இன்றைய இளைய தலைமுறையினரிடம் சமூக அக்கறையும், அரசியல் விழிப்புணர்வும் குறைந்து வருகிறது என்ற பரவலான வருத்தம் நிலவுவதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. அந்த எண்ணத்தை மீள்பார்வை செய்யத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது முத்துக்குமாரின் தீக்குளிப்பு நிகழ்வு.
தற்கொலை செய்துகொள்வது குற்றம் என்கிறது சட்டம். அதனினும் கேவலமாக் கருதப்படுவது தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வது. பெரும்பாலும் அரசியல் தலைவர்களுக்காக ‘உயிரையே’ துறக்கத் துணிந்த சிந்தனையற்ற அடி மட்டத் தொண்டர்களின் செயல்பாடாகவே தீக்குளிப்பு நிகழ்வுகள் நமது சமூகத்தில் அறியப்பட்டு வந்துள்ளன.
கடந்த ஜனவரி 29 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு நேரடியாக உதவி வரும் இந்திய அரசைக் கண்டித்து, தன்னை எரியூட்டிய முத்துக்குமரனின் மரணம் வழக்கமான தீக்குளிப்பு நிகழ்வுகளில் இருந்து மாறுபட்டது எனக் கருதுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. (பேராசிரியர் மன்னிக்க)
ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்தது. மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அமுல்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து தீக்குளிக்க முயறித்து பரபரப்பை உண்டாக்கிய ராஜீவ் கோஸ்வாமி முதல், ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க மறுத்து கத்தோலிக்க நம்பிக்கைக்கு எதிராக வாட்டிகன் நகரில் தன்னை தீக்கிரையாக்கிய Alfredo Omrando என்ற இத்தாலியப் படைப்பாளி வரை ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கத்தான் செய்தது.
அதைப் போலவே 1965 இல் பக்தவச்சலம் தலைமையிலாம காங்கிரஸ் அரசு கட்டாயமாக இந்தியைத் திணித்த போது அதை எதிர்த்து தீக்குளித்து மாண்ட கீழப்பழுவூர் சின்னச்சாமிக்கும், வியட்நாமுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய அநியாயமான போரை நிறுத்தச் சொல்லி தன்னை எரித்துக் கொண்டு, “I believe in God and the hereafter and I will see you there” என அதிபர் நிக்சனுக்கு கடிதம் எழுதச் சொன்ன கலிஃபோர்னியா பல்கலைக் கழக மாணவர் George Winne க்கும், முந்தா நாள் செத்துப் போன முத்துக்குமாருக்கும்கூட காரணங்கள் இருக்கவே செய்தன.
இவற்றில் முத்துக்குமாரின் மரணம் வெகு முக்கியமானது. தமிழக மக்களின் மன உணர்வுகளைச் சற்றும் மதியாது செயல்படும் மன்மோகன் சிங் அரசின் கள்ள மெளனத்திற்கு அறைகூவல் விடும் கொந்தளிப்பின் ஒரு பகுதியாகவே இதை நாம் காண்கிறோம். தீக்குளிப்பதற்கும் சமூக விழிப்புணர்வுக்கும் தொடர்பில்லை என்று பொத்தாம் பொத்குவாக இந்த வாலிபனின் மரணத்தை ஒற்றை நிகழ்வாக ஒதுக்க முடியாது.
மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்திருக்கும் சாஸ்திரி பவனில் நெருப்புக்கு தன்னைத் தின்னக் கொடுக்கும் முன் அவன் விநியோகித்த பிரசுரங்கள் அவரை ‘தலைவருக்காகத் தீக்குளிக்கும் மனப் பிறழ்வு தொண்டன்’ ஜாதியல்ல என்று காட்டுகின்றன.
இரண்டாயிரம் வார்த்தைகளில் விரிந்து, “அருமைத் தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி” என முடிந்த அந்த மடல் அவனது முடிவு உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கவில்லை.
எதற்காக முத்துக்குமார் உயிரைப் போக்க முனைந்தார் என்று கேள்விக்கு விடை தேடும் முன்னர் இலங்கைப் பிரச்சினை குறித்தான தமிழ் நாட்டுத் தமிழர்களின் மனநிலையை அல்லது நிலைப்பாட்டை வகைப்படுத்துவது உசிதம்.
