உயிர்மை - uyirmmai march11
 
பத்ம வியூகம்
- மனுஷ்ய புத்திரன்
அமைதி, பணிவு, அணிக் கலாச்சாரம்: யாருக்கானது உலகக் கோப்பை
- ஆர்.அபிலாஷ்
பயணம்: திக்குத் தெரியாத திசையில்
- சாரு நிவேதிதா
“ ‘மக்களைத் தம் ஆத்திரத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள்’ என்று நரேந்திர மோடி கூறியபோது நான் அங்குதான் இருந்தேன்.” குஜராத் வன்முறை ஒன்பதாம் ஆண்டு நினைவு (பிப்ரவரி 27 - மார்ச் 3, 2002)
- ஆஷிஷ் கேத்தன்
வெளுக்கும் சாய முகங்கள்
- சுப்ரபாரதி மணியன்
பிரமிடுகளிலிருந்து அடிமைகள் விடுதலைப் பிரகடனம் செய்கிறார்கள்
- யமுனா ராஜேந்திரன்
ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் புதிய பரிமாணங்கள்:
- மாயா
உதவி இயக்குனர்கள் வெளிச்சத்தை தொடரும் நிழல்
- அம்ஷன் குமார்
சினிமா பொருளாதாரத்தை சீரழிக்கும் எதேச்சதிகார வர்த்தகம்
- அ.ராமசாமி
அறியாமையின் அறிவியல்
- எஸ்.ராமகிருஷ்ணன்
தரையில் ஒரு கூடு
- சு.தியடோர் பாஸ்கரன்
நீலகண்டன் கவிதைகள்
- நீலகண்டன்
இன்று மதியம் தற்கொலை செய்து கொண்டவன்
- வா.மணிகண்டன்
மைதிலி
- இந்திரஜித்
ஆயுளைக் கூட்டுவது (BOOK OF OBITUARIES)
- அ.முத்துலிங்கம்
பெண்கள்பால் வைத்த நேயம்
- ஞானக்கூத்தன்
புத்தகங்களின் உலகில்....
- ந.முருகேச பாண்டியன்
‘வேழாம்பல் குறிப்புகள்’ காலம் பிணைத்த கரங்கள்
- ஆர்.அபிலாஷ்
பசியிலும் பெரிய தீ ரவிக்குமாரின் ‘மழை மரம்’
- இமையம்
மலேசியா வாசுதேவன்: [1944 - 2011] நின்றுவிட்ட கோடைக்கால காற்று
- ஷாஜி
எஸ்.வி.ராமகிருஷ்ணன்: [1936-2011] வரலாற்றில் எரிந்தசுடர்
- வா.மணிகண்டன்
கடிதங்கள்
- -
click here
அறியாமையின் அறிவியல்
எஸ்.ராமகிருஷ்ணன்

இன்றைய வானம்

There is  no result in nature without a cause; understand the cause and you will have no need of the experiment. - Leonardo da Vinci

“உலகெங்கும் விஞ்ஞானிகள் தங்களது கடந்தகால வாழ்வைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஏன் தெரியுமா?” என்று ஒசில் கேட்டது.

ஒசிலைச் சந்திப்பதை நான் சமீபமாக ஒரு நெருக்கடியாகவே உணர்கிறேன். காரணம், அது என்னைப் பகடி செய்வதுடன் உண்மையை எந்த ஒளிவும் மறைவும் அற்றுப் பேசிவிடுகிறது. ஒரு பூனை இவ்வளவு படிக்கிறதே என்ற பொறாமையும் எனக்கிருக்கிறது என்பதால் அதை சகித்துக்கொள்ள என்னால் முடியவில்லை.

