உயிர்மை - June
 
தலையங்கம் : அம்பேத்கர் அடையாளமற்றவர்களின் அடையாளம்
- மனுஷ்ய புத்திரன்
மாவோயிஸ்ட்டுகளுக்கு பணம் தருவது யார்? சித்தாந்தங்களும் ரகசியங்களும்
- அ.முத்துக்கிருஷ்ணன்
மிக்க நலமுடைய மரங்கள்
- சு.தியடோர் பாஸ்கரன்
பறவைக்கோணம் 9 : பார்வை கடந்த பாடல்
- எஸ்.ராமகிருஷ்ணன்
பொய் சொல்லும் கற்கள்
- சு.கி.ஜெயகரன்
புரூஸ் லீ : சண்டையிடாத சண்டை வீரன்
- ஆர்.அபிலாஷ்
மைக்கேல் ஜாக்ஸன் இல்லாத மூன்று ஆண்டுகள்
- ஷாஜி
மலையாளத்தின் முதல் பேசும் படத்தின் கதை
- என்.டி.தினகர்
தமிழ் சினிமாவின் மயக்கம்
- கௌதம சித்தார்த்தன்
கூடங்குளம் : முடிவற்ற போராட்டம்
- அ.முத்துக்கிருஷ்ணன்
ஐரோப்பியப் பெண்களை அழவைக்கும் சிலிக்கன் மார்பகம்
- இளைய அப்துல்லாஹ்
சிறுகதை : வாசனை
- கே.என்.செந்தில்
கவிதைகள்
- மனுஷ்ய புத்திரன்
எரியும் கண்ணீர்
- ஷாஜி
சுஜாதா விருதுகள்
- -
கடிதங்கள்
- -
click here
மைக்கேல் ஜாக்ஸன் இல்லாத மூன்று ஆண்டுகள்
ஷாஜி

தென்னைமரங்களுக்குமேல் காற்று சுழன்றுகொண்டிருக்கிறது. பலவிதமான பச்சைகளில் அடர்ந்த இலைக்குலைகள் படபடக்கின்றன. மாமரக்கிளைகள் அசையும்பொழுது தடதடவென விழும் நாட்டு மாம்பழங்களின் நறுமணம் குளிர்ந்த கோடைக்கால காற்றில் ஒளிந்து விளையாடுகிறது. பழங்களை வழங்கியபடியே எனது கண்முன் வானுயர்ந்து நிற்கும் இந்த மாமரத்தைப் பார்க்கும்பொழுது மைக்கேல் ஜாக்ஸன் அடிக்கடி சொன்ன அந்த 'வழங்கும் மரம்’ ஞாபகம் வருகிறது. “மரங்கள்தான் எனது இசையின் பெரும் தூண்டுதல். எனது 'வழங்கும்’ மரத்தில் ஏறி அமரும்பொழுது எனக்கு இசையும் கவிதையும் ஊற்றாகச் சுரக்கிறது. உலகை குணப்படுத்துங்கள், நீ அங்கே இருப்பாயா? கறுப்பா வெளுப்பா? பால்யகாலம் என எனது பல பாடல்களை அந்த மரத்தில் அமர்ந்துதான் நான் உருவாக்கினேன். நான் மரங்களைப் பேரன்புடன் பார்க்கிறேன். அவற்றின் பெரும் கருணை என்னைக் கண்கலங்க வைக்கிறது. எப்போதுமே அவற்றில் ஏறி அமர விரும்புகிறேன், ஒரு நிரந்தரக் குழந்தையைப்போல்.”

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு ஜூன் மாதத்தில் மைக்கேல் ஜாக்ஸன் இறந்து போனபோது அவரைப்பற்றி விகடனில் ஒரு சிறு குறிப்பைத்தவிர வேறு எதுவுமே நான் எழுதவில்லை. இதனால் எனக்கு மைக்கேல் ஜாக்ஸனையும் அவரது இசையையும் பிடிக்காது என்று எனது வாசக நண்பர்கள் பலர் முடிவெடுத்தனர். மைக்கேல் ஜாக்ஸனைப்பற்றி எங்கேயாவது குறிப்பிடும்போது ‘உங்களுக்குத்தான் அவரைப் பிடிக்காதே’ என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். 1980களில் மைக்கேல் ஜாக்ஸன் உலகப்புகழின், வெற்றியின் உச்சியில் இருந்தபோது எனக்கு அவரைப் பிடித்திருக்கவில்லை என்பது ஓர் உண்மையும் கூட! பாட்டையும் ஆட்டத்தையும் ஒரே கலையாக்கி அவர் மாற்றிய விதமும் தனது பாடல்களில் அவர் கத்துவதும் உறுமுவதும் எல்லாம் அப்போது எங்களுக்கு எரிச்சலூட்டுவதாகத்தான் இருந்தது. கேட்பதை விட பார்ப்பதற்கான ஒன்றாக்கி பாட்டை மாற்றியமைத்தவர்களின் தலைவன் அவர்தான் என்பதனால் அவர்மீது எங்களுக்கு அப்போது ஒருவகையான வெறுப்புதான் இருந்தது.

