முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
பனிரெண்டு வருடம் உறங்கிய பெண்
சி.வி. பாலகிருஷ்ணன்
எழுத்தாளன் என்ற மகான்: சில கற்பனைகள், வேண்டுகோள்கள்
ஆர்.அபிலாஷ்
இந்தியா நடத்தும் ஈழப்போர்
இளைய அப்துல்லாஹ்
ஜென் அண்ட் தி பிஸினெஸ் ஆஃப் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்-Zen and the business of Investment Banking
விபா
இயற்கை என்னும் புதிர்-ஆர்.ராஜகோபாலனின் "பாகல் பூ"
பாவண்ணன்
வீடும் வாழ்வும்
செல்லமுத்து குப்புசாமி
ஒரு மரணமும் ஒரு கடிதமும்: அது தரும் செய்தி
தமிழவன்
வசனம் எழுதுவது எப்படி?
சுதேசமித்திரன்
தமிழ் சினிமா தரும் கற்பிதங்கள்
வாஸந்தி
‘கடலில் ஒரு துளி'
இந்திரா பார்த்தசாரதி
கடைசிவரை யாரோ?
ந. முருகேசபாண்டியன்
ஏழாம் உலகமும் பாலா உலகமும்!
இந்திரஜித்
கவிதை
காற்றும் கனமான அட்டைகளும்
லாவண்யா
பூச்சாண்டிகள்
ஆதவா
செத்த பேன்களும், சில தற்கொலைகளும்.
மதன்
வவ்வால் இல்லாத கவிதை...
சரவணகுமார்.மு
நாம் நாமாக...
றஞ்சினி
சிறுகதை
ஒதியம் பெருத்தா உத்திரத்துக்கு ஆகுமா?
கென்
பொது
கூவாத கோழி!
தமிழ்மகன்
பல்லுக்கு மெதுவான கல்
கழனியூரன்
வாழ்த்துக்கள்
ஈழத் தமிழர் ஆதரவு
பாபுஜி
செத்த பாம்பு
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில்: ஆர்.அபிலாஷ்
சிறுகதை
‘லா.ச.ரா’ - தீப.ந. வுக்கு. . .
-
சிற்றிதழ் பார்வை
தமிழ் இலெமூரியா
-
பொது
சொல்லக் கூசும் கவிதை
-
சிறுகதை
சீற்றமும் மௌனமும் சமயவேலின் 'எதிர்கொள்ளுதல்' - பாவண்ணன்
-
கடைசிவரை யாரோ?
ந. முருகேசபாண்டியன்

மனித வாழ்க்கையில் தவிர்க்க இயலாத நிகழ்வு மரணம்தான். எந்த நேரத்திலும் நிழல் போன்று பின்தொடரும் மரணத்தின் கரம் தொட்டுவிடும் தொலைவில்தான் மனித இருப்பு உள்ளது. இருத்தலுக்கும் இறப்பினுக்குமான இடைவெளியில் உயிர் வாழ்ந்திடும் நிலையில், மரணம் பற்றிய கருத்துகள் ஆழ்ந்த விசாரணைக்குரியன. அறுபதுகளில் தமிழகக் கிராமப்புறத்தினர் மரணத்தை எந்த மாதிரி எதிர் கொண்டனர் என்பது முக்கியமான கேள்வி. மேலைநாட்டினர் சாவைக் கண்டு பயந்து நடுங்கி, பல்வேறு தத்துவங்களுக்குள் பதுங்கிப் பயணமானபோது, சாவை, முதுமையின் பகுதியாகக் கருதிய தமிழர் வாழ்க்கையில் பெரிய பயம் எதுவுமில்லை. துர்மரணம், இளவயது மரணம் குறித்து துயரமடைந்து கண்ணீர் விட்டுக் கதறி அழுவது நம் மரபிலே உள்ளது. கறுப்புக் கொடியைச் சட்டையில் குத்திக் கொண்டு, மௌனம் அனுஷ்டிப்பது, நம் வழக்கு அல்ல.

