உயிர்மை - June
 
தலையங்கம் : அம்பேத்கர் அடையாளமற்றவர்களின் அடையாளம்
- மனுஷ்ய புத்திரன்
மாவோயிஸ்ட்டுகளுக்கு பணம் தருவது யார்? சித்தாந்தங்களும் ரகசியங்களும்
- அ.முத்துக்கிருஷ்ணன்
மிக்க நலமுடைய மரங்கள்
- சு.தியடோர் பாஸ்கரன்
பறவைக்கோணம் 9 : பார்வை கடந்த பாடல்
- எஸ்.ராமகிருஷ்ணன்
பொய் சொல்லும் கற்கள்
- சு.கி.ஜெயகரன்
புரூஸ் லீ : சண்டையிடாத சண்டை வீரன்
- ஆர்.அபிலாஷ்
மைக்கேல் ஜாக்ஸன் இல்லாத மூன்று ஆண்டுகள்
- ஷாஜி
மலையாளத்தின் முதல் பேசும் படத்தின் கதை
- என்.டி.தினகர்
தமிழ் சினிமாவின் மயக்கம்
- கௌதம சித்தார்த்தன்
கூடங்குளம் : முடிவற்ற போராட்டம்
- அ.முத்துக்கிருஷ்ணன்
ஐரோப்பியப் பெண்களை அழவைக்கும் சிலிக்கன் மார்பகம்
- இளைய அப்துல்லாஹ்
சிறுகதை : வாசனை
- கே.என்.செந்தில்
கவிதைகள்
- மனுஷ்ய புத்திரன்
எரியும் கண்ணீர்
- ஷாஜி
சுஜாதா விருதுகள்
- -
கடிதங்கள்
- -
click here
கூடங்குளம் : முடிவற்ற போராட்டம்
அ.முத்துக்கிருஷ்ணன்

ஜைத்தாபூர் போராட்டத்தின் முதல் களபலி தப்ரேஜ் சாயேகர். அவனை அரசாங்கத் தோட்டா பதம் பார்த்து ஒரு வருடம் உருண்டோடி விட்டது. நினைவுகூரும் வகையில் ஆயிரம் பேர் நாதே ஜைத்தாபூர் சதுக்கத்தில் கூடினார்கள். இந்த முறை கூடிய கூட்டம்  போராட்டத்தை இன்னும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் உத்வேகத்தை அளித்தது. அன்று நாதே ஜைத்தாபூர் சதுக்கத்தின் பெயர் தப்ரேஜ் சாயேகர் சதுக்கமாக மாற்றப்பட்டது. இதே ஜைத்தாபூரில் உதயகுமார், நீரஜ் ஜெயின், சுரேந்திர கடேகர் என இந்தியாவின் முன்னணி செயல்பாட்டாளர்கள், விஞ்ஞானிகளுடன் நானும்  சில தினங்கள் தங்கியிருந்தேன். எத்தனை அழகான பகுதி இது. கொஞ்சம் மேலே சென்றால் ராய்கட், கொஞ்சம் கீழே சென்றால் கோவா. இந்தப் பகுதியின் அழகைத் தரிசிக்க வேண்டும் என்றால் நீங்கள் கொங்கண் ரயில்வேயின் ஏதேனும் ஒரு வழித்தடத்தில் பயணிக்க வேண்டும். தென்னை மரங்கள், அல்போன்சா மாமரங்கள் என இயற்கையின் சொந்த பூமி இதுதான். இந்த ஜைத்தாபூர் அணு உலையை மூடும் முன் இனி எத்தனை மனித உயிர்களை அது குடிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

கூடங்குளம் அணு உலையும் அணு உலை எதிர்ப்பாளர்களும் பல வகைகளில் உலக சாதனை படைத்து வருகிறார்கள். இது நல்ல செய்திதானே.

