உயிர்மை - Uyirmmai July 2010
 
பிணங்களின் விலை
- மனுஷ்ய புத்திரன்
போபால் நஞ்சாகும் நீதி
- அ.முத்துக்கிருஷ்ணன்
ராவணன் : குழப்பங்களின் கூடாரம்
- சாரு நிவேதிதா
கே.ஜே.யேசுதாஸ் கண்ணீரின் கானம்
- ஷாஜி
ஆறுதலாகப் பேசுவோம்
- அ.முத்துலிங்கம்
பிரித்தானிய தேர்தலும் இலங்கைத் தமிழரும்
- இளைய அப்துல்லாஹ்
மறதியின் கனவு
- வாஸந்தி
தி.மு.க.வில் குஷ்பு தேர்தல் அரசியலின் கச்சிதமான தேர்வு
- அ.ராமசாமி
மாவோயிஸம் : கனிவின் மரணம்
- ரவிக்குமார்
இப்படித்தான் வாழ்கிறோம்
- பிரபஞ்சன்
தேவதாஸைக் காதலிப்பவர்கள்
- எஸ்.ராமகிருஷ்ணன்
நீதி கேட்கும் காலணிகள்
- சுகுமாரன்
மூன்று சீனக் கவிதைகள்
- ஆங்கில வழித் தமிழில் : ரவிக்குமார்
உடல் வாசனை
- மனுஷ்ய புத்திரன்
உள்ளே வரும்போதே
- மனுஷ்ய புத்திரன்
உன் தோல்வியின் சரித்திரம்
- மனுஷ்ய புத்திரன்
உன்னை விட்டுப் போகும்போது
- மனுஷ்ய புத்திரன்
பொன்.காந்தன் கவிதைகள்
- பொன்.காந்தன்
தானா விஷ்ணு கவிதைகள்
- தானா விஷ்ணு
கருணாகாரன் கவிதைகள்
- கருணாகாரன்
மூன்று காகங்கள்
- எஸ்.செந்தில் குமார்
ஈழபோராட்டத்தின் சுவடுகளில்...
- அம்ஷன் குமார்
துயரத்தின் சாயைகள்
- இமையம்
தமிழவன் என்ற கதைசொல்லி
- ந.முருகேச பாண்டியன்
கடிதங்கள்
- /
click here
தமிழவன் என்ற கதைசொல்லி
ந.முருகேச பாண்டியன்

தமிழ்ப் புனைகதை மரபு, கடந்த முப்பதாண்டுகளில் பல்வேறு  புதிய போக்குகளை ஏற்றுக்கொண்டு, பாய்ச்சலாக மாற்றமடைந்துள்ளது. இலக்கியம் சார்ந்த மேலைக்கோட்பாடுகளைப் படைப்பாக்கத்தில் கையாளுவது வலுவடைந்துள்ளது. மரபு வழிப்பட்ட கதைசொல்லிகளின் ஆக்கங்களுடன் நவீனமான ஆக்கங்களும் இணைந்து, தமிழ் நாவலின்  பரப்பு வீச்சாகப் பரவியுள்ளது. மொழியின் அதிகபட்ச சாத்தியங்களுடன் கதைசொல்லுதல், வாசிப்பின் வழியே கிளர்த்தும் அனுபவங்கள் ஆழமான கருத்தியல் பின்புலமுடையன. 1970களில் 'சோதனை முயற்சி' என்ற நிலையில் நடைபெற்ற இலக்கிய முயற்சியானது, அடுத்த பத்தாண்டில் கோட்பாட்டு நிலையில் புதிய வடிவமெடுத்தது தற்செயலானது அல்ல. எல்லாவற்றுக்கும் மேலை நாடுகளைச் சார்ந்திருக்கும் பின் காலனிய நாட்டினுக்கே உரிய நிலையில், நவீனத் தமிழிலக்கியவாதிகளும் மேலைக்கோட்பாடுகளைத் தமிழுக்கு இறக்குமதி செய்யும் நிலை தொடக்கத்தில் நிலவியது. எனினும் காலப்போக்கில் தமிழ் மரபினுக்கேற்ற கதைசொல்லலையும் மேலைக்கோட்பாட்டினையும் ஒருங்கிணைத்துப் புதிய வகைப்பட்ட படைப்புகளைப் படைத்திடுமாறு சூழல் மாறியது. இத்தகு சூழலில் இலக்கிய விமர்சனத்தளத்தில் தீவிரமாக இயங்கியதுடன், அமைப்பியல் கோட்பாட்டினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய தமிழவனின் இடம் தனித்துவமானது. மேலைச்சிந்தனை மரபினுக்கு முக்கியத்துவம் தரும் தமிழவன் அடிப்படையில் படைப்பாளியும் கூட. கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் தந்து வெளியான மேற்கத்திய நாவல்களின் மீதான ஈடுபாட்டின் காரணமாகத் தமிழிலும் அவை போன்று நாவல்களை எழுதியுள்ள தமிழவனின் நாவலாக்க முயற்சி கவனத்திற்குரியது. சோதனை முயற்சி என்ற நிலையில் அவருடைய இலக்கிய ஆளுமை மதிப்பீட்டிற்குரியதாகிறது.

தமிழவனின் 'ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்' என்ற நாவல் 1985-இல் வெளியானபோது, ஏதோ வித்தியாசமான எழுத்து முயற்சி என்று பலரும் கருதினர். சிலருக்கு அந்த நாவல் புதிய திறப்பினை ஏற்படுத்தியது. எனினும் சரித்திரத்தில் படிந்த நிழல்கள் (1993). ஜி. கே. எழுதிய மர்ம நாவல் (1999), வார்ஸாவில் ஒரு கடவுள் (2009) ஆகிய நாவல்கள் தமிழவனின் தொடர்ச்சியான நாவல் ஈடுபாட்டினை வெளிப்படுத்துகின்றன. மாறுபட்ட கதைசொல்லல் மூலம் அவர் சித்திரித்த புனைகதைத் தளங்கள், தமிழுக்குப் புதியன. தமிழ்மொழி என்னும் அதிகார மையம் மூலம் கட்டமைக்கப்படும் சமூகமயமாக்கலையும், பண்பாட்டுக் கூறுகளையும் விசாரனைக்குட்படுத்துவதாக நாவல் முயற்சிகள் அமைந்திருந்தன. தொடர்ச்சியறு எழுத்து முறையின் மூலம் காலத்தின் ஒழுங்கைச் சிதைத்து, புதிய வெளியைக் கட்டமைப்பதில் தமிழவன் தொடர்ந்து முயன்றது, அவருடைய நாவல்களில் வெளிப்பட்டது.

