
தேவதாஸ் இந்திய சினிமாவில் கடந்த ஐம்பது வருசங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து ஒரு அழியாத பிம்பம். காதலைப் பற்றிய எல்லா உரையாடல்களிலும் தேவதாஸைப் பற்றி பேசுவது தவிர்க்க முடியாதது. தேவதாஸ் நாவலை வாசிக்கும் வரை நானும் காதலின் உன்னத நாயகனாகவே தேவதாஸை நினைத்திருந்தேன். நாவலை வாசித்தபிறகு அந்த எண்ணம் முழுமையாக மாறிவிட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு வார காலம் தேவதாஸ் திரைப்படங்களாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். நாகேஸ்வரராவ் நடித்த தமிழ், தெலுங்கு தேவதாஸ். பிமல்ராயின் தேவதாஸ், திலீப்குமார் நடித்த தேவதாஸ், சஞ்சய் லீலா பன் சாயின் தேவதாஸ், அனுராக் காஸ்ய பின் தேவ் டி, மலையாள தேவதாஸ், கிருஷ்ணா நடித்த தெலுங்கு தேவதாஸ் என மாறிமாறி பார்த்தபோது வேறுவேறு படங்களைப் பார்ப்பது போலத்தானிருந்தது. ஒரே கதை. ஒரே கதாபாத்திரங்கள். ஆனால் இதைச் சொல்லும் விதத்திலும் நடிப்பிலும் இசையிலும் உருவாக்கத்திலும் எவ்வளவு மாற்றங்கள். நுட்பமான இடைவெளிகள், தடுமாற்றங்கள். இத்தனை படங்களிலும் எனக்கு நாகேஸ்வர ராவின் தேவதாஸே மிகவும் பிடித்திருந்தது.
பழைய தேவதாஸ் திரைப்படத்தைத் தேடி பார்க்கின்றவர்கள் இன்றுமிருக்கிறார்கள். ஆனால் தேவதாஸ் நாவலை அப்படித் தேடிப்படிப்பவர்கள் குறைவே. இவ்வளவிற்கும் இந்த நாவல் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. வங்காள நாவல்கள் ஐம்பது வருசங்களுக்கு முன்பாகவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு தீவிரமாக வாசிக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் வெற்றிபெற்ற பாகப்பிரிவினை, படித்தால் மட்டும் போதுமா போன்ற 'பா' வரிசைப் படங்கள் பெரும்பாலும் பெங்காலி திரைப்படங்களின் தமிழ்வடிவமே. வெற்றிபெற்ற வங்காள திரைப்படங்களின் உரிமையை வாங்குவதற்காகவே தங்களது ஒரு ஏஜெண்டை ஸ்டுடியோக்கள் கல்கத்தாவில் வீடு எடுத்து தந்து தங்க வைத்திருந்தன.
ஆஷாபூரணா தேவியும், தாகூரும், சரத்சந்திரரும், தாரா சங்கரும் தமிழ் வாசகர்களால் தேடி வாசிக்கப்பட்டிருக்கிறார்கள். மராத்தி எழுத்தாளரான காண்டேகர் தமிழ் எழுத்தாளரைப் போலவே கொண்டாடப்பட்டிருக்கிறார். இன்று பெங்காலி நாவல்களோ, மராத்தி நாவல்களோ தமிழ் வாசகப் பரப்பில் எந்த முக்கியத்துவமும் பெறவில்லை. சமகால பெங்காலி நாவல்களில் ஒன்றிரண்டு தவிர எதுவும் வெளியாகவும் இல்லை.
சரத்சந்திர சட்டோபாத்யாயா வங்காளத்தின் பெரும் புகழ் கொண்ட எழுத்தாளர். தாகூரை விடவும் அதிக பேரோடு இருந்தார் என்கிறார்கள். பக்கிம் சந்திரர், தாகூர் போன்றவர்கள் சமூகமாற்றம், சுதந்திரப் போராட்டம், மெய்தேடல் என்று தீவிரமான தளங்களில் படைப்புகளை எழுதிக் கொண்டிருந்தபோது சரத்சந்திரர் எளிமையான , சுவாரஸ்யமான காதல் கதைகளை, பெண்களை முக்கிய பாத்திரங்களாகக் கொண்ட குடும்ப நாவல்களை எழுதியிருக்கிறார். நகரமயமாவதன் ஆரம்ப கால மாற்றங்களை அவரது எழுத்தில் காணமுடிகிறது. அவரது எழுத்து பரந்த வாசகப் பரப்பை சென்றடைந்திருக்கின்றது. ஒருவகையில் சரத்சந்திரரின் நாவல்கள் கல்கியின் எழுத்துகளை போன்றவை. வாசிக்க சுவாரஸ்யமும், எதிர்பாராத கதை திருப்பங்களுமே இவற்றின் தனிபலம்.
தேவதாஸ் திரைப்படங்கள் தந்த பாதிப்போடு மறுபடி ஒரு முறை சரத்சந்திரரை வாசிக்க விரும்பினேன். புதிய பதிப்பு ஆங்கிலத்தில் பென்குவின் வெளியீடாக வந்துள்ளது. தமிழில் அதை புவனா நடராஜன் மொழிபெயர்த்து காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது.
