
பூச்சாண்டிகள்
இரவு துளிர்க்கும் நேரங்களில்
அகோரி இசை மீட்டும்
இருளின் நிழலில்
பூச்சாண்டிகள் ஒளிந்திருக்கிறார்கள்
அரூப விக்கிரகங்களாகவோ
வளைந்தாடும் வாயுக்களாகவோ
சூழ்ந்திருக்கும் இருளின் புதல்வர்களாகவோ
வேறு எந்த வடிவிலேனும் இருக்கலாம்
பூச்சாண்டிகளின் வடிவம் குறித்து
இதுவரை யாரும் எழுதியதில்லை
சப்தநொடிகள் அடங்கி
கும்மிருள் மெல்ல அகலும் ஒலியினுள்ளில்
பூச்சாண்டிகள் பாடிக் கொண்டிருக்கலாம்
கேட்பதற்கு யாருமில்லாமல் போகலாம்
ஆனால் அச்ச ராகதாளங்களைத் தவிர
அவர்களுக்கு வேறேதும் தெரியவாய்ப்பில்லை
பூச்சாண்டிகள்
நம்மை ஒன்றும் செய்வதில்லை
அவர்களின் அரூபம் கண்டுதான்
நாம் பயம் கொள்கிறோம்
அல்லது பயமுறுத்துகிறோம்
உள்ளமுங்கி, நீண்டு நெளிந்து கிடக்கும்
கண்கள், மூக்கு, வாயென
யார் முகத்தை நீட்டியும்
இனியெப்பொழுதும்
பூச்சாண்டியாகச் சொல்லாதீர்கள்
அவர்கள் அதற்குத் தகுதியானவரல்லர்..
*
அடர் இருளின் உட்புறத்தில்
உரக்கக் கத்திக் கொண்டு கிடந்தது
மெளனம்
பாதைகளற்ற இடைவெளியில்
பயணித்துக் கொண்டிருந்த
மொழியைப் பிடித்து
மெளனத்தோடு புணரச் செய்தேன்
அது
அகண்ட வெளியில்
துப்பியது
கவிதையாக..
*
முடிவிலியாக நீண்டு கிடக்கிறது
உன் மெளனம்
பேசப்படாத வார்த்தைகள்
ஒன்றோடொன்று
சண்டையிட்டுக் கொள்கின்றன
நுரைகுமிழ்கள் அடங்கிய கிழமைகள்
நொடிகளுக்கிடையே அமர்ந்து
சுவாரசியமாக பொழுது போக்குகின்றன
அது வெடித்து தெறிக்கும் பொழுது
உன் மெளனம் நீள்கிறது
நீ உடுத்திய கவிதைகள்
கனம் தாழாது உதிர்கின்றன
உன் மெளனத்தின் அடர்த்தியில்
கும்மிருளும் மிரளுகிறது.
ஒருமுறையேனும் அதை உடைத்துவிடு
விரிசல்களோடு பயணித்து
பெரும் மின்னலாக மறைகிறேன்.
*
அசுத்தமற்ற வான்வெளிகளில்
சாயுங்கால நேரத்தில்
வெண் இறகுகளுடைய
தேவதைகள்
இறங்கி வருகின்றனர்
ஏதாவதொரு விளிம்பில்
அமர்ந்து கொண்டு
வலம் வரும் தேவதைகளை
கண்காணிப்பதே என் பணி
அமர்ந்து இருக்கும் இடத்துக்கு
நேரெதிரே இறக்கைகளை மடித்து ஒடுக்கி
என்னை அழைக்கிறார்கள்
தயக்கம் விலக்கிய என்னிடமிருந்து
ஒரு உருவம் தேவதைகளை நோக்கிச் செல்கிறது
அதை அவர்கள் அணைத்துக் கொள்கிறார்கள்
தினமும் நீளும் இத்தொடர்பினை
முறிக்க இயலாமல் தவிக்கிறார்கள்
தேவதைகளைக் காணமுடியாதவர்கள்
தேவதைகளை அணைக்காமல் இருக்கமுடிவதில்லை
அல்லது அவர்களின் முலைகளையேனும்.