முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

தலையங்கம்
யுத்தத்தை விரும்புகிறவர்கள் யார்?
மனுஷ்ய புத்திரன்
கட்டுரை
மிருகம் - மனிதன் - எந்திரன் மேலும் சிக்கலாகும் அறம்
ஆர்.அபிலாஷ்
'பூ' திரையில் ஒரு கரிசல் காட்டுக் கவிதை
லக்ஷ்மி சரவணக்குமார்
மும்பைத் தாக்குதல்களும் ஊடகக் கதறல்களும்
அ.முத்துக்கிருஷ்ணன்
போரும் வாழ்வும் : மும்பைத் தாக்குதலுக்குப் பிந்தைய இந்தியா
மாயா
குழந்தைப் போராளிகள் : பேரவலத்தின் ரத்த சாட்சியம்
யமுனா ராஜேந்திரன்
பொது வாழ்வில் ஒரு நாளின் சில குறிப்புகள்
அழகிய பெரியவன்
மறக்கப்பட்ட வலிகளின் வரலாறு
ஹர்ஸ் மந்தர்
உங்கள் பெயர் என்ன?
அ.முத்துலிங்கம்
போர் முனையிலிருந்து பின்வாங்குகிறதா இலங்கை ராணுவம்?
இளைய அப்துல்லாஹ்
கவிதை
ஏ.கே.ராமானுஜன் : நாட்டார் கதைகளின் நாயகன்
எஸ்.ராமகிருஷ்ணன்
இரண்டு பிரஞ்சுப் பெண்கள்
பிரபஞ்சன்
ராய் ஆர்பிசன் - துயரத்தின் இசை
ஷாஜி
கவிதை
ஊடலில்....
றஞ்சனி
உலராத் துளிகள், மழை துவங்கிய அரட்டை
ஆர். கார்த்திகா
இரவு
யாழன் ஆதி
மழைப்பறவை பறந்த திசையில்
த.செல்வசங்கரன்
ஒரு இடம் காலியாயிருக்கிறது
ரவிஉதயன்
சிறுகதை
என் இருத்தலின் நஞ்சு
கான் ஸ்யூ
பச்சை மரகதக் கல்கிளி
சமயவேல்
கடிதங்கள்
கடிதங்கள்
கடிதங்கள்
போரும் வாழ்வும் : மும்பைத் தாக்குதலுக்குப் பிந்தைய இந்தியா
மாயா

நிகழ்காலத்திலிருந்து இறந்த காலத்தை எதிர்கொள்வது என்பது ஒரு கையறு நிலை. நம்மால் தடுக்க முடியாமல் போன, கட்டுப்படுத்த முடியாத ஒரு கொடுமையான சம்பவத்தைப் பேசுவது, எழுதுவது மூலமாகத்தான் கடந்தாக வேண்டும். மும்பைத் தாக்குதலுக்குப் பிந்தைய இந்தியாவில் கருத்துத் தளத்தில் இயங்கும் சிந்தனாவாதிகளின் ஓயாத கட்டுரைகள், கருத்துகளின் பின்னால் இருப்பது இந்த உளவியல்தான். வாதப் பிரதிவாதங்களில் இந்த தேசத்திற்குள்ள பிரியமும் வரலாறும் பாரம்பரியமும் ஊடகங்களின் தலையங்கப் பக்கங்களிலும் பயங்கரவாதத்தை மையமாகக் கொண்ட சிறப்புக் கூட்டங்களிலும் டிவி  சேனல்களின் விவாதங்களிலும் எதிரொலிக்கின்றன. இந்த தேசத்தின் பன்முகத்தைப் போலவே அவர்களின் கருத்துகளும் பார்வையும் பன்முகம் கொண்டவை. ஒரு சில கருத்துகள் ஒருவருக்கொருவர் நேர் எதிரானவை. பேச்சுகள், எழுத்துகள், கருத்துகளின் இடைவிடாத stringsகளில் குழம்பிக் கிடக்கும் இந்தச் சூழலிலும் ஒரு அடிப்படை வித்தியாசம் தெரிகிறது. கருத்தியல் தளத்தில் நடக்கும் விவாதத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்க முடிகிறது. ஒன்று, அமெரிக்க சாய்வுடன் பார்க்கும் பயங்கரவாத எதிர்ப்பு. மற்றொன்று, இந்தியத் தன்மைக்கேற்ற பயங்கரவாத எதிர்ப்பு. இந்த இரண்டு தரப் பினரிடையே நடப்பது ஒரு நிழல் யுத்தம்.

மும்பை விஷயத்தில் எல்லோருக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்க  வேண்டும்  என்பதுதான் எண்ணம். ஆனால் அதை அமெரிக்க வழியில் செய்வதா, இந்திய வழியில் செய்வதா என்பதுதான் வேறுபாடு. இந்தியாவில் நாம் காஷ்மீரிலும் குஜராத்திலும் அயோத்தியிலும் என்ன செய்தோம் என்பதை சௌகரியமாக மறந்துவிட்டு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்ல முடியாது என்கிறார் அருந்ததி ராய். பாபர் மசூதியைக் காரணம் காட்டி மும்பைத் தாக்குதலை நியாயப்படுத்துவதா என்று அந்தக் கருத்தின் ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்தி விமர்சிக்கிறார் சல்மான் ருஷ்டி. பாகிஸ்தான் நம்மை மத்திய காலத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்கிறது என்று சொல்லும் ருஷ்டி, ‘காஷ்மீரும் பாலஸ்தீனமும்’ அமைதிக்குத் திரும்பினால்கூட அல் காய்தாவும் மற்ற ஜிகாதிகளும் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த மாட்டார்கள் என்கிறார்.