தேவதாஸ் நாவல் அளவில் சிறியது. அதை ஒரு குறுநாவல் என்று சொல்லலாம். 1917ம் ஆண்டு வெளியாகி உள்ளது. சரத்சந்திரர் மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். பர்மாவில் சில காலம் வேலை செய்திருக்கிறார். முழுநேர எழுத்தாளராக வாழ்ந்தவர். இந்த 93 வருசங்களில் நாவல் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப் பெற்றிருக்கிறது. இன்று வாசிக்கையில் 90 வருசங்களுக்கு முந்தைய நாவல் என்ற பழமை இதில் துளியுமில்லை. சமகாலத்தில் எழுதப்பட்ட பிரதியைப் போன்றே உள்ளது. சில அத்தியாயங்கள், பத்திகள் மட்டுமே அதிகப்படியானதாக, தேவையற்றவிளக்கமாக தென்படுகிறது. மற்றபடி நாவல் ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடிய சுவாரஸ்யத்தை இப்போதும் தனக்குள் கொண்டிருக்கிறது.
பால்யவயதின் காதல் என்றுமே கவித்துவமான நினைவுகள் கொண்டது. அதில் சரத்சந்திரரின் தேவதாஸை விடவும் வைக்கம் முகமது பஷீரின் பால்யகாலசகி மேலான நாவல் என்பேன்.
தேவதாஸ் நாவல் வெளியான உடனே மௌனப் படமாக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு பத்துக்கும் மேற்பட்ட முறை வேறுவேறு மொழிகளில் இந்த நாவல் படமாக்கப் பட்டிருக்கிறது. பெரும்பாலும் நாவல் இடம்பெற்றுள்ள காட்சிகள், உரையாடல்கள் மற்றும் விவரணைகள் திரைப்படத்தில் அப்படியே பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. சில கூடுதல் காட்சிகள்,பாடல்கள் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் பாங்குதான் படங்களில் மாற்றமாக உள்ளது.
ஒரு நாவலைப் படமாக்கும் போது இரண்டு சாத்தியங்கள் உள்ளன. ஒன்று, அது நாவலை விடவும் மிக நன்றாக இருக்கக்கூடியதாக உருவாகக்கூடும். ஹென்றி ஜேம்ஸ், தாமஸ் ஹார்டி நாவல்கள் படமாக்கப்பட்டதை இந்த வகையில் சொல்லமுடியும் அல்லது நாவலின் மூலத்தைக் கைவிட்டு தோற்றுப் போகவும் சாத்தியமுண்டு (ஹிந்தியில் வெளியான ஹெர்மன் ஹெஸ்ஸஸயின் சித்தார்த்தா போன்றவை) அரிதாகவே நாவல் அடைந்த வெற்றியும் சினிமா அடைந்த வெற்றியும் சமஅளவில் இருந்திருக்கின்றன. டிக்கன்ஸின் நாவல்கள், விக்டர் ஹ்யூகோவின் லே மிரசபிள், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் போன்றவையே சமஅளவில் கொண்டாடப்பட்டிருக்கின்றன.
நாவ
லை விட தேவதாஸ் படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இசையும் நடிகர்களும், காட்சிப்படுத்தும் முறையும் நாவலை விட அதிக பேன்டசியான ஈர்ப்பை உருவாக்கியுள்ளது.
சரத்சந்திரரின் கதை சொல்லும் திறன் நேரடியானது. எளிமையானவாக்கியங்கள். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதையே கதை சொல்லன் பிரதான பணியாகச் செய்கிறார். கதை திருப்பங்கள் என்று அதிகமில்லை. கதாபாத்திரங்கள் யதார்த்தமாக அறிமுகமாகின்றன. ஆனால் சம்பவங்களால் கதை வளர்ந்து போகிறது. அந்த சம்பவங்கள் அன்றாட வாழ்வில் நாம் காணக் கூடியவை. இதன் இடையீடாக ஆசிரியரே கதையின் போக்கினை முடிவு செய்வதோடு நடந்தவற்றை விளக்கவும் செய்கிறார்.
சரத்சந்திரரின் நாவல்கள் பெண்களை முதன்மைப்படுத்தியவை. தேவதாஸ் நாவலில்கூட தேவதாஸை விடவும் பார்வதியும் சந்திரமுகியுமே வன்மையான கதாபாத்திரங்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தாகூரிடமும் இதேபோக்கே காணமுடிகிறது.
