முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி
கட்டுரை
அரவிந்த அடிகா காட்டும் இந்தியா எது?
இந்திரா பார்த்தசாரதி
கள்ள உறவும், நவீனப் பெண்ணுரிமையும்
ஆர். அபிலாஷ்
சரியும் பொருளாதாரம்: சாவின் அழைப்பு
செல்லமுத்து குப்புசாமி
ஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல்
வாஸந்தி
சிசிலியா: ஆண்கள் ஒரு போதும் கடக்க முடியாத சவால்
யமுனா ராஜேந்திரன்
தமிழ் உணர்வுக்கு என்ன பொருள்
தமிழவன்
பயங்கரவாதத்தின் இந்து முகம் சொல்லும் செய்தி
மாயா
முவவா வைரமுத்தா?
இந்திரஜித்
நோபெல் பரிசுகள்
சுகுமாரன்
அமெரிக்க தேர்தல் களம்
பாஸ்கர்
ஆளும் கட்சி தொலைக் காட்சியா , அரசு தொலைக் காட்சியா?
அ.ராமசாமி
உணவு பற்றி இன்னும் சில பேச்சுகள்
ந.முருகேச பாண்டியன்
அனேக மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் ஒரு பெண்
சிவி பாலகிருஷ்ணன்
விருது பொருதுதல்
சுதேசமித்திரன்
கடவுளின் பெயரால்...
மாயா
குருவாயுபுரத்து ஹோர்லிக்ஸ் விசேஷங்கள்
ஸ்ரீபதி பத்மநாபா
கட்டுடல் காளையர்
வா.மணிகண்டன்
கவிதை
மனோஜ் கவிதைகள்
மனோஜ்
என்னவென்று சொல்வேன்?
கருப்பு நிலா
அனிச்சை
ரெஜோ
அரங்கத்தில் அன்று!
இந்திரஜித்
கே.பாலமுருகன் கவிதைகள்
கே.பாலமுருகன்
ரவி உதயன் கவிதைகள்
ரவி உதயன்
சிறுகதை
பொன்னம்மா
வே.பிச்சுமணி
பொது
தீபாவளி செலவுக்கு!
தமிழ் மகன்
அப்படியும் சில பழக்கங்கள்; இப்படியும் சில வழக்கங்கள்
கழனியூரன்
புது நூல்
இவங்க தீபாவளி
பாபுஜி
யாருக்கு யார் காவல்?
பாபுஜி
சந்திராயன்
பாபுஜி
கடித இலக்கியம்
அரைச் சொல் கொண்டு அம்பலம் ஏறினால் அரைச் சொல்லும் முழுச் சொல்லாகுமோ..?
கழனியூரன்
ஹைக்கூ வரிசை
இதயத்தின் பருவங்கள்-8
ஆலன் ஸ்பென்ஸ்
பழமொழிகளும் சொலவடைகளும்
தி.க.சிக்கு
தஞ்சை பிரகாஷ் எழுதியது
பொது
'கல்வெட்டு பேசுகிறது'
சிவன்
பழமொழிகளும் சொலவடைகளும்
ஆஸ்திரேலிய கவிஞர் ஜீயாப் பேஜ், கவிஞர் தமிழச்சி அவர்களுடனான உரையாடல்
-
புதுக்கவிதை என்பது சின்ன வீடு
-
கடிதங்கள்
பயங்கரவாதம்: ஓர் உளவியல் பார்வை
-
உங்கள் கருத்துகள்
உங்கள் கருத்துக்கள்
-
சரியும் பொருளாதாரம்: சாவின் அழைப்பு
செல்லமுத்து குப்புசாமி

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று யாராவது சொன்னால் எனக்கு சிரிப்பு வந்து விடும். எல்லோரும் சமம் என்றாலும்கூட ஒரு சிலர் மட்டும் 'கூடுதல்' சமம் என்ற நிலைமை இன்றைய உலகத்தில் நிலவுகிறது. இந்த உலகம் இருப்பவனையும், இல்லாதவனையும் ஒரே மாதிரி நோக்குவதில்லை. வெள்ளையனையும், கறுப்பனையும் ஒரே மாதிரி நடத்துவதில்லை. சமீபத்தில் அமெரிக்காவைப் பாதித்திருக்கும் பொருளாதாரச் சிக்கலைப் பற்றியும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் பற்றிய செய்திகளைப் பார்க்கும் போது இந்த உண்மை மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆவது புலனாகிறது.