மனிதனின் முக்கிய பிரச்சினை, அவன் மிருகங்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதே. சாலையோரம் ஒரு நாய் எலும்புத் துண்டை ருசித்துக்கொண்டிருப்பதை ஒரு மனிதன் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். அதைக் காண எனக்கு அவமானமாக இருக்கிறது என்று செகாவ் ஒரு குறிப்பில் எழுதியிருக்கிறார். இன்றைக்கும் கிராமங்களில் யானை சாப்பிடுவதைப் பொறாமையுடன் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். எறும்பு ஒரு கற் கண்டை இழுத்துக்கொண்டு போவதைக் கண்டால்கூட உடனே அதை நசுக்கிக் கொன்றுவிடும் மேலான மரபு நமக்கிருக்கிறது அல்லவா. ஆகவே மிருகங்களைப் பொறாமையோடு பார்ப்பது மனிதனின் இயல்பே.

ஆனால் பசியில் மனிதனை விடவும் மிருகங்கள் கொள்ளும் அலைச்சல் மிக அதிகம். ஒரு புலி ஆறுமுறை முயற்சி செய்தால்தான் அதற்கே ஒரு மான் கிடைக்கக்கூடும். இதுவே வயதாகி ஓடுவதற்கு இயலாமல் போய்விட்டால் புலி பட்டினி கிடந்து சாகவேண்டியது வரும். மிருகங்கள் பசியில் உணவு தேடி அலைவதைப் போல மனிதர்களுக்கு ஒரு நெருக்கடி வந்தால் அருகில் உள்ள இன்னொரு மனிதனை அடித்து சாப்பிட்டுவிடுவார்கள். மிருகங்கள் சொந்த இனத்தைக் கொன்று உண்பதில்லை. அந்த வகையில் அவை மேலானவை.

இன்னொன்று, பூனைகளின் கண்களில் எப்போதுமே ஒரு கேலியிருக்கிறது. ஒருவேளை அது உலகைப் பார்த்து எந்தநேரமும் பரிகசித்துக்கொண்டிருக்கிறதோ என்றுகூட தோன்றுகிறது. மனிதர்களோடு ஆதியில் இருந்து பழகிய மிருகமல்லவா. அவனது பலவீனத்தை நிச்சயம் அறிந்துதானே இருக்கும். என் நண்பன் ஒசில் புத்தகங்களின் வழியாக அறிவின் அத்தனை குறுக்கு சந்துகளிலும் சுற்றிவந்து கொண்டிருக்கிறது என்பதால் அதோடு பேசுவதற்குத் தயக்கம்.

எனது மௌனத்தைக் கண்ட ஒசில் மறுபடி கேட்டது.

“மௌனமாக இருப்பது ஒரு தந்திரம். ஒரு கள்ளத்தனம். வாயைத் திறந்து பதில் சொல்” என்றது.

நான் யோசிப்பதாகச் சொன்னேன். ஒசில் சிரித்தபடியே, “மனிதன் கண்டுபிடித்த மிகப்பெரிய தந்திரம் யோசிப்பதுதான். ஒரு வார்த்தையின் வழியே பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் தங்களது அறியாமையைக் காப்பாற்றிவருகிறார்கள். இந்த அறியாமைக்கு விஞ்ஞானிகளும் விதிவிலக்கில்லை. அறியாமைதான் விஞ்ஞானத்தின் துவக்கப்புள்ளி. அதிலிருந்தே அறிவின் தேடுதல் துவங்குகிறது” என்றபடியே “நானே சொல்லிவிடுகிறேன்.

ஒருவன் விஞ்ஞானியான உடனே தனது சொந்த ஊர், உடன்படித்த நண்பர்கள், சொந்த வீடு, தான் காதலித்த பெண், தனது இயல்பான அசட்டுத்தனங்கள், தனது மத நம்பிக்கைகள் அத்தனையும் ஒளித்துக் கொள்ளத் துவங்குகிறான். நேரடியாக ஏதோவொரு விண்கலத்தில் வந்து பூமியில் இறங்கியவனைப் போலவே நடந்துகொள்ளத் துவங்குகிறான். அதுதான் புரியவேயில்லை. அறிவியல் என்பது எல்லா அறிவுத்துறைகளைப் போல ஒரு துறைதானே. அந்தத் துறையின் விற்பன்னராகியதும் ஏன் சொந்தக் கிராமமும் படித்து வளர்ந்த விதமும் மறந்து போய்விடுகிறது. சரி, அது வேலைக்கான வேஷம் என்று வைத்துக் கொள்வோம்.