உலகம் முழுவதும் உள்ள அணு உலைகள் 3-4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றது. நாம் கட்டும் வீட்டை ஒரு கட்டிடப் பொறியாளர் 6 மாதங்களில் கட்டிவிடுகிறார். ஆனால் அவர் வீட்டை 4 வருடங்கள் கட்டிக் கொண்டேயிருந்தால் உடனே அவரை நண்பர்கள் உறவினர்களின் உதவியுடன் முதலில் நிலையில் பிடித்துக் கட்டிவைப்போம். உலகம் முழுவதும் 3-4 ஆண்டுகளில் அணு உலைகள் கட்டி முடிக்கப்படும்போது, கூடங்குளத்தில் மட்டும்தான் உலகின் மிக காலதாமதமான அணு உலை கட்டப்பட்டு வருகிறது. 2001ல் தொடங்கினார்கள். இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. எத்தனை ஆண்டுகளாகிவிட்டது என்பதை நீங்களே கணக்கு பாருங்கள். போராட்டம் கடந்த 8 மாதங்களாகத்தான் நடைபெறுகிறது. இத்தனை வருடங்களாக எந்த அணு உலையும் உலகில் எங்கும் கட்டப்படவில்லை. அதனால் நாம் முதலில் இதனை கின்னஸ் சாதனைக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

அடுத்து கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது செப்டம்பர் 9, 2011 முதல் டிசம்பர் 29, 2011 தேதி வரை தமிழக முதல்வர் நான் உங்களில் ஒருத்தி என்று தூத்துக்குடியில் அறிவித்து, போராட்டக் காரர்களின் தோழியாக புன்சிரிப்புடன் வலம் வந்த காலத்தில் மட்டும் அறவழியில் தங்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்டிய போராட்டக்காரர்கள் மீது அரசாங்கம் ஒரு அதிர்ச்சியான பம்பர் பரிசு மழையைப் பொழிந்தது. அந்தப் பரிசின் விபரங்களை கொல்கத்தாவில் உள்ள Statesman School of Print Journalism  என்ற நிறுவனத்தின் இயக்குநர் சாம் ராஜப்பா தலைமையிலான குழு சமீபத்தில் அறிவித்தது. 107 முதல் தகவல் அறிக்கைகள், 55795 நபர்கள் மற்றும் “பலரின்” மீதும் பல வழக்குகள், 6800 பேர் மீது “தேசத்துரோகம்” மற்றும் “தேசத்திற்கு எதிராகப் போர் தொடுத்தல்” வழக்குகள். இது பிரித்தானியர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் கூட ஒரே ஊரில் உள்ளவர்கள் மீது இத்தனை வழக்குகள் போட்டதில்லை. பொதுவாக, அரசியல் வெளியில் ஒரு வழக்குப் போட்டாலே அப்படியே அரசியலை விட்டு வேறு பிழைப்பு தேடி ஓடும் நகர மனிதர்களை மனதில் வைத்துக் கொண்டுதான் அரசு இத்தனை வழக்குகளைப் போட்டுள்ளது. ஆனால் வழக்குகள் அந்த மக்களின் மன உறுதியைக் கிஞ்சித்தும் அசைக்கவில்லை. இருப்பினும் இந்த 55795,6800,107 என்கிற எண்களை நாம் கின்னஸ் சாதனைக்குப் பரிந்துரைக்க வேண்டும். ஒரிசாவில் போஸ்கோ உருக்காலைக்கு எதிரான போராட்டம் நடந்து வருகிறது. அங்குள்ள 800 பேர் மீது தலா 200 வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஜைத்தாபூர் வழக்குகளுக்கு பஞ்சமில்லை. ஜைத்தாபூட் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டால் உன்மீது எத்தனை வழக்குகள் என்றுதான் முதலில் விசாரிப்பார்களாம். ராணுவத் தளபதிகளின் தோள் பட்டையில் உள்ள நட்சத்திரங்களைப் போல்தான் மக்களுக்காகப் போராடுபவர்கள்மீது இந்தப் பொய் வழக்குகள்.

