முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
பனிரெண்டு வருடம் உறங்கிய பெண்
சி.வி. பாலகிருஷ்ணன்
எழுத்தாளன் என்ற மகான்: சில கற்பனைகள், வேண்டுகோள்கள்
ஆர்.அபிலாஷ்
இந்தியா நடத்தும் ஈழப்போர்
இளைய அப்துல்லாஹ்
ஜென் அண்ட் தி பிஸினெஸ் ஆஃப் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்-Zen and the business of Investment Banking
விபா
இயற்கை என்னும் புதிர்-ஆர்.ராஜகோபாலனின் "பாகல் பூ"
பாவண்ணன்
வீடும் வாழ்வும்
செல்லமுத்து குப்புசாமி
ஒரு மரணமும் ஒரு கடிதமும்: அது தரும் செய்தி
தமிழவன்
வசனம் எழுதுவது எப்படி?
சுதேசமித்திரன்
தமிழ் சினிமா தரும் கற்பிதங்கள்
வாஸந்தி
‘கடலில் ஒரு துளி'
இந்திரா பார்த்தசாரதி
கடைசிவரை யாரோ?
ந. முருகேசபாண்டியன்
ஏழாம் உலகமும் பாலா உலகமும்!
இந்திரஜித்
கவிதை
காற்றும் கனமான அட்டைகளும்
லாவண்யா
பூச்சாண்டிகள்
ஆதவா
செத்த பேன்களும், சில தற்கொலைகளும்.
மதன்
வவ்வால் இல்லாத கவிதை...
சரவணகுமார்.மு
நாம் நாமாக...
றஞ்சினி
சிறுகதை
ஒதியம் பெருத்தா உத்திரத்துக்கு ஆகுமா?
கென்
பொது
கூவாத கோழி!
தமிழ்மகன்
பல்லுக்கு மெதுவான கல்
கழனியூரன்
வாழ்த்துக்கள்
ஈழத் தமிழர் ஆதரவு
பாபுஜி
செத்த பாம்பு
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில்: ஆர்.அபிலாஷ்
சிறுகதை
‘லா.ச.ரா’ - தீப.ந. வுக்கு. . .
-
சிற்றிதழ் பார்வை
தமிழ் இலெமூரியா
-
பொது
சொல்லக் கூசும் கவிதை
-
சிறுகதை
சீற்றமும் மௌனமும் சமயவேலின் 'எதிர்கொள்ளுதல்' - பாவண்ணன்
-
தமிழ் சினிமா தரும் கற்பிதங்கள்
வாஸந்தி

சென்னையிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்த பிறகு தமிழ் சினிமாவை சினிமா அரங்கத்திற்குச் சென்று பார்ப்பது நின்று விட்டது. கொந்தளிப்பு மிகுந்த அரசியல் சூழலின் போதெல்லாம், பெங்களூரில் மொழி/ மாநில/ நீர் ப்ரச்சினைகளின் தீவிரத்துக்கு உதை வாங்குவது தமிழ் படங்களைக் காண்பிக்கும் அரங்குகள்தான். அவற்றைக் காண்பிப்பது அரங்குகளின் உரிமையாளர்களுக்கு அந்தக் கால கட்டங்களில் பெரிய ரிஸ்க் என்பதால் சில நாட்களுக்கு தமிழின் வாடையும் மூச்சும் படாமல் கன்னட அபிமானிகளாக இருப்பார்கள். ஆனால் தொடர்ந்து கன்னடத்துக்கு விசுவாசிகளாக இருப்பது வியாபார ரீதியாக முட்டாள்தனமானது என்பதால், சமாதான காலங்களில் உற்சாகமாக தமிழ் படங்கள் காண்பிக்கப்படும். எங்கள் வீட்டிற்குச் சற்று தொலைவிலேயே இருக்கும் பகட்டான ஃபோரம் மாலின் அரங்குகளில் எல்லா ஷோக்களுக்கும் தமிழர் படையுடன், கன்னடக் கும்பலும் வயது பேதமில்லாமல் சங்கமித்து கொண்டாடும். கன்னட சினிமாவை ஊக்கப்படுத்துவதற்காக கன்னட ஷோக்களின் டிக்கெட்டுகளின் விலைப் பிரத்தியேகமாகக் குறைக்கப்பட்டும் கன்னடியரே அதிகம் பார்ப்பதில்லை என்பது வேறு விஷயம்.