பின்  நவீனத்துவப் பின்புலத்தில், தமிழவனின் நாவல் முயற்சிகள் உள்ளன. சுய விமர்சனம் மூலமாகத் தன்னையும்  தான் சார்ந்து வாழும் தமிழர் வாழ்நிலையையும்  கேள்விக்குள்ளாக்குதல் மூலம் பருண்மையான  அரசியல் பரிமாணங்களை அறிதல் என்ற நோக்கில் தமிழவனின் தேடல் விரிந்துள்ளது.  வரலாற்றையும் தன்னிலையையும் ஒருங்கிணைத்துச் சிக்கலுக்குள்ளாக்கிச் சிந்தனையின் கூட்டாக வாழ்நிலையைக் கண்டறிதல் என்ற முயற்சிக்குப் புனைகதையாக்கம் தமிழவனுக்குப் பயன்பட்டுள்ளது. இதுவரை பொதுப்புத்தியில் தகவமைக்கப்பட்டிருந்த பெருங்கதையாடலை அழிக்கும் வேளையில், சுயம் என்பது ஒருவகையான மாயை என்ற கருத்தியலும் தமிழவனுக்கு உண்டு. இன்னும் சொன்னால் நவீன எழுத்து என்பதே விளையாட்டு என்ற ரீதியில் தமிழவனின் படைப்பாக்கம் தொடர்கின்றது.

தமிழவனின்  நாவல்கள் மரபுவழிப்பட்ட கதை சார்ந்த வாசிப்பை  முன்னிறுத்தவில்லை. வாசகனை மையமிட்ட நிலையில் நாவலின்  இயங்குதளம் விரிகின்றது. வாசகன் என்பவன் வெறுமனே நாவலை வாசிப்பவன் மட்டுமல்ல என்ற கருத்து  தமிழவனுக்கு உண்டு. அவர் எழுதிய பிரதியானது, வாசிப்பின் மூலம் ஒவ்வொரு வாச கருக்குள்ளும் வெவ்வேறு பிரதிகளாக வடிவமெடுக்கின்றது. ஒரு வாசகனாக மாறித் தமிழவனே தனது நாவல்களை வாசிக்கும்போது, புதியதான பிரதி உருவாக்கப்படும் விந்தையான நிலை ஏற்பட வாய்ப்புண்டு. மனிதனின் மனம் வெளிப்படுத்தும் நினைவு என்பது, எழுத்தற்ற எழுத்தால் ஆன புத்தகமாக விரியும்போது, தமிழவனின் நாவல்கள் முன்னிறுத்தும் புனைவுகள் அளவற்று விரிகின்றன. இந் நிலையில் இதுவரை நவீனத் தமிழில் முன் வைக்கப்பட்ட உள்முகத் தேடல், சுயதரிசனம், உள்ளொளி போன்ற சொற்கள் அர்த்தம் இழந்து போகின்றன. தமிழவனின் நாவல் முயற்சி, நாவலாசிரியரின் கட்டுக்குள்ளிருந்த புனைகதையை விடுவித்து, படைப்பாளியைப் புறக்கணித்து விட்டு, பன்முக நிலையில், 'இன்மை'யாக இருக்க முயலுகின்றது. லத்தீன், அமெரிக்க நாவலாசிரியரான மார்க்யுஸின் கதைசொல்லல் முறையைப் பின்பற்றித் தனது முதல் நாவலினைத் தமிழவன் தொடங்கியிருந்தாலும், இந்தியப் பின்புலத்தில் தமிழ் மரபினையும் அடையாளத்தையும் விவாதிப்பதற்கான தளமாக மாற்றியுள்ளார். இதனால் மாற்றுப் பண்பாட்டு மரபுகள் குறித்த விசாரணையைத் தொடங்குவதற்கான தளமாக அந் நாவல் அமைந்துள்ளது.

ஏற்கனவே  தமிழர்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த மனிதர்கள் பற்றிய கதைகளின் தொகுப்பு என்ற புரிதலை நாவலின் தலைப்பான 'ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்' ஏற்படுத்துகிறது. இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையும் பாரம்பரியமும் மிக்க தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு, தமிழர் பற்றிய புனைவுகளுக்கு ஏதும் வரையறை இருக்க முடியாது. எல்லாவிதமான ஏற்ற இறக்கங்களும், மேன்மையும், சிறுமையும் வரலாற்றில் பதிவாகியிருந்தாலும், 'கல்தோன்றி மண்தோன்றுவதற்கு முன்னர் தோன்றிய மூத்த குடி தமிழர்' என்ற போலிப் பெருமை, ஆளுமையாக விளங்கும் மக்களின் வாழ்க்கைக் கதையை எளிதில் மறுதலித்து விட முடியாது. வரலாற்று விவரணைகளைச் செயற்கையான மொழிநடையில் விவரிக்கும் நாவலில், கதைசொல்லி வாசகருடன் அவ்வப் போது உரையாட முயலுகிறார். மிகவும் நவீனமான கதைசொல்லல் முறையில் விரியும் நாவலில், மரபு வழிப்பட்ட கதை சொல்லி பிரதிக்குள் பயணிக்கிறார். புனை கதை என்று விவரிக்கப்படும் சம்பவங்களுடன் வாசகனை ஒன்ற விடாமல் தடுத்து, வேறு வழியைக் காட்டும் முயற்சியாக நாவலாசிரியரின் குறுக்கீட்டைக் கணிக்க வேண்டியுள்ளது.