வேலை செய்யப் போகின்ற நாட்டில் எவ்வளவு அற்புதமான இசை இருக்கிறது எவ்வளவு வளமான இலக்கியங்கள், நுண்கலைகள், விளையாட்டு இருக்கிறது. அதில் என்ன ஈடுபாடு கொண்டிருக்கிறார். அதை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். யோசித்துப் பார்த்தால் படிக்கின்ற காலத்தில் இருந்த ஈடுபாட்டில் பத்து சதவீதம் கூட வேலை பார்க்கும் காலத்தில் இருப்பதேயில்லை. காரணம், விஞ்ஞானத்தை மற்ற துறைகளை விட உயர்வாக நினைக்கும் மனோபாவம் அல்லது விஞ்ஞானமே தெரிந்துவிட்டது, மற்றவை எதற்கு என்ற நினைப்பு. இரண்டையும் தாண்டி ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டால் விஞ்ஞானி என்ற பிம்பம் கலைந்து போய்விடுமே என்ற பயம். இது விஞ்ஞானத்திற்கு மட்டுமானதில்லை, எல்லா அறிவுத்துறைகளுக்கும் பொருந்தக்கூடியதே.

உள்ளுரில் வசிக்கும் விஞ்ஞானியும் இப்படித்தானிருக்கிறார். அயல்நாட்டில் வசிக்கும் நம் ஆளும் இப்படித்தானிருக்கிறார் என்றால் நமது பொதுக்குணம் அறியாமையா?”

நான் வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். ஒசில் எரிச்சலுடன் “அமெரிக்காவில் உள்ள இரண்டு தமிழக விஞ்ஞானிகள் சந்தித்துக் கொண்டால் என்ன பேசிக் கொள்வார்கள்?” என்று கேட்டது.

நான் யோசிக்காமல் பதில் சொன்னேன்:

“கர்நாடிக் ம்யூசிக் கச்சேரி பற்றி.”

ஒசில் என்னை உற்சாகத்துடன் பாராட்டியதுடன் “இந்தக்கொடுப்பினை இலக்கியத்திற்கு ஒருபோதும் கிடைக்காது. எந்த இரண்டு விஞ்ஞானிகளும் ஆர்வத்துடன் தமிழ் இலக்கியவாதிகள் எவரையும் பற்றிப் பேசி நான் பார்த்ததே கிடையாது. அவர்களுக்கு இன்னமும் நினைவில் இருப்பது  தாங்கள் கேட்டு ரசிக்கும் கர்நாடக இசை மட்டுமே. அதில்கூட தமிழிசை கேட்பது இரண்டாம்பட்சமே. அது வேறு அரசியல். அதைப் பற்றிப் பேசினால் தீரவே தீராது. கிரிக்கெட், சினிமா, கர்நாடக இசை இந்த ‘மூன்றும்தான்’ படித்த அறிவுசார் வர்க்கத்தின் பொதுரசனை.  இதில் விஞ்ஞானி, வெறும் ஆள் என்ற பேதமில்லை.”

“நம் ஊரிலும் அப்படித்தானே இருக்கிறார்கள்” என்று சமாதானம் செய்தேன். ஒசிலுக்கு ஆத்திரமாக வந்தது. “எல்லாவற்றையும் ஏன் பொய்சமாதானம் சொல்லி அடக்கி விடுகிறீர்கள். சரியான விஷயங்களுக்காகப் கோபப்படுவதும், ஆத்திரப்படுவதும் கட்டாயம் வேண்டும். அது இல்லாததுதானே நமது பெருங்குறை” என்றது.