சினிமா அரங்கிற்குச் சென்று பார்ப்பது என்பது காலவரம்புக்கு உட்பட்டது. நம்மை நிர்பந்தத்துக்கு உள்ளாக்குவது. பெரிய திரையில் பார்ப்பதைப்போல ஒரு முழுமையான அனுபவம் டி.வி.டியில் பார்ப்பதில் கிடைக்காது என்றாலும் டிவிடியில் பார்ப்பதில் இருக்கும் சௌகரியங்கள் அந்த அனுபவத்தைவிட அதிகமானவை என்ற யதார்த்த சிந்தனையில் நான் இப்போது படங்களை , முக்கியமாகத் தமிழ் படங்களை வீட்டில் அமர்ந்தபடி பார்க்கும் பழக்கத்திற்கு இறங்கிவிட்டேன். வாரம் ஒரு படம் பார்ப்பது என்கிற வழக்கம் இல்லாததால் பல படங்கள் பார்க்காமல் போனதை நினைவூட்டும் வகையில் அவ்வப்போது தமிழ் சிறு பத்திரிக்கைகளில் தமிழ் படங்களைப்பற்றின கட்டுரைகளில் எல்லாம் நல்ல படங்கள், மாற்றத்தைக் காண்பிக்கும் நல் வரவுகள் என்று பெயர் குறிப்பிட்டு சிலாகிக்கப் படும்போது , வருந்தி டிவிடிக்களை வரவழைத்துப் பார்ப்பேன். சமீப காலங்களில் அப்படி நான் பார்த்தவை பருத்தி வீரன்  மற்றும் சுப்ரமண்யபுரம்.

இரண்டு படங்களும் நிச்சயமாக வழக்கமான தமிழ் மசாலா படங்களிலிருந்து வேறு பட்டவை. நடைமுறை வாழ்வுக்குச் சற்றும் பொருந்தாத பாசாங்குத்தனங்கள், மிகைப் படுத்தப்பட்ட உணர்வுகள், வசனங்கள், கதாபாத்திரங்கள், நம்ப முடியாத கதையம்சம், அசத்தும் படாடோபமான பின்புல செட்டுகள் வெள்ளை வெளேரென்ற இறக்குமதியான கதாநாயகிகள் ஏதும் இல்லாமல் மிக இயல்பான சூழலும் வசனமும் எளிய கதாபாத்திரங்களுமாக இந்தப் படங்கள் பெரு முயற்சியாக சந்தைக்கடைக் கூச்சலில் துணிச்சலுடன் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எனக்குள் சில நெருடல்கள் சங்கடப்படுத்தின. நல்ல சினிமா என்றால் முழுமையான நிறைவு ஏற்படவேண்டும். பார்த்தவரின் மனம் ஏதேனும் ஒரு சில கணங்களாவது உன்னதத்தைத் தொடவேண்டும், நல்ல புத்தகம் படித்து முடித்ததும் ஏற்படுவதைப் போல - ஒரு redeeming factor இருக்கவேண்டும். நம்மை மீட்கும் சக்தி . அது tear jerker , கண்ணில் நீரை வரவழைக்கும் விஷயமில்லை. அது ஒரு ennobling, மேன்மையாக்கும் அனுபவமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட அனுபவத்தை இரு படங்களும் எனக்கு அளிக்கவில்லை. பருத்தி வீரன் மிகவும் பேசப்பட்ட படம். அதைப் பார்த்ததும் நான் ஆடிப்போனேன் . அதில் இருந்த வன்முறையையும் குரூரமான சித்தரிப்பையும் கண்டு . நமது கிராமங்களில் சட்டம் ஒழுங்கு நியாயம் தர்மம், மனித நேயம் என்பது சுத்தமாகக் கிடையாதா , இத்தனைத் தார்மீகச் சரிவு எப்போதும் உள்ள ஒன்றா அல்லது பொதுவான அரசியல் பரிணாம வீழ்ச்சியின் தாக்கமா அது என்கிற கேள்விகள் என்னைத் துன்புறுத்தின. சுப்ரமண்யபுரத்தில் அத்தனை வன்முறையும் குரூரமும் இல்லை. ஆனால் இரண்டு படங்களுக்கும் சில பொதுவான அம்சங்கள் தெரிந்தன. இரண்டிலும் இளைஞர்கள் சோதாக்களாக படிப்பில் நாட்டமில்லாத போக்கிரிகளாகத் திரிகிறார்கள். வயதில் மூத்தவர்களை சற்றும் மரியாதை இல்லாமல் ஏசுகிறார்கள் . கொலைக்கும் கொள்ளைக்கும் அஞ்சாதவர்களாக அலைகிறார்கள். அவர்கள் அவற்றை அடாவடித்தனமாக நியாயப் படுத்துகிறார்கள். அவர்கள் ஹீரோக்களாகச் சித்தரிக்கப் படுகிறார்கள். அதுவும் எப்படி? அவர்களைக் காதலிக்க சில அசட்டுப் பெண்கள் இருக்கிறார்கள். 'நீதாண்டா என் மனசுலே இருக்கே!' அந்த ரௌடிகளுக்காக உயிரை விடமும் சித்தமாக இருப்பார்கள். அது ஒரு தற்கொலைப் படை.