"நான் செத்தால், பேரன் பேத்திகள் நெய்ப்பந்தம் பிடித்துக் கொண்டு, பாடைக்கு முன்னே சென்று அரோகராஎன்று சொன்னால் ஆயிரம் தவம் பெற்று விடுவேன்; கோவிந்தா என்று சொன்னால் கோடிதவம் பெற்று விடுவேன்" என்று தனது 84 வயதில் மரணப்படுக்கையிலிருந்த என் அப்பத்தா குருவம்மாள் சொன்னது (1972) இப்பவும் எனது நினைவில் பதிந்துள்ளது. யாரும் அழக்கூடாது. நான் செத்தவுடன் நன்றாக குளிப்பாட்டி, தேரில் தூக்கிட்டுப்போய், நம்ம தோப்பில் இருக்கிற மாமரத்துக்குக் கீழே புதைச்சிடுங்க. நான் எப்பவும் அங்கேயிருந்து நம்ம வம்சத்துக்கே நல்ல சுகத்தைக் கொடுப்பேன்" என்று சொன்ன மூதாட்டி எங்கள் ஊரில் இருந்தார். தான் இறந்தபிறகும், தனது வம்சத்தினரின் நலத்தில் அக்கறை கொண்டிருப்பது, ஆதி தாயின் எச்ச மனநிலைதான். தன்னுடைய மரணத்திற்குப் பின்னர் பேத்தியின் வயிற்றில் மீண்டும் பிறப்பேன் என்று நம்பும் மனநிலை சாதாரணமானது அல்ல. காலங்காலமாகத் தொடரும் மனித பிறப்புகளின் மூலம் மீண்டும் தான் பிறப்பேன் என்று நம்பிய மூதாட்டியின் மனநிலையை எளிதில் புறக்கணிக்கக் கூடியதல்ல.

எங்கள் ஊரில் வயதானவர்கள், தங்களுடைய கடைசி காலத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் போய்ச் சேர்ந்துவிடவேண்டும் என்று விரும்பினர். ஏழெட்டு மாதங்களாக எழுந்து நடமாட முடியாமல், படுக்கையிலே சிறுநீர், மலம் கழித்து அவதிப்படுவதைப் பொதுவாக எல்லோரும் வெறுத்தனர். ஏதோ பாவம் பண்ணியிருக்க வேண்டும், அதுதான் உயிர் அடங்காமல், இன்னும் நெஞ்சுக்கும் தொண்டைக்கும் இழுத்துக் கொண்டிருக்கு என்று தாழ்ந்த குரலில் பேசிக் கொள்வார்கள். வயதான காலத்தில், திடீரென யாராவது இறந்துவிட்டால், ‘ரொம்ப நல்ல சாவு. . . கொடுத்து வைத்தவர்என்று இழவு வீட்டில் மீண்டும் மீண்டும் பேசுவார்கள். சாகும்போதுகூட சுற்றியிருப்பவர்களுக்குத் தொந்தரவு தராமல் போய்ச் சேர்ந்தவரை ஊர்க்காரர்கள் போற்றுவார்கள்.

அறுபதுகளில் ஐம்பது வயதானவர் இறந்துவிட்டால்கூட மதுரைப் பக்கத்து கிராமங்களில், கொட்டுமேளம், வானவேடிக்கை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர் என்று கொண்டாடுவார்கள். நன்றாக ஆண்டு அனுபவித்துப் பேரன் பேத்தி எடுத்த மனுஷன், மனுஷி என்று பேசுவார்கள். அன்றைய காலகட்டத்தில் இருபது வயதிற்குள்ளாகத் திருமணம் நடைபெற்றதால், அறுபது வயதாகும்போது, பேத்திக்குத் திருமணம்கூட நடைபெற்றிருக்கும். பெண் குழந்தைகளுக்குப் பதினாறு வயதில் திருமணம் நடைபெற்ற காலகட்டத்தில், அறுபது வயதானவருக்குக் கொள்ளுப் பேத்தி (பேத்தியின் மகள்) இருப்பது சாதாரணம். இன்று அறுபது வயதில் பலர் மகன்/மகள் திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். எனவே எழுபது வயதானவர் இறந்தால்கூட பலரும் துயரமடைகின்றனர்.

கிராமங்களில் அறுபது வயதுக்கும் மேற்பட்டவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டால், பெரிய அளவில் வைத்தியம் பார்க்க மாட்டார்கள். இன்னக்கி மாதிரி கிராமப்புறங்களில் மருத்துவமனைகள் இல்லாத, காலகட்டத்தில், மதுரை பெரியாஸ்பத்திரிக்கு (அரசு மருத்துவமனை) கொண்டுபோக வேண்டும். அப்புறம் நிலத்தை முதன்மையாக வைத்துக் கொண்டு விவசாயம் செய்து வாழ்ந்து வந்த சமூகச் சூழலில், வீட்டில் ÔபெரிசுÕ வைத்ததுதான் சட்டமாக இருக்கும். தன்னுடைய பேச்சைக் கேட்காவிடில், தனது சொத்தைக் கோவில் குளத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் என்று மிரட்டுவது சாதாரண விஷயம். அது மாதிரிதான் கூட்டுக் குடும்பங்களில் அண்ணன்இடம் வலுவானது. அண்ணன் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. ஒருவகையான அதிகாரம்குடும்ப உறவுகளில் ஆழமாக ஊடுருவியிருந்தது. எனவேதான் அண்ணன் எப்பச் சாவான், திண்ணை எப்பக் காலியாகும்னு தம்பி பார்த்தானாம்என்ற பழமொழி வழக்கிலிருந்தது.

