நம்புங்கள். நான் தீர்மானமாக முடிவு செய்து வைத்திருந்தேன், இனிமேல் சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்தைப் பற்றி உயிரோசையில் குறிப்பிடக் கூடாது என்று. ஆனால் நம் கையில் என்ன இருக்கிறது? தாங்க முடியாத அதிர்ச்சியும், நம்ப முடியாத வியப்பும் ஒரு சேர வந்து தாக்கும் போது என்ன செய்ய இயலும்? திருமங்கலம் இடைத்தேர்தல் கள நிலவரத்தையெல்லாம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது சத்யம் விவகாரம்.
சத்யம் கம்பெனியின் சேர்மன் ராமலிங்க ராஜு பதவி விலகியிருக்கிறார். அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று பலர் வலியுறுத்தி வந்ததென்னவோ உண்மைதான். அதற்கான காரணம்தான் வேறு. புத்திர பாசத்தின் காரணமாக தனது மகன்கள் நடத்தும் மேடாஸ் கம்பெனிகளை வாங்கும் முயற்சியில் சத்யத்தை ஈடுபடுத்த முயன்றதை அடுத்து அவரை வெளியேற்ற வேண்டுமென்று பங்குதாரர்கள் குரல் எழுப்பினர். அவரே வெளியேறிவிட்டார்.
ஜனவரி 7 ஆம் தேதி ராஜு அனுப்பிய ராஜினாமாக் கடிதம் இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் வெகு முக்கியத்துவம் பெறும் ஐந்து பக்கக் கடிதமாக அமைந்தது. பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கி சில நிமிடங்களே ஆகியிருந்தது அப்போது. ‘It is with deep regret and tremendous burden’என ஆரம்பித்து அவர் போர்ட் ஆஃப் டைரக்டர்களுக்கு சமர்ப்பித்த மடலின் பிரதி செபி சேர்மெனுக்கு மட்டுமல்லாமல் பங்குச் சந்தைகளுக்கும் சென்று சேர்ந்தது. அங்கிருந்து மின்னஞ்சலில் உலகமெல்லாம் பரவியது.
பதவி விலகுவதற்கு ராமலிங்க ராஜு குறிப்பிட்ட காரணங்கள் அதிர்ச்சியைக் கொடுத்தது என்று சொன்னால் அது சரியாக இருக்காது. "இப்படியும் நடக்குமா சாமி" ஆச்சரியத்தில் திறந்த வாய் மூடவில்லை ஏன்று கூறினால் அது மிகையாகவும் இருக்காது. கிட்டத்தட்ட ஏழாயிரம் கோடிக்கு போலிக் கணக்குக் காட்டியுள்ளார் ராஜு. இது இன்று நேற்று நடப்பதல்ல. பல வருடங்களாக இந்த மோசடியை அவர் செய்து வந்திருப்பதை அவரது பதவி விலகல் கடிதம் மட்டுமே வெளி உலகிற்கு அம்பலப்படுத்தியது.
போலிக் கணக்குக் காட்டுவது இரண்டு வகைப்படும். முதலாவதாக, செலவைக் கூடுதலாகக் காட்டிவிட்டு ஈட்டுகிற இலாபத்தைக் குறைத்துக் காட்டுவது. பெருவாரியான லாரி ஓட்டுனர்கள் முதலாளிகளிடம் காட்டுவது இப்படிப்பட்ட கணக்குத்தான். அழகாக ஏய்த்து விட்டு அரசாங்கப் பணத்தை லவட்டும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்த ரகத்தினரே. சில தனி நபர்கள் பத்து இலட்ச வருமானத்தை ஐந்து இலட்சம் என்று தணித்துக் காட்டி விட்டு குறைவான வருமான வரி கட்டுவதும் கூட நாம் பரவலாகக் காணும் ஒன்றுதான். கம்பெனிப் பணத்தைக் கையாடிவிட்டு போலியான செலவுக் கணக்கு எழுதும் காரியத்தை எல்லா நிறுவனங்களிலும், எல்லா மட்டத்திலும் தனி நபர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் அல்லாமல் வழக்கத்துக்கு மாறான ஒரு காரியத்தை சிலர் செய்கிறார்கள். பத்து ரூபாய் இலாபம் என்றாலும்கூட, "மொதலாளி, இன்னிக்கு 20 ரூபா இலாபம்" என்று புளுகும் தொழிலாளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கான தன்னலம் சார்ந்த காரணங்களும் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கின்றன. இந்த இரண்டாம் வகையில் சத்யம் சேர்மன் ராமலிங்க ராஜு வருகிறார்.