மூன்று தலைமுறையினரின் கதை சொல்லல் மரபென்பது  ரஷிய இலக்கியத்தில் சாதாரணமானது. மார்க்யுஸ் மூன்று தலைமுறையினரின் யதார்த்தக் கதையுடன் மாந்த்ரீக அம்சங்களை ஒன்று சேர்க்கும்போது, கதைப் போக்கானது வேறு ஒன்றாக உருமாறியது. தமிழவனும் அந்த வழியை நாவலாக்கத்தில் கையாண்டுள்ளார். ஆனால் அளவுக்கதிகமாக மாந்த்ரீகத் தன்மைகளைக் கையாண்டுள்ளது, பிரதியின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. சாதாரணமாகத் தும்மினால் கூட யாரோ நினைக்கிறார்கள், வீட்டு வாசலில் காக்கை கரைந்தால் விருந்தாளி வரப்போகிறார், நாய் ஊளையிட்டால் துர்மரணம் . . .  இப்படித் தமிழரின் வாழ்க்கையே இரண்டாயிரமாண்டுகளாகப் புனைவுகளுடன் தான் உள்ளது. இத்தகைய சம்பவங்களைக் கதையாக்கினாலே நாவலுக்கு மாந்த்ரீக அம்சம் வந்துவிடும். ஆனால் தமிழவன் வலிந்து உருவாக்கியுள்ள அதியற்புதப் புனைகதைத் தன்மை, பல இடங்களில் நாவலுடன் ஒட்டாமல் துருத்திக் கொண்டுள்ளது; வாசிப்பதற்கு அலுப்பை ஏற்படுத்துகின்றது. குமரி மாவட்டம், கல்குளம் வட்டம், சிநேகபுரம் என்ற சிற்றூரில் வாழ்ந்திட்ட குடும்பத்தினரின், மூன்று தலைமுறை வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவலின் மூலம் தமிழவன் சொல்ல முனைவது வேறு ஒன்று. தெய்வ மூர்த்தி - ராசப்பன் - ஜான் ஆகிய மூவரின் வாழ்க்கையுடன், தெய்வமூர்த்தியின் தம்பியான உருத்திரமூர்த்தி - முத்துப் பிள்ளை - லதா என்ற உறவினர்களின் வாழ்க்கையும் இயைந்துள்ளது.   இறந்து போன முத்துப்பிள்ளையின் ஆவி வௌவால் நிழலாய் வந்து சிநேகபுரத்தில் விழுந்த செய்தி ஊராரைப் பயமுறுத்துகிறது. ஜானின் தாத்தா, வம்ச சரித்திரம் எழுதப்பட்ட ஏடுகளைப் புரட்டலானார். தொன்மை வாய்ந்த புராதனக் குடியில் பிறந்தவர்கள் கனவுகளை உண்மை என்று நம்பும் பழக்கம் மிக்கவராயிருந்தனர். புராதனக் குடியில் பிறந்த ராசப்பனுக்குச் சிநேகப்பூவுடன் திருமணம், கன்னிமரியிடம் கொண்டாட்டமான ரகசிய உறவு, பஞ்சாயத்துத் தேர்தலில் நிற்றல், கிழிந்த சட்டைக்காரர்களால் புறக்கணிக்கப்படல் என வாழ்க்கை நீள்கிறது. சாதிய ஒடுக்குமுறை, சுதந்திரப் போராட்டம், பொதுவுடைமை இயக்கப் பரவல், குமரி மாவட்டத்து எல்லைப் போராட்டம். திராவிட இயக்கம், ஆங்கிலக் கல்வி, கிறிஸ்தவ மடங்கள்... எனப் பல்வேறு நிகழ்வுகளின் வழியாகக் கடந்த காலம் நாவலில் மீட்டுருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தொன்மம், புராணக் கதைகள், பழமரபுக் கதைகள், நாட்டார் வழக்காற்றியல், புனைகதைகள் போன்றன தமிழவனின் கதைசொல்லலுக்குப் பெரிதும் பயன்பட்டுள்ளன. கடந்த நூறாண்டு அரசியல் வரலாறும், புராதனத் தன்மையுள்ள கதைகளும் ஒத்திசைந்திட நாவலின் கதைசொல்லல் விரிந்து கொண்டே போகின்றது. மாயத் தன்மையுள்ள நம்பிக்கைகள் மூலம் கதைக்குள் கதையாக விரிகின்றன புனைவுகள். குமரி மாவட்டத்துக் குடும்பத்தை முன்னிறுத்தி தமிழ்ச் சமூக, அரசியல், பண்பாட்டு வரலாற்றை விவரிக்க முயலும் தமிழவனின் முயற்சியில் வேடிக்கையான அம்சங்களும் பொதிந்துள்ளன. துயரம், அவலம், அழிவு என விரியும் கதையாடலின் மூலம் தமிழர் இருப்பினைப் புரட்டிப் போட முயன்றுள்ளார் தமிழவன். எனவேதான் எவ்வளவுதான் தீவிரத்தன்மையுடன் பிரச்சினைகள் நுட்பமாகக் கதையில் விவரிக்கப்பட்டிருந்தாலும் நுண்மையான பகடி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. புராதனம் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் சம்பவங்களின் அபத்தத்தையும் வெறுமையையும் நாவலின் கதையாடல் விவரிப்பது நகைச்சுவை இழையோட வெளிப்பட்டுள்ளது.

‘ஏற்கனவே  சொல்லப்பட்ட மனிதர்கள்' தான் தமிழின் முதல்  மாந்த்ரீக யதார்த்த நாவல் என்று சொல்லப்படுகின்றது.  அந்நாவல் தமிழ்ப் படைப்புலகில் ஏற்படுத்திய  பாதிப்பு என்று எதுவுமில்லை, சில விமர்சனங்களைத் தவிர.

பின் நவீனத்துவ/பாலிம் ஸெஸ்ட் வரலாற்று நாவல் என அறிமுகப்படுத்தப்பட்ட தமிழவனின் 'சரித்திரத்தில் படிந்த நிழல்கள்' பல்வேறு அதியற்புதப் புனை கதைகளின் தொகுப்பாக உள்ளது. அவருடைய முந்தைய நாவலினைப் போலவே கதைசொல்லல் முறையானது, கதையாடலை மையத்திலிருந்து வெளியேற்றி, விளிம்பினுக்கு இட்டுச் செல்லுகின்றது. அரிஸ்டாடில் முன்னிறுத்திய மரபு வழிப்பட்ட கதைப்போக்கினுக்கு மாறாக, வாய் மொழிக் கதைசொல்லல் மரபானது நாவலாக்கத்தில் பின்பற்றப்பட்டுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட சட்டகம் என எதுவும் கதைசொல்லலில் பின்பற்றப்படவில்லை. ஒருவிதமான விட்டேத்தியான மனநிலையில் வரலாறு என்ற கற்பிதத்தை முன்னிறுத்திப் பல்வேறு வரலாற்றுத் தகவல்களை வெவ்வேறு ஒழுங்கற்ற வடிவங்களில் அடுக்கியுள்ள தமிழவனின் கதைசொல்லல் மரபானது தமிழுக்குப் புதிது.