முதலாவதாக நெடுமாறன் வகையினர். கொள்கையாகவே வாழ்வது. எத்தனை துயர் வந்தாலும் தனது வாழ்வையே உலகத் தமிழரின் நலனுக்காக அர்ப்பணித்து வாழ்பவர் அவர். எத்தனை முறை உள்ளே வைத்தாலும், அடக்கினாலும் ஓங்கிக் குரல் கொடுக்கும் வகையினர். வைகோ, சீமான் கூட இந்த வகைதானோ என்று கருதுகிறோம்.
இரண்டாவது வகையினர் அமீர் போன்றவர்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு ஒரு முறை குமுறி எழுவார்கள். பிறகு நாலு நாள் உள்ளே தூக்கி வைத்தால் தானுண்டு தன் பிழைப்புண்டு என வேலையைக் கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இதற்கு அடுத்த வகையினருக்கு இலங்கைப் பிரச்சினையின் முழுமையான பின்னணி தெரியும். 1949 இல் காந்தியவாதி தந்தை செல்வநாயகம் ஃபெடரல் கட்சி ஆரம்பித்து மாநில சுயாட்சிக்காக 1976 வரை போராடிய பிறகு, ‘இனி தனித் தமிழீழம் தவிர வேறி வழியில்லை’ என்று ஏகமனதாக முடிவு செய்தது முதல், தமிழர்கள் மாநில சுயாட்சி கோரிய போதும் சரி அவர்கள் தனி நாடு கேட்டுப் போராடிய போதும் சரி சிங்கள ஆட்சியாளர்கள் ஒருக்காலும் மாநிலத் தீர்வுக்கு வந்திதில்லை என்பது வரை தெரியும். சிங்களர்களைப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வந்து உட்கார வைத்தது புலிகளில் இராணுவ பலம் மட்டுமே என்றும், ஈழத் தமிழரின் உரிமைக்கும் நலனுக்கும் எதிராக காரியத்தில் இந்தியா திட்டமிட்டு ஈடுபடுகிறது என்றும் தெரியும். ஆனால் இவர்கள் நமக்கேன் வம்பு என்று மூச்சு மாட்டார்கள். தமிழகத்தில் பெரும்பாலான எழுத்தாளர்கள் இவ்வகையில் அடக்கம் என்று யூகிக்கிறேன்.
நான்காவதாக அடுத்து வெகுஜனம். இவர்களுக்கு இலங்கைத் தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவிக்கிறதே என்ற கவலை உண்டு. ஆனாலும் பிழைக்கப் போன இடத்தில் தமிழர்கள் எதற்காக தனி நாடு கேட்டுப் போராடுகிறார்கள் என்ற பாமரத்தனமான அங்கலாய்ப்பும், ராஜீவ் காந்தியைக் கொன்றதற்கு மன்னிக்க முடியாது என்று கோபமும் உண்டு.
ஐந்தாவது பிரிவில் கருணாநிதி வருகிறார். பிரச்சினையில் ஒட்டு மொத்தப் பின்னணியும் இவர்கள் அறிவார்கள். அரசியல் அதிகார நிலைப்பாடுகளே இவரகளது ஈழ அரசியல் நிலைப்பாடுகளை நிர்ணயிப்பவை.
ஆறாவதாக வருவது பகிரங்கமான ஈழத் தமிழ் எதிர்ப்பாளர்கள். ஜெயலலிதா, இந்து பேப்பர், சோ, ஞானசேகரன், தங்கபாலு வகையறாக்கள்.