அருந்ததி ராயின் அடித்தட்டு பார்வை ருஷ்டிக்கு எரிச்சலூட்டுகிறது.  சி.எஸ்.டி ரயில் நிலையம்தான் மும்பையின் சின்னம். சில மேல்தட்டு மனோபாவம் பீடித்த ஊடகங்கள் சொல்வதுபோல தாஜ் ஹோட்டலின் பழமைவாய்ந்த கோபுரம் அல்ல என்ற பார்வை ரசனைக் குறைவானது என்கிறார் ருஷ்டி. ஒரு வகையில் தானும் ஒரு மேட்டுக்குடி சிந்தனையாளர், எழுத்தாளர் என்று இந்தக் கருத்து மூலம் நிரூபிக்கிறார் ருஷ்டி. மேல் தட்டு மனோபாவம் வியாதி போல பீடித்திருக்கும் டைம்ஸ் நவ் போன்ற ஆங்கில செய்திச் சேனல்கள்  அருந்ததிராயைத் தாக்க இதையும் மற்றொரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டன. அடித்தட்டு பார்வை கொண்ட, நாட்டிற்குத் தேவையான உண்மையான சிந்தனையாளர்களை இகழ்ச்சி செய்வது நமது மைய நீரோட்ட ஊடகங்களுக்குப் புதிதல்ல. ஏனெனில் அவர்கள் மைய நீரோட்ட ஊடகங்கள் செய்வது போல வெகுஜனங்களின் சிந்தனையோட்டத்திற்கு ஜால்ரா தட்ட மறுக்கிறார்கள். உண்மை அதற்கு நேர் எதிராக இருக்கும் போது அதை துணிந்து சொல்கிறார்கள். டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏற்ற உதவும் போலி பரபரப்புக்களையும் சர்ச்சைகளையும் உருவாக்க அவர்கள் உதவுவதில்லை. பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதுதான் ஒரே தீர்வு, உடனடியாக இந்தியா தனது அணு ஆயுதங்களை பாகிஸ்தான் மீது ஏவ வேண்டும் என்ற வெகுஜன ஊடகங்களின் உள்ளக் கிடக்கையை சொல்லும் கிளிப் பிள்ளைகள் இவர்கள் அல்ல. எனினும் ஒரு முஸ்லீமாக இருந்து கொண்டு, முஸ்லிம் மதவாதிகளின் மிகக் கொடூரமான பத்வாவை எதிர்கொள்ள கிறிஸ்தவம் கோலோச்சும் நாடுகளில் அடைக்கலம் புகுந்திருக்கும் ருஷ்டியின் சிந்தனையும் கருத்துச் சுதந்திரமும் பார்வையும் சில எல்லைகளுக்குட்பட்டது. அந்த எல்லைகளுக்குள் இருந்துகொண்டே மும்பை பயங்கரவாதம் குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் அவர்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வாரி வழங்கிய நிதி ஜிகாதிகளுக்கு நீர் பாய்ச்சியிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியால் பொறாமை கொண்டிருக்கும் பாகிஸ்தானின் மேல்தட்டு வர்க்கம் தான் பயங்ரவாதத்தை தூண்டிவிடுகிறது என்கிறார் ருஷ்டி. பாகிஸ்தானில் உள்ள இந்த பயங்கரவாதிகளுக்கு காஷ்மீரைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ கவலை இல்லை. சூபியிசத்தை ஒழித்துக் கட்டிவிட்டு வெறித்தனமான இஸ்லாமை, அராபிய பாணி இஸ்லாமை கொண்டு வந்ததன் நோக்கமும் இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கமும் ஒன்றுதான்: அதிகாரத்தைக் கைப்பற்றுவது. அது மத அதிகாரமாக இருக்கலாம், இந்த உலகத்தையே கட்டுப்படுத்தும் பூகோள அதிகார அரசியலாக இருக்கலாம். ருஷ்டியின் கருத்துக்கள் ஏற்கும்படியாகத்தான் இருக்கின்றன. ஆனால் இந்தியச் சூழலில், இந்தியாவின் இஸ்லாம் பாகிஸ்தானைப் போல வெறித்தனமான ஒன்றாக மாறாமல் தடுக்க வேண்டுமென்றால் அருந்ததிராய் சொல்லும் கருத்துதான் சரி: இந்தியாவுக்குள் பாபர் மசூதி இடிப் புகள், குஜராத்துகள் நிகழாமல் தடுக்க வேண்டும்.

இஸ்லாமிய உலகைப் படைக்கும் உம்மத் என்ற கொள்கையைக் கொண்டவர்கள் இந்த ஜிகாதிகள் என்பது அருந்ததி ராய்க்கோ மற்றவர்களுக்கோ தெரியாதது அல்ல. ஆனால் கணிசமான இந்திய முஸ்லிம்கள் அந்த உம்மத் கொள்கையைப் பகிர்ந்துகொள்ளாதவர்கள், தாங்கள் வசிக்கும் மண் சார்ந்த மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் கொண்டவர்கள். இது எங்கள் மண் என்ற அவர்களின் உணர்வுகளை மழுங்கடிப்பது மூலம் அரசியல் ஆதாயமடைய நினைக்கிறது பி.ஜே.பி. சமூகம் பிளவுபட்டிருக்கும் போதுதான் பெரும்பான்மையை சிறுபான்மைக்கு எதிராகத் தூண்டி விட்டு ஓட்டுகளைப் பெற முடியும். இந்தியாவிலுள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மதம் மாறியவர்கள் என்றும், அவர்களை மீண்டும் ‘தாய் மதத்’திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் சொல்லும் காவிப் படைகள் இன்னொரு புறம் முஸ்லிம்களைக் கொல்வதையே, அழிப்பதையே தனது இலக்காகக் கொண்டு செயல்படுவது முரண்பாடானது. நீண்ட நெடிய  வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்ட இந்தியா போன்ற தேசம் தன் மீதான இன்றைய பயங்கரவாதப் போரை, எவ்வித வரலாறும் கொண்டிராத அமெரிக்க பாணியில் எதிர்கொள்ளலாம் என்ற சிந்தனை அதைவிட அபத்தமானது.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் செய்தது போல இந்தியாவும்  பாகிஸ்தானிடம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களே இன்று  அதிகம். அதில் உள்ள யதார்த்தச் சிக்கல்களைப் பற்றி பலரும் பலவிதமாக எழுதிவிட்டார்கள். நேபாளம், பங்களாதேசம், இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், சீனா என எதிரி மனோபாவம் கொண்ட அண்டை நாடுகளால் சூழப்பட்டிருக்கும் (முற்றுகையிடப்பட்டிருக்கும்) தேசம் இந்தியா. தனது அண்டை நாடுகளான குட்டி தேசங்களிடம்கூட சில சமயங்களில் அடி வாங்கும்  மென்மையான தேசமாகவே இந்தியா அறியப்படுகிறது. இன்று வரை ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா முழு வெற்றியை ஈட்ட முடியாமல் தனது எதிரிகளுக்கு மேலும் வலுவூட்டியிருப்பதைப் பார்க்கும் போது இதில் ராணுவரீதியான தீர்வுகள் எந்த அளவுக்குச் சாத்தியம் எனத் தெரியவில்லை. அமெரிக்க பாணி எதிர்வினையில் உள்ள யதார்த்தச் சிக்கல்களைவிட அதிலுள்ள தத்து வார்த்தச் சிக்கல்கள் ஏராளம்.

