முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
அயல் பசி
ஷாநவாஸ்
எண்ணங்கள் – 8
நர்சிம்
கலைந்தும் கலையாத பிம்பங்கள் - 2
இந்திரஜித்
நகரத்தின் கதை பாகம் - 13
சித்ரா ரமேஷ்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?"
ராஜ் சிவா
கவிதை
யாமம்
செ.சுஜாதா
அனுப‌வ‌ம்
ராம்ப்ரசாத்
உதிர்ந்த மஞ்சள் பூக்களின் நரம்புகள்..
இளங்கோ
உன்னளவு அன்பை...
ஆறுமுகம் முருகேசன்
கூண்டுக்குள் இருப்பினும்
சின்னப்பயல்
உருவ பொம்மைகளால் புகையும் பெருநகரம்
தேனம்மை லஷ்மணன்
காமாந்தகி
ஸ்வரூப் மணிகண்டன்
தனித்திருப்பதன் காலம்
வளத்தூர் தி .ராஜேஷ்
சிறுகதை
பாண்டி எனும் ஜெசி கதை
புதியபரிதி
இந்த வார கருத்துப்படங்கள்
பாண்டி எனும் ஜெசி கதை
புதியபரிதி


இது கண்ணில் பட்டிருக்க்க்கூடாது. இது கண்டிப்பாக எதேச்சையானது அல்ல. இவ்வளவு நாள் நாமக்கல் பக்கமே ஜெசி வரவில்லை. இன்று தான் வந்தாள். அவளது எழுத்துக்கு இன்று மாலை ஆறு மணிக்கு விருது தருகிறார்கள்.. முதல் அங்கீகாரம் என்பதால்.. மறுக்க முடியவில்லை. மேலும் அது அவளைப் போன்றோருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும்.நாமக்கல்லை விட்டுப் போய் ஆறு வருடங்கள் முடிந்து விட்டன. எப்போதாவது ஊர் நினைப்பு வந்தாலும் அங்கே போவதற்கு ஆசை மட்டும் வந்ததே இல்லை. பேருந்து நிலையம் வந்து இறங்கியவுடனே ஒல்லியான பையன் ஒட்டிக்கொண்டிருந்த போஸ்டரைப் பார்த்தாள்.

அது ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர். எல்லா கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போல் அதுவும் எழுத்துப் பிழையுடன் இருந்தது....

 கண்ணீர் அஞ்சலி

 அமரர்.திரு. பழனியப்பச் செட்டியார் அவர்களின் மனிவியும்

 திரு.மல்லிக்கடை ராமராஜன் அவர்களின் தாயாருமான

 திருமதி.சிட்டம்மாள் அவர்கள்

 இன்று காலை ஐந்து மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

 அவருக்கு எங்களது கண்ணீர் அஞ்சலி.

 இவண்

 பே.தருமராஜ்

 .தி.மு.க ஒன்றியச் செயலாளர்

 மற்றும்

 குடும்பத்தினர்

 அம்மாளின் பூதவுடல் இன்று மாலை 6 மணியளவில் அடக்கம் செய்யப்படும்.

யாரிந்த தருமராஜ் தெரியவில்லை. ஆனால் பழனியப்பச் செட்டியார் ஜெசியின் தாத்தா. மல்லிக்கடை ராமராஜன் அவள் அப்பா. சிட்டம்மாள் அவள் பாட்டி. பாட்டி இறந்தது தெரிந்தபின்பு போகாமல் இருக்க முடியாது. அந்தக் குடும்பத்திலேயே அவளுக்குப் பிடித்தது பாட்டிதான். அவள் சொல்லும் கதைகள் எல்லாம் ஏராளம். அவள் சொன்ன கதைகள் தான் இப்போது ஜெசியை ஒரு குழந்தைகளுக்கான எழுத்தாளராய் உருவாக்கியிருக்கிறது. இறந்த வீட்டுக்குப் போனால் அவளை அங்கிருப்பவர்களுக்கு அடையாளம் தெரியுமா? அடையாளம் தெரியவேண்டும் என்கிற அவசியம் இல்லையே? அடையாளம் தெரிந்தால்தான் பாட்டிக்குச் செய்ய வேண்டிய காரியங்களை அவள் கையால் செய்ய முடியும்.உடனே மோகனூருக்கு வண்டி ஏற வேண்டும் போல் இருந்தது.ஆனால் அவள் இப்படிப் போக முடியாது. அவள் அங்கே போகவேண்டும் என்றால் முடியை வெட்டி விட்டு பேண்ட் சட்டை போட்டு பாண்டியாகத் தான் போகவேண்டும் ஜெசியாக அல்ல. அங்கிருந்து வரும்போது அவள் பெயர் பாண்டிதான். சென்னைக்கு வந்த பிறகு லின்சியக்காவும் அவள் தோழிகள் சந்திரா, துவாரகாவும் சேர்ந்து தான் பாண்டி என்கிற பெயரை மாற்றினார்கள்.

