
வாஸந்தி உயிரோசையில் போன வாரம் எழுதியிருந்தது போல், சர்வ தேசஇலக்கிய விருதுகள் பற்றிய அரசியல் உண்மையானதுதான். இவ்வாண்டு, புக்கர் பரிசு ஓர் இந்தியர் எழுதிய முதல் நாவலுக்கே கிடைத்திருக்கிறது என்பது பற்றி இந்தியர்களாகிய நாம் மகிழ்ச்சிக்கு அடையலாம். ஆனால், பெருமை கொள்ளமுடியுமா என்பது சந்தேகந்தான்.. புத்தகத்தைப் படித்துவிட்டேன் என்பதுதான் இதற்குக் காரணம்.
இந்தியாவைப் பற்றி விமர்சனம் செய்கின்றவர்கள் இரு வகையினர். இந்தியாவை மிக நேசிப்பதினால், இந்நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைப் பொறுக்கமுடியாமல் தார்மீகக் கோபம் கொண்டு, இங்குக் காணும் யதார்த்தத்தை இலக்கிய வடிவில் படம் பிடித்துக் காட்டுகின்றவர்கள் ஒரு வகை. இன்னொரு வகை, இந்தியாவின் மீதுள்ள வெறுப்பினால்,
அங்கதம் என்ற பேரில் வசை பாடுகின்றவர்கள். மிஸ் மேயோ, பெவெல்ரி நிக்கொலஸ் போன்றவர்கள் இந்தியாவைப் பற்றி எழுதிய நூல்கள் இரண்டாவது வகை. அடிப்படைக் காரணம், நிறத்திமிர்.
அரவிந்த அடிகா எழுதியுள்ள ‘ வெள்ளைப் புலி' (The white tiger')யைப் படித்து முடித்ததும் எனக்கு, மிஸ் மேயோ எழுதியுள்ள ‘Mother India'தான் நினைவுக்கு வந்தது. மஹாத்மா காந்தி அந்நூலை,' A sanitary inspector's report' என்று விமர்சனம் செய்ததும் ஞாபகத்துக்கு வந்தது.
அரசியல், சமூக அட்டூழியங்கள் இந்தியாவில் நடக்கவில்லை என்று நான் கூற வரவில்லை.
இவற்றிற்கெல்லாம் காரணமாக இருக்கக் கூடிய சமூக, அரசியல் ஸ்தாபனங்களை அங்கதச் சுவைக் கண்ணோட்டத்தில், தார்மீகக் கோபத்துடன், தானும் இவ்வமைப்பைச் சார்ந்தவர்தான் என்பதை மறவாமல், படம் பிடித்துக் காட்டலாமேயன்றித் தன்னை அந்நியப்படுத்திக் கொண்டு, இக்கொடூர ஸ்தாபனத்தினால் பாதிப்படைந்த அப்பாவி மக்களைக் கிண்டல் செய்வது உயர்ந்த ரசனையாக எனக்குப் படவில்லை. கிராமத்து ஏழைமக்களின் கறுப்பு நிறம், அடிகாவை மிகவும் உறுத்தியிருப்பது போல் தெரிகிறது.தோல் வியாதியினால் பீடிக்கப்பட்ட ஒர் ஏழை டிரைவரை அவன் வியாதியைச் சுட்டிக் காட்டியே ஏளனம் செய்கிறார். அவன் பெயரை நாவல் முழுவதும் ஆசிரியர் குறிப்பிடவே இல்லை. அவன் வியாதிதான் அவன் பெயர்!
பீகார் மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தைச் சார்ந்த கதாநாயகன் (நல்ல வேளை, அவனுக்குப் பெயர் இருக்கிறது) பல்ராம் ஹல்வாயி ( அவன் இனிப்புப் பண்டங்கள் செய்கிற தாழ்ந்த சாதி) இந்தியாவில் நிகழும் அநீதிச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தன் முதலாளியைக் கொன்று, அவன் இளமையில் கனவு கண்ட வாழ்க்கையின் ஆடம்பரச் சலுகைகளையெல்லாம் அநுபவிக்கிறான் என்பதுதான் கதையின் கரு. இந்தியாவுக்கு வருகை தர இருந்த சீனப் பிரதமருக்கு அவன் தன் வாழ்க்கைச் சரித்திரத்தைக் கடிதமாக எழுதுவது போல் கதை அமைந்திருக்கிறது.
ஒரு குக்கிராமத்தில், ஒரு சைக்கிள்ரிக்ஷா ஓட்டுபவருக்குப் பிறந்த பல்ராம், சிறுவயதிலிருந்தே, அடிகாவைப் போல் சிந்திப்பதுதான் ஆச்சர்யம். அடிகா, தன்னை இந்தியன் என்பதனின்றும் அந்நியப் படுத்திக் கொள்வது போல், பல்ராமும், தன்னைத் தன் சமூகத்தினின்றும் அந்நியப்படுத்திக் கொண்டு, நிர்ப்பந்ததினால் தான் செய்ய வேண்டியிருக்கிற கடமைகள் அனைத்தையும் பாவனையாகக் கொள்வதற்கான சிந்தனை முதிர்ச்சி, சிறுவயதிலிருந்தே அவனுக்கு இருப்பதாகக் காட்டியிருப்பதுதான் இன்னும் பெரிய ஆச்சர்யமாகவிருக்கிறது. இது நடைமுறையில் நடக்கக்கூடியதா போன்ற பாத்திரப் படைப்பு இலக்கிய அக்கறைகள் ஆசிரியருக்கு இருப்பதாகவே தெரியவில்லை.
ஓர் இந்திய கிராமத்தை ஆசிரியர் பார்த்திருப்பாரா என்பதே சந்தேகந்தான்..
கதை கட்டமைப்பு தாறுமாறாக இருக்கிறது. ஒரு தார்மீகக் கோபம் இருந்திருந்தால், அந்தக் கோபம் கலை வடிவம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. ஒரு நல்ல படைப்பாளிக்கு அவன் படைக்கின்ற பாத்திரங்கள் மீது, அவர்கள் நல்லவர்களோ, தீயவர்களோ அது முக்கியமில்லை, அவர்கலள்பால்அவனுக்கு இருக்கிற அடிப்படையான அநுதாபம், கலைரீதியாக வெளிப்படுவதுதான் இயற்கை. இந்நாவலில் அது துளிக்கூட எங்கும் வெளிப்படவில்லை.
புக்கர் பரிசு நடுவர்களின் தலைவர், ஒரு அழுத்தமான கன்ஸர்வெடிவ் வெள்ளையர் என்பதை நம்மால் இப்பொழுது புரிந்து கொள்ள முடிகிறது.