முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
அயல் பசி - 14
ஷாநவாஸ்
இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? - 8
ராஜ்சிவா
எண்ணங்கள் 14.
நர்சிம்
நகரத்தின் கதை பாகம்- 19
சித்ரா ரமேஷ்
கவிதை
சித்திரவதைக் கூடத்திலிருந்து
- அஜித் சி. ஹேரத், தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை
அதுவாகவே ஆகி விடுதல்
ராம்ப்ரசாத் சென்னை
நம்பிக்கையின்மையின் சொல்
செ.சுஜாதா
ஒரு சொல்லில் உறைந்திடும் நிமிடம்
தேனு
எனக்கு மனப்பிறழ்வைக் கொடு இறைவா
ஆறுமுகம் முருகேசன்
அலையலையாய் விரியும் வளையம்..
இளங்கோ
வயிற்றில் யாரோ
வித்யாசாகர்
இம்மண்ணின் குற்றமேயன்றி எனதில்லை..
வளத்தூர் தி.ராஜேஷ்
சிறுகதை
டீக்கடை பெஞ்சு…
உஷாதீபன்
எண்ணங்கள் 14.
நர்சிம்

Gangs of Waseypur.

நான்கு நாட்களாகிவிட்டது, இந்தப் படத்தைப் பார்த்து. இதோடு எட்டாவது முறையாக இப்படத்தைப் பற்றி எழுத அமர்ந்தும் ஒரு வார்த்தை கூட எழுதமுடியவில்லை.  ஒருவிதமான மனநிலையையும் அனுபவத்தையும் பகிர்வதே எண்ணம்.

மாமியார்-மருமகள் அன்றாட நிகழ்வைச் சொல்லும் நாடகம் திரைமுழுக்க வியாபித்து பின்னோக்கி நகர்கிறது, சின்னத்திரையின் மெகாதொடர் அது என நாம் உணரத்தொடங்கும் முன் அந்தத் திரையைத் திடுமென துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கின்றன.  அன்றாட சாதாரண நிகழ்வுகளின் மீது அனுராக் காஷ்யப் வீசிய குண்டாகவேபபட்டது. இது வேறு என்பதைச் சொன்னதுபோல் இருந்தது. அதன்பிறகான ஐந்து நிமிடங்கள் வெறும் துப்பாக்கிச் சத்தம், திரையையும் காதுகளையும் துளைப்பதில் துவங்குகிறது ரத்தமும் சதைத் துண்டுகளுமான கேங்ஸ்டர்களுடைய  வாழ்வின் ஆவணம்.

கதை? அதே அப்பாவைக் கொன்றவனைப் பழிவாங்கும் மகன். அவ்வளவுதான். இதை அனுராக் கையாண்ட விதம் இதுவரை வந்த தாதாயிஸப் படங்களின் மீது இருந்த அத்தனை மரியாதையையும் இழக்கச் செய்துவிட்டது. வசனங்கள் அதைப் பாத்திரங்கள் உச்சரித்த விதம் என ஃபிரேமுக்குப் ஃபிரேம் அனுராக்கின் முகம் நினைவிற்கு வந்துகொண்டே இருந்தது.

"டாட்டாவிற்கும், பிர்லாவிற்கும் தந்தா சமஜ்மே நஹி ஆயாஎன்று சொல்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு, அன்னியர்களிடம் இருந்து உள்ளூர்க்காரர்கள் கொள்ளையடிக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டார்கள்" என்பதில் துவங்கி நிலக்கரி மாஃபியாவான ராம்தீர் சிங் எனும் வில்லன் பாத்திரத்தை அடைகிறது கதை. இங்கிருந்து ராம்தீர் சிங் செய்யும் அடாவடிகளும் அவனால் தன் தந்தையை இழந்த சர்தார் கான் (மனோஜ் பாஜ்பாய்) எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து ராம்தீருக்கு சிம்ம சொப்பனமாய் உருவெடுக்கிறான் என்பதும் கரு.

ஆனால், திரைக்கதை எனும் வித்தையால், எத்தனையோ முறை பார்த்துப் புளித்துப்போன மேற்சொன்ன பழிவாங்கல் கதையை மூன்றுமணிநேரம் கண்சிமிட்டவிடாமல் கட்டிப்போட்டிருப்பதில்தான் அனுராக்கின் கைகள் சாதாரணமானவை அல்ல என்பதை நிரூபித்துப் போகின்றன.