பயங்கரவாதத்தைப் பார்க்க இந்தியாவுக்கு அமெரிக்கா என்ற கண்ணாடி தேவை இல்லை. இந்தப் பூவுலகின் வரலாற்றில் நூறு வருடங்கள் என்பது ஒரு சில வினாடி போன்றது. அதன்படி பார்த்தால், இன்று இந்தியா  என  ஒருங்கிணைத்து அறியப்படும் பிரதேசம் வெளியிலிருந்து தாக்குதல்களை, போர்களை, அதாவது இன்றைய அகராதியில் பயங்கரவாதம் என்று கருதப்படுவது போன்றவற்றைச் சந்தித்த எக்கச்சக்கமான அனுபவங்கள் உண்டு. கடைசியாக ஆங்கிலேயரின் காலனியாதிக்கம் வரை அத்தகைய ஒவ்வொரு போர்களின் போதும் மும்பையைவிட மோசமான வீழ்ச்சிகளைச் சந்தித்திருக்கிறது, அவற்றிலிருந்து வெற்றிகரமாக எழுச்சியும் பெற்றிருக்கிறது. கொடுமைக்காரர்கள், அக்கிரமக்காரர்கள், ஈவிரக்கமற்றவர்கள் என்று கருதப்பட்ட அத்தனை இனக் குழுக்களும் அவர்களின் கலாச்சாரமும் போர் தொடுத்து வந்த பிறகு இந்தியா என்று இன்று அழைக்கப்படும் வாழ்வியல், கலாச்சாரத்தோடு இரண்டற சங்கமித்திருக்கிறது. இந்தியா மீது போர் தொடுத்து, கைப்பற்றி இந்திய மைய நீரோட்டத்தில் கலக்காமல் ஆட்சியாளர்களாக மட்டுமே இருந்தது ஆங்கிலேயர்கள் மட்டும் தான். அதனால் பயங்கரவாதத்தை, போர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதில் இந்தியாவின் அனுபவம் அளப்பரியது. ஆனால் வாழ்க்கை முறையில் தொடங்கிய இந்தியாவின் அமெரிக்க மோகம், அதன் கொள்கை முடிவுகளிலும் தெரிகிறது. தனது உலக அரசியலுக்குப் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட அமெரிக்காவுக்கு இடம் கொடுக்கிறது இந்தியா.

Zionism என்று சொல்லால் பழிக்கப்படுபவர்களில் அமெரிக்கர்களை  பிரதான  எதிரிகளாகக் கொண்டவர்கள் இந்தியாவையும் தாக்குவதற்கு  இந்தியாவின் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்தியா மீதான சமீபகாலத் தாக்குதல்கள் காஷ்மீரை மையமாகக் கொண்டவை அல்ல. காஷ்மீர் விடுதலை என்பதைத் தாண்டி இந்தியாவுக்குள்ளேயே சமூகப் பிளவை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சமீபகால பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. குரானில் ‘அல் ஹிந்த்’ என்று இந்து மதத்தைக் குறிப்பிட்டு, அதை அழிக்கும்படி முகமது நபி உத்தரவிட்டதாக ஆந்த்ரே விங்க் என்ற ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். ஹதீஸ், (இஸ்லாமிய மத நூல்) குறித்த அவருடைய  அர்த்தப்படுத்தல்  சரியா  எனத்  தெரியவில்லை. அல் ஹிந்த் மட்டுமல்ல, உலகையே இஸ்லாம் நம்பிக்கைக்கு மாற்ற வேண்டும் என்ற இஸ்லாமியர்களின் அர்த்தப்படுத்தல்தான் ஜிகாத் என்ற புனிதப் போரின் ஆரம்பம் (அந்த அர்த்தப்படுத்தலை இஸ்லாமியர்களில் ஒரு தரப்பினர் ஏற்பதில்லை). உலகில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்தியாவை இஸ்லாமிய தேசமாக்குவது, உலகையே இஸ்லாமியமாக்குவது பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளின் தொலைதூர இலக்கு; எவ்வாறு சங்கப் பரிவாரம் இந்தியாவை இந்து நாடாக்க விரும்புகிறதோ அதே போல. இந்த பயங்கரவாதிகளின் உடனடி நோக்கம் இஸ்லாமிய நாடுகளின் கொடுங்கோலர்கள், கொடுங்கோலர்களைப் போன்ற மன்னர்களின் அரசுகளைத் தூக்கி நிறுத்துவது, பாலஸ்தீன பிரச்சினையில் இஸ்ரேலுக்குச் சார்பாக நடந்துகொள்வது மூலம் வெறுப்பைச் சம்பாதிக்கும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளைத் தாக்குவது. கடும் பாதுகாப்புமிக்க அமெரிக்காவில் புகுந்து தாக்குவதைவிட தனது பூகோள அமைப்பாலும் அசமந்தத்தாலும்  பலவீனமாக  இருக்கும்  இந்தியாவைத் தாக்குவது எளிது. அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகமாகி வருவதால் ஜிகாதிகளுக்கு இந்தியா மிக முக்கியமான இலக்காகியிருக்கிறது. இன்னொரு தேசத்துடனான நட்பை நமது தேசத்தைச் சாராத பயங்கரவாதிகள் தீர்மானிக்க முடியாது. ஆனால் இந்தியா  அமெரிக்காவுடன் கொண்டிருப்பது வெறும் நட்பு போலத் தெரியவில்லை. அமெரிக்காவின் அரசியல் தந்திரங்களுக்கு ஒரு கருவியாக இந்தியா மாறி வரும் சூழ்நிலை தெரிகிறது. இப்போதும்கூட மும்பைத் தாக்குதல்  பின்னணியில்  அமெரிக்க  அரசின் செயல்பாடுகள் அடுத்து வரும் ஒபாமா அரசுக்கு புஷ் நிர்வாகம் வைக்கும் செக் என்று அமெரிக்க அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஈராக்கிலிருந்து படைகளை வாபஸ் பெறுவோம் என்பதை தனது தேர்தல் பிரச்சாரத்திலேயே சொன்னவர் ஒபாமா.