ஏன் என்றால் அப்போது நாங்கள் இசை ஒழுங்குவாதிகள்! ராக்தான் எங்களது அபிமான உலக இசை. பாப் இசையும் கேட்டு வந்தோம் ஆனால் அது நாங்கள் விதிக்கும் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்! எங்கள் மேற்கத்திய இசைக்குழுவில் நாங்கள் ஒருபோதும் மைக்கேல் ஜாக்ஸனின் பாடல்களைப் பாடியதில்லை. பாடி வெளிப்படுத்துவது மிகக் கடினமாகயிருந்தபோதிலும் அவரது பாடல்களைப் பெரும்பாலான இசைக்குழுக்கள் பாடிவந்த காலம்தான் அது. ரோலிங் ஸ்டோண்ஸ், க்வீன், ஃபில் காலின்ஸ், லயனல் ரிச்சி, போலீஸ், மார்வின் கயே போன்ற சமகாலப் பாடகர்களின் பாடல்களும், எங்களுக்குப் பிடித்தமான 50-60-70களின் பாடல்களும், மைக்கேல் ஜாக்ஸன் பாடினால் எப்படியிருக்கும் என ஏளனம் செய்து, அஹ்.. ஆய். . . ஊய்.. ஓ. . . என்று கத்திப் பாடுவதுதான் அப்போது எங்களது பொழுதுபோக்காக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவரது பெரும் உலகப்புகழும், எங்குமே அனைவருக்கும் தெரிந்தவராக அவர் இருந்ததும் எங்களுக்கு அசௌகரியமாக இருந்தது. பெருவாரியாக ரசிக்கப்படும் இசை தரமானதாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் எங்களது அப்போதைய இசைத் தூய்மைவாதத்தின் அடிப்படையே! மைக்கேல் ஜாக்ஸனின் இசைமீது இருந்த இத்தகைய முன் தீர்மானங்களினால் அதைக் கூர்ந்து கேட்க அப்போது நாங்கள் மெனக்கெடவில்லை என்பதுதான் உண்மை! ஆனால் 1985ல் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து என் கைக்கு வந்த ‘நாங்கள்தான் இவ்வுலகம், நாங்கள்தான் அதன் குழந்தைகள்’ (We are the World, We are the Children) என்கிற மைக்கேல் ஜாக்ஸன் பாடலின் உருவாக்குதல் அடங்கிய காணொளி நாடா அவரைப்பற்றியான எனது அனைத்துக் கற்பிதங்களையும் உடைத்து விட்டது.

எனக்குப் பிடித்தமான பாப் டிலன், ரே சார்லஸ், பால் சைமன், ஸ்டீவி வண்டர், பில்லி ஜோயேல் போன்ற 20 பெரும்புகழ் பாடகர்கள்தான் அப்பாடலின் முக்கிய பகுதிகளைப் பாடினர். பின்னிசை பாடிய 23 பாடகர்களும் பிரபலங்களே! ஆனால் எந்தவொரு பின்னணி இசையும் இல்லாமலும் பின்னர் பின்னணி இசையுடனும் ஒலிப்பதிவுக் கூடத்திற்குள் அப்பாடலின் பகுதிகளை மைக்கேல் ஜாக்ஸன் பாடுவதை ஒளிநாடாவில் பார்த்த நான் மலைத்துப் போனேன். மேற்சொன்ன அனைத்துப் பாடகர்களையும் விட சிறந்த பாடகர்தான் மைக்கேல் ஜாக்ஸன் என்று நிரூபிக்கும் வண்ணம் இருந்தது அவரது பாடும்முறையின் ஆழ்ந்த உணர்ச்சி வெளியீட்டுத்தன்மையும் அலாதியான சுருதி சுத்தமும். மெலிதாக நடுங்கிக்கொண்டேயிருக்கும் (Tremolo) குரலில் அவர் பாடுவதைக் கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன். இவ்வளவு அரிதான ஒரு பாடகனை இவ்வளவு காலம் கூர்ந்து கேட்காமல் இருந் தேனேயென்ற குற்றவுணர்வு என்னைத் தாக்கியது.

முன் தீர்மானங்களுக்கு இசையில் எந்தவொரு மதிப்புமில்லையென்றும் ஒரு பாடகனின், இசையமைப்பாளனின் சில பாடல்களையாவது கூர்ந்து கவனித்துக் கேட்காமல் அவ்விசையைப் பற்றியான முடிவுகளுக்கு வரக்கூடாது என்பதும் எனக்குக் கற்றுத்தந்தவர் மைக்கேல் ஜாக்ஸன்தான். அன்றிலிருந்து அவரது பாடல்களை, இசையை, இசைப்படங்களைத் தேடிப்பிடித்து கேட்டும் பார்த்தும் வருகிறேன். நான் சொந்தமாக வாங்கிய அனைத்து ஒலி - ஒளிக்கருவிகளிலு மிருந்து முதன்முதலாக ஒலித்தது மைக்கேல் ஜாக்ஸனுடைய இசைதான். அவரது அனேகமான பாடல்களின் அசல் குறுந்தகடுகள், அவரது இசைப் படங்கள், மேடைநிகழ்ச்சிகள் போன்றவற்றின் ஒளித்தகடுகள் மற்றும் நீல ஒளிக்கதிர் தகடுகள் (BlueRay Disc), அவர் எழுதினதும் அவரைப்பற்றி எழுதப்பட்டதுமான புத்தகங்கள் ஏன், ஒலித்தரத்திற்குப் பெயர்பெற்ற, கிடைக்க மிக அரிதான அவரது சில இசைத்தட்டுகளுமே (Records) கூட என்னிட மிருக்கிறது.

இருந்தும் மைக்கேல் ஜாக்ஸன் இறந்தபோது நான் அவரைப்பற்றி ஏன் எழுதவில்லை? இன்று மிகப்பிரபலமான ஒரு நபர் இறந்துபோனால் அது ஊடகங்களுக்குப் பல நாட்களுக்குப் பெரும் தீனியாக அமைகிறது. அவரைப்பற்றி எதுவுமே தெரியாத எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் பொங்கியெழுந்து இணையத்தில் கிடைக்கும் உதிரித் தகவல்களையும் பதிவிரக்கங்களையும் வைத்துக்கொண்டு அவ்விஷயத்தில் திடீர் நிபுணர்களாக மாறுகிறார்கள். கூகிள் இருக்கும் வரைக்கும் யாருமே எந்தவொரு விஷயத்திலும் இன்று நிபுணராக மாறமுடியும்! குறிப்புச் சொற்களும் (Key Words) பெயர் உதிர்ப்பும் மட்டும் எங்கிருந்தாவது கிடைத்தால் போதும்! மைக்கேல் ஜாக்ஸன் இறந்தபோது இங்கு அவரைப்பற்றி எழுதப்பட்ட பெரும்பாலான பதிவுகள் இவ்வகையே!