தற்போது 54 வயதாகும் ராஜு, பாரதிராஜாவின் '16 வயதினிலே' படம் வெளிவந்த சமயத்தில் அமெரிக்காவில் எம்.பி.ஏ முடித்துத் திரும்பி வந்து ஆந்திராவில் நூற்பாலை ஆரம்பித்தார். சில ஆண்டுகளில் கட்டுமானத் தொழிலிலும் இறங்கினார். அவர் கம்ப்யூட்டர் தொழிலில் அடியெடுத்து வைத்தது 1987 இல். 'லைசன்ஸ் ராஜ்' யுகத்திற்கு ராஜீவ் காந்தி படிப்படியாக விடுதலை கொடுத்து மென்பொருள் புரட்சிக்கு வித்திட்ட தருணம் அது. (அடுத்த வருடமே மேடாஸ் கம்பெனியும் பிறந்தது) அடுத்த இரண்டு பத்தாண்டுகளில் இந்திய மென்பொருள் துறை அடைந்த மகத்தான வெற்றியில் சத்யமும் பங்கெடுத்தது.
வெறும் 20 பேரோடு தொடங்கிய நிறுவனத்தில் இப்போது 53 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அவர்கள் 66 நாடுகளில் பரவியுள்ளனர். ஃபார்ச்சூன் 500 கம்பெனிகளில் 185 சத்யத்தின் வாடிக்கையாளராக உள்ளன. அந்த வெற்றிக்கு சத்யத்தின் மீது முதலீட்டாளர்கள் வைத்திருந்த நம்பிக்கை முதன்மையான காரணம் ஆகும். 1987 இல் கம்பெனியை ஆரம்பித்த ராமலிங்க ராஜு 2008 செப்டம்பரில் வெறும் எட்டு சதவீதப் பங்குகளை மட்டுமே வைத்திருந்தார்.
இந்த இடத்தில் ஒரு முதலாளியாக இல்லாமல், பத்து ரூபாய் இலாபம் என்றாலும்கூட "மொதலாளி, இன்னிக்கு 20 ரூபா இலாபம்" என்று புளுகும் தொழிலாளியின் நிலைக்கு ராஜு இறங்கினார். நிறுவனம் உண்மையாக ஈட்டும் வருமானத்தைக் காட்டிலும் கொஞ்சம் தூக்கலாகக் கணக்குக் காட்ட ஆரம்பித்தார். கம்பெனியின் பிசினஸில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், அதன் பங்கு விலை குறையாமல் தூக்கிப் பிடிப்பதில் சில நிர்வாகிகள் குறியாக இருப்பார்கள். அந்தப் பிரிவில் சேர்ந்து கொண்டார் அவர்.
கம்பெனியின் வங்கிக் கணக்கில் ரூ 5,361 கோடி உள்ளதென்று குறிப்பிட்டதில் ரூ 5,040 கோடி வெறும் டுபாக்கூர். சத்யம் வெறும் ரூ 321 கோடி மட்டுமே கொண்டுள்ளது என்பதுதான் ராமலிங்க ராஜு கொடுத்த பதவி விலகல் கடுதாசியின் சிறப்பம்சம். மாதாமாதம் அது ஊழியர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் மற்றும் இதரப் படிகள் மட்டுமே 580 கோடிக்கும் மேல். எப்படி சமாளிக்கப் போகிறதோ! எப்படியோ சமாளிக்கட்டும் என்று எஸ்கேப் ஆகியிருக்கிறார் ராஜு.
ஒரு உதாரணம் சொல்கிறேன். கேளுங்கள். 100 கோடி வருமானம். அதில் செலவு 90 கோடி போக 10 கோடி இலாபம். இதுதான் உண்மையான நிலவரம் என்போம். வருமானத்தை வெறும் பத்து சதவீதம் மட்டும் உயர்த்தி போலியாக 110 கோடி எனக் கூறினால் அது பெரிய விஷயமாகத் தெரியாது. ஆனால் இலாபம் 20 கோடியாக - அதாவது 100 சதவீதம் அல்லது இரு மடங்காக - உயர்ந்திருக்கும். கம்பெனியின் இலாபம் இரு மடங்கு அதிகரித்தால் அதன் பங்கு விலையும் இரு மடங்கு அதிகரிக்கும். முதலீட்டாளர் சமுதாயம் சத்யம் நிறுவனத்தைப் போற்றிக் கொண்டாடும். இதுதான் எளிமையான கணக்கு. பிசினஸை மேனேஜ் செய்வதைவிட ஷேர் விலையை மேனேஜ் செய்யும் சூத்திரம்.