நூற்றுக் கணக்கான முறை தமிழக மீனவர்களைச் சுட்டிருக்கிறது இலங்கைக் கடற்படை. திசை மாறி வரும் பாகிஸ்தான் மீனர்களை இந்தியா பாதுகாப்பாகத் திருப்பியனுப்புகிறது. இந்திய மீனவர்களை பாகிஸ்தானும் அப்படியே கையாள்கிறது. ஆனால் தமிழக மீனவர்களை இலங்கை சுட்டுக் கொல்கிறது. அவர்கள் மீது பாயும் ஒவ்வொடு குண்டும் இந்திய இறையாண்மையை ஓட்டையாக்குகிறது. ஒரு வேளை தமிழக மீனவர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லையொ என்னவோ! இதெல்லாம் தடுக்க கடைசி இரண்டு பிரிவினர் ஒரு முயற்சியும் செய்ய மாட்டார்கள்.
இந்த ஆறு பிரிவினரில் மூன்றாவது பிரிவைச் சேர்ந்தவர்தான், “உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்” என்று கடிதம் எழுதி விட்டுச் செத்த முத்துக்குமார் என்று கணிக்கத் தோன்றுகிறது.
ஈழப் பிரச்சினையின் பின்னணி தெரிந்தவர்கள் மத்திய அரசு துரோகம் இழைப்பதை முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அது குறித்தான உண்மைகள் வெகுஜனத்திற்குத் தெரியக் கூடாது என்ற நோக்கில் பலர் பணியாற்றுகிறார்கள்.
உதாரணத்திற்கு, 1983 இல் இலங்கையில் தமிழர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட போது தமிழகம் கொதித்து எழுந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். சட்டக் கல்லூரி மாணவர்களும், அரசுக் கல்லூரிகளின் சிலரும் போராடினாலும் கூட இப்போது அம்மாதிரியான சூழல் இல்லை.
முத்துகுமார் தனது இறுதி வாக்குமூலம், “உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.” என்கிறது.
அந்தக் காலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முதலில் கையில் எடுத்தது மாணவர்கள். காலப் போக்கில் அது திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாக்கு வங்கியாக மாறியது காலத்தின் அவலம்.
“போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள்.” என்ற அறைகூவலை அந்தக் கடிதம் விடுத்திருக்கிறது.
”என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்,” என்ற கோரிக்கையை அவர் விடுத்துத்தான் செத்துப் போயிருக்கிறார்.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.
இதுவும் அவர் எழுதி வைத்துச் செத்துப் போனதுதான்.
எனினும் முத்துக்குமாரின் மரணம் தமிழகமெங்கும் மாணவர் எழுச்சிக்கு வித்திடும் என்றெல்லாம் நம்ப முடியாது என்பதே நிதர்சனம். இன்றைக்கு சட்டக் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்கள் மட்டுமே வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இது போதாதா உண்மையை உணர்த்த?
விடுதலைப் புலிகளை அழித்து விட்டு அரசியல் தீர்வு என்று கர்ஜிக்கிற ராஜபக்சே சொல்கிற தீர்வு என்ன? அவர்கள் அறுபது வருடமாகப் போராடிய மாநில சுயாட்சிக்கு ஒப்புக்கொள்வாரா? அல்லது இந்தியாதான் அதற்கு உத்திரவாதம் அளிக்குமா? நிச்சயமாகக் கிடையாது.
இலங்கையில் புலிகளின் கை ஓங்கியிருந்த 2002-03 சமயத்தில் அதிகாரப்பகிர்வுக்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால் அப்போதும் மாநில தன்னதிகாரத்திற்கு சிங்களர்கள் இறங்கி வரவில்லை.
விடுதலைப் புலிகள் தனிநாடு கோரிப் போராடுகிறார்கள் என்பதை புலிகளின் ஆதரவாளர்களே நம்புவதில்லை. புலிகள் பலத்தோடு இருந்தாலும் சரி, ஒட்டு மொத்தமாக அழிந்தாலும் சரி சிங்களர்கள் ஒரு போதும் சம உரிமையை வழங்கி மாநில அமைப்பிற்கு இறங்கப் போவதும் இல்லை.
இந்தச் சூழ்நிலையில் முத்துக்குமாரின் தியாக மரணம் ஒரு கவன ஈர்ப்பாக மட்டுமே கடந்து சென்று காலத்தின் போக்கில் மறக்கடிக்கப்படும் அபாயமே இன்றைய நுகர்வுச் சூழலில் சாத்தியம்.