அதற்கிடையில் ஆழ்ந்த புரிதலுடன் அவரைப்பற்றி ஏதாவது எழுதப்பட்டாலும் கூட அது இவ்வகையில் பத்துடன் பதினொன்றாகத்தான் முடியும். ஆதலால்தான் வெகுஜன இசையைப் பற்றியும் இசைத்தொழிலைப் பற்றியுமான எனது புரிதல்களையே மாற்றியமைத்த மைக்கேல் ஜாக்ஸனைக்குறித்து நான் அப்போது எழுதவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது இசையைக் கேட்கும்பொழுதும் அவரைப்பற்றி யோசிக்கும்பொழுதும் இனம் புரியாத ஒரு வலியில் என் மனம் அவதிப்படுவதுண்டு. நான் ஒரு காலத்தில் அவரது இசையை எவ்வாறு தவறாக அடையாளம் கண்டேனோ அதைப்போலத்தான் அவரது வாழ்க்கையையும் இசையையும் பலர் இன்றும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

பாடும்முறையின் உயர்தரத்தை மதிப்பிடும் விற்பன்னர்களால் உலக வெகுஜன இசையின் ஆகச்சிறந்த பாடகர் என்று கொண்டாடப்படுபவர் மைக்கேல் ஜாக்ஸன். பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடனக்காரர், நடன இயக்குநர், இசை தயாரிப்பாளர் என இசைத்தொழிலில் அவர் அடைந்த உச்சங்களுக்கு இணையாக வேறு எதுவுமில்லை. உலகின் மிக அதிகமாக விற்பனையான இசைத்தொகுப்பு, உலகின் மிகப்பெரிய வெற்றிபெற்ற இசைப்பயணங்கள், உலகின் மிக அதிகமான மக்கள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சிகள், உலகின் மிக அதிகமாகப் பார்க்கப்பட்ட இசைப்படங்கள், விளம்பரத்தில் நடிப்பதற்கு உலகில் மிக அதிகமான பணத்தைப் பெற்றவர், இசைத் தொழிலிலிருந்து உலகில் மிக அதிகமான பணத்தை ஈட்டியவர் என 23 கின்னஸ் சாதனைகள் அவர் பேரில் இருக்கிறது! ஆனால் மனிதநேயம் மற்றும் சூழலியல் சார்ந்த மிக அதிகமான அமைப்புகளுடன் சேர்ந்தியங்கி அவற்றிற்குப் பெரும் தொகைகளை நன்கொடையாக வழங்கியவர் என்கிற சாதனையும் இதில் அடக்கம் என்பது முக்கியமானது!

எளிதானதும் அரிதானதுமான வரிகள், செவ்வியல் இசையிலிருந்து தொடங்கி எண்ணற்ற இசை வகைமைகளை உள்ளடக்கிய இசையமைப்பு முறை, கருவி இசையில் மிகப்புதுமையான விஷயங்களை மட்டுமே வழங்குவதற்கான விடா முயற்சி, மிகச்சிறந்த ஒலித்தரத்திற்கான தொடர்ந்த தேடல் போன்றவற்றை எப்போதுமே கடைப்பிடித்த மைக்கேல் ஜாக்ஸனுக்கு முறையான இசைப்பயிற்சி எதுவுமே இருந்ததில்லை! நடனத்திலும் அவருக்கு முறையான எந்தவொரு பயிற்சியுமே கிடைத்ததில்லை. முறையான கல்வி அறிவும் அவருக்கு வாய்க்கவில்லை. இசைக்குறிப்புகளை எழுதவோ படிக்கவோ அவரால் ஒருபோதும் முடிந்ததில்லை. தன் மனதில் உருவெடுக்கும் இசைப்பகுதிகளை இசைக்கலைஞர்களுக்கு வாயால் பாடிக்காட்டித்தான் அவர் தனது அனைத்து அதிசயப்பாடல்களையும் உருவாக்கினார்! யாரிடமிருந்தும் நேரடியாக கற்றுக் கொள்ளாத அந்த இசையையும் நடனத்தையும் வைத்துக்கொண்டுதான் மைக்கேல் ஜாக்ஸன் கலையுலகின் அனைத்து உச்சங்களையும் தொட்டார் என்பது எவ்வளவு அதிசயமானது! நான் அடிக்கடி சொல்வதுபோல் இசைப்பயிற்சி அல்ல, இசை உணர்ச்சி.

ஒருமுறை கேட்டால் ஒருபோதும் மனதை விட்டு நீங்காத மைக்கேல் ஜாக்ஸனின் குரல், அடிப்படையில் ஆண்குரல் தன்மைகளை விட பெண்குரலின் தன்மைகள் கொண்டது. மென்மையான உச்ச ஸ்தாயிக்குரல் அது. ஆனால் நான்கு ஸ்தாயிகளிலும் அனாயாசமாக ஏறி இறங்கும் வல்லமை அக்குரலுக்கு இருந்தது. துளிகூட சுருதி பிசகாமல் சுரங்களை வெகுநேரம் இழுத்துப்பாடுவதற்கான சத்தும் வலிமையும் அதில் இருந்தது. இசைக்கருவிகளின் ஒலிகளைப் போலவே அது ஒலித்தது. மெல்லிசைக் கருவிகளை மட்டுமல்லாமல் டிரம்ஸ், பேஸ் கிட்டார் போன்றவற்றையெல்லாம் நகலெடுத்துப் பாடுவதில் மைக்கேல் ஜாக்ஸனுக்கு ஈடு இணையில்லை. வரிகளின் பாவங்களை ஆழமாகப் பாடிவெளிப்படுத்தும் வல்லமைதான் மைக்கேலின் பாடும்முறையின் பெரும் பலம். தாளம் என்பது அவரது உடலின் ஒவ்வொரு அணுவிலும் துடித்துக்கொண்டிருந்தது. ‘நான் தாளத்தின் அடிமை’ என்று அவரே சொல்லியிருக்கிறார். அவரது நடனம் வழியாக அருவமான இசைக்கு ஒரு உருவத்தை அளித்தவர் அவர். 