‘இந்த  வரலாற்றுக் கதையில் வரும் நாடு தமிழ்நாடல்ல; தெகிமொலா மக்களும் தமிழ் மக்கள் அல்ல.  இரண்டும் இரண்டு நாடுகள். இருவித மக்கள்' என நாவலின் தொடக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும்  வாசகம் பொருண்மை அற்றது. 'இவர்களைப்  பற்றிய இன்னொரு ஆச்சரியமான விஷயம். தெற்குத் திசைக்கும்  இவர்களுக்கும் உள்ள சம்பந்தம். இவர்களின்  நாடு தெற்குப் பக்கத்தில் இருந்தது. எனவே இவர்களின் மொழியில் தெற்குப் பக்கத்தைச் சார்ந்தது எதுவும் அழகுடையதாக விளக்கப்பட்டது. தெற்குப் பக்கத்தைச் சார்ந்த காற்றைச் சுகமானது என்றனர் ...  தெற்கில் வாசல் வைத்து வீடு கட்டுவதையும், தெற்கு திசையில் பல்லி சப்தம் எழுப்புவதையும், தெற்கில் நட்சத்திரம் எரிவதையும் புகழ்ந்து சொல்லும் பழக்கம் இவர்களிடம் இருந்தது' எனத் தமிழவன் நூலின் அறிமுகம் பகுதியில்  தெகிமொலாக்கள் பற்றிக் கூறுவது ஆய்விற்குரியது. அவர் சொல்ல முயலுவது தெகிமொலா சரித்திரம் அல்லது தமிழரின் சரித்திரம் என எப்படி வேண்டுமானாலும் சொல்லத் தோன்றுகின்றது.

நாவலின்  கதைசொல்லலில் மையச்சரடு என எதுவுமில்லை; பல்வேறு அபத் தங்களின் வெளிப்பாடாக விரியும் கதைகளின்  மூலம் வரலாறு பற்றிய புனைவு பதிவாக்கப்பட்டுள்ளது. கண்ணை மூடிக் கொண்டே எதையும் பார்க்கும் ஆற்றல் கொண்ட பாக்கியத்தாய் விநோதமான பாத்திரம். வேடுவச்சியான பாக்கியத்தாய் பின்னர் பச்சைராஜனின் மனைவியாகி, நாட்டின் அரசியாகின்றாள். மூன்று பிள்ளைகளைப் பெற்றும் அவள் கன்னித்தாய் என்று கருதப்படுகிறாள். அவளுடைய ஒரு குழந்தையான 'மலை மீது ஒளி' வயிற்றிலிருந்தும், இன்னொரு குழந்தையான 'அம்மிக்குழவி' வார்த்தையிலிருந்தும் பிறந்தன. பச்சை நிறமும் ஒற்றைக்கண்ணும் கொண்ட ராஜன், தனது பெருமையான எறும்பு போன்ற பதினாறாயிரம் பேருடன் இல்லறம் புரிந்து வந்தான்; அரசியின் வயதில் ஐம்பது ஆண்டுகள் அவளிடமிருந்து விடைபெற்று விட்டன ...  இப்படிப் பல்வேறு புனைவுகளின் மூலம் தெகிமொலாக்களின் வரலாறு புனையப்படுகிறது. நாவலினை நுட்பமாக வாசித்தால், பயம் கலந்த இரட்டை வாழ்க்கை, தொடரும் வன்முறையின் நிழல் ஆகியன தெகிமொலாக்களின் வரலாற்றிலும் பதிவாகியிருப்பதனைக் கண்டறிய முடியும். எனவேதான் தெகிமொலாக்கள், எல்லா நூல்களிலும் தங்களுடைய வரலாற்றை மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டேயிருக்கின்றனர். இதனால் அவர்களுடைய யூகங்கள் ஒன்றின் மீது மற்றொன்றாக விழுந்து, இரண்டகத் தன்மையுடையதாக மாறினாலும் அழுத்தமான வரலாற்றைப் பொதுப்புத்திக்கு முன்வைக்கின்றன.

நாவலின் பின்னுரையில் சண்முகம் குறிப்பிடுவது போல, பல்வேறு நகரும் குறிகளின் இயக்கத்தினால், நாவலின் கதையாடல் சித்திரிக்க முயலுவது மாறிக் கொண்டே இருக்கின்றது. தெகிமொலாக்களின் வரலாறு என்ற முழுமையான கற்பனைக் கதையை வரலாற்றினுள் திணிப்பதன் மூலம் தமிழவன் புதிய வகைப்பட்ட வரலாற்றை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறார். அதேவேளையில் வாய்மொழி மரபிலமைந்த மாயத் தன்மையைப் புனைகதைக்குள் புதைத்து, வாசிப்பில் வேறுவகையான மதிப்பீடுகளை உருவாக்குவதும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. பச்சைராஜன் - பாக்கியத்தாய் என இருவரையும் ராஜா-ராணி என முன்வைத்து விவரிக்கப்படும் பகடியானது, புதிய கதையை மறுஉற்பத்தி செய்கின்றது.

சரித்திரத்தில்  படிந்த நிழலாகக் கதையில் இடம் பெற்றுள்ள 'காலத்தை வென்றவன்' என்ற கதைமாந்தர், மொழியின்  வழியே நிகழ்த்தும் வேடிக்கை முக்கியமானது. இதுவரையில் மொழியை முன்னிறுத்திப் புனையப்படும் எழுத்து, சொற்கள் பற்றிய ஒழுங்கினையும் மொழி விளையாட்டு மூலம் கலைத்துப் போடலாம் என்பது நாவலில் பதிவாகியுள்ளது. புதிய சொற்களையும் அதற்கான பொருள்களையும் பற்றிக் குறிப்பிடும் காலத்தை வென்றவன் தரும் விளக்கம் பின்வருமாறு;

பப்பப்  - வாருங்கள்
பப்   - வாரும்
பப்  பப் பப்பப் - இங்கு வாருங்கள்

புராதனப்  பெருமை மிக்க பழங்குடியினர் என்ற கருத்தியல் மொழி வழிப்பட்டதாகக் கருதும் நிலையில், மொழியானது மக்களிடையே அதிகாரமையமாவது தவிர்க்கவியலாதது. எனவேதான் ஒலிக் குறிப்பினை வைத்து மொழிப் பொருளைக் கவிழ்த்துப் பார்க்க முயன்றுள்ளார் தமிழவன். இத்தகைய 'மொழி விளையாட்டு' பின் நவீனத்துவக் கூறு.

வரலாற்றில்  படிந்த நிஜங்களையும் நிழல்களையும் பதிவாக்குவதன்  மூலம், சம காலத்திய அரசியல், சமூக வரலாற்றை விசாரணைக்குட்படுத்த முயன்றுள்ள தமிழவனின் நாவலாக்கத்தில் பல்வேறு குரல்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அவை வாசகனுக்குள் ஊடுருவும் ஆற்றல் மிக்கவை.

