உயிர்மை - uyirmmai April 2011
 
இருண்ட கால குறிப்புகள்
- மனுஷ்ய புத்திரன்
தமிழகப் பொதுத் தேர்தல்: மறதியின் புனைசேற்றில்
- அ.ராமசாமி
ஜப்பான் அணு உலை வெடிப்பு உலகிற்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை
- மாயா
காசு இல்லை
- அ.முத்துலிங்கம்
ஈழம் குருதி காயாத நிலம்
- தீபச்செல்வன்
லிபியா ஈராக்கோ அல்லது வியட்நாமோ இல்லை
- யமுனா ராஜேந்திரன்
2012இல் உலகம் அழியப் போகிறதா?
- இளைய அப்துல்லாஹ்
திரும்பி வராத மின்மினிகள்
- ஷாஜி
"என்ன செய்யலாம் இதற்காக?"
- பா.செயப்பிரகாசம்
ஸாத் கூன் மாஃப்:மன்னிக்கப்பட்ட ஏழு கொலைகள்
- சாரு நிவேதிதா
ஜனநாயகத்தின் வியாபாரம்
- வாஸந்தி
மரம் ஒருபோதும் மரமாக இருப்பதில்லை
- எஸ்.ராமகிருஷ்ணன்
தீவுகளும் உயிரினங்களும்
- சு.தியடோர் பாஸ்கரன்
சுகுமாரன் கவிதைகள்
- -
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்
- -
சுதிர் செந்தில் கவிதைகள்
- -
ச.விஜயலட்சுமி கவிதைகள்
- -
பழம்புளி வீட்டுக்கதை
- இமையம்
ஹஸ்பெண்ட் ப்ரமோஷன் விகேஎன் மலையாள மொழிபெயர்ப்புச் சிறுகதை
- தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா
தேகம் : பிரியமும் வாதையும் ஒன்றா?
- ஆர்.அபிலாஷ்
புத்தகங்களின் உலகில்....
- ந.முருகேச பாண்டியன்
கடிதங்கள்
- -
click here
தீவுகளும் உயிரினங்களும்
சு.தியடோர் பாஸ்கரன்

அடர்ந்த மழை2க்காடுகள் போர்த்திய மலைகள், கடலோரம் வரை  நீரைத் தொட்டுக்கொண்டு  நிற்கும் நெடிதுயர்ந்த மரங்கள்.  ஆழமற்ற, மரகதப்பச்சை நிற கடலால் சூழப்பட்ட ஹேவ்லக் எனும் அந்த மாயத்தீவிற்குப் போக அந்தமானின் தலைநகரான போர்ட்பிளேரிலிருந்து இரண்டு மணி நேரம் லான்ச்சில் பயணிக்க வேண்டும். தீவின் தெற்குக் கரையில் சுனாமி பேரலைகளால் அழிக்கப்பட்ட கடலோரக் காடுகள் கபில நிறத்தில் உலர்ந்த மரங்களாக, எலும்புக்கூடுகள் போல நிற்கின்றன.  உவர்நீர் வெள்ளமாக உள்ளே வந்ததால், மரங்கள் பட்டுப்போயின. மேற்குப் பகுதிகளில் கரையோரமாக அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. வங்காளத்திலிருந்து வந்த  குடியேறிகள் கடற்கரையருகே சிறு கிராமமொன்றில் வசிக்கின்றார்கள். தீவின் மறு ஓரத்தில், ஓங்கி உயர்ந்த மரங்களடியில் அமைக்கப்பட்ட ஒரு விடுதியில் நாங்கள் தங்கினோம். நிக்கோபாரி குடிசை மாதிரி, தாவடிக்கோல்கள் மீது கட்டப்பட்ட குடில்கள். எப்போதும் வெவ்வேறு விதமான பறவைகளின் குரல்கள் நிரம்பிய சூழல். மேகமற்ற நீலவானம்.

அந்தமான் நிக்கோபாரிலுள்ள 324 தீவுகளும் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் சமுத்திர மட்டம் உயர்ந்தபோது முழுகிப் போன மலைத்தொடரின் உச்சிகள்.  மியான்மரிலுள்ள அரக்கான் மலைத் தொடரின் தொடர்ச்சிதான் இவை. நிலத்தொடர்பு துண்டிக்கப்பட்டபின் இவை தீவுகளாக  உருவாகிவிட்டன.  ஊழிகாலமாகத் தனித்திருந்ததால் இந்தத் தீவுகளில் தனி இனப் பறவைகளும் மற்ற உயிரினங்களும் உருவாகிவிட்டன. இந்தத் தீவுகளில் உள்ள புள்ளினங்களில்  39 வகைப்பறவைகள் இங்கு மட்டுமே காணக்கூடியவை. பாலூட்டிகளில் நண்டு தின்னும் குரங்கும், அந்தமான் காட்டுப்பன்றியும் இந்தத் தீவுகளில் மட்டுமே  வாழ்பவை.

