
என் கவிதைகளுக்காக் காத்திருக்கும் எனக்கு
நானே எழுதிக் கொள்வது என்னவென்றால் ...
பனிக்காற்று கசியும் துவாரங்கள் வழி
தப்பியோடப் பார்க்கும் ரயில்நீளக் கனவுகள் காண்பவன்
ரயில்கூரையில் மழைச்சலங்கைகளின் நர்த்தன இசையுடன்
மழையோசை கேட்டு எழுந்து
எழுதிய கவிதை
ரயில்விபத்தில் சிதைந்த உடல் போல் இருந்ததாகப்
படிக்காதவர்கள் சொன்னார்கள்
ரயில்விலங்கு ஓடிக் கடக்கும்
மேற்கே கிடக்கும் அடுக்குத் தொடர் மலைபிரமிடுகளை
முள்வெளிக்காட்டில் நகரும் வயல்மயில் பார்த்துச் சொன்னது
என்னால் இழக்க முடிந்த உயரம் இவ்வளவு தான் என்று
வரிசைக்கிரமம் மாறி எல்லாத் தவறுகளையும் செய்யத் துணிபவன்
பயணிக்கிறான்
ரோஜாப்பிணங்கள் தொங்கும் தோட்டம் நோக்கி
ஏனெனில்
அவள் இதழ் lipstick ஒத்திருக்கும் பூஇதழ் gradient
பழுப்புமது வழியும் தார்க்கிண்ணம்
தாண்டிய ஈ மொய்க்கும்
ரோஜாக்குவளைத் தேநீர்
மற்றும்
அங்கே super-macro கண்கள் பார்க்கும் பூக்கள்
அழகாகத் தெரியும் என்பதால்
எம் மக்கள் சறுக்கி விளையாடும் பைன்காடு காலடி green algae
சூப்பர் சந்தோஷம் தரும்
waxworld வீரப்பன் தத்ரூபம் மீட்டுத் தரும் சரித்திரம் மறந்து
கண்ணாடிப்பனிஓவியம் என்ற சொல்லில் பனியையும் ஓவியத்தையும் புணர விடாமல் செய்கிறான்
யாரோவொரு Edward Scissorhands செதுக்கிய முயல்புற்சிற்பம் நிற்கும்
Italian Gardenஇல் மலர்ந்த பச்சை / வயலெட் முட்டைகோஸ் ரோஜாக்கள் ரசிப்பவன்
அவன் மேலும் எழுதினான் ...
எனக்கு பூனைகளைப் பிடிக்காது
பொதுவாக என்றாலும் இந்தக் கோயில்பூனை பிடித்திருக்கிறது
புல்வெளி மேயும் கறுப்புAngel
காக்காய் உட்கார மின்பழம் விழுந்தது
காக்காயும் விழுந்தது
மலையுச்சியில் நடப்பட்ட இரும்பு கோபுரத்தின் உயரத்தை
AMSL கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
சிட்டுக்குருவிகளைப் பார்த்து நாளாகிறது என்பதை
அடுத்த முறை சிட்டுக்குருவிகளைப் பார்க்கும் வரை உணர முடிவதில்லை
இந்த முறை சூரியனைச் சிதறுதேங்காய் போடும் மேகங்கள்
vaginaபோல உருக்கொண்டிருக்கின்றன
தனிக்கல்மரம் சூழ்ந்த மனிதத்தோப்பின் தொடுவானம் நிஜம்
peacock துரத்தும் peahen பார்க்கக் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
தொட்டபெட்டாவில் இருப்பது suicide-point அல்ல view-point
பைகாரா ஏரியின் வகுத்த எல்லைக்குள் போகும் எந்திரப்படகு ஒரு வினாடி நீர்மூழ்கிக் கப்பலானது
சுழி சுத்தமான ஒன்றரை லட்சம் ரூபாய் குதிரையில் ஐந்து ரூபாய் சவாரி பேரம்
சாஸ்வதம் சமாதானம்
அவன் வீடு திரும்பும்போது கண்ட அதிசயங்கள் ...
குன்றில் மேலிட்ட விளக்குகள்
பூமியிலும் நட்சத்திரங்கள்
அவன் வீடு திரும்பிய பிறகு கண்ட அதிசயங்கள் ...
மதில் சுவரில் மலர்ந்த செடி
தென்னை மர வளைவுப் பாதையில் ஓடும் அணில்
ரயிலின்றி அமையாது உலகு