கோட்பாட்டு ரீதியில் தமிழவன் புனைந்திட்ட நாவலின் கதைசொல்லல்  தமிழுக்குப் புதியது என்பதில் ஐயமில்லை. வெளிப்படையான  தமிழரின் வரலாற்றை இவ்வளவு தூரம் நீட்டி முழுக்கச்  சுற்றி வளைத்துப் பூடகமாக்கி 'மாயப் பிரதி' போல உருமாற்றுவதன் காரணம்  புலப்படவில்லை. 'தமிழ்-தமிழர்' குறித்துப் பேச்சு எதுவும் வெளிப்படுத்த முடியாத நெருக்கடியான சூழல் எனில், விநோதமான கதை சொல்லல் முறையைப் பயன்படுத்துவதில் தவறில்லை. வெறுமனே பகடி, எள்ளல், கேலி என்ற நிலையில் சுயம் அழிப்பு என்ற இலக்கை நோக்கியும் கதைசொல்லல் நகர்த்தப்படவில்லை. மேலும் மிகைப்படுத்தப்பட்ட, நம்பவியலாத மாந்த்ரீகத் தன்மையுடைய சம்பவங்கள் அளவுக்கதிமாகக் கதையோட்டத்தில் சேர்க்கப்பட்டிருப்பது, கதையின் மீதான ஈர்ப்பினைக் குறைக்கிறது. மேலைநாட்டில் வெற்றிகரமானதாகக் கருதப்படும் நாவலின் தாக்கத்தினால் எழுதப்பட்ட, 'சரித்திரத்தில் படிந்த நிழல்கள்' நாவலின் கதைப் போக்கு தட்டையாக உள்ளது; 'சூடு' போட்டுக் கொண்டது போல உள்ளது.

தமிழவனின் மூன்றாவது நாவலான 'ஜி. கே. எழுதிய மர்மநாவல்', இத்தாலியக் கோட்பாட்டாளரும் படைப்பாளருமான உம்பர்ட்டோ ஈகோ எழுதிய ரோஜாவின் பெயர் (The name of Rose) நாவலின் பாதிப்பினால் எழுதப்பட்டதாகும். தீவிரமான வாசகர்களையும் வெகுசன வாசகர்களையும் கவர்ந்த அந்நாவலின் துப்பறியும் கதைப் போக்கு மாறுபட்ட முறையில் அமைந்துள்ளது. தமிழவனும் அதே பாணியைப் பின் பற்றித் தமிழ்ச் சூழலுக்கேற்பக் கதை சொல்லுகிறார்.

வரலாற்றில் துப்பறியும் தன்மையுடன் விரியும் நாவலில், அந்நாவலை  எழுதியவர்யார் என்பதே துப்பறியப்பட வேண்டியதாக உள்ளது. நாவலின் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள  குறிப்புகள் மூலம் தமிழ்நாட்டு அரசியல் மறுவாசிப்பிற்குள்ளாக்கப்பட்டுள்ளது. சி. பெரியநாயகம் பிள்ளை, ஜூலியன் வென்டன், பூவராக  முதலியார் ஆகிய மூவரில் யாரோ ஒருவர் கதையை எழுதியிருக்கலாம் என ஊகிப்பது வாசகரின் புதிர் மனநிலைக்கு விடப்படும் சவால். சென்னை மூர் மார்க்கெட்டில் கிடைக்கும் பிரதியான நாவலினை எழுதியவர் ஜி. கே. என்னும் இலங்கைத் தமிழர். 1983 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனக்கலவரத்தில்  வெளியேறியவர், அந்த நாட்டில் பௌத்த சமயத்தின் பெயரால் நடைபெறும் கொலைகளையும் ஒடுக்குமுறை அரசியலையும் முன்வைத்து நாவலை எழுதியுள்ளார் என்ற தகவல், நாவலைச் சமகாலத்தியதாக்குகிறது. ஆட்சியிலுள்ள அதிகாரமையம், தனது நலனுக்கேற்பக் கருத்தியலை வடிவமைப்பதற்காகப் பிறரை அழித்தொழிப்பதற்காக எல்லாவிதமான தந்திரங்களையும் மேற்கொள்கிறது. இத்தகு சூழலில் அன்பைப் போதித்த புத்தரின் கொள்கையைப் பரப்பும் பௌத்த அதிகாரம், நடைபெற்ற கொலைகளை எங்ஙனம் நியாயப்படுத்துகிறது என்பது முக்கியமானது. பௌத்த மதத்தின் பெயரால் நடைபெறும் கொலைகளைச் செய்யும் சூன்யதத்தன் என்ற பௌத்த மதத் துறவியின் செயற்பாட்டில், அவர்கள் நிறுவ விரும்பும் புதிய சமூகத்திற்கான வரலாற்றுப் பின்புலத்தை ஏற்படுத்த விழைவது வெளிப்படுகின்றது. இந்நிலையில் 'எழுத்து' ஒரு ஆயுதமாக வடிவெடுக்கிறது. படைபலம் போல எழுத்தின் மூலம் ஏற்படுத்தும் விளைவினை அறிந்திட்ட அதிகாரமையம்தனது வசதிக்கேற்பக் கொலைகளைச் செய்கின்றது. எனவே, தமிழவன் பதிவாக்க விழைவது வெறுமனே கொலைச் சம்பவங்கள் அல்ல; வரலாற்றின் பக்கங்களில் நியாயப்படுத்தப்படும் கொலைகள் குறித்த கேள்விகளை வாசிப்பின் வழியே எழுப்ப முயன்றுள்ளார்.

சுருங்கை எனப்படும் பழமையான நகரத்தின் அதியுன்னதமான  கட்டடக்கலை மிகவும் புகழ்பெற்றது. சூரியக் கோவில், சந்திரக் கோவில், மர்மப் பாதைகள், நிலவறை வழிகள், புதிர்வழிப் பாதைகள் என விரியும் சுருங்கை பற்றிய விவரிப்பே புதிர்த்தன்மையுடையதாக உள்ளது. சுருங்கை நகரானது கிரேக்கச் சிற்பியான துபல், அவருடைய தந்தை ஆகியோரின் கற்பனையின் விளைவு. அங்கு இருப்பவை கட்டடங்கள் மட்டுமல்ல. மதங்களின் பெயரால் நடைபெறும் அதிகாரங்களின் ஆதிக்கம் எங்கும் பரவலாக உள்ளது. அந்த நகரில் நடைபெற்ற கொலையைத் துப்புத் துலக்குவதற்காகக் குவலயபுரம் புத்த விகாரையிலிருந்து தேவமித்திரரும், அவருடைய உதவியாளர் அரையநாதரும் அங்கு வருகின்றனர். ஆனால் சிற்பியின் மாணவரான சராசின், உரைகாரரான யுனசேனன் எனக் கொலைகள் தொடர்கின்றன. சிக்கல் இன்னும் அதிகரிக்கின்றது. யார் கொலைகாரனாக இருக்கக்கூடும்? யாருக்காகக் கொலைகள் நடைபெறுகின்றன? கொலைக்கான நோக்கம் என்ன? என்ற கேள்விகள் மூலம் வாசகன் தனக்கான பிரதியை உருவாக்கிடும் வகையில் கதைசொல்லல் அமைந்துள்ளது.