நாவலை வாசித்து முடிக்கையில் தேவதாஸின் காதலைவிடவும் தேவதாஸைக் காதலித்தவர்களே முக்கியமானவர்களாக மாறுவதை உணர முடிந்தது. நாவல் முழுவதும் குற்றமனப்பாங்கில் உருவான வேதனையைத் தாங்கிக் கொள்ளவே தேவதாஸ் குடிக்கிறான். அவன் காதல் தோற்கவில்லை. மாறாக, காதலைப் புறக்கணிக்கிறான். அதன் காரணமாகத் தன்னை அழித்துக் கொள்கிறான். அவன் பார்வதியையும் காதலிக்கவில்லை, சந்திரமுகியையும் காதலிக்கவில்லை. ஆனால் அந்த இரண்டு பெண்களும் தேவதாஸைக் காதலிக்கிறார்கள். அவனுக்காகவே வாழ்கிறார்கள்.
தேவதாஸைக் காதலிப்பது என்பதை தங்களது இருப்பின் ஆதாரமாக இரண்டு பெண்களுமே கொண்டிருக்கிறார்கள். தேவதாஸ் அவ்வளவு தீவிரமான காதலன் இல்லை. அவன் சிறுவயதில் இருந்தே தனது குடும்பப் பெருமை, தனிமை, வசதியான வீட்டுப்பிள்ளைகளின் முரட்டுத்தனம், அதிகாரம் இவற்றால் உருவாக்கப்படுகிறான்.
பாரு என்ற பார்வதிதான் தேவதாஸின் அகத்தை உருவாக்குகிறாள். அவனைப் புரிந்து கொள்ளவும் அவனது முரட்டுத்தனத்தின் பின்னால் பகிர்ந்து கொள்ளப்படாத அன்பு இருப்பதையும் அடையாளம் கண்டு கொள்கிறாள். அதை தேவதாஸ் தன் வாழ்நாளின் இறுதியில்தான் அடையாளம் காண்கிறான். தேவதாஸின் மிரட்டல்கள், அடி யாவற்றையும் பார்வதி ஏற்றுக் கொள்கிறாள். பார்வதியைப் பிரிந்து கல்கத்தாவிற்குப் படிக்கப் போன தேவதாஸ் அவளைப்பற்றிக் கவலைப்படவேயில்லை. நினைத்து ஏங்கவேயில்லை. அவளை மறந்து நகரவாசியாகி உல்லாசமும் அலங்காரமுமாகத் தன்னை உருமாற்றிக் கொண்டுவிடுகிறான். ஆனால் பார்வதி அவனைக் காதலிக்கிறாள். பிரிவால் வேதனைப்படுகிறாள். பார்வதிக்கு தேவதாஸைப் பற்றி நினைத்துக் கொண்டேயிருப்பது தான் அன்றாட வேலை.
பள்ளியில் அவன் உட்கார்ந்திருந்த பெஞ்ச்சைப் பார்த்து வேதனைப்படுகிறாள். தேவதாஸின் வீட்டினைப் பார்த்துப் பார்த்துப் பெரு மூச்சிடுகிறாள். தேவதாஸ் நகரத்தில் படித்த யுவனாகத் திரும்பி வருகையில் பட்டிக்காட்டுப் பெண்ணாகத் திறந்த மனதோடு அவனிடம் அன்பைச் செலுத்துகிறாள். தேவதாஸ் பாருவைக் காதலித்ததை விடவும் பாரு தேவதாஸைக் காதலித்தது அதிகம். அவள் தேவதாஸ் முன்னால் அடக்கமான பெண்ணில்லை. மாறாக, காதலின் உன்மத்தம் பிடித்தவள்.
அவள் 90 வருசங்களுக்கு முந்தைய கிராமத்தில் வசித்த 'முக்காடு' இட்ட, அடங்கி ஒடுங்கிப்போகும் வங்காளக் குடும்பப் பெண்ணைப் போல உருவாக்கப்படவில்லை. மாறாக, அவள் காதலுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறாள். தன்னை நம்புகிறாள். தனது கனவுகள் நிறைவேற அவள் தைரியமாக தேவதாஸைத் தேடிப் போகிறாள். தேவதாஸிடம் முதன் முறையாக காதலை சொல்பவள் பார்வதியே. உண்மையில் தேவதாஸ் அந்தக்கால குடும்பப் பெண்களைப்போல அதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்.
எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியாமல் தடுமாறுகிறான். ஆசை ஒருபக்கமிருந்தாலும் வீட்டின் பாரம்பரிய பெருமையைக் காக்க அவளை விட்டு விலகிப் போகலாம் என்று நினைக்கிறான். பெற்றோரைக் காரணம் காட்டி சமாதானம் சொல்கிறான். பார்வதி அதை நம்பவில்லை.
இரவில் யாரும் அறியாமல் ரகசியமாக தேவதாஸை தேடி வீடு வந்து காதலைச் சொல்லும் பார்வதியிடம் தனது ஆசையின் காரணமாக, பெற்றோர் அவமதிக்கப்பட வேண்டுமா என்பதற்கு, பாரு அவர்களை அவமதிப்பதால் ஒன்றும் ஆகிவிடாது தேவதாஸ். தயங்காதே, காதல்தான் முக்கியமானது என்கிறாள்.