'தளபதி' யிலிருந்து தொடரும் இந்தப் போக்கு எனக்கு சலிப்பைத் தருகிறது. எல்லா தமிழ் சினிமாக்களிலும் பெண்கள் உதவாக்கரைகளைக் காதலிப்பது, ரௌடிகளை மோகிப்பது, கிரிமினல்களுக்காக உருகுவது என்பது தமிழ் பெண்களின் ஆளுமையாகச் சித்தரிக்கப்படுகிறது. முன்பு தன்னைக் கெடுத்தவனையே, [பாலியல் வன்முறை கொலைக் குற்றத்துக்குச் சமானம் என்கிற உணர்வில்லாமல்] கல்யாணம் செய்துகொள்ள சம்மதிப்பதாக, அதுவே தனது மீட்சி என்று நம்புவதாக [அது இயக்குநரின் நம்பிக்கை] படங்கள் வந்தன. ஒரு முறை நான் ஒரு பிரபல இயக்குநரிடம் ஏன் இப்படி படம் எடுக்கிறீர்கள், அப்படிச் செய்வது பாதிக்கப்பட்டவருக்கு தண்டனை இழைப்பதுபோல் அல்லவா என்றேன். அவருக்கு எனது வாதம் வியப்பை அளித்தது. 'என்ன அப்படிச் சொல்றீங்க? அவளுக்கு அதுதானே விடிவு? ஒருத்தன் தொட்டப்புறம் வேறு எவன் அவளைக் கட்டுவான்?" என்றார். இப்படிப்பட்ட கருத்துகள் கொண்டவரிடம் தமிழ் சினிமா மாட்டிக் கொண்டுவிட்ட பரிதாபத்துக்காக வருத்தமேற்பட்டது. இப்போது வரும் சினிமாக்களில் கதாநாயகியே 'வா, வா,' என்று புனிதமான காதலுக்குப் போக்கிரிகளை அழைக்கிறாள். சுப்ரமண்யபுரத்தில் மிக அசட்டுத்தனத்துடன் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பெண் கடைக் கண்ணால் பார்த்தபடியே இருக்கிறாள். புன்னகைக்கிறாள் அவன் சோதாப்பயல், போக்கிரி என்று தெரிந்தும் . [என்னை , {அதாவது என் காதலை} சந்தேகிக்காதே என்ற உறுதி மொழி வேறு.] அப்படி ஒரு பெண் பார்த்தால் எந்தப் போக்கிரிக்கும் தான் ஒரு ஹீரோ என்ற எண்ணம் வருமா வராதா? இயக்குநர்கள் தங்கள் பார்வையிலேயே பெண்களின் பாத்திரத்தன்மையை படைக்கிறார்கள். ஒரு படமாவது புத்திசாலியான , முதிர்ச்சி உள்ள பெண் பாத்திரத்தைக் காட்டுவதில்லை. முதலாவது, பெண் பாத்திரம் ஒரு முக்கிய அம்சமே இல்லை. பாலசந்தரின் துணிச்சலான பெண் பாத்திரங்கள் அதிகப் பிரசங்கிகளாக முகம் சுளிக்க வைப்பார்கள். இப்போது வடிகட்டின அசடுகள் போல 'நல்ல சினிமா'லும் இன்றைய இளம் இயக்குநர்களால் சித்தரிக்கப்படுகிறார்கள். நான் பெண் சிசுக் கொலை ஆய்வுக்கான களப்பணிக்காக தமிழ் நாட்டில் பல கிராமப்புறங்களுக்குச் சென்று இளம் பெண்களுடன் பேசும் போது அவர்களின் சாதுர்யத்தையும் மன முதிர்ச்சியையும் கண்டு வியந்திருக்கிறேன். தங்களுக்குப் போதிய சுதந்திரம் அளிக்காத மரபுச் சிந்தனை மிக்க அமைப்புகளின் மேல் அவர்களது சலிப்பை வெளிப்படுத்துவார்கள். அசட்டுப் பெண்கள் இருப்பார்கள்தான், ஆண்களில் அசடுகள் இருப்பதுபோல. ஆனால் தமிழ் படம் தோறும் போக்கிரிகளுக்கு அந்தஸ்தை அளிக்கும் வகையில் ஹீரோயின்கள் அவர்களைக் காதலிக்கத் தகுதி உள்ளவர்களாக நினைத்து உருகுவதும் தங்கள் வாழ்வைக் கெடுத்துக் கொள்வதும் ஏன் நிகழ்கிறது?

