முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
பனிரெண்டு வருடம் உறங்கிய பெண்
சி.வி. பாலகிருஷ்ணன்
எழுத்தாளன் என்ற மகான்: சில கற்பனைகள், வேண்டுகோள்கள்
ஆர்.அபிலாஷ்
இந்தியா நடத்தும் ஈழப்போர்
இளைய அப்துல்லாஹ்
ஜென் அண்ட் தி பிஸினெஸ் ஆஃப் இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்-Zen and the business of Investment Banking
விபா
இயற்கை என்னும் புதிர்-ஆர்.ராஜகோபாலனின் "பாகல் பூ"
பாவண்ணன்
வீடும் வாழ்வும்
செல்லமுத்து குப்புசாமி
ஒரு மரணமும் ஒரு கடிதமும்: அது தரும் செய்தி
தமிழவன்
வசனம் எழுதுவது எப்படி?
சுதேசமித்திரன்
தமிழ் சினிமா தரும் கற்பிதங்கள்
வாஸந்தி
‘கடலில் ஒரு துளி'
இந்திரா பார்த்தசாரதி
கடைசிவரை யாரோ?
ந. முருகேசபாண்டியன்
ஏழாம் உலகமும் பாலா உலகமும்!
இந்திரஜித்
கவிதை
காற்றும் கனமான அட்டைகளும்
லாவண்யா
பூச்சாண்டிகள்
ஆதவா
செத்த பேன்களும், சில தற்கொலைகளும்.
மதன்
வவ்வால் இல்லாத கவிதை...
சரவணகுமார்.மு
நாம் நாமாக...
றஞ்சினி
சிறுகதை
ஒதியம் பெருத்தா உத்திரத்துக்கு ஆகுமா?
கென்
பொது
கூவாத கோழி!
தமிழ்மகன்
பல்லுக்கு மெதுவான கல்
கழனியூரன்
வாழ்த்துக்கள்
ஈழத் தமிழர் ஆதரவு
பாபுஜி
செத்த பாம்பு
பாபுஜி
ஹைக்கூ வரிசை
ஹைக்கூ வரிசை
தமிழில்: ஆர்.அபிலாஷ்
சிறுகதை
‘லா.ச.ரா’ - தீப.ந. வுக்கு. . .
-
சிற்றிதழ் பார்வை
தமிழ் இலெமூரியா
-
பொது
சொல்லக் கூசும் கவிதை
-
சிறுகதை
சீற்றமும் மௌனமும் சமயவேலின் 'எதிர்கொள்ளுதல்' - பாவண்ணன்
-
இயற்கை என்னும் புதிர்-ஆர்.ராஜகோபாலனின் "பாகல் பூ"
பாவண்ணன்

வாழ்க்கையில் நமக்குள்ள விருப்பங்கள் ஏராளம்.  நம் எல்லா விருப்பங்களும் நிறைவேற வேண்டும் என்று உண்மையிலேயே நாம் ஆசைப்படுகிறோம்.  விருப்பங்கள் நிறைவேறுவதால் உண்டாகும் மகிழ்ச்சியும் மனநிறைவும் முக்கியம் என்பது நம் எண்ணம்.  மகிழ்ச்சியால் நம் மனத்தை நிறைவு செய்வது ஓர் இலக்காக இருந்து நம்மை இயக்குகிறது.  இலக்கை அடைந்துவிட்ட நிலையில் நம் ஆனந்தத்துக்குக் குறைவெதுவுமில்லை.  ஏதோ சிற்சில காரணங்களால் இலக்குப் புள்ளியை அடையமுடியாமல் போனால், அது வழங்கும் துயரம் நம்மைச் சிதைத்துத் தூள்தூளாக்கிவிடுகிறது.  வாழ்க்கையில் நிகழக்கூடிய ஒவ்வொன்றையும் அனுபவமாக எதிர்கொள்ளாமல் மகிழ்ச்சி தரக்கூடிய விளைவுகள் என்றும் மகிழ்ச்சியைத் தராத விளைவுகள் என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து எதிர்கொள்ளத் தொடங்கிவிடுகிறோம்.  மகிழ்ச்சியின் பின்னால்  செல்லும் பயணமாக வாழ்க்கை சுருங்கிவிடுகிறது.