இவ்வளவு துணிச்சலாகத் தன் காதலை வெளிப்படுத்திய பெண்ணாகவே பாரு நாவலில் சித்திரிக்கப்படுகிறாள். உண்மையில் தேவதாஸ் காதலை அறியவும் இல்லை. காதல் சார்ந்து முடிவு எடுக்க முடியவுமில்லை. அவன் பாருவைப் புறக்கணிக்கிறான். அந்தப் புறக்கணிப்பு பாருவை அவன் வாழ்விலிருந்து வெளியேற்றுகிறது. அவள் திரு மணத்தின் முன்புவரை தேவதாஸ் தன்னைத் திருமணம் செய்து கொண்டுவிடுவான் என்று நம்புகிறாள். திருமணமான பிறகும் தேவதாஸ் என்றாவது தன்னைப் புரிந்து கொள்வான் என்று ஏங்குகிறாள்.
நாவலில் வரும் பார்வதிக்கு வயது பதிமூன்று. தேவதாஸின் வயது பத்தொன்பது. நிறைய நேரங்களில் இது சிலப்பதிகாரத்தை வாசித்துக் கொண்டிருப்பதைப் போன்ற மன மயக்கத்தை தந்தபடியே இருந்தது.
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் கல்விக்காக நகரங்களைத் தேடிச் செல்வது வசதிபடைத்தவர்களின் இயல்பாக இருந்தது. இங்கிலாந்திற்கும் கல்கத்தாவிற்கும் இலங்கைக்கும் கல்விக்காக அனுப்பப்பட்ட ஜமீன்தார்கள்,ராவ்பகதூர் வீட்டுப் பிள்ளைகளின் கதைகள் நிறையவே இருக்கின்றன. தங்களது குடும்பக் கௌரவத்தை காப்பாற்றவும் அதிகாரத்தின் உச்சநிலையை அடையவுமே இவர்கள் கல்வியைத் தேர்வு செய்தார்கள்.
தேவதாஸ் நகரத்தில் சென்ற போதும் கல்வியில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. அவனுக்கு வாழ்க்கை சுகமாக கழிய வேண்டும் அவ்வளவே. அதிலும் கட்டுப்பாடுகள், ஒழுக்க விதிகள், பயம் இவையில்லாத தின சரி வாழ்க்கைக்காகவே அவன் கல்கத்தாவிற்குப் போகிறான். படித்துத் திரும்பிவந்த தேவதாஸ் முன்பு போல இயல்பாக இல்லை என்பதை பாரு கண்டுபிடிக்கிறாள். ஒருவேளை தேவதாஸின் மனசாட்சியைப் போலவே அவள் நடந்து கொள்கிறாள் என்பதால்தானோ என்னவோ தேவதாஸ் அவளை அடைவதில் ஆர்வம் காட்டவேயில்லை.
நாவலில் தேவதாஸ்-பார்வதி கல்யாணப் பேச்சு நடக்கிறது. ஆனால் தேவதாஸின் அம்மா அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள். காரணம், பார்வதியின் வீட்டில் அவர்கள் பெண் கொடுக்கும்போது மாப்பிள்ளையிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு பெண்ணை அனுப்பும் வழக்கம் கொண்டவர்கள். அதாவது மாப்பிள்ளை சீதனம் தந்து பெண்ணை கட்டிக் கொள்ள வேண்டும். இது தான் அவர்களின் குலவழக்கம். ஆனால் அதை பார்வதியின் அப்பா ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தன்னுடைய பெண்ணை விற்பதைப் போல இந்த செயல் இருக்கிறது. ஆகவே அவளைக் கட்டிக் கொள்ள போகிறவனிடம் தான் பணம் பெறப் போவதில்லை என்று கூறுகிறார்.
இதை அறியாமல் தேவதாஸின் அம்மா அவர்கள் பெண்களை விலை கூறி விற்கக்கூடிய குடும்பம். ஆகவே அவர்களோடு சம்பந்தம் வைக்கக் கூடாது என்கிறாள். இந்தப் பிரச்சினையோடு அவர்கள் அடுத்த வீடாகவும் இருக்கிறார்கள். ஆகவே பக்கத்து வீட்டிற்குப் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது. அது நாளை அவமானமாகக் கருதப்படும் என்கிறாள். இதை தேவதாஸ் நம்புகிறான். ஏற்றுக் கொள்கிறான். அதுதான் பார்வதியை கோபப்படுத்துகிறது. பார்வதியின் முன்னால் எப் போதுமே தேவதாஸ் அடங்கியவனாகவே இருக்கிறான். அவனால் தன்னை மறைத்துக் கொள்ள முடிவதில்லை. வெளிச்சத்தை தூக்கி பிடிக்கும்போது இருள் எதிர் நிற்காமல் ஓடிவிடுவதைப் போல பார்வதி நேரடியாக அவனிடம் கேள்விகேட்கும்போது அவன் தடுமாறுகிறான். உண்மையை மறைக்க முடியாமல் சிரமப்படுகிறான்.