1857 எழுச்சிக்குப் பின், கைதிகளை  அந்தமானுக்கு அனுப்பும் திட்டத்தை பிரிட்டிஷ் அரசு தீட்டியபோதுதான் அதன் கவனம் இந்தத் தீவுகள் மேல் விழுந்தது.  இதைத்தொடர்ந்து பல  அரசு அதிகாரிகள்  இங்கு வந்தனர். இந்தத் தீவுகளின் இயற்கை வளத்தைக் கண்டுவியந்தனர். அவர்களில் ஒருவர்  ஐ.சி.எஸ். அதிகாரி ஏ.ஓ.ஹ்யூம்.  நினைவிருக்கின்றதா? இவர்தான்  1885 இல் இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர். பறவை ஆர்வலர். இன்னும் சொல்லப் போனால் அவர் வாழ்க்கையின் முக்கிய உந்துதலே பறவையியல்தான். அந்தக் காலத்திலேயே  பட்சிகளை  அவதானிப்பவர்களுக்கென்று Stray Feathers என்ற பத்திரிகையை வெளியிட்டார். அது  1898 வரை வெளிவந்தது. அந்தமான் தீவுகளுக்குப் பயணித்து அங்குள்ள பறவைகளைப் பற்றிய விவரங்களை வெளியிட்டதுமல்லாமல், பல பறவைகளைப் பாடம் செய்து வைத்தார்.  அந்தத் தீவுகளில் மட்டுமே வாழும் ஒரு பறவைக்கு - அந்தமான் மீன்கொத்தி - உயிரியலாளர்கள் அவரது பெயரை  சூட்டியிருக்கிறார்கள். (Todiramphus humii). இந்தக் கறுப்பு-வெள்ளை மீன்கொத்தியை போர்ட்பிளேர் துறைமுகத்தில் எளிதாகக் காணலாம்.  ஐந்து சதுர கி.மீ. பரப்புள்ள  நார்கொண்டம் எனும்  தீவில் மட்டுமே வாழும் இரு வாசிப் பறவை ஒன்றை  முதன்முதலாக பிடித்து அதை அறிவியல் உலகிற்கு விவரித்தார் ஹ்யூம்.  அடர்ந்த காடு நிறைந்த இந்தத் தீவில் இருவாசிப் பறவைகள்   300 மட்டுமே இருக்கின்றன. அந்தமானுக்கே உரித்தான புள்ளினத்தில் நாம் வெகு எளிதாகக் காணக்கூடியது அந்தமான் செம்பூத்து. நகரினுள்ளேயே பார்க்க முடியும். நம்மூர் செம்பூத்தை விட உருவில் சின்னதாயும், சிறிது வெளுத்தும் இருக்கும். நிக்கோபாரில் மெகபோட் (Megapode) என்னும் ஒரு அரிய தரைப் பறவை உள்ளது.  நிலத்தில் முட்டையிட்டு, அவைகளை உலர்ந்த இலைகளால் ஒரு சிறிய மேடு போல் மூடிவிடும். அடைகாக்காமல், இலைக்  குவிப்பைக் குறைத்தும் அதிகப்படுத்தியும், ஒரு இன்குபேட்டர் போல இயக்கி,  வெப்பநிலையைச்  சீராக வைத்து குஞ்சுகளைப் பொரிக்க வைக்கும்  இப் பறவையை உயிரியலாளர்கள் thermometerbird என்றும் குறிப்பிடுவதுண்டு.

பிரிட்டிஷ் ஆண்டபோதும் அதற்குப் பின்னரும் அந்தமான் தீவுகளின் காடுகள் சகட்டு மேனிக்கு அழிக்கப்பட்டன. படாக் மரங்கள் வெட்டப்பட்டு கப்பல் கப்பலாக வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்தத் தீவுகளின் சூழலியல் அருமை  1980களில்தான் உணரப்பட்டது. பரந்து விரிந்திருக்கும் மழைக்காடுகளும், சீரழியாமலிருக்கும் உறைவிடங்களும், அங்கு வாழும் பழங்குடியினரும் அந்த தீவுகளுக்கே உரித்தான காட்டுயிர்களும் பாதுகாக்கப்படவேண்டும் என்பது அரசுக்குப் புலப்பட்டது. மரம் வெட்டுவது அறவே தடை செய்யப்பட்டு விட்டது.  அந்தமானுக்குக் குறுக்கே, காட்டின் வழியே பாவப்பட்ட சாலை, காட்டுயிர்களுக்கும், பழங்குடியினருக்கும் தீங்கு விளைவிப்பதால் அது பயன்படுத்தப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை விதித்துவிட்ட்து. ஏறக்குறைய நூறு சரணாலயங்களை  இந்திய அரசு இங்கு ஏற்படுத்தி அந்தத் தீவுகளின் காட்டுயிர்களுக்குப்  பாதுகாப்பு அளித்துள்ளது.