"உனக்குப் பேரு வைக்கணுமே"

"என்ன மாதிரி உனக்குப் பேரு வேணும்?"

"எதாவது வைங்க்க்கா.. ஆனால் சாதாரணமா இருக்க வேணாம்.."

"'நாஸ்தென்கா' னு வைக்கலாம். நேத்து ராத்திரி எங்கூட வந்த ஆளு.. எழுத்தாளனாம், அவன் படிச்ச கதை ஒன்னு சொன்னான் அதுல ஈரோயின் பேரு அதுதான்."

"ஐய்ய, வாய்லயே நுழைல... இனிமே இந்த எழுத்தாளனுங்க கூட எல்லாம் போகாத... சில சமயம் நல்லா இருப்பானுங்க. கதை சொல்லுவானுங்க... சில சம்யம் சைக்கோ மாதிரி பண்ணுவானுங்க... சில பேரு நம்ம வாயப் புடுங்கி கதை எழுதி பேரு வாங்கிருவானுங்க.. அப்படித்தான் ரெண்டு மாசத்துக்கு முன்ன எங்கிட்ட வந்தவன் என் கதைய எழுதி பொஸ்தகத்துல போட்டுட்டான். புதிய உலகம் ஜானகி அக்கா இல்ல.. அதான் எடுத்து வந்து காமிச்சிது"

"இவளுக்குப் பேரு வைங்கடினா.. வெட்டிக்கதை பேசிக்கிட்டிருக்கிங்க"

"என்ன மாதிரி பேரு வேணும்னு சொன்னாத்தான யோசிக்க முடியும்"

"எதாச்சும் பேருக்கா.."

"உனக்குப் பூ பேரு வேணுமா.. சாமி பேரு வேணுமா.. இல்ல ஸ்டைல் பேரு வேணுமா...? கஸ்டமருங்களுக்கு புடிச்ச மாதிரி பேரு வேணுமா.."

"நான் அப்படி எல்லாம் போக மாட்டேன்.. "

"பிறகு பிச்ச எடுப்பியா?.."

"பிச்ச கூட எடுக்கிறேன்.. அப்படி எல்லாம் போகமாட்டேன்"

"என்னடி இவ இப்படி பேசுறா"

"சரி, அதை எல்லாம் அப்புறம் பாக்கலாம்.... முதல்ல இவளுக்குப் பேரு வைங்கடி."

"சாமி பேரே வைங்க்காக்...ஆனா ஸ்டைலா இருக்கணும்"

"சிவன் பேரையே வைக்கலாம்..."

"ருத்ரா?"

"ஸ்டைலா இருக்கணும்னா ஸ்ரீ ருத்ரா..!!"

"நல்லா இருக்குக்கா.."

"நீ எங்க தொழிலுக்கு வரமாட்டங்கறதுனால தான் இந்தப் பேரு.. இந்த பேரு வச்சிருந்தா சுத்தமா இருக்கணும்.... தினமும் காலைல எந்திருச்சு குளிக்கனும்... அப்புறம் யார் கூடவும் படுக்கக் கூடாது.. சரியா?."