நாவலில் வங்காள கிராமத்தில் உள்ள ஜமீன்தார் குடும்பங்களின் அழிவு மறைமுகமாக மிக நுட்பமாக சித்திரிக்கப்படுகிறது. குறிப்பாக தேவதாஸின் அண்ணன், வேலையில்லாமல் ஊதாரியாக இருப்பது. படிப்பை முடிக்கும் முன்பே அவனுக்கு திருமணம் செய்து வைத்தது. அவன் மனைவி, பிள்ளைகள், ஜமீன்தார் சொத்துகள் அவர்கள் கண் முன்னே அழிவது என்று ஒரு வீழ்ச்சியின் பாடலை அவர்கள் குடும்பம் முணுமுணுத்தபடியே உள்ளது. அதிலிருந்து வெளியேற விரும்புகிறான் தேவதாஸ். அதற்குள் வந்து வாழ விரும்புகிறாள் பார்வதி.
திரைப்படங்களில் பார்வதியைத் திருமணம் செய்து கொள்ளப் போகின்ற மனைவியை இழந்த ஜமீன்தார் வயதான ஆளாக காட்டப்படுகிறார். நாவலில் அவருக்கு வயது நாற்பது. ஆனால் அவருக்கு இருபது வயதில் மகன் இருக்கிறான். மகள் திருமணமாகித் தனியே வாழ்கிறாள். பார்வதி இரண்டாம் மனைவியாக வாழப்போகின்ற திருமணத்தை வெறுக்கவில்லை. அதுதான் தனது வாழ்க்கை என்றால் அதை எப்படி எதிர்கொள்வது என்று மட்டுமே யோசிக்கிறாள். செயல்படுத்துகிறாள்.
ஆனால் திருமணம் ஆன உடனே காதலை மறைத்துக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ள அவள் முயற்சிக்கவில்லை. திருமணம் தனக்கு ஏற்பட்ட ஒரு நெருக்கடி. அதனால் தேவதாஸை விட்டுத் தான் பிரிய நேரிடுமே அன்றி அவனை ஒருபோதும் மறக்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறாள். பாருவின் காதல்தான் நாவலெங்கும் கொப்பளிக்கிறது. திரைப்படங்களை விடவும் வலிமையாக அவளை எழுத்தில் சரத் சந்திரர் உருவாக்கியிருக்கிறார்.
குறிப்பாக, அப்பாவின் மரணத்தின் பிறகு தேவதாஸ் கிராமத்தில் இருக்கிறான். அங்கே தன்னைத் தேடிவரும் பார்வதியிடம் தனக்காக ஒரு பெண் பார்க்க முடியுமா என்று கேட்கிறான். பெண் எப்படியிருக்க வேண்டும் என்றதும், Ôஉன்னைப் போல் தான்Õ என்று சொல்கிறான். அப்படி ஒரு பெண் கிடைப்பது எளிதில்லை என்கிறாள் பார்வதி. அது உண்மையே. நாவலை இயங்கச் செய்வது பாருவின் செயல்களே. அதற்கு தேவதாஸ் எதிர்வினை மட்டுமே செய்கிறான்.தேவதாஸிடம் கனவுகள் இல்லை. அவன் எதிர்காலத்தை நினைத்தே பார்ப்பதில்லை. கடந்த காலமும் அவனைச் சந்தோஷம் கொள்ள வைக்கவில்லை. அவன் நிகழ்காலத்தில் மயங்கிக் கிடக்க விரும்புகிறான். அவனது தடுமாற்றங்களே அவனை வெளியே இழுக்கின்றன.
தேவதாஸிற்கு பார்வதி தேவைப்படுகிறாள். அதற்கான காரணம் காதல் இல்லை. மாறாக, தன்னைப் புரிந்துகொண்ட, தனது செயல்களைப் பாராட்டுகின்ற, தன்னை எந்தக் கட்டுபாடும் இல்லாமல் நேசிக்கின்றன ஒரு ஆள் அவனுக்குத் தேவை. அது பார்வதியாக மட்டுமே இருக்கிறாள். அவளை இழந்துவிட்டதை தேவதாஸ் மிக தாதமாகவே உணர்கிறான். எப்படி அவளை மீட்பது என்று தெரியவில்லை. அப்போதும் அவனை சமூக அந்தஸ்து தடுக்கிறது. அவளுக்கு நல்வாழ்த்து சொல்லிவிட்டு தைரியமற்ற தன் இருப்பைத் தானே அழித்துக் கொள்வது என்று முடிவு செய்கிறான். குடிக்காமல் போயிருந்தால் தேவதாஸ் மூர்க்கமான குற்றவாளியாகியிருப்பான், அல்லது மனநிலை கலங்கிப் போயிருப்பான்.