புத்த  சமயத்தினர் ஆண்ட பூமி என்ற கருத்தினுக்கு மாற்றுக் கருத்துடைய யுனசேனன் எழுதும் வரலாறு சரியல்ல  என்று கருதுவதால், புத்த விகாரையிலிருந்து பயிற்சி கொடுக்கப்பட்டுப்  போலியான பெயரில் அனுப்பப்பட்ட தேவமித்திரர் தான் நாவலின் மையமாக உள்ளார். யுன சேனனைக் கொல்வதன் மூலம் மத அதிகாரத்தை நிறுவ முயலும் தேவமித்திரர், அவருடைய மரணம் பற்றிக் குறிப்பிடும் போது, 'பிறவியே துக்கத்துக் காரணம்' என்று தர்மம் போதிப்பது தற்செயலானது அல்ல. மதத்துக்கும் அரசியலுக்குமான நெருங்கிய தொடர்பு காலங்காலமாக இருப்பதன் வெளிப்பாடுதான் நாவலில் இடம் பெற்றுள்ள கொலைகள்.

சூரியக் கோவிலில் ஏழுவாயில்களும், சந்திரக் கோவிலில் எட்டு  வாயில்களும் உள்ளன. அந்த வாயில்கள் காலந்தோறும், மத அரசியல் காரணமாக மாற்றம் பெறுகின்றன. யுனசேனன் எழுதும் 'வட்ட வடிவப் படிகள்' பல மர்மங்களைக் கொண்ட ரகசிய நூலாகும். அந்த நூலில் இரு படிகள் (Copies) உள்ளன. ஒன்று ஆண் பிரதி, மற்றொன்று பெண் பிரதி. சுருங்கை பற்றிய ரகசியங்கள் அடங்கிய ஆண் பிரதி, 366 வட்ட படிகள் உள்ள பாதாளச் சுரங்கத்தில் உள்ளது. பெண் பிரதி கிரந்தக் கோவிலில் உள்ளது. நூலைத் தேடிச் செல்லும் சாகசச் செயலில்தான் சூன்யதத்தன் மாட்டிக் கொள்கிறான். கொலையைத் துப்பறிய வந்தவனே கொலைகளைச் செய்கின்றவனாக மாறுகிறான். இதுவரை வாசிப்பின் வழியாக வாசகனுக்குள் ஏற்படுத்தியிருந்த புனைவுகள் தகர்ந்து போகின்றன. புதிர் வட்டப் பாதைக்கும் நூலுக்குமான தொடர்பு என்பது வாசிப்பில் வெவ்வேறு புனைவுகளை ஏற்படுத்துகின்றது.

தமிழவனின்  கதை சொல்லலுக்குத் தேர்ந்த எடுத்துக்காட்டாக 'ஜி. கே. எழுதிய மர்மநாவல்' உள்ளது. இந்த எழுத்து முறை பற்றி விவாதிக்க விஷயங்கள் உள்ளன. ஒரு புள்ளியை அடைய கணக்கு வழக்கற்ற பல வழிகள் உள்ள நிலையில், இந்தத் துப்பறிதல் எழுத்துமுறையானது, ஒற்றை முறையை வலியுறுத்துகின்றது. தேடப்படுகிறவர் - துப்பறிகிறவர் என்ற இருமை நிலைகளின் மூலம் கதைசொல்லல் தொடர்ந்து புதிர்களுக்குள் இழுத்துச் செல்கின்றது. நாவலில் இடம்பெற்றுள்ள பெயர்கள், ஊர்களின் புராதனத் தன்மையும், பாரம்பரியமான வரலாற்றுத் தகவல்களும் தமிழக அரசியலுடன் இயைந்து புதியதான புனைவாகியுள்ளன. உண்மையைத் தேடுதல், துப்பறிதல் போலவே சான்றுகளையும் தடயங்களை முன்வைத்துத் தேவமித்திரரால் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் எது உண்மை என்ற கேள்வி கதைசொல்லலில் தொக்கியுள்ளது.

இந்திய  மரபு வழிப்பட்ட சமயச் சொல்லாடல்களின் புனிதங்கள் பற்றியும், தத்துவ மரபுகள் குறித்தும் இந்நாவல் எழுப்பியுள்ள கேள்விகள் பரிசீலனைக்குரியன. மத அதிகாரம் புதிதாக உருவாக்கும் அறிவென்பது கட்டுப்பாடுகளுடன்  மனிதர்களை இயங்கிடச் செய்யும்போது, மனித இருப்புக்  கேள்விக்குள்ளாகிறது. இதனால்தான் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொலைகள் ' அறம்' எனப்படுகின்றன.

தமிழவனின்  எழுத்து முறையானது, இவையெல்லாம் இப்படி நிகழ்ந்தன  என்று கூறுவதன் மூலம், பிரதியை வாசகனிடம் முன்வைக்கிறது. இது படைப்பாக்க ரீதியில் 'பாவனை எழுத்து' என்று கூறலாம். மேலும் பல்வேறு காலகட்டத்திய சம்பவங்கள், பிரதிகளின் மேற்கோள்கள், பிரதியின் ஊடிழைகள் (Intertextuality) என விரியும் கதை சொல்லல் மூலம் வாசகனின் நினைவுகள் கிளர்ந்தெழுவதுதான் நாவலின் ஆகப் பெரிய பலம்.

