முகப்பு உயிர்மை.காம் உயிர்மை பதிப்பகம் மாத இதழ் உயிரோசை வார தொகுப்பு தொடர்புகளுக்கு சந்தா எங்களைப்பற்றி

கட்டுரை
அயல் பசி
ஷாநவாஸ்
எண்ணங்கள் – 8
நர்சிம்
கலைந்தும் கலையாத பிம்பங்கள் - 2
இந்திரஜித்
நகரத்தின் கதை பாகம் - 13
சித்ரா ரமேஷ்
"இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?"
ராஜ் சிவா
கவிதை
யாமம்
செ.சுஜாதா
அனுப‌வ‌ம்
ராம்ப்ரசாத்
உதிர்ந்த மஞ்சள் பூக்களின் நரம்புகள்..
இளங்கோ
உன்னளவு அன்பை...
ஆறுமுகம் முருகேசன்
கூண்டுக்குள்  இருப்பினும்
சின்னப்பயல்
உருவ பொம்மைகளால் புகையும் பெருநகரம்
தேனம்மை லஷ்மணன்
காமாந்தகி
ஸ்வரூப் மணிகண்டன்
தனித்திருப்பதன் காலம்
வளத்தூர் தி .ராஜேஷ்
சிறுகதை
பாண்டி எனும் ஜெசி கதை
புதியபரிதி
இந்த வார கருத்துப்படங்கள்
கலைந்தும் கலையாத பிம்பங்கள் - 2
இந்திரஜித்

மணிவேலன்

ணிவேலனைப் பற்றிய ஒரு கட்டுரையை எழுதுவேன் என்று எதிர்பார்த்தேன். அதில் என்ன வரும் என்று தெரியவில்லை. இப்போதும்!

நானும் மணிவேலனும் நெருங்கிய நண்பர்கள். எனக்கு ஒன்று என்றால் அவர் துடித்துவிடுவார். அவருக்கு ஒன்று என்றால் நான் துடித்துவிடுவேன். இந்தியாவில் ஒரு நல்ல ஒதுக்குப்புறமான கிராமமாகப் பார்த்து நாங்கள் குடியேறிவிடுவதுதான் நல்லது.

அங்கே ஏரியில் குளிக்கலாம். வயலில் சேற்றில் நின்றுகொண்டு பாட்டு பாடலாம். பெண்கள் துணி காயப்போடுவதைப் பார்க்கலாம். ஒன்றாக ரஜினி படம் பார்க்க சைக்கிளில் போகலாம்.

இதெல்லாம் இல்லாமல் சிங்கப்பூரில் நட்பை வளர்ப்பதற்கு நாங்கள் படும்பாடு எங்களுக்குத்தான் தெரியும்.

ஒருமுறை அமைச்சர் ஈஸ்வரன் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து நிகழ்ச்சி தாமதமாக முடிந்து வீட்டுக்குப் போகும்போது பாலபாஸ்கரன் ஒன்று சொன்னார். ‘தமிழ் வளர்ப்பதாக இருந்தால் வீட்டுக்குப் போக லேட்டாகும் என்பதை அமைச்சர் தெரிந்து கொண்டிருப்பார் என்று. அதுபோல் நானும் மணிவேலனும் நட்பை வளர்ப்பதற்காகப் பல நாட்கள் வீட்டுக்கு லேட்டாகப் போயிருக்கிறோம்.

நான் முதலில் மணிவேலனைச் சந்திக்கும்போது கட்டுமான ஊழியராக இருந்தார். தினமும் மூன்று மணி நேரம் சந்திப்போம். அவர் நிறையப் புத்தகங்களைப் படித்து அதன் காரணமாக எழுத்தாளர்கள் மீது பயங்கர கோபத்தில் இருந்த நேரம்.

எல்லா நூலகங்களின் படிகளையும் தேய்த்திருப்பதாகச் சொல்வார். சிங்கப்பூரில் 25 நூலகங்கள் இருக்கின்றன. அவற்றில் எந்த நூலகத்தில் எந்தப் பகுதிக்கு எப்படிப் போக வேண்டும் என்று அவருக்கு நன்றாகப் பாதை தெரியும். எந்த நூலகத்துக்குப் போனாலும் இங்குதான் விழுந்துகிடந்தேன் என்பார். புதுமைப்பித்தனின் தீவிர விசிறி. இப்போதுகூட காலையில்தான் சித்தி படித்தேன். என்ன நடை. என்ன வேகம். என்ன எழுத்து என்று புதிதாக வியப்பது போல் வியப்பார்.