நகரத்திற்குச் செல்பவர்கள் கெட்டுச் சீரழிந்து போவார்கள் என்ற நம்பிக்கை நீண்டகாலமாகவே இந்தியாவின் கிராமங்கள் அத்தனையிலும் இருந்தது. அதை மையமாகக் கொண்டு நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. இந்த நாவலின் வெற்றிக்கும் அதுவே காரணமாக இருந்திருக்க கூடும். ஒருவேளை தேவதாஸ் கல்கத்தாவிற்கு அனுப்பப்படாமல் கிராமத்திலே இருந்திருந்தால் அவன் பாருவைத் திருமணம் செய்து கொண்டிருக்கக் கூடும். வேறு சம்பவங்களின் வழியே கதை நீண்டிருக்கக் கூடும்
நாவல், திரைப்படம் இரண்டிலுமே எனக்கு மிகவும் பிடித்தமான ஒரே கதாபாத்திரம் தேவதாஸின் வேலையாள் தர்மதாஸ். மிக உயர்வான மனிதர் அவர். அவர் தான் தேவதாஸை வளர்க்கிறார். தேவதாஸின் துடுக்குத்தனத்தை. கோபத்தை அவர் ஒருவரே எதிர்கொள்கிறார். தேவதாஸ் கல்கத்தாவிற்குப் படிக்கச் சென்றபோது கூடவே போகிறார். தேவதாஸ் தவறான பாதையில் செல்கிறான் என்று தெரிந்தும் அவனைத் தடுக்கமுடியாதபடி எஜமான விசுவாசத்தில் அவன் சொல்வதை எல்லாம் செய்கிறார்.
பார்வதி ஒரு முறை தர்மதாஸிடம் தேவதாஸ் எப்படியிருக்கிறான் என்று உண்மையைச் சொல்லுங்கள் என துயரம் ததும்பக் கேட்கிறாள். மனம் உடைந்து தலையில் அடித்தபடியே என் கண்முன்னே அவர் மது, வேசை நோய்கள் எனக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை அழித்துக் கொண்டிருக்கிறார். அதைக் காண்பதற்கு பதில் செத்துப் போய்விடலாம் என்கிறார்.. நோய் முற்றி உடல் நலமில்லாமல் தேவதாஸ் ஒடுங்கிக் கிடக்கும்போதும் தர்மதாஸ் கூடவே இருக்கிறார். மிதமிஞ்சிக் குடித்துவிட்டு சாலையில் விழுந்துகிடக்கும் தேவதாஸைத் தூக்கிப் போய் பராமரிக்கிறார். தேவதாஸின் வீழ்ச்சிக்குக் காரணம் அவன் பாருவைப் புறக்கணித்ததே என்று அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் அதை வெளிப்படுத்தவேயில்லை. இறுதியாக ரயிலில் வரும்போது உறங்கிக் கொண்டிருந்த தர்மதாஸை எழுப்பாமல் பார்வதியின் ஊரை நோக்கி அவசரமாக ரயில்நிலையத்தில் இறங்கிவிடுகிறான் தேவதாஸ். மழையோடு மாட்டுவண்டியில் சென்று பார்வதியைப் பார்க்காமலே இறந்தும் விடுகிறான்.
தர்மதாஸ் என்னவாகியிருப்பார். ரயிலில் கண்விழித்த தர்மதாஸ் தனது எஜமானனைக் காணாமல் உடனே அடுத்த ரயில்வே ஸ்டேஷனில் இறங்கித் தேடி அலைந்திருப்பார். காசிக்குப் போகலாம் என்று சொல்லி ரயிலில் ஏற்றியதால் காசியில் அலைந்து தேடியிருக்கக் கூடும். சாகும்போது தர்மதாஸ் கூட தேவதாஸின் அருகாமையில் இல்லை. தன்னை முழுமையாக நேசித்த பார்வதியை, தர்மதாஸைப் பிரிந்து வந்த தன் தண்டனை போலவே அவனது மரணம் அமைகிறது. அந்த மரணம் திரைப்படங்களை விட நாவலில் மிக உக்கிரமாக எழுதப்பட்டிருக்கிறது.
அநாதைப் பிணமாகக் கிடக்கிறான் தேவதாஸ். அவன் பிராமணன் என்றபோதும் அவன் உடலைத் தொட்டு இறுதிக்காரியம் செய்ய எவரும் முன்வரவில்லை. அவனது கையில் அணிந்திருந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு ஒரு சூத்திரன் அவனை எரிக்க முன்வருகிறான். அவன் தேவதாஸை முழுமையாக எரிக்கவில்லை. பாதி எரிந்துபோன அவன் உடலைக் காகங்களும் நாய்களும் நரிகளும் இழுத்துக் கொண்டு தின்கின்றன. சாவிற்குப் பிறகும் தேவதாஸ் நிம்மதியடையவேவில்லை.
பார்வதியின் எதிர்உருவம் போலவே சந்திரமுகி நாவலில் உருவாக்கப்பட்டிருக்கிறாள். அவள் தேவதாஸை விட வயதானவள். பார்வதியை விடவும் அவள் அழகி. வசதியானவள். ஆடல்பாடல்களில் தேர்ந்தவள். அவளுக்கு எண்ணிக்கையற்ற ஆண்களைத் தெரியும். நகரமே அவள் கைவசம். ஆனால் தேவதாஸ் அவளை முதல் சந்திப்பிலே வெறுக்கிறான். அந்த வெறுப்பின் அடையாளமாகப் பணம் தந்து அலட்சியமாக வெளியேறிப் போகிறான்.
