
தனித்திருப்பதன் காலம்
இப்பொழுதைய இந்த
தனிமை நிமிடங்களை
எச்சரிக்கை மிகுந்த
தருணமாக
மாற்றியமைக்கிறது
காலம் .
தனித்திருப்பது ஒன்றும்
அபாயகரமானது அல்ல
கால சிந்தனை முறையை
அதனதன் நிறைவை
நிகழச் செய்யும் ஒன்றினை
எப்பொழுதும்
செய்ய விட்டதில்லை
காலம் .
சுயங்கள் பின்னப்பட்டிருக்கும்
முடிச்சுகளை தனிமையின்
ஏதோ ஒரு நொடிகளும்
அதன் காலமும்
விடுவிக்க காத்திருக்கிறது.
காலத்தின் இயக்கம்
நடைபெறாத ஒரு
நிகழ்வைக்
காட்சிப்படுத்துகிறது
வெற்றிடத்தின் விசை
பரவல்.
அதன் நொடிகளின்
இடப்பெயர்வு
நினைவலைகளை
சிதறடிக்கிறது .
எதிர்ப்படுதலில் எந்தன்
மையநோக்கு விசை
குறிக்கப்படுகிறது
விலகிய கோணம்
மாற்றியமைக்கப்படலாம் .
உணர்த்தும் விசையின்
இயக்கம் விடுபடுகிறது
ஈர்ப்பின் மையமாக
மாறுகிறேன்
விசையில் கரைகிறேன் .
இப்பொழுது
காலத்தின் அமைவில்
என்னைக் காண்பதற்கு
பதிலாக உணர மட்டுமே
முடிகிறது.