சாகப் பிழைக்கக் கிடக்கும் வயதானவர்கள் வாயில் மகன், மகள், பேரன், பேத்தி, பங்காளிகள் என்று பலரும் பாலை ஊற்றுவார்கள். சிலருக்கு அப்பவும் மூச்சு அடங்காது. இரண்டு நாட்களுக்குக் கூட லேசான விக்கலுடன், உடம்பில் உயிர் தங்கியிருக்கும். Ôபெரிசு இப்படி இழுத்துக் கொண்டு கஷ்டப்படறதை விடப் போய்ச் சேர்றது நல்லதுÕ என்று சாமியிடம் வேண்டும் மகள்கள், அப்பாவின் மீதான அன்பின் காரணமாக வேண்டிக் கொண்டனர். வயல் மீது பற்றுக்கொண்ட பெரிசுகளுக்குச் சீக்கிரம் உயிர் உடம்பைவிட்டுப் போய்விடாது. எனவே வயல் மண்ணை எடுத்து வந்து நீரில் கரைத்து, அந்த நீரை, சாகப் பிழைக்கக் கிடக்கிறவர் வாயில் ஊற்றுவார்கள். அப்புறம் அந்த உயிர் அடங்கிவிடும்.

கிராமத்தில் யாராவது இறந்துவிட்டால், "என்ன மாப்ளே உங்க அப்பத்தா மேலூருக்கு டிக்கட்டு வாங்கியிருச்சு போலிருக்கு" என்பார்கள். யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

குடும்பத்தில் நல்ல காரியத்துக்குப்போகாமல் கூட இருப்பார்கள். கேதம், துஷ்டி என அழைக்கப்படும் சாவினுக்குக் கட்டாயம் போவார்கள். மூன்று தலைமுறையாகப் பேச்சு வார்த்தை இல்லாமல், பிரிந்து இருக்கும் பங்காளிகள்கூட சாவு வீட்டில் ஒன்று கூடிக் கொள்வார்கள். தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும்என்ற பழமொழிக்கேற்ப பங்காளி வீட்டுச் சாவில் முன்னாடி நின்று காரியத்தைப் பார்ப்பார்கள்.

இடைநிலைச் சாதியில் வசதியானவர் யாராவது இறந்துவிட்டால், அந்நிகழ்வை முன்னிறுத்திப் பல்வேறு கொண்டாட்டங்கள் நிகழும். பெரிய வீட்டுச் சாவு என்பது 'கல்யாணச் செலவு' மாதிரி என்று பேசிக் கொள்வார்கள். பிணத்தைக் குளிப்பாட்டி, கழுத்தில் மாலை அணிவித்து நாற்காலியில் உட்காரவைத்துத் துணியினால் கட்டுவார்கள். நிறை நாழி நெல் வைத்து, அகல் விளக்கை ஏற்றி சாமி கும்பிடுவார்கள். அதுவரை யாரும் அழக்கூடாது என்பது விதி. இறந்தவர் கடவுளிடம் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக வழிபாடு நடக்கும்.