100 கோடியில் 10 கோடி இலாபம் என்பது வெறும் 10 சதவீத நிகர இலாபம். 110 கோடியில் 20 கோடி இலாபம் என்றால் அது 18 சதவீத நிகர இலாபம். முதலீட்டாளர்கள் இந்த நிகர இலாபம் எனப்படும் 'ஆபரேட்டிங் மார்ஜின்' காரணிக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதனால் வருடந்தோறும் கூடுதலாகப் போலிக் கணக்குப் போட்டு, நிகர இலாபத்தைக் கூட்டிக் காட்டும் காரியத்தை ராமலிங்க ராஜு கடந்த பல ஆண்டுகளாகவே நிகழ்த்தி வந்ததை அவரது ராஜினாமாக் கடிதம் புலப்படுத்துகிறது.
முதலீட்டாளர்கள் மாய எண்ணிக்கையில் மயங்கிக் கிடப்பார்கள். நிறுவனம் தன்னிடம் 20 கோடி உள்ளதென்று ஏடுகளில் குறிப்பிட்டாலும் உண்மையில் 10 கோடி மட்டுமே இருக்கும். ஒரு வருடம் மட்டுமென்றால் பரவாயில்லை. 100 வருமானம் ஈட்டும் போது 10 கோடியாக இருக்கும் போலிக் கணக்கு, வருமானம் பத்தாயிரம் கோடி என்ற நிலைக்கு நிறுவனம் உயரும் போது கட்டுக்கடங்காமல் ஏறிப் போகும். போதாமைக்கு கடந்த காலத்தில் சேர்த்து வைத்திருப்பதாகச் சொல்லும் 'மாயப்' பணமும் பெருகியிருக்கும்.
2008 செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்த காலாண்டில் சத்யத்தின் உண்மையான வருமானம் ரூ 2,112 கோடி இலாபம் ரூ 61 கோடி. அதாவது 3 சதவீதம் மட்டுமே நிகர இலாபம். ஆனால் அவர்கள் கணக்குக் காட்டியது என்ன தெரியுமா? வருமானம் ரூ 2,700 கோடி, இலாபம் ரூ 649 கோடி மற்றும் நிகர இலாபம் 24 சதவீதம். அந்த மூன்று மாதத்தில் மட்டும் ரூ 588 கோடி பொய்க் கணக்கில் ஏற்றியுள்ளனர். 2008 ஆம் நிதியாண்டின் வருமானம் அதற்கு முந்தைய ஆண்டை விட 46.3 சதவீதம் என்றார்கள்.
இது வரைக்கும் ஒட்டு மொத்தமாக ஏழாயிரம் கோடி ரூபாய் கூடுதலாகச் சம்பாதித்ததாக ராமலிங்க ராஜு முதலீட்டாளர்களையும், ஊழியர்களையும், உலகத்தையும் ஏமாற்றியிருக்கிறார். ஒன்று பங்கு விலையை மேனேஜ் செய்வது. இன்னொன்று, அவ்வாறு பராமரிப்பதன் மூலம் முதலீட்டாளர்களைத் திருப்தியாக வைத்திருப்பது. இல்லாவிட்டால் மேனேஜ்மென்ட் சரியில்லை என்று அவரைத் தூக்கிக் கடாசி விட்டு வேறு யாரையாவது தலைமை நிர்வாகியாக அமர்த்திவிடுவார்கள் அல்லவா!
அதனால் சும்மானாச்சும் விளையாட்டாகத் தொடங்கிய இந்தப் போலிக் கணக்கு விவகாரத்தை வருடா வருடம் தொடர்ந்திருக்கிறார். ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய். ஏறத்தாழ புலி வாலைப் பிடித்த மாதிரி. அதை ராமலிங்க ராஜு, ‘கடிபடாமல் கீழே இறங்குவது எப்படியென்று தெரியாமல் புலி மேல் சவாரி செய்வது போல’ உணர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கால கட்டத்தில் ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட நிதித் தேவைகளைச் சமாளிக்க ரூ 1,230 கோடி ரூபாய்களை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். எத்தனை நாளைக்குத்தான் சமாளிக்க முடியும்? ஒரு கட்டத்தில் தளர்ந்து போய் விலகிக் கொண்டார்.