அமெரிக்கா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் நிலையில் அன்னிய நாடுகளிலிருந்து படைகளை வாபஸ் பெறுவது நிதி நிலைமையைச் சீராக்க உதவும். ஆனால் புஷ் நிர்வாகமும் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளும் ஈராக், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதை விரும்பவில்லை. அவ்வாறு வெளியேறினால் அந்நாடுகளில் இன்னும்கூட வலுவான நிலையில் இருக்கும் பயங்கரவாதிகள் அல்லது அமெரிக்காவுக்கு எதிரான சக்திகள் தங்களை வலுவாக்கிக்கொண்டு அமெரிக்கா மீது செப்டம்பர் 11ஐவிடக் கடுமையான தாக்குதலைத் தொடுப்பார்கள் என அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் அமெரிக்காவின் அரசியலுக்கு, புஷ்ஷின் அரசியலுக்கு மும்பைத் தாக்குதல் மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. செப்டம்பர் 11 தாக்குதல் கிட்டத்தட்ட மறக்கப்பட்ட நிலையில் தனது ஆக்கிரமிப்புகளுக்கு அமெரிக்கா மீண்டும் நியாயத்தைக் கற்பிக்க அமெரிக்காவுக்கு மும்பைத் தாக்குதல் உதவியிருக்கிறது. வளைகுடா நாடுகளைப் போலவே இந்த இரு தேசங்களிலும், ஆட்சி தனது கைப் பாவைகளின் கையில் முழுமையாகச் சேரும் வரை அமெரிக்கா வெளியேற விரும்பாது.

லஷ்கர்-இ-தொய்பா இதற்கு முன்பு இந்தியாவை எத்தனையோ முறை தாக்கியபோதெல்லாம் கண்டுகொள்ளாத அமெரிக்கா இப்போது இந்தியாவின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டிருப்பது போல நடந்துகொள்கிறது. ஆனால் தனது நலன்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில்தான் அமெரிக்கா அதிக கவனம் காட்டுகிறது.  ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் மலைப் பிரதேசங்களில் ஒளிந்திருக்கும் அல் காய்தாவினரை ஒழிப்பதில் பாகிஸ்தான் தந்து வரும் ஒத்துழைப்பை இழக்காமலிருப்பது தான் அமெரிக்காவின் இப்போதைய ஒரே நோக்கம். அதனால் செப்டம்பர் 11 தாக்குதலின்போது தான் செய்ததைப் போல இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்கக்கூடாது என அமெரிக்க விரும்புகிறது. பாகிஸ்தானை கடுமையாக மிரட்டுவது போல அமெரிக்கா வெளியிடும் அறிக்கைகள் உண்மையில் இந்தியாவை போரில் இறங்காமலிக்கச் செய்வதற்கான உத்தி. அமெரிக்கா தனது நன்மைக்காகச் செய்யும் காரியம் போரைத் தடுப்பது மூலம் மனிதகுலத்தின் நன்மைக்கும் உதவுவதுதான் ஆச்சரியம். இப்படிப்பட்ட நல்ல காரியங்களை அமெரிக்கா செய்து வந்திருந்தால் முஸ்லிம் உலகால் மிகவும் வெறுக்கப்படும் தேசமாக அது மாறியிருக்காது.

