மற்ற வீடுகளில் எப்படியென்று தெரியாது. நாங்கள் மாதாமாதம் பட்ஜெட் போடுவோம். மளிகைக்கு இவ்வளவு, பொழுது போக்குக்கு இவ்வளவு, தொலைதூரப் பயணத்துக்கு இவ்வளவு, ஓட்டலுக்கு இவ்வளவு இப்படியெல்லாம் ஒரு நிர்ணயம் செய்து கொள்வோம்.
அப்படிச் செய்வதன் நோக்கம் எளிமையானது. ஒரு விஷயத்தை அளவிடாமல் அதைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை என்ற அளவுக்கு அடிப்படையானது. அளவுக்கு அதிகமாகச் செலவழிக்கிறோமா என்பதை நமக்கு நாமே உணர்த்தும் முன்பாக, எப்படியெல்லாம் செலவாகிறது என்பதைக் கணக்கில் கொண்டாக வேண்டியிருக்கிறது.
மாதக் கடைசியில் செலவினங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றில் எதையெல்லாம் தவிர்த்திருக்க முடியும் என்று ஆராயலாம். அல்லது பத்து ரூபாய்க்குக் கணக்குப் பார்க்கும் நாம் ஆயிரக் கணக்கில் விரயமாவதைப் பற்றி அறியாமல் இருந்திருக்கிறோம் என்பது புலனாகும்.
பெரும்பாலான நேரங்களில் பட்ஜெட்டில் முன் கூட்டியே திட்டமிட்ட தொகையை மிஞ்சுவதாகவே செலவு அமையும். இருந்தாலும் திட்டமிடலும், அதை மறு பரிசீலனை செய்வதும் மிக அவசியமான ஒன்றாகவே கருத வேண்டும்.
முன்கூட்டியே செலவுகளைத் திட்டமிடுவது மட்டுமல்லாமல் வரவையும் திட்டமிட்டுக் கணித்து அவற்றைச் சமன் செய்வதுதான் பட்ஜெட் போடும் கலை. ஒரு குடும்பத்துக்கு வகுக்கும் பட்ஜெட்டையே துல்லியமாக அமல்படுத்தும் ஒழுக்கம் நம்மில் பலருக்கும் வாய்ப்பதில்லை. இத்தனைக்கும் அது நம் வாழ்க்கை, வருமானம் மற்றும் எதிர்காலம் சார்ந்தது.
அப்படி இருக்கும் போது தேசத்தின் வரவு செலவைத் திட்டமிட்டுப் பேணுவது சவாலான காரியம் என்பதில் துளியும் ஐயமில்லை. குடும்ப பட்ஜெட்டையே பின்பற்றுவதில் அக்கறையின்மையை வெளிப்படுத்தும் மனித ஜாதியில் யாரோ பணம் என்பதால் தாம்தூம் என்று செலவு செய்ய எவ்விதமான தயக்கமும் இருக்காது. அதிலும் ஐயமில்லை. அதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது.
மேற்சொன்னவை யாவும் ‘பட்ஜெட்’ என்ற சொல்லுக்கான ஓப்பனிங்காக்கும்.
கடந்த வாரம் நிதியமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் சார்பாக 2009-10 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜியின் அறிக்கை சம்பிரதாயமான ஒன்று.
உலகமே பொருளாதாரத் தேக்க நிலையில் நொண்டி அடித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் தொழில் துறையினருக்குப் போதுமான சலுகைகளை அள்ளி வீசவில்லை என்று பிசினஸ் சமூகம் புலம்பிக்கொண்டிருக்கிறது.
எப்படி இருந்தாலும் நடப்பு அரசாங்கத்தின் ஆயுள் இன்னும் சில நாட்களே மிஞ்சியிருக்கும் நிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டிருப்பது இடைக்கால நிதிநிலை அறிக்கையே என்ற நோக்கில் பார்க்கும் போது அரசு புதிதாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை. தேர்தலுக்குப் பிறகு புதிதாகப் பதவிக்கும் வரும் அரசு முழுமையான பட்ஜெட்டை அறிமுகம் செய்யும்.