முதலில் உதயகுமார் மனைவி மீரா நடத்தும் பள்ளிக்கு சில பொறுக்கிகளைப் பாதுகாப்புடன் அனுப்பினார்கள். ஆனால் அந்தப் பள்ளியில் உள்ள மாணவர்களின் பெற்றோர் உறுதியுடன் இருந்தவுடன் அடுத்து உதயகுமார் மீதான அவதூறு போரின் Episode-  230ஐத் தயார் செய்தது மத்திய அரசு. அடுத்து உதயகுமார் அவர்களின் கடவுச்சீட்டு முடக்கம். இதுதான் உச்சபட்ச காமெடி. நாட்டில் ஆயிரம் கோடி, லட்சம் கோடி விழுங்கி ஏப்பம் விட்டவர் எல்லாம் நாடாளு மன்றத்துக்குள் அமர்ந்து கொண்டு உல்லாசமாக வாழ்கிறார். அவருக்கு எல்லாம் இந்த அரசுகள் கறுப்புப் பூனைப் படை பாதுகாப்பு அளிக்கிறது. ஆனால் தன் எல்லா விபரங்களையும் மிக அப்பட்டமாக மக்களுடன் பகிர்ந்து ஒளிவுமறைவு இல்லாமல் வாழும் உண்மை காந்தியவாதியான உதயகுமாரின் கடவுச்சீட்டு முடக்கப்படுமாம். உலகின் பல பல்கலைக்கழகங்களில் அமைதிசார் படிப்புகளுக்குப் பாடம் நடத்தச் செல்லும் அவர்மீது தன் வீராப்பைக் காட்டுகிறது இந்தப் போலி வல்லரசு.

ஏப்ரல் 11 அன்று ஏற்பட்ட பூகம்பமும் அதனைத் தொடர்ந்து உலகின் பெரும் பகுதி நாடுகளில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையையும் யாராலும் எளிதில் மறக்க இயலாது. இந்த சுனாமி எச்சரிக்கையை உலக நாடுகள் அதிரடியாக அமல்படுத்தியது, ஆனால் இந்தியாவில் மட்டும் அது மிகவும் அலட்சியத்துடன் தான் அணுகப்பட்டது. அடுத்த நாளே இவர்களின் சடங்கியல் அறிக்கைகள் எல்லாம் நலம், சுகம் என்று வெளியானது. தர்மபுரியில் மாணவர்கள் பள்ளி மேசைகளில் இருந்து விழுந்தனர். சேலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு முழுக்க பிளந்து நின்றது. மதுரையில் பல அலுவலகங்களில் கம்ப்யூட்டர்கள் மேசையில் இருந்து விழுந்தன. சென்னையில் தி.நகரில் உள்ள மிகப்பெரும் நகைக்கடையின் சுவர் கீறல் விட்டு நின்றது.... இப்படியாக இந்த சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை எல்லாம் பூகம்பத்தால் அல்ல, இந்தியா இருக்கும் தகட்டில் இதுவெல்லாம் நடக்க இயலாது. இது எல்லாம் உதயகுமாரின் வேலைதான் என்று ஒரு அறிக்கையை மட்டும்தான் இவர்கள் இன்னும் விடவில்லை. தமிழகத்தின் மூளையை அடகு வைத்த ஒரு வாசகர் கூட்டம் இதையும் நம்பத் தயாராக உள்ளது என்பதுதான் வேதனை, சோதனை.ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, சிலி, தாய்லாந்து, மலேசியா, கொரியா, பிரேசில் என பல நாடுகளில் பூகம்பத்தின் ரிக்டர் அளவுகள் மிக அபாயகரமானதாக உள்ளன. பல எச்சரிக்கையான செய்திகளைச் சுமந்து வருகின்றன.

எனது ஆங்கிலக் கட்டுரை Indian Left and the Nuclear Hypocrisy பல இணையதளங்களில் ஒரே நேரம் வெளியானது, அது மெல்ல ஒரு உரையாடலை ஏற்படுத்தியது. கொஞ்சம் நம்பிக்கையின் ஈரக்காற்றும் இடிந்தகரை பக்கம் அடித்தது. பிரஷாந்த் பூஷணும் சுவாமி அக்னிவேஷும் இடிந்தகரை வந்தனர். அடுத்து தோழர் நல்லகண்ணு, சி.மகேந்திரன் மற்றும் தமிழக அரசியல் சூழலில் பலரும் வந்தனர். அடுத்த சில வாரங்களில் கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் வருகை தரவிருக்கிறார் என தகவல்கள் வந்தடைந்துள்ளது. ஆந்திராவில் கோவாடாவில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து உண்ணாவிரதத்தில் பங்கெடுத்து வருகிறார்கள். மார்க்சிஸ்டு கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் சுதந்திரமாக ஒரு குழுவை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார். அப்படி ஒன்றை இந்தியாவின் அணுசக்தி வாரியம் இதுவரை தனது வரலாற்றில் செய்ததே இல்லை. அவரது வார்த்தைகளின் படியே அப்படி ஒரு குழு அமைக்கப்படும் வரை அவரும் போராட முன்வர வேண்டும்.இயக்குநர் ஆர்.பி.அமுதன் அவர்களின் கதிர்வீச்சுக் கதைகள் என்கிற ஆவணப்படத்தின் மூன்றாம் தொகுதி வெளியாகியுள்ளது. நம்பிக்கைகள் பல இனியும் தொடரும்.