இதில் கவனிக்க வேண்டியதும், அனைவரையும் அளவில்லாத அதிர்ச்சிக்கு ஆளாக்கியதுமான ஒரு சங்கதி உண்டு. அது ஆடிட்டர் சம்மந்தப்பட்டது. ஒவ்வொரு நிறுவனமும் காலாண்டுக்கு ஒரு தடவை தனது கணக்கு ஏடுகளையும், நிதி நிலை அறிக்கையையும் நிறுவனம் தயாரித்து வெளியிட வேண்டும். அந்தக் கணக்கை ஆராய்ந்து சரி பார்த்து சான்றளிக்க வேண்டியது ஆடிட்டரின் கடமை. பெரிய நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்குகள் என்பதால் அதைத் தணிக்கை செய்யும் காரியத்தை ஆடிட் செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இன்னொரு நிறுவனமே செய்யும். அப்படி ஆடிட் செய்து சரி பார்த்து வெளியிட்ட நிதி நிலை அறிக்கையே பங்குச் சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் தெரிவிக்கப்படும்.
சத்யம் கம்பெனியின் ஆட்டிட்டராகச் செயல்பட்டது PriceWaterhouse Coopers என்ற பன்னாட்டு நிறுவனம். Cheques received but not cleared என்ற வகையில் பல கோடிகள் சும்மா தூங்கியதையும், அது ஆண்டுக்கு ஆண்டு கூடியதையும் அந்தப் பன்னாட்டு நிறுவனம் கண்டும் காணாமல் விட்டது. மேலும் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை முறையாகச் சரி பார்க்கத் தவறியது. ஆடிட்டிங் படித்தவன் முறைகேடுகளைக் கண்டுபிடிக்க முடியாதவனல்ல. மாறாக முறைகேடுகளை எப்படியெல்லாம் முறையாகச் செய்வதென்று சொல்லிக் கொடுக்கும் காரியத்தையும் செய்பவனாக இருப்பான்.
சுருங்கக் கூறினால் சத்யமும், PriceWaterhouse Coopers- ம் கூட்டுக் களவாணிகள். PwC இன் ஆடிட்டிங் கட்டணம் வருடா வருடம் கூடி வந்திருப்பதே அதற்குச் சான்றாகத் திகழ்கிறது. மும்பையில் சில முதலீட்டாளர்கள் முறை தவறி தணிக்கை செய்த PwC மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். அமெரிக்காவிலும் கூட ராமலிங்க ராஜு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறை கார்ப்பெரேட் ஊழல் நடக்கும் போதும் அங்கே ஆடிட்டிங் தவறியிருப்பது வெளிச்சத்துக்கு வருவது வழக்கம். 2001 இல் உலகையே உலுக்கிய என்ரான் ஊழலில் கூட Arthur Andersen ஆடிட்டிங் நிறுவனம் கண்டனத்திற்கு ஆளானது. இந்தியாவில் குளோபல் டிரஸ்ட் பேங்க் திவாலான சமயத்தில் கூட கணக்குத் தணிக்கை நிறுவனம் தலை குனிந்து நின்றது.
PriceWaterhouse Coopers -க்குக் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். முடிந்தால் இந்தியாவில் இயங்கவே அனுமதிக்கக் கூடாது. அதில் ஈடுபட்டவர்கள் அனைவரின் பாஸ்போர்ட்டுகளையும் முடக்கி அவர்களை உள்ளே தள்ள வேண்டும். "I am prepared to subject myself to the laws of the land and face consequences thereof" என ராமலிங்க ராஜு எழுதியுள்ளதை நனவாக்க வேண்டும். (இப்போதும் கூட என்ன முறைகேடு என்பதை அவருடைய ராஜினாமாக் கடிதத்தை வைத்துத்தான் பேசுகிறோமே ஒழிய உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெளிவாக உணர்ந்தவர் யாருமில்லை. தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு எல்லாப் பித்தலாட்டமும் அம்பலம் ஆக வேண்டும். ஒரு வேளை அவர் சத்யம் நிறுவனம் சம்பாதித்த பணத்தையெல்லாம் எடுத்து 'மேடாஸ்' கம்பெனியில் போட்டு கோல்மால் பண்ணியிருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.)
அவரது கடிதம் வெளிவந்த உடனேயே சத்யம் நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் சாத்து சாத்தென்று சாத்தி விட்டனர். முந்தைய நாள் முடிவில் ரூ 179 க்கு முடிவடைந்த சத்யம் பங்குகள் ஜனவரி 7 ஆம் தேதி வெறும் 40 ரூபாயாகச் சரிந்தது. இடையில் 30 ஐக் கூடத் தொட்டுத் திரும்பியது. ஒரே நாளில் 78 சதவீதம் காணாமல் போனது; அதாவது அதன் மதிப்பில் ரூ9,376 கோடி அவுட். 12 ஆயிரத்துச் சொச்சம் கோடியாக இருந்த அதன் சந்தை மதிப்பு 2 ஆயிரத்துச் சொச்சம் கோடிகளாகக் குறைந்தது. டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய முப்பெரும் கம்பெனிகளுக்குப் பிறகு நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமாக விளங்கிய சத்யம் ஒன்பதாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இவையெல்லாம் அன்றைய (ஜனவரி 7) நிலவரம் மட்டுமே. வெள்ளிக் கிழமை ஜனவரி 9 ஆம் தேதி இந்தக் கட்டுரையை டைப் செய்யும் போது சத்யத்தின் பங்கு விலை 11 ரூபாய். அதன் அடிப்படையில் அதன் சந்தை மதிப்பு மூன்றிலக்க கோடிக்கு இறக்கம் கண்டுள்ளது.