தன்னை வெறுக்கின்ற ஒருவனை அப்போது தான் சந்திரமுகி சந்திக்கிறாள். தான் அணிந்துள்ள வேஷத்தை ஒருவன் சுட்டிக் காட்டுகிறான் என்ற உண்மை அவளைச் சுடுகிறது. அவள் முதல் சந்திப்பிலேயே தேவதாஸ் மீது ஈர்ப்பு கொண்டுவிடுகிறாள். அவனை மறுமுறை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
தேவதாஸ் பார்வதியைப் புறக்கணித்ததைப் போலவே அவளையும் புறக்கணிக்கிறான். மறுமுறை அவளைச் சந்திக்கப் போனபோது நாள் கணக்கில் குடிக்கிறான். பொதுவில் குடிப்பவர்களை வெறுக்கும் சந்திரமுகி அவனைக் குடிக்க அனு மதிக்கிறாள். அவன் போதையில் பார்வதியை பற்றி உளறுகிறான். நினைவு தெளிந்தவுடன் சந்திர முகியை வெறுக்கிறான். வெறுப்பில் வளர்கிறது அவளது காதல். அவள் தன்னை மாற்றிக் கொள்கிறாள். எல்லா பொருள்களையும் விற்று விட்டு ஒரு வேலைக்காரியாக வாழப் போவதாக தேவதாஸிடம் சொல்கிறாள். அதன்படியே கல்கத்தாவை ஒட்டிய கிராமம் ஒன்றிற்கு இடம் பெயர்கிறாள்.
அதே நேரம் பார்வதி வாழ்வில் வசதி அடைகிறாள். பெரிய வீடு. வேலையாட்கள், குடும்பப் பொறுப்பு என்று எதிர்திசையில் செல்கிறாள். இருவருமே தேவதாஸைக் காதலிப்பதால் நெருக்கடி கொள்கிறார்கள். ஆனால் எல்லா வலியையும் மீறி தேவதாஸை நம்புகிறார்கள். காதலின் இந்த இரண்டு முனைகளுக்கு நடுவில் வெறுமனே ஊசலாடிக் கொண்டுதானிருக்கிறான் தேவதாஸ்.
அவன் குடிக்கத் துவங்கியது காதலின் தோல்வியால் அல்ல. தனது குற்றமனப்பாங்கை மறைத்துக் கொள்வதற்காகவே. அதை சந்திரமுகியே சொல்கிறாள். அவன் தனது கோழைத்தனத்தை, சுயகௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேஷமிடுகிறான். அது சரியாகப் பொருந்திவிடுகிறது. ஆகவே அவன் குடியில் தஞ்சமடைகிறான்.
தேவதாஸ் பார்வதியைத் தேடிச் செல்ல முடிவு எடுப்பது கூட மிக தாமதமான தற்செயலாகவே உள்ளது. அவன் தன்னைச் சாவிலிருந்து பார்வதியால் காப்பாற்றிவிட முடியும் என்று உள்ளுற நம்பியிருக்கக் கூடும். அதனால்தானோ என்னவோ அவசர அவசரமாக அவளைக் காணப்போகிறான். மரணம் அவனைத் துரத்தும் போது காதல் தன்னைக் காப்பாற்றிவிடும் என்று நம்புகிறான். ஒருபோதும் காதலின் வலியை இத்தனை தீவிரமாக அனுபவித்திராத தேவதாஸ் கடைசி நிமிசங்களில் மட்டுமே அதை உணர்கிறான். அதனால்தானோ என்னவோ நாவலின் இறுதிப்பத்தியை ஆசிரியரே தன் குரலில் விளக்குகிறார். தேவதாஸ் போன்ற மனிதர்களைக் கண்டால் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். தனக்காகக் கண்ணீர்விடும் மனிதனின் ஒரு சொட்டுக் கண்ணீரைக் கண்டபடியே ஒரு மனிதன் இறந்து போவதே அவனது பாக்கியம் என்று நாவலை நிறைவு செய்கிறார்.
தேவதாஸைக் காதலித்த பெண்களின் கதையை சரத்சந்திரர் ஆழமாக எழுதவில்லை. அதைத்தான் தேவ். டி ஒரு பக்கம் துணிச்சலாக மேற்கொள்கிறது. அது சந்திரமுகியின் வழியே தேவதாஸை அணுகுகிறது. அவள் வாழ்வில் தேவதாஸ் ஒரு திருப்புமுனை மட்டுமே.
நாவலில் அவனது மரணச்செய்தி அறிந்து தனது முக்காட்டை வீசி எறிந்துவிட்டுக் குடும்ப கட்டுப்பாடுகளை மீறி வெளியேறி பார்வதி ஓடிவருகிறாள். அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என தடுத்து நிறுத்திவிடுகிறார்கள். அவள் மூர்ச்சையாகிறாள். தன் உணர்வு வந்து தனக்காக தேவதாஸ் ஒரு இரவு வெளியே காத்திருந்ததை நினைத்துப் புலம்புகிறாள். அதன்பிறகு அவள் பேசவேயில்லை என்பதோடு நாவல் நிறைவுறுகிறது.