'வார்ஸாவில்  ஒரு கடவுள்' தமிழவனால் எழுதப்பட்ட நான்காவது  நாவல், அவருடைய தொடர்ந்த நாவல் முயற்சியைக்  காட்டுகிறது. பல்வேறு நாட்டுச் செவ்வியல் படைப்புகளைப் படித்த பின்னர் எழுதப்பட்ட இந்நாவலில்  அவற்றின் தாக்கமிருக்கலாம் என்று நாவலின்  முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். எனவே மேற்கொண்டு  அது பற்றித் துப்பறிய வேண்டியதில்லை. எதோ ஒரு நிலையில் மேலை நாவல்கள் தமிழவனுக்குள் செலுத்தும் நுண் ஆதிக்கம் காரணமாகத் தமிழில் புதிய வகைப்பட்ட நாவலாக்க முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தமிழவனின் மனநிலையானது, தமிழின் முதல் நாவலாசிரியரான மாயவரம் வேதநாயகம் பிள்ளையுடன் ஒத்துப் போகின்றது. நவீனத் தமிழில் இதுபோன்ற புதிய போக்கு இல்லையே என்ற ஆதங்கம்தான் தமிழவனைத் தொடர்ந்து நாவலாசிரியராக இயங்கச் செய்துள்ளது வேடிக்கைதான்.
தமிழகம், வார்ஸா எனவிரியும் கதைக்களன்களில் இந்தியத் தத்துவ மரபினையும் தமிழரின் புராதனத் தன்மையையும், ஐரோப்பியச் சிந்தனைமுறையையும் ஒருங்கிணைத்துச் சொல்லப்பட்டுள்ள, கதை சொல்லல் வாசிப்பின் வழியாகக் கிளர்த்தும்  அனுபவங்கள் முக்கியமானவை. மனித மனத்தின் ஆன்ம நிலையும், அப்பாலை நெறியும் உணர்த்தும் இருத்தல் குறித்த பிரக்ஞையின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளவை பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. பூமியில் தனது இருப்புக் குறித்து அடையாளப்படுத்த முயலும்போது, அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வேறு வழியில் முரணைக் கிளப்புகின்றன. இழப்புகள் தொடர்ந்த நிலையிலும் மனித முயற்சிகள் இடைவிடாமல் தொடர்கின்றன. எவ்வாறாயினும் பூமியின் சுழற்சி நிற்காததது போல, மனிதனின் இயக்கமும் இடையறாது நீள்கிறது.

வியன்னாவுக்குப்  பயணமாகும் கதை சொல்லிக்கு விமானநிலையத்தில்  ஏற்பட்ட கணநேரப் பிரக்ஞை இழப்பு உடலியல் சார்ந்த நோயாக இருக்கலாம். ஆனால்  அச்சம்பவம் அவருடைய உள்ளுணர்வில் வேறொன்றாகப்  பரிணமிக்கின்றது. மர்மமான முறையில் தொடரும்  சம்பவங்களினால் குழப்பத்திற்குள்ளாகும் கதைசொல்லியின்  வார்சா வாழ்க்கையில் புதிய தொடர்புகள்  ஏற்படுகின்றன. விநோதமான உள்ளுணர்வினால் வழிநடத்தப் பெறும் கதைசொல்லியான சந்திரனின் மனமானது தக்கையைப் போல லேசாக இருக்கிறது. லிடியாக்ருப்ஸ்கையா என்ற நாற்பது வயதான போலிஷ் பெண்ணின் சகோதரன் இந்திய ஆன்மிக மரபு குறித்த தேடலில் ஆர்வம் மிக்கவன். சமஸ்கிருதம், வேதம், புராணம், கூடு விட்டுக் கூடு பாய்தல், ரிஷிகள், தவம் எனச் சித்திரிக்கப்பட்டுள்ள இந்திய மரபு குறித்து அக்கறையுள்ளவன் இறந்துவிட்டான். எனினும் அவனுடைய தங்கையான லிடியா அந்தத் தேடலை சந்திரன் மூலமாகத் தேட முயலுகிறாள். இங்கு விவரிக்கப்பட்டுள்ள கதைசொல்லல், நாவலில் தொடக்கம் மட்டும்தான். பல்வேறு கதைகள் ஊடு பிரதியாக மைய இழையில் தொகுக்கப்பட்டுள்ளன. சந்திரனைமையமிட்ட கதை எனினும் கும்மாங்குத்து என்ற சிவநேசம், விஜயாவின் தற்கொலை, அஷ்வினியின் கதை, பர்மா சம்பவம், ராஜேஷ் பறந்து போதல், அமலாவின் மீதான வேட்கை, பியோத்தரின் பாட்டி, நாஜிகளிடம் பணியாற்றிய நர்ஸ், இந்தியாவின் மீது மோகம் கொண்ட லியோன் ... பல் வேறு கதைகளின் தொகுப்பான நவீன நாவலின் மூலம் தமிழவன் வாழ்வின் மீது தனது விசாரணையைத் தொடங்கியுள்ளார்.

வார்சா நகரை முன்வைத்து, இதுவரையிலும் சொல்லப்பட்டு வரும்  வரலாற்றையும், கிறிஸ்தவ தொன்மங்களையும் இந் நாவல் பகடி செய்வதுடன் விமர்சிக்கவும் செய்கிறது. வரலாறு என்பது மொழிகளின் தொடர்ச்சியாகவே, நினைவுகளில் தேங்கியுள்ளது. எனவே மொழியினால் உருவாக்கப்படும் பின்னல்களும் சமூகச் சிக்கல்களும் வேறுவகையான எதார்த்தத்தைக் கட்டமைக்க முயலுகின்றன. இந்நிலையில் உண்மை என்பது பல்வேறு நிலைகளில் உருவாக்கப்படுவதேயன்றி, புதிதாகக் கண்டறியப்படுவற்கான சாத்தியப்பாடுகள் மிகக் குறைவு என்று நாவல் இடைவிடாமல் கதைசொல்லல் வழியாக வலியுறுத்துகிறது. உண்மைக்கும் புனைவுக்குமான இடைவெளி குறித்தும் தமிழவன் கேள்விகளை எழுப்பியுள்ளார். எல்லாமே மனித மனத்தினால் புனையப்படுகின்றவை என்று அடையாளப்படுத்த முயலும் நாவலானது ஒருநிலையில், மனிதகுல வரலாறு என்பதே புனைவுகளினால் தகவமைக்கப்பட்ட வரலாறு என்பதையும் உறுதிப்படுத்த முயலுகிறது.