ஆடலும் பாடலும் அவருக்கு ஒருபோதுமே இரண்டாக இருந்ததில்லை. தனது ஐந்தாவது வயதில் முதன்முதலில் பாட ஆரம்பித்ததிலிருந்தே அவர் நடனமாடிக்கொண்டே தான் பாடினார். ஆட்டம் ஆடிக்கொண்டே மூச்சுத்திணறாமல், சுருதி பிசகாமல் பாட அவரால் அனாயாசமாக முடிந்தது. ஸோல் இசையின் ஞானத்தந்தை என்று அழைக்கப்பட்ட கறுப்பினப் பாடகர் ஜேம்ஸ் பிரவுண்தான் மைக்கேல் ஜாக்ஸனுக்கு இவ்விஷயத்தில் ஆதர்சமாக இருந்தவர். அவரே கண்டுபிடித்த அசாத்தியமானதும் கடினமானதுமான சுவடுகளைப் பாடல்களின் பின்னணியிசைக்குமேல் ஆடிய பின்னரும் எந்தவொரு சிக்கலுமில்லாமல் உணர்ச்சிப் பெருக்குடன் பாடியவர் ஜேம்ஸ் பிரவுண். மைக்கேல் ஜாக்ஸனின் நடன அசைவுகளிலும் பாடும்முறையிலும் ஜேம்ஸ் பிரவுணின் பாதிப்பு மிக நேரடியானது. சிறுவயதில் ஜேம்ஸ் பிரவுணை மேடையில் முதன்முதலில் பார்த்ததிலிருந்து அவரைப்போன்ற ஒரு கேளிக்கையாளனாக மாற மட்டுமேதான் மைக்கேல் ஜாக்ஸன் விரும்பினார். தூரத்திலிருந்து அவரைப் பார்த்துக் கற்றுக் கொண்டார்.

2003ல் வாழ்நாள் சாதனைக்கான பெட் (BET) விருதை ஜேம்ஸ் பிரவுணுக்கு வழங்க மேடையேறிய மைக்கேல் ஜாக்ஸன் “இந்த மனிதனை விட எனது வாழ்நாளில் எனக்குக் கற்றுத்தந்த, என்னைத் தூண்டியெழுப்பிய வேறு யாருமே கிடையாது” என்று சொல்லிக் கதறி அழுதார். 2006ல் ஜேம்ஸ் பிரவுண் இறந்தபோது கண்ணீருடன் அவருக்கான அந்திம அஞ்சலி உரையை வழங்கியவரும் மைக்கேல் ஜாக்ஸன்தான். பாடக நடிகர்களும் நடனக்காரர்களுமான ஃப்ரெட் அஸ்டேர், ஜீன் கெல்லி, பாடகர்களும் சிறந்த மேடை கேளிக்கையாளர்களுமான ஸாமி டேவிஸ் ஜூனியர், ஜாக்கி வில்ஸன், பாடகர்களான மார்வின் கயே, டயானா ரோஸ், கிளாடிஸ் நைட், ஸ்மோக்கி ராபின்ஸன் போன்றவர்களையெல்லாம் கூர்ந்து அவதானித்ததன் வழியாகவும் அவர்களிடமிருந்து ஆழமாகக் கற்றுக்கொண்டதன் வழியாகவும்தான் மைக்கேல் ஜாக்ஸன் என்கிற உலக அதிசயம் பிறவியெடுத்தது.

மைக்கேல் ஜாக்ஸனின் அப்பா ஜோ ஜாக்ஸன் ஒரு இரும்புத் தொழிற்சாலையில் தினக்கூலியாக இருந்தவர். ஆனால் அவர் தோற்றுப்போன ஒரு மேடைப்பாடகரும் கூட. அவரும் அவரது தம்பியும் சில நண்பர்களும் சேர்ந்து ஃபால்கன்ஸ் எனும் ஒரு இசைக் குழுவை வைத்திருந்தார்கள். சக் பெர்ரி போன்றவர்களின் பாடல்களைத்தான் அவர்கள் பாடி வந்தனர். ஜோவுக்கு ஒன்பது குழந்தைகள். அதில் ஏழாவது குழந்தை மைக்கேல் ஜாக்ஸன். தனக்குக் கிடைக்காத வெற்றியை எப்படியாவது தன் குழந்தைகள் வழியாக அடைந்துதான் தீருவேன் என்ற ஜோ ஜாக்ஸனின் விடாப்பிடியான முயற்சிதான் துவக்கத்தில் ஜாக்ஸன் 5 என்கிற பெரும் வெற்றிபெற்ற இசைக்குழுவையும் அதிலிருந்து பின்னர் மைக்கேல் ஜாக்ஸன் என்கின்ற உலக இசை உச்ச நட்சத்திரத்தையும் உருவாக்கியது.

திறமைசாலிகளான தனது குழந்தைகளைத் தோல் பட்டையால் அடித்தும் மிரட்டியும் வற்புறுத்தியும்தான் பெரும் வெற்றிகளுக்காக ஜோ தயார்படுத்தினார். மிகுந்த திறமைசாலியாக இருந்த முக்கியப்பாடகன் மைக்கேலுக்குத்தான் மிக அதிகமான அடி விழுந்தது. 'அப்பா’ என்று கூப்பிட்டால் 'நான் உனது அப்பா கிடையாது, நான் உனக்கு ஒரு பயிற்சியாசிரியர் மற்றும் மேலாளர். அவ்வளவுதான்’ என்று சொல்லுவார் ஜோ. சர்க்கஸ் மிருகங்களை அடக்கி ஆளும் ஒருவரைப் போல்தான் ஜோ ஜாக்ஸன் மைக்கேலை நடத்தினார். பிற குழந்தைகளைப்போல சகஜமான விளையாட்டு, இயல்பான பள்ளிப்படிப்பு என எதுவுமே மைக்கேலுக்கு வாய்க்கவில்லை. சிறு வயதின் சின்னச் சின்ன விருப்பங்கள் எதுவுமே அவருக்கு நிறைவேறவில்லை.