ஸ்ரீ ருத்ராவுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. மற்றவர்கள் எல்லாம் சாயந்திரம் வேலைக்குக் கிளம்ப அப்போது தான் ட்ரெயினில் பிச்சை எடுத்துவிட்டு வீட்டுக்கு வருவாள். சமைத்து வைத்திருந்தால் அதை சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொள்வாள்.இல்லை என்றால் தனக்கு மட்டும் சமைத்து சாப்பிட்டுக் கொள்வாள். மற்றவர்கள் எப்போது வருவார்கள் என்று தெரியாது. கதவைத் திறந்து வைத்துக் கொண்டுதான் தூங்குவாள். அடுத்த நாள் காலையில் விழிக்கும் போது லின்சியும், சந்திராவும் சில சமயம் இருப்பார்கள், சில சமயம் இருக்க மாட்டார்கள்.ஆனால் துவாரகா மட்டும் எவ்வளவு நேரமானாலும் வீட்டுக்கு வந்து விடுவாள். கொடுக்கும் வாடகைக்குக் கொஞ்சமாவது வீட்டில் தங்க வேண்டும் என்பது அவளது வாதம். வீட்டு வாடகை அக்கம் பக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகம். ஓனர் அருகில் இல்லாதது வசதி.ஆனால் வீடு ஊரை விட்டு மிகவும் ஒதுங்கி இருக்கும் , அவர்களைப் போலவே.. ஜெசி அவர்களுக்கு நிறைய கதைகள் சொல்லுவாள் எல்லாமே அவன் குழந்தை பாண்டியாய் பாட்டியிடம் கேட்டது. மாதம் ஒருமுறையேனும் புதிய உலகம் ஜானகி அக்கா வீட்டில் அவளைப் போன்றோர் கூடுவது வழக்கம்.ஒவ்வொருவரும் ஏதாவது செய்ய வேண்டும். பாட்டு பாடுவது, ஆடுவது ,விடுகதை போடுவது இது மாதிரி.. அப்போதெல்லாம ஜெசி பாட்டிக் கதைகளைத்தான் சொல்லுவாள்.

ஒரு இரவு நாளில் மழை பெய்து கொண்டிருந்தது. சீக்கிரமே துவாரகா வந்துவிட்டாள். முழுவதும் நனைந்து வந்திருந்தாள். ஸ்ரீ ருத்ராவின் கண்களில் அப்போது தான் தூக்கம் மெல்ல இறங்கிக் கொண்டிருந்தது.அவளுக்கு துவாரகா சேலையை உறுவும் சத்தம் கேட்டது அதைத் தொடர்ந்து மாற்றுச் சேலை கூட கட்டாமல் அவள் குடிப்பதாக டம்ளர்களின் சிணுங்கள்களும் மது ஊற்றும் சத்தமும் சொல்லின. குடித்துக் கொண்டிருந்தவள் மெல்ல ஸ்ரீ ருத்ராவின் அருகே வந்து தலையைத் தடவினாள். ருத்ரா அமைதியாகத் தூங்குவது போலவே இருந்தாள்.துவாரகாவின் கைகள் மெல்ல ருத்ராவின் உடல் முழுக்கப் பரவியது.ருத்ராவுக்கு என்னமோ போல் இருந்தது. ஆனால் அதைத் தடுக்கவோ விலக்கவோ அவள் விரும்பவில்லை.ருத்ராவின் ஆடைகளை விலக்கி அவளுடன் படுத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் லின்சியக்கா வந்து பார்த்துக் கத்தினாள். ஸ்ரீ ருத்ராவை விட துவாரகாவுக்குத்தான் திட்டு அதிகமாக விழுந்தது. சந்திராவுக்கு துவாரகா செய்தது பெரிய தப்பாய் படவில்லை.. யாரும் கிடைக்காத மழை நாளில் உள்ளே ரெண்டு ரவுண்டு விட்டிருப்பவளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.ஆனால் ஸ்ரீ ருத்ரா என்று பேர் வைத்துக்கொண்டு இவள் பண்ணியது தான் தப்பு என்று கூறினாள். உடனடியாக பேர் மாற்றியே ஆகவேண்டும் என்று குதித்தாள் லின்சியக்கா. அவளுக்கு சிவனின் காம விளையாட்டுக் கதைகள் எல்லாம் தெரியாது. அவன் பெயரில் நடக்கும் ஆராய்ச்சிகளும் தெரியாது என்பதால் சிவன் மிகப் புனிதமானவன் என்று நம்பினாள். தெரிந்து கொண்டாலும் அதை மற்ற காமக் கதைகளில் ஒன்றாய்த்தான் பார்ப்பாளே அன்றி அதைப் பொருத்திப் பார்க்கும் பக்குவம் எல்லாம் அவளுக்கு இல்லை.

"ஏதாவது கிறிஸ்டியன் பேரு வைக்கலாம்" என்றாள் துவாரகா

அவளை முறைத்துவிட்டு லின்சியக்கா "கிறிஸ்டீன் பேரு ஓகேவா" எனக் கேட்டாள்

"ம்" என்றாள்.