நிகழ்காலம் என்ற ஒழுங்கினுள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில், தொன்மங்களும், பண்டைய பாரம்பரிய நினைவுகளும் ஏதோ ஒரு நிலையில் தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருக்கின்றன. எனவேதான் கணினிப் பொறியாளரான சந்திரன் வார்ஸாவிற்குச் சென்ற போது விநோதமான அனுபவங்களை எதிர் கொள்கிறான். அவன் தமிழகத்தில் வாழ்ந்தபோது, அவனுடைய கர்ப்பிணி மனைவியான விஜயா, தன் உடலின் மீது தீயிட்டுமாய்த்துக் கொண்டபோது, அதற்கான காரணங்களைத் தேடியலையத் தொடங்கியவன்,  ஒரு கட்டத்தில் அது தேவையற்றது என்ற முடிவினுக்கு வருகிறான். இதே மனநிலையின் இன்னொரு வெளிப்பாடு தான் சந்திரனின் மூதாதையரால் பர்மாவில் காப்பாற்றப்பட்ட அவனுடைய தாயின்நிலை. சந்திரனின் தாய் வழி மூதாதையர் பர்மாவில் வான்சுயி என்ய மிலானயிர் என்ற கிராமத்தைச் சார்ந்தவள். அவள் பிரிட்டிஷ் ஜர்னல் ஜான்சென் வைட் ஹெட்டின் பாலியல் அத்துமீறலுக்கு எதிர்ப்புக்காட்டும் வகையில், அவனுடைய ஆண் குறியைக் கடித்து துப்புகிறாள். அந்தப் பெண்ணின் குடிவழி வந்த பெண்குழந்தையான சந்திரனின் தாய் என்ற புனைவு, கதையின் பரப்பினை வேறு தளத்தினுக்கு இட்டுச் செல்கிறது. சந்திரனின் தந்தைக்குப் பூமிக்கடியில் நீரினைக் கண்டறியும் திறனும், தாய்க்கு நெருப்பு பற்றிய அதீத அறிதல் திறனும் இருந்தமையினால், அவன் நெருப்பாலும் நீராலும் இணைந்த கலவை என்று கற்பிதம் செய்து கொள்கிறான். இருவேறு எதிரெதிர் குணாம்சங்களின் ஒத்திசைவு காரணமாக சந்திரனின் வாழ்க்கை வெவ்வேறு நிலைகளை அடைகின்றது.

சிவநேசம்  மூலம் சொல்லப்படும் கதை சொல்லல், பிரதியை  முழுக்க அரசியல்படுத்துகிறது. கள்ளத்தனமாக ஒரு  நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குள் கடந்து  செல்லும் புலம் பெயர் வாழ்க்கை, வெறுமனே அவலம் மட்டுமல்ல. உலகமயமாக்கல் சூழலில் எல்லைகளை மீறிச் சுரண்டும் சர்வதேசக் கொள்ளையர்களின் செயலுக்குப் பச்சைக் கொடி காட்டப்படுகிறது. ஆனால் வாழ வழிதேடிப் பயணமான இளைஞர்கள், எல்லைப் பகுதியில் எதிர் கொள்ளும் மரணம் கொடூரமானது. லாரியின் அடியில் பொருத்தப்பட்டுள்ள பெட்டிக்குள் திணிக்கப்பட்டுள்ள இளைஞர்கள், மின்சாரம் பாய்ச்சப்பட்டதால் அநியாயமாகச் செத்துப் போவது சகஜமாகிப் போன நிலையில், தமிழவன் அரசியல் தளத்தில் கதையை நகர்த்துகிறார். பகுத்தறிவினுக்கு ஏற்றவாறு துல்லியமாகக் காட்சி தரும் சமூகமும், சர்வதேச அரசியலும், வரலாற்றுப் போக்கும் திடீரெனச் சதிகளும், அராஜகங்களும் விநோதங்களும் நிரம்பியதாக உருமாற்றமடைகின்றன. இவை வெவ்வேறு வழிகளில் திட்டமிடப்பட்ட முறையில் சமூகத்தில் ஊடுருவி, மனித வாழ்க்கையைத் திசை மாற்றுகின்றன. இன்னொரு நிலையில் மனித இருப்பினை அபத்தமாக்குகின்றன; அர்த்தமிழக்கச் செய்கின்றன.

தமிழவன்  தனது நாவலில் எதிர்வுகளை மோதவிட்டு, ஒழுங்கினைச் சிதைக்க முயன்றுள்ளார். கீழை மரபு ஜ் மேலை இறையியல், ஆண் ஜ் பெண், உறுப்பு ஜ் உறுப்பு நீக்கம் எனத் தொடர்ந்து விவாதிக்கும் நாவலில் தன்னிலைக்கும் பண்பாடு மற்றும் வரலாற்றுக்குமான உறவை அடையாளம் காணும் இந்நாவல் பின்நவீனத்துவப் படைப்பாக உள்ளது. இந்த நாவலை வாசிக்கும்பொழுது, இதுவரை கட்டமைக்கப்பட்டுள்ள அறிதல்முறையும் உண்மையைக் கண்டறியும் முறையும் சிதலமாகி, எல்லாப் பக்கமும் கதைசொல்லல் விரிவடைதனைக் கண்டறியலாம்.

தமிழில் நாவலாக்க முயற்சியில் தொடர்ந்து புதிய  தளத்தில் இயங்கிவரும் தமிழவனின் எழுத்துகள் வெற்றிகரமானவையா  என்பது பிரச்சினை அல்ல. புனைவின் வழியாகப் பல்வேறு சாத்தியங்களை முன்னிறுத்தும் வகையில் கதைசொல்லலை முன்னிலைப்படுத்தியுள்ள தமிழவனின் எழுத்துமுறை தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ள படைப்பு முயற்சிகள்தான் முக்கியம். ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், சரித்திரத்தில் படிந்த நிழல்கள் ஆகிய இரு நாவல்களும் கதைசொல்லலில் மொக்கையாக உள்ளன. அவை தமிழ்ப் புனைகதைக் குளத்திற்குள் போட்ட கல்லாகி விட்டன. ஜி. கே. எழுதிய மர்ம நாவல், வார்ஸாவில் ஒரு கடவுள் ஆகிய இரு நாவல்களும் சமகாலத் தன்மையுடன், விவாதத்தை ஏற்படுத்துகின்றவையாக உள்ளன. வாழ்க்கைப் பரப்பினையும் இலக்கியத்தின் தனித்துவத்தையும் சிதைத்துக்  கதைசொல்ல முயன்றுள்ள தமிழவனின் நாவல்கள், நவீனத் தமிழ்ப் புனைவு எழுத்தின் முன்னோடி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

( பாளையங்கோட்டை, தூய சவேரியர் கல்லூரியில் 23, 24-07-09 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற 'தமிழவன் படைப் புலகம்' கருத்தரங்கில் நிகழ்த்தப்பெற்ற உரையின் விரிவாக்கப்பட்ட கட்டுரை வடிவம்)

*

click here

click here
click here