(முன்னதாக) ராஜினாமா கடிதம் வெளிவந்த நாளன்று இந்தியப் பங்குச் சந்தையில் அதன் விலை 78 சதவீதம் சரிந்தது ஒரு புறம் இருக்க, அதன் அமெரிக்க ADR 90 சதவீதம் குட்டிக் கரணம் அடித்தது. இனிமேல் சத்யம் பங்குகள் விற்பனையாகாது என தேசியப் பங்குச் சந்தை NSE அறிவித்துள்ளது. மேலும் 50 முக்கிய நிறுவனங்களை உள்ளடக்கிய NIFTY குறியீட்டில் இருந்து சத்யத்தை அது தூக்கி எறிந்துள்ளது. அதே போல மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீட்டில் இருந்து சத்யத்தை விலக்கியுள்ளது.
சத்யம் விவகாரத்தில் எண்ணற்ற சிறு முதலீட்டாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
அரசாங்கம் தலையிட்டு பங்குகளை அதிக விலைக்கு வாங்கிக் கொண்டு முதலீட்டாளர்களைக் காப்பாற்ற வேண்டுமென ஒரு சாரார் வேண்டுகோள் விடுக்கின்றனர். முறைகேடுகளும், தவறுகளும் முதலாளித்துவத்தின் தவிர்க்க இயலாத அம்சங்கள் என்பதை அவர்களுக்குச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. இலாபமெல்லாம் தனியுடமை, நட்டமெல்லாம் அரசுடமையா? பங்கு முதலீடு என்று பணத்தைத் தூக்கிக் கொண்டு வருகிறவன் அதன் நன்மை தீமைகளை உணர்ந்தவனாக இருப்பது அவசியம். வெல்லம் தின்னவன் மட்டுமே விரல் சூப்ப வேண்டும். உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்.
இங்கே பிரச்சினை சத்யம் என்ற தனி நிறுவனத்தைப் பற்றியதும், அதன் முதலீட்டாளர்களைப் பற்றியதும் மட்டுமல்ல. ஏனென்றால் இந்த நிகழ்வு உலக அளவில் இந்திய நிறுவனங்களின் கண்ணியத்திற்கு இழுக்கைத் தேடித் தந்திருக்கிறது. கார்ப்பரேட் கண்ணியத்திற்கு Golden Peacock Global Award வாங்கிய சத்யமே இந்த அளவுக்கு இறங்கும் போது இரும்புத் திறைக்குள் இயங்கும் சராசரி இந்திய நிறுவனங்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?
மென்பொருள் துறையைப் பொறுத்த வரை சத்யம் கம்ப்யூட்டருக்கு சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டதாக சில துறை நோக்கர்கள் கருதுகிறார்கள். ராஜுவின் பதவி விலகலை அடுத்து இடைக்கால CEO -ஆக நியமனம் ஆகியிருக்கும் ராம் மைனாம்பதி மீதும் சில விமர்சனங்கள் உள்ளன. உலக வங்கியில் பணியாற்றிய பாகிஸ்தான் அதிகாரிக்கு சத்யத்தின் முன்னுரிமைப் பங்குகளை மலிவாகக் கொடுத்து, அதற்குப் பதிலாக புராஜெக்ட் பிடித்ததில் மைனாம்பதிக்கு முக்கியான பங்கு உள்ளதென்கிறார்கள்.
இத்தனை அமளிக்குப் பிறகு சத்யத்தின் வாடிக்கையாளர்களில் எத்தனை பேர் அதன் சேவையைத் தொடர்ந்து நாடுவார்கள் என்பது சந்தேகம். பெரும்பாலான சர்வதேச வாடிக்கையாளர்கள் 'சத்யம்க்கு பை பை' சொல்லி விட்டு டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோவுக்குத் தாவுவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்தப் பின்னணியில் 53,000 பிளஸ் சத்யம் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
அவர்களில் பாதிப் பேர் வேறு நிறுவனங்களுக்கு அப்ளிகேஷன் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதிரிக்கும் நிகழக் கூடாத கொடுமை.