பிணத்தின் முன்னர் பெரும்பாலும் பெண்கள்தான் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார்கள். ஆண்கள் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருப்பார்கள். இறந்தவருக்கு மிகவும் வேண்டப்பட்ட பெண் உறவினர்கள் அழுவார்கள். வயதான கிழவிகள் நான்கைந்து பேர்கள் சேர்ந்து ஒருவர் தோளில், மற்றொருவர் கையைப் போட்டுக்கொண்டு, உடம்பை முன்னே தள்ளியவாறு ராகம் போட்டு அழுது கொண்டிருப்பார்கள். யாராவது புதிதாக ஒரு கிழவி உள்ளே நுழைந்தவுடன், ‘அய்யோ. . . மதினி. . .உங்க அண்ணன் இப்படி விட்டுட்டு போயிட்டாரே. . . பாதகத்தி நான் பிள்ளைகளை வைச்சுக்கிட்டு என்ன பண்ணுவேன். . .என்று இறந்தவரின் மனைவி கதறி அழுதவுடன், வந்தவரும் பெருங்குரலில் கதறியழுவார். வயதானவர் இறந்தால், ஒப்புக்கு அழுதுவிட்டு, பெண்கள் சொந்தக் கதையைப் பேசிக் கொண்டிருப்பார்கள். கூலிக்கு மாரடிக்கஎன்று ஐம்பது வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் எங்கள் ஊரில் இருந்தனர். பெரிய வீட்டு இழவு எனில் அந்தப் பெண்களுக்கு அழைப்புப் போகும். அவர்கள் வெற்றிலை பாக்கை மென்று துப்பிவிட்டு, பிணத்தின் முன்னர் வட்டமாக நின்று, சுற்றியவாறு, நெஞ்சில் இருகைககளாலும் அடித்துக் கொண்டு ஒப்பாரிப் பாடல்களை விடிய விடியப் பாடுவார்கள். சில வேளைகளில், இழவு வீட்டுக்கு வந்திருக்கும் கிழவிகளும் மாரடிக்கும் பெண்களுடன்சேர்ந்து கொள்வார்கள். இறந்தவரின் பெருமையையும் புகழையும் முன்னிறுத்தி, அவர் சொர்க்கத்துக்குப் போவதாகப் பாடும் ஒப்பாரி, இரவு முழுக்க விழித்துக் கொண்டிருக்கும் பெண்களைத் தூங்குவதிலிருந்து தடுக்கும்.

இறந்த வீடுகளில் முன்னர் தென்னங்கீற்றினால் ஆன பெரிய கொட்டகை போடப்பட்டிருக்கும். இரவு முழுக்க ஏழெட்டுப்பேராகக் கும்பல்களாக உட்கார்ந்து சீட்டுபோடுவார்கள். கேத வீட்டுக்காரர்தான் சீட்டுக் கட்டுகளை வாங்கித் தரவேண்டும். பொரியும் கடலையும் இழவு வீட்டில் கண் விழித்திருக்கிறவர் களுக்குப் பரிமாறப்படும். பால் கலக்காத கடுங்காப்பி கருப்பட்டி சேர்த்து அவ்வப்போது வழங்கிக் கொண்டிருப்பார்கள். இரவில் திறந்திருக்கும் தேநீர் கடை உள்ள ஊர்களில், அங்கிருந்து தேநீர் வாங்கி வந்து, இரவு முழுக்க ஐந்தாறு தடவைகளாவது கொடுப்பார்கள். இறந்தவரின் உடன் பங்காளிகள், சம்பந்தக்காரர்கள் நிச்சயம் கேத வீட்டில் கண் விழித்து இருப்பார்கள். சுமார் எண்பது வயதுக்கும் மேற்பட்ட பெரிசுஇறந்துவிட்டால், சீட்டு விளையாட்டின் இடையே இளவட்டங்கள் கேலியும் கிண்டலுமாக இருப்பார்கள்.

காலை வேளையில், இறந்தவர் பற்றிய தகவலை வெள்ளைத் தாளில் எழுதி, ஒருவரிடம் கொடுத்து இழவு சொல்லிவரச் சொல்லுவது சுறுசுறுப்பாக நடைபெறும். பெரும்பாலும் இழவு சொல்லிப் போகும் வேலையைத் தலித்துகள்தான் செய்வார்கள். கைச்செலவுக்குப் பணம் கொடுப்பதுடன், எந்த ஊரில் யார் யாரிடம் தகவலைச் சொல்லவேண்டும் என்பதையும் மீண்டும் மீண்டும் சொல்லிவிடுவார்கள். இழவு சொல்லச் செல்கிறவர்களுக்கு, அந்த வீடுகளில் சிறிய அளவில் பணம் தருவார்கள். தகவல் தொடர்பு, போக்குவரத்து வசதியற்ற காலகட்டத்தில், இத்தகையவர்களின் சேவை மகத்தானது. ஆனால் அவர்களைப் பற்றிய இழிவான அபிப்ராயம் பொதுவாக நிலவியது.