அவருக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளர் பிரபஞ்சன். கிட்டத்தட்ட பிரபஞ்சன் எழுதிய எல்லாவற்றையும் படித்திருக்கிறார். பூமியில் மணிவேலன் திட்டாத இரண்டே தமிழ் எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும், பிரபஞ்சனும்தான்.

குருமார்கள்மீதும் அவருக்குப் பற்று உண்டு. If you have the courage to touch life for the first time, you will never know what hit you என்கிற யுஜி கிருஷ்ணமூர்த்தியின் பக்தர்.

ஓஷோ முதல் எஸ். ராமகிருஷ்ணன் வரை எல்லாவற்றையும் வாசித்துவிட்டதில் ஒரு நிறைவுக்குப் பதிலாக ஒரு விரக்தியே மணிவேலனை ஆட்கொண்டு விட்டது.

வாசகன் ஒரு கட்டத்தில் எழுத்தாளனைவிடப் பெரியவாக வளர்ந்துவிடுகிறான். பூதம் வெளியே வந்து பஞ்சபாண்டவர்களைத் தேடிப்பார்த்துவிட்டு ஏவியவனைத் தேடித் திரும்புகிறது. எழுத்தாளனை ஒவ்வொருத்தனாகப் பிடித்து வாயில் போடுகிறது!

பெருவாசகனின் மனநிலை மிகப்பெரிய கொந்தளிப்புக்கு ஆளாகிறது. ஆலமரத்தின் தலையைப் பிடித்து உலுக்கிவிட்டு தென்னை மரங்களைத் தேடிச் செல்லும் புயலின் மனநிலை.

ஒரு மனிதனால் வாசித்துவிட்டு எதுவும் எழுதாமல் இருக்க முடியுமா?

காலம் காலமாகப் படித்துக் கொண்டே இருக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். எழுதுவது பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் புத்தகங்களை புரட்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு எழுத்து பற்றியோ, எழுத்தாளர் பற்றியோ எந்த விமர்சனமும் இருக்காது. எது நல்லது எது கெட்டது என்று பெரிதாக யோசிக்க மாட்டார்கள். ஏதோ ஒரு சில எழுத்தாளர்களைப் பிடிக்கும். அவர்களைத் தேடிப் படிப்பார்கள். பிடிக்காத எழுத்தாளர்களைப் பற்றி அவர்களுக்குப் பெரிய விமர்சனம் எதுவும் இருக்காது. அவர்களுக்குப் பிடித்த பாதையில் போய்க்கொண்டே இருப்பார்கள். அவர்கள் எழுதாமல் இருக்கலாம்.

ஆனால் எவன் எழுதுவது சரி, எவன் எழுதுவது தப்பு என்று ஒருவன் இலக்கியவாதியைவிடத் தீவிரமாக இலக்கியத்தில் இறங்கிவிட்டால் கையில் எழுத்தாணியோடு எழுந்திருக்கப் போகிறான் என்றுதான் அர்த்தம்.

மணிவேலனின் எழுத்துக்களை, பின்னூட்டம், முகநூல் போன்றவற்றில் அவர் எழுதும் சிறுசிறு குறிப்புகளைப் பார்த்திருக்கிறேன். நகைச்சுவை இருக்கும். நகைச்சுவைக்கு நடுவே சீரியசாக ஒரு முகம் தலையைத் தூக்கும். பிறகு அந்த சீரியசான முகம் மெல்ல பல்லைக் காட்டிச் சிரிக்கும். எழுத்தில் இருக்க வேண்டிய உப்பு, புளி, மிளயாய் நிறைந்த நல்ல எழுத்து.

ஒரு சாதாரண கட்டுமான ஊழியராக, ஊரில் இருக்கும் குடும்பத்தைக் காக்க சிங்கப்பூருக்கு வந்த மணிவேலன் இப்போது ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர்.

நான் அவரை தர்மதுரை என்றுதான் அழைப்பது.

அவர் நல்லவனுக்கு நல்லவன், முரட்டுக்காளை, தளபதி, பில்லா. ரஜினியின் தீவிர ரசிகர்.

எதிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதும், உண்மையாக இருக்க வேண்டும் என்பதும் மணிவேலனின் பலமா பலவீனமா என்பது நீங்கள் எந்தப் பக்கம் நிற்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

அவரிடம் எனக்குப் பிடித்தது அவருடைய சிரிப்பு. அவர் சிரித்தால் நான்கு மேஜைக்கு அப்பால் உள்ளவனின் சூடான டீ அவன் சட்டையிலும் சிலுவாரிலும் கொட்டி வேகக்கூடாததெல்லாம் வெந்துபோகும் அபாயகரமானது.

உங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி
uyirosai@uyirmmai.com அல்லது uyirosai.com@gmail.com