பாகிஸ்தானிடம் 80-100 அணு ஆயுதங்கள் இருப்பதாக நிபுணர்கள் கணிக்கும் நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒரு முழுமையான போர் மூண்டால் அது அணு ஆயுதப் போராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் முந்தைய போர்களைப் போல் அல்லாது தனது மண்ணிலும் சேதங்கள் இல்லாமல் இந்தியா பாகிஸ்தானைத் தோற்கடிக்க முடியாது. எனினும் பாகிஸ்தானையும் அங்கிருந்து கிளம்பி வரும் பயங்கரவாதத்தையும் தோற்கடிப்பதற்கு முன்பு உள்நாட்டில் இந்தியா ஒரு யுத்தத்தை முடித்தாக வேண்டியிருக்கிறது. இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை காசு வாங்கிக்கொண்டு அனுமதிக்கும் சுங்கத் துறை அதிகாரிகள், கடலோரக் காவல் படையினர், நிழல் உலக நெட்வொர்க்கை உடைக்க, இந்திய சமூகத்திலிருந்து ஊழலை ஒழிக்க ஐ.நாவின் அனுமதியைக் கோர வேண்டியதில்லை. இந்தியாவின் ராணுவத்திலும் போலீஸிலும் ஊடுருவியிருக்கும் லஞ்சப் புற்றுநோயை அகற்ற ஆயுதங்கள் தேவையில்லை, போர் தேவையில்லை. இந்தியாவின் நிர்வாக இயந்திரம் விழிப்புடனும் நேர்மையாகவும் வீரியத்துடனும் இருந்திருந்தால் இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்களில் கணிசமானவற்றைத் தடுத்திருக்கலாம். மும்பை மீது தாக்குதல் தொடுக்க வந்தவர்கள் கடலோரக் காவல் படையினரிடம் சிக்கியிருந்தால்கூட 400 டாலர் லஞ்சம் கொடுத்து, மற்ற நிழலுலகக் கடத்தல்காரர்கள் போலவே மும்பைக்குள் நுழைந்திருப்பார்கள். 1993இல் லஞ்சம் கொடுத்துதான் மும்பை தொடர் குண்டு வெடிப்பிற்கான ஆர்.டி.எக்ஸ் கடத்திக் கொண்டு வரப்பட்டது. அதனால் பாகிஸ்தானை நோக்கி மட்டுமே எதிர்ப்பை நிலைநிறுத்துவது அரசியல்வாதிகளுக்கும் ஊழல் அதிகார வர்க்கத்திற்கும் மட்டுமே சாதகமாகச் செல்லும். இன்னொரு தேசத்தின் சீரழிவு அண்டை நாடுகளுக்கும் பரவுவதைத் தடுப்பதில் ராணுவ வழி பயனற்றது என்பதற்கு அமெரிக்காவே சாட்சி. ஈராக், ஆப்கானிஸ்தான் படையெடுப்பு மூலம் தனக்கு எதிரான இஸ்லாமிய உலகின் வெறுப்பை அமெரிக்கா இன்னும் ஆழமாக்கியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய உலகிற்கு இருப்பது வெறுப்பு அல்ல, சந்தேகம். அமெரிக்க சார்பு குறித்த சந்தேகம்.

இந்துத்துவாவை நியாயப்படுத்துவதற்கு காவிப் படைகளால் அதிகம் பயன்படுத்தப்படும் ஆய்வாளர் கான்ராத் எல்ஸ்ட் (Koenraad Elst) இஸ்லாம் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார். முஸ்லிம் அல்லாதோர் மட்டுமின்றி, முஸ்லிம் மதத்திற்குள்ளேயே உள்ள பிரிவுகள் வன்முறை மூலம் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. சிரியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கொன்று குவிக்கப்பட்டது இன்றும் அதன் தொடர்ச்சியாக இருக்கிறது. முகமது நபிகளின் காலத்திலேயே மாற்று கருத்து, விமர்சனம் கொண்டிருந்தவர்கள் கொல்லப்பட்ட, மரண தண்டனை தரப்பட்ட முன்னுதாரணம் உண்டு என்றெல்லாம் சொல்கிறார் அவர். "அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் செய்த அநியாயத்தால் செர்பியர்களும்கூட பாதிக்கப்பட்டார்கள். எனினும் பழிவாங்கல் உணர்வும் அதற்கான வழிமுறைகளும் இஸ்லாமில்தான் சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது.  குரானிலேயே மாற்று நம்பிக்கை கொண்டோர்களை எதிரியாக பாவிப்பது, அவர்கள் மீது போர் தொடுப்பது பற்றிய நிறைய குறிப்புகள் உள்ளன" என்கிறார் அவர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததை நிகழ் காலத்தின் அளவுகோல்களின்படி மதிப்பிடுவது சரியான வழி அல்ல. இஸ்லாம் மீது சுமத்தப்படும் பல குற்றச்சாட்டுகள் கிட்டத்தட்ட அதே போன்ற பழமை கொண்ட கிறிஸ்தவத்திலும் இருந்தது உண்டு. இயேசுவின் பெயரால், கிறிஸ்தவத்தின் பெயரால் மாற்று நம்பிக்கை கொண்டவர்களை எரித்தும் (burning at stake), பிற கொடூரமான வழிகளிலும் கொன்ற கிறிஸ்தவ சபையின் (சர்ச்) வரலாற்றை மறக்க முடியாது. எனினும் நவீனத்துவத்தின் வருகையுடன் தனது காலத்திற்கு ஒவ்வாத யூத எதிர்ப்பு, மாற்று நம்பிக்கையாளர்கள் மீது வன்முறையை ஏவி விடுவது போன்ற அம்சங்களை கிறிஸ்தவம் உதறியது. இந்து மதத்தில் ஜாதி இன்னும் முழுமையாக ஒழியவில்லை என்றாலும் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட சிறப்பாக முன்னேறியுள்ளது.  வருணாசிரம தத்துவம் நிராகரிப்பட்டுவிட்ட நிலையில், இந்து மதத்தில் அதிகாரபூர்வமாக தீண்டாமை தடை செய்யப்பட்டுவிட்டது. எல்லா சிந்தனைகள், தத்துவங்கள், மதங்களிலும் குறைகள் உண்டு. காலப் போக்கில் அவற்றை எவ்வாறு களைகிறோம், அவற்றுக்கு எவ்வாறு மறுபார்வை தருகிறோம், காலத்தின் வளர்ச்சிக்கேற்ப புது ரத்தம் பாய்ச்சுகிறோம் என்பதுதான் மறுமலர்ச்சி. இஸ்லாமில் இத்தகைய மறுமலர்ச்சி ஏன் நிகழவில்லை என்பதுதான் கேள்வி. சூபியிசம் போன்ற முயற்சிகள் ஒழிக்கப்பட்டன அல்லது பின்னுக்குத் தள்ளப்பட்டன.