மிகவும் தொலைவில் உள்ள ஊர்களுக்கு தந்திமூலம் இறந்தவர் பற்றிய தகவல் அனுப்பப்படும். இரவு வேளையில் தந்தி அனுப்ப வேண்டுமெனில் இரு மடங்குக் கட்டணம். பெரும்பாலான அஞ்சல் நிலையங்களில் பின்புறத்தில் அஞ்சலக அதிகாரி தங்கியிருப்பதனால், அவரைத் தூங்க விடாமல் எழுப்பிவந்து தந்திகொடுக்கச் சொல்லுவார்கள். அவரும் கைலியை உடுத்திக் கொண்டு, பனியனுடன் வந்து நாற்காலியில் அமர்ந்து கொட்டாவி விட்டவாறு, கட். . . கட். . . கட். . . எனத் தட்டத் தொடங்குவார். அவருடைய செயலை விநோதமாகக் கருதி ஒரு கும்பல் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்.

மருத்துவமனையில் இறந்தவர் எனில், பிணத்தை வீட்டுக்குள் கொண்டு வருவது வழக்கமில்லை. பெரிய பணக்காரர் இறந்தாரெனில், உடலை நடுவீட்டிற்குள்கூட கொண்டு போவார்கள். சாலை விபத்து, தற்கொலை போன்றவற்றால் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை முடிக்கப்பெற்ற உடலை ஊர் மந்தை அல்லது ஊருக்கு வெளியேயுள்ள மரத்தடியில் வைத்திருந்து, மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள். துர் மரணமடைந்தவரின் ஆவியானது திடீரென ஏற்பட்ட மரணம் காரணமாக, உரிய காலம் வரும்வரை பேயாகப் பூமியில் உலவும்என்ற நம்பிக்கை கிராமத்தில் வலுவாக நிலவியது.

இறந்தவர் தொடர்பாகச் செய்யப்படும் சடங்குகளில் குடிமகன்என்று அழைக்கப்படும் மருத்துவர் குலத்தைச் சார்ந்தவரின் இடம் தனித்துவமானது. சில சாதிகளில், குறிப்பிட்ட சாதியினருக்கெனத் தனிப்பட்ட குடிமகன்இருப்பார். சங்கு ஊதுவது முதலாகப் பிணத்துக்குச் செய்ய வேண்டிய எல்லாச் சடங்குகளையும் குடிமகன் நடத்தி வைப்பார். இறந்த வீட்டில் துவைப்பதற் காகத் தரப்படும் துணிமணிகளைத் துவைத்துத் தருவது ஏகாளிஎனப்படும் சலலைத் தொழிலாளரின் பணியாகும்.

பிணம் வைக்கப்பட்டிருக்கும் வீட்டில் பகல் முழுக்க கொட்டுமேளம்அடித்துக் கொண்டிருப்பார்கள். நாகஸ்வரம் வாசிக்கிறவர் உருக்கமான தொனியில் சோகப்பாடல்களை வாசித்தாலும், மேளம் அடிக்கிறவர் அடிவெளுத்து வாங்குவார். பெரும்பாலான கொட்டுக்காரர்கள் நீளமான தலைமுடி வைத்திருப்பார்கள். மேளத்தை அடித்தவாறு, தலைமுடியானது முன்னே விழுமாறு உடம்பை அசைப்பதை இழவு வீட்டினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். எங்கள் ஊருக்கு அருகில் கள்ளிக்குடிஎன்ற சிறிய கிராமத்தில் அருந்ததியர்இனத்தைச் சார்ந்த ஏழெட்டுப் பேர் சேர்ந்து ஒரு செட்வைத்திருந்தனர். தொகை கூடுதல் எனினும், அடி பின்னி விடுவார்கள். எனவே எங்கள் வட்டாரத்தில் அவர்களுடைய மேளத்திற்கு தனி மரியாதை இருந்தது.

மேளம் அடிப்பவர்கள், அவ்வப்போது பாடவும் செய்வார்கள்.

ஊரார் உறங்கையிலே

உற்றாரும் தூங்கையிலே

நல்ல பாம்பு வேடம் கொண்டு. . .

எனச் சத்தமாகப் பாடுவார்கள். சில சமயங்களில் இறந்தவரைச் சந்திரன், இந்திரன் எனப் புகழ்ந்து, ‘ஐயா சொர்க்கலோகம் போகக் கிளம்பிட்டாங்கஎன்று பெருமையாகச் சொல்வார்கள்.