அமெரிக்கர்களின் உலகம் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கி மேற்கே பசிபிக் கடலில் முடிவடைகிறது. அவர்களைப் பொறுத்த வரையில் உலக வரலாறு என்பது இசபெல்லா இராணியிடம் ஆசி பெற்றுக்கொண்டு கொலம்பஸ் கப்பலில் ஏறிய தருணத்தில் இருந்தே தொடங்குகிறது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு உலகின் ஒற்றை நாட்டாமையாக அமெரிக்கா அறியப்படுவதால் அங்கு ஏற்படும் நிகழ்வுகளின் அதிர்வலைகள் உலகெங்கும் உணரப்படுகிறது. தனது பொருளாதாரத்தின் தாராளமயமாக்கலை சோவியத்தின் வீழ்ச்சி சமயத்தில் அறிமுகப்படுத்திய அமெரிக்காவைப் பற்றிய செய்திகள் இந்தியாவில் பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தை நிறைக்கின்றன.

கடந்த ஓரிரு ஆண்டுகளின் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த இலட்சக் கணக்கானோருக்கு இந்தியாவில் வேலை பறி போயிருக்கிறது. அதைப் பற்றிக் கொஞ்சம்கூட மூச்சு விடாத ஊடகங்கள் அரிதாரம் பூசிய ஆயிரத்துச் சொச்சம் ஜெட் ஏர்வேஸ் அழகிகளின் வேலை பறி போனதைப் பெரிய செய்தியாக்கின. அவர்களின் வேலை ராஜ் தாக்கரேயின் மிரட்டல் காரணமாகத் திரும்பக் கிடைத்தது வேறு விஷயம். விமானச் சேவையில் இந்த ஆண்டு நட்டம் என்றாலும்கூட என்றாவது ஒரு நாள் இலாபம் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் மராட்டிய 'நவ நிர்மாணிகள்' அந்த விமானங்களை எல்லாம் அடித்து நொறுக்கி அப்பளமாக்கிவிட்டால் பிறகு கையிலா இறக்கையைக் கட்டிக்கொண்டு பறக்க முடியும்?

அமெரிக்கா முன்னிலைப்படுத்திய முதலாளித்துவ அமைப்பில் தொழில்கள் ஆரம்பிக்கப்படும் போதும், அதனால் வேலை வாய்ப்புகள் ஏற்படும் போதும் வரவேற்கிற சமுதாயம் அந்த முதலாளித்துவத்தின் அடிநாதமாக விளங்கும் hire & fire கொள்கையை மட்டும் ஏற்க மறுக்கிறது. ஒரு கம்பெனியைவிட இன்னொரு கம்பெனி அதிக இலாபம் கொடுத்தால் கூச்சமே இல்லாமல் தாவுகிறவர்கள், தாங்களே ஒரு கட்டத்தில் வேண்டப்படாதவர்களாக மாறக் கூடும் என்பதை ஜீரணிக்கத் தயங்குகின்றனர். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

இன்னும் எத்தனை நாட்களுக்கு அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் நாளிதழ்களின் தலைப்புச் செய்தியாக வரப் போகிறது என்று தெரியவில்லை. அந்தச் சிக்கலின் பாதிப்பு இங்கே இருந்தாலும் கூட நாம் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது. பங்குச் சந்தைகள் குட்டிக் கரணம் அடித்து, பல பேரது சொத்து மதிப்பைச் சுருக்கி விட்டிருக்கிறது. நிதி நிறுவனங்களோடு சேர்ந்து பல தனி நபர்களும் குடும்பங்களும் திவால் ஆகியிருக்கின்றனர்.