மனோஜ் பாஜ்பாய் எனும் அற்புத நடிகனின் நடையும் நடித்தே இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா காட்சிகளையும் குறிப்பிட்டாக வேண்டும்.  மனைவியை ஆசையாய் மார்பில் தாங்கித் தடவிக் கொடுத்துக்கொண்டே தன் தந்தையைக் கொன்றவனை எப்படியெல்லாம் பழிவாங்கவேண்டும் என வெகு அமைதியாய் சூளுரைத்துவிட்டு முத்தாய்ப்பாய் அவர் சொல்லும் மதர் சோத்இன்னும் காதுகளில். (பழைய படங்களில் (எல்லா மொழிகளும்தான் தமிழ் மட்டுமேயல்ல- இதே காட்சியைக் கண்கள் சிவக்க,துடிக்கக்(கன்னமும்!) டகால் டகால் என மியூசிக்கோடு சபதம் எடுப்பார்கள்.. பாடுவார்கள், ரோட்டில் அதுபாட்டுக்கு இருக்கும் கம்பியைப் பிடுங்கி (அதில் இருந்து நீர் பீய்ச்சியடிக்கும்) எறிவார்கள். இப்படியான அத்தனை பழையவைகளையும் இப்படத்தில் பிடுங்கி எறிந்து விட்டார் அனுராக்.

தளபதி படத்தில் வரும் போலீஸ் ஸ்டேசன் காட்சி. அடிச்சிப் பார்றா என ரஜினி உறுமுவாறே, அதைப்போன்றதொரு காட்சி. ஆனால் இயல்பான கோபதாபங்களும் அடிதடியும், அதுமுடியும் தருணம் நாயகனும் நண்பனும் ஜெயிலில் அடைபடுவதும் என வேறு ஒரு கோணம்.

வில்லன் ராம்தீர் சிங்கின் பாத்திரமும் நடிப்பும் அற்புதம். இருபது வருடங்களுக்கு முன்னர் தன்னால் கொல்லப்பட்டவனின் சகோதரனை சட்டென அடையாளம் கண்டுகொள்ள முடியாவிட்டாலும் அப்பொழுது விட்டுப்போன தன் குடையைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்கிறான், அவர்கள் யார் எவரென. இங்கே பின்குரலில் கதைசொல்லியின் வார்த்தைகள் அருமை. " பணக்காரர்கள் மனிதர்களை ஞாபகம் வைத்திருப்பதை விட தம் பொருட்களை நினைவில் வைத்திருப்பார்கள்."

அந்த சிறைக்காட்சி முடிந்ததும், தன் அல்லக்கையை "சாலா ச்சூத்தியே" எனத் திட்டிக்கொண்டே யார் எவர் என விசாரிக்காமல் சர்தார்கானை வேலைக்குச் சேர்த்ததைத் திட்டும் காட்சியும் அதற்கடுத்த காட்சியில், சிறுவனைக் கொன்றுவிட்டதாகப் பொய்சொன்ன குரோசியை அழைத்துவரச்சொல்லி, "இருபது வருடங்களுக்கு முன்னர் நீ கொன்ற அந்த சிறுவனின் உடல் இப்பொழுது வேண்டும், பண்டிட்ஜி பரிகாரம் செய்யச் சொல்லி இருக்கிறார்" என்றவுடன் எச்சியை முழுங்கிக்கொண்டே பயத்துடன் "சரி" என்று அவன் சொன்னமாத்திரத்தில் ஓங்கி அறைந்துவிட்டு, "போர்சிடிக்கே, இப்பொழுதாவது உண்மையைச் சொல். நீ செய்த காரியத்தால் என்ன நடக்கிறது தெரியுமா?" என்பதில் நளினமும் அரகன்சும் கலந்த நடிப்பில் அவர் யார் என நிரூபிக்கிறார்.( ஷாகிப், பீவி, கேங்ஸ்ட்டர் பார்ட்டி)

துப்பாக்கிக் குண்டுகளைப் பேனாவில் நிரப்பித் திரைக்கதை எழுதும் அனுராக் அவ்வப்பொழுது பூக்களையும் நிரப்பிக்கொள்வார் போல. தலைமறைவு வாழ்க்கைக்காக நண்பர் வீட்டில் தங்கநேரிடுகையில் அறிமுகமாகும் ரீமாசென்னைப் பார்வையால் விழுங்கி, மயங்கி பின் மயக்குகிறார். இந் நிகழ்வில், ரீமாசென்(..நா.., ரீமா?) குத்தவைத்து அமர்ந்து துணியைத் துவைத்துக்கொண்டிருப்பார். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் கும்மிக் கொண்டிருப்பார். அதே பொசிஷசனில் அவருக்கு அருகில் அமரும் மனோஜ் பாஜ்பாய் ரீமாவின் முதுகில் நீர்த்திவளைகளைத் தெளித்து அவரின் முகத்தைக் குனிந்து பார்க்க எத்தனிப்பார். கும்மிக்கொண்டே வெட்கம் பளீரிட அப்படியே குனிந்து தன் முகத்தை மறைத்துக்கொள்வார் ரீமா. அற்புதமான கவிதை.

முதல் மனைவியிடத்தும் அன்பாய்க் கரம்பிடித்து அமர்ந்திருக்கும் காட்சியும் அற்புதம்.