சில சாதியினரிடையே பச்சைகொண்டு வரும் வழக்கம் உண்டு. வேட்டி, சேலை, இளநீர், பன்னீர் பாட்டில், நெல், ஊதுபத்தி போன்றவற்றைக் கொண்டு வருவார்கள். அவ்வாறு வருகின்றவர்கள் முன்னர் மேளம் அடித்துக் கொண்டு நடந்துவரும் மேளகாரர்கள், பச்சை கொண்டு வருகிறவரின் பெருமைகளைப் புகழ்ச்சியாகச் சொல்லுவார்கள். அதற்கேற்றவகையில் அவர்களுக்குச் சன்மானம் கிடைக்கும்.

இறந்தவருக்குக் கட்டும் பாடை அல்லது தேரில் கூட சமூக மரியாதை உண்டு. விதவை இறந்தால் கைம்பெண்டாட்டிக்கு மொட்டைப் பாடை போதும்என்று கேவலமாகச் சொல்லுவார்கள். மூங்கில் அல்லது அகத்திக் கம்பினால் கட்டப்படும் மொட்டைப் பாடையில் எவ்விதமான அலங்காரமும் இருக்காது. பிணத்தின் தலை வைக்கப்படும் பகுதிக்கு மேலாக ஐந்து தலை நாகம்போல, ஐந்து வவரைக் காச்சிமரத்தின் குச்சிகளைக் கட்டியிருப்பார்கள். குச்சியின் நுனியில் இலுமிச்சம்பழம் குத்தி ¬வைக்கப்பட்டிருக்கும்.

மதுரையிலிருந்து பூக்கடைக்காரர்கள் கிராமங்களுக்கு வந்து பாடை கட்டுவார்கள். கப்பல் பாடை, தேர் எனப் பல வடிவங்களில் மூங்கிலால் அழகாகக் கட்டி, பூக்களால் அலங்காரம் செய்யப்படும். வீட்டிலிருந்து சுடுகாடு வரை கொண்டு செல்லப் பயன்படும் பாடைக்காக எழுபதுகளில் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்கள் கூடச் செலவழித்தனர். மேளம் கொட்டி, ஆடம்பரமான அலங்காரத் தேரில், வான வெடிகள் வெடிக்க இறந்தவரைச் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லுவது மிகவும் பெருமைக்குரிய செயலாகக் கருதப்பட்டது. வயதான தாய், தந்தையை நல்ல முறையில் பணம் செலவழித்துத் தூக்கிக் கொண்டுபோய் அடக்கம் அல்லது எரித்துவிட்டு வந்த மகன்களின் செயல் சமூக மதிப்பீட்டில் உயர்வாகக் கருதப்பட்டது; மகன் தனது தந்தைக்குச் செய்ய வேண்டிய முக்கியமான கடமை என்ற கருத்து நிலவியது.

கணவனுக்கு முன்னாடி இறக்கும் வயதான பெண் சுமங்கலிச் சாவுஎன்று போற்றப்பட்டார். கழுத்தில் தாலி, முகத்தில் மஞ்சள், நெற்றியில் குங்குமம், தலைமுடியில் மல்லிகைப்பூ என்று சுமங்கலிப் பெண்ணுக்குரிய அடையாளத்துடன், பிணமாக வீட்டை விட்டுத் தூக்கிச் செல்லப்படும் பெண்ணின் ஆசி குடும்பத்திற்கு நிச்சயம் உண்டு என்று நம்பினர். குடும்பத்தினர் மீது அக்கறையும் பாசமும் மிக்க சுமங்கலிப் பெண்ணின் உடல் முழுக்க சுடுகாட்டில் வெந்தாலும் முந்தானை மட்டும் தீப்பிடித்து எரியாமல் கிடந்தது என்று தோட்டி சொன்னால் உண்மை என்று நம்பினர். வயதான காலத்தில் கணவனுக்கு முன்னாடி, பூவும் பொட்டுமாக மரியாதையுடன் போய்ச் சேர்ந்து விடவேண்டும் என்று கிழவிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். குடும்பச் சொத்தில் எந்தவிதமான பங்கும் இல்லாத பெண்ணுக்கு, தனது கணவன் இறந்தபின்னர், குடும்பத்தில் கிடைக்கும் மரியாதை என்பது இரண்டாம் நிலைத் தன்மையுடையது. தினசரி உணவுக்காககூட மருமகளை எதிர்பார்த்து வாழும் நிலையில், துயரமடையாமல், போய்ச் சேருவது நல்லது என்று பெண்கள் விரும்பினர் என்பது ஒருவகையில் சோகம்தான்.