இந்த மாதத் தொடக்கத்தில் கார்த்திக் ராஜாராம் (வயது 45) என்ற அமெரிக்க வாழ் தமிழர் தனது மனைவி, மாமியார் மற்றும் மூன்று மகன்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் மாய்த்துக்கொண்ட செய்தி அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குத் தீனி போட்டது. 'எனக்கு இரண்டு வழிமுறைகள்தான் இருந்தன. ஒன்று, நான் மட்டும் தற்கொலை செய்து கொள்வது. இரண்டாவது, குடும்பத்தினரைக் கொன்றுவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்வது. இரண்டாவது வழிமுறைதான் கவுரவமான வழிமுறை என்று முடிவெடுத்து இதைச் செய்துள்ளேன்' என்று அவர் எழுதி வைத்த பேப்பரை போலீஸ் கைப்பற்றினர். வேலையின்மை மற்றும் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இழப்பு ஆகிய இரண்டும் அவரது முடிவுக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஒரு காலத்தில் மில்லியன் கணக்கில் அவரிடம் புழங்கியிருக்கிறது.

அருள்ராஜ் முப்பது வயது இளைஞர். இந்தக் கட்டுரையை அச்சிடும் நாளன்று வந்த செய்தித்தாள், சாஃப்ட்வேர் எஞ்சினியராகிய அருள்ராஜின் மரணச் செய்தியைத் தாங்கி வந்திருந்தது. ஷேர் மார்க்கெட்டில் ஏற்கனவே ஏற்பட்ட நட்டத்தை சரி செய்வதற்காக வட்டிக்குக் கடன் வாங்கி விளையாடிய அவருக்குக் கடன் கொடுத்தவர்களது அழுத்தம் எழும்பூர் விடுதி ஒன்றின் மின் விசிறியில் அவரைத் தொங்க விட்டுள்ளது. பாவம், மனிதருக்குக் கல்யாணம் ஆகி ஒன்றரை வருடந்தான் ஆகிறது. அதற்கு முந்தைய நாள் 26 வயது இளைஞர் ஒருவர் மின் விசிறியில் தொங்கிய செய்தி வட நாட்டில் இருந்து வந்தது. வெறும் இரண்டு வருட அனுபவமே கொண்ட ஒரு ஷேர் புரோக்கர் சென்ற மாதம் இந்தூரில் தற்கொலை செய்துகொண்டார். ஷேர் மார்க்கெட்டில் 12 இலட்சம் ரூபாய் நட்டமடைந்த மனைவியின் இழப்பை ஈடு கட்டுவதற்குப் பதிலாக அவரை விவாகரத்து செய்யக் காத்திருக்கும் கணவனைப் பற்றிய செய்தியும் சில நாட்களுக்கு முன்னர் வெளி வந்தது. கர்ப்பிணி மனைவியைக் கொன்று விட்டு தானும் செத்துப் போன மனிதனின் செய்தியும் வந்திருக்கிறது. இன்னும் வெளியே வராத செய்திகள் எத்தனையோ! எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு ஒரேயடியாகச் சாகாமல் தினந்தோறும் செத்துப் பிழைத்து நடை பிணமாக வாழ்பவர்கள் எத்தனையோ!

ஒவ்வொரு முறை பங்குச் சந்தை வீழ்ச்சியடையும் போதும் வெறும் கையில் முழம் போட்ட சிலர் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளை நாம் காண்கிறோம். இத்தனைக்கும் அவை ஒன்றும் புதிதல்ல. அந்தச் செய்திகளை மீடியாக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அவை பரபரப்பான செய்திகள். மனைவியின் கள்ளக் காதலனை கணவன் வெட்டிக் கொலை என்றாலும், பங்குச் சந்தை நஷ்டத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை என்றாலும் பத்திரிகையைப் பொறுத்த வரை sensation.