அந்தமான் தீவுக்கூட்டத்தில் முப்பது தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மற்றவைகளில்  காடுகளும் காட்டுயிர்களும்தான். இது பலர் கண்களை உறுத்தி வருகிறது. இந்த பகுதியைச் சுற்றுலாவுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று ஒரு பகுதியினரும், போர்ட்பிளேரை சிங்கப்பூர் போன்ற திறந்த துறைமுகமாக (free port) ஆக்க வேண்டும் என்று ஒரு சிலரும் பேசி வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் போர்ட்பிளேரில் நான் பங்கெடுத்த ஒரு கருத்தரங்கில் சுற்றுப்பயண லாபி தனது குரலை உரத்து எழுப்பியது. “கற்பனை செய்து பாருங்கள். ஒன்றன்பின் ஒன்றாக சார்ட்டட்  ஃபிளைட்ஸ்  வந்திறங்கும்”  என்றார் ஒருவர். பயங்கரமான கற்பனைதான். ஆனால் இப்போதைக்கு இந்த ஆபத்துகள் இல்லையென்று கூறலாம்.

தீவுகளின் தனிமை புதிய உயிரினங்கள் உருவாக ஏதுவாக இருக்கின்றது  என்கிறார்கள் உயிரியலாளர்கள்.  இதில் உலகறிந்த எடுத்துக்காட்டு மொரீஷியஸ் தீவும், அதில் வாழ்ந்து அற்றுப்போன டோடோ பறவையும்தான். வான்கோழி அளவிலான, புறா இனத்தைச் சேர்ந்த  பறக்க இயலாத, தரைப் பறவையான டோடோ ஊழிக்காலமாக மனிதரற்ற  அந்தத் தீவில் வாழ்ந்திருந்தது. 18ம் நூற்றாண்டில் வந்திறங்கிய மனிதர் டோடோக்களை எளிதாகத் தடியால் அடித்துக் கொன்றனர். சீக்கிரமே  மறைந்துபோன டோடோ பறவை  அற்றுப்போன உயிரினங்களுக்கு ஒரு குறியீடாக நிலைத்து விட்டது. ஒரு தீவு தனியாக இருந்து விட்டால் மட்டும் அதில் புதிய பிராணிகள் தோன்றிவிடாது. ஆனால் புதிய உயிரினம் தோன்றுவது தீவுகளில்தான். அதிலும் தீவின் புள்ளினங்களில்தான் இந்தத்  தகவமைப்பு அம்சங்கள் நன்கு வெளிப்படுகின்றன.  ஒரு தீவிலுள்ள பறவைகளைக்  கூர்ந்து கவனித்ததால் தானே டார்வின் தனது பரிணாமக் கோட்பாட்டை வகுக்க முடிந்தது.

சார்லஸ் டார்வின்  பயணித்த பீகிள் என்ற கப்பல் தென்னமெரிக்காவிற்கு அருகிலுள்ள, ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த கலப்பாகாஸ் தீவுகளை அடைந்தபோது வேறெங்கும் காணமுடியாத பறவைகளும் கடல் ஓணான்களும் ராட்சத நிலத்தாமைகளும்  இருப்பதைக் கண்டு அதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முயன்றார்.  தீவுகள் வெகுகாலம் தனித்திருந்தால் அவைகளில்,  தகவமைப்பால் புதிய புதிய உயிரினங்கள் உருவாகும் என்பதை இந்தத் தீவின் உயிரினங்கள் மூலம்  உணர்ந்தார் டார்வின். அதிலும் முக்கியமாக கலப்பாகாஸிலுள்ள குருவிகளின் (Finch) அலகுகளைக் கவனித்த போதுதான் அவருக்குப் பரிணாமக் கோட்பாட்டின் தடயம் கிடைத்தது.  இதை வைத்து பிராணிகள் உருவாகும் விதத்தைப் பற்றியும், மனிதரின் பரிணாமவழி தோற்றுவாய் பற்றியும்   Origin of Species  நூலை எழுதி அறிவுலகை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டார். மத நம்பிக்கைகளின் அஸ்திவாரங்கள் ஆட்டம் கண்டன. இந்தக் குருவிகளின் அலகுகள் எவ்வாறு டார்வினின் ஆய்வுக்கு வழிகாட்டின என்பது பற்றி இன்றும் கலப்பாகாஸ் தீவில் ஆய்வு தொடர்கின்றது. இதுபற்றி The Beak of the Finch (1994) என்ற நூலை எழுதிய ஜோன தான் வைனர் 'புலிட்சர்' பரிசு பெற்றார். 