வாழ்க்கையை இப்படி ஒருவழிப்பயணமாக மாற்றிக்கொள்ளலாமா? அது பொருளுள்ளதாக இருக்குமா?  அப்பயணத்தில் சோர்வு படர்வதற்கு வழியுண்டா?  ஒரு கருவியை இயக்குவதில் சிறப்பான வகையில் பயிற்சியெடுத்துக்கொண்டு,  நன்றாக பயன்படுத்துவதைப்போல வாழ்க்கையையும் ஒரு கருவியாக மாற்றுவது சரியா?  வாழ்வின் ஆழத்தை அறிய இது உதவுமா?

எந்தத் திசையிலும் செல்வதற்கு தயாராக இருக்கிற எதையும் இருகரம் நீட்டி எதிர்கொள்கிற இன்னொரு விதமான பயணம் இருக்கிறது.  அந்தப் பயணத்தில் சலிப்புக்கு இடமே இல்லை.  இலையடர்ந்த மரம், இலைகளை உதிர்த்துவிட்டு மொட்டையாக நிற்கிற மரம் என்ற வேறுபாட்டுணர்வுக்கு அப்பயணத்தில் இடமில்லை.  இரண்டையும் ஒன்றாக நோக்குகிற அமைதியுணர்வு மட்டுமே உள்ளது.  அமைதி என்பது பழகியோ, பயிற்சி பெற்றோ அடைகிற குணமன்று.  இயல்பான குணம்.  பயிற்சியில் பெறுகிற அமைதி மதத்தைக் கட்டுப்படுத்தி ஊர்வலத்தில் அழைத்துவரப்படும் அலங்கார யானையைப்போன்றதாகும்.  ஒரு சின்ன சத்தம் அல்லது ஒரு எதிர்மறையான விளைவு, கட்டுப்படுத்தப்பட்ட அதன் மதத்தைக் கிளறிவிடக்கூடும்.  அமைதி இயற்கையான குணமாக விளங்குவதைப்பற்றி எந்த விளக்கத்தையும் சொல்ல முடியாது.  அதை மெய்ப்பித்துக் காட்டவும் முடியாது.  அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகள் வழியாக அது வெளிப்பட்டபடி இருக்கிறது.  ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டு என்ற இயேசுவின் வாக்கியம் இத்தகைய அமைதியின் வெளிப்பாடு. இன்பம் என்ற எக்களித்தலும் இல்லை.  கசப்பு என்ற கலங்குதலும் இல்லை.