பிற அத்தனை நம்பிக்கைகளையும் நிராகரிப்பதில், அவற்றை அழித் தொழிக்க முற்படுவதில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒன்றுதான். இஸ்லாமியர்களின் உம்மத் கொள்கையை ஒத்த சிந்தனை கிறிஸ்தவ மதத்திலும் உண்டு. ஆரம்ப காலத்தில்  கிறிஸ்தவம் ரோமப் பேரரசு முதலிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வன்முறை வழியில் உலகையே கிறிஸ்தவ பூமியாக மாற்ற முயற்சித்தது. பிற்பாடு வன்முறையை மட்டும் தவிர்த்து விட்டு இன்று வரை சமூக சேவை, நிதியுதவி போன்றவற்றைக் கருவியாகப் பயன்படுத்தி 'சாத்வீக' மான வழிகளில் உலகை கிறிஸ்தவமயமாக்கும் காரியங்களை செய்து வருகிறது.  இன்றைய மத்திய கிழக்குப் பகுதிகளில் உதித்த இந்த இரண்டு மதங்களின் வம்சாவளிகளில் கிறிஸ்தவர்கள் மேற்கு நோக்கிச் சென்று ஐரோப்பாவில் நவீனத்துவத்தின் உச்சத்தைத் தொட்டார்கள். மறுமலர்ச்சியின் வெளிச்சத்தில் பிறந்த ஐரோப்பிய நவீனத்துவம் உலகிற்கே முதல் முறையாக மதசார்பின்மை என்ற தத்துவத்தை அறிமுகம் செய்கின்றன. அறிவியல் மற்றும் அதன் நவீனக் கண்டுபிடிப்புகள் புது  வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றன. அதன் வெளிப்பாடாக அரசுக்கும் மதத்திற்குமான பாதைகள் தெளிவாகப் பிரிக்கப்படுகிறது. மதசார்பின்மை பிறக்கிறது. மாற்று நம்பிக்கைகளைக் கொண்ட லட்சக்கணக்கானோரை உயிருடன் எரித்தும் பிற குரூரமான வகைகளிலும் கொன்ற ஐரோப்பியர்கள் மதத்தில் இருந்த நவீன யுகத்திற்குப் பொருந்தாத விஷயங்களிலிருந்து விடுபடத் தொடங்கியது அந்தக் காலக் கட்டத்தில்தான். ஆனால் துரதிருஷ்டவசமாக மத்திய கிழக்குப் பகுதியில் பிறந்து, கிழக்கு நோக்கி நகர்ந்த கிறிஸ்தவர்களின் சகோதரர்களான முஸ்லிம்களுக்கு மதசார்பின்மை போன்ற நவீனத்துவத்தின் வெளிச்சம் ஏதும் கிடைக்கவில்லை. அறிவியல், தொழில் நுட்பம் மெல்ல அந்தப் பகுதிகளில் பரவினாலும் நவீன தரிசனங்கள் இல்லாத நிலையில் அவை சமூகத்தின்  மறுமலர்ச்சிக்கு  வித்திட வில்லை. மாறாக அந்தச் சமூகங்கள் இன்னும் மதத்தின் பிடியிலும் மத குருமார்கள் பிடியிலும் இருப்பது உலகிற்கே பெரிய அச்சுறுத்தலாகி வருகிறது. மன்னருக்கு அருகில் அரியணை போட்டு அமர்ந்துகொண்டிருந்த கிறிஸ்தவ சபை (Church) வரலாற்றில் எவ்வளவு கொடுமைகள் இழைத்திருக்கிறது என்று பார்க்கும் போது மதத்தை எந்த நாகரிகம் ஒரு கட்டுக்குள்  வைத்திருக்கிறதோ அந்த நாகரிகம் தான் நவீனத்துவம் மிக்கது, மனிதாபிமானம்  மிக்கது என்று உணர முடிகிறது.

இன்று இஸ்லாமிய உலகம் மத குருமார்களின் பிடியில் இருப்பதால் பாதிக்கப்படுவது இந்தியா மட்டுமல்ல. இஸ்லாம் சமூகத்தில் இருக்கும் பெண்களும் ஏழைகளும் அடித்தட்டு மக்களும் இனச் சிறுபான்மையினரும்தான். பாகிஸ்தானின் 98 சதவீத வளங்கள் அதன் 2 சதவீத ஜனத்தொகையிடம் இருக்கிறது என்று நினைத்துப் பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த 98 சதவீத வறுமைதான், ஒடுக்குதல்தான் மத குருமார்களின் வேட்டைக் களம். அந்த வேட்டைக் களங்கள் இல்லாமல் போகும் வரை இந்தியாவோ, அமெரிக்காவோ ஏதாவது ஒரு தேசம் மத குருமார்களின் ரத்த வேட்கைக்கு பலியாகிக்கொண்டே இருக்கும். அமெரிக்கா தனது உள் நாட்டு எல்லையில் செய்திருப்பது போல உளவு, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற நமது தேசத்தின் அரண்களை பலப்படுத்திக் கொள்ளும் தற்காப்புதான் பயங்கரவாதத்தைச் சமாளிக்க முதல் வழி. பாகிஸ்தானின் ஏழ்மையும் மத குருமார்களின் ஆதிக்கமும் தீரும் வரை பயங்கரவாதத்தின் வேர்களை அழிக்க முடியாது. இந்தியாவில்கூட ஒப்பீட்டளவில் கல்வியிலும் வாழ்க்கைத் தரத்திலும் முஸ்லிம்கள் பின்தங்கியிருப்பது மத குருமார்களுக்கு மிகப்பெரிய வேட்டைக் களம்.