மே 1 மற்றும் 4 ஆம் தேதி முதல் மீண்டும் தொடர் உண்ணாவிரதம் தொடங்கியது. இந்த முறை ஏராளமான பெண்கள் இதில் பங்கு கொண்டனர். மக்களை இங்கு வரவிடாமல் தடுக்க மீண்டும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. வனத்துக்குள் மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர்களை அனுப்பிய அரசு, கூடங்குளத்தில் போராடுபவர்களை இதுவரை கண்டுகொள்ளவில்லை. வன்முறை என்றால் அரசுக்கே இஷ்டம் போலும். இதனைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பொதுவிசாரணையில் நீதிபதி ஏ.பி.ஷா, பிரஷாந்த் பூஷண் என பலரும் கூடங்குளம் பகுதி மக்கள்படும் அவலங்களைக் கேட்டு அரசாங்கத்திற்குப் பல பரிந்துரைகளை வழங்கினர். மக்கள் மீது ஜோடித்துப் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என்றார் நீதிபதி ஷா. இந்த நிலையில் அணு உலையில் ஒரு பெரும் வெடிப்பு மே 4 ஆம் தேதி நடந்தது. அங்கு ஒரு பாய்லர் வெடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் 3 வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் கூடங்குளம் அணு உலைக்கு வந்துள்ளதாகப் பத்திரிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. 'அறவழியில் போராடும் எங்களுக்கும் இந்தக் கடிதத்திற்கும் தொடர்பு ஏதும் இல்லை' என உதயகுமார் உடனே தெளிவுபடுத்தினார்.

இந்திய வரலாற்றில் 8 மாத காலம் 20,000 பேர் தொடர்ந்து கூடிப் போராடுவதும், ஒரு வன்முறை சம்பவம் கூட நடைபெறாமல் இன்னும் அவர்கள் தங்களின் ஜனநாயக உரிமையை அறவழியில் நிலைநாட்டுவதும் இந்த தேசமே பாடம் கற்க வேண்டிய, கொண்டாட வேண்டிய விஷயமே. இவர்களின் மீது போடப்பட்ட  முடைநாற்றம் அடிக்கும்  அவதூறு வழக்குகள் குறித்து இந்தியா வெங்கும் உரையாடல்கள் புயல் காற்றாய் கிளம்பியுள்ளன.

அதுசரி, நாம் என்ன செய்யலாம்?  இனி ஒரு மாதம் பள்ளி விடுமுறை காலம். இந்தப் போராட்டம் சரி என்று நினைப்பவர்கள் இந்த ஆண்டு விடுமுறையில் உங்கள் குடும்பத்துடன் இடிந்தகரை செல்லுங்கள். சில நாட்கள் தங்கிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவியுங்கள். இது உங்கள் வாழ்நாளில் மிக முக்கிய பயணமாக, நினைவாக எஞ்சி நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அணு உலையை ஆதரிப்பவர்களாக நீங்கள் இருப்பினும், இந்த மின்சார வெட்டில் வறுபடாமல் நீங்களும் உங்கள் குடும்பத்துடன் வாருங்கள். நீங்கள் தினசரி நாளிதழ்களில் படித்தது உண்மையா இல்லையா என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் வீட்டில் நீங்கள் தங்கலாம், போராட்டக்காரர்கள் சமைக்கும் உணவை உங்களுடன் பகிர்வோம், நாங்கள் எப்படி வாழுகிறோம் என்று வந்து பாருங்கள், திறந்த மனதுடன் வாருங்கள். இடிந்தகரை உங்களை வரவேற்க இருகரம் கூப்பிக் காத்திருக்கிறது.

muthusmail@gmail.com

click here

click here
click here