மைக்கேல் ஜாக்ஸனின் தாய் காத்ரீன் 'யெகோவாவின் சாட்சிகள்Õ என்கிற கிருத்துவ சபையின் ஆழ்ந்த நம்பிக்கையாளர். அவ்வமைப்பின் முக்கிய வேலைகளில் ஒன்றான வீடுதோறும் சென்று நடத்தும் மதப்பிரச்சாரம் இன்றுவரைக்கும் செய்து வருபவர். பல பழமைவாத, அடிப்படைவாத நடைமுறைகளை நம்பிக்கையாளர்களுக்கு விதித்திருக்கும் அவ்வமைப்பிற்கு விசுவாசமானவராகத்தான் சிறு வயதில் மைக்கேல் ஜாக்ஸன் வளர்க்கப்பட்டார். இராஜ்ய மன்றம் என்று அழைக்கப்படும் அவர்களது தேவாலயத்தில் அடிக்கடி சென்றுவந்ததையும் அந்த மத நம்பிக்கைகளுக்கு உறுதியுள்ளவனாகத் தான் எவ்வாறு இருந்தேன் என்பதையும் நிலா நடனம் (Moon Walk) எனும் தனது சுய சரிதையில் விரிவாக எழுதியிருக்கிறார் மைக்கேல் ஜாக்ஸன். யெகோவாவின் சாட்சிகளைப் பொருத்த வரையில் திருமணத்திற்கு முன்னும் அதன் வெளியேயும் நடத்தும் உடலுறவு, விவாகரத்து, ஒருபாலின திருமணமும் உடலுறவும், கருத்தடை, கருக்கலைப்பு, சூதாட்டம், புகையிலை மற்றும் போதைப்பொருட்களின் உபயோகம் போன்ற 'குற்றங்கள்’ கிட்டத்தட்ட மரணதண்டனைக்குரியவை! அப்பாவுக்கும் கணவனுக்கும் எதிராகப் பேசுவது கூட பெரும் தவறாகப் பார்க்கப்படும் அச்சமூகத்திலிருந்து வந்த மைக்கேல் ஜாக்ஸனின் வாழ்க்கையில் தனது மதம் கடுமையாகத் தடைசெய்த விஷயங்கள் நிறையவேதான் நடந்திருக்கிறது!

துவக்கத்தில் பால்யம் தாண்டாத தனது குழந்தைகளின் இசைக்குழுவிற்கு ஜோ ஜாக்ஸன் ஏற்படுத்திய இசை நிகழ்ச்சிகள், பெண்கள் ஆடைகளை அவிழ்த்து நிர்வாண நடனமாடும் இரவுநடன விடுதிகளில்தான் இடம்பெற்றது! அவிழ்த்து ஆடும் அந்தப் பெண்களின் பின்னால் நின்று 10 வயது தாண்டாத மைக்கேல் ஜாக்ஸன் காதல் பாடல்களைப் பாடினார். அந்தக் கவர்ச்சி அழகிகள் தங்களது உள்ளாடைகளைக் கழற்றி வீசும்பொழுது அதை எட்டிப்பிடிக்கும் நபர்கள் அதை ஆவேசமாக மோப்பம் பிடித்துக் கிளர்ச்சியுடன் கத்துவதைக் கேட்டு எவ்வாறெல்லாம் தான் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கிறேன் என்பதை மைக்கேல் ஜாக்ஸனே எழுதியிருக்கிறார். பின்னர் இசைப்பயணங்களுக்கு நடுவே தனது மூத்த சகோதரர்கள் பல பெண்களைத் தாங்கள் தங்கும் விடுதியறைகளுக்கு அழைத்து வருவதையும், தான் படுத்திருக்கும் படுக்கையின் ஒரு பாதியிலேயே அவர்களுடன் உடலுறவு கொள்வதையும் பற்றி மைக்கேல் ஜாக்ஸன் பதிவு செய்திருக்கிறார்! மிகச்சிறிய வயதிலேயே காமத்தின் கண்காணா விளையாட்டுகளும், அவற்றைப் பெரும் குற்றம் என்று விதிக்கும் மதநம்பிக்கைகளும் சேர்ந்து மைக்கேல் ஜாக்ஸன் என்கின்ற மனிதனைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனது வாழ்நாள் முழுவதும் அது அவரை நிலைகொள்ளாமல் தவிக்க வைத்திருக்கிறது.

தான் அழகற்றவர் என்றும் தனது முகத்தோற்றம் அசிங்கமானது என்றுமான ஆழ்ந்த ஒரு மனப்பதிவு சிறுவயதிலேயே மைக்கேல் ஜாக்ஸனுக்குள்ளே இருந்தது. “உனது இந்த தடித்த மூக்கும் அசிங்கமான முக லட்சணங்களும் எங்கிருந்து வந்தது? எனது குடும்பத்தில் யாருமே இப்படி பிறந்ததில்லை” என்று தனது அப்பா தன்னை அடிக்கடி திட்டி வந்தார் என்று மைக்கேல் சொல்லியிருக்கிறார். இதன் காரணமாக முகப்பருக்கள் முளைக்கும் பதின்பருவத்தில் கண்ணாடி பார்ப்பதைக்கூட கடுமையாக வெறுத்தவர் மைக்கேல். பிற்காலத்தில் பலவகையான ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகள் செய்து தன் முகத்தை சரி செய்ய அவர் முயன்றது இக்காரணத்தால்தான். ஆனால் பலர் நினைப்பதுபோல் ஒரு கறுப்பனாகப் பிறந்ததன் தாழ்மை உணர்வில் தனது கறுப்புத் தோல் வண்ணத்தை மைக்கேல் ஜாக்ஸன் வெள்ளை நிறமாக்கிக் கொள்ளவில்லை. விடிலைகோ (Vitiligo) எனும் தோல் நோயின் காரணமாக அவரது தோலில் பால் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக முகம், மார்பு, கைகள் என அவரது உடலின் பல பகுதிகளில் கறுப்பு குறைந்து வெள்ளை அதிகமாக மாறியது. மேற்கொள்ள மிகக்கடினமான சில அறுவை சிகிச்சைகளினால் தனது தோல் வண்ணத்தை முற்றிலுமாக வெள்ளையாக அவர் மாற்றியது அப்போதுதான். இந்த விஷயம்தான் அவரது ‘கறுப்பா வெளுப்பா?’ (Black or White?) பாடலின் அடிப்படைத் தூண்டுதலுமே.