எனினும், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான அம்சம் ராணுவச் செலவுக்காக ஒதுக்கியிருக்கும் தொகை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கியதைக் காட்டிலும் 35 விழுக்காடு கூடுதலாக பிரணாப் அறிவித்திருக்கிறார்.
நிதியாண்டு 2008-09 க்கு சிதம்பரம் போட்ட பட்ஜெட்டில் ராணுவச் செலவுக்காக ரூ 1,05,600 கோடி திட்டமிடப்பட்டிருந்தது. இந்த வருடம் அது ரூ 1,41,703 கோடியாக உயர்ந்திருக்கிறது.
நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பல ஓட்டைகள் இருப்பது போன வருடம் அம்பலமானதை அடுத்து இந்த நிதி அதிகரிப்பு நடந்திருக்கிறது. குறிப்பாக மும்பைத் தாக்குதல். அப்படித்தான் அரசு சொல்கிறது.
உலகத்திலேயே அகிம்சைப் போராட்டத்தின் மூலமாக விடுதலை பெற்ற ஒரே நாடு இந்தியா. அதனால் உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் தமது போராடத்திற்காகத் தூக்கிய ஆயுதத்தைக் கீழே போடச் சொல்லி அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில் எதற்கு ஒன்றரை இலட்சம் கோடி ராணுவச் செலவு? பேசாமல் அகிம்சையைக் கையாண்டு பாகிஸ்தானோடு கூடிப் பேசலாமே? தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதானாலும் பரவாயில்லை என்று சிலர் இப்படியெல்லாம் பேசி இந்திய இறையாண்மைக்கு பங்கம் விளைவித்து வருகிறார்கள்.
ஆனால் நமது விவாதப் பொருள் அதுவல்ல. தன்னை பிராந்திய வல்லரசாக நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில் இந்தியா முனைப்போடு உள்ளது. படை வீரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்டிருக்கிறது.
படை பலத்திலும் மட்டுமல்லாமல் இராணுவத் தளவாடங்களை நவீனப்படுத்தவும் எத்தனிக்கிறது. பட்ஜெட் உரைகள் அப்படியான பிம்பத்தையே ஏற்படுத்துகின்றன. என்னதான் இராணுவத்திற்கான செலவு 35 சதவீதம் அதிகரித்தாலும் அந்தத் தொகை உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் மட்டுமே என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் இது ஏழு விழுக்காடு. பாகிஸ்தானுக்கு ஐந்து.
உலகத்தில் இராணுவம் மற்றும் போரியல் சார்ந்த செலவுகளில் ஏறத்தாழ பாதி அமெரிக்காவின் பங்களிப்பு. ஏதாவது வேலை தந்து கொண்டே இருக்க வேண்டிய பூதத்தைப் போல தனது துருப்புகளை ஏதாவது நாட்டில் போரில் ஈடுபடுத்த வேண்டிய அவலத்தை அமெரிக்கா இன்னும் நிறுத்திய பாடில்லை.
இதையெல்லாம் ஒப்பிடும் போது இந்தியா செலவிடும் தொகை பரவாயில்லை. கொள்கையளவில் பேசினால் இராணுவத்திற்குச் செலவிடும் தொகை ஆக்கப் பூர்வமானதல்ல. அதனால் மனித குலம் மேம்படுவதில்லை. இந்த 1.4 இலட்சம் கோடியை எத்தனையோ நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். காஷ்மீரைக் காப்பதற்கு மட்டும் தினசரி எவ்வளவு செலவாகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.
எனினும் சமூக மேம்பாட்டை மட்டுமே பார்த்துக்கொண்டு தேசத்தின் பாதுகாப்பைக் கவனிக்கத் தவறினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலம் அப்படித்தான் இருந்தது.