கிராமத்து மரணவீடுகளில் பெரும் துக்கம் கவிந்திருக்கும்போதும், உறவுக்காரர்களில் ஒருவர் முன்னேவந்து, எல்லாவிதமான செயல்களையும் செய்து முடிப்பார். தலைப் பிரசவத்தில் இறந்த பெண்ணுக்காகக் குடும்பமே கதறி அழுது கொண்டிருக்கும். யாராலும் யாருக்கும் எந்த மாதிரி ஆறுதலும் சொல்ல முடியாது. புதிதாக யாராவது உள்ளே வந்து பார்த்தால், பெண்களும், குழந்தைகளும் அழுவதைப் பார்க்கவே சகிக்காது. சோகத்தின் உச்சநிலையில், பெண்களை விலக்கிக் கொண்டு, இறந்த பெண்ணுக்கான சடங்குகளைச் செய்ய வைத்து, வீட்டை விட்டு பிணத்தைத் தூக்கிப் படையில் வைக்கின்ற மனிதர், மிகவும் முக்கியமானவர். அதேபோல, சுடுகாட்டில் இறக்கிவைக்கப்பட்ட பாடையிலிருந்து, பிணத்தைத் தூக்கி சிதையில் வைத்தல் அல்லது குழிக்குள் இறக்குதல் என்பதையும் லாவகமாகச் செய்வார். வாழ்க்கையில் தாங்கமுடியாத இழப்பு எனினும், வீட்டிற்குள்ளிருக்கும் பிணத்தை வெளியேற்ற வேண்டிய நிர்ப்பந்தமான நிலையில், தனது சோகத்தை அடக்கிக்கொண்டு ஆக வேண்டியகாரியத்தை முன்னெடுத்துச் செல்லும் பொது நலமுடைய மனிதர்கள் முக்கியமானவர்கள்; ஒருவகையில் சமூக இயக்கத்தின் ஆதாரமானவர்கள். பெரும்பாலான கேத வீடுகளில் முன்னே நின்று இறப்பு வேலைகளைச் செய்திடும் அந்த மனிதர் ஒருநாள் இறந்தால், அந்த வீட்டிலும், புதிதாக யாரோ ஒருவர் முன்நின்று காரியம் பார்ப்பதற்காக முன்வருவார். அதுதான் சமூக இயக்கம்.

இறந்தவரின் உடலைக் குழந்தைகள் பார்த்தால் பயந்துவிடும் என்று நம்புகின்ற இளைய தலைமுறையினர் இன்றுபெருகிவிட்டனர். எழுபதுகளில்கூட கிராமங்களில் இறந்தவீடுகளில் குழந்தைகள் சாதாரணமாக உட்கார்ந்திருப்பார் கள். ஆறேழு வயதான சிறுவர்கள்கூட பிண ஊர்வலத்தில் நடந்துபோய், சுடுகாட்டிற்குப் போவார்கள். நல்லது கெட்டது என்பது குழந்தைக்குத் தெரியவேண்டும். சாவு என்பது இயற்கையானது. அதுவும் குழந்தைக்குத் தெரியவேண்டும் என்று கிராமத்தினர் நம்பினர்.

பிணத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது, அதில் நடந்துவரும் கூட்டத்தினரின் எண்ணிக்கை மரியாதைக்குரியதாகக் கருதப்பட்டது. சுடுகாடு வரை சென்று வர வேண்டியது அவசியம் என்று எல்லோரும் நம்பினர். பிண ஊர்வலத்தின் முன்னர் அடித்துச் செல்லும் மேளத்தின் ஒலிக்கேற்ப ஆடிக்கொண்டு செல்லுவது வயதான தலித்துகளின் இறுதி ஊர்வலத்தில்தான் முன்னர் இடம் பெற்றது. அரசாங்கம் மதுவிலக்கை நீக்கியபிறகு, தாராளமாக மது கிடைத்தவுடன், இன்று பரவலாக எல்லா சாதியினரின் பிண ஊர்வலத்திலும் ஆட்டம்நடைபெறுகின்றது.

சுடுகாட்டில் பிணத்தை இறக்கிவைத்தவுடன், வந்திருப்போர் அனைவருக்கும் சுருட்டுவழங்கும் வழக்கமிருந்தது. புகைக்கும் வழக்கமில்லாதவர்கள்கூட சுருட்டைப் பற்றவைத்துப் புகையைக் குப்பென ஊதுவது வேடிக்கையாக இருக்கும்.