ஆளாளுக்கு ஒரு பெயர் சொன்னார்கள் எதுவும் செட் ஆகவில்லை. அவள் பெயர் முடிவாகும் வரை அவளைப் போலவே அவளது பெயர்களும் எழுதக் கிடைக்காத ஒரு வார்த்தையாய் மிகச் சங்கடமான உணர்வை உணர்ந்தன.

"ஜெசி வி.டி.வி ல த்ரிஷா பேரு."

"எனக்கு ஓக்கே."

"ம்" என்றாள் ஜெசி.

"அதான் பேரு மாத்தியாச்சுல... இனிமே எங்க கூட வா.",துவாரகா

"ஏங்கா கிறிஸ்ட்டின் பேரு வச்சா தப்பு பண்ணலாமா?"

"ஏசு மன்னிக்கிற கடவுள் டீ ... அதனால் ஒன்னும் பிரச்சனை இல்லை"

ஆனாலும் ஜெசிக்கு அந்த தொழில் போவது பிடிக்கவில்லை.அவளது காமத்துக்கு வடிகாலாக துவாராகா இருப்பாள் என நினைத்தாள்.ஆனால் துவாராகா பிடி கொடுக்கவில்லை.

ஒரு நாள் இரவு ஜெசியை சந்திரா பீச்சுக்குக் கூட்டிப்போனாள். அங்கே ஆண்களும் அவர்களைப் போன்றோரும் தனித்தனியாக் இருந்தனர்.

"இங்க பாரு.. ஜெசி, நீ தான் நம்ம வூட்லயே கம்மியா சம்பாதிக்கிற. தினமும் இங்கின ஒரு ஏழு மணிக்கு வந்திரு. நல்லா இருட்டுப் படிஞ்ச எடமா உட்கார்ந்துக்க.. ஆளுங்க வருவானுங்க..

பெருசா ஒன்னும் பண்ண வேணாம்.கொஞ்சம் கை வேல பண்ணிவிடு. நொட்டாங்கையிலியே பண்ணிவிடு போதும்.அதிக பட்சம் 15 நிமிஷம். அப்புறம் டெட்டால் போட்டு கைய கழுவிக்கலாம்.. என்னா சொல்ற?"

ஜெசி ஒன்றும் சொல்லவில்லை. தினமும் ஏழு மணிக்கு பீச் போனாள்.நொட்டாங்கையில் வேலை பார்த்தாள். 15 நிமிஷத்துக்கு 100 ரூபாய். சில சமயம் பேரத்துக்கு 50 ரூபாய். வெயிலில் அலைய வேண்டியது இல்லை. வேறெவனும் இவள் அனுமதி இல்லாமல் கண்ட இடத்தில் கை வைப்பதில்லை.ஆனால் வாரத்துக்கு ஒரு டெட்டால் பாட்டில் தேவைப்பட்டது.

"ஒருத்தன் செம போதை... வந்தான்.. சோந்தாங்கையில தான் பண்ணனுங்கிரான்.. நான் முடியாதுனுட்டேன்.. 200 தாரேன்னான்.. நான் மசியலையே.. 500 எடுத்து கையில திணிச்சிட்டான்.. சரி, எத்தனயோ பேரு சோத்துக்காக பீ கிடங்குல ஏறங்கி சுத்தம் பண்ணுங்க. அது மாதிரி தானே நாமும் ............ சுத்தம் பண்றோம்னு நினைச்சு பண்ணிவிட்டுட்டேன், இப்ப என்னடான்னா சாப்பிட ஒப்பல."

"அதெல்லாம் பழகிரும் ஜெசி."

"ஏன் சந்திரா... இந்த ஆம்பிளைங்களுக்குத்தான் கையிருக்குல்ல.. அப்புறம் எதுக்கு இப்படி பீச்சுக்கு வாராஙக.."

"நீ இவனுங்களுக்கு பண்றமாதிரி இவனுங்க எல்லாம் வேற யாருக்காவது பண்ணிருப்பானுங்க...அவன் முதலாளிகிட்ட,கடன் கொடுத்தவன்கிட்ட, பொண்டாட்டி கிட்ட.. இப்படி யாருகிட்டையாவது.."

"பொண்டாடிகிட்டயா..." நக்கலாக சிரித்தாள் ஜெசி..