“இன்றைக்கு நான் வகையாக மாட்டிக் கொண்டேன்” என்றபடியே “ஒசில் தற்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டேன். “அதைப்பற்றிப் பேசுவதற்கு வந்தபோதுதான் இந்தக் கேள்வியே மனதில் தோன்றியது. சந்திரசேகரை உனக்குத் தெரியும்தானே?” என்றது.

“யார் வாகை சந்திரசேகரா? ‘சிவப்புமல்லி’, ‘பாலைவனச் சோலை’யில் நடித்தாரே!” என்று ஆர்வமாகக் கேட்டேன்.
 
“சினிமாதான் தமிழ்நாட்டின் ஒரே ரெபரென்ஸ். நான் சொல்ல வந்தது விஞ்ஞானி சந்திரசேகரை” என்றது.

“அவரைத்தான் தெரியுமே.  நோபல் பரிசு வாங்கியிருக்கிறார். சர்.சி.வி.ராமனின் சொந்தக்காரர் ஆயிற்றே” என்றேன்.

“உறவுமுறை சொல்லி அறிந்து கொள்ளாவிட்டால் அவரை ஏற்றுக் கொள்ளமாட்டார்களா? யாரைப் பற்றிச் சொன்னாலும் அவர் இன்னாருக்கு மச்சான். இன்னாருக்கு மாமா, இன்னாருடைய ஒன்றுவிட்ட சகலை இது எல்லாம் தேவைதானா?” என்று கேட்டது ஒசில்.

“அதுதானே நமது மரபு” என்றேன். ஒசில் என்னை முறைத்தபடியே “சந்திரசேகர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதன் பெயர் Truth and Beauty. - Aesthetics and Motivations in Science. இதில் Shakespeare, Newton and Beethoven என்றொரு கட்டுரையிருக்கிறது. ஒரு விஞ்ஞானி எழுதிய ஆகச்சிறந்த இலக்கியக் கட்டுரை இதுவே என்பேன். மிக அற்புதமாக எழுதியிருக்கிறார்.

கவிதை, இசை, அறிவியல் இந்த மூன்றின் முக்கிய ஆளுமைகளை நுண்மையாக ஆராய்ந்து அவர்களின் சிருஷ்டிக்குப் பின்னால் உள்ள பொதுமைகளை, வேறுபாட்டினை ஆராய்வதே அக்கட்டுரை. இந்தக் கட்டுரை முழுவதும் எலியட், வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கதே என்று முக்கிய கவிஞர்கள், விமர்சகர்களின் மேற்கோள்கள் உள்ளன. சந்திரசேகரின் பரந்த வாசிப்பும் கூர்ந்த அவதானிப்பும் இலக்கியம் மற்றும் இசையில் அவருக்கு இருந்த தேர்ச்சியும் அதில் வெளிப்படுகிறது.  சுப்ரமணியம் சந்திரசேகர் லாகூரில் பிறந்தவர். அவரது தாய்மொழி தமிழ். அப்பா ஆடிட்டர் ஜெனரலாகப் பணியாற்றியவர். மற்றும் ஒரு தேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்.

சந்திரசேகரின் அம்மா தேர்ந்த படிப்பாளி. அவர் இப்சனின் ‘பொம்மை வீடு’ நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். சந்திரசேகருடன் பிறந்தவர்கள் பத்துப் பேர். பெரிய குடும்பம். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் படித்து பின்பு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜில் படித்திருக்கிறார்.