தங்களது முதல் நான்கு பாடல்களுமே ஒன்றாமிடத் தைப் பிடித்த உலகின் முதல் இசைக்குழுதான் ஜாக்ஸன் 5. இன்று வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை! அதேபோல்  தனது இருபதாவது வயதில் சுவரிலிருந்து (Off the Wall) என்கிற தனது முதல் தனித்தொகுப்பு வழியாக உலகநட்சத்திரமாக மாறிய மைக்கேல் ஜாக்ஸனின் புகழ் பின்னர் ஒருபோதும் கீழிறங்கவில்லை. த்ரில்லெர், பேட், டேஞ்சரஸ், ஹிஸ்டரி, பிளட் ஆன் த டான்ஸ் ஃப்ளோர், இன்வின்சிபிள் என ஏழு தொகுப்புகளும் பல ஒற்றைப் பாடல்களும்தான் உலக வெகுஜன இசையில் மைக்கேல் ஜாக்ஸனின் பங்களிப்புகள். ஏறத்தாழ 150 பாடல்களை அவர் பாடி பதிவு செய்திருக்கிறார். அதில் பில்லி ஜீன், ஸ்ட்ரேஞ்சர் இன் மோஸ்கோ, வாணா பி ஸ்டார்டின் சம்திங், மான் இன் த மிர்ர், எர்த் சாங், தே டோன்ட் கேர் எபவுட் அஸ், ஹ்யூமன் நேச்சர், ஹூ ஈஸ் இட்? டோன்ட் ஸ்டாப் டில் யூ கெட் இனஃப், பீட் இட், ப்ளாக் ஆர் வைட், கோன் டூ ஸூண், ஸ்மூத் கிரிமினல், ஹீல் த வேர்ல்ட் போன்ற பல பாடல்கள் எக்காலத்திற்குமுரியவை.

1984ல் பெப்ஸி குளிர்பானத்தின் ஒரு விளம்பரப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்பொழுது அவருக்கு ஒரு பெரும் விபத்து நிகழ்ந்தது. ஒரு காட்சியை ஐந்து முறை எடுத்த பின்னரும் திருப்தி வராத மைக்கேல் ஜாக்ஸன் அதை ஆறாவதாகவும் படமாக்க முயலும்போது வாணவேடிக்கை ஒன்று தலையில் பாய்ந்து மிகமோசமாக தீக்காயமடைந்தார். அவரது முகமும் முடியும் உச்சந்தலையும் கருகியது. பல வகையான ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைகள் வழியாக அதை முற்றிலுமாகக் குணப்படுத்த சில ஆண்டுகளாகியது. இக்காலகட்டத்தில் ஏற்பட்ட கடுமையான உடல் வலிகளிலிருந்து தப்பிக்க அப்போது அவர் உட்கொண்ட பலவகையான வலி நிவாரண மாத்திரைகளுக்கு அவர் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையானார். பின்னர் நடனத்திலும் பலமணிநேரம் நீளும் மேடை நிகழ்ச்சி களிலும் ஓயாமல் செயல்பட அவர் பலவகையான செயல் ஊக்கி மாத்திரைகளையும் உட்கொள்ள ஆரம்பித்து அவற்றுக்கும் அடிமையானார். பின்னர் தூக்கமின்மையும் பசியின்மையும் அவரது நிரந்தரப் பிரச்சினைகளாக மாறியபோது அவற்றுக்காகவும் பல வகையான மாத்திரை மருந்துகளை உட்கொண்டார். ஆபத்தான அம்மருந்துகளும் அவை உருவாக்கிய உடலுபாதைகளும் தனது கடைசி நாள் வரைக்கும் அவரைத் துரத்தியது. அறுவை சிகிச்சைக்கு முன் பூரண மயக்கத்திற்காக வழங்கப்படும் ப்ரொபொஃபோல் (Propofol) என்கின்ற திரவ மருந்துதான் அவரது மரணத்திற்குக் காரணமானது. இறந்து கிடந்தபோதும் அவரது வயிற்றில் மாத்திரைகள் மட்டுமேதான் இருந்தது!

உலக வெகுஜன இசையில் விற்பனையிலும் கேளிக்கை மதிப்பிலும் இன்றும் ஒன்றாவது இடத்திலிருப்பது பீட்டில்ஸ் இசைக்குழுதான். அதற்கு மிக நெருக்கமான இடத்தில் இருப்பது எல்விஸ் பிரெஸ்லி. தான் பார்க்க அழகில்லாத ஒரு கறுப்பன் என்பதனால் தான் அழகர்களும் வெள்ளையர்களுமான பீட்டில்ஸையும் எல்விஸையும் தன்னால் தாண்டிச்செல்ல முடியவில்லை என்று மைக்கேல் ஜாக்ஸன் பலகாலம் நம்பினார். ஆனால் பீட்டில்ஸையும் எல்விஸையும் விட உலகம் முழுவதும் மிக அதிகமான மக்களுக்குத் தெரிந்தவராக இருப்பவர் மைக்கேல் ஜாக்ஸன்தான். அவரது உருவத்தின், தொப்பியின், கையுறையின், பாதணிகளின் கோட்டுச்சித்திரங்களை மட்டுமே பார்த்து அது மைக்கேல் ஜாக்ஸன் என்று இங்கு இந்தியாவில் கூட அனைவரும் அடையாளம் காண்பதில்லையா? ஆங்கிலம் யாருக்குமே தாய்மொழியல்லாத இந்தியாவின் கலாச்சாரத்தையும் அதிலும் முக்கியமாக மராத்தி கலாச்சாரத்தையும் காப்பாற்ற 'கஷ்டப்படும்’ பால் தாக்கரேயின் சிவசேனா அமைப்புதான் 1996ல் மைக்கேல் ஜாக்ஸனை இந்தியாவிற்குக் கொண்டு வந்தது என்பது, எந்தவொரு கலாச்சாரத்தையும் எளிதாகக் கடந்து செல்லும் மைக்கேல் ஜாக்ஸனின் கலை வல்லமைக்கு நிதர்சனமாகும்.