நடுத்தர வயதினர் இறந்துவிட்டால் உள்ளங்கையில் பிளேடினால் கீறிவிட்டு அடக்கம் செய்வார்கள். இரவு வேளையில் இறந்தவரின் ஆவி, பிள்ளைப் பாசத்தினால், குழந்தைகளைத் தூக்கிச் செல்ல முயலுமாம். அதைத் தடுக்கவே உள்ளங்கையில் கீறுகின்றனர். பிணங்களை எரித்தாலோ அல்லது புதைத்தாலோ வடக்கு நோக்கி இருக்குமாறு செய்வது வழக்கமுள்ளது. புதைத்தல் எனில் பிணத்தை குழிக்குள் நீளவாக்கில் படுக்க வைக்கின்றனர். பண்டாரம், வள்ளுவர் போன்ற சாதியினர், உட்கார்ந்த நிலையில் பிணத்தைக் குழிக்குள் வைத்து மண்ணைத் தள்ளி மூடுகின்றனர்.

கிராமங்களில் சுடுகாட்டு வேலைகளை வெட்டியான், தோட்டி போன்றோர் பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகின்றனர். இறந்த மனித உடலைக் கௌரவமாக அப்புறப்படுத்தும் சமூகப் பணியாற்றும் தலித்துகளின் சமூக மரியாதை என்பது கேவலமாக உள்ளது. சுகாதாரக் குறைவான சூழலில், மிகக் குறைந்த கூலிக்கு வேலை செய்யும் அவர்களைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்டி இழிவுபடுத்தும் ஆதிக்க சாதியினரின் அதிகார ஒடுக்குமுறை என்பது எனக்குத்தெரிந்த அளவில் நாற்பது வருடங்களாக இன்றும் மாறாமல் உள்ளது. கிராமத்துச் சுதந்திரம்என்ற பெயரில் குறைவான கூலி தருவதுதான் முறைஎன்று அதிகாரம் செய்வது உண்மையிலேயே அருவருப்பான விஷயம்.

மதுரைப்பக்கம் பெரும்பாலான வளமான ஊர்களில், மயானம் வைகை ஆற்றங்கரையோரம் இருந்தது. பிணத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டு, ஆற்றில் குளித்துவிட்டு, துணிகளை நீரில் அலசிப் போட்டுக் கொண்டு வீட்டிற்குச் செல்வார்கள். (இன்று மணல் இல்லாமல், வறண்டு, கருவேல முட்கள் படர்ந்திருக்கும் ஆற்றில் குளிப்பது நடக்காத காரியம்.) சுடுகாட்டுக்குப் போன ஆண்கள் இறந்த வீட்டுக்குப் போவார்கள். வீட்டுவாசலில் வாளியில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரால் கால்களைக் கழுவிக் கொண்டு, வாசலில் குறுக்கே போடப்பட்டிருக்கும் உலக்கையைத் தாண்டிக்கொண்டு வீட்டிற்குள் செல்வார்கள். சுடுகாட்டிலிருந்து வீட்டிற்கு வந்தவரின் பின்னால், ஏதாவது பேய் வந்திருந்தால், அப்பேயினால் உலக்கையைத் தாண்டிட முடியாது.

இறந்த வீட்டில் பெண்கள் எல்லோரும் தலைக்கு குளித்து சுத்தமாக இருப்பார்கள். வீடு நீரினால் கழுவி விடப்பட்டிருக்கும். இறந்தவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இன்னும் துக்கமான நிலையிலிருப்பார்கள். மாமன் மச்சான் அல்லது சம்பந்தகாரர்கள் சோறு குழம்பு ஆக்கிவைத்து எல்லோரையும் சாப்பிடுமாறு வற்புறுத்திக் கொண்டிருப்பார்கள். கடந்த மூன்று வேளைகளும் எதுவும் திட உணவு சாப்பிடாதவர்களின் வயிறு பசியினால் பற்றி எரியும். துக்கம் தொண்டையை அடைத்தாலும், குழம்புச் சோறு செல்லவும் வழி இருக்கும்.

இறந்தவருக்காகச் செய்யப்படவிருக்கும் கருமாதி, உருமா கட்டுதல் மட்டுமின்றி, சொத்து விவகாரங்களும் அடுத்து வரும் நாட்களை அர்த்தப்படுத்தும். இறந்தவரின் நினைவு வெவ்வேறு வழிகளில் கேத வீட்டினில் எங்கும் கசிந்து கொண்டேயிருக்கும். காலம் மட்டும்தான் எல்லாவற்றையும் ஆற்றும் அல்லது மறக்கடிக்கும் ஆற்றல் மிக்கது.

 

தொடர்புக்கு: mpandi2004@yahoo.com

 

 

 

 

 

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com