அதனால் இசையிலும் இலக்கியத்திலும் சந்திரசேகருக்குத் தீவிரமான ஈடுபாடு இருந்திருக்கிறது (ஐன்ஸ்டீனுக்கும் இதே ரசனைகள் இருந்தன. அவற்றை விரிவாக எழுதியிருக்கிறார்). சந்திரசேகரின் மனைவி லலிதா எழுதிய குறிப்பு ஒன்றில் அவர்கள் கருத்தரங்கில் கலந்துகொள்ள நீண்ட தூரம் காரில் பயணம் செய்யத் துவங்கியவுடன் லலிதா பாட ஆரம்பிப்பாராம். வழிமுழுவதும் பாட்டு கேட்டுக் கொண்டே வருவது சந்திர சேகரின் வழக்கம். இசையில் அவ்வளவு ஈடுபாடு கொண்டவர். அமெரிக்க இலக்கியங்களையும் சமகால இந்தியப் படைப்புகளையும் செவ்வியல் படைப்புகளையும் ஆழ்ந்து வாசித்திருக்கிறார்.

இந்தக் கட்டுரை அவரது புலமையின் சான்று. ஷேக்ஸ்பியரை ஒரு விஞ்ஞானி எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார் என்பதற்கு இதை உதாரணமாகச் சொல்வேன். சந்திரசேகர் சுட்டிக்காட்டும் பொதுமை, இந்த மூவரும் தங்களது சிருஷ்டியை வெளிப்படுத்த புறக்காரணிகளே முதன்மையாக இருந்திருக்கின்றன. சூழலின் நெருக்கடி அவர்களைத் தீவிரமாக இயங்க வைத்திருக்கிறது. அத்துடன் அவர்களுக்குக் கிடைத்த நட்பும் ஆதரவுமே அவர்களை மேலே கொண்டுவந்திருக்கிறது. மூவரது மனதும் ஒன்று போலவே செயல்பட்டிருக்கிறது. மூவரும் தங்களது கடைசிப் படைப்புகள்வரை வீரியமாகவே இருந்திருக்கிறார்கள். இசை, இலக்கியம், அறிவியல் என துறைகள் வேறாக இருந்தாலும் மூவரும் ஒரே விதமான உந்துசக்தியின் வழியே செயல்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சந்தித்த பிரச்சினைகள், சொந்த வலிகள் எப்படி சிருஷ்டிக்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை அழகாக விளக்குகிறார். இந்த ஒப்புமையின் முடிவில் கலையில் அழகு என்பது என்ன என்பதைப் பற்றி அவர் தெரிவிக்கும் விளக்கம் அற்புதமானது. இதுபோன்ற புதிய வெளிச்சக் கட்டுரைகளே இன்றைய தேவை” என்றது ஒசில்.

நான் ஆமோதித்தபடியே “இன்று விஞ்ஞானமும் கலையும் பற்றி நுட்பமாக எழுதுவதற்கு நிறைய புதியவர்கள் வந்திருக்கிறார்கள். ‘சொல்வனம்’ என்ற இணைய இதழை இதற்காகவே வாசிக்கிறேன். ராமன் ராஜா, ஆர். எஸ்.நாராயணன் போன்றவர்களின் கட்டுரைகளை வாசிக்கிறேன். மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள்” என்றேன்.

ஒசில் சோர்வுடன் கவிஞர் ஷெல்லி பற்றிக் குறிப்பிடும்போது “Shelley is a scientist’s poet என்கிறார்கள். நம் ஊரில் யாரை அப்படிக் குறிப்பிடுவது என்று தெரியவில்லை. யோசித்துச் சொல்லு. அதுவரை Newton’s Principia for the Common Reader படித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கிளம்பியது.

படித்த பூனைகள் அதிகமில்லாமல் இருப்பது நல்லது என்று நினைத்துக்கொண்டு நீண்ட நேரம் அறிவுத் துறை சார்ந்து உரையாடலை மேற்கொண்ட அசதியால் சாய்ந்து படுத்துக் கொண்டேன். மனிதனது கண்டுபிடிப்புகளில் மிக முக்கியமானது சாய்வு நாற்காலி. அதில் சாய்ந்து கொண்டால் போதும், உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் ஊசலாடலாம் என்றபடியே சாய்ந்து கொண்டேன்.