சின்ன வயதில் பேப்பர் போடும் பையனாக இருந்து தனது முதலீடுகள் மூலம் பங்குச் சந்தைக்கும், பகுத்தறிவுக்குமான தொடர்பைப் போதிக்கும் வாரன் பஃபெட் சொன்னதைப் போல பங்குச் சந்தை தமக்குத் தாமே உதவத் தயாராக இருப்பவர்களைக் காப்பாற்றும். அந்த விஷயத்தில் கடவுளைப் போல. அதே சமயம் தமது செயல்களைத் திட்டமிடாமல், அதன் விளைவுகளைக் கணிக்காமல், அதற்குப் பொறுப்பேற்காமல் இருப்பவர்களைக் கண்டிப்பாகத் தண்டித்தே தீரும். இந்த விஷயத்தில் கடவுளுக்கு நேர் எதிர். மன்னிப்பெல்லாம் கிடையாது. ஒவ்வொரு மனிதனும் தனது செயல்களுக்கும், அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அதில் தோற்கும் போது அது பரபரப்பான செய்தியாக ஆனாலும், அடிப்படையில் அதுதான் 'முதலாளித்துவத்தின் நியதி'.

ஆனால் நிதி நெருக்கடியின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வது என்னவோ நேற்றும், இன்றும் மட்டும் புதிதாக நடக்கிற விவகாரம் மாதிரி சில பேர் நினைக்கிறார்கள். எல்லாக் காலத்திலும் எல்லா மட்டத்திலும் மக்களுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கார்த்திக் ராஜாராம் செத்தாலும் சாவுதான், தயாரிப்பாளர் ஜீ.வி. செத்தாலும் சாவுதான். விதர்பா விவசாயி செத்தாலும் சாவுதான். அனைவரது சாவுக்கும் பொதுவானது பொருளாதார நெருக்கடிதான். ஆனால் பிரிந்து சென்ற ஒவ்வொரு உயிருக்கும் சம அளவு முக்கியத்துவமும், அங்கீகாரமும் சமுதாயம் கொடுப்பதில்லை. எல்லா உயிர்களும் சமம் என்பது சரிதான். எனினும் சில உயிர்கள் மட்டும் கூடுதல் சமம்.

பங்குச் சந்தையில் சூதாடி பணத்தைத் தொலைத்து தற்கொலை செய்வது புதிய விஷயமே இல்லை. ஏனென்றால் தனது ரிஸ்க் தாங்கும் திறன் தெரியாமல் சூதாடுவதையே பாதி தற்கொலையாகக் கருத வேண்டியிருக்கிறது. ஆனால் வேறு வகையில் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறவர்கள் தாமாகச் சென்று சிக்கிக்கொள்வதில்லை. தவிரவும் தற்கொலை செய்து கொள்ளும் அத்தனை பேருக்கும் நிதி நெருக்கடி மட்டுமே காரணமாக இருப்பதில்லை. காதல் தோல்வி, பரீட்சையில் ஃபெயில், முதுமையில் தனிமை, மன உளைச்சல் என்று பல விதமான சங்கதிகளை அடையாளம் காட்டலாம்.

எது எப்படி இருந்தாலும் இந்தியாவில் தற்கொலை விகிதம் மிக மிக அதிகமாக உள்ள அதிர்ச்சியான தகவலை எவ்வளவு அலட்சியமாக நாம் உதாசீனம் செய்திருக்கிறோம் என்று தெரிகிறது. மக்கள் தொகையின் 7.5 சதவீதத்தினர் தீவிரமான மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. நல்ல வேளையாக அவர்கள் அத்தனை பேரும் தற்கொலை முடிவுக்குச் செல்வதில்லை. இருந்தாலும் வருடத்திற்கு சுமார் ஒன்றேகால் இலட்சம் பேர் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்கிறார்கள் இந்தத் திருநாட்டில். ஆண்டு தற்கொலை விகிதம் ஒரு இலட்சம் பேருக்கு 98 பேர். இதிலும் கூட சீனாவுக்கும் நமக்கும் போட்டிதான். ஒரு இலட்சம் சீனர்களில் 99 பேர் தற்கொலைக்கு ஆளாகிறார்கள். உலகத்தில் நடக்கும் மொத்த தற்கொலைகளில் 40 சதவீதம் இந்தியா, சீனா மற்றும் ஜப்பானில் மட்டும் நடக்கிறது. உலகமெங்கும் பத்து இலட்சம் மக்களின் மரணத்திற்கு தற்கொலை காரணமாக உள்ளது. 39 வினாடிக்கு ஒருவர் அவுட். இது தவிர ஆண்டுக்கு சுமார் ஒன்று முதல் இரண்டு கோடி தற்கொலை முயற்சிகள் நடந்து தோற்றுப் போகின்றன.