தனது தனி மனித வாழ்க்கையில் மைக்கேல் ஜாக்ஸன் எதைச்செய்தாலும் ஊடக உலகம் அதை விவாதமாக்கி வியாபாரமாக்கியது. அவர் ஒரு ஆண் குரங்கையும் மலைப்பாம்பையும் வீட்டுப்பிராணிகளாக வளர்த்தபோது அவர் மிருகங்கள் மீது காம இச்சை கொண்டவர் என்று சொன்னார்கள்! எல்விஸ் பிரெஸ்லியின் மகளைத் திருமணம் செய்தபோது அது எல்விஸின் இசை உரிமைகள் அனைத்தையும் தன் சொந்தமாக்கும் தந்திரம் என்று சொன்னார்கள். அத்திருமணம் ஒரே ஆண்டில் முறிந்தபோது பேரழகியான லிசா மேரி பிரெஸ்லியை ஓரினச்சேர்க்கையாளரான மைக்கேல் ஜாக்ஸனால் திருப்திப்படுத்த முடியாததனால்தான் அப்பிரிவு என்று கோஷம் போட்டனர். தனது பழைய வேலைக்காரியின் மூலமாக அவர் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, அது அவரது குழந்தைகள் அல்ல என்று தீர்ப்பெழுதினார்கள். தனது குழந்தைகளை இந்த ஊடகங்களிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு, மக்கள் மத்தியில் அவர்களது முகத்தை மறைத்தபோது அது குழந்தைகளின் உரிமைகளுக்கெதிரானது என்று கத்தினார்கள்.

தனக்கு ஒருபோதும் கிடைக்காமல்போன இனிய குழந்தைப் பருவத்தை வசதியற்ற குழந்தைகளுக்கு வழங்க அவர் முன்வந்தபோது குழந்தைகளுடன் உடலுறவு கொள்ளும் மனக்கோளாறு அவருக்கு இருப்பதாகச் சொன்னார்கள். இக்காரணத்தை வைத்து பல வழக்குகள் அவர்மேல் தொடுக்கப்பட்டன. பலமுறை நீதி மன்றங்களுக்குச் சென்று அவமானப்பட்டார். அவரது இசையின்மீது பெரும் மோகம் கொண்டவர்கள்கூட அவரை மனப்பிறழ்வுகளும் பாலியல் கோளாறுகளும் கொண்டவர் என நம்பும் அளவிற்கு இருந்தது ஊடகங்கள் உருவாக்கிய அந்தப் பொய் பிரச்சாரங்களின் தாக்கம். ஆனால் மைக்கேல் ஜாக்ஸனின் மேல் சுமத்தப்பட்ட எண்ணற்ற வழக்குகளில் ஒன்றுகூட நிரூபணமாகவில்லை. அவர் ஒருமுறை கூட சிறைக்குச் செல்லவுமில்லை.

ஆழமாக நம்பிய, அனைவராலும் ஏமாற்றப்பட்ட வரலாறுதான் மைக்கேல் ஜாக்ஸனுடையது. இந்திய வம்சாவளியினராக பாகிஸ்தானில் பிறந்து இங்கிலாந்தில் வாழும் மார்டின் பஷீர் எனும் தொலைக்காட்சி நிருபர் மிகத்தந்திரமாக மைக்கேலின் நண்பனாக மாறி, அவர்மேல் மூளை ஆதிக்கம் செலுத்தி அவரது அந்தரங்க வாழ்க்கையைப் படம்பிடித்து தன்னுடைய தீர்ப்புகளுடன் உலகுக்குக் காட்டினார். மைக்கேல் ஜாக்ஸனுடன் வாழ்தல் எனப்பெயரிடப்பட்ட அந்த ஆவணப்படத்தில் தான் விரும்பும் பதில்களையே மைக்கேல் ஜாக்ஸனைச் சொல்ல வைப்பதில் அவர் ஓரளவுக்கு வெற்றி பெற்றார். புற்றுநோயால் அவதிப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட ஒரு சிறுவனை மைக்கேல் தனது வீட்டில் வைத்துக் காப்பாற்றி குணமடையச் செய்திருந்தார். அச்சிறுவனுடன் மைக்கேல் ஜாக்ஸனுக்கு உடலுறவு இருப்பதாக, போதுமான ஆதாரங்கள் எதுவுமே இல்லாமல் தீர்ப்பளித்தார் பொய்யனான அந்தப் பரபரப்பு பத்திரிகையாளன்.