ஜப்பானின் சரோமா ஏரியில் வசிக்கும் ஏகா எனும் தவளை நண்பன் ஒரே விஷயத்தைப் பதினோருமுறை குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது. ஆர்வம் அதிகமாகிவிட்டால் இப்படிக் குறுஞ்செய்தி அனுப்புவது வழக்கம்தானே. முன்பு ஒரு முறை எனக்கு ஒரு நாளில் 112 தடவை ‘நீங்கள் சாப்பிட்டாச்சா’ என்ற குறுஞ்செய்தி வந்து கொண்டேயிருந்தது. இவ்வளவு ஆர்வமாக யார் அனுப்புகிறார்கள் என்று பதில் செய்தி அனுப்பினால் பதில் வராது. நானும் நாள் முழுவதும் ‘சாப்பிட்டு விட்டேன்’ என்று பதில் அனுப்பியபடியே இருந்தேன். முடிவில் அது வேறு யாருக்கோ யாரோ அனுப்பிய தவறான செய்தி என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனது கொடுமை. அந்தப் பதில் செய்தியும் முப்பது நாற்பது முறை எனக்கு வந்து கொண்டேயிருந்ததே.

நான் ஏகாவிற்குப் பதில் செய்தி அனுப்பி என்னவென்று கேட்டேன்.

“இன்றுள்ள இளங்கவிஞர்களில் மிக முக்கியமானவர். ஃபஹீமா ஜஹான். அவரது கவிதைகளை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். தனித்துவமும் செறிவுமிக்க கவிதைகள் அவை. அவரது கவிதை ஒன்றை அனுப்பியிருக்கிறேன். வாசித்துப் பார்” என்று பதில் குறுஞ்செய்தி வந்திருந்தது. தவளைகள் எங்கிருந்தோ நல்ல கவிதைகளை அறிந்து விடுகின்றன. தண்ணீர் சகவாசம்தான் அதற்குக் காரணம் போலும். ஃபஹீமாவின் கவிதையை வாசித்தேன். சொற்கள் விம்மும் கவிதையது. எத்தனை நுட்பமாக எழுதியிருக்கிறார்.

மழை: ஃபஹீமா ஜஹான்.

இறுக மூடப்பட்ட
வீட்டினுள் வர முடியாது
நனைந்து கொண்டிருக்கிறது
மழை

ஆட்டுக் குட்டிகளுடன்
தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்று
இன்னொரு
புல்வெளி தேடிப் போவதற்குத்
தருணம் பார்க்கிறது

புகார்கொண்டு
தன்னைப் போர்த்தியவாறு
தென்னந் தோப்பினுள்
வழிதவறியலைகிறது

வாய் திறந்து பார்த்திருந்த
நீர் நிலைகளின்
கனவுகளை நிறைவேற்றிய பின்
மீன் கூட்டங்களைச்
சீதனமாகக் கொடுத்துச் செல்கிறது

யார் யாரோ
வரைந்த கோடுகளையெலாம்
தனது கால்களால்
தேய்த்து அழித்துச்
சேற்றில் புரண்டவாறு
வீதிகளைக் கழுவுகிறது

பெரும் கோட்டைகளையெலாம்
கரைத்தழித்திட நினைத்து
நிறைவேறாமற் போகவே
அவற்றின் வசீகரங்களைக்
கழுவிக் கொண்டு நகர்கிறது

ஆழ் மண் வரையும்
நீரிட்டு நிரப்பிய பின்
அடுத்துச் செய்வதென்ன?
என்ற வினாவுடன்
தரை மீது தேங்கி நிற்கிறது

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்துகொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப் போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை

