
சொல்லக் கூசும் கவிதை
ஆசிரியர். வா.மு.கோமு
விலை:ரூ 90
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
சமீப காலங்களில் தனது புனைகதைகளின் வழியே பெரிதும் கவனம் பெற்றிருக்கும் வா.மு.கோமுவின் 89 கவிதைகள் அடங்கிய தொகுதியினை உயிர்மை வெளியிட்டிருக்கிறது. அவரது புனைகதைகளின் நீட்சியாக உருக் கொள்ளும் எதார்த்தத்தை நுட்பமான கவித்துவச் சித்திரங்களாக மாற்றுவதன் வழியே வா.மு.கோமு தனித்துவமான வெளிப்பாட்டினை உருவாக்குகிறார்.
வா.மு கோமுவின் இக்கவிதைகளில் இரண்டுவிதமான குரல்கள் மாறி மாறி ஒலிக்கின்றன. ஒன்று கவிதைகளுக்குள் இடம்பெறும் கதாபாத்திரங்கள் குரலில் பேசும் கவிதைகள். இரண்டு, கவிஞனின் கூற்றாக பொது மொழியில் கட்டமைக்கப்படும் கவிதைகள். பாலியல் சார்ந்த மீறல்களையும் பிறழ்வுகளையும் அதிர்ச்சி மதிப்பிற்கான எந்த ஜோடனையும் இல்லாமல் வெகு இயல்பான மொழியில் இத்தொகுப்பின் கவிதைகள், வெளிப்படுத்திச் செல்கின்றன. மனிதர்களின் சரீர இச்சைகள் சார்ந்த ஆசாபாசங்கள் பாடுகள் குறித்து எழுதும்போது எந்தவிதமான கருத்தியல் அழுத்துதங்களையோ போலி மனிதாபிமானத்தையோ இந்தக்கவிதைகள் வெளிப்பட்த்துவதில்லை. அன்றாட வாழ்வின் அபத்த நிலை தரும் எள்ளலோடு அவற்றை கவிதைகள் முன்வைக்கின்றன.
கவிதைகள் சுவாரசியமாக இருப்பது தமிழில் அபூர்வம். வா.மு.கோமுவின் இகவிதைகளில் அந்த அபூர்வம் சாத்தியப்படுகிறது.
அனீஸ்