
எனக்கு மனப்பிறழ்வைக் கொடு இறைவா
பேரன்பின் அனார்
நானொன்றும் அவ்வளவு துரோகவாதியல்ல
யாசிகா மாதிரி
குழந்தைகளைப்போலக் கடவுளாக அல்லாது
வறுமையைப்போலக் குரூரச் சாத்தானாக
இன்னும் இருந்து இருப்பேனோ
இடையுண்ட நான்?
தற்கொலை செய்தவளுக்கு
இன்று மட்டுமே ஆறேழு முறை
அதே கனவு
திரும்பத் திரும்ப வந்துவிட்டதாம்
இடறி விழுந்த கருணை
பஞ்சின் கனம் கொண்ட ஒரு கருணை
இப்பொழுது
என்னைச் சல்லடையிட்டுத்
தேடிக்கொண்டிருக்கும்
மதுவருந்திய தருணம்
மிளிர்ந்த
ஞானம் வெட்டுண்டு கிடக்கிறது
உக்கிர வெயில் வானத்திலென
அறியாது
ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாதென
அதுஎப்பொழுது விழுந்தடித்தோடியதோ
எனது கிழிந்த பாக்கெட்டிலிருந்து?
நான் நடக்கும் சாலையில் தினமும் கவனிக்கும்
அழுக்குப் பிள்ளையோடு சிக்னலில் நிற்பவளுக்கென
நிரம்ப யோசனை செய்து
ஒரு வாட்டர்பாக்கெட்டைக் கேன்சல் செய்து மீதித்திருந்த
அஞ்சு-ரூபா காயினை ரொம்ப நேரமாச்சு,
தேடிக்கொண்டிருக்கிறேன்
பிரிவின் மொழி
பார்வையிலிருந்து உடைந்து விழும்
அக்கண்களை அள்ளிக்கொண்டு
மௌனப் பெருங்கிணற்றின்
மனச்சுவர் பற்றி மேலெழும்பும் வார்த்தைகள்
வாதையோடு திரும்புகின்றன