விதவிதமான காரணங்களுக்காக எல்லாக் காலங்களிலும் ஜோராக நடக்கும் தற்கொலைகள் பொருளாதாரப் பின்னடைவு சமயங்களின் அதிகரிக்கிறது. மக்களுக்கு பொதுவாகவே மன உளைச்சல் கூடுதலாக இருக்கும் கால கட்டம் அது. தற்போது அமெரிக்காவில் நடுத்தர வயது வெள்ளைக்கார ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தற்கொலை விகிதம் கூடுவதாகச் சொல்கிறார்கள். சில பேர் great depression எனக் குறிப்பிடும் 1930 களின் அமெரிக்கப் பொருளாதாரத் தேக்க நிலையின் போது நடந்தேறிய தற்கொலைகளோடு ஒப்பிடுகிறார்கள்.

மனித குல வரலாறு இது வரை சந்தித்த மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கல் 1930 களில் அமெரிக்காவுக்கு வந்தது மட்டுந்தான் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாறும் உலக வரலாறும் ஒன்றல்ல. உலக வரவாற்றில் இது வரை ஏற்பட்ட பஞ்சங்களையும், பட்டினிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அமெரிக்கா சந்தித்ததெல்லாம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அமெரிக்காவின் great depression க்கு முன்னூறு வருடங்கள் முன்பாக தக்காணப் பிரதேசத்தில் ஏற்பட்ட பஞ்சம் அந்தக் காலத்திலேயே இருபது இலட்சம் பேர் வரை பலி கொண்டது. 1770 வங்காளப் பஞ்சத்தில் அந்தப் பிராந்திய ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பாகம், அதாவது ஒரு கோடி, காலியானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வறுமை மற்றும் வறட்சியில் தவித்த தமிழக மக்களை ஆங்கிலேய எஜமானர்கள் தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, இலங்கை, மொரீசியஸ் முதலிய பிரதேசங்களுக்கு பேக் பண்ணி அனுப்பிய சரித்திரத்திற்கும் பஞ்சமே பின்னணி.

சென்ற இருபதாம் நூற்றாண்டில் மட்டும் உலகமெங்கும் சுமார் ஏழு கோடி மக்கள் பட்டினியால் இறந்திருக்கிறார்கள். அமெரிக்காக்காரனுக்குப் போனால் மட்டும் உயிர், மற்றவனுக்குப் போனால் மயிரா? 1958-61 கால கட்டத்தில் மூன்று கோடி சீனர்கள் பட்டினியால் மாண்டனர். ஆப்பிரிக்க தேசமான எத்தியோப்பியாவின் கதை அதற்கு மேல். 1888-1892 சமயத்தில் அங்கே பத்துக்கு ஒன்பது கால்நடைகளும், மூன்றில் ஒன்று மனிதர்களும் மடிந்தனர்.

