.ஜே.பியை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டது மூலம் பெரிய ரிஸ்க் எடுத்தார். இதைக் கூட்டணி துரோகம் என்று கூறி பி.ஜே.பி தீவிர பிரச்சாரம் செய்தது. வானம் வெடிக்கும் வகையில் ஒரிசாவில் பேசினார் மோடி. ஆனால் பி.ஜே.பி அங்கு படுதோல்வி அடைந்ததோடு கிட்டத்தட்ட 1996இல் இருந்த நிலைக்குத் திரும்பியிருக்கிறது. 1996இல் 14 சதவீத ஓட்டுகள், இப்போது 16 சதவீத ஓட்டுகள். வாக்காளர்கள் மரணத்தையும் வன்புணர்ச்சியையும் தொடர்ந்து ஆதரிக்கும் அளவுக்கு மிருகங்கள் அல்ல என்று ஒரிசா காட்டியிருக்கிறது. கர்நாடகாவுக்கு இந்துத்துவா புதிது. விரைவிலேயே அழிவு சக்தியை அரசியலில் வைத்துக்கொண்டிருக்க முடியாது என்ற உண்மை அங்கும் புரிந்துகொள்ளப்படும். மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற பா.. ஆளும் மாநிலங்களில் இந்துத்துவா அல்ல, மக்கள் நலத் திட்டங்களும் அது தொடர்பான வாக்குறுதிகளும்தான் வெற்றியைத் தந்திருக்கின்றன. குஜராத்தில்கூட வளர்ச்சிதான் மோடிக்கு வெற்றி தருகிறது, இந்துத்துவா அல்ல. அதே வளர்ச்சி இப்போது பாதிக்கப்படுவதால், வைரம் பட்டை தீட்டும் தொழிலாளர்களிடையே மிகப் பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்பட்டிருப்பதால் மோடியின் வீழ்ச்சி காத்திருப்பதாக மாநிலத்திலுள்ள அவரின் உட்கட்சி எதிரிகள் கணிக்கிறார்கள்.

எனினும் இது பா..கவின் வீழ்ச்சிதான், முடிவுரை அல்ல. கர்நாடகா (எடியூரப்பா), மத்தியப் பிரதேசம் (ஷிவ்ராஜ் சிங் செளகான்), சத்தீஸ்கர் (ராமன் சிங்) என மாநிலங்களில் வலுவான தலைவர் இருந்த இடங்களில் எல்லாம் அந்தக் கட்சி சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. ராஜஸ்தானில் வசுந்தராவின் வலுவான தலைமை எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. உண்மையில் வெற்றியின் ரகசியமே அதுதான்: மாநிலத் தலைவர்கள். தங்கள் கட்சிக்கோ, தங்கள் கூட்டணிக் கட்சிக்கோ அந்தந்த மாநிலங்களில் வலுவான தலைவர் இல்லாமல் எந்தக் கட்சியும் தேர்தலில் வெல்ல முடியாது. ஆனால் பா..கவில் இப்போதுள்ள தேசியத் தலைவர்கள் அனைவரும் டிவியில் தோன்றி நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசும் பகட்டான தலைவர்களாக, மக்களுடன் தொடர்பில்லாத தலைவர்களாக இருக்கிறார்கள். அதற்கு மாறாக காங்கிரஸ் கடந்த பத்தாண்டுகளில் நல்ல மாநிலத் தலைவர்களை வளர்த்திருக்கிறது. ராஜஸ்தானின் கெலாட், ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி, தில்லியில் ஷீலா தீட்சித். .பியில் களத்தில் இறங்கி வேலை செய்தது மூலம் ராகுல் காந்தி அந்த மாநிலத்தில் ஒரு வலுவான தலைவராகி இந்த முறை அங்கு காங்கிரசுக்குக் கணிசமான எம்.பிக்களைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