சர்தார்கானை அவனாகவே ஏற்றுக்கொள்ளும் நக்மா பாத்திரம். சர்தார்கானின் மனைவி. கோபம், பாசம், காமம் என பின்னி இருக்கிறார் ரிச்சா. குறிப்பாய், தன் கணவன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு விட்டார் என்பதை நண்பன் வந்து சொன்னதும், என்ன பெயர், இந்துவா என்றெல்லாம் சாதரணமாய்க் கேட்டுக்கொண்டுவிட்டு, உள்ளே தன் மகன் மாவைக் கொட்டியதும் அத்தனை கோபத்தையும் ஆதங்கத்தையும் அவன் மேல் காட்டி அடித்து அழும் காட்சியும் அதன் அடுத்து வரும் இயல்பான காமக் காட்சியும் அனுராக் பிராண்ட்.

ஆரம்பக் காட்சியில், வாரணாசியில் குறைந்த விலையில் கைத்துப்பாக்கிகள் கிடைக்கின்றன என தந்திரமாய் ஷாகித்கானை ராம்தீர் அனுப்பிக் கொல்கிறான். துப்பாக்கி விற்பவன், ஒரு துணியைக் கட்டி எடுத்துவந்து, எதுவுமே பேசாமல் மேஜை மீது வைத்துவிட்டு, ஷாகித்கானைக் கொல்வான்.

பிற்பகுதியில் சர்தார்கானின் இளைய மகன் அதே லாட்ஜில் துப்பாக்கி வாங்க வரும்பொழுதும் அதே நடை. அதே மெளனம். துணிப்பையிற்குப் பதில் லேப்டாப் பேக். ( ரயிலில், போலீஸ் கச்சிதமாய் துப்பாக்கி கடத்துபவனைப் பிடிக்கிறது. எப்படி என்பதையும், கம்மியான விலையில் துப்பாக்கியை எப்பிடி விற்க முடிகிறது என்பதையும் அடுத்த காட்சியில் சொன்ன விதம் அருமை).

படம் நெடுக வரும் பின்பாட்டுகளில் அவ்வளவு நுட்பங்கள். குறிப்பாய் ஆரம்பத்தில், சர்தார்கானின் தந்தை, ஷாகித் கான் பிடிபட்டு ஊரைவிட்டு வெளியேறும் காட்சியில் வரும் பாடல் (ரோட்டி, பதலா சாந்த்). சிறைச்சாலையில் குண்டு தயாரிக்கும்பொழுது, சக கைதிகள் பாடும் பஜன் டைப் குத்துப்பாடல்.

எதற்கும் சலனப்படாத சர்தார்கான், அவன் மகன் மீது குண்டடிபட்டதும் பதறுவதும், அடிபட்ட மகன் எனக்கு ஒன்றும் இல்லைஎன்றதும் அவன் கன்னத்தில் அறைந்துகொண்டே, ‘என்னடா ஒண்ணும் இல்ல, என்னடா ஒண்ணும் இல்ல" எனப்பதறுவதும், ஜீப் சாவியைத் தேடுவதும், அப்பா பாத்திரத்தை நிறைக்கிறார் அன்பு எனும் பதார்த்தத்தால்.

மகனைச் சுட்டதற்காக, ராம்தீர்சிங்கை கார்னர் செய்து அழைத்துவந்து, அவன் அம்பாசிடர் காரை அக்குவேறு ஆணிவேறாகப் பிரிக்கச்சொல்வதும், "காலையில் என்ன சாப்டான்னு பின்னாடி மோந்துபாத்து சொல்லு" எனும் நக்கலிலும் பாஜ்பாயும் வசனமும் இரட்டைக்குழல் துப்பாக்கி வெடி.

இறுதிக்காட்சியை நெருங்குவதை உணர்த்தும் ப்ப்பேம் பிஜிஎம்மோடு காரில் தனியாய் செல்லும் சர்தார்கானை, ரீமாவின் உதவியோடு, எந்தப் பெட்ரோல் பங்க்கில் இருந்து தாதா வாழ்வை ஆரம்பித்தானோ அதே பங்க்கில் வைத்துச் சுட்டுச் சல்லடையாக்குகிறது ராம்தீரின் கும்பல். பொத்தல் உடம்போடு, கையில் துப்பாக்கியேந்தி ஊர்ந்து ரிக்‌ஷாவில் விழ, குற்றுயிராய் கிடக்கும் சர்தார்கானைத் தாங்கிய ரிக்‌ஷா மெல்ல நகர்கிறது. பின்னனியில் வில்லனை எப்படிக் கொல்ல வேண்டும் என ஆரம்பத்தில் சர்தார்கான் சொன்ன வசனம் ஒலிக்கிறது.

கதை இன்னும் இருக்கிறதுஎனத் தற்காலிகமாக முடித்திருக்கிறார்கள்.

வாக்கியங்களில் கோர்வை இல்லாமல் போயிருக்கலாம். படத்தின் மீதான லயிப்பும் அதைச் சொல்லிவிடவேண்டும். இதையும் சொல்லிவிடவேண்டும் என்ற பதைபதைப்பும் காரணமாயிருக்கலாம். மிகச்சரியாய் சொல்லவேண்டுமெனில், அனுராக்கைப் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com