நாவலை இயக்குபவள் பார்வதியே. அவள் தன் காலத்தின் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுகிறாள். அதே நேரம் அவளிடம், தனக்கான பொருளை என்றாவது தான் அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை உறுதியாக உள்ளது. மார்க்வெஸின் லவ் இன் த டயம் ஆம் காலரா நாவலில் வருவது போல காதல் நிலையானது. அது வயதால் உருவாவதில்லை. வயது அதிகமாவதால் முடிந்து போவதில்லை என்பதையே தேவதாஸ் நாவலும் வெளிப்படுத்துகிறது.
பார்வதியை விட சந்திரமுகி தனது பலவீனங்களை அறிந்து கடந்து போகிறாள். புத்தன் மூன்று காட்சிகளால் விழிப்புற்று துறவியாகி வெளியேறியது போன்றதே சந்திரமுகியின் முடிவும். அவள் தேவதாஸிடம் எதைக் கண்டாள். அந்தக் காதல் எங்கிருந்து உருவாகிறது. அழகோ,வசதியோ இல்லை. அதைக் கண்டு பெண்கள் மயங்குவதுமில்லை. தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் ஆண்கள் எளிதாக இருக்கிறார்கள். பெண்களால் எல்லாவற்றையும் பேசிவிட முடிவதில்லை. மௌனமாகவே அவர்கள் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் ஏற்படும் இழப்புகள் அத்தனையும் பெண்களுக்கு மட்டுமே நடக்கிறது என்கிறாள்
பார்வதியும் சந்திரமுகியும் தேவதாஸிற்கு சேவை செய்யவே விரும்புகிறா£ர்கள்.. பார்வதி ஆசைப்பட்டது சந்திரமுகிக்குக் கிடைக்கிறது. நோயாளியைக் கூட இருந்து சொஸ்தமாக்குகிறாள். தேவதாசிற்கு சேவை செய்துவிட்டால் பிறகு செத்துக்கூட போய்விடலாம் என்று பார்வதி சொல்வதைக் கேட்டு தேவதாஸ் ஒருமுறை அழுகிறான். அங்கே தான் அவனது காதல் முதன்முறையாக அவள் முன்னால் வெளிப்படுகிறது. சாவதற்கு முன்பாக அவளைத் தேடி வருகிறேன் என்று உறுதி சொல்கிறான்.
தேவதாஸை நேசித்தவர்கள் அத்தனை பேரும் புறக்கணிக்கவேபடுகிறார்கள். அவர்கள் தங்களது ஆறாத துயரத்தோடு தேவதாஸிற்காகக் காத்திருக்கிறார்கள். இந்தியக் குடும்பங்களில் நூற்றாண்டாக இருந்து வந்த ஆண்பிம்பமே தேவதாஸாக உருக் கொண்டிருக்கிறது. தேவதாஸ் காதலை ஒருபோதும் கொண்டதில்லை. காதலிக்கப்படுகிறான். அதை முழுமையாக அறிந்து கொள்வதுமில்லை. பார்வதி தன் முகத்தில் தேவதாஸால் ஏற்பட்ட வடுவைக் காட்டி இது வெறும் காயமில்லை. நம் காதலின் அடையாளம். நம் பால்ய கால கதையை என் நெற்றியில் எழுதிவிட்டிருக்கிறாய் என்கிறாள். பார்வதியின் மனதில் பால்யம் தேவதாஸ் என்ற ஒற்றை உருவமாகவே நிரம்பியிருக்கிறது. தேவதாஸ் அதைப் புரிந்து கொள்ளவேயில்லை.
உலகெங்கும் புகழ்பெற்ற நாவல்கள் திரைப்படமாக்கப்படும்போது அதிக வாசகர்கள் அதைத் தேடிப்படித்து நாவலோடு சினிமாவை ஒப்பிடுகிறார்கள். விவாதிக்கிறார்கள். தேவதாஸ் நாவல் படமாக்கப்பட்ட விதம் குறித்தும் அப்படி நிறைய வாதங்கள் நடந்திருக்கின்றன. மௌனப்படம் துவங்கி மிக பிரம்மாண்டமான பொருள்செலவில் உருவானது வரை பல்வேறு வடிவங்களில் தேவதாஸ் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
இன்று குடிப்பதோ காதல் தோல்வியோ பெரிய பிரச்சினைகள் இல்லை. ஆனாலும் தேவதாஸ் தேவைப்படுகின்றவனாக இருக்கிறான். காரணம், பெண்களின் காதலைப் புரிந்து கொள்ளாத தடுமாற்றமிக்க ஆண்கள் இருக்கின்றவரை தேவதாஸ் இருந்து கொண்டேதான் இருப்பான் போலும்.
இன்றும் நாவல் அதன் ஆதார அளவில் உணர்ச்சித் துடிப்போடும் ஈரத்தோடுமேயிருக்கிறது. அதுவே காலத்தை மீறிய அதன் வெற்றி என்பேன்.
*
ஓவியங்கள். மனோகர்