இந்தியாவின் அளப்பற்ற பல்லுயிரியத்தில் ஆழ்ந்த அக்கறை கொண்ட பிரிட்டிஷ் அதிகாரிகளில் சென்னைவாசியான எலியட்டும் ஒருவர். இவர் கவர்னர் கௌன்சிலில் ஒரு உறுப்பினராக இருந்தார். அதாவது இன்றைய அமைச்சர் போல், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல பறவைகளின் பாடம் செய்யப்பட்ட தோல்களை இங்கிலாந்திலிருந்த சார்லஸ் டார்வினுக்கு அனுப்பி, அவரது ஆய்விற்கு உதவினார் எலியட்.

நாங்கள் கடைசி மூன்று நாட்கள், காட்டுயிர் ஆய்வாளர்களுக்காக ராமு லஸ் விட்டேக்கர் நடத்தும் ‘அந்தமான் நிக்கோபார் சூழலியல் மையÕத்தில் தங்கினோம். காட்டின் மத்தியில் சில குடிசைகள். அவ்வளவே.  ஒரு நாள் காலை பொழுது புலரும் நேரத்தில் -இங்கு விடியற் காலை 4-30க்கு - உச்சஸ்தாயியில் புல்லாங்குழல்  இசைப்பது போல் ஒலி வெகு அருகில் கேட்டது. கதவைத் திறந்து  தேடிப் பார்த்தால் வெகு அருகில் ஒரு மூங்கில் புதரிலிருந்து அந்தப் பறவை பாடிக்கொண்டிருந்தது. சற்று கூர்ந்து கவனித்ததும் இனம் கண்டுகொள்ள முடிந்தது. அது உலகிலேயே இனிமையான குரலைக் கொண்ட சோலை பாடிப்பறவை என்று (இந்தியில் ஷமா). ஊட்டி போகும் வழியில் பரலியார் அருகே மலைப்பாதையில் ஒரு நாள் நடந்துபோனபோது ஒரு சோலையில் இது பாடிக்கொண்டிருந்ததைப்  பார்த்த நினைவு வந்தது.

விடுதிக்கருகே ஒரு குளம்.  அதில் மீன் பிடித்து எங்களுக்கு சமைத்துக் கொடுப்பார் அங்கு வேலை செய்யும் பர்மிய இளைஞர் ஜான்.  சுனாமிப் பேரலையில் தான் உயிர் பிழைத்த கதையை  இவர் கூறினார். புனேயிலிருந்து வந்திருந்த மூன்று உயிரியலாளர்களுக்கு வழிகாட்டியாக  கரையோரம் அவர்களுடன் நடந்துகொண்டிருந்தபோது கடல் வெகுதூரம் உள்வாங்கியதைப் பார்த்து ஒரு மரத்தில் ஏறிக்கொண்டார்.  அந்த மூன்று பேரும் ஜானின் எச்சரிப்பைக் கேளாமல், ஆபத்தை உணராமல் உள்வாங்கலைப்  படம் பிடித்துக்கொண்டிருந்தனர். சுனாமிப் பேரலை அவர்களைச்  சுருட்டிக் கொண்டு போனதை ஜான் பார்க்க முடிந்தது.  சீக்கிரமே அவர் ஏறியிருந்த மரமும் விழுந்து இழுத்துச் செல்லப்பட்டது. மரத்தில் தொற்றிக்கொண்டு மூன்று நாட்கள் கடலில் மிதந்த ஜான் நான்காவது நாள் மீட்கப்பட்டார். அந்த மூன்று நாட்களின் ஒருகணம்கூட தன் நினைவில் இல்லையென்கிறார். இன்று இவர்  காட்டுயிர் ஆய்வுக்காக வருபவர்களுக்கான அந்த விடுதியைத் தனியாக நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது நாய் யோகி மட்டும்தான் அவருக்குத் துணை.

click here

click here
click here