இவையெல்லாம் ஒரு பானைச் சோற்றைப் பதம் காண எடுத்துக்காட்டிய சில பருக்கைகள் மட்டுமே. நெடிய நாகரிக உலக வரலாற்றில் பற்பல பெரும்பஞ்சங்களும், பொருளாதாரப் பின்னடைவுகளும் நேர்ந்துள்ளது. அவற்றோடெல்லாம் ஒப்பிடும் போது தற்போதைய பிரச்சினை ஜுஜுபி. Great depressin என்று மேற்கத்திய முதலாளித்துவ சித்தாந்திகள் சுட்டிக் காட்டுவதுகூட அவ்வளவு பெரியதல்ல. மற்றப் பெரும்பஞ்சங்களினால் உயிரிழந்தவர்களோடு ஒப்பிடும் போது 1930 களில் பங்குச் சந்தை சரிவினால் எழுந்த பொருளாதாரப் பின்னடைவும், அதன் மூலம் ஏற்பட்ட தற்கொலைகளும் சொற்பமாகவே தோன்றுகிறது. இன்றைக்கும் கூட உலகெங்கும் நாளொன்றுக்கு 24,000 பேர் பட்டினியால் இறப்பதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. இருந்தாலும் அமெரிக்கர்களும், அவர்களது சித்தாந்தங்களும் இன்றைய உலகின் 'கூடுதல் சம' அந்தஸ்த்தைப் பெற்றிருப்பதால் கூடுதல் கவனம் பெறுகின்றன. 2001 குஜராத் நிலநடுக்கத்தில் எண்ணற்றோர் இறந்த போது மெளனம் சாதித்த மென்பொருள் நிறுவனங்கள் சில அதே வருடத்தில் ஒசாமா பின் லேடன் உலக வர்த்தக மையத்தைத் தகர்த்த போது மெளன அஞ்சலி செலுத்தின.

இந்தியாவிலும் அப்படித்தான். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதே மிக மிகக் குறுகிய சதவீதத்தினர். அதிலும் நட்டமடைந்து தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிலும் சொற்பம். சொற்பம் என்றாலும் புறக்கணிக்கத்தக்க அளவுக்கு சொற்பம். இந்த எண்ணிக்கையை இன்னொரு புள்ளி விபரத்தோடு ஒப்பிடும் போதுதான் சொற்பத்திலும் சொற்பம் என்பது மெய்யாலுமே புலப்படும்.

1997 முதல் 2005 வரை இந்தியத் திருநாட்டில் சராசரியாக 32 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். எவ்வளவு பெரிய கொடுமை? இத்தனைக்கும் இந்தக் கால கட்டம் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் பலன்கள் நாட்டிற்குக் கிடைத்த கால கட்டம். கந்து வட்டி கட்ட முடியாமல் வெறும் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் உயிரை விட்ட இந்தக் குடியானவர்கள் ஒவ்வொருவருக்கும் மின்விசிறியில் தூக்கு மாட்டிய சாஃப்ட்வேர் எஞ்சினியரைப் போல ஆங்கிலச் செய்தித்தாளில் இடம் கிடைத்திருக்காது.

என்னதான் நாம் மிக வேகமாக வளரும் தேசமாக இருந்தாலும், இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி வறுமையில் வாடுகின்றனர். இது ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகைக்குச் சமமாகும். உலகத்து ஏழை மக்களின் மூன்றில் ஒரு பாகத்தினர் இந்தியாவிலே உள்ளனர். இங்கே பொருளாதார ஏற்றத்தாழ்வு அப்பட்டமாக வெளிப்படுகிறது. தாராளமயமாக்கலுக்குப் பிறகு வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்போரது எண்ணிக்கை குறைந்து வருவது ஒரு ஆறுதலான சங்கதி என்றாலும்கூட எளியவனின் வருமானம் ஒரு அங்குலம் நகர்வதற்குள் மேல் தட்டு மக்கள் ஒரு மைல் கடந்துவிடுகிறார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு மேலும் அகலமாகிறது. எனினும் அது தவிர்க்க இயலாத ஒன்றாகவே நம்பப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சியின் பலன் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறது. அதை யாரும் மறுப்பதற்கில்லை. அதற்கு "வளர்ச்சி என்ற ஒன்று இல்லாமல் ஒட்டுமொத்த வளர்ச்சி என்ற ஒன்றை எட்ட முடியாது" என்பதே ப.சிதம்பரத்தின் பதிலாகப் பதிவாகியுள்ளது.


உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com