“டாவின்சி விஞ்ஞானியா ஓவியரா?” என்றபடியே பறந்து வந்து என் அருகில் அமர்ந்தது இன்னொரு நண்பனான புலனி. அவன் இந்தியாவெங்கும் சுற்றியலைபவன். “டாவின்சி ஒரு முக்கியமான விஞ்ஞானி. அதற்குப் பிறகு ஓவியர்” என்றேன். புலனி அதை ஏற்றுக்கொண்டு “அறிவுசார் துறைகளில் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய முக்கியமான புத்தகம் ‘The Notebooks of Leonardo da Vinci’. இது ஓவியர்களுக்காக எழுதப்பட்டிருந்தபோதும் அதில் யாவரும் கற்றுக் கொள்ள வேண்டியவை அதிகம் இருக்கின்றன. ஓவியத்தை டாவின்சி இயற்கையை அறியும் விஞ்ஞானமாகவே பார்க்கிறார் என்பதற்கு இந்தப் புத்தகம் சாட்சி. டாவின்சி மனிதன், பறவைகளை முழுமையாக அவதானித்து அதன் இயல்புகளைக் கற்றுக்கொண்டால் மனிதனை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார். இன்றுள்ள ஸ்கேன் எடுக்கும் தொழில்நுட்பம் வருவதற்கு முன்பாகவே ஓவியர்கள் உடலின் உட்புறத்தை துல்லியமாக சித்திரமாக்கியிருக்கிறார்கள் என்றால் அவர்கள்தானே விஞ்ஞானத்தின் முன்னோடிகள்.”

நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது ஐசி என்ற திரைப்பட ரசிகனாகிய வண்டு ஒரு படத்தின் லிங்க்கை அனுப்பி “இன்றிரவே பார்த்துவிடு” என்று மின்னஞ்சல் அனுப்பி வைத்தது. ஒரு மனிதனை அறிவாளியாக்க எவ்வளவோ பாடுபடுகிறார்கள். ஆனால் மனிதர்கள் அறியாமையில் இருக்கத்தானே விரும்புகிறார்கள். அப்படி இருப்பதற்கு எவ்வளவு காரணங்களை உண்டாக்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவையும் உண்டாக்கிக் கொள்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, நானும் அப்படியான ஆள்தானே என்றபடியே சோம்பேறித்தனத்துடன் மெயிலில் உள்ள லிங்க்கைப் பார்வையிடத் துவங்கினேன். புலனி ஆர்வத்துடன் “என்ன படம்?” என்று கேட்டது.

“ஜப்பானின் மிக முக்கிய எழுத் தாளரான யுகியோ மிஷிமா 1966ல் இயக்கிய குறும்படம் ‘Rites of Love and Math’. பல ஆண்டுகாலம் இந்தப் படம் தடைசெய்யப்பட்டிருந்தது. தற்போது அது வெளியாகி இருக்கிறது. தனது கணித அறிவின் மூலம் கண்டுபிடித்த ஒரு பார்முலாவைக் கொண்டு உலகை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்று நம்பும் ஒரு விஞ்ஞானி அதைத் தனது காதலியின் முதுகில் பச்சை குத்துவதன்வழியே பதிவு செய்துவிடுகிறார். அவர்களது காதலும் கணிதமேன்மையும் பற்றியதே இந்தப் படம்” என்றபடியே “பார்க்கலாமா” என்று கேட்டேன். “26 நிமிடங்கள் ஓடக்கூடியது. இரண்டே நாட்களில் மிஷிமா படமாக்கியிருக்கிறார். தேர்ந்த ரசனையான குறும் படம். இதன்பின்னே செயல்பட்டவர்கள் கணித விஞ்ஞானிகள். மிஷிமாவின் சிறுகதையில் இருந்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றபடியே படத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம்.

புலனி “இயற்கையைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவனிடம் தாவரங்கள் உரையாடும் என்று எங்கோ படித்திருக்கிறேன். அது இந்தப் படத்தைக் காண்கையில் ஏனோ அந்த வாசகம் நினைவிற்கு வருகிறது” என்றபடியே பறந்து போக ஆரம்பித்தது.

click here

click here
click here