அடையாளம் சார்ந்த அரசியலின் தோல்வி இந்தத் தேர்தலில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான போக்கு. மதத்தை வைத்து அரசியல் செய்த .மு.மு., ஜாதியை வைத்து அரசியல் செய்ய முயன்ற பி.எஸ்.பி ஆகியவை தமிழகத்தில் மண்ணைக் கவ்வியிருக்கின்றன. சினிமாவை வைத்து அரசியல் செய்ய முயன்ற சிரஞ்சீவி-விஜயகாந்த் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை (ஓட்டுகளை சிதறடித்து ஆளுங்கட்சிக்கு எளிதான வெற்றியைக் கொடுத்ததைத் தவிர). ஜாதியும் மதமும் சினிமா புகழும் கொடுக்கும் அடையாளம் ஒரு விசிட்டிங் கார்டு மட்டுமே. அந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி என்ன செய்ய முடியும் என்பதை வேறு ஏராளமான விஷயங்கள் தீர்மானிக்கின்றன. என்.டி.ஆர் முதல் எம்.ஜி.ஆர் வரை வெறுமனே சினிமா செல்வாக்கு மூலம் வெற்றி பெறவில்லை. பூ விற்கும் பெண்மணி முதல் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி வரை சாமானிய மக்களின் நலன்களை கவனித்துக்கொண்டது மூலம்தான் அவர்கள் பெரு வெற்றி பெற்றார்கள். சாமானிய மக்களின் அடிப்படைப் பிரச்சினையைப் புரிந்துகொண்டு, அதைத் தீர்க்கும் வகையில் நடந்துகொள்ளும் போதுதான் இந்த அடையாளம் வாக்குகளாக மாறுகிறது என்பதற்கு அவர்கள் சாட்சி. மனிதநேய மக்கள் கட்சியிடமோ பி.எஸ்.பியிடமோ அப்படி ஏதும் இல்லை. சந்திரபாபு நாயுடு சொன்னது போன்ற இலவச பணப் பட்டுவாடா திட்டங்களை மக்கள் நம்பவும் தயாராக இல்லை. இரண்டு முறை ஆட்சியிலிருந்த போது மேல் தட்டு மக்களுக்கான முதல்வராக அவர் நடந்துகொண்டதை மக்கள் மறக்கவில்லை. சிரஞ்சீவிக்கு அவர் சார்ந்த ஜாதிக்காரர்கள்கூட முழுமையாக ஓட்டுப் போடவில்லை.

இந்தியா போன்ற பரந்து விரிந்த தேசத்தில் ஒவ்வொரு மாநிலமும் மைய நீரோட்டத்தை வெவ்வேறு திசைகளில் இழுக்கிறது. இதில் எந்த திசைக்கு அதிக சக்தி கிடைக்கிறதோ அந்த திசையில் அதற்கடுத்த ஐந்து ஆண்டுகள் இந்தியா பயணிக்கிறது. இந்த முறை காங்கிரசுக்கு அதிக மாநிலங்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. இது அகில இந்திய காங்கிரசுக்கோ, அதன் கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்கோ கிடைத்த வெற்றி அல்ல; மக்களின் நாடித் துடிப்பை சிறப்பாக அறிந்திருக்கும் மாநிலத் தலைவர்களின் தயவில் கிடைத்த வெற்றி. அடுத்த முறையும் காங்கிரசுக்கு அதிக மாநிலங்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியைப் போல அலட்சியமாக ஆட்சி செய்ய முடியாது.

இந்த முறை கிடைத்திருக்கும் பலமான வெற்றியின் திமிரால் தேசிய மாநாட்டுக் கட்சி முதல் தி.மு. வரை பல மாநிலக் கட்சிகளின் அதிருப்தியை காங்கிரஸ் சம்பாதித்தாகிவிட்டது. லாலுவும் முலாயமும் ஏற்கனவே பழிவாங்கலுக்காகக் காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தருணம்தான் பி.ஜே.பி போன்ற மதவாதக் கட்சிகளுக்கு வாய்ப்பைத் தருகிறது. தொடர்ந்து பல கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியை காங்கிரஸ் தந்திரமாக ஒழித்துக் கட்டியதை அடுத்துதான் மாநிலக் கட்சிகள் பி.ஜே.பி ஆட்சியை ஆதரிக்கும் நிலைமை உருவானது. ஒரு காலத்தில் காங்கிரஸில் இருந்தவர் என்ற முறையில் வி.பி.சிங்கின் வார்த்தைகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. 28 மாநிலங்கள் கொண்ட இந்தியாவில் சிறப்பான அதிகாரப் பகிர்வை சாத்தியமாக்கும் மாநிலக் கட்சிகளை தங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளாமல் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது எளிதான காரியமல்ல.

இந்திய அரசியலில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமான அரசியல் போக்குகளைக் கொண்டிருக்கிறது. அதனால் எல்லா மாநிலங்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் ஒரே சமயத்தில், ஒரே கட்சி பெறுவது எவ்வளவு சிரமம்? கூட்டணி அரசியல் யுகத்தில் மாநிலங்களின், மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி யோசிக்கும் போது திரைப் படத்தின் காட்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. வடிவேலு நடித்த நகைச் சுவைக் காட்சி அது என்று நினைக்கிறேன். சுருண்டு போயிருக்கும் ஓலைப் பாய் ஒன்றை நேராக விரித்து கீழே படுக்க வேண்டும். ஆனால் தலைமாட்டில் அதை நேராக்கும் போது மற்றொரு புறத்தில் அது மடிந்துகொள்ளும். கால் மாட்டில் அதை நேராக்கும் போது மற்றொரு புறத்தில் அது மடிந்து கொள்ளும். கடைசியில் பாயை நேராக விரிக்காமலே அப்படியே அதில் படுத்துக்கொள்வார். இந்திய அரசியலின் கூட்டணி யுகமும் அப்படிப்பட்ட நெருக்கடியால் உருவானதுதான்.

 

maya.flowerpower@gmail.com

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com