ஆழ்ந்த அமைதியைப்பற்றிய ஒரு சித்தரிப்பை அடையாளம் காட்டுகிறது ஆர்.ராஜகோபாலனின் "பாகல் பூ" என்னும் கவிதை.  இக்கவிதையில் ஒருவனுடைய கனவு இடம்பெறுகிறது.  வாசலில் மண்பரப்பிப் பதப்படுத்தி, மல்லிகைக் கொடியை நட்டு வளர்த்து வருகிறான் அவன்.  அரும்பாடுபட்டு வளர்க்கிறவன் மனத்தில் அந்தக் கொடி வளர்ந்து பந்தலில் படர்ந்து அரும்புகள் முளைவிடக்கூடும் என்கிற கனவும் உள்ளது.  எதிர்பாராத வகையில்,  அந்த விருப்பம் நிறைவேறவில்லை. கொடி வாடிவதங்கி இறந்து போகிறது. மல்லிகைக்காகப் பரப்பப்பட்ட மண்ணில் தற்செயலாக எப்படியோ விழுந்த பாகல் விதை முளைவிட்டு வளர்கிறது.  மல்லிகைக்காக கட்டிய பந்தலில் படர்ந்து பூக்கத் தொடங்குகிறது.  காய்க்கவும் தொடங்குகிறது.  பெரிதும் எதிர்பார்த்த ஒன்று நிகழவில்லை. எதிர்பாராத ஒன்று  நிகழ்ந்தபோது, அந்த விளைவால் வருத்தம் எதுவும் இல்லை.  அதையும் ஏற்றுக்கொள்கிறது மனம். காற்றில் நடனமிடும் அதன் கோலத்தைப் பார்க்கும்போது அதை விரும்பவும் தொடங்குகிறது.  மனத்தை ஈர்க்கத்தக்க அம்சமாக கொடியின் நிறமும் நடனமும் இருக்கும் நிலையில், அசைவது மல்லிகைக்கொடியாக இருந்தால் என்ன, பாகல் கொடியாக இருந்தால் என்ன? மல்லிகை, பாகல் என இருவேறுபட்ட மணங்கள் ஒரு கணம் தடுமாறவைத்தாலும் நடனத்தின் ஈர்ப்பு ஒரே தன்மையுடையதே என்கிற தெளிவில் அத்தடுமாற்றம் அகன்று அமைதி உருவாகிறது.  நடனமொக்கும் எல்லாக் கொடிகளுக்கும் என்ற அமைதியும் தெளிவும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வரியை நாடி நம்மை அழைத்துச் செல்லும்.  ஏதோ ஓர் அம்சத்தை மையப்படுத்தி, ஒன்றின் சிறப்பை மனிதமனம் கணக்குப்போட்டு வகுத்துவைத்திருக்கிறது.  ஆனால் வேறொரு அம்சத்தை மையப்படுத்தி அதை உன்னதமானதாக மாற்றிவைக்கிறது இயற்கை.

நிலம் நீர் ஆகாயம் காற்று சூரியன் பின் கண்ணாடிச் சிறகு படபடக்கும் வண்டு நிகழ்த்திய அற்புதம் என்ற இறுதிக்குறிப்பு முக்கியமானது.  மல்லிகைக்கொடி நட்டபோதும்கூட இதே நிலத்தில்தான் அல்லவா? இதே நீர், இதே காற்று, இதே சூரியன் அப்போதும் இருந்ததல்லவா? எல்லாம் இருந்தும் அது ஏன் வாடி வதங்கி மடியவேண்டும்?  அதற்கு விடையில்லை.  அதுதான் இயற்கையின் புதிர்.  மானுடனுக்கு அமைதியயைக் கற்பிக்கும் இயற்கையின் புதிர்.


*

பாகல்பூ

ஆர்.ராஜகோபாலன்

வாசலில் மண்பரப்பி மல்லிகைக்கொடி நட்டு
காலை மாலை நீர் சேர்த்து இலைகள் வளர
வசீகர வாசத்துடன் இரவில் மலரும் வெண்பூக்கள்
என்னும் நினைவில் பந்தல் கட்டிக் காத்திருந்தேன்
இலைகள் வளர மறுத்து சோர்ந்து வாடிப் பின்
கொடியும் இறந்துபோனது மனதில் வருத்தம் மேலிட
பின்னொருநாள் தானே விழுந்த விதையாய்க்
கிளம்பியது ஒரு பாகல் கொடி கசப்பு வாசனையுடன்
பசுமையாய் விரிந்த விரல்கள் படரும் பாம்பு நாக்குகள்
அடர் மஞ்சள் நிறத்துடன் அழகிய சிறிய ஐந்திதழ் மலர்கள்
இருந்தும் மசிறுகாயுடன் தோன்றும் பூக்கள்மட்டுமே காய்க்குமாம்
நிலம் நீர் ஆகாயம் காற்று சூரியன் பின் கண்ணாடிச்
சிறகு படபடக்கும் வண்டுகள் நிகழ்த்திய அற்புதம் என
நீண்டு வளைந்து முதுகில் மடிப்புடன் நடனாசிரியராய்க் காய்கள்

*

புதுக்கவிதை ஓர் இயக்கமாக இந்த மண்ணில் நிலைபெற உதவிய மூத்த கவிஞர்களுள் ஒருவர் ஆர்.ராஜகோபாலன்.  'ழ' என்னும் இதழை கவிதைகளுக்காகவே நெடுங்காலம் நடத்தியவர்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com