இதைப்போல் 2003ல் மைக்கேல் ஜாக்ஸனுக்கு நிதிநெருக்கடி நேரிட்டபோது பஹ்ரின் நாட்டு அரசரின் மகனும் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான அப்துல்லா பின் ஹமாத் என்பவர் ஒரு ரசிகனாக மைக்கேல் ஜாக்ஸனை நெருங்கினார். அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் எனக்கூறி அவசரப் பொருளாதார உதவிகளைச் செய்தார். 2005ல் தனக்கெதிரான எல்லா வழக்குகளிலிருந்தும் விடுதலை பெற்ற மைக்கேல் ஜாக்ஸன் தொடர்ந்து ஓராண்டு யாருக்குமே தெரியாமல் பஹ்ரினில் ஹமாத்தின் விருந்தினராகத்தான் தங்கினார். இக்காலகட்டத்தில் பல வளைகுடா நாடுகளில் தன் குழந்தைகளுடன் அவர் நேரத்தை செலவிட்டார். புர்கா அணிந்து, முகம் மறைத்து ஒரு இஸ்லாமியப் பெண்ணைப்போல் அவர் அங்கெல்லாம் சுதந்திரமாக உலாவினார். அப்போது மைக்கேல் ஜாக் ஸனின் செலவுகளையெல்லாம் வகித்தவர் ஹமாத்தான். ஆனால் மைக்கேல் பாடும் இஸ்லாமியப் பாடல்களின் ஒரு இசைத்தொகுப்பு மற்றும் மைக்கேலின் சுயசரிதை போன்றவற்றின் உரிமைக்காகத்தான் தான் அவ்வளவு பணத்தைச் செலவிட்டேன் என்று பின்னர் அவர் மைக்கேல் ஜாக்ஸனுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார்! தான் எந்த வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை என்றும் ஹமாத் பெரும் பணம் செலவழித்து வழங்கிய அந்த ஓய்வு நாட்கள் அவர் தனக்கு அளித்த ஒரு பரிசாகத்தான் தான் நினைத்தேன் என்றும் மைக்கேல் சொன்னபோது அவ்வழக்குமே தள்ளப்பட்டது.

ஹமாத்தும், முன்னமே இஸ்லாமிற்கு மதம் மாறியிருந்த மைக்கேல் ஜாக்ஸனின் மூத்த சகோதரர் ஜெர்மேய்ன் ஜாக்ஸனும்தான் மைக்கேல் ஜாக்ஸன் இஸ்லாமுக்கு மதம் மாறினார் என்ற பிரச்சாரத்தை செய்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. ஹமாத் எழுதிய 'எனது நரம்புகளில் இஸ்லாம் இருக்கிறது’, 'அல்லாவிற்கு நன்றி சொல்லுங்கள்’ என்ற இரு இஸ்லாமியப் பாடல்களைத் தனது பஹ்ரின் நாட்களில் மைக்கேல் ஜாக்ஸன் இசையமைத்துப் பாடிப் பதிவு செய்திருந்தார். ஆனால் தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக மைக்கேல் ஜாக்ஸன் எங்கேயும் குறிப்பிடவில்லை. அவரது வழக்குரைஞர்கள் அவ்வகையான அனைத்துச் செய்திகளையும் முற்றிலுமாக மறுக்கவும் செய்தனர். இருந்தும் மருந்து மாத்திரைகளின் பெருவெள்ளத்தில் நிலைகுலைந்து ஓடிக்கொண்டிருந்த தனது வாழ்க்கையில் ஒரு மத மாற்றத்தால் நிலைப்புத்தன்மை வரக்கூடும் என்று மைக்கேல் ஜாக்ஸன் நம்பியிருந்தார் என்றே படுகிறது.

ஓய்வு நாட்களிலிருந்து வெளிவந்து மீண்டும் மேடையேற 2009ல் மைக்கேல் ஜாக்ஸன் முடிவெடுத்தார். தனது வாழ்நாளின் கடைசி இசைப்பயணமாக, உலகத்தில் வேறு எந்தவொரு இசை உச்ச நட்சத்திரமுமே முயலாத ஒன்றுக்கு மீண்டுமொரு முறை முயன்றார் மைக்கேல் ஜாக்ஸன். லண்டன் நகரிலுள்ள ஓ2 எனும் ஒரே அரங்கில் ஒவ்வொரு வாரக்கடைசியிலும் ஓய்வு நாட்களிலும் ஒரு நிகழ்ச்சி என்ற கணக்கில் 50 நிகழ்ச்சிகளை நடத்த ஒப்புக்கொண்டார். 2009 ஜூலையில் துவங்கி 2010 மார்ச் மாதம் வரைக்குமான 9 மாத காலம் இந்நிகழ்ச்சிகள் நடக்கவிருந்தது. எல்லா நிகழ்ச்சிகளுக்குமான நுழைவுச்சீட்டுகள் அனைத்துமே 2009 மே மாதத்திலேயே விற்றுப்போனது! அந்நிகழ்ச்சிகளின் ஒத்திகைகள் பின்னர் ‘இதுதான் அது’ (This is it) என்கிற இசை ஆவணப்படமாக வெளியிடப்பட்டு பெரும் வணிகவெற்றி பெற்றது. உலக வரலாற்றிலேயே மிக அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட இசைப்படம் இதுவே!

அந்நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க சில நாட்கள் மட்டுமே மீதமிருக்கும்போது, ஒரு தனிப்பாடகனாக, தான் ஆரம்பித்ததன் முப்பதாவது ஆண்டு தினத்தில் மைக்கேல் ஜாக்ஸன் இறந்து கிடந்தார்.  உலக இசைக்கும் கலைக்கும் கலாச்சாரத்திற்கும் மைக்கேல் ஜாக்ஸன் வழங்கிய கொடுப்பினைகள் அவரது மரணத்திற்குப் பின்புதான் சரியான முறையில் மதிப்பிடப்பட்டது! வலிகளில் தொலைந்துபோன குழந்தைப் பருவமும் தவறான வழிநடத்தல்களும் மைக்கேல் ஜாக்ஸன் என்கிற மனிதனை எப்போதுமே பல விசித்திரங்களுக்குத்தான் கொண்டுசென்றது. ஆனால் உலகின் வேறு எந்தவொரு மனிதனுக்குமே வாய்க்காத அவரது கலையின் அதிசயப் பிரகாசம் இவ்வுலகையே ஒளிரச்செய்தது. மைக்கேல் ஜாக்ஸன் என்றென்றைக்குமாக அறுத்து வீழ்த்தப்பட்ட பெரும் கருணைகொண்ட வழங்கும் மரம். இவ்வுலகில் இனி ஒருபோதுமே முளைக்க வாய்ப்பில்லாத அதிசய மரம்.

shaajichennai@gmail.com

click here

click here
click here