ஐரோப்பாவில் நிகழ்ந்தது போல இந்தியாவில் மதசார்பின்மை என்ற தத்துவம் இயல்பாகப் பிறக்கவில்லை. இது ஐரோப்பிய மதசார்பின்மையின் கல். அதனால்தான் இந்தியாவில் மதசார்பின்மை பேருக்கு மட்டுமே இருக்கிறது. மதசார்பின்மையின் ரட்சகன் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் காங்கிரஸ்கூட அதை முஸ்லிம் ஓட்டுகளை ஈர்ப்பதற்கான கருவியாக மாற்றிவிட்டது. மதசார்பின்மை பிம்பத்திற்கு போட்டி போடும் மற்றக் கட்சிகளின் நிலையும் இதுதான். மதசார்பின்மை என்ற தத்துவம் இங்கு தோற்றுவிட்டது. காங்கிரசே மென் இந்துத்துவாவைப் பின்பற்றத் தொடங்கிவிட்டது. ஒரு வகையில் இந்திய மதசார்பின்மையின் கோளாறுதான் பி.ஜே.பியின் எழுச்சிக்கு உதவியது. 1980ளிலும் 90களிலும் முஸ்லிம் அரசியல் இயக்கங்கள் சூடு பிடிக்கத் தொடங்குகின்றன. அதைப் பயன்படுத்திக்கொண்டு இந்து பெரும்பான்மையினர் மத்தியில் இஸ்லாமியர்களின் ‘ஆதிக்கம்’ குறித்த பயங்களை உண்டாக்கி அரசியல் லாபத்தை ஈட்டியது பி.ஜே.பி. முஸ்லிம்களின் ஜனத் தொகை விகிதம் அதிகம் இருந்ததை வைத்து, இந்துக்களை இந்தியாவில் சிறுபான்மையினர் ஆக்கிவிடுவார்கள்  என்பது போன்ற மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் உருவாக்கப்பட்டது. அதை இன்னும் திருகிவிட வரலாற்றைத் திரித்தும் மிகைப்படுத்தியும் கூறப்பட்டது. பழைய தவறுகளையும் களைகிறோம் என்ற அபத்தமான வாதங்கள் வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

ஒரு எளிமையான உண்மை பி.ஜே.பியின் ஆதரவாளர்களுக்குப் புரியவில்லை. முன்பு கோவில் இருந்த இடத்தில், கோவிலை இடித்துத் தான் மசூதி கட்டினார்கள் என்று வைத்துக்கொண்டால்கூட, பழைய தவறுகளை சரி செய்வது என்பது எவ்வளவு ஆபத்தான போக்கு? 2,000த்திற்கு மேற்பட்ட ஆண்டுகளாகத் தங்களுக்கு இழைக்கப்பட்ட தவறுகளுக்காக, தீண்டாமைக் கொடுமைக்காக இன்றைய உயர் சாதியினரை, பிராமணர்களை அழித்தொழிக்க வேண்டும் அல்லது தண்டிக்க வேண்டும் என்று தலித்துகள் சொன்னால் என்னவாகும்? ஒட்டுமொத்த பி.ஜே.பியின் தலைமையும் மலம் அள்ளும் வேலைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத சக்திகளும் பழைய தவறுகளைத் தான் சரி செய்கிறார்கள். இந்திய பிரிவினை சமயத்தில் இந்திய  எல்லையிலிருந்து பாகிஸ்தானை நோக்கிச் சென்ற முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். அதில் தப்பிப் பிழைத்த ஒரு தலைமுறையே இந்திய வெறுப்பைக் கொண்டிருக்கிறது. லஷ்கர் அமைப்பின் தலைவர் அவ்வாறு பிரிவினை வடுக்களைச் சுமக்கும் ஒரு முன்னாள் இந்தியர்தான். பாபர் மசூதியை இடித்தது, பி.ஜே.பிகாரர்கள் சொல்வது போல சரி என்றால், பழைய தவறை சரி செய்யும் விதமாக பாகிஸ்தானில் வசிக்கும் பிரிவினை வடு கொண்ட முஸ்லிம்கள் இந்தியர்களைக் கொல்ல அனுமதிக்கலாமா? அதே பிரிவினை காலத்தில் பாகிஸ்தான்  கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் வாழ்ந்த இந்துக்கள் சாரை சாரையாக இந்திய எல்லைக்குத் திரும்பிய போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். அதில் தப்பிப் பிழைத்த தலைமுறையைச் சேர்ந்தவர்தான் எல்.கே. அத்வானி. இவருக்கும் பாகிஸ்தான், முஸ்லிம் என்றால் வெறுப்பு.  இந்தியாவிலுள்ள முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் அவரின் செயல்திட்டத்திற்கு  பதில் அவருக்கு பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களைக் கொல்ல அனுமதி கொடுக்கலாம். நினைத்துப் பாருங்கள். இந்திய-பாகிஸ்தான் இடையில் இருக்கும் கணிசமான வெறுப்புக்கு பிரிவினை காலத்தில் அங்கும் இங்கும் பிரிந்து போனவர்களே பிரதான காரணம். ஒரு பிரிவினையே இவ்வாறு வரலாற்றுத் தவறாக நம் முன் நிற்கிறது. ஆனால் இப்போது இந்தியாவில் இருக்கும் பல கோடி முஸ்லிம்களை மீண்டும் கொல்லத் துடிக்கும் பி.ஜே.பி சமூகப் பிரிவினைகளை விரும்புகிறது. தனது கையாலேயே தனது கண்களைக் குத்த வைக்க முயல்கிறது பி.ஜே.பி.