"ஆமா, எல்லாரும் நீ பண்ற மாதிரி பண்ணிக்கிட்டுத்தான் இருக்கானுங்க.. என்ன நீ உடம்புல பண்ற.. அதுக்குக் காசு வாங்குற... இவனுங்க வார்த்தைல பண்ணுவானுங்க.... மரியாதைல பண்ணுவானுங்க.. அதுக்கு ஏத்த மாதிரி வேலை, பதவின்னு ஏதாச்சும் வாங்கிப்பானுங்க.... என்னா இருந்தாலும் ஆம்பிளைங்க இல்லையா அதான் யாரையாவது அடக்கணும்ல.. நெறையா காசு வச்சிருக்கிறவன் நல்ல எடத்துக்குப் போறான். கம்மியா காசு வச்சிருக்கிறவன் எங்ககிட்ட வாரான்.. அதுக்கும் கம்மியானா உங்கிட்ட வாரான்."

"அப்படியா"

"ஆமாம் நீ நொட்டாங்கைல பண்ணா என்ன? சோத்தாங்கைல பண்ணா என்ன? 100 ஜோலிக்கு எதுக்கு 500 ரூபா தரணும்?"

"ம்"

"ஏன்டி, நாளைக்கு மீட்டிங் இருக்குல்ல? என்ன கதைடீ சொல்ல போற?."

"எனக்குத் தெரிஞ்ச கதை எல்லாம் சொல்லிட்டேன்.இனிமே கதை எல்லாம் இல்ல"

அடுத்த நாள் ஜானகி அக்கா வீட்டில் எல்லோரும் கூடியிருந்தார்கள்.வழக்கம் போல் கதை சொல்ல ஜெசியை அழைத்தார் ஜானகி அக்கா. தனக்குக் கதை எதுவும் தெரியாது என்று சொல்லி எவ்வளவோ மறுத்தும், ஜானகி அக்கா நீயா ஒரு கதை சொல்லு என எழுப்பிவிட்டார். எழுந்து நின்று தன் வாய்ப் போக்கில் ஒரு கதையை அடித்துவிட்டாள். எல்லோரும் நன்றாய் இருப்பதாய் பாராட்டினார்கள். அடுத்த வாரம் ஜானகி அக்கா கூப்பிட்டிருந்ததால் ஜெசி கிளம்பிப் போனாள். ஜெசி சொன்ன கதை அந்த வார தீக்கதிரின் இலவச இணைப்பான வண்ணக்கதிரில் குழந்தைகள் கதை என்கிற பெயரில் வெளிவந்திருந்தது. கீழே அவள் பெயர். ஜெசிக்குத் தாளமுடியாத சந்தோசம். அன்றிலிருந்து எழுத ஆரம்பித்த ஜெசி 5 வருடங்களில் குறிப்பிடத்தகுந்த குழந்தை எழுத்தாளர் ஆகிவிட்டாள். அவள் திருநங்கை என்பதற்காகவே சிலர் மதித்தனர். அவள் படைப்புக்கு முன்னுரிமை கொடுத்தனர்..இப்போது விருது வாங்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டாள்..

இந்த விருது கண்டிப்பாய் தன்னைப் போன்றோருக்கு உந்துசக்தியாய் அமையும்.அதிலும் அவள் விழா மேடையில் பேசுவதற்குத் தயாரித்து வைத்திருந்த பேச்சு மிக முக்கியமானதாய் அவளைப் போன்றோருக்கு என்ன தேவை, அவ்ர்களது மனம் என்ன என்பதைத் தெளிவாக விளக்கும் வண்ணமாக இருந்தது என்று நம்பினாள்.அதைக் கேட்டால் யாராவது பெரிய எழுத்தாளர் பாண்டியின் ஜெசி கதை என்று சிறுகதை கூட எழுதலாம். ஆனால் பாட்டி, அவள் தான் இந்த விருதுக்குச் சொந்தக்காரி.அவளைப் புறந்தள்ளி விட்டு அவளது விருதை எப்படி வாங்குவது. அவள் மட்டும் இல்லை என்றால் பாண்டி என்கிற விபச்சாரி என்று யாராவது கதை எழுதி இருப்பார்கள்.அவள் ஆயிரங்களில் ஒருத்தியாய் கரைந்து போய் இருப்பாள்.பாட்டியின் மரணத்துக்குப் போகலாமா வேண்டாமா என்கிற குழப்பம் விடாமல் அடித்துக் கொண்டிருந்தது . பின்பு கடைசியில் ஏதாவது சலூன் கடை தெரிகிறதா என ஜெசி தேடலானாள்.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com