1962 இந்திய-சீன யுத்தம் இந்தியாவின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதாகவே கருத வேண்டியிருக்கிறது. சீனா வெறும் 722 வீரர்களை மட்டுமே பலி கொடுத்த போரில் இந்தியா 3,128 பேரை இழந்தது. 3,123 பேர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டதாக அறிகிறோம்.
கொழும்பில் கூடிய அணிசேரா நாடுகள், சீனா அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்ததைக் கண்டிக்கத் தவறின. இப்போது, "விடுதலைப் புலிகளும் இலங்கையும் ஒரு சேர போரை நிறுத்த வேண்டும்" என்று இந்தியா வெளிப்படுத்தும் நடுநிலையை அந்த அணிசேரா நாடுகள் எடுத்தன.
சீனப் போரின் தோல்விக்குப் பொறுப்பேற்று பாதுகாப்பு அமைச்சர் மேனன் பதவி விலகினார். பிரதமர் நேரு பலமான கண்டனத்திற்கு ஆளானார். இராணுவத்தைப் பலப்படுத்தாமல் விட்ட கவலையே நேருவின் உடல்நலத்தைப் பாதித்து அவரது மரணத்திற்கு அடிகோலியது என்று நம்ப முடிகிறது.
சீனப் போருக்குப் பிறகு அகிம்சை மட்டுமே ஒரு தேசத்தைக் காக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு மாறியதை 1963 அக்டோபரில் அளித்த பேட்டியில், "The efficacy of nonviolence is not entirely convincing" என்று சொல்லி வெளிப்படுத்தினார்.
அதன் பிறகு இந்திரா காந்தி ஆட்சிக்கு வந்த பிறகுதான் எல்லாமே மாறியது. பலம் பொருந்திய Research and Analysis Wing – RAW எனப்படும் உளவு அமைப்பை நிறுவப்பட்டது.
இராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் வேகமெடுத்தன. நவீன ரக தளவாடங்களை வாங்குவதற்கே பெருந்தொகை செலவிடப்படுகிறது. ராஜீவ் காந்தி அமைச்சரவையில் அங்கம் வகித்த வி.பி.சிங் அம்பலப்படுத்திய போபர்ஸ் பீரங்கி ஊழல் இப்பவும் பிரபலம்.
மும்பை நகரில் தாக்குதல் நடைபெற்றதை அடுத்து தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் இராணுவ பட்ஜெட் குறித்து எதிர்ப்புகள் எழவில்லை. அப்படி கேள்வி எழுப்புபவனின் தேசப் பற்று கேள்விக்கு ஆளாக்கப்படும். இருந்தாலும் சில விஷயங்களை மேலோட்டமாகவேனும் பகுப்பாய்வு செய்வது அவசியம்.
கடந்த நிதியாண்டில் தளவாடம் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 7,000 கோடி ரூபாய் செலவிடப்படாமல் உள்ளது.
தரைப் படைக்கு சென்ற ஆண்டைக் காட்டிலும் 5,000 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஒதுக்கிய தொகையில் 2,000 கோடி ரூபாய்க்கு செலவே இல்லை.
கடற்படைக்கு ஒதுக்கப்பட்ட ரூ 3,000 கோடி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.
கடலோரக் காவல் படை தனக்கு ஒதுக்கப்பட்ட ரூ 250 கோடியை உபயோகிக்கத் தவறியது. மும்பைத் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் ஊடுருவலையும் தடுக்கவில்லை. இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படைக்கு இரையாவதையும் தடுக்கவில்லை. இருந்தாலும் இந்த வருடம் ரூ 1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் எந்தத் திட்டம் போட்டாலும் 10-20 சதவீதம் ஆட்சியாளர்கள் லவட்டியது போக மிச்சமிருப்பதே பயன்பாட்டில் செலுத்தப்படும் என்ற கருத்து நிலவுகிறது. இதில் இராணுவத்திற்கு ஒதுக்குவது மட்டும் விதிவிலக்காக இருக்காது. ஆயினும் (இலங்கை இராணுவத்திற்கு உதவியது போக, மிச்சமிருப்பதையாவது முறையாகப் பயன்படுத்தினால் சரி.