இந்த உலகில் இந்தியா ஒரு தனித்துவமான பிரதேசம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பிரதேசத்திற்குள் மிகக் கொடிய எண்ணத் தோடு வந்தவர்கள்கூட இந்த வானவில்லின் ஒரு நிறமாக தங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இன்று இந்தியன் என்று கூறிக்கொள்பவர்களுக்கும் ஓடும் மரபணுவில் எந்தெந்த இனங்கள், எந்தெந்தக் காலத்தில் கலந்தன என்று கண்டு பிடிப்பது மிகவும் குழப்பமான ஆய்வாக இருக்கும். இந்தியக் கலை, கலாச்சாரத்தில் எது, எதன் தாக்கம் எனத் தெளிவாகக் கூற முடியாத படி பல்வேறு தாக்கங்களும் பாதிப்புகளும் மருவி வந்திருக்கின்றன. இந்தியாவைப் பற்றி ஆய்வு செய்ய வரும் வெளிநாட்டினர் மிகவும் குழம்பிப் போவதில் ஆச்சரியமில்லை. இவ்வளவு பன்மைத்தன்மைமிக்க ஒரு தேசம் தன் மீதான பயங்கரவாத சவாலையும் அதே போன்ற புரிந்துகொள்ள முடியாத, எனினும் வலுவான விதத்தில் எதிர்கொள்ளும் என்று நம்பலாம். 1990களில் பி.ஜே.பியின் எழுச்சியோடு இந்தியா பாசிசப் பாதையில் செல்வதாக மேற்கத்திய பத்திரிகைகள் எழுதித் தள்ளின. எனினும் பி.ஜே.பி ஆட்சியில் அமர்ந்த பிறகு தங்கள் இந்துத்துவாவைச் சுருட்டி வைக்க வேண்டிய அளவுக்கு இந்தியா என்ற தேசத்தின் மைய நீரோட்டம் அமைந்திருந்தது. அது மட்டுமின்றி எல்லோரும் நினைத்ததற்கு  மாறாக  இந்திய  மக்கள் பி.ஜே.பிக்கு ஒரு குட்டு வைத்துவிட்டார்கள், 2004 பொதுத் தேர்தலிலும் சமீபத்திய ஐந்து மாநிலத் தேர்தல்களிலும். இந்தியா போன்ற பன்மைத்தன்மை மிக்க தேசத்தில் இந்துத்துவாவை மட்டுமே பயன்படுத்துவதா, அதை மென்மையாக்கிவிட்டு வளர்ச்சியை முன்வைத்து பிரச்சாரம் செய்வதா, பயங்கரவாதத்தை தேர்தல் பிரச்சினையாக வைப்பதா, வேண்டாமா என பி.ஜே.பி குழப்பத்தில் பிய்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய மைய நீரோட்டத்தை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது என்ற அந்தச் செய்தி பி.ஜே.பிக்கு மட்டுமல்ல, பயங்கரவாதத்திற்கும் விடப்பட்ட சவால். பாகிஸ்தான் மீது கடுமையாக நடந்துகொள்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது மூலம், அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டு வாங்கலாம் என காங்கிரஸ் கணக்குப் போடுகிறது. இதோ போரில் இறங்கப் போகிறோம், பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப் போகிறோம் என்று நாளொரு பூச்சாண்டியைக் காட்டி வருகிறது. போலி தேசியவாதத்தில் கொளுந்து விட்டெரியும் ஊடகங்களும் இந்தியா ஒரு பலவீனமான தேசம் என்ற தவறான வாதத்தையே முன்னிறுத்தி, போருக்குப் போகச் சொல்லி வேடிக்கை பார்க்கிறது. போர் நடந்தால் டி.ஆர்.பி ரேட்டிங் விண்ணைத் தொடும் என்பது அவற்றுக்குத் தெரியும்.

ஊடகங்கள் நம் மனதில் விதைக்கும் எண்ணத்திற்கு மாறாக இந்தியாவின் அரவணைத்துச் செல்லும் தன்மை என்பது பலவீனமல்ல. ஒரு கங்கையைப் போல, பிரவாகமெடுத்து ஓடும் நதி என இந்தியா என்ற பிரதேசத்தை, அதன் கலை, கலாச்சாரத்தைச் சொல்லலாம். கங்கையின் அசுத்தம் போல நமது அரசியலின், அதிகார வர்க்கத்தின் அசுத்தம் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலுக்கு இந்தப் பிரதேசத்தை எளிமையான இலக்காக்கியிருக்கிறது. இந்த நதியில், மூலத்தில் கிளம்பும் அசுத்தத்தை இல்லாவிட்டாலும் வழியில் மனிதர்களால் நிகழும் அசுத்தத்தை சுத்தப்படுத்துவது சாத்தியமே. இவ்வளவு பன்மைத்தன்மை கொண்ட சமூகம் பலவித ஆற்றல்களின் பொக்கிஷம். அந்த ஆற்றல்களை சரியாகப் பயன்படுத்தும் போது பயங்கரவாதம் போன்ற பிரச்சினையை எதிர்கொள்வது, இந்தியப்பூர்வமான வழியியிலேயே எதிர்கொள்வது சிரமமான விஷயமல்ல. இந்த கங்கையின் சுத்தப்படுத்தல் நமது அரசியல் வர்க்கத்தின், அதிகார வர்க்கத்தின் நாற்றாங்கால்களான சமூகத்திலிருந்து தொடங்க வேண்டும். எனினும் கல்வியை சுத்தம் செய்யாமல் சமூகத்தை சுத்தம் செய்ய முடியாது. நமது கல்வி முறையோ பணத்தாசையையும் வெற்றி பெறும் வெறியையும் தூண்டும் கருவியாகவும் சில சமயங்களில் பயங்கரவாதிகளையும் கூட உருவாக்கும் கருவியாகவும் இருக்கிறது. மதிப்பீடுகளைக் கற்றுத் தராத இந்தக் கல்வியிலிருந்து உருவாகி வரும் நபர் ஒரு மோசமான அரசியல்வாதியாக, லஞ்சம் வாங்கிக்கொண்டு பயங்கரவாதிகளை நாட்டின் உள்ளே அனுப்பும் அதிகாரிகளாக, ஏன் பயங்கரவாதியாகக்கூட இருப்பதில் ஆச்சரியமே இல்லை. 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com