படங்களில் சித்தரிக்கப்படும் பொதுவான தார்மீகச் சரிவு அரசியலில் இருக்கும் தார்மீகச் சரிவின் தாக்கமாக இருக்குமா என்ற கேள்வி என்னுள் எழுகிறது. சமீபத்தில் ஜெயா டிவி செய்திச் சுருளின் போது ஒரு கிராமத்தில் சிலர் திமுக அரசைப் பற்றி புகார் செய்தார்கள். என்ன புகார்? இலவச டிவி, இலவச காஸ் அடுப்பு போன்ற இலவசங்களை திமுகவினர் தங்கள் கட்சிக்காரர்களுக்கே கொடுப்பதாகவும் எத்தனை முறை போய் கேட்டாலும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் காமிராவுக்கு முன் நின்று சொன்னார்கள். எனக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளவேண்டும் போல் இருந்தது. வேறு எங்கும் கேள்விப்பட்டிராத வகையில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய தமிழ் திரு நாட்டில் எல்லாரையும் பிச்சைக்காரர்களாக, கையேந்துபவர்களாக ஆக்கிவிட்டன தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள். ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சுயநிர்ணய உரிமையும் கையில் வைக்கப்படும் காசினால் பறிபோய்விட்டது. கையில் கொடுக்கப்படுவதை வாங்க மாட்டோம் என்று சொல்லும் அளவுக்கு எந்தத் தமிழனுக்கு சுய மரியாதை இருக்கிறது?

எனக்குக் குன்றக்குடி அடிகளாரின் நினைவு வராத நாளில்லை. அவர் மடாதிபதியான போது குன்றக்குடியும் அதைச் சுற்றி மடத்தின் கீழ் இருந்த கிராமங்களும் மகா ஏழ்மையில் இருந்தன. படிப்பு விகிதம் அதல பாதாளத்தில். அங்கு வருடத்திற்கு இருமுறை செட்டியார் குடும்பங்கள் கோவிலில் அன்னதானம் செய்வார்கள். அதற்கு முந்திக்கொண்டு ஓடும் கும்பலில் அடிதடி [stampede] நடக்கும். இந்தச் சூழலை 15 ஆண்டுகளில் குன்றக்குடி அடிகளார் தலை கீழாக மாற்றினார். சும்மா கிடந்த கோவில் வளாகங்களையெல்லாம் தொழிற்கூடங்களாக மாற்றினார். 100 சதவீதம் எழுத்தறிவை ' கற்போம், கற்பிப்போம்' இயக்கத்தின் மூலம் சாத்தியப்படுத்தினார். மழைபெய்யாத அந்தப் பகுதிகளை அதிக நீர் தேவைப்படாத புளிய மரங்கள் நட்டு பழச்சோலைகளையும் உருவாக்கினார். வேலை வாய்ப்பும் 100 சதவீதத்துக்கு உயர்ந்தது. இப்பவும் செட்டியார்கள் அன்னதானம் செய்ய வந்தார்கள். ஆனால் அந்த இலவசச் சாப்பாட்டைச் சாப்பிட யாருக்கும் நேரமில்லை, விருப்பமுமில்லை. வருந்தி வருந்தி மக்களை அழைக்க வேண்டியிருந்தது. நான் ஏதும் சரடு விடவில்லை. உண்மையாக நடந்த அற்புதம் அது. மற்ற மாவட்டங்களில் விவசாயிகள் அரசுக்கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விட்டுக்கொண்டிருந்தபோது, குன்றக்குடி விவசாயிகள், கடன் ரத்து தங்களுக்கு உடன்பாடில்லை என்றார்கள். பைசா குறையாமல் கடனைத் திருப்பினார்கள்.

அரசியல்தலைமைகள் அடிகளாரின் வழிகளைப் பின்பற்றமுடியாதுதான். மக்களின் முன்னேற்றம் என்பது இலக்கு அல்ல. அவர்களது இலக்கு வேறு. சரியான வழிகாட்டுதலும் தலைமையும் இருந்தால் பட்டைத்தீட்டின வைரம்போல் ஜொலிக்கக் கூடிய சமூகம் வெட்கமற்ற பிச்சைக்கார சமூகமாகிவிட்டது .படிப்பு வரவில்லையே வேலை இல்லையே என்று இளைஞர்கள் கவலைப் படவோ கூச்சப்படவோ தேவை இல்லை. அரசியல் கட்சிகளுக்கு அப்படிப்பட்ட சோதாப்பயல்கள்தான் தேவை. அடியாட்களாக மாறவும் பேரணிகளில் கோஷம் போடவும். தங்களை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள் என்று போக்கிரிகள் கவலைப்படுவார்களானால் நமது சினிமா இயக்குநர்கள், கவலைப் படாதீர்கள் என்று அபய ஹஸ்தம் காண்பிக்கிறார்கள்.

 

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com