
நாம் நாமாக...
தயவு
செய்து
நாம்
காதல் செய்வோம்
என் உதடுகள் இரண்டும்
உன் உதடுகளை முத்தமிட்டும்
அடிவானம் கரைந்து மறையும் வரை
நாம் திருப்தியுறாதவர்களாக
எமக்காக
இந்த
உலகம் விரியட்டும்
நீ
என்னிடத்தில் இருக்கும்போது
ஆணாக இராதே
என்னை
நீயாக மாற்ற முயலாதே
நான் நானாகவும்
நீ
நீயாகவும்
இருப்போம்
எமக்கு இப்போது
பலம்
பற்றிய
பிரச்சனை
வேண்டாம்
நான் பெண்
ஆணின் பார்வையில்
வெற்றிடங்களும்
ஓட்டைகளும்
நிறைந்தவள்
நீ உன்
ஆண்புத்தி ஜீவிதத்தால்
என்னை நிரப்பி
ஒட்டி
சீர் செய்ய
நினைக்காதே
பின்
எமது உதடுகள்
இரண்டும் ஒட்டாது
எமது காதல்
இன்பம் பெறாது
தயவுசெய்து
நாம்
காதல் செய்வோம்
நாம் நாமாக இருந்து.
-
விழித்துக்கொண்டிருக்கிறது இரவு ..
காற்றில்
நடமிடும்
காகிதத்தில்
இரவை
வரைகிறது
நிலவு
...
நீண்ட
கரும் கூந்தலை
விரித்துப்போட்டு
ஓய்வெடுப்பதுபோல்
வெறிச்சோடிக்கிடக்கும்
வீதி
இருபுறமும்
காவலாய்
மரங்கள்
அவ்வப்போது
சீண்டிப்போகும்
காற்றில்
நடமிடும் சருகுகள்
..
குளிருடன்
போராடும்
பிச்சைக்காரர்
தனை
மறக்க
வைன்
போத்தல்
பேச்சுத்
துணையாக
ஒரு
நாய்
குத்தும்
குளிரிலும்
உடல்தெரிய
நிர்ப்பந்திக்கப்பட்ட
விபச்சாரி
எதோ
ஒரு வீட்டில்
ஏதோ
ஒரு சோகம
தனைமறந்து பாடும்
இரவுப்
பாடகன்
நிலவை
மறைக்கும்
மின்குமிள்கள்
நதியில்
உறங்கும்
நகரம்
போதையில்
தன்
நிழலுடன்
பேசும்
மனிதன் .....
ஒவ்வொரு
நாளும்
குளிரிலும்
மழையிலும்
நிலவிலும்
காற்றிலும்
அரங்கேறும்
நாடகங்களுடன்
விழித்துக்கொண்டிருக்கிறது
இரவு